6/7/11

சமச்சீர் கல்வி - யார் குற்றவாளி?

சமச்சீர் கல்வி முடக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் சமமான கல்விமுறை என்பதை ஜெயலலிதா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அனைவருக்கும் பொதுவான அரசு என காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் ‘பாடத்திட்டம் சரியில்லை, குறைகள் இருக்கின்றன, மேம்படுத்துகிறோம்’ என சமச்சீர் கல்வி குறித்து பலவிதமான சால்சாப்புகளை ஜெயலலிதா சொல்கிறார். ஆனால் தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கு இத்தகைய நிர்பந்தம் இல்லை என்பதால், ‘அதெப்படிங்க எல்லாருக்கும் ஒரேவிதமான கல்விங்குறது சரியா இருக்க முடியும்? அப்புறம் தகுதி, திறமை என்னாகுறது?’ என்று வெளிப்படையாகப் பேசுகின்றனர். இராம.கோபாலன் மிக திமிர்த்தனமாக ‘சமச்சீர் கல்வி என்பது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்துவிடும்’ என்கிறார். நடப்பில் இருக்கும் கல்விமுறைதான் குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவமாக இருக்கிறது என்பது இதன் முரண் யதார்த்தம். பா.ராகவன் போன்ற அறிவாளி அம்பிகளோ, சமச்சீர் கல்விக்கென தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி இதை நிராகரிக்கிறார்கள்.

இதில் அச்சம் தரக்கூடிய அம்சம், ஓர் அரசு அனைவருக்கும் சமமான கல்வி என்பதை மறுக்கிறது. இதை பலரும் ஆதரிக்கின்றனர். கல்வியில் இருக்கும் வித்தியாசம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை மத்திய தர வர்க்க மனநிலையும், பூணூல் பூச்சாண்டிகளும் விரும்புகின்றனர். அதை வெவ்வேறு வாதங்களின் மூலம் நியாயப்படுத்துகின்றனர்.

சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதை விமர்சிக்கும் ஊடகங்கள் பலவும், ஜெயலலிதாவை நோக்கி கோபமான ஒரு கேள்வியைதன்னும் முன்வைக்கவில்லை. மாறாக அ.தி.மு.க. தொண்டனைப் போல ‘அம்மா, நாங்கள் உங்களிடம் இருந்து இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும்’ என்று அமுங்கிய குரலில் பேசுகின்றன. (குரல் ஓங்கினால் குரல்வலையிலேயே குத்துவிழும் என்பது அவர்களுக்குத் தெரியும்). அதேநேரம், சமச்சீர் கல்வியை அமுல்படுத்திய கருணாநிதியை ஒரு வார்த்தை கூட பாராட்டாமல் இருப்பது போகட்டும்… மாறாக, ‘அவர் தப்பு, தப்பா புத்தகத்தை அச்சடிச்சதுனாலதான் இந்தம்மா வந்து சமச்சீர் கல்வியை நிறுத்திடுச்சு. இல்லேன்னா சர்ச்பார்க் கான்வெண்டுல கூட சமச்சீர் கல்வி வந்துடும்’ என்பது போல இதற்கான பழியையும் தூக்கி கருணாநிதி மீது சுமத்துவதில் கவனமாக இருக்கின்றனர்.

சமச்சீர் கல்வி ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல. சமமான கல்வியை முன்மொழியும் இந்த திட்டத்திலும் கூட கட்டண விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் ‘சமம்’ என்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. இந்த இடத்தில் எனக்கொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ’நல்லி குப்புசாமி செட்டி’ எனப் பெயரிலேயே செட்டியார் என வருகிறது. ஆனால் அவர் கூட்டங்களில் பேசும்போது கவனித்தால் வலிந்து பார்ப்பன பாஷையைப் பேசுவார். வேறு சில பார்ப்பனர் அல்லாத முதலாளிகள் கூட இப்படி பார்ப்பன பாஷையில் பேச முயற்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். இதன் உளவியல் என்னவெனில், தனக்குக் கீழ் பணிபுரிபவனின் பேச்சுமொழியும், தனது பேச்சுமொழியும் ஒரேவிதமாக இருப்பதை இத்தகைய முதலாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இயல்பாகவே அவர்களின் மனம் மேம்பட்ட பேச்சுமொழியாக பொதுவெளியில் பதிவாகியிருக்கும் பார்ப்பன பாஷையைத் தேர்ந்துகொள்கிறது.

பேசும் மொழியில் சமமாக இருப்பதை விரும்பாத இந்த மனநிலைதான் கல்வி சமமாக இருக்கக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகிறது. கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக மட்டுமே ஜெயலலிதா இந்தத் திட்டத்தை நிறுத்தவில்லை. மாறாக அவரது அடிமனதில் படிந்திருக்கும் இந்துத்துவ அஜண்டாவில் இருந்தே இத்தகைய செயல்கள் பிறக்கின்றன. அதனால் எல்லா பழியையும் தூக்கி கருணாநிதி மீது சுமத்திவிட்டு சவுகர்யமாக நகர்ந்துகொள்வது சரியல்ல.

ரஜினி… ஒரு நடிகனின் கதை!

ரஜினி மருத்துவமனையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ரஜினியைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் விதவிதமாக வெளியானபடியே இருக்கின்றன. ‘இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன’ கல்லீரல் செயல் இழந்துவிட்டது, உயிருக்கு ஆபத்து’ என பலவாறு சொல்லப்படும் நிலையில் ரஜினியின் உடல்நிலை ஏதோ ஒரு விதத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ரஜினியின் உடல்நிலை எப்போது சீராகும், அவர் மீண்டு வந்து நடிப்பாரா, முடியுமா என்பதுபோன்ற பல கேள்விகள் அலசப்படுகின்றன. வேறு சிலரோ, ரஜினியுடனான தங்களது உறவு குறித்து அசைபோடத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினி என்ற மனிதரை நாம் சற்று விலகி நின்று பார்ப்போம்.

ரஜினியை சுற்றி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் பிரமாண்ட பிம்பம் எந்த அளவுக்கு உண்மையானது? ரஜினிக்கு ஒன்று என்றால் மொத்த தமிழ்நாடும் ஸ்தம்பித்துவிடும் என்பது போலவும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பைத்தியமாகிவிடுவார்கள் என்பதைப் போலவும் உருவாக்கப்பட்டிருக்கும் தோற்றம் பல பத்தாண்டுகளாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கிய மிகை பிம்பம். யதார்த்தத்தில் நிலைமை அவ்வாறு இல்லை.

சினிமா மட்டுமே மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமாக இருந்த காலத்தில் ரஜினிக்கு மிகப்பெரிய மவுசு இருந்ததுதான். கடந்த 15 ஆண்டுகளாக தொலைகாட்சி மற்றும் இணையத்தின் ஆதிக்கம் வந்துவிட்ட பிறகு ரசிகர்களுக்கான ரசணைத் தேர்வுகள் அதிகரித்துவிட்டன. இதில் ரஜினி மட்டுமே போட்டியாளர் இல்லை. இதனால் நடைமுறையில் ரஜினிக்கு ரசிகர்களிடையே இருந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்துவிட்டது. ஆனால் அப்போதெல்லாம் ரஜினி, அவருடையக் கட்டுப்பாட்டில் இருந்து வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்த பிரமாண்ட சினிமா சந்தைக்கு ரஜினி என்ற பெரிய இரை தேவைப்பட்டுக்கொண்டே இருந்தது. உண்மையில் ரஜினியே நினைத்தாலும் அவரது செல்வாக்கை குறைக்க முடியாது. ஏனெனில் அவரது செல்வாக்கை கட்டுப்படுத்தும் அதிகாரம் ரஜினியிடம் இல்லை.

பொதுவாகவே உலகமயமாக்கல் சூழலில் எதையும் வேகமாக உறிஞ்சி முழு பலனையும் அனுபவித்துவிட்டு சக்கையாக்கிவிடுவது அதன் இயல்பு. பிளாச்சிமடா தொடங்கி மைக்கேல் ஜாக்‌சன் வரை பல உதாரணங்கள் வழியே இதை நாம் அறிய முடியும். போட்டி முதலாளித்துவ உலகில் நாள்தோறும் புதிய ஸ்டார்கள் கொண்டுவரப் படுகிறார்கள். அவர்களுக்கான சந்தை மதிப்பு காலாவதியாகும் வரை அவர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். பிறகு புதிய இன்னொரு ஸ்டார் வருவார். ரஜினியை பொருத்தவரை அவர் நீடித்து உழைக்கும் ஒரு தரமான பொருள். மற்றொரு புதிய நடிகரை புதிதாக பில்-டப் செய்து மேலேற்றுவதைக் காட்டிலும் ரஜினியைக் காட்டி வித்தைக் காட்டுவது கூடுதல் லாபம் தரக்கூடியது. அதைத்தான் பலகாலமாக ஊடக மற்றும் அரசியல் அரங்கில் செய்து வருகிறார்கள்.

கடந்த இருபது ஆண்டுகளாக, ஒவ்வொரு ரஜினி படம் ரிலீஸ் ஆகும் தினத்தன்றும் தமிழகத்தில் திருவிழா நடப்பதை போல மாற்றியிருக்கின்றனர். உண்மையில் இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அதற்கு முன்பிருந்தே தொடங்கிவிடுகின்றன. ரஜினி படம் அறிவிப்பு வந்த உடனேயே அந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என ஒவ்வொரு பத்திரிகையும் தங்களது கற்பனை சக்தியின் எல்லை வரை ஒரு கதை தீட்டுகின்றன. பிறகு அதில் ரஜினியின் கெட்-அப் என்ன, ஹீரோயின் யார், இசை அமைப்பது யார், இயக்குநர் யார் என ஒவ்வொன்றையும் உளவறிந்து சொல்லி, தங்களது விற்பனையைப் பெருக்குகின்றன. படப்பிடிப்பில் ரஜினி இன்று மூன்று முறை தும்மினார், நான்குமுறை கக்கூஸ் போனார் என்பது வரை கூச்சமின்றி எழுதுகின்றனர். ரஜினி ஒரு நடிகன். ஆனால் அவரை கடவுளின் அவதாரம் போல சித்தரித்து, ரசிகர்களை பக்தர்களாக்கிய முழு பொறுப்பும் தமிழக ஊடகங்களுக்குதான் உண்டு. இப்படி ரசிகர்களை, பக்தர்களாக்கும் இவர்கள், அவ்வப்போது ‘ரஜினிக்கு ஒரு கடிதம்’ என்ற பெயரில் ‘தலைவா, விஜயகாந்த் வந்துட்டாரு. நீ இன்னும் வரலையே’ என உசுப்பேற்றவும் செய்வார்கள்.

ரஜினி ரசிகர்களின் பிற்போக்குத் தனங்களை எள்ளி நகையாடி, விமர்சித்து அவர்களை மாற்ற வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் அவர்களோ, எரியும் நெருப்பை அணைக்காமல் எவ்வளவு தூரம் தூண்டிவிட முடியுமோ அவ்வளவு தூரம் தூண்டி விடுகின்றனர். பாபா’ பட அறிவிப்பு வெளியான உடனேயே அதில் ரஜினியின் பஞ்ச் டயலாக் என்னவாக இருக்கலாம் என வாசகர்களுக்குப் போட்டி நடத்தியது ஒரு பத்திரிகை. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது பஞ்ச் டயலாக்குகளை எழுதி அனுப்பி, அதில் ’சிறந்தவற்றை’ தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினார்கள். இப்படி ரசிகர்களின் முட்டாள்தனங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளும் இவர்களுக்கு ‘ரஜினி, தமிழர்களை ஏமாற்றுகிறார், நாடகமாடுகிறார், கர்நாடகாவில் சொத்து வாங்கிவிட்டார்’ என்றெல்லாம் ‘ஆவேச’ கூச்சலிட ஏதேனும் அருகதை இருக்கிறதா?

இப்படி ரஜினியின் திரை நடிப்பு, யதார்த்த நடிப்பு என இரண்டையும் வெவ்வேறு முகங்களுடன் எழுதி விற்பனை செய்த ஊடகங்கள், தற்போது மருத்துவமனையில் இருக்கும் ரஜினியை வைத்து தங்களின் அடுத்தக்கட்ட வர்த்தகத்தை நடத்துகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக ஓர் உழைக்கும் மிருகமாக மாற்றப்பட்டிருக்கிறார் ரஜினி. கடைசியாக ரஜினியை வைத்து ‘எந்திரன்’ என்ற சினிமா எடுத்து இதுவரை இல்லாத வகையில் 150 கோடி ரூபாய் கல்லா கட்டியது சன் டி.வி. இந்த நுகர்வு வெறி தின்று துப்பிய சக்கையாகவும் ரஜினியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மற்ற நடிகர்களின் ரசிகர்களைக் காட்டிலும் ரஜினி ரசிகர்கள் கூடுதலான ஈடுபாடு கொண்டவர்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என்பது போன்றவற்றை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது. ரஜினி ரசிகர் மன்றத்தின் செல்வாக்கு உண்மையில் அவ்வளவு பெரிதானது இல்லை. அதில் இருப்பவர்களின் பெரும் சதவிகிதத்தினர், ‘ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார், நாமும் ஏதேனும் ஒரு பதவிக்கு வந்துவிடலாம்’ என நம்புகிற காரியவாத ரசிகர்கள்தான். ஆனால் அரசியலுக்கு வருவதாக சொல்வதெல்லாம் வெறும் நாடக டயலாக் என்பது புரிந்த பின்னர் அவர்கள் படிப்படியாக வெளியேறத் தொடங்கிவிட்டனர். விஜயகாந்த், கட்சித் தொடங்கியபோது இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் சொன்னார்கள். ‘நேத்து வந்து மன்றம் ஆரம்பிச்சவன்லாம் இன்னைக்கு மாவட்டச் செயலாளர்னு அலையுறான். நாங்க இத்தனை வருஷம் உங்களையே நம்பியிருக்கோம். ஒரு நல்லவழியை காட்ட மாட்டேங்குறியே தலைவா’ என பேட்டி எல்லாம் கொடுத்தார்கள். இப்போது ரஜினியின் ரசிகர் மன்ற கூடாரத்தில் மிச்சம் இருப்பவர்கள் சந்தையில் விலைபோகாதவர்களும், ‘பிழைக்கத் தெரியாத’ பக்தர்களுமே!

ஆனாலும் ரஜினியின் செல்வாக்கு இம்மியும் குறையவில்லை என்பதுபோல் ஒரு சித்திரம் இருக்கிறதே… அது எப்படி? ’ஊடகங்கள் ஊதிப் பெருக்குவது’ ஒரு பக்கம் இருக்கட்டும். படம் ஓடுகிறதே… அதில் ஒன்றும் பாதகம் இல்லையே… ஏனெனில் புதிது, புதிதான ரஜினி ரசிகர்கள் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றனர். விஜய், சிம்பு என பலருக்கு அடுத்த ரஜினியாகும் கனவு இருக்கிறது. அந்தக் கனவு இல்லாத நடிகர்களும் கூட, ரஜினியின் ‘மார்க்கெட்டையும், அவரது பக்தர்களான வாடிக்கையாளர்களையும்’ தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். அதனால் இன்று ரஜினி ரசிகர்களாக இருப்பவர்கள், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல. போட்டியில் இருக்கும் இதர நடிகர்களின் ரசிகர்களும் ரஜினி ரசிகர்கள்தான். அப்புறம் தேர்தல் சமயத்தில் வடிவேலு பேசினாலும், ஜெயலலிதா பேசினாலும், விஜயகாந்த் பேசினாலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடுவதைப் பார்த்தோம். அதை வைத்து அவர்களுக்குத் தனிப்பட்ட வகையில் எக்கச்சக்கமான செல்வாக்கு இருப்பதாக கணக்கிடுவது எப்படித் தவறானதோ, அதுபோலதான் ரஜினிக்கு சேரும் கூட்டத்தையும் மதிப்பிடுவது தவறானது.

ரஜினிக்காக நாம் பாவப்பட வேண்டுமா என்றால் ஒரு மனிதன் என்ற அடிப்படையிலும், ஒரு கலைஞன் என்ற அடிப்படையிலும் ரஜினிக்காக நாம் பரிதாபப்படலாம். ஆனால், நடைமுறையில் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளோடு பலகோடி மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் கூலி வேலை செய்தும், பல்வேறு நிறுவனங்களில் உடல் மற்றும் மூளை உழைப்பைக் கொடுத்தும் பணிபுரியும் சாதாரண மக்களின் உழைப்பில்தான் ரஜினி என்ற பிரமாண்ட பிம்பம் உயிர் வாழ்கிறது. இன்றும் மூன்று வேளை நிம்மதியான உணவுக்கு வழியற்ற கோடிக்கணக்கானோர் நம்மிடையே வாழ்கின்றனர். காய்ச்சலுக்கு மருந்து வாங்க வசதியற்றவர்களும், நோய்களை தீர்த்துக்கொள்ளும் திராணியற்றவர்களும் நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்காக யார் கவலைப்படுவது? ரஜினி இசபெல்லா மருத்துவமனையில் இருந்தார், பிறகு ராமச்சந்திராவில் இருந்தார், இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார், அவர் விரும்பினால் சிகிச்சைக்காக உலகின் எந்த நாட்டுக்கும் போகலாம். ஆனால் மக்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபமாக இருக்கிறது. நாம் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது, ரஜினிக்கா? மக்களுக்கா?

இப்படிப் பேசுவதை ‘வறட்டுவாதம்’ என வரையறுப்பதோ, ‘நெகிழ்ச்சித்தன்மையற்றதாக’ புரிந்துகொள்வதோ சுலபமானது. ஆனால் அழகியல் என்பது அரசியல் நீக்கம் செய்யப்பட்டதல்ல. இப்படி எல்லாம் தோண்டித் துருவி பார்க்காமல் ரஜினியைப் பார்த்தோமா, விசில் அடித்து ரசித்தோமா என கடந்து சென்றால் பிரச்னை இல்லை. ஆனால் அந்த ’வெகுமக்கள் மனநிலை” உண்மையானது இல்லை என்பதே இங்கு சொல்ல வருவதன் சாரம். இது பொய்களால் கட்டப்பட்டது. அதனால்தான் ரஜினியே நடித்திருந்தும் கூட ‘பாபா’, ‘குசேலன்’ போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. இன்னொரு பிரிவினர், ‘உழைக்கும் தொழிலாளிகளை தனது நடிப்பின் மூலம் ஆசுவாசப்படுத்தினார்’ என ரஜினியைப் பற்றி சொல்கின்றனர். ’உழைப்பாளிகள் ரிலாக்ஸ் ஆக ரஜினி படங்கள் உதவின’ என்பது அவர்களின் ஆய்வு முடிவு. இந்த தர்க்கத்தின்படி ’மயக்க மருந்துகள் நோயைத் தீர்க்கும்’ என்ற முடிவுக்கே நாம் வர முடியும்.

இதைத்தாண்டி ரஜினிக்கு ஒரு பிரமாண்ட சித்திரம் உருவானதில் அவரது ’எளிமை’ ஒரு பாத்திரம் வகிக்கிறது. வாராத தலை, கலைந்த ஆடை, தாடி நிறைந்த முகம்… என்பது அவரது புறத்தோற்றம். இதை வைத்து சாதாரண எளிய ரசிகர்களும் கூட, ‘எவ்வளவுப் பெரிய ஆளு. எவ்வளவு எளிமையா இருக்காரு’ என்றே எண்ணுகின்றனர். உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்களின் பெயர் வந்துவிட்டதைக் கண்டு டீ கடையில் அமர்ந்து மகிழ்ச்சியடைவதற்கும், ரஜினி எளிமையாய் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யம் அடைவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஓர் இந்தியன் உலக கோடீஸ்வரனாய் ஆனதால் டீ கடை தமிழனுக்கு என்ன லாபம்? ரஜினி எளிமையாய் இருப்பதால் சலூன் கடை தமிழனுக்கு என்ன பயன்? புறத்தோற்றத்தில் எளிமையைப் பின்பற்றும் ரஜினி தனது ஒவ்வொரு படத்துக்கும் பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்திக்கொண்டேப் போகிறார். ’ராணா’வில் ரஜினிக்கான சம்பளம் 35 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, ரஜினி, ரஜினி என வெறியூட்டப்பட்ட ரசிக வெறியோடு அலறத் தேவையில்லை. ஏனெனில் உங்கள் ரசணை இயல்பானதில்லை. அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

மே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்துவந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!

மக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக் கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை சுரண்டும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அ.தி.மு.க. சுவைத்திருக்கும் இந்த மாபெரும் வெற்றியின் ருசி அவர்களே எதிர்பாராதது! ஆனால் நமது ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும், ஜெயலலிதாவின் வெற்றிக்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களையும் ‘கண்டுபிடித்து’ சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘இது ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தின் அறுவடை’ என்பதை ஜெயலலிதாவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார்.

இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.

’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள் பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறது? ஒரு சொட்டு மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப் போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன் அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’ என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?

ஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும், தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை கேட்டுக்கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே?!

இப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா? மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited என்ற பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் SNJ DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும் பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா?

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் அரங்கக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமுல்படுத்தியிருந்தார் கருணாநிதி. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கரையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்துவிட்டார். இப்போது வரை அடித்த போலீஸுக்கு சிறு தண்டனையும் கிடைக்கவில்லை. தலித்களின் சம்பந்தியாக தன்னை அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும் செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா?

சந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா… போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.

ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர் இருக்கா?’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா? இப்போதும் கூட பலர் ‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு. பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர். ’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும் இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.

போலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’ என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள் மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு என்னப் பிரச்னை?’ என்பது பர்க்கா தத்தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.

நாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால் இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும் இல்லை.

நமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும் சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார். போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும் அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா, அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!

சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”

சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை!

பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்த சாயிபாபா அந்தப் பணத்தில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், இலவச மருத்துவமனைகள் என கட்டி வைத்துள்ளார். இப்போது அவருக்கான ஆதரவு சக்திகள் தங்களின் தர்க்கத்துக்கு பயன்படுத்தும் பாய்ண்ட்டும் இதுதான். ‘எப்படியோ சம்பாதிச்சுட்டுப் போகட்டும்ங்க.. எவ்வளவு சேவை செய்யிறாரு. கொள்ளையடிக்கிற மத்த எவனும் இதை செய்யிறானா?’ என்பது பக்தர்களுடையது மட்டுமின்றி, பொதுவான மிடில் கிளாஸ் மனநிலையின் வாதமும் கூட.

’எப்படியோ சம்பாதிச்சுப் போகட்டும்’ என்ற சொற்களின் மூலம் மிகப் பெரிய மோசடித்தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் மிக எளிமையாக இவர்கள் கடந்து செல்கின்றனர். சாயிபாபாவுக்கு மட்டுமல்ல.. இன்று ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், குவைத் ராஜாவுக்கும் கூட இதே தர்க்கத்தைதான் பொதுப்புத்தி பொருத்துகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க.வின் ஊழல்கள் எல்லாம் வாக்குக்கு எதிரானதாக மாறாது எனச் சொன்ன டீ கடைக்காரர் ஒருவர், ‘நாட்டுல எவன் சார் கொள்ளை அடிக்கல.. ஏதோ அவன் பத்து காசு பார்த்தானா… நமக்கு ரெண்டு காசு தந்தானா.. ரைட்டு ஓ.கே.ன்னுட்டுப் போக வேண்டியதான்’ என்று பெருந்தன்மையாக ஊழலை அங்கீகரித்தார்.

நாட்டின் மிகப் பெரும் கொள்ளைகளுக்குதான் இப்படி என்றில்லை. பன்னெடுங்காலமாக இந்த சிஸ்டம் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக Corrupt செய்து வந்திருக்கிறது. அதன் விளைவு… ஊழல் என்றில்லை… எல்லாமே இப்படித்தான் நடக்கும், ஏற்றுக்கொண்டு அனுசரித்துதான் வாழ வேண்டும் என மக்களின் மனங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ‘போலிஸ்னா அடிக்கத்தான் செய்வான். அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான். அதிகாரின்னா லஞ்சம் வாங்கத்தான் செய்வான்’ என சீரழிவுகள் அனைத்தையும் சமூகத்தின் இயல்புகள் என ஏற்றுக்கொண்டிருக்கிறது பொதுப்புத்தி. ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’ என வடிவேல் கேட்பது வெறும் நகைச்சுவை அல்ல, இந்த சமூகத்தின் மனசாட்சி!

அனைத்தையும் அனுசரித்துப் போவதும், ஊழலையும், பொறுக்கித்தனத்தையும், நேர்மையின்மையையும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாக கொள்வதும் தனிப்பட்ட நபரின் விருப்பத் தேர்வாக இருக்கும் வரை அது ஓர் தனிநபரின் ஆளுமைப் பிரச்னை மட்டுமே. ஆனால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்துபோவது ஒரு சமூக மனநிலையாக மாற்றப் பட்டிருக்கிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியிடும் யாரும் உத்தமர் இல்லை என தெரிந்தும் மக்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் மட்டுமல்ல.. வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் சமரசத்தால்தான் எல்லோரும் எதிர்கொள்கின்றனர்.

இன்று கல்வி என்பது கொழுத்த பணம் புரளும் வர்த்தகம். தனியார் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட் ஒரு கோடி ரூபாய் விலைபோகிறது. இந்த அநீதியை எதிர்த்து ‘கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை இலவசமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என உரிமையை போராடிப் பெற யாரும் தயாரில்லை. மாறாக, கிடைத்த படிப்பைப் படிக்கவும், ‘பணத்தைக் கொடுத்தாலும் வேலையை முடித்துத் தரும்’ நீரா ராடியாக்களைத் தேடவுமே விரும்புகின்றனர்.

ஆனாலும் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்துகிறது. தங்களின் அட்ஜஸ்ட்மெண்ட் வாழ்க்கையை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். மாறாக, தங்களுக்கென ஒரு முற்போக்கு அடையாளத்தை சூடிக்கொண்டவர்களோ… அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் பச்சோந்தித்தனத்தையே கொள்கையாகப் பேசத் தொடங்குகின்றனர். முற்காலத்தியில் முற்போக்குப் பேசி தற்போது ஓட்டரசியலின் லாபங்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் (ML to MLA) ரவிக்குமார் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சந்தர்ப்பவாத அரசியலுக்கு கொள்கை சாயமடித்து… விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் வேலையை ரவிக்குமார் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.

இந்த மோசமான சிஸ்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக இதற்குள் சாமர்த்தியமாக வாழ்வது எப்படி என அனுதினமும் மக்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களுக்கான காரண சக்தியை கண்டறிந்து அகற்றுவதற்குப் பதிலாக… அதன் தாக்குதலை சமாளித்து தற்காத்து வாழ்வது எப்படி என்றே சனங்களுக்குப் போதிக்கப்படுகிறது. ‘ஆயிரம்தான் இருந்தாலும் அவன் புருஷன். நாலு அடி அடிச்சாலும் வாங்கிக்கிட்டு சேர்ந்துதான் வாழனும்’ என்பது அப்பத்தாக்களின் அறிவுரை மட்டுமல்ல… அரசாங்கத்தின் அருளாசியும் இதுதான். ஈஷா தியான மையம், வாழும் கலை… எல்லாம் இந்த கும்பல்தான். நோய் நிவாரணிக்குப் பதில் வலி நிவாரணியும், மயக்க மருந்துமே இவர்களின் பரிந்துரை.

இந்த இடத்தில் நாம் சாயிபாபாவைப் பேசுவோம். சாய்பாபா யார்? அவர் சாதாரண மனிதன். அதனால்தான் இப்போது செத்தும்விட்டார். இத்தனை நாட்கள் தன்னை தெய்வம் என சொல்லிக்கொண்ட சாய்பாபா, மாய மந்திர வித்தைகள் எல்லாம் செய்து உலகம் முழுக்க பக்தர்களை வளர்த்துக்கொண்டு, பல லட்சம் கோடி ருபாய் சொத்துக்களையும் சேர்த்துவிட்டார். அந்த வித்தைகளின் செய்முறை விளக்கம், Working stills வரை வெளியான பின்னும் அவரும் கைவிடவில்லை, மக்களும் அவரை கைவிடவில்லை. இந்த மோசடிகளைப் பேசினால், ‘அவர் தனி மனிதனாக ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கு பல லட்சம் பேர் மருத்துவ வசதி பெருகின்றனர். கல்வி வசதி பெருகின்றனர்’ என பேச்சை மடை மாற்றுகின்றனர்.

இவ்வளவுப் பேருக்கு இலவசமாக அனைத்தையும் செய்வதற்கு உண்டான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? மாய மந்திரத்தில் கொண்டு வந்தாரா? ரிசர்வ் பேங்க் ஆபீஸர் வந்து ஒவ்வொரு நோட்டிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாரா? ‘எல்லாம் பக்தர்கள் கொடுத்தது’ என்பார்கள். ’பக்தர்கள் ஏன் கொடுத்தார்கள்?’ என்றால், ‘இது என்ன கேள்வி? அவர் பகவான், இவங்க பக்தர்கள். குடுக்குறாங்க’ என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆக, தான் இறைவன் அல்லது தெய்வீக சக்தி படைத்தவன் என சாய்பாபா தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட இமேஜ்தான் இத்தனைக்குமான அடிப்படை. அந்த அடிப்படையே பொய்களாலும், மோசடிகளாலும் உருவாக்கப்பட்டது என்பதுதான் பிரச்னையின் மையம்.

உங்கள் மகனோ, தம்பியோ, தங்கையோ தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அலுவலகப் பணம் 10 லட்சத்தைத் திருடிவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். திருடியப் பணத்தில் நான்கு அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். இப்போது ‘ஏன் திருடினாய்?’ என கேட்டால் ’அதான் அனாதைப் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறேன்ல’ என பதில் சொன்னால் அது யோக்கியமானதா? ‘ஏதோ தெரியாத்தனமாகத் திருடிவிட்டான். அதை உணர்ந்து பிராயச்சித்தமாக அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்’ என்று சொன்னால் கூட அந்த தர்க்கம் புரிந்துகொள்ளக் கூடியது. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குறைந்தப்பட்ச நேர்மையேனும் அதில் உண்டு. ஆனால் பாபாவின் பக்தர்களோ திருட்டையே ஒரு தெய்வீகத்தன்மையாகப் பார்க்கின்றனர்.

சாய்பாபா சம்பாதித்தது = திருட்டுப் பணம் என்ற இந்த ஒப்பீட்டில் பொருந்தாப் புள்ளி ஒன்று உண்டு. ஓர் எல்லைக்குப் பிறகு சாய்பாபா தானாக சென்று யாரிடமும் திருடவில்லை. பக்தர்கள் தானாக வந்து கொட்டிய பணம் அது. ’பக்தர்கள் மனமுவந்து கொடுத்ததை அவர் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிட்டார். அது தப்பா?’ என்று கேட்கிறார்கள். வேறு சிலரோ, ’அவர் பணம் சம்பாதிப்பதும், அதற்கு கையாளும் வழிமுறைகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறுதியில் அந்த பணம் முழுவதையும் சமூகத்துக்குத் தொண்டு செய்யத்தானே பயன்படுத்துகிறார்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என கேட்கிறார்கள். அதாவது குடியிருக்குறது குடிசையா இருந்தாலும் போய் சேர்ற இடம் கோயிலா இருக்கனும். காரணம் முக்கியம் இல்லை, விளைவுகளே முக்கியம் என்கிறார்கள். ஆனால் காரணமின்றி செயல் இல்லை. சாய்பாபாவின் மாய மந்திரத்தையும், அவர் நடத்தும் இலவச மருத்துவமனையையும் ஒன்றுடன் ஒன்று பிரித்துப் பார்க்க முடியாது. மந்திரம்தான் மருத்துவமனையின் அஸ்திவாரம்.

இன்று சாயிபாபாவின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கும் அப்துல் கலாம் முதல் மானா மூனா சிங் வரை, சச்சின் டெண்டுல்கர் முதல் மு.கருணாநிதி வரை சகலரும் பாபாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். தனி விமானத்தில் புட்டபர்த்தி விரைகிறார் ஸ்டாலின். இவர்கள் எப்போதேனும் மக்கள் பிரச்னைக்காக இத்தனை விரைவாக செயல்பட்டதுண்டா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் தவிட்டுத் தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வட மாநிலத் தொழிலாளர்கள் இறந்துபோனார்கள். ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேலாக கேட்பாரின்றி கிடந்த அந்தப் பிணங்களை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனெனில் அவை வி.ஐ.பி.களின் பிணங்கள் அல்ல.

அதிகாரத்துடன் ஒத்துப்போவது, அதிகாரத்துக்கு ஒத்து ஊதுவது, எது பொதுப்புத்தியோ, எது பெரும்பான்மை கருத்தோ, எதற்கு சந்தையில் மவுசு இருக்கிறதோ, எது விலைபோகிற பண்டமோ… அதன் பக்கம் நின்றுகொள்வது்… இதுதான் இந்த சந்தைப் பொருளாதாரம் மக்களிடம் கொண்டு வந்திருக்கும் மனநிலை. இதில் நியாயம், நீதி, அறம் என்பவை எல்லாம் பொருளற்ற வெறும் சொற்கள் மட்டுமே. சுருங்கச் சொன்னால் டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அவன்தான் சாமர்த்தியசாலி. இப்படி சுயநலமாகவும், ஒட்டுண்ணியாகவும், பச்சோந்தித்தனமாகவும் இருப்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தகுதியாகவே கணக்கிடுகின்றன. இதை ஊடகங்கள் தெரிந்தே செய்கின்றன.

சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது மனைவியை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்த கதைதான். இதனால் அவரது வியாபாரத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஊடகங்களில் ஊருக்கு உபதேசித்து அறுவடை செய்த இமேஜை அடியுரமாகப் போட்டு இப்போது ஊர், ஊருக்கு ஈஷா யோகா மையம் நடத்திக்கொண்டிருக்கிறார் சத்குரு. இதேபோல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீதும், நித்தியானந்தா மீதும் ஏராளமான சர்ச்சைகள் உண்டு. ஆனாலும் ஊடகங்கள் இவர்களை ஐகான்களாக முன்னிருத்துகின்றன. இதன் மறுகோணம், இவர்கள்தான் இந்தியாவின் இந்துத்துவ சாரத்தை தக்க வைத்துக்கொள்கிற குவி மையங்கள். ’ஏன் டி.ஜி.எஸ்.தினகரன் செய்யவில்லையா?’ என்றால், ஆம் அதுவும் இதற்கு இணையான அயோக்கியத்தனம்தான். ஆனால் எந்த மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையும் டி.ஜி.எஸ்.தினகரனை வைத்து தொடர் எழுதுவது இல்லை என்பதை நாம் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

சாய்பாபாவைப் பொருத்தவரை கடைசியில் எல்லோரும் வந்து முட்டி நிற்கும் இடம் மனிதநேயம். ’இதையாவது செய்யிறாருல்ல.. மத்தவன் யாரும் செய்யலல்ல’ என்ற புள்ளியில் வந்து நிற்பார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனிதநேயம் என எதுவும் இங்கு இல்லை. தமிழ் மக்களின் உள்ளன்போடு கூடிய மனிதநேயத்தை சுனாமி சமயத்தில் நாம் எல்லோருமேப் பார்த்தோம். சுனாமியில் இறந்துபோனவர்களுக்கு வீடும், வாழ்வாதார வசதிகளும் செய்து தருவதாகக் கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி உதவி வாங்கின பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். இன்றுவரை அதில் பாதிப் பணம் கூட செலவிடப்படவில்லை. பல தன்னார்வ நிறுவனங்கள் மீது சுனாமி நிதி முறைகேடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இதை எப்படி மதிப்பிடுவீர்கள்? ‘என்.ஜி.ஓ. காரன் என்னவோ பண்ணிட்டுப் போறான். எங்கேயோ வெளிநாட்டுல பணம் வாங்கி யாரோ நாலு பேருக்காவது வீடு கட்டி தந்தானா, இல்லையா?’ என இதை நியாயப்படுத்துவது சரியானதா? சாய்பாபாவின் ‘எப்படியோ நல்லது செய்தாருல்ல’ லாஜிக்கும் இப்படித்தான். அவை, ஊரை ஏமாற்றிக் கொள்ளை அடித்தவன் தன் ஏமாளி பக்தர்களுக்கு வீசி ஏறியும் பிஸ்கட் துண்டுகள். அதற்குள் நல்லனவற்றைத் தேடுவது என்பது, பெரியாரின் மொழியில் சொல்வதானால், ‘மலத்துக்குள் அரிசி பொறுக்கும் வேலை!’

இது யாவற்றையும் கடந்து பிறந்தால் இறந்துதானே ஆக வேண்டும்? இதை எழுதிய நான் தொடங்கி வாசிக்கும் நீங்கள் வரை ஒருநாள் சாகத்தான் போகிறோம். அதுபோல் இப்போது சாய்பாபாவும் இறந்திருக்கிறார். வடிவேலு வசனத்தைதான் நானும் சொல்கிறேன், ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’!