19/6/10

போராடினால் என்ன தப்பு?‘நீங்கள் எங்களோடு இல்லை என்றால் எதிரியோடு இருப்பதாக அர்த்தம்’ என்ற புஷ் கோட்பாடுதான் இப்போது மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தின் தத்துவம். எதிர்ப்பியக்கங்கள் மற்றும் போராடும் மக்களுக்கு ஆதரவாகப் பேசும் அறிவுஜீவிகள் இந்த கோட்பாட்டின் பெயரால்தான் மிரட்டப்படுகின்றனர். ஆனால் இது திடீரென்று இப்போது அமுல்படுத்தப்படும் ஒன்றல்ல. மக்கள் பிரச்னைகள் தலைதூக்கும்போது எல்லாம் இந்த அரசு இத்தகைய கோட்பாட்டையே கையில் எடுக்கிறது.

முதலில் இவர்களுக்கு போராட்டம் என்பதே பிடிப்பது இல்லை. ‘போராடுவதே சட்டவிரோதமானது’ என்று நினைக்கின்றனர். போலீஸ், நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் உறுப்புகளாக செயல்படுபவர்களும், அரச மனநிலையை சுவீகரித்துக் கொண்டவர்களாக இருக்கும் மிடிள்கிளாஸ் மக்களும் போராட்டங்களை வெறுக்கின்றனர். போராட்டம் என்பது போக்குவரத்துக்கு இடையூரானதாகவும், போராடுபவர்கள் வேலையற்ற முட்டாள்கள் எனவும் சித்தரிக்கப்படுகிறது. பொதுப்புத்தியும், அரசப் புத்தியும் ‘அமைதியான சூழலை’ வேண்டி நிற்க, போராட்டக்காரர்கள் மட்டுமே இந்த அமைதிப் பூங்காவில் சத்தம் போடுபவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால் போராட்டம் என்பதே எப்படி தவறான ஒன்றாக இருக்க முடியும்?

மறுக்கப்படும் உரிமைகளுக்காக போராடுவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை அம்சம். அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாத சூழலில், மக்கள் தங்களின் எதிர்ப்பை போராட்டங்கள் வழியாகத்தான் காட்ட முடியும். ஆனால் அரசும், அதன் அடியாட்களாக செயல்படும் போலீஸும், ராணுவமும் ‘போராடுவதே தப்பு’ என நினைக்கிறது. போராட்டத்துக்கு எதிராகவும், போராடும் மக்களுக்கு எதிராகவும் போலீஸ் மற்றும் ராணுவத்தின் மனநிலையே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. உடனே, ‘ரயிலை குண்டு வைத்து தகர்ப்பதும் போராட்டம்தானா?’ என்று எவரேனும் கேட்கக் கூடும். எதிர்ப்பியக்கம் ஒன்று எளிய மக்களைப் பாதிக்கும் இத்தகைய வன்முறை வடிவங்களை கைகொள்ளும் என்றால், அரச வன்முறையை எதிர்த்துப் போரிடும் தார்மீக தகுதியை அது இழந்துவிடுகிறது. எனவே மக்களுக்கு எதிரான வன்முறையை எவர் செய்தபோதிலும் மோசமானதே. ஆனால் இந்த அரசு எளிய மக்களின் சாதாரணப் போராட்டங்களை எப்படி எதிர்கொள்கிறது?

வடகிழக்கிலும், காஷ்மீரிலும், தெலுங்கானாவிலும், சட்டீஸ்கரிலும் மட்டுமல்ல... குடிநீர் வேண்டி, சாலைவசதி கேட்டு, பேருந்து வசதிக் கோரி நாள்தோறும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தபடியேதான் இருக்கின்றன. தலித் மக்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டுமானப் பணியாளர்கள், முஸ்லிம் மக்கள் என சமூகத்தின் எல்லா வகையினரும் ஏதோ ஒரு திசையில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இவற்றை இந்த அரசு எப்படி எதிர்கொள்கிறது? குடிதண்ணீர் கேட்டு போராடினால் தண்ணீர் லாரி வருவதற்குப் பதில் போலீஸ் வேன் வருகிறது. சாலைவசதி, ரேசன் அரிசி, தொழிலாளர்களின் கூலி உயர்வு என எந்தப் பிரச்னைக்காகப் போராடினாலும் அரசாங்கம் போலீஸை அனுப்பி வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்காக பள்ளிக் குழந்தைகள் சாலை மறியல் செய்தபோது அதற்கும் போலீஸ் வேன்தான் சென்றது. விவசாயிகள், உதிரித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் போலீஸால் அச்சுறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

போலீஸ் தனது லத்திக்கம்பின் கீழ் சமூகத்தின் அனைத்து வகையினரையும் அடக்கி ஒடுக்க நினைக்கிறது. இதை எதிர்க்க வேண்டிய மக்கள் மனமோ, அடிப்பது போலீஸ் குணம் என்றும் அடிவாங்கி அடங்கிப் போவதுதான் மக்களின் குணம் என்றும் நினைக்கிறது. இதற்கு துலக்கமான உதாரணம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸ் நடத்திய வெறியாட்டம். ‘போலீஸ்னா அடிக்கத்தான் செய்வான்’ என்ற வசனத்தை அப்போது நாம் நிறைய கேட்டோம். ஆனால் ‘போலீஸ் உங்கள் நண்பன்’ என்று எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிம் எழுதி வைத்திருக்கின்றனர். உண்மையில் போலீஸ், மக்களின் நண்பனா? இல்லை, அவர்கள் அதிகார வன்முறையில் ஊறித் திளைத்த இந்த அரசின் அடியாள்படை.

உயர்நீதிமன்ற கலவரத்தில் வக்கீல்களை சமூக விரோதிகளைப்போலவும் பொறுக்கிகள் போலவும் சித்தரித்தது போலீஸ். ஆனால் யோசித்துப் பாருங்கள். எந்த போலீஸாவது பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதுண்டா? தெருவோர தள்ளுவண்டி வியாபாரியிடம் எந்த போலீஸ் காசு கொடுத்து பழம், காய்கறி வாங்குகிறார்? லாக்&அப் கொலைகள், லஞ்சம், ரோந்து என்ற பெயரில் வழிப்பறி, பாலியல் வன்முறை என்று தமிழக போலீஸ் பொறுக்கித்தனத்தின் கூடாரமாக இருக்கிறது. சிவகாசி ஜெயலட்சுமி முதல் திண்டிவனம் ரீட்டாமேரி வரைக்கும் நாடறிந்த உதாரணங்களே ஆயிரம் சொல்ல முடியும். தண்டிக்கப்பட வேண்டிய இந்த கிரிமினல் குற்றவாளிகள்தான் சட்டத்தின் காவலர்களாக இருக்கின்றனர். இவர்களை வைத்துதான் இந்த அரசு மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் அடக்கி ஒடுக்குகிறது.

இந்தியா ஜனநாயக நாடு என்றும், நீதிமன்றம், சட்டமன்றம், நிர்வாகம், பத்திரிகைகள் என்ற தூண்கள் இந்த ஜனநாயகத்தை தாங்கி நிற்பதாகவும், ஒன்றில் தவறு நடந்தால் இன்னொரு இடத்தில் மக்கள் நிவாரணம் பெறலாம் என்பதுதான் குடியாட்சியின் சிறப்பு என்றும் கூறுகிறார்கள். ஆனால் உயர்நீதிமன்ற கலவரத்தில் போலீஸின் தடியாட்சியை சட்டமன்றம், நீதிமன்றம், ஊடகங்கள் அனைத்தும் ஓரணியில் நின்று நியாயப்படுத்தின. சுப்பிரமணியன் சாமியின் முகத்தில் வழிந்த முட்டைக்கறையினால் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக அலறிய யாரும், நூற்றுக்கணக்கான வக்கீல்கள் சிந்திய ரத்தத்தால் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக பேசவில்லை, எழுதவில்லை. வழியும் ரத்தம் யாருடையது என்பதிலிருந்தே அது புனிதமா, அசிங்கமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இதே வகையினர்தான் இப்போது ‘பசுமை வேட்டை நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான ஏற்பாடு’ என்று கண்களை மூடிக்கொண்டு நம்பச் சொல்கின்றனர்.

அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு வரலாற்றில் நீண்ட நெடிய பாத்திரம் உண்டு. இயக்கமாக மட்டும் இல்லை, தனிநபராகவே அநீதிகளை எதிர்த்து நிற்போர் எல்லா காலங்களிலும் இருக்கிறார்கள். உண்மையில் போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஓர் இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. அது அவ்வாறு விரிவடைந்து குடும்ப உறுப்பினர்களுக்குள் சமமின்மை, சாதி பேதம், வர்க்க பேதம் என முரண்பாடுகள் முன்னேற்றமடைந்து மனம் தன்னைத்தானே கேள்வி கேட்கிறது. உச்சத்தில் சொல்லிலும், செயலிலும் அது வெளிப்படுகிறது. சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும்.

உண்மையில் போராட்டம் என்பது மகிழ்ச்சியான அனுபவம். நீங்கள் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யாரோ பத்து பேர் சாலையோரத்தில் நின்று வேலை வெட்டியில்லாமல் கத்திக் கொண்டிருப்பதாக நினைத்து கடந்து செல்லலாம். ஆனால் அவர்கள் அப்படி 'கடந்து செல்பவர்களுக்காகவும்' சேர்த்துதான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தினவாழ்வின் நெருக்கடிகள் அழுத்தும்போது எல்லோராலும் போராட்டங்களில் பங்கெடுக்க வீதிக்கு வர முடியாது என்பது யதார்த்தமான் உண்மைதான். ஆனால் அதையெல்லாம் மீறித்தான் போராட வேண்டியிருக்கிறது. வீட்டில், வீதியில், பேருந்தில், அலுவலகத்தில் என எங்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அல்லது சந்தர்ப்பங்களை வலிந்து உருவாக்கிக்கொண்டேனும் போராட வேண்டும். சொகுசான வாழ்க்கைக்கு சிறு இடையூறும் இல்லாமல் போராட்டம் என்பது சாத்தியம் இல்லை. அதேநேரம் அந்த இடையூறு நமது இருப்பை சிதைத்துவிடாத ஒன்றாக இருக்க வேண்டுமானால் அந்த எல்லை எது என்பதை சொந்த அனுபவத்தில் சுய பரிசோதனையின் மூலம்தான் கண்டறிய முடியும், தர்க்கங்களிலும், பேச்சிலும் அல்ல!

ஒரே ஒரு முறை அப்படியான ஒரு போராட்டத்தில் பங்கெடுக்க வீதியில் இறங்குங்கள். முதல் தடவை தயக்கமாக இருக்கும். ஆனால் அந்த போராட்டம் முடிந்ததும் உங்கள் மனதுக்குள் கம்பீரமும், பெருமித உணர்வும் பொங்கும். அதுதான் மக்கள் போராட்டங்களின் உண்மையான வெற்றி. நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்!

12/6/10

ஊனா கட்டுரைகளும், உழைப்பால் உயர்ந்த உத்தமர்களும்!

வெற்றிகளைத் தேடி ஓடுகிறது உலகம். வெற்றி பெறுவது மட்டுமே இந்தப் பூமியில் உயிர் தரித்திருப்பதற்கான தகுதி என்றாக்கப்பட்டுவிட்டது. வெற்றியாளர்கள் சலிக்கச் சலிக்கக் கொண்டாடப்படுகின்றனர். முன் உதாரணங்கள், முதல் பரிசுகள், கோப்பைகள், பொன் மொழிகள் என ஊடகங்களில் தினம், தினம் வெற்றிச் செய்திகள் ஊற்றைப் போல பெருகி வழிகின்றன. வெற்றிபெற்றவன் மட்டும்தான் வாழத் தகுதியானவனா? தோல்வி வாழ்வின் பகுதி இல்லையா? ‘வலியது வெல்லும்’ என்றால் யார் வலியவர், அவருக்கு அந்த வலிமை எங்கிருந்து வந்தது, மற்றவருக்கு அந்த வலிமை வராமல் போனதன் சமூகக் காரணிகள் என்ன?அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்குமான திறமையின் விகிதம் மாறக்கூடியதே. இதன் அடிப்படையில் வெற்றியின் விகிதமும் மாறக்கூடிய ஒன்றுதான். ஆனால் சமமின்மையுடன் இயங்கும் இச்சமூகத்தில் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதில் இருந்தே இதை நாம் அணுக வேண்டும். வாய்ப்புகள் சமமாக கிடைக்காத போது எப்படி வெற்றிகள் சமமாக இருக்கும்? அதனால் ஒரு நபரின் வெற்றி அல்லது தோல்வியை அந்த தனிநபரின் திறமை/திறமையின்மையுடன் மட்டும் சுருக்கி புரிந்துகொள்ளாமல் அதன் பின்னால் இருக்கும் சமூகக் காரணிகளைப் பார்க்க வேண்டும். ‘ரிலையன்ஸ்’ அம்பானி தொடங்கி, ‘எஸ்.ஆர்.எம்.’ பச்சைமுத்து, ‘காருண்யா’ பால் தினகரன் எல்லோரும் திறமையின் மூலம் மட்டும்தான் மேலே வந்தார்களா?

ஆனால் இத்தகையவர்களை ‘தன்னம்பிக்கை ஐகான்’ ஆக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அம்பானி, அரபு நாடுகளுக்கு வியாபாரம் செய்யச் சென்றபோது அந்நாட்டு நாணயங்களில் வெள்ளி அதிகமாக இருப்பதைக் கண்டார். உடனே நாணயங்களில் இருந்து வெள்ளியைப் பிரித்து எடுத்து விற்று அதிகம் லாபம் பார்த்தார். இதை ‘அந்த நாட்டின் அசட்டுத்தனத்தை அம்பானி சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டதாக’ எழுதினார் என்.சொக்கன். இப்படி, அயோக்கியத்தனத்தை சாமர்த்தியம் என்று முன்னிருத்தும் இவர்கள் இதையேதான் அடுத்தத் தலைமுறைக்கும் போதிக்கின்றனர். இதற்கு ‘தன்னம்பிக்கை’ என்ற பிராண்ட் மிக தோதாக இருக்கிறது.

‘உன்னையே நீ நம்பு’ என்ற டைப்பிலான ‘ஊனா’ கட்டுரைகளுக்கு எப்போதுமே நம் ஊரில் கிராக்கி அதிகம். எல்லா காலகட்டத்திலும் ‘ஓ இளைஞனே’ என அறைகூவி அழைத்து சொம்புடன் தீர்ப்பு சொல்ல நாட்டாமைகள் தயாராக இருக்கின்றனர். தன்னை நம்புவது அப்படி ஒன்றும் குற்றமான காரியம் இல்லைதான். ஆனால் தன்னம்பிக்கையின் அர்த்தம் ‘பிறரை நம்பாதே’ என்பதாக மாற்றப்பட்டிருப்பதுதான் பிரச்னை. ‘உன்னை மட்டும் கவனி. சுற்றத்தைப் பார்க்காதே, வேறு எதையும் கவனிக்காதே’ என்பது இதன் உண்மை அர்த்தம். தன்னம்பிக்கை சாமியார்களும், யோகா, தியான வகையறாக்களும் போதிப்பது இதைத்தான். ‘இந்த உலகமே பிரச்னைமயமாக இருக்கிறது. அதில் இருந்து தப்பித்து நிம்மதியாக இருக்க வேண்டுமானால் உங்கள் கண்களை இறுக்கி மூடிக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் கூட ஒருமுறை கோயம்புத்தூரில் யோகா, தியான வகுப்பில் கலந்துகொண்டு ‘பிரச்னையில் இருந்து விலகி இருக்கும்’ டெக்னிக் பற்றி கற்றுக்கொண்டார். கண்களை மூடிக்கொண்டால் இருட்டு விலகிவிடுமா என்ன?

மக்களை அரசியல் நீக்கம் செய்து வெறும் கறிக்கோழிகளாக மாற்றி தன்னம்பிக்கை தீவனம் இடும் இந்த வேலையை தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாகவே அமுல்படுத்தியவர் எம்.எஸ். உதயமூர்த்தி. உலகமயமாக்கல் இந்தியாவில் அதிவேகமாக பரவத் தொடங்கிய காலத்தில், அரசியல் பேசாத ‘வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறத் தெரிந்த’ ஒரு தலைமுறை தேவைப்பட்டது. அதைக் கச்சிதமாக நிறைவேற்றித் தந்த தன்னம்பிக்கை தளகர்த்தர்களில் உதயமூர்த்தியும் ஒருவர். ‘எல்லாத்தையும் பொத்திக்கோ.. நீ மட்டும் முன்னேறு’ இதுதான் இவர்கள் கற்றுத்தருவதன் கச்சா. ஆனால் அப்படி ‘தனியாக’வெல்லாம் முன்னேற முடியாது என்பதே உண்மை. ஏனெனில் எல்லா மனிதர்களும் இந்த சமூகத்தின் உறுப்புகள். உண்ணவும், உடுக்கவும், சிந்திக்கவும், செயல்படுத்தவும் பலபேரின் கூட்டு நடவடிக்கையே காரணமாக இருக்கிறது. யாருமற்ற தனித்தீவில் இருக்கிறீர்கள் என்றால் கூட அங்கு நீங்கள் உயிர் வாழ இயற்கை வளங்களின் துணை அவசியம்.

ஆனால் இவற்றை மறந்து ஏன் நாம் தனிப்பட்ட வெற்றிகளை மட்டுமே விரும்புகிறோம்? தன்னம்பிக்கை செய்திகள் ஏன் பெரும்பான்மை மக்களை ஈர்க்கின்றன? தமிழகத்தின் ஆதிக்கம் செய்யும், ஆதிக்கத்துக்கு ஆளாகும் அனைத்து சாதியினருமே தாங்கள் ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரையாக இருந்தோம் என வெற்றி பிளாஷ்பேக் சொல்லவே விரும்புவது ஏன்? ‘எங்கள் சாதி உழைக்கும் வர்க்கமாக இருந்தது’ என்ற உண்மையைச் சொல்வதைத் தடுப்பது எது? எளிமையான பதில், நாம் எல்லோரும் தனிச் சொத்துரிமையின் உபரி விளைச்சல்களாக மாறி விட்டிருக்கிறோம். யாரிடம் துட்டு அதிகம் என்பதை வைத்தே சமூக மதிப்பீடுகள் கட்டமைக்கப்படுகின்றன என்பதால் font converter மாதிரி வெற்றி, தோல்வி, தன்னம்பிக்கை, கௌரவம் அனைத்தும் இந்த தனிச்சொத்து உலகிற்கேற்ப convert ஆகின்றன.

அதனால்தான் எவ்வித வசதியும், வாய்ப்பும் அற்ற உள்ளடங்கிய கிராமங்களில் இருந்து முதல் தலைமுறையாய் படித்து முன்னேறி வரும் ஆண்கள் மற்றும் பெண்களில் பல பேர் வெகு எளிதாக இந்த தன்னம்பிக்கை பெட்டிக்குள் சிறைபட்டுப் போகின்றனர். தன்னம்பிக்கை ஒன்றுதான் தன்னை முன்னேற்றியது என்று கண்களை மூடிக்கொண்டு நம்பும் இவர்கள் தன்னை சூழ்ந்திருக்கும் இதர காரணிகளை மறுத்து வெகு எளிதாக மிடிள்கிளாஸ் மனநிலைக்கு மாறிப்போகின்றனர். சிறு வயது வறுமையும், ஒருவேளை உணவுக்கே சிரமப்பட்ட கடந்த காலங்களின் கதைகளும் இதற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. ஆனால் அவர்களை மேல் எழும்ப விடாமல் அழுத்திய சமூகத்தின் அனைத்து வர்க்க, சாதி, பால், ஆதிக்க பேதங்களும் இப்போதும் போஷாக்குடன் உயிர் வாழ்கின்றன என்பதையும், அவை ஆயிரமாயிரம் கிராமத்து பெண்களையும், ஆண்களையும் முன்னேற விடாமல் ஒடுக்குகிறது என்பதையும் மறந்துவிடுகின்றனர். இதை மறுவளமாகப் பார்த்தால் இப்படி சமூகம், சுற்றியுள்ளவன், பக்கத்தில் உள்ளவன் என சுற்றம் பார்க்காமல் தன்னை மட்டுமே நம்பி, தன் நலன் மட்டுமே பேணுவதால்தான் அவர்கள் தொடர்ந்து ‘வெற்றியாளர்களாக’ இருக்கின்றனர். ஆகவே நாம் கட்டுரையை முதலில் இருந்து தொடங்குவோம். வெற்றியாளன் என்பவன் யார், வெற்றி பெறுவதற்கு உரிய வலிமை அவனுக்கு எங்கிருந்து வந்தது?

11/6/10

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

இந்தியாவுக்குள் சத்தமில்லாமல் ஓர் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 644 கிராமங்கள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. சுமார் 70 ஆயிரம் மக்கள் துப்பாக்கி முனையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடி ஆதிவாசிகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டு காடுகளுக்குள் பதுங்கி வாழ்கின்றனர். அவர்களைத் தேடி 2 லட்சத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் அலைந்து திரிகின்றனர். காடுகளை அழித்து விமானத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கேட்டுக் கேள்வியில்லாத கொலைகள், கற்பழிப்புகள், அத்துமீறல்கள், துப்பாக்கிச் சூடுகள்... அனைத்துக்கும் இந்திய அரசு வைத்திருக்கும் பெயர் ‘ஆபரேஷன் பசுமை வேட்டை’. சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மத்திய இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அறிவிக்கப்படாத உள்நாட்டு யுத்தத்தின் கொடூர முகம் இதுதான்.என்னதான் நடக்கிறது மத்திய இந்தியாவில்? ஏன் அப்பகுதி பதற்றமாகவே இருக்கிறது? ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் தண்டகாரன்யா காட்டுப் பகுதிதான் பிரச்னையின் மையம். அடர் காடுகளும், மலைகளும் சூழ்ந்துள்ள இந்தப் பிராந்தியத்தில் பாக்சைட், நிலக்கரி, தங்கம், வைரம், கிரானைட், இரும்புத் தாது என அற்புதமான தாதுப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த தாதுக்களை வெட்டி எடுப்பதற்காக பெரு நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. அந்த நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த மலைப் பகுதியையும் கூறுபோட்டுக் குத்தகைக்கு விட அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. ‘வேதாந்தா’ என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு, 40 கி.மீ. நீளமுள்ள ஒரு மலையை குத்தகைக்கு விட்டிருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய். ஆனால் இதற்காக இந்திய அரசு பெற்றுக் கொள்ளவிருக்கும் ராயல்டி தொகை வெறும் 7 சதவிகிதம்.

உலகச் சந்தையில் 10 ஆயிரம் ரூபாய் விலை போகும் ஒரு டன் இரும்புத் தாதுவை ஜிண்டால், எஸ்ஸார் போன்ற நிறுவனங்களுக்கு வெறும் 27 ரூபாய்க்குத் தருகிறது அரசு. இப்படி தண்டகாரன்யா வனப் பகுதியின் தாது வளங்களை வெட்டி எடுப்பதற்காக சுமார் 200 ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. மிகச்சிறிய மாநிலமான ஜார்கண்ட்டில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இது எதுவுமே அந்த மண்ணின் பூர்வீக குடிகளான பழங்குடி மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது வளங்கள் கொள்ளையிடப் படுகின்றன.இவை அனைத்தையும் எதிர்த்துக் கேட்காமல் ‘சரிங்க எஜமான்’ என அடிபணிந்துப் போயிருந்தால் எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால் அந்த பழங்குடி மக்கள் வீரத்தோடு எதிர்த்துப் போரிடத் தொடங்கவே பிரச்னை பெரிதாகியது. மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகளும் ஆயுதங்களைப் பிரயோகித்தனர். உடனே அரசு பழங்குடியினர், மாவோயிஸ்ட்டுகள் இரு தரப்பையும் ஒரே தராசில் நிறுத்தியது. இருவரையும் ‘உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எதிரான சக்திகள்’ என்று வரையறுத்தது. அதன் பொருட்டே இப்போது தண்டகாரன்யாவின் காடுகளுக்குள் உள்நாட்டு யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

ஆப்கன் போரின்போது கூட 50 ஆயிரம் படையினரைதான் ஆப்கானிஸ்தானில் இறக்கியது அமெரிக்கா. ஆனால் இந்திய அரசு இப்போது மத்திய இந்திய மாநிலங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான ராணுவத்தினரை இறக்கிவிட்டிருக்கிறது. சொந்த மக்களின் மீது நடத்தப்படும் இந்த உள்நாட்டு யுத்தத்துக்கு இந்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை 7,300 கோடி ரூபாய்.

‘உள்நாட்டுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் இந்தப் போர் நடத்தப்பட்டாலும் உண்மையாக இந்த யுத்தம் யாருக்காக நடத்தப்படுகிறது என்பதை சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங், அவரது வாயாலேயே நாடாளுமன்றத்தில் சொன்னார். ‘நாட்டின் கனிம வளம் மிகுந்திருக்கும் பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்குவது என்பது முதலீட்டுச் சூழலை பாதிக்கும்’ என்றார் பிரதமர். ஆக, மக்களின் எதிர்ப்பற்ற ஒரு முதலீட்டுச் சூழலை உருவாக்கித் தருவதறாக ராணுவத்தைக் கொண்டு அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பே பழங்குடி மக்களின் போராட்டங்களை நசுக்க ‘சல்வா ஜூடும்’ என்ற பெயரிலான கூலிப்படையை உருவாக்கியது சட்டீஸ்கர் அரசு. அதிகாரப்பூர்வமற்ற முறையில் அரசிடம் இருந்து சம்பளம் வாங்கும் இவர்களும் பழங்குடி மக்கள்தான். ஆனால் அந்த மக்களுக்குள் இருக்கும் சாதி போன்ற இயல்பான பிரிவினைகளை அதிகப்படுத்தி அவர்களின் ஒரு பகுதியினரைப் பிரித்து 2004-ல் இந்த சல்வா ஜூடும் உருவாக்கப்பட்டது. மலையின் நுணுக்கங்களும், மக்களின் பழக்கங்களும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் இவர்களை வைத்தே பழங்குடி மக்களை காடுகளை விட்டு விரட்டுகிறது ராணுவம். சல்வா ஜூடும் என்ற இந்த அரசக் கூலிப்படை நடத்தியத் தாக்குதலால் கடந்த 4 ஆண்டுகளில் 3 லட்சம் மக்கள் பூர்வீக கிராமங்களில் இருந்து காடுகளுக்குள் துரத்தப்பட்டிருக்கின்றனர்.
வீடுகளும், வயல்களும் எரிக்கப்படுகின்றன. 3 வயது பிஞ்சுக் குழந்தையின் ஐந்து விரல்களையும் வெட்டியுள்ளனர். 70 வயது மூதாட்டி, மார்பகங்கள் அறுக்கப்பட்டு தெருவோரம் பிணமாகக் கிடக்கிறார்.
‘‘நாங்கள் காடுகளுக்குள் மரங்களுடன், விலங்குகளுடன் வாழும் பழங்குடிகள். எங்களுக்கு ஆயுதமும் தெரியாது. அரசாங்கமும் தெரியாது. எங்களுக்குத் தெரிந்த அரசாங்கம் என்பது போலீஸ், ராணுவம், காண்ட்ராக்டர், ரியல் எஸ்டேட், கம்பெனிகள் இவை மட்டும்தான். எந்தவித அரசுத் திட்டங்களும் எங்களை சீண்டியதே இல்லை. ஆனால் இப்போது நாங்கள் தெய்வமாக வழிபடும் மலையை கற்பழித்து முதலாளிகளுக்கு விற்கிறார்கள். அதை எதிர்த்தால் எங்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. நாங்கள் அமைதியின் பிள்ளைகள்தான். ஆனால் உங்கள் குடும்பம், உங்கள் மனைவி, உங்கள் பிள்ளைகள், உங்கள் நிலம், உங்கள் காடு, உங்கள் நீர் அனைத்தும் உங்களிடம் இருந்து வன்முறையாகப் பிடுங்கப்படும்போது என்ன செய்வீர்கள்?’’ கோபமாகக் கேட்கிறார்கள் தண்டகாரன்யா மலைக்குள் பதுங்கி வாழும் பழங்குடி மக்கள்.

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழ் மக்களைப் போல சட்டீஸ்கரில் பழங்குடி மக்கள் பூர்வீக வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு முகாம்களில் குடி வைக்கப்பட்டுள்ளனர். தந்தேவாடா மாவட்டத்தில் மட்டும் மூன்று பெரிய முகாம்கள் இயங்குகின்றன. இவற்றை சல்வா ஜூடும் கண்காணிக்கிறது. சட்டீஸ்கர் மாநில டி.ஜி.பி. விஸ்வரஞ்சன், ‘இலங்கை ராணுவத்தின் இறுதி வெற்றிதான் எங்கள் வழிகாட்டி’ என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். எதிர்ப்பவர்கள் அத்தனை பேரையும் ஆயுதங்களின் முனையில் அடியோடு நசுக்குவது என்ற இலங்கை போர் வெற்றியின் ஃபார்முலாவை இங்கேயும் அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையும், நாட்டின் இயற்கை வளமும் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னைப்பற்றி பிரதான அரசியல் கட்சிகள் எவையும் வாய் திறக்கவில்லை. இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மக்களின் மனங்களில் கடந்த பல ஆண்டுகளாக அச்ச உளவியல் விதைக்கப்பட்டிருகிறது. அங்கு எப்போதும் பதற்றம் குடி கொண்டிருக்கிறது. அவற்றில் இருந்து எந்தவித பாடத்தையும் கற்றுக் கொள்ளாத இந்தியா இப்போது மறுபடியும் மத்திய இந்தியாவை பதற்றப் பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு பிராந்தியத்தில் ஒரு முறை துப்பாக்கி ஏந்திய மனிதர்கள் புகுத்தப்பட்டால் அதை எளிதில் நீக்கிக்கொள்ள முடியாது. நமது முந்தைய வரலாறுகள் இதையே நமக்குக் காட்டுகின்றன. ஆனாலும் அரசு அமைதியான ‘முதலீட்டுச் சூழலை’ உருவாக்கித் தருவதற்காக தம் சொந்த மக்களுக்கு எதிராகவே இந்த யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

‘அரசு, மாவோயிஸ்ட் தாக்கம் உள்ளப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தவே விரும்புகிறது. ஆனால் ஒரு சாலை அமைத்தால் உடனே அவற்றை குண்டு வைத்துத் தகர்த்துவிடுகிறார்கள். இப்படி செய்தால் எப்படி வளர்ச்சித் திட்டங்களை அமுல் படுத்த முடியும்?’ என்று கேகிறார் ப.சிதம்பரம். ஆனால், ‘அந்த சாலை மக்களுக்காக அல்லாமல் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டால் அதை அழிப்பதில் என்ன தவறு?’ என்று திருப்பிக் கேட்கிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.

அதேநேரம் மாவோயிஸ்ட்டுகளின் மனித உரிமை மீறல்களை நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களே கடுமையாக எதிர்க்கிறார்கள். லால்கர் பகுதியில் சுமார் 1000 சதுர கி.மீ. நிலப் பகுதியைக் கைப்பற்றிய மாவோயிஸ்ட்டுகள் அதை ‘விடுவிக்கப்பட்டப் பகுதி’ என்று அறிவித்த பிறகு மக்கள் மீதான ராணுவத்தின் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்தது.

‘‘இது தவறு. அந்த மக்களின் குரலாக மாவோயிஸ்ட்டுகள் இருக்க விரும்பினால் முதலில் அவர்களின் அரசியல் அஜண்டா என்ன என்பதை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும். அப்படி செய்யாமல் மக்களின் பிரதிநிதிகளாக தங்களை அறிவித்துக்கொள்வதால் அரசப் படைகளின் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் சந்திக்கப்போவது சாதாரண மக்கள்தான். மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் வளம் மிக்க கற்பனையான எதிர்காலத்துக்காக சட்டீஸ்கரின் சாதாரண பழங்குடி மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க முடியாது’’ என்று அப்போது கருத்துச் சொன்னார் மறைந்த மனித உரிமைப் போராளி பாலகோபால்.சரி, தவறுகளைத் தாண்டி தங்களுடன் களத்தில் நின்பவர்கள் என்ற அடிப்படையில் மக்களுக்கு மாவோயிஸ்ட்டுகளின் மீதான பிடிப்பு அதிகரித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பசுமை வேட்டை தொடங்கும்போது மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை வெறும் 20 ஆயிரம் பேர்தான். ஆனால் இப்போது காடுகளுக்குள் மறைந்து வாழும் மக்கள் தாங்களாகவே முன்வந்து ‘மக்கள் போர்ப்படை’ என்றும், ‘மாவோயிஸ்ட்டுகள்’ என்றும் தங்களை அறிவித்துக்கொள்வதால் போராளிகளின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

காஷ்மீரிலும், வடகிழக்கிலும் நடப்பவை தனிநாடு கேட்கும் போராட்டங்கள். ஆனால் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் தங்களின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்த்து நிற்கிறார்கள். வெள்ளையர்களை எதிர்த்து நடத்தப்பட்டதற்கு பெயர் சுதந்திரப்போர் என்றால் இந்த கொள்ளையர்களை எதிர்த்து நடைபெறும் போருக்கும் சுதந்திரப் போர் என்றே பெயரிடலாம்.