9/1/10

விவசாயக் கூலிகள் குறைந்தது ஏன்?

‘எக்காளக்ஸு மருந்திருக்கு, என்னக் கவலை?’
‘எடுத்துக் குடிச்சிடலாம் மனக் கவலை’

- முன் வரியை ஒருவர் மட்டும் பாட, பின் வரியை எல்லோரும் சேர்ந்திசைக்க வண்டல் மண்ணின் வாசனையுடன் ஒலித்த அந்த நடவுப்பாட்டு இப்போதும் எனக்குள் ஒலிக்கிறது. ‘செவ்வரளித் தோட்டத்துல உன்னை நினைச்சேன்’ பாடலை எப்போதுக் கேட்க நேர்ந்தாலும் மனம் ஒரு மண்புழுவைப்போல சேற்றுக்குள் தன்னை அமிழ்த்திக்கொள்கிறது. சேர் அப்பிக்கிடக்கும் உடம்போடு கைகளில் நாற்று முடிச்சுகளை சுமந்து நடவு வயலில் கால் புதைய நடந்த நாட்கள் ஒரு பசுங்கனவென விரிகிறது.

நாங்கள் விவசாயக் குடிகள். திண்ணைகளில் தானிய மூட்டைகளும், கொல்லைப்புறத்தில் வைக்கோல் போருமான வாழ்வொன்று எங்களிடம் இருந்தது. நடவும், அறுப்புமே எமது ஆயுள். நடவு வயலில் நடமாடும் ஆண்களைச் சுற்றிவளைத்து நட்டுவிட்டு சில்லறை காசு கேட்கும் பெண்களின் உழைப்பு சார்ந்த பொழுதுபோக்கும், திடீர் மழை வந்தால் நாத்து விட்டிருக்கும் பக்கத்து வயலுக்கும் சேர்த்து தண்ணீர் பாய்ச்சும் உழைக்கும் மக்களின் இயல்பான அக்கறையும், கதிர் அடித்ததும் அந்த வீட்டு சின்னப் பிள்ளைகளுக்கு ‘வாங்கித் திண்பதற்காய்’ தரும் ஓரிரு மரக்கால் நெல்லும் வெள்ளாமை வாழ்வின் நினைவுத் தடங்கள். இப்போதும் தேநீர் கடைகளில் வெற்றிலைச் சாற்றைத் துப்பியபடிக்கு மேட்டூர் அணை நீர் மட்டம் பார்க்கிறவர்கள் எம் மக்கள். ஆனால் இன்றைய விவசாய கிராமங்கள் புதியதொரு சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

சேறு அடிப்பதுத் தொடங்கி நாற்றுவிடுதல், நடவு நடுதல், அறுப்பு வரைக்கும் விவசாயத்தின் எல்லாக் கூறு வேலைகளிலும் மனித உழைப்பே பிரதானம். ஆனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மிகக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எந்த வகையான வேலைகளைச் செய்யவும் ஆட்கள் கிடைப்பதில்லை. டிராக்டர் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஊராக கூலித் தொழிலாளர்களைத் தேடிப் போகின்றனர். அப்படியும் கூட போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. நாற்றுவிட்டு 30 நாட்களில் நட வேண்டியப் பயிர் 40 நாட்கள், 50 நாட்கள் ஆன பின்னரும் அப்படியே கிடக்கிறது. களை எடுக்க ஆள் இல்லாமல் நெல் வயலில் பயிருக்கு இணையாக களை மண்டிக்கிடக்கிறது. முன்பு 30, 40 ஆட்கள் இரண்டு நாட்களில் செய்த வேலையை இன்று 10, 15 ஆட்கள் ஒரு வாரமாக செய்ய வேண்டிய நிலைமை. உறவினர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, ‘உன் வேலைக்கு நான், என் வேலைக்கு நீ’ என்று புதியவகையான உறவுக்கூட்டில் உழைக்கிறார்கள்.

விவசாயத்தில் பல வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான். இப்போது யாரும் ‘பணத்தேர்’ ஓட்டுவதில்லை. ஏர் ஓட்டுவது என்பதே கிட்டத்தட்ட அருகிவிட்டது. முழுக்க, முழுக்க இயந்திரங்கள்தான் உழவு வேலைகளைச் செய்கின்றன. அதேபோல கதிர் அடிக்கவும் இயந்திரங்கள் வந்துவிட்டன. வயலில் இருந்து தலைச்சுமையாக நெற்கட்டுகளை களத்துக்கு சுமந்து வந்து அவற்றை அடித்து வீடு சேர்க்கும் காலமும் இப்போதில்லை. ஆனால் எல்லா வேலைகளையும் இயந்திரங்களால் செய்ய முடியாது. நடவு நட இயந்திரம் வந்துவிட்டது என்றபோதிலும் அது நடைமுறை ரீதியாக உகந்ததாக இல்லை. பாரம்பரிய விவசாயத்தில் இருந்து மாறுபட்டிருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளவும், பயன்படுத்தவும் விவசாயிகளிடத்தில் பெரிய மனத் தயக்கம் இருக்கிறது. நாற்று அரிக்கவும், களை எடுக்கவும் எக்காலத்திலும் இயந்திரங்கள் வர முடியாது என்றேப் படுகிறது.

உழவு உழுவது, அறுவடை போன்ற இயந்திரப் பணிகளைக் கூட எல்லா நிலங்களிலும் செய்துவிட முடிவதில்லை. சாலையின் ஓரப்பகுதியில் இருக்கும் நிலங்களுக்கு மட்டுமே இயந்திரங்கள் தோதானவை. சாலை வசதியற்ற உள்பகுதிகளில் வயல் வைத்திருப்பவர்கள் சாலையோர நிலங்களை அனுசரித்து விவசாயம் செய்ய வேண்டும் அல்லது மனித உழைப்பையே நம்பியிருக்க வேண்டும். இதெல்லாம் இந்தத் தொழிலின் எதார்த்த நிலைமைகள். அதேநேரம் நெல் அல்லாத காய்கறி, பூ போன்ற மற்றைய விவசாயத்தைப் பொறுத்தவரை அதில் இயந்திரங்களைக் கொண்டு வர சாத்தியமே இல்லை. எந்த இயந்திரம் பூ பறிக்கும்? எந்த இயந்திரம் வெண்டைக்காயை செடியிலிருந்து பறிக்கும்? பெரும்பகுதி நெல் விவசாயிகளுடன் சேர்த்து முழுக்க, முழுக்க மனிதர்களே செய்ய வேண்டிய இந்த வேலைகளுக்கும் தொழிலாளர்கள் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். பொதுவாக காவிரிப் பகுதியில் ஒரு போகம் நெல் விவசாயம் முடிந்து அடுத்தப் பட்டத்தில் உளுந்து, எள், கடலை, பாசிப்பயிறு போன்ற பயிறு வகைகளை பயிரிடுவதுண்டு. ஓட்டுவது, விதைப்பது, களை எடுப்பது, அறுவடை செய்வது என்ற நான்கே நிலையிலான இந்த வெள்ளாமையில் ஓரளவுக்கு லாபமும் உண்டு. ஆனால் நெல்லுக்கே ஆள் கிடைப்பதில்லை என்பதால் பலபேர் இந்த பயிறுவகை விவசாயத்தை செய்வதே இல்லை. தரிசாகவே விட்டுவிடுகின்றனர்.

ஆனால் இதன் எதிர் நிலையாக கடந்த பத்தாண்டுகளாக விவசாயப் பகுதிகளில் எக்கச்சக்கமான எண்ணிக்கையில் ஆழ்துளைக் கிணறுகள் பெருகியிருக்கின்றன. ஆற்றில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் வருடம் முச்சூடும் இந்த போர்வெல் நிலங்களிலும், அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் விவசாயம் நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் வேலையின் அளவும், அடர்த்தியும் அதிகரித்துச் செல்ல, மறுபக்கம் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறைந்துகொண்டேப் போகிறது. ஆனால் இது ஏதோ திடீரென நடந்துவிட்ட மாற்றம் இல்லை.

விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? 95 விழுக்காடு தலித்கள்தான் கிராமங்களில் இந்த வேலைகளை செய்கின்றனர். காலம் காலமாக நிலமற்றவர்களாக இருக்கும் தலித்துகள் நிலத்தை தங்கள் வசம் வைத்திருக்கும் ஆதிக்கச் சாதியினரை அண்டி பிழைக்க வேண்டிய நிலைமை. இதன் பொருட்டு தலித்கள் சந்திக்கும் சாதி ரீதியிலான வன்கொடுமைகள் ஏராளம். இதை வெறுமனே பொருளாதாரக் காரணியுடன் மட்டும் சுருக்கி புரிந்துகொள்ள இயலாது. சமூக கௌரவம்தான் இதன் மையம். ஒரு தொழிலைத் தொடர்ந்து தன் அடுத்தத் தலைமுறையும் செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கு அந்தத் தொழில் குறித்த பெருமிதங்கள் வேண்டும். ஒரு தலித், தான் விவசாயக் கூலித் தொழிலாளராய் இருப்பதுக் குறித்து பெருமிதம் அடைய என்ன இருக்கிறது? குறைந்தப்பட்சம் தன் அடுத்தத் தலைமுறையையாவது அங்கிருந்து நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதே அவரது அடிமன விருப்பமும், செயலுமாக இருக்கிறது. இவ்விதம் நகரத்துக்கு இடம்பெயரும் ஒரு தலித் விவசாயக் கூலித் தொழிலாளி, முதலில் மனதளவில் சமூக விடுதலை அடைகிறார். பெரிய நிம்மதியும், ஆசுவாசமும் கிடைக்கிறது. பதற்றம் தரும் கிராமத்தின் அன்றாட வாழ்விலிருந்து சுதந்திரம் கிடைக்கிறது. உள்ளூர் கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய முடியாத அவரால் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குள் கம்பீரமாக போய் வர முடிகிறது. எதிரில் வருவது யாராக இருந்தால் என்ன என்று நினைத்து இயல்புடன் நடக்க முடிகிறது. இவற்றால்தான் இன்று கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்பவர்களில் அதிகப்பட்சம் பேர் தலித்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 2% விவசாயக் கூலிகள், கட்டடத் தொழிலாளர்களாகவும், சாயப்பட்டறைத் தொழிலாளர்களாகவும் இடம் பெயர்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

கிராமங்களில் நிலம் வைத்திருக்கும் நிறையபேர் இப்போது கொத்தனார் வேலையின் மீது நிறைய கடுப்பில் இருப்பதை கவனிக்க முடிகிறது. காரணம் விவசாயக் கூலி வேலையை விட்டு நகரங்களுக்குப் போகும் தொழிலாளர்களில் அதிகப்பட்சம் பேர் கொத்தனார் வேலைதான் பார்க்கின்றனர். விவசாயத்தை விட கூடுதல் கூலி, நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் என்பதெல்லாம் போக அவர்கள் கொத்தனார் வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம், இந்த வேலை அவர்களை அடிமைப் படுத்துவதில்லை என்பதுதான். ‘கொத்தனார், கார்பென்டர், பிளம்பர்’ என அவர்கள் பார்க்கும் வேலையின் பெயரால்தான் அழைக்கப்படுவார்கள். ஆனால் கிராமத்தில் நாலு தலைமுறையாக வயலில் வேலை பார்த்தாலும் ஒரு தலித்தால் ‘விவசாயி’யாக, குடியானவனாக ஆக முடியாது. அவர் என்றென்றைக்கும் தலித்தான். சுயமரியாதையுள்ள சமூக வாழ்வை உத்தரவாதப்படுத்தும் இந்தத் தன்மைதான் கொத்தனார் வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக அமைகிறது. ஆகவே கூலியாள் பற்றாக்குறை என்பதை ஒரு விரிந்த கோணத்தில் இருந்து அணுக வேண்டும். வெறுமனே நிலவுடைமை மனநிலையில் இருந்து அணுகுவது சிக்கலுக்கு எவ்வகையிலும் தீர்வை அளிக்காது.


இந்த கூலித் தொழிலாளர் பிரச்னைக்கு இன்னொரு முக்கியக் காரணம், அரசின் 100 நாள் வேலைத் திட்டம். வருடத்தின் நூறு நாட்களுக்கு தொழிலாளர்களுக்கு வேலையை உத்தரவாதப்படுத்துவதுதான் இதன் நோக்கம். ஆனால் நடைமுறையில் காண்ட்ராக்டர்கள் துட்டு அடிக்கவும், தொழிலாளர்களை மொண்ணையாக்கவுமே பயன்படுகிறது. சும்மா கிடக்கும் கம்மாவைத் தூர் வாருவதாகச் சொல்லி மண்வெட்டியுடன் தொழிலாளர்கள் இறக்கிவிடப்படுகின்றனர். அந்த வேலை அப்போதைக்குத் தேவையா, இல்லையா என்பதெல்லாம் கணக்கிலே எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது. கிட்டத்தட்ட வெட்டிவேலைதான். உண்மையாக இந்தத் திட்டத்தில் 80 ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். ஆனால் நடப்பில் 60 ரூபாய் அளவுக்குதான் வழங்கப்படுகிறது. இரு தரப்பின் தவறுகளும், இரு முனையிலும் அனுமதித்து அங்கீகரிக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தால் முடக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக அதிகமும் பெண்களே இந்தத் திட்டத்தில் வேலைக்குப் போகின்றனர். விவசாய வேலையில் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவுக்கான கூலி அவர்களை இங்கு திருப்பிவிட்டிருக்கிறது. ஆனால் இந்த வகையான அரசின் திட்டங்களை வெறுமனே ‘ஊழல்’ என்று வகைபிரிக்க முடியுமா?

அண்மையில் ‘கடற்கரை ஒழுங்குமுறை மற்றும் மீன்பிடி மேலாண்மை சட்டம்’ என்ற பெயரில் மத்திய அரசு ஒரு மசோதா கொண்டு வந்தது. மீனவர்களை கடலோரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதுதான் இதன் நோக்கம். அதுபோலவேதான் உள்நாட்டில் விவசாயிகளை விவசாயத்தில் இருந்து துரத்தியடித்து அந்த நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூறு போட்டுக் கொடுக்கத் துடிக்கின்றனர். ‘சிறப்பு வேளான் மண்டலம்’ அமைக்க வேண்டுமென எம்.எஸ்.சுவாமிநாதன் தொடர்ந்து பேசி வருவதைக் கவனிக்க வேண்டும். அரசும் இதற்கு முயல்கிறது. அது என்ன வேளாண் மண்டலம்? இருக்கும் விவசாயத்தை ஒழித்துவிட்டு யாரை வைத்து மண்டலம் அமைக்கப்போகிறார்கள்? அதான் பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றனவே. எப்படி அமெரிக்காவின் கெண்டகி (கே.எஃப்.சி.) சிக்கனை தமிழக மக்களுக்குத் திண்ணத் தருகிறார்களோ, அதுபோல நாளை தமிழக விவசாய நிலங்களை அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பார்கள். உள்ளூர் பாரம்பரிய விவசாயிகளை அவர்களிடத்தில் கூலிகளாக சேர்த்துவிட்டு ‘வேலைவாய்ப்பு’ என்பார்கள். மிகைப்படுத்தவில்லை. வேளாண் மண்டலங்கள் முழு வீச்சில் நடந்தால் எதிர்காலத்தில் இதுதான் நடக்கும்.

கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் ஆசிய நாடுகளின் திறந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டது இந்தியா. இதன்படி 2010 ஜனவரியில் இருந்து 2016 வரைக்கும் விவசாய விளைப்பொருட்களை ஆசிய நாடுகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்து வியாபாரம் செய்யலாம். இப்படி இறக்குமதி செய்யப்படும் 3,200 பொருட்களுக்கு வரி கிடையாதது மட்டுமல்ல, அந்தப் பொருளின் அளவையும் இந்தியா கட்டுப்படுத்தாது. இது அமுலுக்கு வந்தால் தைவான், மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் இந்திய சந்தைக்குள் வரும். சீன பொருட்களால் இந்திய சிறு வியாபாரிகள் நலிவடைந்ததைப்போல இந்த அந்நிய விவசாயப் பொருட்களால் உள்ளூர் வியாபாரம் கெடும். உள்நாட்டு விவசாயத்தை நலிவடையச் செய்வதும், அந்த இடத்தை வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டு நிரப்புவதுமே இன்றைய அரசின் விவசாயக் கொள்கையாகவும், வேலைத் திட்டமாகவும் இருக்கிறது. எப்படி தனியார் பேருந்துகளை அரதப் பழசாக ஓடவிட்டு, ‘இதுக்கு பிரைவேட் பஸ்ஸே தேவலாம்’ என்று மக்கள் வாயாலேயே சொல்ல வைத்து, தனியார் போக்குவரத்து ஊக்குவிக்கப்படுகிறதோ அதுபோல, விவசாயத்தை தாங்களாகவே கைவிடும்படியான புறநிலைகள் விவசாயிகளுக்கு உருவாக்கப்படுகின்றன. எனவே இந்த அரசு கூலித் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வைத் தேடும் என்று நம்புவதற்கில்லை. அப்படியே தீர்வை தந்தாலும் ‘நிலத்தை ரிலையன்ஸுக்குக் குத்தகைக்கு விடு. காசு கிடைக்கும்’ என்பது மாதிரிதான் இருக்கும்.
அதே போல இந்தக் கூலித் தொழிலாளர் பிரச்னையை நாம் வேறு மாதிரியும் அணுகவேண்டும். நடவு, களை எடுப்பது உள்ளிட்ட விவசாயத்தின் பல பகுதி வேலைகள் அசுரத்தனமான உழைப்பைக் கோருபவை. கால் புதையும் சேற்றில் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக குனிந்துகொண்டே இடுப்பொடிய நடவு நடுவதற்கு மிக உச்சக்கட்ட உழைப்பு தேவை. ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும் விவசாய வேலைகளின் உழைப்பு எத்தன்மையானது என்பதை அனுபவத்தில் அறிந்தவன் என்ற முறையிலுமே இதைச் சொல்கிறேன். ஆனால் இந்த உழைப்பின் முழுபலனையும் அனுபவிப்பவர்கள் முதலாளிகள்தான். தொழிலாளியின் உடலானது முதலாளிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற விவசாயத்தின் பல கூறு வேலைகள் இயந்திரமயமாக்கப்பட வேண்டும். அதற்கான நிதி மூலதனங்கள், துறைகள் உருவாக்கப்பட்டு பரந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் உழைக்கும் மிருகமாக மாற்றப்பட்டிருக்கும் எளிய மக்களை அதிலிருந்து கொஞ்சமேனும் விடுதலை செய்ய முடியும்.8 கருத்துகள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஆழியூரான்,

எனக்கு இந்தக் கட்டுரை மிகப் பிடித்திருக்கிறது.

வேளான் மண்டலம் அமைத்து அதை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது குறித்து : இதை நீங்கள் நில உடைமையாளர்களான இடைநிலைச் சாதி விவசாயிகளின் பார்வையில் பார்க்கிறீர்கள். இதையே தலித்களின் கோணத்தில் பார்த்தால் வேறு மாதிரியான சிந்தனைகள் கிடைக்கக்கூடும். அவர்களுக்கு நிலத்தை யார் வைத்திருந்தால் என்ன?. இன்னும் சொல்லப் போனால் சம்பளம் பெறுபவர்களாகவே அவர்களும் இடைநிலைச் சாதியினரும் இருந்தால் அவர்களது சமூக நிலை உயரவே கூடும் (ஆனாலும் பெரிய மாற்றம் இருக்குமென்று நினைக்கவில்லை). இதன் பொருள் நான் பன்னாட்டு நிறுவனங்களை நான் ஆதரிக்கிறேன் என்பதல்ல.

ஆசிய நாடுகள் வர்த்தக ஒப்பந்தகள் குறித்த notifications 31 டிசம்பர் வந்துவிட்டன. அது குறித்து விரிவாய் எழுத வேண்டும். நேரம் கிடைப்பின், பிறகு செய்கிறேன்.

K.R.அதியமான் சொன்னது…

//கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் ஆசிய நாடுகளின் திறந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டது இந்தியா. இதன்படி 2010 ஜனவரியில் இருந்து 2016 வரைக்கும் விவசாய விளைப்பொருட்களை ஆசிய நாடுகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்து வியாபாரம் செய்யலாம். இப்படி இறக்குமதி செய்யப்படும் 3,200 பொருட்களுக்கு வரி கிடையாதது மட்டுமல்ல, அந்தப் பொருளின் அளவையும் இந்தியா கட்டுப்படுத்தாது. இது அமுலுக்கு வந்தால் தைவான், மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் இந்திய சந்தைக்குள் வரும். சீன பொருட்களால் இந்திய சிறு வியாபாரிகள் நலிவடைந்ததைப்போல இந்த அந்நிய விவசாயப் பொருட்களால் உள்ளூர் வியாபாரம் கெடும். உள்நாட்டு விவசாயத்தை நலிவடையச் செய்வதும், அந்த இடத்தை வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டு நிரப்புவதுமே இன்றைய அரசின் விவசாயக் கொள்கையாகவும், வேலைத் திட்டமாகவும் இருக்கிறது. எப்படி தனியார் பேருந்துகளை அரதப் பழசாக ஓடவிட்டு, ‘இதுக்கு பிரைவேட் பஸ்ஸே தேவலாம்’ என்று மக்கள் வாயாலேயே சொல்ல வைத்து, தனியார் போக்குவரத்து ஊக்குவிக்கப்படுகிறதோ அதுபோல, விவசாயத்தை தாங்களாகவே கைவிடும்படியான புறநிலைகள் விவசாயிகளுக்கு உருவாக்கப்படுகின்றன. எனவே இந்த அரசு கூலித் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வைத் தேடும் என்று நம்புவதற்கில்லை. அப்படியே தீர்வை தந்தாலும் ‘நிலத்தை ரிலையன்ஸுக்குக் குத்தகைக்கு விடு. காசு கிடைக்கும்’ என்பது மாதிரிதான் இருக்கும்.
////

பற்றாக்குறை, பணவீக்கம் போன்ற பல காரணிகளால், கடந்த சில மாதங்களாக எண்ணை, பருப்பு மற்றும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரிந்துள்ளதை அறிந்திருப்பீர்கள். இந்த தாரள இறக்குமதி விலை உயர்வையும், பற்றாக்குறையையும் கட்டுப்படுத்தும். ஏழைகள் அதிகம் பயன் அடைவார்கள்.

விவசாயப் பிரச்சனைகள் பற்றிய எமது பழைய பதிவில் வேறு முக்கிய அம்சங்கள் பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன் :

http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html
விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

பஸ் போக்குவரத்தை decontol மற்றும் privatisation செய்ய வேண்டும். (எனது passion and pet subject அது) ; தொலைதொடர்பு துறையில் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்களை போல பொது போக்குவரத்து துறையில் சாத்தியங்கள் அதிகம்ம். பார்க்கவும் :

http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_5704.html
போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்

K.R.அதியமான் சொன்னது…

பதிவிக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், நண்பர் ஜ்யோவிடம் முன்பு செய்த விவாதம் பற்றி :


ஜ்யோவ்,

சென்னை துறைமுகத்தில் ஹுண்டாய் நிறுவனத்திற்க்கு அளிக்கபட்டும் ‘அநியாய’ சலுகைள் பற்றி ஒரு அனுபவமிக்க ஆட்டொமொபைல் executiveஇடம் விசாரித்தேன். பத்து வருடங்களுக்கு முன், சென்னை போர்ட் இத்தனை வசதிகளை, ward and warehouses and handling servies அடையவில்லை. யுண்டாய் funded and helped in expansion of an important warf, etc. they naturally had an agreement and bargained for concession that you told me about.

உங்கள் தொழிலில் மிக முக்கிய மற்றும் மிக பெரிய வாடிக்கையாளருக்கு சலுகைகள் அளிப்பதில்லையா. அதே போல் தான் எங்கும். All legal and common business practises.

rama சொன்னது…

மிக சிறந்த நடைமுறை ஆலோசனை. மிக நன்றி. பல கூறு வேலைகள் இயந்திரமயமாக்கப்பட அவர்களுக்கு பயிற்சி கொடுப்பவர் யாராக இருக்க வேண்டும், யாரால் அவர்கள் நியமிக்க படவேண்டும். அதிலும் நேர்மை என்ற ஒன்றை தீவிரமாய் கண்காணிக்க படவேண்டும். ஐரோப்பியா விவசாய கலாசாரம் பற்றி தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.

siruthaai சொன்னது…

தோழர் ஆழியுரான் ..எல்லோரும் பட்டணத்தில் வேலை செய்வதையே கவுரவமாக நினைக்கிறார்கள்.. எல்லோரும் நகர்புற சேரிகளில் டேரா போட்டுவிட்டால் ஊரில் உழைக்க ஆளேது?..எங்கள் ஊரில் கூட இப்போது ஆளில்லை ..விவசாய கூலியோ குதிரை கொம்பு..இதை பற்றியும் ஒரு கட்டுரை வரையுங்கள்

கெக்கே பிக்குணி சொன்னது…

உங்கள் பதிவுகளை ரீடரில் தொடர்ந்து படித்து வருகிறேன்.

"விவசாயக் குடி"களின் நடைமுறைத் தொல்லைகளை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

சாதிகள் இப்படியாவது அழிந்து போனால் என்ன என்று ஒரு அல்ப எண்ணம் தோன்றியது உண்மை தான், மறுக்கவில்லை. நிலச்சுவான் தாராக இருந்த என் தூரத்து உறவினரிடமிருந்தும், கிராமத்தில் இருந்த "உயர்"சாதியினரிடமிருந்தும், நிலத்தை வாங்கி இன்று கிராமத்திலேயே பெரும் நில முதலாளியாக இருப்பது உயர்சாதியல்லாதவர் (எனக்கு சத்தியமாக அவர் சாதி தெரியாது). அவர் துண்டை கக்கத்தில் மடித்து போய்க் கொண்டிருந்தவர், இன்றைக்குத் துண்டைத் தோளில் போட்டுப் போகிறார், ஒரு பெண்ணாக நான் இதை எண்ணும் போதெல்லாம், பெருமையாகத் தான் தோன்றுகிறது. எளியானை வலியான் தாழ்த்தினால், வலியானை தெய்வம் தாழ்த்தும் என்பார் என் அம்மா இந்த நினைவும் வந்து போயிற்று. உண்மையில், உழுதுண்டு வாழ்வாரில் எளியார் ஏது, வலியார் ஏது? என் எண்ணங்கள் எளிமையாக இருப்பதற்கு என் பின்புலம் காரணமாயிருக்கலாம்....:)

//நடவு நட இயந்திரம் வந்துவிட்டது என்றபோதிலும் அது நடைமுறை ரீதியாக உகந்ததாக இல்லை. பாரம்பரிய விவசாயத்தில் இருந்து மாறுபட்டிருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளவும், பயன்படுத்தவும் விவசாயிகளிடத்தில் பெரிய மனத் தயக்கம் இருக்கிறது. நாற்று அரிக்கவும், களை எடுக்கவும் எக்காலத்திலும் இயந்திரங்கள் வர முடியாது என்றேப் படுகிறது.// இது தான் வாய்க்கும் கைக்கும் உள்ள தூரம் என்று உங்கள் பதிவைப் படித்ததும் தோன்றியது.

இதற்கான தீர்வு இரு வகைப் பட்டதாக இருக்கலாம்:
(1) நம் நாட்டு விவசாய நடைமுறைக்குத் தேவைப்படும் இயந்திரமயமாக்கல், (மேல்நாட்டு இயந்திரங்கள் சில இங்கே: http://en.wikipedia.org/wiki/List_of_agricultural_machinery) அரசுத்துறைகளிடமிருந்து தேவையான மான்யம் மற்றும் உதவிகளொடு பெரிய அளவில் செய்ய வேண்டும். நம்மூரில் பெரும் நிலக் கூட்டுறவு முறைகள் நடைமுறையில் பெரிய அளவில் வரவில்லை என்றால், விவசாய நிலங்கள் விற்பனைக்கும் போக்கியத்துக்கும் தான் போகும்.
(2) இல்லையென்றால், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களின் நவீனமயமாக்கலைத் தொழுதுண்டு வாழலாம். மேலை நாடுகளில் இது தான் எதார்த்தம். 500ஏக்கரா நிலம் வாங்கிப் போட்டு இங்கே அமெரிக்காவில் விவசாய வாழ்வை விரும்பி ஏற்ற தென்னிந்தியர் பெரும் தனியார் நிறுவனங்களோடு போட்டி போட முடியவில்லை என்று தான் சொல்கிறார்.

அதியமான்/சுந்தர், //2010 ஜனவரியில் இருந்து 2016 வரைக்கும் விவசாய விளைப்பொருட்களை ஆசிய நாடுகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்து வியாபாரம் செய்யலாம்// இன்னும் தரவுகள் இருந்தால் தர முடியுமா? ஏன் 6, 7 வருடங்கள் இறக்குமதி செய்ய வேண்டும்? விலை உயர்வு/பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த 6 / 7 வருடங்கள் என்பது மிக நீண்ட காலவெளி...

என் பின்னூட்டமும் நீண்டு விட்டது. மன்னிக்க.

K.R.அதியமான் சொன்னது…

மேற்க்கு அய்ரோப்பிய நாடுகளில் (பிரட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந், பெல்ஜியம் போன்ற நாடுகள்) 150 வருடங்களுக்கு முன்பு வரை, நிலப்பிரவுத்தவ பாணி விவசாயம் இருந்தது. இந்திய சாதி அமைப்பு மட்டும் தான் இல்லை. ஆனால் இந்தியாவில் நிலவிய கொடுமைகளுக்கு இணையான அமைப்பு அங்கு இறுந்தது. Serfdom, share cropping, மற்றும் சகலவிதமான நிலப்பிரவுத்த அம்சங்கள் இருந்தன. தொழில் புரட்சி, முதலாளித்துவம் மற்றும் ஜனனாயகம் : இவை படிப்படியாக நிலைமையை மாற்றி, இன்று அந்நாடுகளில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்களின் நிலைமை பல மடங்கு நல்ல தரத்திற்க்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சுதந்திரத்திற்க்கு பின், சோசியலிச பாணி பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நிகர விளைவே, இன்று நாம் காண்பது.
ஜமீந்தார் முறையை ஒழித்து, விவசாயத்திற்க்கு வருமான வரியை ஒழித்தது சரி. ஆனால் நில உச்ச வரம்பு சட்டம் மற்றும் உற்பத்தி துறையை செயற்க்கையாக லசென்ஸ் ராஜ்ஜியத்தால் முடக்கியதன் விளைவுகள் இன்றும் தொடர்கின்றன.
Cumulative effects என்பார்கள்.

நில சீர்திருத்தம் என்ற பெயரில், பெரும் பண்ணைகள் இன்று துண்டு
துண்டாக்கப்பட்டு, ஒரு விவ‌சாயின் சராசரி நிலம் 2 ஏக்கருக்கும்
குறைவானது. முன்னேறிய நாடுகள், சைனாவிலும் இதற்க்கு நேர் எதிராக மிக பெரிய பண்னைகள், நவீன தொழில்னுட்பம் பயன் படுத்தபடுகின்றன. economics of
scale and minimum farm size..

இந்தியாவில் நாம் 1991 வரி கடைபிடித்த லைசென்ஸ், பெர்மிட் ராஜ் பொருளாதார கொளகைகிளினால், தொழில்துறை முடக்கபட்டது. இல்லவிட்டால், பல
கோடி கிராம மக்கள், அந்தந்த பகுதிகளிலேயே உருவாகும் உற்பத்தி துறை வேலை வாய்ப்பை பெற்று படிப்படியாக மாற்று வழி பெற்றிருப்பர். சீனாவில் அதுதான் நடந்தது. The bulk of the population migrated gradually from farming to manufacturing and finally to service sector, unlike India.

அர‌சின் பற்றாக்குறைகளால் ப‌ண‌வீக்கம் அதிகரித்து, அனைத்து
விலைவாசிகளும், கூலியும் மிக அதிகமாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சுமை அதிகம்.

அரசு அளிக்கவேண்டிய அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள், ஊழல் மற்றும் பொறுப்பற்ற அர‌சு ஊழிய‌ர்க‌ளினால் ச‌ரியாக‌ விவசாயிக‌ளுக்கும்
ஏழைக‌ளுக்கும் கிடைக்காத்தால், அவ‌ர்க‌ள் த‌னியார் துறைக‌ளை நாட‌
வேண்டிய‌ அவ‌ல‌ம். மேலும் செல‌வுக‌ள். சுமைக‌ள்.

சீனா போன்ற நாடுகளில் கூட சராரசரி பண்ணைகளின் அளவு ஆய்யிரக்கண்கான ஏக்கர்களில், நவின எந்திரங்களை கொண்டு அமைந்துள்ளது.

nerkuppai thumbi சொன்னது…

மிக மிக நல்ல பதிவு. இது போன்ற "கனமான" விஷயங்கள் கூட விவாதிக்கப்படுகின்றன என்று உணர்கிறேன்.
விவசாயக் கூலிகளில் 95 % தலித்துகள் என பதிவர் கூறியிருப்பது சரியா என எனக்கு ஐயமே.
நிலம் துண்டாடப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நம் வாரிசு சட்டங்கள் இதை தொடரச் செய்கின்றன. மிகச்சிறு நிலங்களில் எந்திரங்களை பயன் படுத்துவது எளிது அல்ல என நினைக்கிறேன். டிராக்டர் தவிர பிற எந்திரங்கள் எவ்வாறு பணி செய்கின்றன என நான் அறியவில்லை.
கூட்டுறவு முறையில் வேளாண்மை வரும் என நம்பிய காலம் உண்டு ( நான் பள்ளியில் படித்த 1950, 1960, களில் ). கூட்டுப் பண்ணை விவசாயம் மேடைகளுடனும், படப் பாட்டுகளுடன் முடிந்துவிட்டது.
பொருளாதார ரீதியில், நகரத்துக்கு குடி பெயர்வது காரணமாக, விவசாயக் கூலி உயர்ந்து, குடி பெயர்வதை ஒரு காலக் கட்டத்தில் தடுத்து நிறுத்தலாம்; அப்போது, பொருளாதாரத்திலே ஓரளவு, நல்ல (இப்போது இருப்பதுடன் ஒப்பிட்டு பார்த்தால் ) நிலையில் இருந்தால் அவர்களும் சமூக அந்தஸ்து பெறலாம்.
விவசாயக் கூலிகளும், அலுவலகத்தில் அல்லது நகரத்தில் வேறு பணிகள் செய்பவரைப் போல் சம்பளம் பெற்றால் சமூக அந்தஸ்து தானே வந்து விடும் .
நம் பொருளாதார வல்லுனர்கள் , இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு, விவசாயம் எவ்வாறு இருக்கும், விவசாயப் பணிகள் என்னென்ன இருக்கும், கூலி எவ்வாறு இருக்கும், நகரங்களுக்கு போகாமல் இவர்கள் தங்கி விட்டால், நகரங்களைப் போன்று கிராமங்களும், குடி நீர், சாக்கடை வசதிகள் பெறுமா? என ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
ரிலைன்ஸ் போன்ற நிறுவனங்களின் ஆளுமைக்கு வழி வகுக்கிராகள் என சொல்லிய இருக்கிறீர்கள்; அரசு இந்த அளவு ஆழமாகச் சிந்தித்து செயல் படுகிறதா அல்லது இது நிகழும் என கணிக்கத் தவறுகிறதா?
நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.