Peepli [Live]: ஊடக பொறுக்கித்தனத்தின் உண்மை முகம்!

காதல் கவிதை’ என்று அகத்தியன் ஒரு படம் இயக்கினார். அந்த படத்தில் கதாநாயகன் ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்கு கவிதை ஒன்றை விளம்பரமாகக் கொடுக்கச் செல்வார். அங்கு விளம்பரப் பிரிவில் இருப்பவர் தலையை நிமிர்ந்துக் கூட பார்க்காமல், ‘என்ன சைஸ்.. எட்டுக்கு எட்டா, ஆறுக்கு ஆறா?’ என்பார். ‘இது கவிதை சார்’ என்று கதாநாயகன் சொல்ல, ‘இருக்கட்டும். என்ன சைஸ்.. அதைச் சொல்லுங்க’ என்பார் அந்த நபர்.

ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் ரசனையும், சிந்தனையும் இப்படித்தான் கவிதைக்கும், விளம்பரத்துக்கும் எந்த வித்தியாசங்களுமற்று இறுகிப் போயிருக்கிறது. எல்லாவற்றையும் வெறும் ’நியூஸ் மெட்டீரியலாக’ மட்டுமே பார்ப்பது அல்லது எல்லாவற்றிலும் நியூஸைத் தேடுவது என்றாகிவிட்டன இன்றைய ஊடகங்கள். அறம், நேர்மை, மக்களின்பால் கரிசனம் ஒரு புண்ணாக்கும் இல்லை. ஊடகங்களுக்குத் தேவை எல்லாம் இன்றைய பசிக்கான தீனி மட்டுமே. அது நீங்களோ, நானாகவோகூட இருக்கலாம்.

கருணையற்ற இன்றைய ஊடக உலகின் முகத்தை அப்படியே துவைத்து தொங்கப் போடுகிறது ‘பீப்ளி லைவ்’ என்ற பெயரில் அண்மையில் வெளியாகி இருக்கும் ஓர் இந்தி திரைப்படம். அமீர்கான் தயாரிப்பில் அனுஷ்கா ரிஸ்வி என்ற பெண் இயக்குநர் இயக்கி இருக்கும் இந்த படம் மன சுத்தியுடனும், அரசியல் நேர்மையுடனும் இன்றைய உலகை அணுகுகிறது. நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட துயரங்களுக்கு மத்தியில், வாழ வழியற்ற இந்திய விவசாயிகளின் நிலைமையையும், அந்த துயரத்தையும் ஒரு பண்டமாக்கி விற்கத் துடிக்கும் ஊடகங்களின் பிழைப்புவாதத்தையும் ஒரு சேர அம்பலப்படுத்துகிறது பீப்ளி லைவ். படம் முன் வைக்கும் அரசியலை பேசும்முன்பாக கதையைப் பற்றி கொஞ்சம்…

‘முக்கிய பிரதேஷ்’ மாநிலம்தான் கதைக்களம். தமிழ்நாட்டில் பட்டி, புதூர் என்ற பின்னொட்டுடன் நிறைய கிராமங்கள் இருப்பதுபோல வட இந்தியாவில் பீப்ளி என்ற பெயரோடு ஆயிரக்கணக்கான கிராமங்கள் உண்டு. அப்படி ஒரு பீப்ளியில் கதை தொடங்குகிறது. ஈரப்பசையற்ற வறண்ட நிலமும், கள்ளிச்செடி முளைத்துக் கிடக்கும் பாலை நிலமுமான ஊரில் நத்தா, புதியா என்ற இரு சகோதரர்கள் வசிக்கிறார்கள். இருவரும் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய வங்கியில் கடன் வாங்கியுள்ளனர்.

விவசாயம் காலை வாரிவிட்டுவிடுகிறது. ஒரு லாபமும் இல்லை. கடன் கொடுத்த வங்கியோ, கடனைத் திருப்பிக் கட்டவில்லை என்றால் நிலத்தை பிடுங்கிக் கொள்வதாகச் சொல்கிறது. பதறிப்போகும் சகோதரர்கள் நிலத்தை தக்க வைத்துக்கொள்ள எவ்வளவோ போராடுகின்றனர். எங்குமே அவர்களால் பணம் புரட்ட முடியவில்லை. அந்த சமயத்தில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்குவதை கேள்விப்படுகின்றனர். அப்படியானால் இருவரில் ஒருவர் தற்கொலை செய்துகொள்வது என்றும், அதற்கான இழப்பீட்டுத் தொகையை வாங்கி மற்றொருவர் அரசிடம் இருந்து நிலத்தை மீட்பது என்றும் முடிவு செய்கின்றனர்.

நத்தா தற்கொலை செய்துகொள்வதாகத் திட்டம். ஆனால் இவர்களின் திட்டம் மெதுவாக ஊடகங்களுக்கு கசிந்து விடுகிறது. பீப்ளி என்ற அந்த சிறிய கிராமத்தை நோக்கி ஊடகங்கள் பறக்கின்றன. நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைகாட்சிகளின் ஓ.பி. வேன்கள் புழுதியை கிளப்பியபடி ஊருக்குள் விரைகின்றன. ‘மைக்கை’ கையில் பிடித்தபடி ‘இந்திய தொலைகாட்சிகளிலேயே முதன்முறையாக’ ஒரு தற்கொலையை ‘லைவ்’ ஆக ஒளிபரப்புப் போவதைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நத்தாவின் ஒவ்வொரு அசைவையும் டி.வி. கேமராக்கள் படம் பிடிக்கின்றன. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் நத்தா பதற்றமாகிறான். அலர்ட் ஆகும் அரசாங்கம் நத்தா தற்கொலை செய்து கொள்ளாமல் பாதுகாப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புப் போடுகிறது. அவர் ஒண்ணுக்கு அடிக்கப் போனால் கூட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பாகப் போகிறது. எந்தக் காட்சியையும் ஊடகங்கள் தவறவிடத் தயாரில்லை.

தற்காலிக கடைகள் முளைக்கும் அளவுக்கு அந்த சிறு கிராமம் பரபரபாக்கப்படுகிறது. அதில் தாங்களும் பங்குபெறும் பொருட்டு அரசியல்வாதிகளும் ஓடிவந்து தலைகாட்டி ஊடகங்களுக்கு செவ்விகள் வழங்குகின்றனர். ஒரு நாள் காலையில் எழுந்து ஒரு பாறை மறைவில் மலம் கழிப்பதற்காக ஒதுங்குகிறார் நத்தா. அப்போது ஒரு உயரமான டெண்ட்டில் இருந்து அதை தனது கேமராவின் வழியே பார்க்கிறார் ஓர் ஊடகக்காரர். எல்லோரும் அந்த இடத்தை நோக்கி ஓடுகின்றனர். அங்கு நத்தா இல்லை. எங்குமே நத்தா இல்லை.

நத்தா காணாமல் போய்விட்டார். ஊடகங்கள் அதை மேலும் பரபரப்பான செய்தியாக கன்வர்ட் செய்து விற்கின்றன. நத்தா கடைசியாக மலம் கழித்த இடத்தை வட்டம் போட்டு அதை படம் பிடித்து ஒளிபரப்புகின்றனர். நத்தா எங்கே என்று யாருக்குமே தெரியவில்லை. இறுதியில் பீப்ளி என்ற அந்த சிறு கிராமத்தில் இருந்து ஊடகங்கள் வெளியேறுகின்றன. தற்காலிகக் கடைகள் பிரிக்கப்படுகின்றன. கேமரா அப்படியே பின்னோக்கிப் போகிறது.

மெல்ல, மெல்ல நகரம் வருகிறது. ‘மோர் ஸ்பேஸ், மோர் லெக்ஷூரி’ என்ற போர்டு வரவேற்கிறது. அதையும் கடந்து கேமரா செல்கிறது. ஒரு பிரமாண்ட கட்டடத்தின் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பரிதாப முகத்துடன் தாடியை மழித்து தன் உருவத்தை மாற்றிக்கொண்டு கட்டுமான வேலைகள் செய்துகொண்டிருக்கிறார் நத்தா. ‘ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் விவசாயிகள் நாடு முழுவதும் விவசாயத்தை கைவிடுகின்றனர்’ என்ற குறிப்புடன் படம் முடிவடைகிறது. படம் முடிந்துவிட்டது.

விவசாயிகளின் பிரச்னையும், ஊடகங்களின் அரசியலும்?

‘தேவைக்கேற்ற உற்பத்தி’ என்பதே இந்திய பாரம்பரிய விவசாயத்தின் தன்மை. நிலம் இருக்கிறதே என்று யாரும் எல்லாவற்றிலும் மாங்கு, மாங்கென வெள்ளாமை செய்தது இல்லை. ஆனால் இந்த சீரழிந்த அரசியல், நிர்வாக அமைப்பின் விளைவினால் நாடெங்கும் பட்டினிப் பஞ்சங்கள் ஏற்பட்டபோதுதான் ‘புரட்சிகர’ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ‘பசுமைப் புரட்சி’ ‘வெண்மை புரட்சி’ என்று இந்திய உற்பத்தி சந்தை என்பது லாப நோக்குள்ள ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டது.

எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற நிலத்தில் கால் கூட வைத்திடாத ‘ஒய்ட் காலர்’ விவசாயிகள் இதற்கான திட்டங்களை வகுத்துத் தந்தனர். பசுமை புரட்சியின் விளைவு… விவசாய நிலங்களின் சத்துக்கள் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு, நிலம் என்பது மலட்டுத்தன்மை கொண்டதாக மாறத் தொடங்கியது. இதன் பின்னர் வந்த உலக மயமாக்கலும், தாராளமயமாக்கலும் விவசாயிகளுக்கு மேலும் பல ஆப்புகளை சொருகியது.

‘மான்சான்டோ’ விதைகள், ‘பி.டி.காட்டன்’ இப்போது மரபணு மாற்றப்பட்ட விதைகள் என இந்திய விவசாயத்தின் பிடி, உலகை கட்டுப்படுத்தும் பெருநிறுவனங்களின் வசம் போனது. மான்சான்டோ விதையைப் பொருத்தவரை ஒவ்வொரு முறையும் விதை நெல்லுக்கு அவனிடம்தான் போய் நிற்க வேண்டும். விளைந்ததை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது. இதன்மூலம் ஏற்பட்ட நஷ்டத்தினால் ஆந்திராவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதேபோல ‘பி.டி. காட்டன் விதைத்தால் லட்சம் கொட்டும், கோடிகள் குவியும்’ என ஆசைக்காட்டி பி.டி.காட்டனை விற்றார்கள். அதில் ஏற்பட்ட நஷ்டம், மஹாராஷ்டிராவின் விதர்பா விவசாயிகளை கொத்து, கொத்தாக பலியெடுத்தது.

சுயசார்புடன் இருந்த இந்திய விவசாயத்தை முழுக்க, முழுக்க சார்ந்திருக்கும் நிலைக்கு மாற்றி விவசாயிகளை மரணக் குழிகளை நோக்கித் தள்ளினார்கள். தேவை சார்ந்ததாக இருந்த இந்திய விவசாயம், வர்த்தகம் சார்ந்ததாக மாற்றப்பட்டது. மேற்கத்திய நாட்டினர் எந்த உணவை விரும்பி சாப்பிடுவார்களோ அவை இங்கு பயிரிடப்பட்டன. அந்த உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை மட்டுமே லாபகரமானதாக மாற்றி அமைக்கப்பட்டது. அது மட்டுமல்ல… உணவுப் பயிர்கள் உற்பத்தியை விட, பணப்பயிர்கள் உற்பத்தியையே இந்திய அரசு ஊக்குவிக்கிறது.

நெல், வாழை, உளுந்து, காய்கறிகள்… போன்ற உணவு விவசாயத்துக்கு அரசு சார்பில் எந்தவித உற்சாகப்படுத்தலும், ஊக்குவித்தலும் இல்லை. மாறாக சணல், ரப்பர்… போன்ற பணப்பயிர்களின் உற்பத்திக்கே அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. ‘அந்நிய செலாவணி’ என்று இதற்குக் காரணம் சொல்லும்போதே இது, ‘மக்கள் நல அரசு’ என்ற நிலையில் இருந்து ‘லாப நல அரசு’ என்ற நிலையை வந்தடைந்துவிடுகிறது.

இப்படி முழுக்க, முழுக்க திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டிருக்கும் இந்திய விவசாயம் இறுதியில் விவசாயிகளை தற்கொலைப் பாதையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அவர்கள் வாழ வழியற்று, வங்கியில் கடன் வாங்கிய சில ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்த முடியாதபோது அதற்காக நிலத்தை பிடுங்கிக்கொள்ளும் அரசு, அவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் இழப்பீடுத் தொகை வழங்குகிறது. இந்த முரண்பாட்டை துல்லியமாக கையாண்டிருக்கும் இயக்குநர், படம் நெடுக அதிகாரத்தை நோக்கிய நக்கல்களை உதிர்த்தபடியே போகிறார்.

‘பிளாக் ஹியூமர்’ என்ற வகையிலான இந்த நகைச்சுவை ஒட்டுமொத்த படத்தின் மையத்தையும் தாங்கி நிற்கிறது. குறிப்பாக இந்திய காட்சி ஊடகங்களின் பொறுப்பற்ற பொறுக்கித்தனத்தையும், பிழைப்புவாதத்தையும் காட்சிக்கு, காட்சி தோலுரிக்கிறார் இயக்குநர்.

வாட்டி வதைத்த சூடான் பஞ்சத்தில் மயங்கி சாகக் கிடக்கும் குழந்தை, அதன் அருகே காத்திருக்கும் கழுகு… என்ற கெவின் கார்ட்டர் எடுத்த புகைப்படம் உலகப் புகழ்பெற்றது. அந்த மன உளைச்சலில் கெவின் கார்ட்டர் தற்கொலை செய்துகொண்டது வேறு செய்தி. அந்த பிணம் தின்னும் கழுகைப் போலதான் இந்திய ஊடகங்கள் செய்திக்காக அலைகின்றன. வட கிழக்கு இந்தியாவில் அணுதினமும் கண்காணிப்பின் கீழ் மக்கள் வாழ்வதை, காஷ்மீரில் தினம், தினம் செத்து மடிவதை வெறுமனே எண்ணிக்கைகளாக்கி கடந்து போகின்றனர். குறைந்த மரணங்கள் அவர்களுக்கு தலைப்பு செய்தியை தருவதில்லை. எங்கேனும் ஒரு விபத்து, வன்முறை எனில் ‘எத்தனை பேர் சாவு?’ என்பதில்தான் தொலைகாட்சிகளின் கவனம் முழுவதும் இருக்கிறது.

அப்படி இருக்கையில் ‘பீப்ளி’யில் ஒரு விவசாயியின் மரணத்தை ‘லைவ்’ செய்யலாம் என்றால் சும்மாவா? எல்லோரும் நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் கிராமத்தில் காத்துக்கிடப்பதும், அந்த கிராமத்தின் சாதாராண மக்களை காட்சிப் பொருட்களாக்கி டி.ஆர்.டி.யைக் கூட்டுவதும் யதார்த்தத்தில் நாம் பார்ப்பதுதான்.

இலங்கை யுத்தத்தை இந்திய ஊடகங்கள் அணுகிய விதத்தையே இதற்கு உதாரணமாகக் கொள்ள முடியும். ஆனால் அதில் ஒரு முரண்பாடு இருந்தது. வழமையான செய்தி ஊடகங்களின் பரபரப்புக்கேனும் கூட அவர்கள் இலங்கையின் இன அழிப்பை காட்டவில்லை. அந்த விஷயத்தில் அவர்கள் இந்திய அரசின் அயலுறவுக் கொள்கை என்னவோ அதையே பின்பற்றினார்கள். பொதுவாக இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் பிரச்சனைகளும், தேசிய இனங்களின் போராட்டங்களும் திட்டமிட்டே தேச பக்தியுடன் இணைக்கப்படுகின்றன.

காஷ்மீர் தொடங்கி தண்டகாரன்யா வரை அனைத்துமே இப்படித்தான். அதை கேள்வி கேட்பவர்கள் தேசதுரோகிகளாகி விடுகின்றனர். தேசபக்தி, எப்போதுமே நல்ல விற்பனைப் பொருள் என்பதால் இது காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது.

சினிமா என்பது அழகியல் இன்பங்களில் மனதை லயிக்க செய்யும் பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமல்ல. ஒரு திரைப்படத்தின் காட்சிகள் பார்வையாளனின் மனதில் பாரதூரமான பாதிப்புகளை உண்டுபண்ணுகின்றன. இந்தியா மாதிரியான அரை நிலவுடைமை சமூகத்தில் பண்ணையார் தனமும், அடிப்படைவாத குணங்களும்தான் சினிமாவின் குணங்களாக இருக்கின்றன. நடப்பு முதலாளித்துவத்தின் ஜிகினா தன்மைக்கு ஏற்ப வளைந்துகொடுக்கவும் செய்கிறது. இந்த பின்னணியில் நிலவும் சமூக அமைப்பை கேலியும், கிண்டலுமாக கையாண்டிருக்கும் பீப்ளி லைவ் இந்தியாவின் சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக திகழ்கிறது!

கருத்துகள்

Valar (வளர்மதி) இவ்வாறு கூறியுள்ளார்…
excellent post.... Keep writing.
aandon ganesh இவ்வாறு கூறியுள்ளார்…
thanks boss to introduce a bout one good movie
aandon ganesh இவ்வாறு கூறியுள்ளார்…
thanks boss to introduce a good movie
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
விவசாயிகள் போன்ற தொழில் பிரச்சினைகளால் தற்கொலையை நாடும் மனிதர்களின் பிரச்சினைகளுக்கு நாம் அரசியல்வாதிகளை மட்டும் குறைகூறிக் கொண்டிருப்பது எனக்கு சரியென்று தோன்றவில்லை. இன்றைய உலகம் முழுதும் இப்போது ஒருசில பெரும் பணக்கார பண்ணாட்டு முதலாளிகள் கைகளில் அகப்பட்டு சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருப்பதை நாம் சுட்டிக் காட்டவும் தவரக் கூடாது. அரசாங்கமே அவர்களிடம்தான் மாட்டிக்கொண்டிருகிறது.
இச்சில பணக்காரர்கள்தான் உலக நடப்புகள் அனைத்தையும் தங்களது கட்டுப்பாடிற்குள் வைத்திருக்கிறனர். அவர்கள் வைப்பதுதான் அனைத்து சட்டமும் திட்டமும். இதற்காக நான் முதாலித்வத்தை வெறுக்கிறேன் என நினைக்கவும் கூடாது.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

(கன ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உங்களுடன் உரையாடுவதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே).

வணக்கத்துடன் மாசிலா.
மரா இவ்வாறு கூறியுள்ளார்…
மிக அருமையான நடை. நல்லதொரு விமர்சனம். நானும் இப்படம் பார்த்து ரெண்டு நாள் ஆகியும் இதன் தாக்கம் குறையாமல் திரிந்தேன். நன்றி.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு விமர்சனம்!!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஒருமுறை வந்துப் பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நடைவண்டி: Peepli [Live]: ஊடக பொறுக்கித்தனத்தின் உண்மை முகம்!

//காஷ்மீர் தொடங்கி தண்டகாரன்யா வரை அனைத்துமே இப்படித்தான். அதை கேள்வி கேட்பவர்கள் தேசதுரோகிகளாகி விடுகின்றனர். தேசபக்தி, எப்போதுமே நல்ல விற்பனைப் பொருள் என்பதால் இது காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது.//


மிக சரியாக சொன்னிர்கள்! தேசத்துரோகி பயங்கரவாதி வில்லன் கலவரக்காரர்கள் என்று சொன்னால் மட்டுமே போதும் இந்த ஆடு மந்தை கூட்டம் எந்த கேள்வியும் கேட்காமல், கண்ணெடுத்தும் பாராமல் கடந்து போய் விடும்.


ஊடகங்களும் அப்படியே வழிமொழிகின்றன. MAD CITY படம் ஊடகங்களின் இன்றைய மனநிலைமையை அப்பட்டமாக தெரிவிக்கின்றது.
பன்னிக்குட்டி ராம்சாமி இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் நண்பரே.
நன்றி!
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_07.html
தமிழ் அஞ்சல் இவ்வாறு கூறியுள்ளார்…
வந்து ரொம்ப நாள் ஆச்சு.. பாஸ் ஆழியூரான் எப்ப பாரதி தம்பி ஆனார்.?
Riyaz Ahamed இவ்வாறு கூறியுள்ளார்…
பிணம் தின்னும் கழுகைப் போலதான் இந்திய ஊடகங்கள் செய்திக்காக அலைகின்றன - முற்றிலும் உண்மையான செய்தி.விவசாயிகளின் தற்கொலை இந்தியாவுக்கே ஒரு சபகேடுதான். ஊழல்கள் நிறைந்த இந்தியா ஊழலாலையே தான் அழியும் போல் தெரிகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்