12/1/10

ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !

உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஷூட்டிங் முடிந்து சில தினங்களே ஆன ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையதளங்களில் ரிலீஸ் ஆக, தமிழ் திரைப்பட உலகம் பரபரப்புக்குள் ஆழ்ந்திருக்கிறது. ஓசியில் கிடைத்தாலும் ஜக்குபாயைப் பார்க்க ஆளில்லை என்பது வேறு விசயம். உடனே ‘இது கொலைக்கு சமமான குற்றம்’ என்று தமிழ் திரையுலக நடிகர்கள் பதறி துடித்தார்கள். ‘ஐய்யய்யோ… 15 கோடி’ என அழுதேவிட்டார் ராதிகா. முதல்வர் கருணாநிதியிடம் ஓடிப்போய் மனு கொடுக்க அவர் ஒரு கோயம்புத்தூர் பையனைப் பிடித்து உள்ளேப் போட்டார்.


சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் என்பது மட்டுமல்ல, அவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ‘ராடன் பிலிம்ஸ்’தான் ஜக்குபாயின் தயாரிப்பு நிறுவனம். கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இணைய தளத்தில் ரிலீஸ் செய்துவிட்டனர். ‘நடிகர் சங்கத் தலைவர் படத்துக்கே இந்தக் கதியா?’ என படை திரண்ட கோடம்பாக்க நடிகர்கள் ஆளாளுக்கு கண்டன அறிக்கைகள் விட்டார்கள். உணர்ச்சி இயக்குநர் சேரன், ‘‘இந்த திருட்டு வி.சி.டி. தயாரிக்கும் கும்பலை ஒழித்தால்தான் தமிழ் சினிமா உருப்படும். எங்காவது திருட்டு வி.சி.டி. தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக திரையுலகம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு சம்பளம் தரலாம்’’ என அதிகாரப்பூர்வமாக ஒரு கூலிப்படையை உருவாக்கும் யோசனையை முன் வைத்திருக்கிறார். தனது குருநாதர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ஜக்குபாய்க்கு நேர்ந்திருக்கும் கதி கண்டு உணர்ச்சிவசப்பட்டு சேரன் இவ்வாறு பேசிவிட்டார் என்று இதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் காலம்தோறும் இப்படித்தான் பேசி வருகிறார். இப்படித்தான் பேசுவார். அதில் ஒன்றும் அதிர்ச்சி இல்லை. ஆனால் சினிமாத் தொழில் நசுக்கப்படுகிறது என்றும் அதைக் காப்பாற்ற ஒரு கூலிப்படையை உருவாக்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசும் சேரன், அதே சினிமாத் துறையில் பல விதங்களில் நசுக்கப்படும் உதிரித் தொழிலாளர்கள் குறித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்? லைட்மேன் தொடங்கி, மேக்&அப் மேன் வரை தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி, சுயமரியாதையையும் பறிக்கும் திமிர்த்தனத்தை என்ன விதத்தில் எதிர்த்திருக்கிறார்? தன் உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் கூட தராத எத்தனையோ இயக்குநர்களின் பட்டியலில் சேரனின் பெயரும் இருக்கிறது.

இந்த ஜக்குபாய் பிரச்னைக்காக திரையுலகினர் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள். சென்னை ஃபோர் பிரேம்ஸ் அரங்கத்தில் நடத்தப்பட்டக் கூட்டத்துக்கு, பொதுவில் இம்மாதிரியான எந்த நிகழ்ச்சிகளுக்கும் வந்திடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் வந்திருந்தனர். கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் ‘‘ஜக்குபாய் கதையில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜக்குபாய் என்ற டைட்டிலிலேயே ஏதோ மிஸ்டேக் இருக்கிறது. நானும் கே.எஸ்.ரவிக்குமாரும் பல மாதங்கள் டிஸ்கஸ் பண்ணியும் கதை நகரவே இல்லை. அதன்பிறகுதான் ஜக்குபாய் கதையில் சரத்குமார் நடித்தார். நமக்குதான் செட் ஆகவில்லை, சரத்குமாருக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கும் இப்போது பிரச்னை ஆகிவிட்டது’’ என்று சரத்குமார் தலையில் கூடுதலாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘சூப்பர் ஸ்டாரை அழைத்துப் பேச வைத்தால் விநியோகஸ்தர்களை சமாளித்து படத்தை விற்றுவிடலாம்’ என்று சுப்ரீம் ஸ்டார் கணக்குப் போட்டிருக்க, ரஜினியோ ‘டைட்டிலே வௌங்கலை. எவனோ பில்லி சூனியம் வெச்சுட்டான்’ என்று எக்ஸ்ட்ரா பஞ்சாயத்தை கூட்டினார். அதைத் தொடர்ந்த ரஜினிகாந்த்தின் பேச்சுதான் முக்கியமானது.

அவர் சொல்கிறார், ‘‘ஜக்குபாய்க்காக ‘Wasabi’ என்ற பிரெஞ்சு படத்தின் சி.டி.யை கே.எஸ்.ரவிக்குமார் கொண்டுவந்து கொடுத்தார். படம் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. பத்து அலெக்ஸ் பாண்டியனுக்கு சமமான ஒரு ஓய்வு பெற்ற பெற்ற போலீஸ் அதிகாரியையும், அவருடைய மகளையும் பற்றிய கதை அது. அந்த போலீஸ் அதிகாரியின் மகள் வெளிநாட்டில் கோடீஸ்வரியாக இருக்கிறாள். அவளைப் பார்க்க அப்பா போகிறார். அந்த பெண்ணை சாகடிக்க ஒரு கும்பல் சதி செய்கிறது. அவர்களை அடித்து வீழ்த்தி மகளைஅந்த போலீஸ் அதிகாரி எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இது பிரமாதமான ஸ்க்ரிப்ட். நிச்சயம் வெற்றிபெறும். அதனால் இந்த வி.சி.டி. வெளியானதைப் பற்றி எல்லாம் சரத்குமார் கவலைப்படத் தேவையில்லை’’ என்று ரஜினிகாந்த் உள்ளது உள்ளபடியே போட்டுக்கொடுத்தார். ஒரு பிரெஞ்சு படத்தை அப்படியே திருடி தமிழில் எடுப்பது பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாக ரஜினிகாந்த்தின் பேச்சைக் கருதலாம்.

அதே விழாவில் பேசிய கமல் என்னும் காமன்மேனின் பேச்சு அபாயத்தின் உச்சமாகவும், விஷத் தன்மையுடனும் இருந்தது. ‘‘குறைந்த விலையில் வி.சி.டி.யிலும், டி.வி.டி.யிலும் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமாக நினைக்கிறார்கள். அதை திருத்த முடியாது. ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’’ என்பது காமன்மேன் கமலின் பேச்சு.

மிக அபாயகரமான இந்தப் பேச்சின் பொருள் என்ன? திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். ஏன், திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில் இருந்து கரசேவையும், மாலேகான் குண்டுவெடிப்பும் நடக்காதா? பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? அப்படியே விற்றாலும் அந்த பணம் தேச விரோத செயல்களுக்குதான் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு கமல் எப்படி வருகிறார்? அவை அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. அப்புறம், திருட்டு வி.சி.டி. விற்கும் பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், சினிமாக்காரர்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் நாட்டை வளமாக்கப் பயன்படுகிறதா என்ன?

கும்பகோணம் தீ விபத்தின்போது பந்தாவாக ‘நான் 5 லட்சம் தாறேன், நான் 10 லட்சம் தாறேன்’ என்று அறிக்கைவிட்ட கொழுப்பெடுத்த கோடீஸ்வர நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் இதுவரைக்கும் ஒரு பைசாவும் தரவில்லை. இதைப்பற்றி பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தும் அந்த நேர்மையின்மைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள். இந்த யோக்கியவான்கள்தான் இப்போது திருட்டு வி.சி.டி. பற்றி அலறுகின்றனர். ‘சரத்குமாருக்கே இந்த கதியா, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கே இந்த நிலைமையா?’ என்று இழவு வீடு போல் நடிக்கின்றனர். சில நடிகர்கள் ஒரு படி மேலே போய் ‘தமிழனுக்கு சொரணை இல்லை. திருட்டு வி.சி.டி. பார்த்துக் கெட்டுப்போறான்’ என்று சாபம் விடுகிறார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஏற்படும் பிரச்னைக்கும் தமிழனின் சொரணைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.

ஒரு பொது மேடையில் ‘வாசபி’ என்ற பிரெஞ்சு படத்தை திருடிதான் ஜக்குபாய் எடுக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத நடிகர்கள், வி.சி.டி. திருட்டுப் பற்றி மட்டும் வாய் கிழியப் பேசுகின்றனர். பொதுவாக திருடர்கள், தாங்கள் திருடியப் பொருளை இழந்துவிட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வதற்கு தயங்குவது பொது எதார்த்தம். திருடனுக்குத் தேள் கொட்டியைதைப்போல என நாம் பழமொழியே வைத்திருக்கிறோம். ஆனால் வாசபியைத் திருடி ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு, அதை ஒருத்தன் திருடிவிட்டான் என்றவுடன் எகிறிக் குதிக்கிறார்கள். மோசடியும், ஆபாசமும் நிறைந்த இந்த வர்த்தக விபச்சாரத்தைப்பற்றி எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை. உடலின் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மட்டும்தான் என்றில்லை. ஒரு சில தனிப்பட்ட காழ்ப்புகள் உச்சத்திற்கு வரும் சந்தர்ப்பங்கள் நீங்களாக எப்போதுமே தமிழ் சினிமா வென்றுகள், தங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டதோ, மன்னிப்புக்கேட்டதோ, அதைப்பற்றி விவாதம் செய்ததோ கிடையாது.

அண்மையில் தென்னாப்பிரிக்க படமான Tsotsi யை அப்படியே உருவி ‘யோகி’யாக்கி அமீர் எடுத்தப் படம் பற்றி கோடம்பாக்கத்தின் நேர்மையாளர்கள் என்ன கருத்தை சொன்னார்கள்? ஒரு விபத்து, அதில் சந்திக்கும் மூவரின் கதைகள் தனித்தனி கோணங்களில் விவரிக்கப்படும் அம்ரோஸ் ஃபெரோஸ் என்ற படத்தை சுட்டு மணிரத்னம் ஆயுத எழுத்து எடுத்தார். ‘sliding doors’ -ன் தாக்கத்தில் ஜீவா ‘12பி’ எடுத்தார். shoot em up-ல் ஐந்து விரல்களுக்கு இடையே ஐந்து தோட்டாக்களை வைத்து கையைத் தீயில் காட்ட, துப்பாக்கி இல்லாமலேயே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து எதிரில் நிற்பவனைத் தாக்கும் காட்சியை அச்சு பிசகாமல் அப்படியே சுட்டு நியூட்டனின் மூன்றாம் விதியில் வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. இப்படியான கலைத் திருட்டுக்காக எக்காலத்திலும் குற்றவுணர்வு அடைபவர்கள் இல்லை இவர்கள்.

ஆனால் இவர்களின் நலன்களுக்காகவே இயங்கும் இந்த அரசு சினிமாக் காரர்களின் பிரச்னை என்றால் மட்டும் ஓடோடி வந்து தீர்த்து வைக்கிறது. சினிமா கலைஞர்கள் குடியிருக்க வீடு இல்லாமல் அல்லாடுவதால் மாமல்லபுரம் சாலையில் 95 ஏக்கர் நிலத்தை அவர்களுக்காக ஒதுக்கித் தந்திருக்கிறார் கருணாநிதி. அண்மையில் கூட கமல்ஹாசன் கலந்துகொண்ட சினிமா வர்த்தக கருத்தரங்குக்கு தமிழக அரசு சார்பாக 50 லட்ச ரூபாய் கொடுத்தார். பாவம், சினிமாக்காரர்கள் கஞ்சிக்கு இல்லாமல் பஞ்சத்தில் தவிக்கிறார்கள். இவர் போய் உதவியிருக்கிறார். என்ன அநியாயம் இது? சினிமா என்பது ஒரு தொழில். அதன் முன்னேற்றத்துக்காக கேட்டுக் கேள்வியில்லாமல் மக்கள் பணம் செலவிடப்படுவது எத்தனைப் பெரிய அநியாயம்? இன்று, ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், வழக்கறிஞர்கள் என சமூகத்தின் உழைக்கும் சக்தியாக இருக்கும் எத்தனையோ வகையினர் முதல்வர் கருணாநிதியை சந்திக்க காத்திருக்கின்றனர். அதற்கான நியாயமான காரணங்களும் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் கருணாநிதியோ நடிகை சோனா, குஷ்பு போன்றவர்களை சந்திக்கவே முன்னுரிமை தருகிறார். அந்த அடிப்படையிலேயே ஜக்குபாய் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்த குற்றவாளிகளை மின்னல் வேகத்தில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் கருணாநிதி. இவ்வளவு வேகமான நடவடிக்கை வேறு எந்த மக்கள் பிரச்னைகளுக்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வருமானச் சான்றிதழ் வாங்கவே வாரக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிற நாட்டில் ராதிகாக்களின், சரத்குமார்களின் பிரச்னைகளுக்கு மட்டும் உடனடி தீர்வை அளிப்பதில் இந்த அரசு கூடுதல் கரிசனம் கொண்டிருக்கிறது.

9/1/10

விவசாயக் கூலிகள் குறைந்தது ஏன்?

‘எக்காளக்ஸு மருந்திருக்கு, என்னக் கவலை?’
‘எடுத்துக் குடிச்சிடலாம் மனக் கவலை’

- முன் வரியை ஒருவர் மட்டும் பாட, பின் வரியை எல்லோரும் சேர்ந்திசைக்க வண்டல் மண்ணின் வாசனையுடன் ஒலித்த அந்த நடவுப்பாட்டு இப்போதும் எனக்குள் ஒலிக்கிறது. ‘செவ்வரளித் தோட்டத்துல உன்னை நினைச்சேன்’ பாடலை எப்போதுக் கேட்க நேர்ந்தாலும் மனம் ஒரு மண்புழுவைப்போல சேற்றுக்குள் தன்னை அமிழ்த்திக்கொள்கிறது. சேர் அப்பிக்கிடக்கும் உடம்போடு கைகளில் நாற்று முடிச்சுகளை சுமந்து நடவு வயலில் கால் புதைய நடந்த நாட்கள் ஒரு பசுங்கனவென விரிகிறது.

நாங்கள் விவசாயக் குடிகள். திண்ணைகளில் தானிய மூட்டைகளும், கொல்லைப்புறத்தில் வைக்கோல் போருமான வாழ்வொன்று எங்களிடம் இருந்தது. நடவும், அறுப்புமே எமது ஆயுள். நடவு வயலில் நடமாடும் ஆண்களைச் சுற்றிவளைத்து நட்டுவிட்டு சில்லறை காசு கேட்கும் பெண்களின் உழைப்பு சார்ந்த பொழுதுபோக்கும், திடீர் மழை வந்தால் நாத்து விட்டிருக்கும் பக்கத்து வயலுக்கும் சேர்த்து தண்ணீர் பாய்ச்சும் உழைக்கும் மக்களின் இயல்பான அக்கறையும், கதிர் அடித்ததும் அந்த வீட்டு சின்னப் பிள்ளைகளுக்கு ‘வாங்கித் திண்பதற்காய்’ தரும் ஓரிரு மரக்கால் நெல்லும் வெள்ளாமை வாழ்வின் நினைவுத் தடங்கள். இப்போதும் தேநீர் கடைகளில் வெற்றிலைச் சாற்றைத் துப்பியபடிக்கு மேட்டூர் அணை நீர் மட்டம் பார்க்கிறவர்கள் எம் மக்கள். ஆனால் இன்றைய விவசாய கிராமங்கள் புதியதொரு சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

சேறு அடிப்பதுத் தொடங்கி நாற்றுவிடுதல், நடவு நடுதல், அறுப்பு வரைக்கும் விவசாயத்தின் எல்லாக் கூறு வேலைகளிலும் மனித உழைப்பே பிரதானம். ஆனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மிகக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எந்த வகையான வேலைகளைச் செய்யவும் ஆட்கள் கிடைப்பதில்லை. டிராக்டர் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஊராக கூலித் தொழிலாளர்களைத் தேடிப் போகின்றனர். அப்படியும் கூட போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. நாற்றுவிட்டு 30 நாட்களில் நட வேண்டியப் பயிர் 40 நாட்கள், 50 நாட்கள் ஆன பின்னரும் அப்படியே கிடக்கிறது. களை எடுக்க ஆள் இல்லாமல் நெல் வயலில் பயிருக்கு இணையாக களை மண்டிக்கிடக்கிறது. முன்பு 30, 40 ஆட்கள் இரண்டு நாட்களில் செய்த வேலையை இன்று 10, 15 ஆட்கள் ஒரு வாரமாக செய்ய வேண்டிய நிலைமை. உறவினர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, ‘உன் வேலைக்கு நான், என் வேலைக்கு நீ’ என்று புதியவகையான உறவுக்கூட்டில் உழைக்கிறார்கள்.

விவசாயத்தில் பல வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான். இப்போது யாரும் ‘பணத்தேர்’ ஓட்டுவதில்லை. ஏர் ஓட்டுவது என்பதே கிட்டத்தட்ட அருகிவிட்டது. முழுக்க, முழுக்க இயந்திரங்கள்தான் உழவு வேலைகளைச் செய்கின்றன. அதேபோல கதிர் அடிக்கவும் இயந்திரங்கள் வந்துவிட்டன. வயலில் இருந்து தலைச்சுமையாக நெற்கட்டுகளை களத்துக்கு சுமந்து வந்து அவற்றை அடித்து வீடு சேர்க்கும் காலமும் இப்போதில்லை. ஆனால் எல்லா வேலைகளையும் இயந்திரங்களால் செய்ய முடியாது. நடவு நட இயந்திரம் வந்துவிட்டது என்றபோதிலும் அது நடைமுறை ரீதியாக உகந்ததாக இல்லை. பாரம்பரிய விவசாயத்தில் இருந்து மாறுபட்டிருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளவும், பயன்படுத்தவும் விவசாயிகளிடத்தில் பெரிய மனத் தயக்கம் இருக்கிறது. நாற்று அரிக்கவும், களை எடுக்கவும் எக்காலத்திலும் இயந்திரங்கள் வர முடியாது என்றேப் படுகிறது.

உழவு உழுவது, அறுவடை போன்ற இயந்திரப் பணிகளைக் கூட எல்லா நிலங்களிலும் செய்துவிட முடிவதில்லை. சாலையின் ஓரப்பகுதியில் இருக்கும் நிலங்களுக்கு மட்டுமே இயந்திரங்கள் தோதானவை. சாலை வசதியற்ற உள்பகுதிகளில் வயல் வைத்திருப்பவர்கள் சாலையோர நிலங்களை அனுசரித்து விவசாயம் செய்ய வேண்டும் அல்லது மனித உழைப்பையே நம்பியிருக்க வேண்டும். இதெல்லாம் இந்தத் தொழிலின் எதார்த்த நிலைமைகள். அதேநேரம் நெல் அல்லாத காய்கறி, பூ போன்ற மற்றைய விவசாயத்தைப் பொறுத்தவரை அதில் இயந்திரங்களைக் கொண்டு வர சாத்தியமே இல்லை. எந்த இயந்திரம் பூ பறிக்கும்? எந்த இயந்திரம் வெண்டைக்காயை செடியிலிருந்து பறிக்கும்? பெரும்பகுதி நெல் விவசாயிகளுடன் சேர்த்து முழுக்க, முழுக்க மனிதர்களே செய்ய வேண்டிய இந்த வேலைகளுக்கும் தொழிலாளர்கள் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். பொதுவாக காவிரிப் பகுதியில் ஒரு போகம் நெல் விவசாயம் முடிந்து அடுத்தப் பட்டத்தில் உளுந்து, எள், கடலை, பாசிப்பயிறு போன்ற பயிறு வகைகளை பயிரிடுவதுண்டு. ஓட்டுவது, விதைப்பது, களை எடுப்பது, அறுவடை செய்வது என்ற நான்கே நிலையிலான இந்த வெள்ளாமையில் ஓரளவுக்கு லாபமும் உண்டு. ஆனால் நெல்லுக்கே ஆள் கிடைப்பதில்லை என்பதால் பலபேர் இந்த பயிறுவகை விவசாயத்தை செய்வதே இல்லை. தரிசாகவே விட்டுவிடுகின்றனர்.

ஆனால் இதன் எதிர் நிலையாக கடந்த பத்தாண்டுகளாக விவசாயப் பகுதிகளில் எக்கச்சக்கமான எண்ணிக்கையில் ஆழ்துளைக் கிணறுகள் பெருகியிருக்கின்றன. ஆற்றில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் வருடம் முச்சூடும் இந்த போர்வெல் நிலங்களிலும், அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் விவசாயம் நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் வேலையின் அளவும், அடர்த்தியும் அதிகரித்துச் செல்ல, மறுபக்கம் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறைந்துகொண்டேப் போகிறது. ஆனால் இது ஏதோ திடீரென நடந்துவிட்ட மாற்றம் இல்லை.

விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? 95 விழுக்காடு தலித்கள்தான் கிராமங்களில் இந்த வேலைகளை செய்கின்றனர். காலம் காலமாக நிலமற்றவர்களாக இருக்கும் தலித்துகள் நிலத்தை தங்கள் வசம் வைத்திருக்கும் ஆதிக்கச் சாதியினரை அண்டி பிழைக்க வேண்டிய நிலைமை. இதன் பொருட்டு தலித்கள் சந்திக்கும் சாதி ரீதியிலான வன்கொடுமைகள் ஏராளம். இதை வெறுமனே பொருளாதாரக் காரணியுடன் மட்டும் சுருக்கி புரிந்துகொள்ள இயலாது. சமூக கௌரவம்தான் இதன் மையம். ஒரு தொழிலைத் தொடர்ந்து தன் அடுத்தத் தலைமுறையும் செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கு அந்தத் தொழில் குறித்த பெருமிதங்கள் வேண்டும். ஒரு தலித், தான் விவசாயக் கூலித் தொழிலாளராய் இருப்பதுக் குறித்து பெருமிதம் அடைய என்ன இருக்கிறது? குறைந்தப்பட்சம் தன் அடுத்தத் தலைமுறையையாவது அங்கிருந்து நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதே அவரது அடிமன விருப்பமும், செயலுமாக இருக்கிறது. இவ்விதம் நகரத்துக்கு இடம்பெயரும் ஒரு தலித் விவசாயக் கூலித் தொழிலாளி, முதலில் மனதளவில் சமூக விடுதலை அடைகிறார். பெரிய நிம்மதியும், ஆசுவாசமும் கிடைக்கிறது. பதற்றம் தரும் கிராமத்தின் அன்றாட வாழ்விலிருந்து சுதந்திரம் கிடைக்கிறது. உள்ளூர் கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய முடியாத அவரால் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குள் கம்பீரமாக போய் வர முடிகிறது. எதிரில் வருவது யாராக இருந்தால் என்ன என்று நினைத்து இயல்புடன் நடக்க முடிகிறது. இவற்றால்தான் இன்று கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்பவர்களில் அதிகப்பட்சம் பேர் தலித்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 2% விவசாயக் கூலிகள், கட்டடத் தொழிலாளர்களாகவும், சாயப்பட்டறைத் தொழிலாளர்களாகவும் இடம் பெயர்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

கிராமங்களில் நிலம் வைத்திருக்கும் நிறையபேர் இப்போது கொத்தனார் வேலையின் மீது நிறைய கடுப்பில் இருப்பதை கவனிக்க முடிகிறது. காரணம் விவசாயக் கூலி வேலையை விட்டு நகரங்களுக்குப் போகும் தொழிலாளர்களில் அதிகப்பட்சம் பேர் கொத்தனார் வேலைதான் பார்க்கின்றனர். விவசாயத்தை விட கூடுதல் கூலி, நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் என்பதெல்லாம் போக அவர்கள் கொத்தனார் வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம், இந்த வேலை அவர்களை அடிமைப் படுத்துவதில்லை என்பதுதான். ‘கொத்தனார், கார்பென்டர், பிளம்பர்’ என அவர்கள் பார்க்கும் வேலையின் பெயரால்தான் அழைக்கப்படுவார்கள். ஆனால் கிராமத்தில் நாலு தலைமுறையாக வயலில் வேலை பார்த்தாலும் ஒரு தலித்தால் ‘விவசாயி’யாக, குடியானவனாக ஆக முடியாது. அவர் என்றென்றைக்கும் தலித்தான். சுயமரியாதையுள்ள சமூக வாழ்வை உத்தரவாதப்படுத்தும் இந்தத் தன்மைதான் கொத்தனார் வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக அமைகிறது. ஆகவே கூலியாள் பற்றாக்குறை என்பதை ஒரு விரிந்த கோணத்தில் இருந்து அணுக வேண்டும். வெறுமனே நிலவுடைமை மனநிலையில் இருந்து அணுகுவது சிக்கலுக்கு எவ்வகையிலும் தீர்வை அளிக்காது.


இந்த கூலித் தொழிலாளர் பிரச்னைக்கு இன்னொரு முக்கியக் காரணம், அரசின் 100 நாள் வேலைத் திட்டம். வருடத்தின் நூறு நாட்களுக்கு தொழிலாளர்களுக்கு வேலையை உத்தரவாதப்படுத்துவதுதான் இதன் நோக்கம். ஆனால் நடைமுறையில் காண்ட்ராக்டர்கள் துட்டு அடிக்கவும், தொழிலாளர்களை மொண்ணையாக்கவுமே பயன்படுகிறது. சும்மா கிடக்கும் கம்மாவைத் தூர் வாருவதாகச் சொல்லி மண்வெட்டியுடன் தொழிலாளர்கள் இறக்கிவிடப்படுகின்றனர். அந்த வேலை அப்போதைக்குத் தேவையா, இல்லையா என்பதெல்லாம் கணக்கிலே எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது. கிட்டத்தட்ட வெட்டிவேலைதான். உண்மையாக இந்தத் திட்டத்தில் 80 ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். ஆனால் நடப்பில் 60 ரூபாய் அளவுக்குதான் வழங்கப்படுகிறது. இரு தரப்பின் தவறுகளும், இரு முனையிலும் அனுமதித்து அங்கீகரிக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தால் முடக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக அதிகமும் பெண்களே இந்தத் திட்டத்தில் வேலைக்குப் போகின்றனர். விவசாய வேலையில் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவுக்கான கூலி அவர்களை இங்கு திருப்பிவிட்டிருக்கிறது. ஆனால் இந்த வகையான அரசின் திட்டங்களை வெறுமனே ‘ஊழல்’ என்று வகைபிரிக்க முடியுமா?

அண்மையில் ‘கடற்கரை ஒழுங்குமுறை மற்றும் மீன்பிடி மேலாண்மை சட்டம்’ என்ற பெயரில் மத்திய அரசு ஒரு மசோதா கொண்டு வந்தது. மீனவர்களை கடலோரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதுதான் இதன் நோக்கம். அதுபோலவேதான் உள்நாட்டில் விவசாயிகளை விவசாயத்தில் இருந்து துரத்தியடித்து அந்த நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூறு போட்டுக் கொடுக்கத் துடிக்கின்றனர். ‘சிறப்பு வேளான் மண்டலம்’ அமைக்க வேண்டுமென எம்.எஸ்.சுவாமிநாதன் தொடர்ந்து பேசி வருவதைக் கவனிக்க வேண்டும். அரசும் இதற்கு முயல்கிறது. அது என்ன வேளாண் மண்டலம்? இருக்கும் விவசாயத்தை ஒழித்துவிட்டு யாரை வைத்து மண்டலம் அமைக்கப்போகிறார்கள்? அதான் பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றனவே. எப்படி அமெரிக்காவின் கெண்டகி (கே.எஃப்.சி.) சிக்கனை தமிழக மக்களுக்குத் திண்ணத் தருகிறார்களோ, அதுபோல நாளை தமிழக விவசாய நிலங்களை அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பார்கள். உள்ளூர் பாரம்பரிய விவசாயிகளை அவர்களிடத்தில் கூலிகளாக சேர்த்துவிட்டு ‘வேலைவாய்ப்பு’ என்பார்கள். மிகைப்படுத்தவில்லை. வேளாண் மண்டலங்கள் முழு வீச்சில் நடந்தால் எதிர்காலத்தில் இதுதான் நடக்கும்.

கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் ஆசிய நாடுகளின் திறந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டது இந்தியா. இதன்படி 2010 ஜனவரியில் இருந்து 2016 வரைக்கும் விவசாய விளைப்பொருட்களை ஆசிய நாடுகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்து வியாபாரம் செய்யலாம். இப்படி இறக்குமதி செய்யப்படும் 3,200 பொருட்களுக்கு வரி கிடையாதது மட்டுமல்ல, அந்தப் பொருளின் அளவையும் இந்தியா கட்டுப்படுத்தாது. இது அமுலுக்கு வந்தால் தைவான், மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் இந்திய சந்தைக்குள் வரும். சீன பொருட்களால் இந்திய சிறு வியாபாரிகள் நலிவடைந்ததைப்போல இந்த அந்நிய விவசாயப் பொருட்களால் உள்ளூர் வியாபாரம் கெடும். உள்நாட்டு விவசாயத்தை நலிவடையச் செய்வதும், அந்த இடத்தை வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டு நிரப்புவதுமே இன்றைய அரசின் விவசாயக் கொள்கையாகவும், வேலைத் திட்டமாகவும் இருக்கிறது. எப்படி தனியார் பேருந்துகளை அரதப் பழசாக ஓடவிட்டு, ‘இதுக்கு பிரைவேட் பஸ்ஸே தேவலாம்’ என்று மக்கள் வாயாலேயே சொல்ல வைத்து, தனியார் போக்குவரத்து ஊக்குவிக்கப்படுகிறதோ அதுபோல, விவசாயத்தை தாங்களாகவே கைவிடும்படியான புறநிலைகள் விவசாயிகளுக்கு உருவாக்கப்படுகின்றன. எனவே இந்த அரசு கூலித் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வைத் தேடும் என்று நம்புவதற்கில்லை. அப்படியே தீர்வை தந்தாலும் ‘நிலத்தை ரிலையன்ஸுக்குக் குத்தகைக்கு விடு. காசு கிடைக்கும்’ என்பது மாதிரிதான் இருக்கும்.
அதே போல இந்தக் கூலித் தொழிலாளர் பிரச்னையை நாம் வேறு மாதிரியும் அணுகவேண்டும். நடவு, களை எடுப்பது உள்ளிட்ட விவசாயத்தின் பல பகுதி வேலைகள் அசுரத்தனமான உழைப்பைக் கோருபவை. கால் புதையும் சேற்றில் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக குனிந்துகொண்டே இடுப்பொடிய நடவு நடுவதற்கு மிக உச்சக்கட்ட உழைப்பு தேவை. ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும் விவசாய வேலைகளின் உழைப்பு எத்தன்மையானது என்பதை அனுபவத்தில் அறிந்தவன் என்ற முறையிலுமே இதைச் சொல்கிறேன். ஆனால் இந்த உழைப்பின் முழுபலனையும் அனுபவிப்பவர்கள் முதலாளிகள்தான். தொழிலாளியின் உடலானது முதலாளிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற விவசாயத்தின் பல கூறு வேலைகள் இயந்திரமயமாக்கப்பட வேண்டும். அதற்கான நிதி மூலதனங்கள், துறைகள் உருவாக்கப்பட்டு பரந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் உழைக்கும் மிருகமாக மாற்றப்பட்டிருக்கும் எளிய மக்களை அதிலிருந்து கொஞ்சமேனும் விடுதலை செய்ய முடியும்.