நீயே பீ அள்ளு..
தீட்டென்பவனை நாப்கின் கழற்றி அவன் வாயில் அடி.. நினைவுக்கு வரட்டும் அவன் பிறப்பு.. -பொளேரென்று செவியில் அடித்தாற்போல பாய்கின்றன வார்த்தைகள்.நெருப்பு பறக்கிறது.வாசிக்க ஆரம்பித்த கணத்திலேயே நம்மை ஆட்கொள்கிறது.அது 'கொஞ்சூண்டு..' என்ற தலைப்பிலான கவிதை தொகுதி.திண்டுக்கல் தமிழ்பித்தன்,தயா கவிசிற்பி என்னும் இருவர் சேர்ந்தது உருவாக்கியிருக்கும் புத்தகம்.(தலைப்பில் 'கொஞ்சூண்டு' என்ற வார்த்தைக்கும் மேலே சின்னதாக 2 என்று எழுதியிருப்பது நல்ல ரசணை).சிறிய கையடக்க நூல்.ஹைக்கூ வடிவத்தில் பெரும்பாலும் நிலா,வானம்,காதலி,நாய்குட்டி என்று்தான் எழுதப்பார்த்திருக்கிறோம்.இது முற்றிலும் வேறு தளம்.புத்தகமெங்கும் ரணம் பொங்கும் தலித்துகளின் வாழ்க்கை விரவிக்கிடக்கிறது. செண்ட் பூசிய பணக்கார பிணம்.. துர்நாற்றமடிக்கிறது எரிக்கையில்.. உறக்கம் பிடிக்கவில்லை.. கனவிலும் பீ துடைப்பம்.. நாத்தம் குடல புரட்டுது.. சகிச்சுகிட்டு சுத்தப்படுத்தினோம்.. மறுபடியும் அவிய்ங்க பேல. ...