அடையாள மீட்பின் அரசியல்- தொடரும் உரையாடல்.!
'சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!' என்ற முந்தையக் கட்டுரையை முன்வைத்து சில விமர்சனங்களை முன்வைத்தார் தோழியொருவர். அதன்பொருட்டு இத்தலைப்பின் கீழ் இன்னும் கொஞ்சம் உரையாடும் வாய்ப்பு. முதலாவது இக்கட்டுரைக்குள் பழமைவாத மனமும், அடையாளங்களை காப்பாற்றுவோம் என்ற குரலின் நீட்சியாக சாதி, வர்க்க பேதங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தீவிரமும் தென்படுகிறது. அதாவது இருக்கும் அமைப்பு சீர்குலைந்து விடக்கூடாதே.. என்ற பதட்டம் தொனிக்கிறது என்பது அவர் சொன்னதன் மைய சாராம்சம். நிச்சயம் அவ்விதம் இல்லை. இருக்கும் சமூக அமைப்பு எல்லோருக்கும் ஒரே விதமான/சம அளவு சமூக மதிப்புள்ள பண்பாட்டு, கலாசார அடையாளங்களை வழங்கியிருக்கவில்லை. ஒரு ஆதிக்க சாதிக்காரனுக்கும், ஒரு தலித்துக்கும் இடையே கலையப்பட வேண்டிய பண்பாட்டுப் பாகுபாடுகள் நிறைய இருக்கின்றன. இவற்றை சமன்படுத்த யாவற்றையும் அழித்தொழித்து, எல்லோருக்கும் பொதுவான கலாசார, பண்பாட்டுக் கூறுகளை உருவாக்க வேண்டும் என்ற வாதத்தின் வெளிப்பாடே அவரது கேள்வியாக வெளிப்பட்டிருக்கிறது. அது சரிதான். இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டியது என்பதில் எவ்வித கருத்துபேதமும் இல்லை. உலகெங்க...