போராடினால் என்ன தப்பு?



‘நீங்கள் எங்களோடு இல்லை என்றால் எதிரியோடு இருப்பதாக அர்த்தம்’ என்ற புஷ் கோட்பாடுதான் இப்போது மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தின் தத்துவம். எதிர்ப்பியக்கங்கள் மற்றும் போராடும் மக்களுக்கு ஆதரவாகப் பேசும் அறிவுஜீவிகள் இந்த கோட்பாட்டின் பெயரால்தான் மிரட்டப்படுகின்றனர். ஆனால் இது திடீரென்று இப்போது அமுல்படுத்தப்படும் ஒன்றல்ல. மக்கள் பிரச்னைகள் தலைதூக்கும்போது எல்லாம் இந்த அரசு இத்தகைய கோட்பாட்டையே கையில் எடுக்கிறது.

முதலில் இவர்களுக்கு போராட்டம் என்பதே பிடிப்பது இல்லை. ‘போராடுவதே சட்டவிரோதமானது’ என்று நினைக்கின்றனர். போலீஸ், நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் உறுப்புகளாக செயல்படுபவர்களும், அரச மனநிலையை சுவீகரித்துக் கொண்டவர்களாக இருக்கும் மிடிள்கிளாஸ் மக்களும் போராட்டங்களை வெறுக்கின்றனர். போராட்டம் என்பது போக்குவரத்துக்கு இடையூரானதாகவும், போராடுபவர்கள் வேலையற்ற முட்டாள்கள் எனவும் சித்தரிக்கப்படுகிறது. பொதுப்புத்தியும், அரசப் புத்தியும் ‘அமைதியான சூழலை’ வேண்டி நிற்க, போராட்டக்காரர்கள் மட்டுமே இந்த அமைதிப் பூங்காவில் சத்தம் போடுபவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால் போராட்டம் என்பதே எப்படி தவறான ஒன்றாக இருக்க முடியும்?

மறுக்கப்படும் உரிமைகளுக்காக போராடுவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை அம்சம். அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாத சூழலில், மக்கள் தங்களின் எதிர்ப்பை போராட்டங்கள் வழியாகத்தான் காட்ட முடியும். ஆனால் அரசும், அதன் அடியாட்களாக செயல்படும் போலீஸும், ராணுவமும் ‘போராடுவதே தப்பு’ என நினைக்கிறது. போராட்டத்துக்கு எதிராகவும், போராடும் மக்களுக்கு எதிராகவும் போலீஸ் மற்றும் ராணுவத்தின் மனநிலையே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. உடனே, ‘ரயிலை குண்டு வைத்து தகர்ப்பதும் போராட்டம்தானா?’ என்று எவரேனும் கேட்கக் கூடும். எதிர்ப்பியக்கம் ஒன்று எளிய மக்களைப் பாதிக்கும் இத்தகைய வன்முறை வடிவங்களை கைகொள்ளும் என்றால், அரச வன்முறையை எதிர்த்துப் போரிடும் தார்மீக தகுதியை அது இழந்துவிடுகிறது. எனவே மக்களுக்கு எதிரான வன்முறையை எவர் செய்தபோதிலும் மோசமானதே. ஆனால் இந்த அரசு எளிய மக்களின் சாதாரணப் போராட்டங்களை எப்படி எதிர்கொள்கிறது?

வடகிழக்கிலும், காஷ்மீரிலும், தெலுங்கானாவிலும், சட்டீஸ்கரிலும் மட்டுமல்ல... குடிநீர் வேண்டி, சாலைவசதி கேட்டு, பேருந்து வசதிக் கோரி நாள்தோறும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தபடியேதான் இருக்கின்றன. தலித் மக்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டுமானப் பணியாளர்கள், முஸ்லிம் மக்கள் என சமூகத்தின் எல்லா வகையினரும் ஏதோ ஒரு திசையில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இவற்றை இந்த அரசு எப்படி எதிர்கொள்கிறது? குடிதண்ணீர் கேட்டு போராடினால் தண்ணீர் லாரி வருவதற்குப் பதில் போலீஸ் வேன் வருகிறது. சாலைவசதி, ரேசன் அரிசி, தொழிலாளர்களின் கூலி உயர்வு என எந்தப் பிரச்னைக்காகப் போராடினாலும் அரசாங்கம் போலீஸை அனுப்பி வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்காக பள்ளிக் குழந்தைகள் சாலை மறியல் செய்தபோது அதற்கும் போலீஸ் வேன்தான் சென்றது. விவசாயிகள், உதிரித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் போலீஸால் அச்சுறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

போலீஸ் தனது லத்திக்கம்பின் கீழ் சமூகத்தின் அனைத்து வகையினரையும் அடக்கி ஒடுக்க நினைக்கிறது. இதை எதிர்க்க வேண்டிய மக்கள் மனமோ, அடிப்பது போலீஸ் குணம் என்றும் அடிவாங்கி அடங்கிப் போவதுதான் மக்களின் குணம் என்றும் நினைக்கிறது. இதற்கு துலக்கமான உதாரணம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸ் நடத்திய வெறியாட்டம். ‘போலீஸ்னா அடிக்கத்தான் செய்வான்’ என்ற வசனத்தை அப்போது நாம் நிறைய கேட்டோம். ஆனால் ‘போலீஸ் உங்கள் நண்பன்’ என்று எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிம் எழுதி வைத்திருக்கின்றனர். உண்மையில் போலீஸ், மக்களின் நண்பனா? இல்லை, அவர்கள் அதிகார வன்முறையில் ஊறித் திளைத்த இந்த அரசின் அடியாள்படை.

உயர்நீதிமன்ற கலவரத்தில் வக்கீல்களை சமூக விரோதிகளைப்போலவும் பொறுக்கிகள் போலவும் சித்தரித்தது போலீஸ். ஆனால் யோசித்துப் பாருங்கள். எந்த போலீஸாவது பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதுண்டா? தெருவோர தள்ளுவண்டி வியாபாரியிடம் எந்த போலீஸ் காசு கொடுத்து பழம், காய்கறி வாங்குகிறார்? லாக்&அப் கொலைகள், லஞ்சம், ரோந்து என்ற பெயரில் வழிப்பறி, பாலியல் வன்முறை என்று தமிழக போலீஸ் பொறுக்கித்தனத்தின் கூடாரமாக இருக்கிறது. சிவகாசி ஜெயலட்சுமி முதல் திண்டிவனம் ரீட்டாமேரி வரைக்கும் நாடறிந்த உதாரணங்களே ஆயிரம் சொல்ல முடியும். தண்டிக்கப்பட வேண்டிய இந்த கிரிமினல் குற்றவாளிகள்தான் சட்டத்தின் காவலர்களாக இருக்கின்றனர். இவர்களை வைத்துதான் இந்த அரசு மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் அடக்கி ஒடுக்குகிறது.

இந்தியா ஜனநாயக நாடு என்றும், நீதிமன்றம், சட்டமன்றம், நிர்வாகம், பத்திரிகைகள் என்ற தூண்கள் இந்த ஜனநாயகத்தை தாங்கி நிற்பதாகவும், ஒன்றில் தவறு நடந்தால் இன்னொரு இடத்தில் மக்கள் நிவாரணம் பெறலாம் என்பதுதான் குடியாட்சியின் சிறப்பு என்றும் கூறுகிறார்கள். ஆனால் உயர்நீதிமன்ற கலவரத்தில் போலீஸின் தடியாட்சியை சட்டமன்றம், நீதிமன்றம், ஊடகங்கள் அனைத்தும் ஓரணியில் நின்று நியாயப்படுத்தின. சுப்பிரமணியன் சாமியின் முகத்தில் வழிந்த முட்டைக்கறையினால் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக அலறிய யாரும், நூற்றுக்கணக்கான வக்கீல்கள் சிந்திய ரத்தத்தால் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக பேசவில்லை, எழுதவில்லை. வழியும் ரத்தம் யாருடையது என்பதிலிருந்தே அது புனிதமா, அசிங்கமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இதே வகையினர்தான் இப்போது ‘பசுமை வேட்டை நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான ஏற்பாடு’ என்று கண்களை மூடிக்கொண்டு நம்பச் சொல்கின்றனர்.

அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு வரலாற்றில் நீண்ட நெடிய பாத்திரம் உண்டு. இயக்கமாக மட்டும் இல்லை, தனிநபராகவே அநீதிகளை எதிர்த்து நிற்போர் எல்லா காலங்களிலும் இருக்கிறார்கள். உண்மையில் போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஓர் இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. அது அவ்வாறு விரிவடைந்து குடும்ப உறுப்பினர்களுக்குள் சமமின்மை, சாதி பேதம், வர்க்க பேதம் என முரண்பாடுகள் முன்னேற்றமடைந்து மனம் தன்னைத்தானே கேள்வி கேட்கிறது. உச்சத்தில் சொல்லிலும், செயலிலும் அது வெளிப்படுகிறது. சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும்.

உண்மையில் போராட்டம் என்பது மகிழ்ச்சியான அனுபவம். நீங்கள் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யாரோ பத்து பேர் சாலையோரத்தில் நின்று வேலை வெட்டியில்லாமல் கத்திக் கொண்டிருப்பதாக நினைத்து கடந்து செல்லலாம். ஆனால் அவர்கள் அப்படி 'கடந்து செல்பவர்களுக்காகவும்' சேர்த்துதான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தினவாழ்வின் நெருக்கடிகள் அழுத்தும்போது எல்லோராலும் போராட்டங்களில் பங்கெடுக்க வீதிக்கு வர முடியாது என்பது யதார்த்தமான் உண்மைதான். ஆனால் அதையெல்லாம் மீறித்தான் போராட வேண்டியிருக்கிறது. வீட்டில், வீதியில், பேருந்தில், அலுவலகத்தில் என எங்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அல்லது சந்தர்ப்பங்களை வலிந்து உருவாக்கிக்கொண்டேனும் போராட வேண்டும். சொகுசான வாழ்க்கைக்கு சிறு இடையூறும் இல்லாமல் போராட்டம் என்பது சாத்தியம் இல்லை. அதேநேரம் அந்த இடையூறு நமது இருப்பை சிதைத்துவிடாத ஒன்றாக இருக்க வேண்டுமானால் அந்த எல்லை எது என்பதை சொந்த அனுபவத்தில் சுய பரிசோதனையின் மூலம்தான் கண்டறிய முடியும், தர்க்கங்களிலும், பேச்சிலும் அல்ல!

ஒரே ஒரு முறை அப்படியான ஒரு போராட்டத்தில் பங்கெடுக்க வீதியில் இறங்குங்கள். முதல் தடவை தயக்கமாக இருக்கும். ஆனால் அந்த போராட்டம் முடிந்ததும் உங்கள் மனதுக்குள் கம்பீரமும், பெருமித உணர்வும் பொங்கும். அதுதான் மக்கள் போராட்டங்களின் உண்மையான வெற்றி. நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்!

கருத்துகள்

rajasekaran இவ்வாறு கூறியுள்ளார்…
nalla pathivu.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
very very good writing
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இதையெல்லாம் இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றீர்களே...நீங்க இன்னும் ராவணன் பார்க்கவில்லையா? கோடை காலத்திலே குச்சி அயிசு உருகிப்போகிறதேயென்று எத்தனை பேர் மலைசாதி மக்கள்போராட்டத்துக்காகக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.... நீங்கள் என்னவென்றால், போராடினால் என்ன தப்பு என்று உருப்படியில்லாத லெக்சர் கொடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள் :-(
k selvaprabhu இவ்வாறு கூறியுள்ளார்…
மக்களின் போராட்டங்களை சிதைப்பதில் நாளிதழ்கள் முதன்மையேற்று செய்திகளை திரித்து வழங்குவதில் வகிபாகம் வகிக்கின்றன சிறு சிறு {சாதி} குழுக்காளாக பிரிந்துகிடக்கும் மக்களை ஒன்றுசேர விடுவதில்லை. இயற்கையாகவே பல சாதிகள் ஒன்றுசேர்வதில்லை. யாருக்கோ பாதிப்பு ஏற்படுகிறது நமக்கென்ன என்ற எண்ணமும் , அவர் யாரோ நாம் யாரோ என்ற எண்ணமும் , அவனுக்கு ஏற்பட்ட துண்பம் நமக்கும் ஏற்படும் என்ற சிந்தனையின்மையும் தம் மக்களையே தீவரவாதிகள் என்ற சொல்லாடலில் அடைத்து ஒருவர்பால் மற்றோவர் ஒற்றுமைகொள்ளாமல் தடுப்பதில் ஆதிக்க சிந்தனை வெற்றி பெறுகிறதென்பது மக்களுக்கு தெரிவதேயில்லை , இனியும் அப்படியேதான் காலம் கழியும்.
balutanjore இவ்வாறு கூறியுள்ளார்…
dear
100% true

may this message reach everyone
Uma இவ்வாறு கூறியுள்ளார்…
சமீபத்தில் படித்த கட்டுரையில் அருந்ததி ராய் சொன்னதாக இருந்தது "There is no sympathetic audience for these tribals to enact a political theatre called satyagraha" (disclaimer: not verbatim)
தோமா இவ்வாறு கூறியுள்ளார்…
////எந்த போலீஸாவது பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதுண்டா? தெருவோர தள்ளுவண்டி வியாபாரியிடம் எந்த போலீஸ் காசு கொடுத்து பழம், காய்கறி வாங்குகிறார்? லாக்&அப் கொலைகள், லஞ்சம், ரோந்து என்ற பெயரில் வழிப்பறி, பாலியல் வன்முறை என்று தமிழக போலீஸ் பொறுக்கித்தனத்தின் கூடாரமாக இருக்கிறது. சிவகாசி ஜெயலட்சுமி முதல் திண்டிவனம் ரீட்டாமேரி வரைக்கும் நாடறிந்த உதாரணங்களே ஆயிரம் சொல்ல முடியும். தண்டிக்கப்பட வேண்டிய இந்த கிரிமினல் குற்றவாளிகள்தான் சட்டத்தின் காவலர்களாக இருக்கின்றனர். இவர்களை வைத்துதான் இந்த அரசு மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் அடக்கி ஒடுக்குகிறது.//// உண்மை..உண்மை... ஆனால் போராட்டங்கள் பொது மக்களை அச்சுறுதாவண்ணம் இருக்க வேண்டும் என்பது ஆனது கருத்து.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன போராட்டம் பண்ணினாலும் அரசாங்கம் போலீசை தான் அனுப்பி வைக்கும். அந்த போலீசுக்கு போராட்டமாக தெரிவதை விட public nuisence ஆ தான் தெரியும் . பள்ளிகளில் ஆரம்பத்தில் இருந்து நமக்கு சொல்லி தரும் முதல் பாடம் "சத்தம் போடாதே", அப்படி ஆரம்பித்து வளர்ந்தும் நம் மக்கள் ஊமையாகவே ஆகிவிடுகிறார்கள் . அதிகாரத்தை எதிர்க்க அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் அடிபணிவது . இவர்களை போய் போராடு,அது, இதுன்னு காமடிய இல்லை.இன்று இருக்கும் மக்கள் கூட்டம் ஆட்டுமந்தைக் கூட்டம். [சொந்த அறிவு இல்லை மற்றவன் செய்வதை தானும் செய்வது , தான் மட்டும் தப்பித்தல் போதும்.] என்ன சரியா சொல்லுங்கள் நடைவண்டி ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்