ஊனா கட்டுரைகளும், உழைப்பால் உயர்ந்த உத்தமர்களும்!

வெற்றிகளைத் தேடி ஓடுகிறது உலகம். வெற்றி பெறுவது மட்டுமே இந்தப் பூமியில் உயிர் தரித்திருப்பதற்கான தகுதி என்றாக்கப்பட்டுவிட்டது. வெற்றியாளர்கள் சலிக்கச் சலிக்கக் கொண்டாடப்படுகின்றனர். முன் உதாரணங்கள், முதல் பரிசுகள், கோப்பைகள், பொன் மொழிகள் என ஊடகங்களில் தினம், தினம் வெற்றிச் செய்திகள் ஊற்றைப் போல பெருகி வழிகின்றன. வெற்றிபெற்றவன் மட்டும்தான் வாழத் தகுதியானவனா? தோல்வி வாழ்வின் பகுதி இல்லையா? ‘வலியது வெல்லும்’ என்றால் யார் வலியவர், அவருக்கு அந்த வலிமை எங்கிருந்து வந்தது, மற்றவருக்கு அந்த வலிமை வராமல் போனதன் சமூகக் காரணிகள் என்ன?



அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்குமான திறமையின் விகிதம் மாறக்கூடியதே. இதன் அடிப்படையில் வெற்றியின் விகிதமும் மாறக்கூடிய ஒன்றுதான். ஆனால் சமமின்மையுடன் இயங்கும் இச்சமூகத்தில் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதில் இருந்தே இதை நாம் அணுக வேண்டும். வாய்ப்புகள் சமமாக கிடைக்காத போது எப்படி வெற்றிகள் சமமாக இருக்கும்? அதனால் ஒரு நபரின் வெற்றி அல்லது தோல்வியை அந்த தனிநபரின் திறமை/திறமையின்மையுடன் மட்டும் சுருக்கி புரிந்துகொள்ளாமல் அதன் பின்னால் இருக்கும் சமூகக் காரணிகளைப் பார்க்க வேண்டும். ‘ரிலையன்ஸ்’ அம்பானி தொடங்கி, ‘எஸ்.ஆர்.எம்.’ பச்சைமுத்து, ‘காருண்யா’ பால் தினகரன் எல்லோரும் திறமையின் மூலம் மட்டும்தான் மேலே வந்தார்களா?

ஆனால் இத்தகையவர்களை ‘தன்னம்பிக்கை ஐகான்’ ஆக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அம்பானி, அரபு நாடுகளுக்கு வியாபாரம் செய்யச் சென்றபோது அந்நாட்டு நாணயங்களில் வெள்ளி அதிகமாக இருப்பதைக் கண்டார். உடனே நாணயங்களில் இருந்து வெள்ளியைப் பிரித்து எடுத்து விற்று அதிகம் லாபம் பார்த்தார். இதை ‘அந்த நாட்டின் அசட்டுத்தனத்தை அம்பானி சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டதாக’ எழுதினார் என்.சொக்கன். இப்படி, அயோக்கியத்தனத்தை சாமர்த்தியம் என்று முன்னிருத்தும் இவர்கள் இதையேதான் அடுத்தத் தலைமுறைக்கும் போதிக்கின்றனர். இதற்கு ‘தன்னம்பிக்கை’ என்ற பிராண்ட் மிக தோதாக இருக்கிறது.

‘உன்னையே நீ நம்பு’ என்ற டைப்பிலான ‘ஊனா’ கட்டுரைகளுக்கு எப்போதுமே நம் ஊரில் கிராக்கி அதிகம். எல்லா காலகட்டத்திலும் ‘ஓ இளைஞனே’ என அறைகூவி அழைத்து சொம்புடன் தீர்ப்பு சொல்ல நாட்டாமைகள் தயாராக இருக்கின்றனர். தன்னை நம்புவது அப்படி ஒன்றும் குற்றமான காரியம் இல்லைதான். ஆனால் தன்னம்பிக்கையின் அர்த்தம் ‘பிறரை நம்பாதே’ என்பதாக மாற்றப்பட்டிருப்பதுதான் பிரச்னை. ‘உன்னை மட்டும் கவனி. சுற்றத்தைப் பார்க்காதே, வேறு எதையும் கவனிக்காதே’ என்பது இதன் உண்மை அர்த்தம். தன்னம்பிக்கை சாமியார்களும், யோகா, தியான வகையறாக்களும் போதிப்பது இதைத்தான். ‘இந்த உலகமே பிரச்னைமயமாக இருக்கிறது. அதில் இருந்து தப்பித்து நிம்மதியாக இருக்க வேண்டுமானால் உங்கள் கண்களை இறுக்கி மூடிக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் கூட ஒருமுறை கோயம்புத்தூரில் யோகா, தியான வகுப்பில் கலந்துகொண்டு ‘பிரச்னையில் இருந்து விலகி இருக்கும்’ டெக்னிக் பற்றி கற்றுக்கொண்டார். கண்களை மூடிக்கொண்டால் இருட்டு விலகிவிடுமா என்ன?

மக்களை அரசியல் நீக்கம் செய்து வெறும் கறிக்கோழிகளாக மாற்றி தன்னம்பிக்கை தீவனம் இடும் இந்த வேலையை தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாகவே அமுல்படுத்தியவர் எம்.எஸ். உதயமூர்த்தி. உலகமயமாக்கல் இந்தியாவில் அதிவேகமாக பரவத் தொடங்கிய காலத்தில், அரசியல் பேசாத ‘வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறத் தெரிந்த’ ஒரு தலைமுறை தேவைப்பட்டது. அதைக் கச்சிதமாக நிறைவேற்றித் தந்த தன்னம்பிக்கை தளகர்த்தர்களில் உதயமூர்த்தியும் ஒருவர். ‘எல்லாத்தையும் பொத்திக்கோ.. நீ மட்டும் முன்னேறு’ இதுதான் இவர்கள் கற்றுத்தருவதன் கச்சா. ஆனால் அப்படி ‘தனியாக’வெல்லாம் முன்னேற முடியாது என்பதே உண்மை. ஏனெனில் எல்லா மனிதர்களும் இந்த சமூகத்தின் உறுப்புகள். உண்ணவும், உடுக்கவும், சிந்திக்கவும், செயல்படுத்தவும் பலபேரின் கூட்டு நடவடிக்கையே காரணமாக இருக்கிறது. யாருமற்ற தனித்தீவில் இருக்கிறீர்கள் என்றால் கூட அங்கு நீங்கள் உயிர் வாழ இயற்கை வளங்களின் துணை அவசியம்.

ஆனால் இவற்றை மறந்து ஏன் நாம் தனிப்பட்ட வெற்றிகளை மட்டுமே விரும்புகிறோம்? தன்னம்பிக்கை செய்திகள் ஏன் பெரும்பான்மை மக்களை ஈர்க்கின்றன? தமிழகத்தின் ஆதிக்கம் செய்யும், ஆதிக்கத்துக்கு ஆளாகும் அனைத்து சாதியினருமே தாங்கள் ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரையாக இருந்தோம் என வெற்றி பிளாஷ்பேக் சொல்லவே விரும்புவது ஏன்? ‘எங்கள் சாதி உழைக்கும் வர்க்கமாக இருந்தது’ என்ற உண்மையைச் சொல்வதைத் தடுப்பது எது? எளிமையான பதில், நாம் எல்லோரும் தனிச் சொத்துரிமையின் உபரி விளைச்சல்களாக மாறி விட்டிருக்கிறோம். யாரிடம் துட்டு அதிகம் என்பதை வைத்தே சமூக மதிப்பீடுகள் கட்டமைக்கப்படுகின்றன என்பதால் font converter மாதிரி வெற்றி, தோல்வி, தன்னம்பிக்கை, கௌரவம் அனைத்தும் இந்த தனிச்சொத்து உலகிற்கேற்ப convert ஆகின்றன.

அதனால்தான் எவ்வித வசதியும், வாய்ப்பும் அற்ற உள்ளடங்கிய கிராமங்களில் இருந்து முதல் தலைமுறையாய் படித்து முன்னேறி வரும் ஆண்கள் மற்றும் பெண்களில் பல பேர் வெகு எளிதாக இந்த தன்னம்பிக்கை பெட்டிக்குள் சிறைபட்டுப் போகின்றனர். தன்னம்பிக்கை ஒன்றுதான் தன்னை முன்னேற்றியது என்று கண்களை மூடிக்கொண்டு நம்பும் இவர்கள் தன்னை சூழ்ந்திருக்கும் இதர காரணிகளை மறுத்து வெகு எளிதாக மிடிள்கிளாஸ் மனநிலைக்கு மாறிப்போகின்றனர். சிறு வயது வறுமையும், ஒருவேளை உணவுக்கே சிரமப்பட்ட கடந்த காலங்களின் கதைகளும் இதற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. ஆனால் அவர்களை மேல் எழும்ப விடாமல் அழுத்திய சமூகத்தின் அனைத்து வர்க்க, சாதி, பால், ஆதிக்க பேதங்களும் இப்போதும் போஷாக்குடன் உயிர் வாழ்கின்றன என்பதையும், அவை ஆயிரமாயிரம் கிராமத்து பெண்களையும், ஆண்களையும் முன்னேற விடாமல் ஒடுக்குகிறது என்பதையும் மறந்துவிடுகின்றனர். இதை மறுவளமாகப் பார்த்தால் இப்படி சமூகம், சுற்றியுள்ளவன், பக்கத்தில் உள்ளவன் என சுற்றம் பார்க்காமல் தன்னை மட்டுமே நம்பி, தன் நலன் மட்டுமே பேணுவதால்தான் அவர்கள் தொடர்ந்து ‘வெற்றியாளர்களாக’ இருக்கின்றனர். ஆகவே நாம் கட்டுரையை முதலில் இருந்து தொடங்குவோம். வெற்றியாளன் என்பவன் யார், வெற்றி பெறுவதற்கு உரிய வலிமை அவனுக்கு எங்கிருந்து வந்தது?

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
Uma இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பாக எழுதப்பட்ட சிந்திக்கத் தூண்டும் பதிவுக்கு நன்றி.
Chellamuthu Kuppusamy இவ்வாறு கூறியுள்ளார்…
//சிறப்பாக எழுதப்பட்ட சிந்திக்கத் தூண்டும் பதிவுக்கு நன்றி// அதே அதே!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்