மம்சாபுரம் நிலாவும்,சீலப்பாடி மகாலட்சுமியும்...

//பிறந்தது மம்சாபுரம் என்கிற பட்டிக்காட்டில். வசிப்பது லண்டன் பட்டணத்தில்.//
-இது பதிவர் நிலாவின் புரொஃபைலில் இருக்கும் வார்த்தைகள்.மம்சாபுரம் போலவே சீலப்பாடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த ஏழை தலித் பெண் ஒருவரின் வாழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பது 'ஆன்ம திருப்திக்காக நிலாச்சாரல் நடத்தும்' ஒரு பெண் எழுத்தாளருக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம்தான்.(இந்த பஞ்சாயத்துப்பற்றி தெரியாதவர்கள் பதிவர் செந்தழல் ரவி எழுதிய இதையும்,,பதிவர் நிலா அதற்கு விமர்சனமாம எழுதிய இதையும் படிக்கவும்..)

==>இந்த இடத்தில் மம்சாபுரம் என்பது உண்மையிலேயே குக்கிராமம்தானா..?அந்த கிராமத்தில் உங்கள் இளம்பிராயத்தை கழித்தீர்களா..? என்ற கேள்விகளை நிலாவைப் பார்த்துக் கேட்க வேண்டியிருக்கிறது.ஏனெனில் இப்போதெல்லாம், தசம ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது தாத்தா,பாட்டி வாழ்ந்த கிராமத்தை எட்டிப்பார்க்கும் பலபேர்,'நான் பொறந்தது ஒரு பட்டிக்காடு..' என்று சொல்லிக்கொள்வது ஒருவித நாகரீகமாகிவிட்டது.ஒருவர் பட்டிக்காட்டில் பிறந்தவரானால், அவர் பணக்கார குடும்ப அங்கத்தினராக இருந்தாலும் கூட, ஒரு ஏழை தலித் பெண்ணின் வாழ்க்கையை வெகு எளிதாக புரிந்துகொள்ள இயலும்.ஆனால் நிலாவின் இந்த எழுத்திலிருந்து அவருக்கு அவ்வகையான சிந்தனை இருப்பதாக தெரியவில்லை.அதனால்தான் மம்சாபுரத்தை வம்புக்கு இழுக்க வேண்டியிருக்கிறது.


==>//எப்படிப்பட்ட உதவி நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான எண்ணம்//

இதுவும் பதிவர் நிலாவின் கருத்துதான்.உதவி செய்வதன் நோக்கம் துன்பப்படுவோரின் கண்ணீரைத் துடைப்பதாக இருக்க வேண்டுமே ஒழிய,உதவியின் ஆயுள் எவ்வளவு காலமிருக்கும் என்பதுபற்றி யோசிப்பது வடிகட்டிய அயோக்கியத்தனம் மட்டுமல்ல...வக்கிரமும் கூட.சாலையில் அடிபட்டு ஒருவர் உயிருக்குப் போராடுகிறார் என்றால் ,'இவன் பொழச்சு வந்தா எத்தனை நாள் உயிரோட இருப்பான்..' என்று உன்னிகிருஷ்ண பணிக்கரிடம் ஜோஸியம் பார்த்துவிட்டு வந்துதான் உதவுவீர்கள் போலும்.அப்படி எதிர்பலன் எதிர்பார்த்து செய்யப்படுவது உதவியல்ல...வர்த்தகம்.இதைவிட, உங்கள் வார்த்தைகளிலேயே நீங்கள் முரண்படுகிறீர்கள் என்பதையும் சற்று கூர்ந்து கவனியுங்கள்.கல்வி என்பது நீண்டகால பயனுள்ள விஷயம்தானே...?மகாலட்சுமி என்ற அந்த ஏழைப் பெண் படித்தால் அந்த குடும்பம் தலை நிமிர்வதோடு,அவளது வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக ஆகும் என்பதில் உங்களுக்கு வந்த குழப்பம்தான் என்ன...?அல்லது பி.எட்., படிப்பைவிட மென்பொருள் தரக்கட்டுப்பாட்டு ஆலோசகர் பணிதான் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பது லண்டன் கற்றுத்தந்த பாடமா...?


==>//பசிப்பவருக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தல் நலம் அல்லவா? //

அதெல்லாம் சரிதான் தாயி...பசியால் துடிப்பவனுக்கு முதலில் ஒரு துண்டு மீனைக் கொடுத்து அந்த வேளை பசியாற்றுங்கள்.அப்போதுதான் நீங்கள் மீன் பிடிக்கும் டெக்னிக்கை கற்றுத்தரும்போது அதைக் கற்றுக்கொள்வதற்கான சக்தியாவது அவனுக்குக் கிடைக்கும்.( நேரடியாகவும் உதவாமல்,மறைமுகமாகவும் உதவாமல் ,உதவும் நபர்களையும் குழப்பும் சிலபேர் இந்த பழமொழியை சொல்லி செய்யும் அளப்பரை சாரி....கொஞ்சம் ஓவர்...).பச்சையாகவோ,கொச்சையாகவோ சொன்னால், நீங்கள் சொல்வது, அம்மணமா நிக்கிறவனுக்கு துணி நெய்ய சொல்லிக்கொடுத்த மாதிரி இருக்கிறது.


==>//நாளைக்கே அவளுக்குக் காதல் தோல்வி என்றால் இதே முயற்சியில் அந்தப் பெண் இறங்க மாட்டாளா?//

மகாலட்சுமி என்ற அந்த பெண், தொடர்ந்து படிப்பதற்கு அவரது பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை.அதனால் அவர் கல்லூரியில் பாதியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.இதற்கும் அந்த பெண்ணின் நடத்தையோடு சம்பந்தப்படுத்தி நீங்கள் சொல்லியிருக்கும் வார்த்தைகளுக்கும் என்ன தொடர்பு என்பது விளங்கவில்லை.


==>//உணர்ச்சிவசப்பட்டு பணத்தைத் தருவது உண்மையில் உதவியா அல்லது தவறான முன்னுதாரணமா என்பதை சற்றே சிந்தித்தல் நலம்.//

உணர்ச்சிவசப்பட்டு உதவுவது மட்டுமல்ல...உணர்ச்சிவசப்பட்டு அதை தடுப்பதும் கூட தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதையும் தாங்கள் சற்றே சிந்தித்தல் நலம்.

==>//சுமார் 50 சிறுகதைகளும் ஒரு நாவலும் பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன்//

ஒரு படைப்பாளனுக்கு சமூகத்தின் அடிநாதமான பிரச்னைகள் ஓரளவுக்கேனும் தெரிந்திருக்க வேண்டும்.அப்போதுதான் உண்மையான உணர்வோடு எழுத இயலும்.மம்சாபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்த நிலாவால், தன்போன்றே சீலப்பாடி என்ற குக்கிராமத்தில் பிறந்த சக மனுஷி மகாலட்சுமியின் துயரத்தை உணர முடியாதது ஏனோ...?

==>ஒரு வித shock value-விற்காக மனம்போன போக்கில் எழுதும் ஒருசில எழுத்தாளர்களைப் போல வித்தியாசம் விரும்பி எழுதியதாகவே நீங்கள் எழுதியதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சே குவேரா-புரட்சிக்காரனின் புகைப்பட ஆல்பம்..































கனம் கோர்ட்டார் அவர்களே...இது நியாயமா..?

'கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கல்லூரியைவிட்டே சஸ்பெண்ட் செய்யலாம்..' என்று ஒரு அரைவேக்காட்டு தீர்ப்பை வழங்கியிருக்கிறது கேரள கோர்ட்.மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மயக்கத்தில் இருப்பதே நல்லது என்று அதிகார வர்க்கம் நினைப்பதாலோ என்னவோ இந்த விஷயம் இதுவரை பெரிதுபடுத்தப்படவில்லை.

எர்ணாகுளம் அருகேயுள்ள மாழிங்கரை எஸ்.என்.எம். கல்லூரி சார்பாக,'எங்கள் கல்லூரியில் மாணவர் அமைப்பு என்ற பெயரால் சில மாணவர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுவதால் பிரச்னை ஏற்படுகிறது.அமைதியான முறையில் கல்லூரி நடத்த முடியவில்லை..எனவே மாணவர் அமைப்புகள் அரசியலில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்.." என்று கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பில்தான் இந்த கழிசடை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவனாய் இருக்கும் வயதில்தான் ஒரு மனிதன் தன் வாழ்நாளின் சிந்தனை மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கிறான்.முடிவெடுக்கும் வேகமும்,செயல்படுத்தும் தைரியமும் உள்ள வயதும் அதுதான்.இந்த வயதில் அரசியலை தெரிந்து கொள்ளாமல் வேறு எந்த வயதில் தெரிந்து கொள்வது...?

நீங்கள் விரும்பினாலும் ,விரும்பாவிட்டாலும் உங்களை ஒரு நிழல்போல தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது அரசியல்.அதிலிருந்து நீங்கள் விலக முடியாது.விலக நினைப்பதும் புத்திசாலிதனம் அல்ல.ஆனால் வெகு காலமாக, 'அரசியல் ஒரு சாக்கடை,குப்பைத்தொட்டி..' என்றெல்லாம் சொல்லி,மக்களை பயமுறுத்தி,பூச்சாண்டி காட்டப்படுகிறது.அதன் விளைவாக இன்று மாணவர்களில் அதிகபட்சம் பேர் குறைந்த பட்ச அரசியல் அறிவற்றவர்களாக இருக்கின்றனர்.'முதல் மதிப்பெண்..நல்ல வேலை..கை நிறைய சம்பளம்..' என்று மட்டுமே மாணவர்களின் மண்டைக்குள் ஏற்றப்படுகிறது.இப்படியான குறுகிய வட்டத்திற்குள் வளரும் ஒரு இளைய தலைமுறையினர் out of box சிந்திப்பதேயில்லை.இந்த மந்த புத்தியுடைய மக்களை வார்த்தெடுப்பதும்,பாதுக்காப்பதும்,தொடர்ந்து பராமரிப்பதும்தான் அதிகார வர்க்கத்தின் பணி.அதன் ஒரு பகுதியாகவே தற்போதைய நீதிமன்ற தீர்ப்பையும் கருத வேண்டியுள்ளது.

கல்வி என்பதை வர்த்தக சரக்காக்கி,பணம் படைத்தவனுக்கு வசதிகள் நிறைந்த கல்வியும்,ஏழைக்கு எந்த வசதியுமற்ற நாலாந்தர கல்வியும் வழங்கப்படுகிறது.தங்கள் விளைநிலத்தை விற்று,உழைப்பை மூலதனமாக்கி, பிள்ளைகளை படிக்க வைக்கப் பாடுபடும் எளியவர்களால் அதிகபட்சம் அரசு கலைக்கல்லூரியைக் கூட தாண்ட முடியவில்லை.இது யதேச்சையானது அல்ல.இருக்கும் வர்க்க கட்டமைப்பைப் பாதுகாக்கும் வஞ்சக சூழ்ச்சி இதற்குப் பின்னால் ஒழிந்திருக்கிறது.இதை கேள்வி கேட்கும் மனநிலை வேண்டுமாயின் அரசியல் அறிவு அவசியமாகிறது.

'மாணவர்கள் அரசியல் கட்சிகளின் மூலம் செயல்படக் கூடாது என்றுதானே தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது..?அதைவிடுத்து தனிப்பட்ட முறையில் போராடலாமே..?' என்பது ஒரு சாராரின் எதிர்வாதமாக இருக்கலாம்.ஆனால் நடைமுறையில் கல்வி நிறுவன அதிபர்கள் என்பவர்கள் மிகப்பெரிய பண முதலைகளாகவும்,எல்லாவகையான அடக்குமுறை வழிகளையும் கையால்பவர்களாகவும் இருக்கின்றனர்.அவர்களை எதிர்க்க தனி நபர்களால் இயலாது.இந்த இடத்தில் இயக்கம் அவசியமாகிறது.

மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடிய வரலாறும் இந்தியாவில் உண்டு.அஸ்ஸாமில், 'அஸ்ஸாம் கண பரிஷத்' என்ற மாணவர் இயக்கம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பிரபல்ல குமார் மொஹந்தா ஒரு மாணவர்தான்.தமிழகத்தில் திராவிட கழகத்தின் ஆரம்பக்கட்ட எழுச்சி இளைஞர்களால் நிகழ்ந்ததுதான். (மேற்சொன்ன நபர் மற்றும் இயக்கம் இரண்டுமே கொஞ்சம்,கொஞ்சமாக தங்களின் ஆரம்பக்கட்ட கொள்கையின் திரிபு சக்திகளாக மாறிவிட்டது உப வரலாறு..). அவ்வளவு ஏன்..?ஒரு தோளில் ஸ்டெதஸ்கோப் பையும்,ஒரு தோளில் துப்பாக்கி பையும் ஏந்திய மருத்துவக் கல்லூரி மாணவரான சே குவேராதான் புரட்சியாளர்களின் ஆதர்சமாக உருவெடுத்துள்ளார்.

இப்போது தீர்ப்பு வந்திருக்கும் கேரள அரசியலை நிர்ணயித்ததிலும் இளைஞர்களுக்கு தனி வரலாறு உண்டு.சிலி,வியட்நாம்,க்யூபா என்று உலகில் எங்கெல்லாம் கம்யூனிச ஆட்சி மலர்ந்ததோ,அங்கெல்லாம் ஆயுத புரட்சி மூலமே அது சாத்தியமாயிற்று.உலகிலேயே முதன்முறையாக ஓட்டெடுப்பு மூலம் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததும் கேரளாவில்தான். (இதிலும் விமர்சனங்கள் உண்டு.ஆனால் இந்த பதிவின் நோக்கம் அதுவல்ல...). அதில் இளைஞர்களின் பங்கு அதிகம்.இன்றும் அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் கேரள இளைஞர்களின் போராட்டம் குறிப்பிட்டு சொல்லத்தகுந்தது.அதே கேரளாவில்தான் இப்போது இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தனக்கான அரசியலை முடிவு செய்தாக வேண்டும்.'நான் அரசியல் சார்பற்றவன்.நடுநிலைமையுடையவன்' என்பதெல்லாம் பம்மாத்து.சொல்லப்போனால், நடு நிலைமை என்பதே ஒரு மாயவாதம்.'இந்த பேருந்து மதுரைக்குப் போகுமா..?' என்று கேட்டால்,'போகும்,போகாது' என்ற இரண்டில் ஒன்றுதான் பதிலாக இருக்க முடியும்.அதனால் 'சார்பின்மை' என்பது தப்பித்தலின் மாற்று வார்த்தைதான்.கல்வி கட்டணம் முதல் இட ஒதுக்கீடு வரை நீங்கள் மட்டும் மாணவர்களை வைத்து அரசியல் செய்வீர்கள்.மாணவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் 'சார்பின்றி' இருக்க வேண்டும்.எந்த ஊர் நியாயம் இது..?

அந்த கேரள கல்லூரி மாணவர்கள் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டுக்குச் செல்வார்களா..இல்லையா என்பதெல்லாம் தெரியாத நிலையில், இந்த தீர்ப்பை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு நாட்டின் ஏனைய கல்வி நிறுவன முதலைகளும் நீதிமன்றத்துக்குக் கிளம்பிவிடுவார்களோ என்பது என் உப கவலையாக இருக்கிறது.அதனால்,மாணவர்கள் மட்டுமல்ல....அனைவருமே நமக்கான அரசியலை முடிவு செய்யவேண்டிய தருணமிது.

குறிப்பு: இந்த கட்டுரை பூங்கா இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.

பிணம் திண்ணும் கோக்..


லக மயமாக்கம் என்ற பிணம்திண்ணி,கொஞ்சம் கொஞ்சமாக நம் மண்ணையும்,வளங்களையும் சூறையாடியதுபோக, இப்போது நேரடியாகவே உயிர்குடிக்க ஆரம்பித்துவிட்டது.நெல்லை கங்கைகொண்டானில் அமைந்திருக்கும் கோக் ஆலையின் கழிவு நீரை பருகி ஐநூறுக்கும் அதிகமான ஆடுகள் மடிந்துபோயிருக்கின்றன.வாழ்வின் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரம் நிர்மூலப்படுத்தப்பட்ட கொடுமைபற்றி எந்த அக்கரையுமின்றி, மதுரையில் டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.

கங்கைகொண்டான்- பஞ்சாயத்தில் வரும் ராஜபதிக்குள் நுழைந்தாலே வேலிகளிலும், தெரு முற்றங்களிலும் இறந்துகிடக்கும் ஆடுகள் ரத்தம் கொதிக்க வைக்கின்றன.கோக் தொழிற்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது இந்த ராஜபதி கிராமம்.அமெரிக்க அடிவருடிகளுக்கான 'கழிவு நீரை' தயாரிக்கும் கோக் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறது.இவை அனைத்தும் கோக் ஆலையை ஒட்டி செல்லும் வாய்க்காலில்தான் கலக்கிறது.இத்தனை நாட்களாய் அந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் திறந்துவிடப்பட்ட கழிவுநீர் ராஜபதி கிராமத்தைச் சென்றடையவில்லை.தற்போது பெய்த மழையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கோக்,தனது கழிவு நீரையெல்லாம் அந்த வாய்க்காலில் திறந்துவிட்டுவிட்டது.

வழக்கமாக விவசாயிகள் தங்களின் ஆடுகளை அந்த வாய்க்காலை ஒட்டிய ஏரியாவில்தான் மேய்ப்பார்கள்.அந்த ஆடுகள் வாய்க்கால் தண்ணீரை குடித்துவிட்டன.விளைவு...வரிசையாக ஆடுகள் செத்து மடிந்துவிட்டன.இதுவரைக்கும் செத்திருக்கும் ஆடுகளின் எண்ணிக்கை மட்டும் ஐநூறுக்கும் மேல் இருக்கும்.இந்த எண்ணிக்கை இப்போது இன்னும் அதிகமாகியிருக்கும்.ஒவ்வொரு ஆடும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை போக கூடியது.அதை நம்பிதான் பிள்ளைகளுக்கு திருமனம்,படிப்பு என்று இவர்களின் மொத்த வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது.


செத்துமடிந்த ஆடுகளை ; தங்கள் வாழ்வை இதுவரைக்கும் செழிக்க செய்த ஜீவன்களை அப்படியே வேலியோரங்களில் தூக்கிப்போட்டுவிட்டு நெஞ்சு கணக்க வீடு திரும்பும் அனைத்து விவசாயிகளின் மனதிலும் கங்கு எரிந்துகொண்டிருக்கிறது.''தாயோளி....அந்த கோக்குக்காரன் வந்துதாம்யா எல்லாத்தையும் கொன்னுபுட்டான்..அவன் வந்து இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட ஆகலை..அதுக்குள்ள ஆடுகல்லாம் செத்துப்போச்சு..இன்னும் ரெண்டு வருஷத்துல மனுஷ மக்களையும் சுடுகாட்டுக்கு அனுப்பிட்டுதான் ஓய்வான் போல.." என்று மனம் வெதும்பி புலம்புகின்றனர் அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மைக்குள்ளான எளிய மக்கள்.

எப்போதும் எளியவர்களையும்,கிராமங்களையும் கொஞ்சமும் மதிக்காத அரசு அதிகாரிகள் ஆடுகள் இறந்தவுடன் பதறிக்கொண்டு ராஜபதிக்கு ஓடிவந்தார்கள்.வந்து 'இது நீலநாக்கு நோய்.கோக் கழிவிற்கும் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை..' என்று அவர்கள் சொன்னது யாருடைய தூண்டுதலில் என்பதை கிராம மக்கள் அறிந்தே இருக்கின்றனர்.

''எல்லாம் காசு பொறுக்கி பயலுவொ...எலும்பு துண்டு கிடைக்குமான்னு அலையுதானுவொ..டாக்டர் பயலுவலாவது நீலநாக்கு நோய்ன்னு சொன்னதோட விட்டான்.இந்த போலீஸ்காரப்பயலுவொ இருக்கானுவொ பாருங்க..ரவை பன்னெண்டு மணிக்கு கதவைத் தட்டி, 'ஆடு செத்ததுக்கு பணம் தர்றோம்'னு சொல்லி,வெத்து பேப்பர்ல கையெழுத்துக் கேக்கான்.யாரும் கையெழுத்துப் போட முடியாதுனு சொன்ன பொறவு ஓடி போயிட்டானுவொ.அவனுவொளை கட்டி வச்சு தோலை உரிச்சிருக்கனும்.இவனுவொ மாதிரி ஆளுக குடுக்குற தைரியத்துலதான அந்த வெளிநாட்டுக்காரன் இங்க வந்து இந்த அட்டுழியம் பண்ணுதான்..?" என்று கொதிப்பில் வெளிவரும் வார்த்தைகள் செயல்களாக மாறுவதற்கு அதிக நாள் பிடிக்காது.


எங்கிருந்தோ வந்த இந்த அமெரிக்க நாய்கள், உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சிதைத்த கொடுமைக்கு, இங்கிருக்கும் கூட்டிக்கொடுக்கும் பலபேர் பின் புலமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கோக்கின் கழிவு நீர் அண்டாத தூரப்பகுதிகளில் சொகுசாக வாழ்கின்றனர்.இன்று ஆடுகள் பலி பீடத்தில் ஏற்றப்பட்டது போன்று நாளை கோக்கிற்கு அவசர பலியாடுகள் தேவை என்றால்,இந்த கூட்டிக்கொடுக்கும் காவாளிகளை முதல் ஆளாக பலியாக்க கோக் தயங்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பு: இந்த கட்டுரை பூங்கா இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.