ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !

உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஷூட்டிங் முடிந்து சில தினங்களே ஆன ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையதளங்களில் ரிலீஸ் ஆக, தமிழ் திரைப்பட உலகம் பரபரப்புக்குள் ஆழ்ந்திருக்கிறது. ஓசியில் கிடைத்தாலும் ஜக்குபாயைப் பார்க்க ஆளில்லை என்பது வேறு விசயம். உடனே ‘இது கொலைக்கு சமமான குற்றம்’ என்று தமிழ் திரையுலக நடிகர்கள் பதறி துடித்தார்கள். ‘ஐய்யய்யோ… 15 கோடி’ என அழுதேவிட்டார் ராதிகா. முதல்வர் கருணாநிதியிடம் ஓடிப்போய் மனு கொடுக்க அவர் ஒரு கோயம்புத்தூர் பையனைப் பிடித்து உள்ளேப் போட்டார்.


சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் என்பது மட்டுமல்ல, அவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ‘ராடன் பிலிம்ஸ்’தான் ஜக்குபாயின் தயாரிப்பு நிறுவனம். கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இணைய தளத்தில் ரிலீஸ் செய்துவிட்டனர். ‘நடிகர் சங்கத் தலைவர் படத்துக்கே இந்தக் கதியா?’ என படை திரண்ட கோடம்பாக்க நடிகர்கள் ஆளாளுக்கு கண்டன அறிக்கைகள் விட்டார்கள். உணர்ச்சி இயக்குநர் சேரன், ‘‘இந்த திருட்டு வி.சி.டி. தயாரிக்கும் கும்பலை ஒழித்தால்தான் தமிழ் சினிமா உருப்படும். எங்காவது திருட்டு வி.சி.டி. தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக திரையுலகம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு சம்பளம் தரலாம்’’ என அதிகாரப்பூர்வமாக ஒரு கூலிப்படையை உருவாக்கும் யோசனையை முன் வைத்திருக்கிறார். தனது குருநாதர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ஜக்குபாய்க்கு நேர்ந்திருக்கும் கதி கண்டு உணர்ச்சிவசப்பட்டு சேரன் இவ்வாறு பேசிவிட்டார் என்று இதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் காலம்தோறும் இப்படித்தான் பேசி வருகிறார். இப்படித்தான் பேசுவார். அதில் ஒன்றும் அதிர்ச்சி இல்லை. ஆனால் சினிமாத் தொழில் நசுக்கப்படுகிறது என்றும் அதைக் காப்பாற்ற ஒரு கூலிப்படையை உருவாக்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசும் சேரன், அதே சினிமாத் துறையில் பல விதங்களில் நசுக்கப்படும் உதிரித் தொழிலாளர்கள் குறித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்? லைட்மேன் தொடங்கி, மேக்&அப் மேன் வரை தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி, சுயமரியாதையையும் பறிக்கும் திமிர்த்தனத்தை என்ன விதத்தில் எதிர்த்திருக்கிறார்? தன் உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் கூட தராத எத்தனையோ இயக்குநர்களின் பட்டியலில் சேரனின் பெயரும் இருக்கிறது.

இந்த ஜக்குபாய் பிரச்னைக்காக திரையுலகினர் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள். சென்னை ஃபோர் பிரேம்ஸ் அரங்கத்தில் நடத்தப்பட்டக் கூட்டத்துக்கு, பொதுவில் இம்மாதிரியான எந்த நிகழ்ச்சிகளுக்கும் வந்திடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் வந்திருந்தனர். கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் ‘‘ஜக்குபாய் கதையில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜக்குபாய் என்ற டைட்டிலிலேயே ஏதோ மிஸ்டேக் இருக்கிறது. நானும் கே.எஸ்.ரவிக்குமாரும் பல மாதங்கள் டிஸ்கஸ் பண்ணியும் கதை நகரவே இல்லை. அதன்பிறகுதான் ஜக்குபாய் கதையில் சரத்குமார் நடித்தார். நமக்குதான் செட் ஆகவில்லை, சரத்குமாருக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கும் இப்போது பிரச்னை ஆகிவிட்டது’’ என்று சரத்குமார் தலையில் கூடுதலாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘சூப்பர் ஸ்டாரை அழைத்துப் பேச வைத்தால் விநியோகஸ்தர்களை சமாளித்து படத்தை விற்றுவிடலாம்’ என்று சுப்ரீம் ஸ்டார் கணக்குப் போட்டிருக்க, ரஜினியோ ‘டைட்டிலே வௌங்கலை. எவனோ பில்லி சூனியம் வெச்சுட்டான்’ என்று எக்ஸ்ட்ரா பஞ்சாயத்தை கூட்டினார். அதைத் தொடர்ந்த ரஜினிகாந்த்தின் பேச்சுதான் முக்கியமானது.

அவர் சொல்கிறார், ‘‘ஜக்குபாய்க்காக ‘Wasabi’ என்ற பிரெஞ்சு படத்தின் சி.டி.யை கே.எஸ்.ரவிக்குமார் கொண்டுவந்து கொடுத்தார். படம் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. பத்து அலெக்ஸ் பாண்டியனுக்கு சமமான ஒரு ஓய்வு பெற்ற பெற்ற போலீஸ் அதிகாரியையும், அவருடைய மகளையும் பற்றிய கதை அது. அந்த போலீஸ் அதிகாரியின் மகள் வெளிநாட்டில் கோடீஸ்வரியாக இருக்கிறாள். அவளைப் பார்க்க அப்பா போகிறார். அந்த பெண்ணை சாகடிக்க ஒரு கும்பல் சதி செய்கிறது. அவர்களை அடித்து வீழ்த்தி மகளைஅந்த போலீஸ் அதிகாரி எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இது பிரமாதமான ஸ்க்ரிப்ட். நிச்சயம் வெற்றிபெறும். அதனால் இந்த வி.சி.டி. வெளியானதைப் பற்றி எல்லாம் சரத்குமார் கவலைப்படத் தேவையில்லை’’ என்று ரஜினிகாந்த் உள்ளது உள்ளபடியே போட்டுக்கொடுத்தார். ஒரு பிரெஞ்சு படத்தை அப்படியே திருடி தமிழில் எடுப்பது பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாக ரஜினிகாந்த்தின் பேச்சைக் கருதலாம்.

அதே விழாவில் பேசிய கமல் என்னும் காமன்மேனின் பேச்சு அபாயத்தின் உச்சமாகவும், விஷத் தன்மையுடனும் இருந்தது. ‘‘குறைந்த விலையில் வி.சி.டி.யிலும், டி.வி.டி.யிலும் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமாக நினைக்கிறார்கள். அதை திருத்த முடியாது. ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’’ என்பது காமன்மேன் கமலின் பேச்சு.

மிக அபாயகரமான இந்தப் பேச்சின் பொருள் என்ன? திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். ஏன், திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில் இருந்து கரசேவையும், மாலேகான் குண்டுவெடிப்பும் நடக்காதா? பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? அப்படியே விற்றாலும் அந்த பணம் தேச விரோத செயல்களுக்குதான் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு கமல் எப்படி வருகிறார்? அவை அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. அப்புறம், திருட்டு வி.சி.டி. விற்கும் பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், சினிமாக்காரர்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் நாட்டை வளமாக்கப் பயன்படுகிறதா என்ன?

கும்பகோணம் தீ விபத்தின்போது பந்தாவாக ‘நான் 5 லட்சம் தாறேன், நான் 10 லட்சம் தாறேன்’ என்று அறிக்கைவிட்ட கொழுப்பெடுத்த கோடீஸ்வர நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் இதுவரைக்கும் ஒரு பைசாவும் தரவில்லை. இதைப்பற்றி பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தும் அந்த நேர்மையின்மைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள். இந்த யோக்கியவான்கள்தான் இப்போது திருட்டு வி.சி.டி. பற்றி அலறுகின்றனர். ‘சரத்குமாருக்கே இந்த கதியா, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கே இந்த நிலைமையா?’ என்று இழவு வீடு போல் நடிக்கின்றனர். சில நடிகர்கள் ஒரு படி மேலே போய் ‘தமிழனுக்கு சொரணை இல்லை. திருட்டு வி.சி.டி. பார்த்துக் கெட்டுப்போறான்’ என்று சாபம் விடுகிறார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஏற்படும் பிரச்னைக்கும் தமிழனின் சொரணைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.

ஒரு பொது மேடையில் ‘வாசபி’ என்ற பிரெஞ்சு படத்தை திருடிதான் ஜக்குபாய் எடுக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத நடிகர்கள், வி.சி.டி. திருட்டுப் பற்றி மட்டும் வாய் கிழியப் பேசுகின்றனர். பொதுவாக திருடர்கள், தாங்கள் திருடியப் பொருளை இழந்துவிட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வதற்கு தயங்குவது பொது எதார்த்தம். திருடனுக்குத் தேள் கொட்டியைதைப்போல என நாம் பழமொழியே வைத்திருக்கிறோம். ஆனால் வாசபியைத் திருடி ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு, அதை ஒருத்தன் திருடிவிட்டான் என்றவுடன் எகிறிக் குதிக்கிறார்கள். மோசடியும், ஆபாசமும் நிறைந்த இந்த வர்த்தக விபச்சாரத்தைப்பற்றி எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை. உடலின் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மட்டும்தான் என்றில்லை. ஒரு சில தனிப்பட்ட காழ்ப்புகள் உச்சத்திற்கு வரும் சந்தர்ப்பங்கள் நீங்களாக எப்போதுமே தமிழ் சினிமா வென்றுகள், தங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டதோ, மன்னிப்புக்கேட்டதோ, அதைப்பற்றி விவாதம் செய்ததோ கிடையாது.

அண்மையில் தென்னாப்பிரிக்க படமான Tsotsi யை அப்படியே உருவி ‘யோகி’யாக்கி அமீர் எடுத்தப் படம் பற்றி கோடம்பாக்கத்தின் நேர்மையாளர்கள் என்ன கருத்தை சொன்னார்கள்? ஒரு விபத்து, அதில் சந்திக்கும் மூவரின் கதைகள் தனித்தனி கோணங்களில் விவரிக்கப்படும் அம்ரோஸ் ஃபெரோஸ் என்ற படத்தை சுட்டு மணிரத்னம் ஆயுத எழுத்து எடுத்தார். ‘sliding doors’ -ன் தாக்கத்தில் ஜீவா ‘12பி’ எடுத்தார். shoot em up-ல் ஐந்து விரல்களுக்கு இடையே ஐந்து தோட்டாக்களை வைத்து கையைத் தீயில் காட்ட, துப்பாக்கி இல்லாமலேயே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து எதிரில் நிற்பவனைத் தாக்கும் காட்சியை அச்சு பிசகாமல் அப்படியே சுட்டு நியூட்டனின் மூன்றாம் விதியில் வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. இப்படியான கலைத் திருட்டுக்காக எக்காலத்திலும் குற்றவுணர்வு அடைபவர்கள் இல்லை இவர்கள்.

ஆனால் இவர்களின் நலன்களுக்காகவே இயங்கும் இந்த அரசு சினிமாக் காரர்களின் பிரச்னை என்றால் மட்டும் ஓடோடி வந்து தீர்த்து வைக்கிறது. சினிமா கலைஞர்கள் குடியிருக்க வீடு இல்லாமல் அல்லாடுவதால் மாமல்லபுரம் சாலையில் 95 ஏக்கர் நிலத்தை அவர்களுக்காக ஒதுக்கித் தந்திருக்கிறார் கருணாநிதி. அண்மையில் கூட கமல்ஹாசன் கலந்துகொண்ட சினிமா வர்த்தக கருத்தரங்குக்கு தமிழக அரசு சார்பாக 50 லட்ச ரூபாய் கொடுத்தார். பாவம், சினிமாக்காரர்கள் கஞ்சிக்கு இல்லாமல் பஞ்சத்தில் தவிக்கிறார்கள். இவர் போய் உதவியிருக்கிறார். என்ன அநியாயம் இது? சினிமா என்பது ஒரு தொழில். அதன் முன்னேற்றத்துக்காக கேட்டுக் கேள்வியில்லாமல் மக்கள் பணம் செலவிடப்படுவது எத்தனைப் பெரிய அநியாயம்? இன்று, ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், வழக்கறிஞர்கள் என சமூகத்தின் உழைக்கும் சக்தியாக இருக்கும் எத்தனையோ வகையினர் முதல்வர் கருணாநிதியை சந்திக்க காத்திருக்கின்றனர். அதற்கான நியாயமான காரணங்களும் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் கருணாநிதியோ நடிகை சோனா, குஷ்பு போன்றவர்களை சந்திக்கவே முன்னுரிமை தருகிறார். அந்த அடிப்படையிலேயே ஜக்குபாய் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்த குற்றவாளிகளை மின்னல் வேகத்தில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் கருணாநிதி. இவ்வளவு வேகமான நடவடிக்கை வேறு எந்த மக்கள் பிரச்னைகளுக்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வருமானச் சான்றிதழ் வாங்கவே வாரக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிற நாட்டில் ராதிகாக்களின், சரத்குமார்களின் பிரச்னைகளுக்கு மட்டும் உடனடி தீர்வை அளிப்பதில் இந்த அரசு கூடுதல் கரிசனம் கொண்டிருக்கிறது.

கருத்துகள்

PRABHU RAJADURAI இவ்வாறு கூறியுள்ளார்…
வினவில் தங்களது பதிவினை படிக்கும் பொழுதே கூற வேண்டும் என்று நினைத்தேன். நான் படித்த பத்திரிக்கையில் ரஜினி, அந்த பிரஞ்சு படத்தின் உரிமையினை வாங்கியது போன்று குறிப்பிட்டதாக படித்தேன்....உண்மையில் இவர்கள் வாங்கியிருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
Rama Lekshman இவ்வாறு கூறியுள்ளார்…
"நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்" என்று கலைஞர் மனதிற்குள் சொல்லி இருப்பார். தமிழின் புரட்சி நடிகர்களும் அதற்க்கு சளைக்காமல் "நமக்கு வாய்த்த அடிமை தலைவர் மிக மிக திறமைசாலி" என்றும் முடிவெடுத்து வரும் மாதம் அவருக்கு பாராட்டு விழா எடுக்க போகிறார்கள். பெரிய காமெடியே அதுதான். இவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா. அவரும் கொஞ்சம் கூட அசிங்கம் பார்க்காமல் மேடையில் உட்கார்ந்து கொண்டு "என் அன்பு கண்மணி, கேளடி கண்மணி, கண்மணி என் பொன்மணி, என் குஞ்சுமணி" ரேஞ்சிக்கு புழுகுவாறு. இப்படியே கூதடிங்கடா. ஷங்கரின் சிவாஜி படம்பிடிப்பில் நடந்த சாவு பற்றி ஒரு பயலும் வாய திறக்கவே இல்லை. அது வெறும் சாம்பிள்தான். இன்னும் வெளியே வராத இருட்டு சம்பவங்கள் எத்தனையோ. தமிழ் திரைகலைஞர்கள் தனது நடிப்பு திறனை அரசியல் மேடையில் மட்டுமே காட்டுகிறார்கள். இந்த லச்சணத்துல ஒரு ரோடுக்கு "கமலஹாசன் சாலை" என்று பெயர் வைக்க சரத்குமார் மனு கொடுதிருக்கிறார். இப்போது புரிகிறதா முடிச்சீ எங்கே என்று? ரஜினி எப்போதுமே தைரியசாலிதான் போங்க. கே.எஸ்.ரவிக்குமாரும் ஒரு திருட்டுபயல் என்பதை வெளிப்படையாக ஒரு சபையில் போட்டு உடைக்க தைரியம் வேண்டும் (ரவாக அடிதிருப்பாரோ). அந்த வஞ்சபுகழ்ச்சி அணியை புரிந்து கொள்ள சுரணை வேண்டும். நாம்தான் கத்திகொண்டே இருக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நான்காம் விதி.
mano இவ்வாறு கூறியுள்ளார்…
Hi,

ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.


Who is asking the people to watch movies.. It is the people who are interested in watching all sort of movies..

Its my simple thought ....
mano இவ்வாறு கூறியுள்ளார்…
Hi,

My simple thought on ur blog..

ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.

I cant accept this pont frend ...

It is the people who is wasting their money in watching movies.. right... no one is forcing anyone to watch all these things... They could spend their money in some other useful thing ... relaxation is not only in cinema is my point....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்