உழைப்பே உயர்வு: யாருக்கு?


  • ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறீர்கள்?
  • உங்களை சுற்றியிருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் உழைக்கிறார்கள்?
  • பத்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விட, இப்போது உங்கள் ‘உழைக்கும் நேரம்’ எவ்வளவு அதிகரித்துள்ளது?

நிச்சயம் பதில்களின் நிறம் ஒரே மாதிரிதான் இருக்கும். மனிதர்கள் முன்னெப்போதைவிட மிக அதிகமாக உழைக்கும் காலம் இது! இடைவிடாமல் இயந்திரத்தைப் போல எல்லோரும் உழைக்கிறோம். நவீன அறிவியல் நாள்தோறும் விதவிதமான கருவிகளைக் கண்டுபிடிக்கிறது. நியாயமாகப் பார்த்தால், அவை நம் உழைப்பைக் குறைத்து ஓய்வை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும், முதலாளிகளின் உற்பத்தியை அதிகரிக்கவே பயன்படுகின்றன.

காலை 9 மணிக்கு கிளம்பினால் வீடு வந்து சேர இரவு 8 மணி, 10 மணி ஆகிறது. உழைக்கும் நேரம் மட்டுமல்ல, உழைப்பின் அடர்த்தியும் அதிகரித்துள்ளது. அலுவலகம் செல்பவர்கள் முதல் கூலிவேலை செய்பவர்கள், சிறுதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். பசித்த மிருகம் இரை தேடி அலைவதைப் போல... பணம் ஈட்டும் புதிய வாய்ப்புகளை எல்லோரும் தேடுகிறோம். ஓய்வு நேரங்களை பணமாக மாற்றத் துடிக்கிறோம். இவை அனைத்தும் பணக்கார வாழ்வை வாழ்வதற்காக அல்ல. ஒரு மிடிள் கிளாஸ் வாழ்வை வாழத்தான் இத்தனைப் போராட்டங்களும்!

மனிதர்கள் யாரும் உழைக்க சலித்தவர்கள் அல்ல. காடும், பாறையுமான பூமியை சமன்படுத்தி இயற்கையுடன் போராடி நாம் வாழும் இவ்வாழ்வு கடும் உழைப்பால் வந்ததுதான். ‘மனித குரங்கு, மனிதனாய் மாறியதில் உழைப்பின் பாத்திரம்’ பற்றி நாம் அறியாததல்ல. ஆனால் தற்போதைய மனிதனின் உழைப்பு என்பது அவனது திறனுக்கு அப்பாற்பட்டது. ஒரு டாஸ்மாக் தொழிலாளி காலையில் வேலைக்கு வந்தால் வீடு சேர இரவு 12 மணியாகிறது. கட்டுமானப் பணி செய்யும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு 24 மணி நேரமும் வேலைதான். சென்னையின் குப்பைகளை அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு வேலைக்குப்போய் இரவு 8 மணிக்குப் பிறகுதான் வீடு திரும்புகின்றனர். நிலத்தை அடகு வைத்து லட்சங்களில் செலவழித்து வெளிநாடு போனவர்கள், உறவுகளற்ற, மொழி புரியாத நாடுகளில் இரவும், பகலுமாக உழைப்பதை எதைக்கொண்டு அளவிடுவது? மனிதர்களின் உடலும், மூளையும் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறது.

ஏன் இப்படி? குறிபிட்ட நேரம் மட்டும் உழைத்தால் கிடைக்கும் பணம், வாழ்க்கையை ஓட்ட போதுமானதாக இல்லை. நமது வருமானம் உயரும் வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் விலைவாசி உயர்கிறது. சுமார் 5 ஆயிரம் ரூபாயாக இருந்த சிங்கில் பெட்ரூம் வீட்டின் வாடகை இப்போது சுமார் 8 ஆயிரமாகிவிட்டது. கடந்த மாதம் அரிசி 10 கிலோ பை 310 ரூபாய். இந்த மாதம் 350 ரூபாய். ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 4 ரூபாய் வாங்கிக்கொண்டிருந்த ஹவுஸ் ஓனர், மின்கட்டண உயர்வுக்குப் பிறகு 7 ரூபாயாக உயர்த்திவிட்டார். ஒரு பவுன் தங்கம் 23 ஆயிரம் ரூபாய் என்பதற்காக எந்த மாப்பிள்ளையும், ‘அஞ்சு பவுன் போதும்’ என்று சொல்வது இல்லை. இப்போது ஒரு லிட்டர் 70 ரூபாய் விற்கும் பெட்ரோல் கடந்த வருடம் 55 ரூபாய்தான். ஆனால் வருமானம்?

உங்களது சம்பள உயர்வு போன வருடம் 2,000 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு முழு வருடத்தில் கூடுதலாகக் கிடைத்தது 24,000 ரூபாய். இது எந்த மூலைக்கு? 2&ம் வகுப்பு மகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டவே போதாது. வாடகை, மளிகை, குழந்தைகளின் படிப்பு, மருத்துகள், டூ வீலர், இன்ஷூரன்ஸ் தவணைகள், செல்போன், பெட்ரோல், கேஸ், வாட்டர் கேன்... எத்தனை செலவுகள்? இவற்றுக்கு இடையில் எதிர்காலத்துக்கு வேறு சேமிக்க வேண்டும். ஒரு நீருறிஞ்சும் காகிதத்தைப் போல நமது வருமானத்தை உறிஞ்சுகிறது வாழ்க்கை. என்ன செய்யலாம்? ‘எக்ஸ்ட்ராவா ஒரு ஐயாயிரம், ஆறாயிரம் கிடைச்சா வீட்டு வாடகைக்காவது ஹெல்ப்பா இருக்கும். எதுனா இருந்தா சொல்லுங்களேன்’ என தானாகவே உபரி உழைப்பை தேடி ஓடுகிறது மனம்.

தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் மனைவி பெயரில் எல்.ஐ.சி. ஏஜன்ட்டாக இருக்கிறார். வெளிநாட்டு சாக்லெட்டுகளை மொத்தமாக வாங்கி வாரம் ஒருமுறை பெரிய கடைகளுக்குப் போடுவார். சேமிப்பில், ஒரு இண்டிகா கார் வாங்கி அதை ஃபாஸ்ட் டிராக்கில் வாடகைக்கு விட்டிருக்கிறார். ‘‘பயங்கர அலர்ட்டா இருக்கீங்களே?’’ என்று கேட்டால், ‘‘பின்ன, சம்பளத்தை மட்டும் நம்பியிருந்தா என்னத்துக்கு ஆக?’’ என திருப்பிக்கேட்டு திகைக்க வைக்கிறார். எல்லோரும் இப்படி சாமர்த்தியமாக இருப்பதில்லை; இருக்க முடிவது இல்லை. உண்மையில், இப்போது பலருக்குப் பிரச்னை கூடுதலாக உழைப்பதைப் பற்றியல்ல... அப்படி உழைப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதுதான்.

இதன் இன்னொரு உண்மை, நவீன காலம் நம்மை ‘பொருட்களின் அடிமை’ ஆக்கியிருக்கிறது. சில பொருட்கள் நமக்கு பிடித்திருக்கின்றன. பல பொருட்கள் நம்மை பிடித்திருக்கின்றன. அதிலும் ஒரு பொருளின் நவீன மாடலை வாங்கவில்லை எனில், யதார்த்த உலகில் இருந்து பின்தங்கிவிட்டது போன்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம், செல்போன். ‘ஸ்மார்ட் போன் இல்லையா அங்கிள்?’ என 30 வயது இளைஞனை ‘அங்கிள்’ ஆக்குகின்றன விளம்பரங்கள். பழைய செல்போன்களை என்னென்ன வழிகளில் ஒழித்துக்கட்டலாம் என ஒரு நாளைக்கு நூறுமுறை விளம்பரங்கள் சொல்லித் தருகின்றன. ‘உங்க வீட்டுல ஏ.சி. இல்லையா?’ என்பது நகரத்து நடுத்தர வர்க்கத்தின் கௌரவத்தை சீண்டிப் பார்க்கும் கேள்வி. இதற்கு உரிய ‘விலை’ கொடுக்க பணம் வேண்டும். என்ன செய்வது? உழைப்பு, மேலும் உழைப்பு. எட்டு மணி ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர உழைப்பு... என்பது மனித இனம் போராடி பெற்ற உரிமை. இது உலகம் முழுக்க அமுலுக்கு வரும் முன்பே முடிவை நெருங்கிவிட்டது. இப்போது உழைக்கும் நேரம் என்பது 12 முதல் 16 மணி நேரமாக மாறியிருக்கிறது. 

அண்மையில் வந்த ஒரு புள்ளி விவரத்தை நீங்களும் படித்திருக்கக்கூடும். ஓர் இந்தியனின் வாங்கும் திறன் ஆண்டுக்கு 3,700 அமெரிக்க டாலர்கள். இதை வைத்து அவன் மும்பையில் 1,076 சதுர அடியில் ஒரு வீடு வாங்க வேண்டுமானால் 308 ஆண்டுகள் இடைவிடாமல் உழைக்க வேண்டும். மும்பையை விடுவோம்... காட்டாங்கொளத்தூர் பக்கம் கால் கிரவுண்ட் வாங்கவே, ‘இ.எம்.ஐ. கிடையாதாங்க?’ என விசாரித்து அதற்கு 15 வருடங்கள் மாதத் தவணைக் கட்டுகிறோம். வாழ்வின் இளமை ததும்பும் காலங்கள் இ.எம்.ஐ. கட்டுவதிலேயே கழிந்துவிடுகின்றன. இதற்காக நாம் கொடுக்கும் விலை மிக அதிகம். அன்றாட வாழ்வின் மகிழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும், சில அபூர்வ தருணங்களும் கண் மூடி திறப்பதற்குள் கடந்துவிடுகின்றன. மென் உணர்வுகள் மறைந்துப்போய் நம்மை அறியாமல் இறுகிப்போகிறோம். இவற்றுக்கு இடையில்தான் காதல், அன்பு, காமம்... என நம் உணர்வுகளையும் தக்க வைத்துக்கொண்டாக வேண்டும்.

புகழ்பெற்ற ஒரு கால்சென்டரின் என் நண்பன் ஒருவன் பணிபுரிகிறான். நைட் ஷிப்ட். அதே ஷிப்டில் உடன் பணிபுரிந்த பெண்ணை மூன்று வருடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டான். இப்போது அந்தப் பெண்ணை மட்டும் பகல் ஷிப்டுக்கு மாற்றிவிட்டார்கள். ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். ஒரே வீட்டில் குடியிருக்கின்றனர். ஆனால் வாரக்கடைசியில் மட்டுமே வாழ்க்கை சாத்தியம்.

தனி மனிதர்கள் தங்களுக்கு கிடைக்கும் சில ஆயிரம் ரூபாய்க்காக அதிகமாக உழைக்க, உழைக்க... முதலாளிகளின் கல்லாவில் கோடிகள் குவிகின்றன. நமக்கு சாண் ஏறினால் அவர்களுக்கு முழம் ஏறுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இப்போது இருக்கும் கையிருப்புத் தொகை 5 லட்சம் கோடி ரூபாய். இது யாருடையது? அனைத்தும் உலக நடுத்தர வர்க்கம் உழைத்துக் கொட்டியது. தொழிலாளர்களின் ஓய்வற்ற உழைப்பின் பலன், சில ஆயிரம் முதலாளிகளுக்கு மட்டுமே சென்று சேர, பல நூறு கோடி மக்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கின்றனர்.

அதிகப்பணம் = அதிக உழைப்பு என்ற இந்த சமன்பாடு வாழ்க்கை நெருக்கடி காரணமாக திடீரென தோன்றியது அல்ல. சிறுவயதில் இருந்து நமக்கு இப்படித்தான் போதிக்கப்படுகிறது. ‘கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை’, ‘உழைப்பே உயர்வு’, ‘இன்று வேலை செய்தால் என்றோ ஒருநாள் பலன் நிச்சயம்’ என்று ‘உசுப்பேற்றி, உசுப்பேற்றியே’ நம்மை ‘பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்ய’ வைக்கின்றனர். இதனால்தான் நமது வாழ்க்கைப் பிரச்னைகளுக்கான தீர்வு, இன்னும், இன்னும் கடினமாக உழைப்பதில்தான் இருப்பதாக கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நம்புகிறோம். ஆனால் இது தனிநபர் உழைத்து முன்னேறி தீரக்கூடிய பிரச்னை அல்ல. முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படைப் பண்பே சுரண்டல்தான். இது ஒரு சமூக நோய். இதை தீர்க்க சரியான வழி என்ன? நோயை அண்டவிடாமல் விரட்டி அடிக்கலாம். இல்லையெனில் தன்னைத் தாக்காமல் தற்காத்துக்கொள்ளலாம். முன்னது நிரந்தரத் தீர்வுக்கானது. பின்னது தற்காலிகமானது. எனினும், அரசை விரட்டியடிக்கும் திராணி தமக்கு இல்லை என்று மக்கள் நம்புவதால் எல்லோரும் கடினமாக உழைத்துத் தன்னை தற்காத்துக்கொள்ள போராடுகின்றனர்.

இந்த ‘தற்காத்துக் கொள்வது’ என்பது கூழோ கஞ்சியோ குடித்துவிட்டு இருப்பதை வைத்து வாழ்வது அல்ல. அது So called மிடிள்கிளாஸ் வாழ்வின் பேராசைகளும், அற்பத்தனங்களும் நிறைந்தது. சந்தையில் அறிமுகமாகும் புதியப் புதியப் பொருட்களை வாங்கியாக வேண்டும். பிள்ளையை புகழ்பெற்ற பள்ளியில்/கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும். கண்ணை மூடுவதற்குள் அரை கிரண்ட் இடமாவது வாங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். இப்போது, ‘தற்காப்பு’ மெல்ல, மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்து, பேராசைமிக்க சுயநலமாகிறது. அந்த சுயநலம், ஒரு கட்டத்தில் நேர்மையாக வாழ்வது, ஒழுக்கமாக இருப்பது, மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு செயல்படுவது போன்ற வாழ்வியல் மதிப்பீடுகளை காவு கேட்கிறது. ‘ஊர்ல எவன்தான் யோக்கியமா இருக்கான்?’ என்றபடி சாதாரண பொதுமனம் இதைக் கடந்து செல்கிறது. இதுவே படைப்பாளிகளின் மனம் எனில், பிழைப்புவாதத்தை ‘புதிய வாழும் கலை’யாக பிரகடனப்படுத்துகிறது. அதற்கு கொள்கை சாயம் பூசுகின்றது. ‘வலியது வெல்லும்’ என்ற டார்வினிசத்தை பிரதி எடுக்க எதற்கு படைப்பு மனம்?

யதார்த்தத்தில் நாம் உழைப்புக்கு பழகிய மனிதர்கள். நம்மால் செயல்படாமல் இருக்க முடியாது. இந்த மனித இயல்புதான் உழைப்பை சுரண்டுபவர்களுக்கான அடிப்படை. ஆனால் மனிதர்கள் உழைக்க மட்டுமே பிறந்த இயந்திரங்கள் அல்ல. ஓய்வு என்பது நமது உரிமை, சலுகை அல்ல. நாம் ஓய்வை சலுகையாகவும், உழைப்பை உரிமையாகவும் கருதும் தலைகீழ் பார்வைக்கு பழக்கப்பட்டிருக்கிறோம்.

‘அதோ அந்த வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை’!

கருத்துகள்

Jeyapandian Karuppan இவ்வாறு கூறியுள்ளார்…
Ungal ezhutthukkal, parapatcham illamal, viruviruppaga, sindhanaiyai toondum vidhathil iruppadhu enakku romba pidithu irukkiradhu.

I've read your articles & stories in some magazines, but for from few days back only I've started reading your blog whenever I get time... Please keep wrting...Good luck...

Jeyapandian Karuppan

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்