19/10/13

IPL: காசு, பணம், துட்டு, Money.. Money..


ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி நாடே பேசுகிறது. ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 25 வீரர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ரன் எடுக்கும் வகையில் மோசமாக பந்து வீச ஒரு ஓவருக்கு 60 லட்சம் ரூபாய் வரையில் பணம் வாங்கியிருக்கிறார்கள். மைதானத்தில் இருந்தபடி துண்டை இடுப்பில் சொருகுவது, டி-சர்ட்டை மேலே இழுத்துவிடுவது, கையில் ரிஸ்ட் பேண்ட்டை அணிந்துகொள்வது... என லட்சக் கணக்கான ரசிகர்களின் கண்கள் பார்த்திருக்கும்போதே ரகசிய சமிக்ஞைகளை கொடுத்திருக்கின்றனர்.


சிக்ஸ் அடித்தபோது தலையை கவிழ்ந்து அவர்கள் ஃபீல் பண்ணியதை நினைத்து ‘என்னமா ஃபீல் பண்ணான்டா.. ஙொய்யால..' என ஆதங்கப்படுவதைத் தவிர ரசிகர்களுக்கு இப்போது வேறு வாய்ப்புகள் இல்லை. இவர்களின் சிக்னல்களை வைத்து சூதாட்டக்காரர்கள் பெட் கட்டுவதற்கு ஏதுவாக மைதானத்தில் இருந்தபடி வாம்-அப் செய்வது போல நேரம் கடத்தியிருக்கிறார்கள். இந்த கருமம் எதுவும் புரியாமல் ‘லாஸ் ஆஃப் பே'-வில் லீவ் போட்டுவிட்டு டி.வி.யில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்கள், அவர்கள் அடித்த சிக்ஸுக்கும், எடுத்த விக்கெட்டுக்கும் கைதட்டி, கண்ணீர் விட்டு... காமெடி பீஸ்களாய் மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் கிரிக்கெட் ரசிகராயின் மனசாட்சியுடன் சொல்லுங்கள்... ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் நடப்பது இப்போதுதான் உங்களுக்குத் தெரியுமா? ஐ.பி.எல். போட்டியே ஒரு சூதாட்டம் இல்லையா?

கிரிக்கெட் என்ற விளையாட்டில் புழங்கும் பணம், லாபி, அரசியல், வியாபாரம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதுபற்றி பலரும் பல சந்தர்ப்பங்களில் நிறைய பேசியிருக்கிறார்கள். ஐ.பி.எல். என்பது அதில் இருந்து சற்றே வேறுபட்டது. ஒளிபரப்பு உரிமை, டிக்கெட் விற்பனை, விளம்பரங்கள், பிராண்ட் அம்பாசிடர்கள், கிரிக்கெட் வீரர்களின் சம்பளம்... என பல்லாயிரம் கோடிகளை கொட்டி கிரிக்கெட் நடத்தும் முதலாளிகளுக்கு ‘துரித லாபம்' சம்பாதித்துக் கொடுக்க உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐ.பி.எல். போட்டிகள். ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளோ, 100 ஓவர்கள் வீச வேண்டிய ஒரு நாள் போட்டியோ ஈட்டித் தரும் வருவாயை விட 20:20 போட்டிகளில் லாபம் அதிகம்; செலவிடும் நேரம் குறைவதால் செலவும் குறைவு. அனைத்தையும் அதிவேகமாக நுகரப் பழகிவிட்ட மக்களின் மனம், விளையாட்டிலும் அத்தகைய வேகத்தை எதிர்பார்க்கிறது. அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் அதிவேக சேவையை வழங்கி அதிவேக லாபத்தையும் அள்ளுகிறது. ஆரம்பத்தில் 5,000 கோடி ரூபாயாக இருந்த ஐ.பி.எல். போட்டிகளின் மதிப்பு, கடந்த ஆண்டு 15,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த ஆண்டு இது 20,000 கோடியை நெருங்குகிறது.

இப்போதைய ஸ்பாட் ஃபிக்சிங் தொடர்பான தொலைகாட்சி விவாதங்களில், ‘இது ஒரு தேசிய அவமானம்' என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். அது உண்மையாயின், இந்த அவமானம் இன்று தொடங்கியது இல்லை. அது ஐ.பி.எல். சீஸன் 1-ல் இருந்தே துவங்கிவிட்டது. விளையாட்டு வீரர்களை அவர்களின் சுய மரியாதையை மதித்து அணிக்குத் தேர்வு செய்யாமல், சந்தையில் பல் பிடித்து மாடு வாங்குவது போல ஏலம் எடுப்பது எவ்வளவுப் பெரிய அசிங்கம்? சுய மரியாதையுள்ள வீரர்கள் இந்த ஏலத்தில் இருந்து விலகிக்கொண்டிருக்க வேண்டும். அவர்களோ... பெரும் தொகையை ஒரே மூச்சில் அள்ளும் நல்வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொண்டனர்.

ஐ.பி.எல்லுக்கு முன்பு ‘இந்திய கிரிக்கெட் என்பது தேச ஒற்றுமையின் அடையாளம்; தேச பக்தியின் சின்னம்' என்றெல்லாம் வசனம் பேசினார்கள். அத்தகைய வெறியை கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களிலும் ஆழ விதைத்தார்கள். குறிப்பாக இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தம் போலவே பார்க்கப்பட்டது. ஐ.பி.எல். வந்தது. பிரதேச‌ வாரியாக கிரிக்கெட் ரசிகர்களை கூறுபோட்டது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்' ‘கொல்கத்தா நைட் ரைடர்' என பிரதேச வெறியை தூண்டிவிட்டு கல்லா கட்டியது. தேசிய வெறியிலும் துட்டு; பிரதேச வெறியிலும் துட்டு. ஐ.பி.எல். அணிகளின் ஓனர்களுக்கு இத்தகைய தேசியவெறியோ, பிரதேச வெறியோ இல்லை. அவர்களுக்குத் தேவை எல்லாம் முதலீட்டை விட பல மடங்கு லாபம். அதனால்தான் கலாநிதிமாறன், ஆந்திர அணியை வாங்குகிறார். ஷாருக்கான், கொல்கத்தா அணியை வாங்குகிறார். ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா.. என வெளிநாட்டு வீரர்கள் எல்லாம் இந்த அணிகளுக்காக விளையாடுகின்றனர். ஐ.பி.எல்-லின் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சில வகை வருவாயை அனைத்து உரிமையாளர்களும் பங்கிட்டுக்கொள்கின்றனர்.

தன் மாநிலத்தின் அணி வெற்றிபெற வேண்டும் என கனவு காணும் ரசிகனால், தன் மாநில அணியில் விளையாடும் வீரர்களையோ, அதன் உரிமையாளரையோ தீர்மானிக்க முடியாது. அதை அவனது மனம் சிந்திப்பதும் இல்லை. ஆர்ப்பரிக்கும் மைதானத்தின் பெரும் ஓசையில்; காற்றில் பறக்கும் பந்து உருவாக்கும் உவகையில்... அவனது ரசணை மாற்றி அமைக்கப்படுவதை, உழைப்பும், சேமிப்பும் சுரண்டப்படுவதை அவன் உணர்வதில்லை.

இப்படி நுணுக்கமாக சிந்தித்துதான் ஐ.பி.எல். அக்கப்போர்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. அவ்வப்போது அது வெளிப்படையாகவும் வரத்தான் செய்கிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். சீசன் நடந்தபோது, ‘இந்தியா டி.வி.' என்ற தொலைகாட்சி ஒரு ரகசிய விசாரணை நடத்தியது. நான்கு வீரர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ய ஒப்புக்கொண்டு அப்பட்டமாக பேரம் பேசினார்கள். கை எடுக்க இவ்வளவு, கால் எடுக்க இவ்வளவு என ரேட் பேசும் கூலிப்படையைப் போல ‘நோ பால் போட இவ்வளவு, வொய்டு போட இவ்வளவு' என பார்ட், பார்ட்டாக பிரித்துப்போட்டு யாவாரம் பார்த்தார்கள். அதை பதிவு செய்து ஒளிபரப்பியது அந்த தொலைகாட்சி. ஆனால் அதை அந்த நான்கு பேரின் தனிப்பட்ட ஒழுக்கப் பிரச்னையைப் போல மாற்றிப்பேசி, ஊத்தி மூடினார்கள்.

கடந்த ஆண்டே, ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரவீந்திரன் என்ற கல்லூரி மாணவன் ஐ.பி.எல். சூதாட்டத்தில் 5 லட்சம் ரூபாய் கட்டி தோற்றுவிட்டான். அந்த கடன் தொகையை அடைப்பதற்காக ஒரு சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டி, இறுதியில் கொலையும் செய்துவிட்டான். இன்னும் எத்தனையோ... தன் மத்திய அமைச்சர் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, தன் ‘கேர்ள் ஃப்ரெண்டு'க்காக கொச்சி அணியில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பெற்றுத் தர முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு பதவியை இழந்த‌ சசி தரூரை மறக்க முடியுமா?

அந்த சசி தரூர்தான் இப்போது - ஸ்ரீசாந்தே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில் - ‘‘ஸ்ரீசாந்த்தை அவசரப்பட்டு குற்றவாளி என தீர்ப்பு சொல்ல முடியாது. விசாரித்தபிறகே அதை முடிவு செய்ய வேண்டும்" என்கிறார். இருந்தாலும் கேரளா அரசு தனது லாட்டரி விளம்பரத்தில் இருந்து ஸ்ரீசாந்த்தை வெளியேற்றியுள்ளது. ‘‘அவர் மீது ஊழல் புகார் இருப்பதால், அவரை நடிக்க வைப்பது சரியல்ல" என அதற்கு விளக்கம் வேறு. லாட்டரி சூதாட்ட விளம்பரத்துக்கு ஸ்ரீசாந்த்தை விட பொருத்தமான நபர் வேறு யார்?

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் 8 கோடி, 10 கோடி, 15 கோடி என சம்பளம் வாரி வழங்கப்படுகிறது. அதுபோக விளம்பரங்களில் நடிக்கும் வருவாய், பரிசுப்பொருட்கள், ஆட்டநாயகனாக தேர்வானால் அந்தப் பணம்... என ஏராளமான தொகை, நேர் வழிகளிலேயே வருகிறது. அது போதாது என்றுதான் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி சூதாடி பிடிபட்ட தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டர் ஹன்சி குரேனியே, ‘‘ஆம், நான் பணம் வாங்கினேன். அதற்காக எனக்கு தேசப்பக்தி இல்லை என சொல்ல முடியாது. எனக்கு நாட்டையும் பிடிக்கும்; பணத்தையும் பிடிக்கும்" என்று தத்துவம் பேசினார். நல்லவேளையாக இப்போது சிக்கியவர்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை. ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியிலும் 400 கோடி ரூபாய் அளவுக்கு சூதாட்டம் நடப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு சீசனின் மொத்த சூதாட்ட மதிப்பு, 6,000 கோடி ரூபாய். இந்த பணத்துக்காக அவர்கள் என்னவும் செய்வார்கள். 6,000 கோடி முதலீடு போட்டவனுக்கே இவ்வளவு அதுப்பு இருந்தால் 15,000 கோடி கொட்டியிருக்கும் அணிகளின் உரிமையாளர்களுக்கு எவ்வளவு அதுப்பு இருக்கும்? சியர் லீடர்ஸ் ஆபாசம் முதல், ஐ.பி.எல்.லுக்காக தேர்தலையே மாற்றி வைக்க முயலும் அதிகாரம் வரை அவர்கள் என்னவும் செய்வார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இண்டியன்ஸ் ஆகிய அணிகளுக்கு அந்நியச் செலாவணி சட்டத்தை மீறி 1,077 கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொரிஷியஸ், பகாமா, பிரிட்டீஷ் வெர்ஜின் ஐலேண்ட் ஆகிய நாடுகள் வழியாக வந்திருக்கும் இந்தப் பணம் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. ஆனால் விசாரணை கூட இல்லை. ‘‘ஐ.பி.எல். போட்டிகள் நடத்திய லாபத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கி 160 கோடி ரூபாயை இன்னும் கட்டவில்லை. அதற்காக அவர்களுக்கு 96 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று கடந்த 2011-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த வரி இன்னும் வசூலிக்கப்படவில்லை.

மஹாராஷ்டிரா மாநிலம் தனது வரலாற்றின் மிக மோசமான வறட்சியை இந்த ஆண்டு சந்தித்திருக்கிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் வற்றிவிட்டன. குடிநீருக்கே மக்கள் குடங்களை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் மும்பை மற்றும் புனே நகர கிரிக்கெட் மைதானங்களின் பசுமையை பாதுகாக்க, அரசு சலுகை விலையில் தண்ணீர் வழங்குகிறது. ஒரு டேங்கர் லாரி 400 ரூபாய் வீதம் நாள் ஒன்றுக்கு 25,000 முதல் 26,000 லிட்டர் தண்ணீர் கொடுக்கிறது மஹாராஷ்டிரா அரசு. மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளோ, ஒரு டேங்கர் லாரி தண்ணீரை 1,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. விவசாயிகள் தாகத்தில் சாக... கிரிக்கெட் தாகத்துக்கு தாராள விநியோகம் நடக்கிறது.

ஆகவே ஏதோ சூதாட்டக்காரர்கள் மறைமுகமாக பணம் கட்டி நடத்துவதாலும், அதில் சிலர் அம்பலப்பட்டுக்கொண்டதாலும் இது மட்டும்தான் சூதாட்டம் என்பதில்லை. ஐ.பி.எல். என்ற இந்த போட்டியே ஒரு மோசமான சூதாட்டம்தான். இது பல கோடி உழைக்கும் மக்களின் வருமானத்தை சுரண்டுகிறது; மக்களின் ரசணையை வன்முறையாக மாற்றி அமைக்கிறது; நீங்கள் எப்போது கை தட்ட வேண்டும், எப்போது கோபப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்கிறது. இனியும் இது விளையாட்டல்ல, திட்டமிடப்பட்ட குற்றம், தீர்மானிக்கப்பட்ட சதி!

உழைப்புச் சுரண்டலின் உச்சம்!


Barathithambi/Facebook: 

ஒரு தேநீர் கடையில் நின்றுகொண்டிருந்தேன். அருகில் நின்ற செக்யூரிட்டி ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். ‘‘சார், நான் ஆறு ஐநூறு வாங்குறேன் சார். ஆயிரத்து ஐநூறு சேர்த்துப்போட்டு எட்டு ரூவாயா கொடுங்க சார்’’ என்று ஏக்கமாக கேட்டது அவர் குரல். எதிர்முனை சொன்ன பதில் என்னவெனத் தெரியவில்லை. ‘‘சரிங்க சார், பார்த்து செய்யுங்க சார்’’ என்று சொல்லி செல்போனை துண்டித்துவிட்டு, வெறித்துப் பார்த்தபடி நகர்ந்தார்.

எட்டாயிரம் அவருக்கு ‘எட்டு ரூபாய்’ என்னும் பெருந்தொகையாகத் தெரிகிறது. 1,500 ரூபாய்க்காக ஏங்கி கெஞ்ச வைக்கிறது. நேற்று சலூனில், ‘‘ராத்திரி 100 ரூவா கொடுத்தா காலையில பத்தலங்குறா... என்னதான் பண்றதுன்னுத் தெரியலை’’ என்று சலூன்காரரிடம் புலம்பினார் காத்திருந்த ஒருவர்.

நூறுக்கும், இருநூறுக்கும், ஆயிரத்துக்கும், ஐயாயிரத்துக்கும் அல்லாடும் பல லட்சம் மக்கள் நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் பொருளாதார நெருக்கடி தாங்க முடியாத துன்பமாக சூழ்ந்திருக்கிறது. வீட்டு வாடகை கொடுக்கவும், சமைத்து உண்ணவுமே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. நினைத்ததை வாங்கி சாப்பிட முடியவில்லை; நல்ல துணிமணிகள் அணிய முடியவில்லை; பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தர முடியவில்லை; நோய்க்கு சிகிச்சை பார்த்துக்கொள்ள பணமில்லை... வாழ்வின் சிறு சிறு தேவைகளுக்கும் ஏங்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. பசித்த வயிற்றுடன் கடை வாசலில் நின்று பிஸ்கட் கேட்டு அடம் பிடிக்கும் பிள்ளையை, அடித்து இழுத்துச் செல்லும் தகப்பனின் மன வேதனை, மிக கொடியது.

இந்த கருணையற்ற முதலாளித்துவ பொருளாதாரம், பல கோடி ஏழைகளை அன்றாடம் காவு வாங்குகிறது. கூடுதலாக ஓரிரு ஆயிரங்கள் சம்பாதிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலைப் பார்க்க வேண்டியிருக்கிறது. உழைப்பு, உழைப்பு... கொடூர உழைப்பு. ஓர் இயந்திரத்தின் உதிரி பாகத்தை விட அதிகமாக மனிதர்கள் உழைக்கிறார்கள். ஆனால் முதலாளிகளோ... லாபத்தின் சிறு பகுதியையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. முந்தைய ஆண்டின் லாப விகிதத்தில் சிறு தொய்வு ஏற்பட்டாலும், முன்பை விட வெறிப்பிடித்த வேகத்தில் உழைப்பு சுரண்டலை கட்டவிழ்த்துவிடுகின்றனர்.

காலம் முன்னேறிவிட்டது. அறிவியல் வளர்ந்துவிட்டது. கல்வியறிவு பெருகிவிட்டது. என்ன செய்ய? மனிதனை கொடூர உழைப்பில் இருந்து விடுவிக்க எதுவும் வரவில்லையே? சிந்தித்தால், அப்படி தேவனின் வருகை போல எதுவும் சுயம்புவாக வருவதில்லை. நாம்தான் நமது போராட்டங்கள் மூலம் அத்தகைய தீர்வை நோக்கிச் சென்றாக வேண்டும். முதலாளிகள் பலம் மிக்கவர்கள்தான். அவர்களிடம் அதிகாரம் உள்ளது. படைபலமும், பணபலமும் உள்ளது. எனினும் அவர்கள் மிகச் சிலர். எதுவும் இல்லை எனினும், ஏழைகள் எண்ணற்றோர்!
Anton Prakash/Facebook:

வேறொரு கோணத்தில் இதை பார்க்க விரும்புகிறேன். 15 - 20 வருடங்களுக்கு முன்னால், வேலை கிடைப்பதென்பது குதிரைக் கொம்பு. "வேலையில்லா பட்டதாரி" என்ற பதம் சிறுகதைகளில் இருந்து சினிமா வரை பயன்படுத்தப்படும். திறந்துவிடப்பட்ட சந்தைப் பொருளாதாரம் வேலைகளை கொண்டு வந்திருப்பதை மறுக்க முடியாது. பண வீக்கம் அதிகம் காரணமாக விலைவாசி அதிகரிப்பு பலமாக அழுத்துவது உண்மைதான். அதற்கான தீர்வு போராட்டங்கள் அல்ல, மாறாக புதுமையாக்கல் முயற்சிகள் என்று சொல்வேன்.

புதுமையாக்கலுடன் இன்னொற்றும் தேவை.

இன்றைய நாளில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதர பாதாளத்தில் விழுந்தபடி இருக்கிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட அமெரிக்க பொருளாதாரம் தொய்வாகவே தொடர்ந்து இருக்கிறது. பின்னர் ஏன் இது நடக்கிறது ? எரிபொருள் பற்றிய எந்த திட்டமும், தொலைநோக்கும் இல்லாமல் அமெரிக்காவையும் விட அதிக அளவில் எண்ணெய் தாகத்தில் இருக்கிறோம். எண்ணெய்க்கான சந்தை டாலரில் என்பதால் கரன்சி பரிவர்த்தனை தீயாக பறந்து ரூபாயின் மதிப்பை வீழ்த்தி பணவீக்கத்தை அதிகரித்தபடி இருக்கிறது.

பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக நீங்கள் சொல்லும் காரணமும், அதற்கான தீர்ப்பும் சரியானதாக இல்லை என நினைக்கிறேன்.


Barathi Thambi/Facebook:
இப்போது வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்பதும் பத்திரிகைகளைத் திறந்தால் 'வேலைக்கு ஆட்கள் தேவை' விளம்பரங்கள் எப்போதும் நிரம்பியிருப்பதும் உண்மைதான். ஆனால் அந்த வேலைகளுக்கான சம்பளம் மிக மிக சொற்பம்; அதற்காக பார்க்க வேண்டிய வேலையோ மிக, மிக அதிகம். சிறு முதலீட்டில் தொழில் நடத்துபவர்களிடம் கேட்டால் மிகக் குறைந்த அளவில் லாபம் பார்ப்பதற்கே எவ்வளவு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்பதை அனுபவ‌மாக சொல்வார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையம் முதல் நோக்கியா, ஃபோர்டு கார் கம்பெனி, செயிண்ட் கோபியண்ட் கண்ணாடி கம்பெனி என பல பெரிய திட்டங்கள் இங்கு கொண்டு வரப்படும்போதும் அரசும், அந்த நிறுவனங்களும் முதலில் போடும் கூப்பாடு 'வேலைவாய்ப்பு' என்பதுதான். பல்லாயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு என அவர்கள் சொல்வது எத்தனை மோசடியானது என்பதை இன்று நோக்கியாவில் பணிபுரிபவர்களிடம் கேட்டால் அறிந்துகொள்ளலாம். 10 மணி நேரத்துக்கும் மேலான கொடூரமான உழைக்கு 6 ஆயிரமும், 7 ஆயிரமும்தான் அவர்களுக்கு சம்பளம். ஆகவே மலிவான கூலியில் மனித வளம் சுரண்டப்படுவதாக சொல்லலாமேத் தவிர, இதை வேலைவாய்ப்பு என்று வரையறுக்க முடியாது. எல்லை கடந்து வரும் மூலதனம், எங்கெல்லாம் அதிக லாபம் கிடைக்கிறதோ, அங்கு தன் கடையை விரிக்கிறது. தமிழ்நாட்டில்; இந்தியாவில் வியாப்பித்திருக்கும் பன்னாட்டு மூலதனமும் இப்படிப்பட்டதே.

புதுமையாக்கல் முயற்சிகள் மக்களின் வாழ்க்கை பாரத்தை குறைத்திருக்க வேண்டும். அறிவியல் என்பதன் மெய்ப்பொருள் அதுவாகவே இருந்திருக்க வேண்டும். மாறாக அறிவையும், அறிவியலையும் லாபம் பார்க்கும் சந்தையாகவே நிறுவனங்கள் மாற்றி வைத்திருக்கின்றன. இதில் நிறுவனங்கள் என சொல்லும்போதே அதனுடன் இந்த கேபிட்டலிச அரசமைப்பும் இணைந்துதான் செயல்படுகிறது என்பதையும், கம்பெனிகள் மட்டும் தனித்தியங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவிரவும், புதுமையாக்கல் முயற்சிகள் என்பவை சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவை. அவற்றால் தற்காலிக பலன்கள் கிடைக்கும். அது நீடிக்காது. இங்கு Operating System என்பதே கோளாறாக இருக்கிறது. இதில் ஸ்பேர் பார்ட்ஸை மாற்றுவதால் பலன் இல்லை. எனில் ஆபரேட்டிங் சிஸ்டத்தையே எப்படி மாற்றுவது? கோரிக்கை வைத்து, மனு கொடுத்து சாதிக்க முடியாது. போராடிதான் மாற்ற முடியும். அதுவொன்றே ஏழைகளுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி.

நம்பிக்கை... அதானே எல்லாம்!


டி.வி.யை திறக்க முடியவில்லை. ‘பிரைஸ் டாக்கை காபி அடிச்சுட்டாங்க' என்று பிரபு அடித்தொண்டையில் கூவுகிறார். ‘காபி அடிச்சா என்ன? மக்களுக்கு நல்லது நடந்தா சரிதானே?' என்று ஏதோ சமூக சேவை செய்வது போலவே மாதவன் வந்து பதில் சொல்கிறார். இன்னொரு பக்கம் வேட்டி விளம்பரங்கள் நம் டவுசரை கழற்றுகின்றன. ஜெயராமில் ஆரம்பித்து ஜெயம் ரவி வரையிலும் ஆள் ஆளுக்கு வேட்டியை கட்டிக்கொண்டு விறைப்பாக நடக்கிறார்கள். சமீப காலங்களாக தொலைகாட்சிகளில் எந்த சேனலை திருப்பினாலும் திரும்பத் திரும்ப வரும் நகைக்கடை மற்றும் வேட்டி விளம்பரங்களின் இம்சையை நிஜமாகவே தாங்க முடியவில்லை. ‘தமிழன் எவனும் வேட்டி கட்டுறதே இல்லை' என்று தங்கர்பச்சான் கொந்தளிக்க... எந்தப் பக்கம் திரும்பினாலும் பேண்ட் போட்டத் தமிழர்களின் தலைகளாக தெரிய... வேட்டி விளம்பரங்கள் தாறுமாறாக வருவதன் தர்க்கம் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

எங்காவது அரசியல் கூட்டங்களுக்குப் போனால் வேட்டிகளின் கூட்டம் காணலாம். அது கூட கட்சி கரை வேட்டிகள்தான். ஆனால் இவர்கள் வேட்டியை ஒரு நவநாகரீக உடையாக, வேட்டி அணிந்தால் மரியாதை கூடுவதாக விளம்பரப்படுத்துகின்றனர். யதார்த்தம் அப்படி இல்லையே?
வேட்டிக் கட்டிக்கொண்டு போனால் ஸ்டார் ஹோட்டல் வாட்ச்மேன் கூட உள்ளே விடுவது இல்லை. ஆனால் இவர்கள் வேட்டி கட்டியதாலேயே பிரமாண்ட கட்டடங்களில் உட்கார்ந்து பிசினஸ் பேசுகின்றனர். கூடி நிற்கும் கூட்டம் மரியாதையாக வணங்கி வழிவிடுகிறது. ‘வாவ்' என்று விழி விரிக்கும் இளம் பெண்கள் ஓடிவந்து சூழ்ந்துகொள்கின்றனர். அதிலும் ஜெயம் ரவி ஒரு வேட்டி விளம்பரத்துக்கு வருகிறார். கீழே வேட்டியை கட்டிக்கொண்டு கழுத்தில் டை அணிந்திருக்கிறார். எங்கோ ஒரு பனிப் பிரதேசத்தில் நான்கைந்து ரிச் கேர்ள்ஸுடன் சுற்றி, சுற்றி வருகிறார். என்னங்க‌ சொல்ல வர்றீங்க?

சரத்குமாரும், மோகன்லாலும் வேட்டியை அணிந்துகொண்டு சகட்டுமேனிக்கு ‘கேட்வாக்' செய்கிறார்கள். பிரமாண்ட கட்டடங்களின் முன்பு நின்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவார்கள். ‘தளபதி' பின்னணி இசையுடன் மம்முட்டி நடிக்கும் ஒரு வேட்டி விளம்பரத்தில், கிட்டத்தட்ட 200 குரூப் டான்ஸர்கள் ஆடுகின்றனர்.

வேட்டியில் எந்த டிஸைனும் கிடையாது. யார் தயாரித்தாலும் வேட்டி, வேட்டிதான். வெள்ளை, வெள்ளைதான். ஆனாலும் அதற்கு இவ்வளவு விளம்பரங்கள். ‘வேட்டி அணிந்தால் வெற்றி நிச்சயம்' என்பது நல்ல ‘ஜிங்கில்ஸ்' ஆக இருந்தும் ஏன் இன்னும் யாரும் பயன்படுத்தவில்லை என்று தெரியவில்லை.

மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், சரத்குமார், அர்ஜுன்... என வேட்டி விளம்பரத்தில் அதிகம் நடிப்பவர்கள் மலையாளிகளும், மலையாள சினிமாவில் செல்வாக்கு உள்ளவர்களும்தான். ஏனெனில் இன்னமும் வேட்டி உடுத்துபவர்கள் கேரளாவில்தான் அதிகம். அங்கு எடுக்கப்படும் விளம்பரங்களை அப்படியே டப் செய்து இங்கும் கொண்டு வந்துவிடுகிறார்கள். இந்த வேட்டி விளம்பரங்களில் வருவதில் எதிர்பாராத முகங்கள் இரண்டு பேர். ஒருவர் ராதாரவி. இன்னொருவர் ‘நீயா நானா' கோபிநாத். எனக்குத் தெரிந்து ராதாரவியை ஒரு டி.வி. விளம்பரத்தில் பார்ப்பது இதுதான் முதல்முறை. கோபிநாத், விளம்பரத்திலும் ‘நீயா நானா?' எஃபெக்டிலேயே கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்.

இவர்கள் யாரும் நடைமுறையில் வேட்டி அணிவார்கள் என்று தோன்றவில்லை. அனேகமாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும், அவரது மைத்துனர் ராதாரவியும்தான் நடைமுறையிலும் வேட்டி அணிபவர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இவர்கள் யாரையும் விட வேட்டிக்கு சர்வதேச அளவில் இலவச விளம்பரம் செய்பவர்கள் இரண்டு பேர். ஒருவர், ப.சிதம்பரம். ஒரு சால்வையை போர்த்திக்கொண்டு பாராளுமன்ற பின்னணியில் இவர் தரும் பேட்டிகள் மீடியாவில் பிரபலம் என்றால், ஏர்போர்ட், ஏர்போர்ட்டாக தேடிப்பிடித்து கொலைவெறியோடு பேட்டி தட்டும் ‘ஸ்னேக் பாபு நாராயணசாமி வேட்டிக்கு போட்டி போடும் இன்னொருவர்.

இதில் தப்பித்து ரிமோட்டை மாற்றினால் இன்னொரு தாய்மிருகம் நம்மை துரத்தும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தன் மொத்த கால்ஷீட்டையும் ‘புரட்சி’க்காக குத்தகைக்கு விட்டிருந்த பிரபு, புரட்சியை நட்டாற்றில் விட்டுவிட்டு, இப்போது ‘ரேட்கார்டு' பக்கம் வந்துவிட்டார். ‘விலைப்பட்டியல் எங்கே?' என்று அவர் அடித்தொண்டையில் கூவினால் தமிழன் டரியல் ஆகிறான். இந்தப் பக்கம் மாதவன் வந்து ‘கிளியர் பிரைஸ் டாக்' என்று பிரபுவுக்கு பல்ப் கொடுக்கிறார். இந்த கேப்பில் புகுந்து வரும் குஷ்பு, ‘எதுக்கு ரேட்கார்டு? நம்ம நகையை நாம் விலைபேசி வாங்குவோம். அது தமிழகத்தின் வீர பாரம்பரியம்' என பேரம் பேசுவதை தமிழர்களின் பாரம்பரிய குணம் போலவே சொல்கிறார். ‘அவங்க சேதாரத்துல ஏமாத்துறாங்க.. இவங்க செய்கூலில ஏமாத்துறாங்க' என்று இவர்கள் விளம்பரத்திலேயே அடித்துக்கொள்ள, ஒரு பவுன் நகையை விற்கப்போனால் அரை பவுனுக்குதான் பணம் தருகிறார்கள். உண்மையில் ஏமாறுவது பிரபுவா, குஷ்புவா... இல்லை மக்களா என்று நமக்கே கன்ஃபியூஸ் ஆகிவிடுகிறது.

மக்களுக்கு இன்னமும் செய்கூலி, சேதாரம் 24 கேரட், கே.டி.எம்., ஹால்மார்க்... போன்ற வார்த்தைகளின் அர்த்தமே முழுதாய் விளங்கவில்லை. அதற்குள் ரேட்கார்டு, பிரைஸ் டாக், கிளியர் பிரைஸ் டாக் என்று புதிய வார்த்தைகளால் மிரட்டுகிறார்கள்.

பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு, கோயில் சிலை போல உடம்பு எல்லாம் நகையை போட்டுவிட்டு கேமராவை 360 டிகிரியில் சுழல விடுவார்கள். இதுதான் நெடுங்காலமாக நகைக்கடை விளம்பரங்களின் இலக்கணம். ஆனால் இப்போது இந்த இடத்தை நடிகர்கள் பிடித்துக்கொண்டுவிட்டார்கள். நடிகைகள் கூட இதில் இல்லை. முழுக்க நடிகர்களின் ஆதிக்கம்தான். அதிலும் ‘உன்னை விட நான் பெஸ்ட்' என்று காட்ட வேண்டியிருப்பதால், விளம்பரத்திலேயே மெசேஜ் சொல்கின்றனர்.

மும்பையில் இருந்து அமிதாப்பச்சன் கிளம்பிவந்து ‘நம்பிக்கை... அதானே எல்லாம்' என்று செண்டிமென்ட் பஞ்ச் அடிக்க... கூடவே மருமகள் ஐஸ்வர்யாராயும் பறந்துவந்து அந்தரத்தில் மிதந்து தங்கம் விற்றார். இதற்கு இடையில் நம் இளைய தளபதி விஜய் வேறு பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை தங்கச்சி பாசத்தை பொழிகிறார். ‘தங்கச்சியை ஆசிர்வாதம் பண்ணும்போது எவ்வளவு நேரம் காலை தொடுதுன்னு அன்பை அளந்தா பார்ப்போம்?' என்று டி.ஆர். எஃபெக்டில் விஜய் கேட்கும்போது எல்லாம் ‘ஐய்யய்யோ... என்னால இந்த கொடுமையை தாங்க முடியலை. என்னை முதியோர் இல்லத்துல சேர்த்திடுங்க' என்று ‘கில்லி'யில் அலரும் விஜய் தங்கை புவியின் ஞாபகம் வந்து தொலைக்கிறது. இதற்கு முன்பு விஜய், அம்மா சென்டிமென்ட்டில் குடும்பப்பாட்டு பாடியதும் ஒரு துன்பியல் சம்பவம்தான். விளம்பரத்தில் செம கல்லா கட்டும் சூர்யா, நகைக்கடையை மட்டும் விட்டு வைப்பாரா? ‘தங்கம் பேசும் மொழியே தனி' என்று கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு நம்மை தங்கம் வாங்கச் சொல்கிறார்.

இவ்வளவு நகைக்கடைகள் நாட்டில் இருப்பதே விளம்பரங்களை பார்த்தால்தான் தெரிகிறது. ஒவ்வொருவரும் ஒரு நடிகரை பிடித்து வைத்திருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புது கான்செப்டில் ஷூட் செய்து ஒளிபரப்புகின்றனர். அந்த அளவுக்கு பணம் கொட்டும் ஏரியா இது. சமீபத்தில் கால்பந்து வீரர் மரடோனா கேரளாவுக்கு ஒரு நகைக்கடை விளம்பரத்துக்கு வந்தார். அவர் எல்லாம் உள்ளூரில் தலையை காட்டினாலே கோடிகளை கொட்ட வேண்டும். கேரளாவுக்கு வந்து கடையை திறக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டிருக்கும்?

இப்போது ஒரு விளம்பரம் வந்துகொண்டிருக்கிறது. ஒரு அய்யர் ஹோமகுண்டலம் வளர்த்து அதில் ‘ஸ்வாகா, ஸ்வாகா' என்று என்று ‘செய்கூலி, சேதாரம்' எல்லாவற்றையும் போட்டுக் கொளுத்துகிறார். இன்னொரு அழகான பெண்ணை தலைகீழாக யோகாசனம் செய்ய வைக்கிறார்கள். ‘தலைகீழா நின்னாலும் இவ்வளவு குறைஞ்ச சேதாரத்துல யாரும் நகை தர முடியாது' என்பது அவர்கள் உணர்த்த வரும் செய்தி. இவர்களின் கற்பனை குதிரை கண்டமேனிக்கு பறப்பதை தடுக்க ஏதாவது வழி இருக்கிறதா?

இவர்கள் எல்லாம் தங்கத்தை வாங்கச் சொன்னால், வாங்கிய நகையை அடகு வைக்கச் சொல்லி அழைக்கிறார்கள் விக்ரமும், மோகன்லாலும். அதிலும் விக்ரம் ‘கையில இருக்கு தங்கம், கவலை ஏண்டா சிங்கம்?' என்று ரொம்ப வீரமாக அடகு வைக்கச் சொல்லி அழைக்கிறார்.
இவற்றை எல்லாம் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு இரவு தூங்கப்போனால் வேட்டியும், தங்கமும் நம் மெடூலா ஆப்லங்கேட்டாவை மென்று துப்புவது உறுதி!

உணவுப் பாதுகாப்புச் சட்டம்: யாருக்கு ஆதாயம்?


‘ஏழ்மை என்பது ஒரு மனநிலை’ - அண்மையில் ‘இந்திய இளவரசர்’ ராகுல்காந்தி உதிர்த்த முத்து இது. அதாவது ஏழ்மை என்பது நடைமுறையில் இல்லையாம். மனதில் அப்படி நினைத்துக்கொள்வதால்தான் ஏழ்மையுடன் இருக்கிறார்களாம். சரி, நாளையில் இருந்து ‘நாம் எல்லோரும் பணக்காரர்கள்’ என்று நினைக்கத் தொடங்கினால், ஏழைகள் எல்லாம் அம்பானிகளாகிவிடுவார்களா? 

இது ராகுலுடைய கருத்து மட்டுமல்ல... மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மாண்டேக்சிங் அலுவாலியா உள்ளிட்ட இந்திய பொருளாதார மேதைகளின் கருத்தும் இதுதான். அவர்களும், ‘இந்த நாட்டில் ஏழைகளே இருக்கக்கூடாது’ என்றுதான் நினைக்கிறார்கள். அதற்காக திட்டங்களும் தீட்டுகின்றனர். எத்தகைய திட்டம் எனில், ‘ஒரு நாளைக்கு 28 ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள்தான் ஏழைகள். 29 ரூபாய் சம்பாதித்தால் ஏழை அல்ல’ என்று அறிவித்து, ஆடி மாத அதிரடி தள்ளுபடி போல, ஏழைகளை ஒரே நாளில் குறைத்துவிடுகிறார்கள். இந்த நாட்டின் 100 கோடி ஏழைகளின் நெற்றியில் ‘இனி நீங்கள் ஏழைகள் இல்லை’ என்று எழுதி ஒட்டிவிட்டால் அவர்கள் ஏழைகள் இல்லை என்றாகிவிடுவார்களா? அதுதான் இங்கு நடந்துகொண்டிருக்கிறது.

‘உணவு பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் இந்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் சாராம்சம் மேலே சொன்னதுதான். ‘அனைத்து ஏழைகளுக்கும் உணவை உத்தரவாதப்படுத்துவதே இச்சட்டத்தின் நோக்கம்’ என்று இப்போது சொல்லப்படுகிறது. 29 ரூபாய் சம்பாதிப்பவன் ஏழை இல்லை என்று ஏற்கெனவே சொல்லியாகிவிட்டது. இரண்டையும் இணைத்துப் பாருங்கள். சில கோடி பேர்தான் இந்தியாவில் ஏழைகளாக இருப்பார்கள்.

சரி, இந்திய அரசு, தன் நாட்டில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்கு ஏன் துடியாய் துடிக்க வேண்டும்? ஏனெனில் உலக வங்கி, மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை வெட்டச் சொல்லி நிர்பந்திக்கிறது. இந்த நிபந்தணையின் பெயரில்தான் ஏற்கெனவே பல மில்லியன் டாலர் கடன் அளித்துள்ளது.(இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனின் மதிப்பு, சுமார் 43 லட்சம் கோடி ரூபாய்). ‘உணவு, கல்வி, சுகாதாராம் போன்ற துறைகளில் மக்களுக்கு சலுகை விலையில் எதையும் தரக்கூடாது; ஒரு நிறுவனம் போல லாப விகிதத்துடன்தான் விற்பனை செய்ய வேண்டும்; அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்குரிய ‘வாங்கும் சக்தி’யை மக்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும்’ என்கிறது உலக வங்கி.

இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் கோடிக் கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர். அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் என அனைத்துப் பொருட்களுமே ஏதோ ஒரு வகையில் மானிய விலையில்தான் விநியோகிக்கப்படுகின்றன. ரேஷனில் இந்தப் பொருட்களை வாங்கும் மக்களிடம் ‘வால்மார்ட்டுக்கு வா..’ என்றால் எப்படி வருவார்கள்? ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டினால் வால்மார்ட்டுக்கு வந்துதானே ஆக வேண்டும்? (வால்மார்ட் என்பது இங்கு ஒரு குறியீடு மட்டுமே. இதுபோன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் வரும்). அதன் முதல் படிதான் உணவுப் பாதுகாப்பு மசோதா.

இந்த மசோதா சொல்வது என்ன? வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும், 25 கிலோ அரிசி அல்லது கோதுமையை கிலோ 3 ரூபாய் விலையில் கொடுப்பதுடன், தரமான உணவுக்கான உத்திரவாதத்தையும் இந்த மசோதா வழங்குகிறது. ஏழைகள் என்று பொத்தாம்பொதுவாக சொல்லப்படும் நிலையில், யார் ஏழை என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்.

நடைமுறையில் எவ்வளவு ஏழையாக இருந்தாலும்; குடிசை வீட்டில் கூவம் ஓரம் குடியிருப்பதாகக் கொண்டாலும் மாதம் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாயாவது சம்பாதிக்க வேண்டியுள்ளது. இதன்படி தினசரி வருமானம் 170 ரூபாயாவது வேண்டும். மத்திய அரசின் திட்டக் கமிஷனோ, ஒரு நாளைக்கு 28 ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள்தான் ஏழை. அதற்கு மேல் சம்பாதித்தால் ஏழை இல்லை என்கிறது. இந்த வரையின்படி 120 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் 28 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை சில கோடிகள்தான் வரும். திட்டக் கமிஷன் அளவீடுகளில் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை 11 கோடி பேர் வருகிறது. இதில் இன்னொரு காமெடிக் கூத்து என்னவெனில், கடந்த ஆண்டு இதே திட்டக் கமிஷன், ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதித்தால் ஏழை இல்லை என்றது. இந்த வருடம், அவர்களுக்கு ‘டார்கெட் பிரஷ்ஷரோ’ என்னவோ, 4 ரூபாயைக் குறைத்துவிட்டார்கள். 28 ரூபாய் சம்பாத்தாலே ஏழை இல்லையாம். இப்படியே ஒவ்வொரு ஆண்டும் நான்கு ரூபாயாகக் குறைத்துக்கொண்டு போனால் இன்னும் 7 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரே ஒரு ஏழைக் கூட இருக்க மாட்டார்கள். உலகிலேயே ஏழ்மை ஒழிப்பில் அதிவேகமாக முன்னேறிய நாடு என்று இந்தியா பட்டம் பெறலாம். என்ன கோமாளிக்கூத்து இது?

பன்னாட்டு நிறுவனங்களுக்கான வேட்டைக் காடாக இந்தியாவைத் திறந்துவிடும் ‘காட் ஒப்பந்தத்தில்’ நாடாளுமன்றத்திற்கேத் தெரியாமல் கள்ளக் கையெழுத்துப் போட்டவர் நம் மன்மோகன்சிங். அந்த காட் ஒப்பந்தப்படி, இந்திய சந்தைகளை சர்வதேச நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டாக வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அவை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இந்த வகையில் பல காலமாக இந்தியாவின் பொது விநியோக முறையை ஒழிக்க பகாசுர நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அதை ஒரே நேரத்தில் மொத்தமாக செய்ய முடியாத நிலையில், மானியங்களை பணமாக கணக்கிட்டு வங்கிக் கணக்கில் செலுத்தும் ‘உங்கள் பணம், உங்கள் கையில்’ திட்டமாக கொண்டு வந்தார்கள். இப்படி இன்னும் பல திட்டங்கள் வரப்போகின்றன. அனைத்துமே மானிய வெட்டு என்பதை இலக்காகக் கொண்டவை. உணவுப் பாதுகாப்பு மசோதாவும் இதன் ஓர் அங்கம்தான். இதன்மூலம் பொது விநியோக முறைக்கு அளிக்கப்படும் மானியத்தின் கணிசமான பகுதியை ரத்து செய்ய முடியும்.

உண்மையில் இப்போது இந்தியா மிகப்பெரிய இக்கட்டில் சிக்கிக்கொண்டுள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு கிடுகிடுவென சரிந்து விழுந்திருப்பதுடன், திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் மலைபோல் குவிந்து நிற்கிறன. மொத்த வெள்நாட்டுக் கடன்களின் மதிப்போ, 4.3 லட்சம் கோடி ரூபாய் என்ற மயக்கமடைய வைக்கும் எண்ணிக்கையில் உள்ளது. இந்த சீரழிவு நிலைக்கு நாடு வந்தடையக் காரணம், கடந்த 20 ஆண்டுகளாக அசுர வேகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தாராளமய, தனியார்மய கொள்கைகளே. நிலைமை இப்படியிருக்க, இப்போதையை இக்கட்டில் இருந்து மீண்டு வருவதற்கு மேலும் அதிகமான தாராளமய, தனியார்மய ‘சீர்திருத்தங்களை’ செய்யப் போவதாக அறிவிக்கிறார் மன்மோகன். ‘இந்தாளு உண்மையிலேயே லூசா, இல்லை லூசு மாதிரி நடிக்கிறாரா?’ என்பது பல சமயங்களில் புரிவதில்லை. எந்த சீரழிவினால் ஒரு நோய் வந்ததோ, அதே சீரழிவைவே தீர்வாக முன் வைக்கும் இவரைப் போன்ற நபர்களை ‘பொருளாதார வல்லுநர்கள்’ என்று அழைப்பது எத்தனைப் பெரிய நகைமுரண்?

இவர்கள் எந்த அமெரிக்காவை காட்டி இத்தகைய சீர்திருத்தங்களை அமல்படுத்தத் துடிக்கிறார்களோ... அந்த அமெரிக்காவில் சமீபத்தில் டெட்ராய்ட் என்ற நகரமே திவால் ஆனது. ‘உலகின் மோட்டார் நகரம்’ என்ற பெயர்பெற்ற டெட்ராய்டில் திரும்பிய திசை எங்கும் மோட்டார் நிறுவனங்கள் முளைத்திருந்தன. சமீப ஆண்டுகளாக உற்பத்தி குறைந்ததால் பல நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலைமை. கைவிடப்பட்ட தொழிற்சாலைகளின் பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் நகரம் எங்கும் சிதைந்து கிடக்கின்றன. நகரத்தின் மக்கள் தொகை பாதியாகக் குறைந்துவிட்டது. 18 பில்லியன் கடன் சுமையால் தடுமாறிய டெட்ராய்ட் நகரம் இறுதியில் திவால் ஆனதாக கடந்த 2013 ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இத்தகைய முன்னுதாரணங்களை இந்திய ஆட்சியாளர்கள் கண்கொண்டும் பார்ப்பது இல்லை. அமெரிக்க விசுவாசம் அவர்களின் கண்களை மறைக்கிறது. இந்த அம்சத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா எல்லோரும் ஒத்திசைவுடன்தான் சிந்திக்கின்றனர்.