பாண தீர்த்தம் அருவியும், கொக்கரை கருவியும்..!

பெ ய்து பொழிந்தாலும், வீழ்ந்து நிமிர்ந்தாலும், குவிந்து கிடந்தாலும், சீறி வந்தாலும் நீரின் வடிவங்கள் எப்போதும் பிரமிப்பூட்டுபவை. அருவியாக, மழையாக, சாரலாக, ஏரியாக, நதியாக, அணைக்கட்டாக, கடலாக, இலையில் தேங்கி நிற்கும் ஒரு துளியாக, மழையில் நனைந்த பறவை காற்றில் சிலுப்பிவிடும் திவலைகளாக.. தனக்கு சாத்தியமான எல்லா வடிவங்களிலும் வசீகரிக்கிறது நீர். அப்படி திசைகளெங்கும் நீரொழுகும் ஒரு நீர் நாளில் நீர் தரிசனத்துக்குப் போனேன். உண்மையாகவே வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் பிறப்பிடம் அமைந்திருக்கும் பொதிகை மலை. திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் வழியாக டூ வீலரில் ஏறும்போதே குற்றாலச்சாரல் முகத்தில் அறைய ஆரம்பிக்கிறது. கூடவே, 'ஒரு girl friend பின்னால் அமர்ந்து வந்தால் எப்படியிருக்கும்..?' என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை (நீதி: சாத்தியமாயின் இணையோடு செல்லுங்கள்). பெரிய மலையேற்றமெல்லாம் இல்லை. மிக லேசான ஏற்றம்தான். இரண்டு, மூன்று வளைவுகள் தாண்டிய உடனேயே தூரத்தில் மலையை பிளந்துக்கொண்டு ஊற்றுகிறது அகத்தியர் அருவி. அருகிலேயே பாபநாசம் நீர் மின்சார...