22/12/10

கடவுளின் புனைப்பெயர்!

SC NO 8
EXT / DAY / BUS STOP

ஹீரோயின் மினி பஸ்ஸில் இருந்து இறங்குவது. அதன் மறைவில் இருந்து ஓர் இளைஞன் ஹீரோயினை நோக்கி வேகமாக வருவது. அப்போது ஒரு சைக்கிள் ஒற்றையடிப் பாதையில் இருந்து வருவது. ஹீரோயின் “சுப்பையா... நின்னு” என்பது. சைக்கிளை ஓட்டிச் செல்லும் சுப்பையா ஒரு காலை கீழே ஊன்றியபடி நிற்பது. ஓடிச்சென்று கேரியரில் ஏறி அமர்ந்துகொண்டு “ம்.. சீக்கிரம் போ” என்பது. அவர் பயத்துடன் “என்னம்மா.. நீங்கப் பாட்டுக்கும் ஏறிட்டீங்க..” என தயங்குவது. “போன்னு சொல்றேன்ல” என அவள் குரலை உயர்த்தியதும் சைக்கிள் கிளம்புவது. சுப்பையா பின்புறம் திரும்பிப் பார்க்க அங்கே அவளையேப் பார்த்துக்கொண்டு அந்த இளைஞன் நிற்பது.

------Cut-------

சம்பந்தம் கடுப்பாக டி.வி.யை நிறுத்திவிட்டு நரைத்துப்போன நெஞ்சு முடியை கையால் தடவிக்கொண்டார். இளம் பச்சை நிற தேங்காய்ப்பூ துண்டு அவர் தேகத்தை மறைத்துக் கிடந்தது. கையில் புகைந்த சுருட்டுப் புகை முகத்துக்கு நேராக சுற்றி சுற்றி வந்தது. கடும் கோபத்தில் இருந்த அவரது உதடுகள் ‘சுப்பையா’ என்ற பெயரை உச்சக்கட்ட கோபத்துடன் முணுமுணுத்தன. சனியன் பிடித்த டி.வி. எதைத் திறந்தாலும் அதையே போட்டுத் தொலைக்கிறான். அதுவும் அந்த ஹீரோயின் சைக்கிளை விட்டு இறங்கியதும் இளைஞனை நோக்கி திரும்பும் காட்சியில் அவர் முகத்தை குளோஸ்-அப்பில் வைத்து அந்த முகத்தின் மீதுதான் ‘திட்டம்’ என டைட்டிலே போடுகிறார்கள். அதைப் பார்க்க பார்க்க அவருக்கு மேலும், மேலும் கடுப்பு வந்தது.

சம்பந்தத்தால் நான்கு நாட்களாக ஊருக்குள் தலைகாட்ட முடியவில்லை. அவர் பிறந்து 51 வருடங்களாகிறது. இத்தனை வருடங்கள் கழித்து ஒரு சினிமாவின் மூலமாக, அதுவும் மூன்றே மூன்று காட்சிகளில் தனது சாதி மாற்றப்பட்டுவிடும் என அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தான் நூதனமாக ஏமாற்றப்பட்டதாகவும், ஸ்கெட்ச் போட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்தார். அதுவும் அடுத்த வாரம் சித்திரா பவுர்ணமி திருவிழாவை வைத்துக்கொண்டு இப்போது இப்படி நடந்ததுதான் அவரை அதிகம் ஆத்திரப்படுத்தியது. வெளியில் போனால் தெரிந்தவன் துக்கம் விசாரிக்கிறான். தெரியாதவன் நக்கல் அடிக்கிறான். இத்தனை நாட்களாக சேர்த்து வைத்திருந்த கௌரவமும், பெருமையும் ஒரே நாளில் காலாவதியாகிவிட்டதைப் போல் உணர்ந்தார்.

உண்மையில் அவர் மனதில் ஏதேதோ திட்டம் இருந்தது. படம், சரியாக சித்திரா பருவத்துக்கு ஒரு வாரம் முன்பாக ரிலீஸ் ஆகப்போவது தெரிந்துவிட்டதால் சரியான சந்தோஷத்தில் இருந்தார். “ ‘திட்டம்’ புகழ் கலைப்பேரொளி சம்பந்தம் நடிக்கும் வள்ளித் திருமணம் நாடகம்” என்று போஸ்டர் போடுவதாகக் கூட யோசனை இருந்தது. வெற்றிவேல் பிரஸ்ஸில் கொடுத்தால் நாலு கலரில் அடித்துத் தருவான். சுத்துப்பட்டு ஊர் எல்லாம் ஒட்டிவிட்டால் இந்த வருட பருவத்துக்கு சம்பந்தம்தான் கிங். எத்தனை வருடங்களுக்குதான் புதுக்கோட்டை ‘சாந்தி நாடக கம்பெனிக்காரன்’ தரும் துவைக்காத ஜிகினா டிரெஸ்ஸைப் போட்டுக்கொண்டு ‘மானைப் பார்த்தாயா, புள்ளி மானைப் பார்த்தாயா, இங்கு தப்பி வந்த புள்ளிமானைப் பார்த்தாயா?’ என்று டயலாக் பேசிக்கொண்டே இருப்பது? அதுவும் போன மூன்று வருடங்களாக வள்ளியையும், தெய்வானையையும் பார்க்க சகிக்கவில்லை. எத்துப்பல்லுடன் சிரித்தபோது வள்ளி, வில்லியாக தெரிந்தாள். அந்த லட்சணத்தில் அவர்களுக்கு முந்தின நாளே தேவர் மெஸ் பிரியாணி, காமாட்சி மெஸ் மீன் பொரியல்.. என வக்கனையாய் சாப்பாடு வேறு.

சம்பந்தத்தம் பதினெட்டு வருடங்களாய் வள்ளி திருமணத்தில் முருகன் வேடம் ஏற்று கலைச்சேவை ஆற்றி வருகிறார். கிளிண்டன் காலத்துக்கு முன்பிருந்து இப்போது ஒபாமா வந்துவிட்ட பின்னரும் அவர்தான் முருகன். வள்ளிகள் மாறலாம். தெய்வானைகள் மாறலாம். என்றென்றும் முருகன் அவர்தான். மேலக்கோட்டையின் அதிகாரப்பூர்வ ஊர் நாட்டாமைகளில் சம்பந்தமும் ஒருவர் என்பதால் முருகனாய் நடிக்கும் வாய்ப்பை யாரும் வழங்காமலேயே எடுத்துக்கொண்டார். அதன்பொருட்டு, ‘வீட்டுல ஒத்தை பொண்டாட்டியை வெச்சு குடும்பம் நடத்த வக்கில்ல.. இதுல இவ்வொளுக்கு ரெண்டு பொண்டாட்டி வேற’ என்ற மனைவியின் கடுங்குத்தல் பேச்சுக்களையும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்.

ஒவ்வொரு வருடமும் பருவத்துக்கு முந்தைய வாரத்தில் சம்பந்தத்தின் போக்கே மாறிவிடும். புகை, மது, மாது, மாமிசம் எதுவும் கிடையாது. ‘என்ன முருகா..’ என்றாலே டீ வாங்கித் தருவார். சாயுங்கால நேரத்தில் நாலு பையன்கள் சேர்ந்து சம்பந்தத்தை பத்து தடவை சுற்றி வந்து ‘முருகா, முருகா’ என்று கூவி கடை சாத்துவதற்குள் ஒரு குவார்ட்டருக்கு தேத்தி விடுவார்கள்.

‘‘வருஷம் முச்சூடும் மூச்சு முட்ட திங்கிற, குடிக்கிற... இந்த ஒரு வாரம் மட்டும் என்ன பக்தி பொத்துக்குது?” என்று எவரேனும் கேட்டால் ‘‘என்னதான் வேஷம் போட்டாலும் சாமியா நடிக்கிறோம். அதுக்கு உண்டான மரியாதையைக் குடுக்கனும்ல...” என்பார். அவரது கட்டுப்பாடு நாடகம் முடிந்த மறுநாளே நட்டுக்கொள்ளும். தெற்கே இருக்கும் அவரது தென்னந்தோப்பில் நல்ல தித்திப்பு இளநீர்களாகப் பார்த்து வெட்டி, அதில் பலவித டாஸ்மாக் அயிட்டங்களையும் ஒன்றாக கலந்தடித்து சாயுங்காலம் வரைக்கும் குடித்து தீர்ப்பார். முந்தின நாள் இரவுவரை அவரிடம் குடி கொண்டிருந்த முருகன் காலையிலேயே எக்ஸ்பயரி ஆகியிருப்பான்.

இவ்விதமான சம்பந்தத்தின் நீண்ட நெடிய கலைச்சேவையில் ஒரே பிரச்னை, கீழக்கோட்டைக்காரர்கள்தான். எண்ணிக்கையில் மேலக்கோட்டையை விட கீழக்கோட்டை குறைந்த தலட்டுக்கட்டுக்களைக் கொண்ட சிறிய ஊர்தான். ஆனால் பஞ்சாயத்துக்கு ஒன்றும் குறைவில்லை. இரு ஊர்களுக்கும் இடையே ஒவ்வொரு வருடமும் பிரதி மாதம் சித்திரை மற்றும் ஆவணியில் இரண்டு சண்டைகள் வரும். ஒன்று மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடும்போது கீழக்கோட்டை வழியாக வரும் சன்னதி வாய்க்காலை அவர்கள் அடைத்துக்கொள்கிறார்கள் என்பது. இரண்டு, வள்ளித் திருமணம் நாடகத்தில் ‘வள்ளிக்கு மேக்-அப் சரியில்லை’ என்பது மாதிரி மொக்கையான காரணத்தைக் கண்டுபிடித்தேனும் சண்டைப் பிடித்துவிடுகிறார்கள் என்பது. தண்ணீர் பிரச்னை என்பது மொத்த ஊருக்கும் சொந்தமானது. அதை சமாளித்துவிடலாம். நாடகத்தைப் பொருத்தவரை அது மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக தன்னுடன் சம்பந்தப்பட்டது என்றே சம்பந்தம் கருதினார். இதன்பொருட்டு சிலபல பகைகளையும் கடந்த காலத்தில் கீழக்கோட்டையுடன் வளர்த்து வைத்திருந்தார். ஆனால் அந்த கீழக்கோட்டைக்காரன் ஒருவனிடம் தான் சரணடைய நேரும் என சம்பந்தம் ஒரு போதும் நினைத்தது இல்லை.
****
சரியாக போன பருவம் முடிந்த இருபதாவது நாள் கீழக்கோட்டையில் கடும் பரபரப்பு. தஞ்சிராயர் பேரன் திருமூர்த்தி சினிமா டைரக்டர் ஆகி தனது முதல் பட ஷூட்டிங்கை ஊரைச் சுற்றியே நடத்தத் தொடங்கியிருந்தான். சுற்றி முப்பது கிலோமீட்டருக்கு சினிமா தியேட்டர் கூட இல்லாத ஊரில் இருந்து ஒருவன் சினிமா டைரக்டர் ஆகிவிட்டான் என்றால் சும்மாவா? சுத்துப்பட்டு ஊரே திரண்டு வந்து வேடிக்கைப் பார்த்தது.

இந்த இடத்தில்தான் சம்பந்தம் எண்டர் ஆகிறார். அவருடைய ஆசை எல்லாம் ‘இதைவிட்டால் வேற வாய்ப்பே கிடைக்காது. எப்படியாவது ஒரு சீனிலாவது இந்த சினிமாவில் தலைகாட்டிவிட வேண்டும்’ என்பதாக இருந்தது. ஆனால் கீழக்கோட்டைக்காரனிடம் எப்படிப் போய் நிற்பது? தன்மானம் தடுக்க, கலை ஆர்வம் முடுக்க... அப்போதுதான் காற்றில் வந்து காதில் நுழைந்தது அந்த சேதி. சம்பந்தத்தின் நாடக சகாவும் கடந்த சில ஆண்டுகளாக வள்ளி திருமணத்தில் பபூன் வேடம் ஏற்று கலக்கி வருபவருமான சமத்தலிங்கம்தான் அந்த சேதியை அவரது காதில் ஓதினான்.

‘‘அறுப்புக்கு ரெடியா இருக்குற நெல்லு வய வேணுமாம். ஹீரோயினு டிராக்டரை ஓட்டியாந்து வயலுக்குள்ள உட்டு ஏத்துமாம். உன் வயலைத் தர்றியா மாமா?”

பின்ன தராமல்? அதைவிட சிறந்த வாய்ப்பு அவருக்கு ஒருபோதும் கிடைக்காது. விறுவிறுவென கீழக்கோட்டைக்குப் போனார்.

‘‘நம்மகிட்ட நாலு ஏக்கர் தாழடி ‘என்னை அறுத்துக்க’ன்னு ரெடியா நிக்கிது தம்பி. வாங்க, வந்து நல்லா படம் பிடிங்க. நம்ம பிள்ளைவ இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்குதுவொண்ணா நம்மதானே தம்பி உதவனும். என்ன நான் சொல்றது?” சம்பந்தத்தின் பேச்சை இயக்குநர் கொஞ்சம் நம்பாதது போல் தெரிந்தது.

‘’காச பத்தி யோசிக்கிறியளா... அதெல்லாம் ஒண்ணும் கவலப்படாதிய.. நீங்க வாங்க, எல்லாத்தையும் நான் பாத்துக்குறன். டிராக்டர் கூட நம்மளுதே இருக்கு”

ஒரு கோழி தானாகவே மசாலா தடவிக்கொண்டு கொதிக்கும் எண்ணெயில் குதிக்க அனுமதி கேட்டால் யார் என்ன செய்ய முடியும்? ஆனால் இப்போது இயக்குநரின் டவுட் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘‘அதுசரி... ஷூட்டிங்குக்கு அறுப்பு வய தேவைன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” சம்பந்தம் முகத்தில் இன்ஸ்டண்ட் பெருமிதமும், அதற்கு காரணமான சமத்தலிங்கம் முகமும் வந்து போயின. ‘பய நடிக்கிறது பபூனா இருந்தாலும் ஹீரோ கணக்காதான் காரியம் பண்றான்’ என்று நினைத்துக்கொண்டார்.

‘‘எங்களுக்கும் ஆளுங்க இருக்காய்ங்கல்ல தம்பி..” சொல்லிவிட்டு வெற்றிப் புன்னகையுடன் கிளம்பினார். அடுத்த நாளே இயக்குநர் வந்து லொக்கேஷன் பார்த்துவிட்டுச் செல்ல, இந்த இடைவெளியில் மேலும் பல ரகசிங்களை அறிந்து வந்திருந்தான் சமத்தலிங்கம். அதில் முக்கியமானது இயக்குநர் திருமூர்த்திக்கு ஓல்டு காஸ்க்கை இளநீரில் கலந்து அடிப்பதுதான் பிடிக்குமாம். இந்த ஒரு விஷயம் போதாதா, பிக்-அப் பண்ண? அன்றைய இரவு சம்பந்தத்தின் தோப்பில் சில தேங்காய்கள் இளம் வயதிலேயே உயிரிழந்தன. இளநீரின் சுவையுடன் ரம் அடித்த இயக்குநரின் மூன்றாவது ரவுண்டில் சம்பந்தத்தின் விருப்பத்தை சமத்தலிங்கம் பகிரங்கப்படுத்தினான்.

‘‘என்னாங்க நீங்க? இதுக்குப் போயி தயங்குறீங்க.. பக்கத்துப் பக்கத்து ஊருக்காரங்க.. எனக்காக நீங்க எவ்வளவு பண்றீங்க.. இதைக்கூடப் பண்ணமாட்டனா?”

அந்த காரியம் அவ்வளவு எளிதில் முடியும் என அவரே எதிர்பார்க்கவில்லை. இயக்குநரின் வார்த்தைகள் போதையையும் தாண்டி சம்பந்தத்தை மிதக்க வைத்தன. அதுவும் அடுத்த நாளே அவருக்கு ஷூட்டிங்.

-------Cut---------

SC NO 19
EXT / DAY/ Paddy Field

அறுப்புக்கு தயாராக இருக்கும் நெல் வயல். அதன் அருகே இருக்கும் மண் ரோட்டில் கதாநாயகன் ஹீரோயினுக்கு டிராக்டர் கற்றுத் தருவது. அவள் தப்புத்தப்பாய் ஓட்டி, நெல் வயலுக்குள் டிராக்டர் சென்றுவிடுவது. இருவரும் ரொமான்ஸுடன் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருக்க, பாடல் ஃப்ரீஸ் ஆவது. தூரத்தில் ஒரு பெரியவர் முண்டாசு, மம்பட்டியுடன் வரப்பில் சத்தம் போட்டுக்கொண்டே ஓடிவருவது. அவரைப் பார்த்ததும் இருவரும் இறங்கி ஓடிச் செல்வது.
--------Cut-----------

ஹீரோயினுக்கு டிராக்டரில் உட்கார்ந்ததும் நடிக்கவே வரவில்லை. ஆறாவது டேக் போகிறது. இயக்குநர் பயங்கர கடுப்பில் இருந்தார். ‘’ஏம்மா.. உன்னை என்ன ப்ளைட்டா ஓட்டச் சொல்றேன். இந்தா... இவர் எல்லாம் இங்க நாடகத்துல நடிக்கிறவர். ஆனா ஒரு புரஃபஷனல் ஆக்டர் மாதிரி என்னமா நடிக்கிராரு.. நீ எல்லாம் ஹீரோயின்னுட்டு வந்து ஏன் இப்படி உயிரை எடுக்குற?”

சம்பந்தத்துக்கு உடல் சிலிர்த்தது. தன்னைத்தானே மெச்சிக்கொண்ட அவர் ஏழாவது டேக்கிலும் உற்சாகத்துடன் வரப்பில் ஓடிவந்தார். அவரை அருகில் கண்டதும் டிராக்டரில் இருந்து இருவரும் இறங்கி ஓட, “ஊராமுட்டு அறுப்பு வயல்ல வந்து காதல் கேக்குதோ காதலு.. அய்யா வரட்டும். உங்களுக்கு இருக்கு கச்சேரி” என்ற தனக்கு வழங்கப்பட்ட டயலாக்கை சிவாஜி கணேசன் மாதிரி முகத் தசைகள் அதிர உணர்ச்சிப் பூர்வமாக உச்சரித்தார். படத்தில் ‘ஊராமூட்டுதும்’ நிஜத்தில் அவருடையதுமான அறுப்பு வயலில் நெற்கதிர்கள் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சுழன்றன. டேக் ஓ.கே. ஆனதும் சம்பந்தத்தை அழைத்து அந்தக் காட்சியை மானிட்டரில் காட்டினார் இயக்குநர். சம்பந்தத்துக்கு எல்லாம் ஒரு கனவு போலவே இருந்தது.

‘‘ஆர்.ஆர். போட்டு தியேட்டர்ல பார்த்தீங்கன்னா இன்னும் பிரமாதமா வரும்ங்க”

அவர் எந்த ஆர்.ஆரைக் கண்டார்? அவருக்கு தெரிந்தது எல்லாம் டி.ஆர். என்று ஒரு நடிகர் இருக்கிறார், அவருக்கு நிறைய தாடி இருக்கிறது என்பது மட்டுமே. ஷாட் முடிந்து வந்த கதாநாயகியிடம் ‘‘சார்தான் இந்த ஊருக்கு எல்லாமே.. இதுலேர்ந்து அந்தக் கடைசி வரைக்கும் எல்லா நெலமும் சாரோடதுதான்” என்று ஒரு அஸிட்டெண்ட் டைரக்டர் பிட்டைப் போட்டான். அவன் கண்களுக்கு சம்பந்தம் ஒரு புரடியூசராய் தெரிந்திருக்கக்கூடும்.

சுற்றி சுற்றி ஷூட்டிங். பஞ்சாயத்தில் கும்பலாக நிற்பது, பாட்டு சீனில் நடந்துகொண்டே இருப்பது, அட்மாஸ்பியரில் வந்துபோவது... என கீழக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ‘திட்டத்தில்’ எழுபது, எழுபத்தைந்து பேராவது நடித்திருப்பார்கள். திடீரென்று ஒருநாள் சம்பந்தத்தைத் தேடிவந்த இயக்குநர், ‘‘உங்களுக்கு இன்னும் நாலு சீன் வெச்சிருக்கேன். ஆனா ஏழெட்டு கிலோ எடையைக் குறைக்கனும். அடுத்த மாசம்தான் ஷூட்டிங். அதுக்குள்ள குறைச்சிடுங்க’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஒரு மாதத்தில் எட்டு கிலோ எடை குறைத்தாக வேண்டும். 51 வயதில் இப்படி ஒரு லட்சியம் வரும் என அவர் எதிர்பார்க்கவே இல்லை. கலைத்தாகம் என்று வந்துவிட்டப் பிறகு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா? ‘உளி தாங்கும் கற்கள்தான் சிலையாகும்’ என சம்பந்தம், ராணிமுத்து காலண்டரில் படித்திருக்கிறார்.

-------Cut-------

SC NO 42
EXT / Day / Pond

குளத்தில் பிடித்த மீன்களுடன் சுப்பையா கரைக்கு வருவது. மீனுக்கு காத்திருப்பவர்களுக்கு எடைபோட்டு விற்பது. மீன் வாங்க வரும் ஹீரோயின் பை இல்லாததால் தன் பாவாடையில் மீனை வாங்கிச் செல்வது. அப்போது ஒரு போலீஸ்காரர் வந்து மீன் வாங்குவது. மீனை வாங்கிக்கொள்ளும் போலிஸ்காரர் வண்டியை ஸ்டார்ட் செய்தபடி இந்தப் பக்கம் திரும்பி இன்னொருவரிடம், ‘உங்க ஊரானுவளுக்கு மண்டையில அறிவே கிடையாதா? இவனுவொ சும்மா இருக்கும்போதே துளுத்துப்போயி அலையுறானுவ... இதுல குளத்துல இறக்கிவிட்டு மீன் பிடிக்கிற வரைக்கும் கொண்டாந்து விட்டுருக்கிய’ என்பது. பின்புறம் சுப்பையா மீன் விற்றுக்கொண்டிருப்பது போகஸ் அவுட்டில் தெரிவது.

-------Cut-------

அந்த மீன் குளம் கூட சம்பந்தம் ஏலம் எடுத்ததுதான். ரெண்டு வருடமாக போராடி குளம் ஏலத்தை எடுத்தார். சம்பந்தத்துக்கு நினைக்க, நினைக்க கடுப்புதான் மிஞ்சியது. ஒரு படத்தில் நடிப்பது... அப்படியே பிக்-அப் ஆகி பின்னி எடுப்பது என அவர் மனதில் பல திட்டங்கள் இருந்தன. ஆனால் இப்போது அவருக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை ‘திட்டம்’!

‘‘இப்ப என்ன குடியா முழுகிப்பொயித்து... வயசுக்கு வந்தப் புள்ளயாட்டம் வெளியத்தெருவப் போவாம அடுப்படியையே சுத்தி சுத்தி வர்றிய?”

வாசலில் இருந்த பைப் கட்டையில் தண்ணீர் பிடித்தபடி பேசினாள் சம்பந்தத்தின் மனைவி.

“மழவராயன் தெருவுக்கு சரியா கேக்கலயாம். அந்தப் பக்கமா நால்ரோட்டுலப் போய் நின்னு அடித்தொண்டையிலேர்ந்து கத்து... போ”

அந்தம்மா முறைத்துக்கொண்டே தண்ணீர் குடத்துடன் வீட்டுக்குள் போனது. அவரது வாயில் இருந்து விடுபட்ட சுருட்டுப் புகை தெருவில் கசிந்துகொண்டிருந்தது. படம் ரிலீஸ் ஆனதும் இந்த பக்கத்து ஊர்க்காரர்கர்கள் எல்லோரும் திருவிழா மாதிரி தியேட்டருக்கு ஓடினார்கள். காட்சிக்குக் காட்சி கை தட்டல்கள். சம்பந்தத்துக்கு மட்டும் பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது.

“என்னா மாமா... இன்னமுமா அதையே உருப்போட்டுக்கிட்டு அலையுறீய? இதெல்லாம் ஒரு கவலைன்னு... விடு மாமா” சமத்தலிங்கம் பேச்சோடு உள்ளே வந்தான்.

“நீ ஏன் பேசமாட்ட? பபூனைப் புடிச்சு கீழக்கோட்டையான் போலீஸ்காரனா காட்டிட்டான்ல.. நீ அப்படித்தான் பேசுவ’’

“இப்ப உங்களை மட்டும் என்னாத்த குறைச்சலா காட்டிப்புட்டாங்குறீய... படத்தோட பேரையே உன் மூஞ்சிலதான மாமா போடுறான். இப்ப கூட டி.வி.ல பார்த்துட்டுதான் வர்றேன்”

“எல... இந்த நக்கல் மயிறு எல்லாம் என்கிட்ட வேண்டாம். அந்த கீழக்கோட்டையான் என்னைய பறப்பயலா காட்டியிருக்கான். அதை அப்படியே விட்டுட்டுப் போவச் சொல்றியா?”

“நீதான மாமா அவனை தேடிப்போய் அழைச்சுட்டு வந்த...”

“அதை நினைச்சாதாண்டா மனசு ஆறலை... சுத்தி நாலு பக்கமும் லைட்டை வெச்சு, மேலால மைக்கை நீட்டி அவன் சொன்ன வசனத்தைதான்டா சொன்னேன். அதுல இவ்வளவு வெனயம் இருக்கும்னு தெரியலையே.. கடைசில கீழக்கோட்டையான் புத்தியைக் காட்டிட்டான் பாரு... அவனுவொளை உள்ள விட்டா எதாச்சும் குந்தகேடு பண்ணாம போவமாட்டானுவன்னு தலையால அடிச்சுக்கிட்டா என் பொண்டாட்டி. இப்ப என் சாதியை மாத்தி உலகம் பூரா தண்ட்ரா அடிச்சுட்டான் அந்த கம்னாட்டி. இனிமே நான் தண்ட்ரா அடிக்க வேண்டியதான் பாக்கி. அடுத்த வாரம் பருவம் வேற வருது”

சம்பந்தத்தின் கவலை எல்லாம் எங்கு சுற்றியும் சித்திரா பருவத்திலேயே வந்து நின்றது. வீட்டுக்கு வந்து டி.வி.யை போட்டால் ஹீரோயின் சகிதமாக திருச்சி லோக்கல் சேனலில் பேட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தான் இயக்குநர். கடுப்பாக டி.வி.யை நிறுத்தினார் சம்பந்தம்.
*****
பருவத்தின் இரவு. எங்கும் வெளிச்ச தோரணங்கள். வெளியில் ரேடியோ செட்டுகள் முழங்க, நாடக மேடையின் முன்பக்கம் கூட்டம் கெக்கலித்தது. புதுக்கோட்டை செட்டின் வள்ளியும், தெய்வானையும் மேக்-அப் போட்டு தயாராக இருந்தனர். சம்பந்தம் மட்டும் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ‘‘முருகன் மூஞ்சி எப்பவும் சிரிச்ச மொகமா இருக்கனும்” என்றார் மேக்-அப் போடுபவர்.

‘’நான் நடிக்கலை”

எல்லாம் தயாராக இருந்த நிலையில் சம்பந்தத்தின் அதிரடி குண்டுவீச்சு அரங்கத்தை நிலைகுலைய வைத்தது. பபூன் வேஷத்தில் அமர்ந்திருந்த சமத்தலிங்கம் வில்லன் குரலில் பேசினான்.

“யோவ் மாமா... முதல்ல வேஷத்தைப் போடுய்யா.. எதையா இருந்தாலும் காலையில பேசிக்குவோம்”

“இல்லடா... தீட்டோட முருகனா நடிக்ககூடாதுறா.. என் தீட்டு சாமிக்கும் தொத்திக்கும்”

வெளியில் சரசரவென இரண்டு, மூன்று கார்கள் வந்து நின்றன. மேடையின் பின் பக்கம் இருந்த கீற்றுத் தட்டியை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தார் இயக்குநர் திருமூர்த்தி. அவர் பின்னாலேயே ‘திட்டம்’ ஹீரோயினும், ஹீரோவும் வர... சம்பந்தம் கண்களுக்கு இயக்குநரின் உருவம் மட்டுமே தெரிந்தது. கோபம் தலைக்கேற ஓடிச்சென்று இயக்குநரின் சட்டையைப் பிடித்து உலுக்க, அவன் தலையில் மாட்டியிருந்த கூலிங்கிளாஸ் கீழே விழுந்து நொறுங்கியது. சமத்தலிங்கம் விலக்க முற்பட்டான். “அங்கிள், விடுங்க அங்கிள்” என ஹீரோயினும் சம்பந்தத்தைப் பிடித்து இழுத்தாள். யுத்த காண்டத்தின் இறுதிக் காட்சியில் நெடிய மௌனத்தைத் தொடர்ந்து...

“அது வெறும் சினிமாங்க.. இந்தா இங்க பபூனா நடிக்கிறாரே... இவர் கூடதான் போலீஸ்காரரா நடிச்சாரு... அதுக்காக நிஜத்துல போலீஸுன்னு அர்த்தமா?”

‘‘அதுக்காவ... என் சாதியை மாத்திருவியா... அதுவும் இதுவும் ஒண்ணா?”

‘‘இங்கப்பாருங்க.. நிஜமாவே எனக்கு உங்களை அவமானப்படுத்தனும்னு எந்த நோக்கமும் இல்லை. இன்ஃபாக்ட், என் ஷூட்டிங் நல்லபடியா முடியுறதுக்கு நீங்க எவ்வளவோ ஹெல்ப் பண்ணீங்க. நீங்கல்லாம் இல்லாட்டி என்னால படமே எடுத்திருக்க முடியாது. அப்பதான் எதுவும் உங்களுக்கு பண்ண முடியலை..” என்று எழுந்த இயக்குநர் சம்பந்தத்தின் சட்டைப் பையில் பணக்கட்டு ஒன்றை திணித்தான். பணத்தின் அளவு கூடுதலாய் இருப்பது தெரிந்ததும் கொஞ்சம் வேகமாக மறுத்து வேண்டா வெறுப்பாக வாங்குவது போல பணத்தை நுனிக்கையால் வாங்கிக்கொண்டார். இந்த தள்ளுமுள்ளிலும் அவர் சுருட்டு அணையாமல் புகைந்துகொண்டிருந்தது.

“பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போவும். நாளைக்கே உனக்கு ரெண்டு லட்ச ரூவா நான் தாறேன். நீ உன் சாதியை மாத்திக்குவியா? சரி அதைவிடு... இந்த தீட்டோட நான் எப்படி முருகனா நடிக்கிறது? முதல்ல அதுக்குப் பதில் சொல்லு” இதற்கு என்னவென்று பதில் சொல்வது என இயக்குநருக்கு புரியவில்லை.

‘‘நாடகத்துக்கு ஒரு வாரத்துக்கு முந்திலேர்ந்து கறி, மீனு திங்காம... இந்தா இந்த சுருட்டைக் கூட குடிக்காம சுத்தபத்தமா இருக்குற ஆளு நானு. நீ என் சாதியவே மாத்திப்புட்ட.. இப்ப எப்படி நான் முருகனா நடிக்கிறது?”

சமத்தலிங்கம் கண் சம்பந்தத்தின் கையில் இருந்த பணத்தின் மீதே இருந்தது. போலீஸ்காரனாக நடித்ததில் தனக்கேற்பட்ட கௌரவக் குறைச்சல்கள் எதையாவது அவசரமாக ஞாபகப்படுத்த முயன்றான். இதற்குள் கூட்டம் கூடியிருந்தது. பிரச்னை என்னவாக இருக்கக்கூடும் என்ற யூகப்பேச்சுகள் கிளம்பியிருந்தன.

“ஏம்பா... நடந்தது நடந்துப்போச்சு. அந்தா ஹீரோயினுதான் நல்லா நடிக்கிதே... அதை இன்னைக்கு ஒரு நாளு நம்ம நாடகத்துல வள்ளியா நடிச்சுட்டுப் போவச் சொல்லுங்கப்பா” என்றது கூட்டத்தின் குரல் ஒன்று. ஹீரோயினுக்கு அன்றைய ராசிபலன், ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு’ என்பதாய் இருந்திருக்க வேண்டும். அந்தக் குரல், கூட்டத்தின் கூச்சலில் அமுங்கிப்போனது.

“சொல்லு தம்பி... நான் எப்படி முருகனா நடிக்கிறது, இந்த தீட்டை எப்படிப் போக்குறது?” இயக்குநர் பொறுமை இழந்தான்.

“ஏங்க... அந்த முருகன் என்ன சாதின்னு உங்களுக்குத் தெரியுமா? அவரே சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணவருதாங்க. முருகனோட மொத வொய்ஃப் ஒரு சாதி. ரெண்டாவது வொய்ஃப் வேற சாதி. என்னமோ தீட்டு, தீட்டுங்குறீங்க?”

அவர்கள் கிளம்பிப்போய்விட்டார்கள். சம்பந்தத்துக்கு தலை சுற்றத் தொடங்கியது. ’முருகன் என்ன சாதி?’

---------The End-------

-பாரதி தம்பி

2/10/10

Peepli [Live]: ஊடக பொறுக்கித்தனத்தின் உண்மை முகம்!

காதல் கவிதை’ என்று அகத்தியன் ஒரு படம் இயக்கினார். அந்த படத்தில் கதாநாயகன் ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்கு கவிதை ஒன்றை விளம்பரமாகக் கொடுக்கச் செல்வார். அங்கு விளம்பரப் பிரிவில் இருப்பவர் தலையை நிமிர்ந்துக் கூட பார்க்காமல், ‘என்ன சைஸ்.. எட்டுக்கு எட்டா, ஆறுக்கு ஆறா?’ என்பார். ‘இது கவிதை சார்’ என்று கதாநாயகன் சொல்ல, ‘இருக்கட்டும். என்ன சைஸ்.. அதைச் சொல்லுங்க’ என்பார் அந்த நபர்.

ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் ரசனையும், சிந்தனையும் இப்படித்தான் கவிதைக்கும், விளம்பரத்துக்கும் எந்த வித்தியாசங்களுமற்று இறுகிப் போயிருக்கிறது. எல்லாவற்றையும் வெறும் ’நியூஸ் மெட்டீரியலாக’ மட்டுமே பார்ப்பது அல்லது எல்லாவற்றிலும் நியூஸைத் தேடுவது என்றாகிவிட்டன இன்றைய ஊடகங்கள். அறம், நேர்மை, மக்களின்பால் கரிசனம் ஒரு புண்ணாக்கும் இல்லை. ஊடகங்களுக்குத் தேவை எல்லாம் இன்றைய பசிக்கான தீனி மட்டுமே. அது நீங்களோ, நானாகவோகூட இருக்கலாம்.

கருணையற்ற இன்றைய ஊடக உலகின் முகத்தை அப்படியே துவைத்து தொங்கப் போடுகிறது ‘பீப்ளி லைவ்’ என்ற பெயரில் அண்மையில் வெளியாகி இருக்கும் ஓர் இந்தி திரைப்படம். அமீர்கான் தயாரிப்பில் அனுஷ்கா ரிஸ்வி என்ற பெண் இயக்குநர் இயக்கி இருக்கும் இந்த படம் மன சுத்தியுடனும், அரசியல் நேர்மையுடனும் இன்றைய உலகை அணுகுகிறது. நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட துயரங்களுக்கு மத்தியில், வாழ வழியற்ற இந்திய விவசாயிகளின் நிலைமையையும், அந்த துயரத்தையும் ஒரு பண்டமாக்கி விற்கத் துடிக்கும் ஊடகங்களின் பிழைப்புவாதத்தையும் ஒரு சேர அம்பலப்படுத்துகிறது பீப்ளி லைவ். படம் முன் வைக்கும் அரசியலை பேசும்முன்பாக கதையைப் பற்றி கொஞ்சம்…

‘முக்கிய பிரதேஷ்’ மாநிலம்தான் கதைக்களம். தமிழ்நாட்டில் பட்டி, புதூர் என்ற பின்னொட்டுடன் நிறைய கிராமங்கள் இருப்பதுபோல வட இந்தியாவில் பீப்ளி என்ற பெயரோடு ஆயிரக்கணக்கான கிராமங்கள் உண்டு. அப்படி ஒரு பீப்ளியில் கதை தொடங்குகிறது. ஈரப்பசையற்ற வறண்ட நிலமும், கள்ளிச்செடி முளைத்துக் கிடக்கும் பாலை நிலமுமான ஊரில் நத்தா, புதியா என்ற இரு சகோதரர்கள் வசிக்கிறார்கள். இருவரும் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய வங்கியில் கடன் வாங்கியுள்ளனர்.

விவசாயம் காலை வாரிவிட்டுவிடுகிறது. ஒரு லாபமும் இல்லை. கடன் கொடுத்த வங்கியோ, கடனைத் திருப்பிக் கட்டவில்லை என்றால் நிலத்தை பிடுங்கிக் கொள்வதாகச் சொல்கிறது. பதறிப்போகும் சகோதரர்கள் நிலத்தை தக்க வைத்துக்கொள்ள எவ்வளவோ போராடுகின்றனர். எங்குமே அவர்களால் பணம் புரட்ட முடியவில்லை. அந்த சமயத்தில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்குவதை கேள்விப்படுகின்றனர். அப்படியானால் இருவரில் ஒருவர் தற்கொலை செய்துகொள்வது என்றும், அதற்கான இழப்பீட்டுத் தொகையை வாங்கி மற்றொருவர் அரசிடம் இருந்து நிலத்தை மீட்பது என்றும் முடிவு செய்கின்றனர்.

நத்தா தற்கொலை செய்துகொள்வதாகத் திட்டம். ஆனால் இவர்களின் திட்டம் மெதுவாக ஊடகங்களுக்கு கசிந்து விடுகிறது. பீப்ளி என்ற அந்த சிறிய கிராமத்தை நோக்கி ஊடகங்கள் பறக்கின்றன. நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைகாட்சிகளின் ஓ.பி. வேன்கள் புழுதியை கிளப்பியபடி ஊருக்குள் விரைகின்றன. ‘மைக்கை’ கையில் பிடித்தபடி ‘இந்திய தொலைகாட்சிகளிலேயே முதன்முறையாக’ ஒரு தற்கொலையை ‘லைவ்’ ஆக ஒளிபரப்புப் போவதைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நத்தாவின் ஒவ்வொரு அசைவையும் டி.வி. கேமராக்கள் படம் பிடிக்கின்றன. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் நத்தா பதற்றமாகிறான். அலர்ட் ஆகும் அரசாங்கம் நத்தா தற்கொலை செய்து கொள்ளாமல் பாதுகாப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புப் போடுகிறது. அவர் ஒண்ணுக்கு அடிக்கப் போனால் கூட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பாகப் போகிறது. எந்தக் காட்சியையும் ஊடகங்கள் தவறவிடத் தயாரில்லை.

தற்காலிக கடைகள் முளைக்கும் அளவுக்கு அந்த சிறு கிராமம் பரபரபாக்கப்படுகிறது. அதில் தாங்களும் பங்குபெறும் பொருட்டு அரசியல்வாதிகளும் ஓடிவந்து தலைகாட்டி ஊடகங்களுக்கு செவ்விகள் வழங்குகின்றனர். ஒரு நாள் காலையில் எழுந்து ஒரு பாறை மறைவில் மலம் கழிப்பதற்காக ஒதுங்குகிறார் நத்தா. அப்போது ஒரு உயரமான டெண்ட்டில் இருந்து அதை தனது கேமராவின் வழியே பார்க்கிறார் ஓர் ஊடகக்காரர். எல்லோரும் அந்த இடத்தை நோக்கி ஓடுகின்றனர். அங்கு நத்தா இல்லை. எங்குமே நத்தா இல்லை.

நத்தா காணாமல் போய்விட்டார். ஊடகங்கள் அதை மேலும் பரபரப்பான செய்தியாக கன்வர்ட் செய்து விற்கின்றன. நத்தா கடைசியாக மலம் கழித்த இடத்தை வட்டம் போட்டு அதை படம் பிடித்து ஒளிபரப்புகின்றனர். நத்தா எங்கே என்று யாருக்குமே தெரியவில்லை. இறுதியில் பீப்ளி என்ற அந்த சிறு கிராமத்தில் இருந்து ஊடகங்கள் வெளியேறுகின்றன. தற்காலிகக் கடைகள் பிரிக்கப்படுகின்றன. கேமரா அப்படியே பின்னோக்கிப் போகிறது.

மெல்ல, மெல்ல நகரம் வருகிறது. ‘மோர் ஸ்பேஸ், மோர் லெக்ஷூரி’ என்ற போர்டு வரவேற்கிறது. அதையும் கடந்து கேமரா செல்கிறது. ஒரு பிரமாண்ட கட்டடத்தின் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பரிதாப முகத்துடன் தாடியை மழித்து தன் உருவத்தை மாற்றிக்கொண்டு கட்டுமான வேலைகள் செய்துகொண்டிருக்கிறார் நத்தா. ‘ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் விவசாயிகள் நாடு முழுவதும் விவசாயத்தை கைவிடுகின்றனர்’ என்ற குறிப்புடன் படம் முடிவடைகிறது. படம் முடிந்துவிட்டது.

விவசாயிகளின் பிரச்னையும், ஊடகங்களின் அரசியலும்?

‘தேவைக்கேற்ற உற்பத்தி’ என்பதே இந்திய பாரம்பரிய விவசாயத்தின் தன்மை. நிலம் இருக்கிறதே என்று யாரும் எல்லாவற்றிலும் மாங்கு, மாங்கென வெள்ளாமை செய்தது இல்லை. ஆனால் இந்த சீரழிந்த அரசியல், நிர்வாக அமைப்பின் விளைவினால் நாடெங்கும் பட்டினிப் பஞ்சங்கள் ஏற்பட்டபோதுதான் ‘புரட்சிகர’ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ‘பசுமைப் புரட்சி’ ‘வெண்மை புரட்சி’ என்று இந்திய உற்பத்தி சந்தை என்பது லாப நோக்குள்ள ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டது.

எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற நிலத்தில் கால் கூட வைத்திடாத ‘ஒய்ட் காலர்’ விவசாயிகள் இதற்கான திட்டங்களை வகுத்துத் தந்தனர். பசுமை புரட்சியின் விளைவு… விவசாய நிலங்களின் சத்துக்கள் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு, நிலம் என்பது மலட்டுத்தன்மை கொண்டதாக மாறத் தொடங்கியது. இதன் பின்னர் வந்த உலக மயமாக்கலும், தாராளமயமாக்கலும் விவசாயிகளுக்கு மேலும் பல ஆப்புகளை சொருகியது.

‘மான்சான்டோ’ விதைகள், ‘பி.டி.காட்டன்’ இப்போது மரபணு மாற்றப்பட்ட விதைகள் என இந்திய விவசாயத்தின் பிடி, உலகை கட்டுப்படுத்தும் பெருநிறுவனங்களின் வசம் போனது. மான்சான்டோ விதையைப் பொருத்தவரை ஒவ்வொரு முறையும் விதை நெல்லுக்கு அவனிடம்தான் போய் நிற்க வேண்டும். விளைந்ததை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது. இதன்மூலம் ஏற்பட்ட நஷ்டத்தினால் ஆந்திராவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதேபோல ‘பி.டி. காட்டன் விதைத்தால் லட்சம் கொட்டும், கோடிகள் குவியும்’ என ஆசைக்காட்டி பி.டி.காட்டனை விற்றார்கள். அதில் ஏற்பட்ட நஷ்டம், மஹாராஷ்டிராவின் விதர்பா விவசாயிகளை கொத்து, கொத்தாக பலியெடுத்தது.

சுயசார்புடன் இருந்த இந்திய விவசாயத்தை முழுக்க, முழுக்க சார்ந்திருக்கும் நிலைக்கு மாற்றி விவசாயிகளை மரணக் குழிகளை நோக்கித் தள்ளினார்கள். தேவை சார்ந்ததாக இருந்த இந்திய விவசாயம், வர்த்தகம் சார்ந்ததாக மாற்றப்பட்டது. மேற்கத்திய நாட்டினர் எந்த உணவை விரும்பி சாப்பிடுவார்களோ அவை இங்கு பயிரிடப்பட்டன. அந்த உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை மட்டுமே லாபகரமானதாக மாற்றி அமைக்கப்பட்டது. அது மட்டுமல்ல… உணவுப் பயிர்கள் உற்பத்தியை விட, பணப்பயிர்கள் உற்பத்தியையே இந்திய அரசு ஊக்குவிக்கிறது.

நெல், வாழை, உளுந்து, காய்கறிகள்… போன்ற உணவு விவசாயத்துக்கு அரசு சார்பில் எந்தவித உற்சாகப்படுத்தலும், ஊக்குவித்தலும் இல்லை. மாறாக சணல், ரப்பர்… போன்ற பணப்பயிர்களின் உற்பத்திக்கே அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. ‘அந்நிய செலாவணி’ என்று இதற்குக் காரணம் சொல்லும்போதே இது, ‘மக்கள் நல அரசு’ என்ற நிலையில் இருந்து ‘லாப நல அரசு’ என்ற நிலையை வந்தடைந்துவிடுகிறது.

இப்படி முழுக்க, முழுக்க திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டிருக்கும் இந்திய விவசாயம் இறுதியில் விவசாயிகளை தற்கொலைப் பாதையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அவர்கள் வாழ வழியற்று, வங்கியில் கடன் வாங்கிய சில ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்த முடியாதபோது அதற்காக நிலத்தை பிடுங்கிக்கொள்ளும் அரசு, அவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் இழப்பீடுத் தொகை வழங்குகிறது. இந்த முரண்பாட்டை துல்லியமாக கையாண்டிருக்கும் இயக்குநர், படம் நெடுக அதிகாரத்தை நோக்கிய நக்கல்களை உதிர்த்தபடியே போகிறார்.

‘பிளாக் ஹியூமர்’ என்ற வகையிலான இந்த நகைச்சுவை ஒட்டுமொத்த படத்தின் மையத்தையும் தாங்கி நிற்கிறது. குறிப்பாக இந்திய காட்சி ஊடகங்களின் பொறுப்பற்ற பொறுக்கித்தனத்தையும், பிழைப்புவாதத்தையும் காட்சிக்கு, காட்சி தோலுரிக்கிறார் இயக்குநர்.

வாட்டி வதைத்த சூடான் பஞ்சத்தில் மயங்கி சாகக் கிடக்கும் குழந்தை, அதன் அருகே காத்திருக்கும் கழுகு… என்ற கெவின் கார்ட்டர் எடுத்த புகைப்படம் உலகப் புகழ்பெற்றது. அந்த மன உளைச்சலில் கெவின் கார்ட்டர் தற்கொலை செய்துகொண்டது வேறு செய்தி. அந்த பிணம் தின்னும் கழுகைப் போலதான் இந்திய ஊடகங்கள் செய்திக்காக அலைகின்றன. வட கிழக்கு இந்தியாவில் அணுதினமும் கண்காணிப்பின் கீழ் மக்கள் வாழ்வதை, காஷ்மீரில் தினம், தினம் செத்து மடிவதை வெறுமனே எண்ணிக்கைகளாக்கி கடந்து போகின்றனர். குறைந்த மரணங்கள் அவர்களுக்கு தலைப்பு செய்தியை தருவதில்லை. எங்கேனும் ஒரு விபத்து, வன்முறை எனில் ‘எத்தனை பேர் சாவு?’ என்பதில்தான் தொலைகாட்சிகளின் கவனம் முழுவதும் இருக்கிறது.

அப்படி இருக்கையில் ‘பீப்ளி’யில் ஒரு விவசாயியின் மரணத்தை ‘லைவ்’ செய்யலாம் என்றால் சும்மாவா? எல்லோரும் நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் கிராமத்தில் காத்துக்கிடப்பதும், அந்த கிராமத்தின் சாதாராண மக்களை காட்சிப் பொருட்களாக்கி டி.ஆர்.டி.யைக் கூட்டுவதும் யதார்த்தத்தில் நாம் பார்ப்பதுதான்.

இலங்கை யுத்தத்தை இந்திய ஊடகங்கள் அணுகிய விதத்தையே இதற்கு உதாரணமாகக் கொள்ள முடியும். ஆனால் அதில் ஒரு முரண்பாடு இருந்தது. வழமையான செய்தி ஊடகங்களின் பரபரப்புக்கேனும் கூட அவர்கள் இலங்கையின் இன அழிப்பை காட்டவில்லை. அந்த விஷயத்தில் அவர்கள் இந்திய அரசின் அயலுறவுக் கொள்கை என்னவோ அதையே பின்பற்றினார்கள். பொதுவாக இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் பிரச்சனைகளும், தேசிய இனங்களின் போராட்டங்களும் திட்டமிட்டே தேச பக்தியுடன் இணைக்கப்படுகின்றன.

காஷ்மீர் தொடங்கி தண்டகாரன்யா வரை அனைத்துமே இப்படித்தான். அதை கேள்வி கேட்பவர்கள் தேசதுரோகிகளாகி விடுகின்றனர். தேசபக்தி, எப்போதுமே நல்ல விற்பனைப் பொருள் என்பதால் இது காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது.

சினிமா என்பது அழகியல் இன்பங்களில் மனதை லயிக்க செய்யும் பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமல்ல. ஒரு திரைப்படத்தின் காட்சிகள் பார்வையாளனின் மனதில் பாரதூரமான பாதிப்புகளை உண்டுபண்ணுகின்றன. இந்தியா மாதிரியான அரை நிலவுடைமை சமூகத்தில் பண்ணையார் தனமும், அடிப்படைவாத குணங்களும்தான் சினிமாவின் குணங்களாக இருக்கின்றன. நடப்பு முதலாளித்துவத்தின் ஜிகினா தன்மைக்கு ஏற்ப வளைந்துகொடுக்கவும் செய்கிறது. இந்த பின்னணியில் நிலவும் சமூக அமைப்பை கேலியும், கிண்டலுமாக கையாண்டிருக்கும் பீப்ளி லைவ் இந்தியாவின் சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக திகழ்கிறது!

29/9/10

பாபர் மசூதி இடிப்பு... சில உண்மைகள்!

‘‘இந்திய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் ‘நாங்கள் இந்தியர்’ என்று ஒருங்கிணைந்து நின்றார்கள் இஸ்லாமியர்கள். பாபர் மசூதிதை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து முடித்தன’’ இந்திய உளவு நிறுவனம் ‘ரா’வின் முன்னால் உளவு அதிகாரி ராமனின் வார்த்தைகள் இவை.

‘அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே நாங்கள் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டப் போகிறோம்’ என்ற ‘பழிக்குப் பழி’ பாலிடிக்ஸ்தான் இதன் அடிப்படை. ‘1996&ம் ஆண்டு டிசம்பர் மாதம் பகல் 12.15 மணிக்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும்’ என்று வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டுதான் அயோத்தியை நோக்கி கிளம்பினார்கள் பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தொண்டர்கள். சுமார் 2 லட்சம் பேர். பெருங்கூட்டமாக குவிந்துவர அயோத்தி குலுங்கியது. வெறியூட்டப்பட்ட கூட்டு நடவடிக்கையின் விளைவு 475 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.

அத்வானியும், முரளி மனோகர்ஜோஷியும், உமாபாரதியும் சாட்சியாக இருக்க மசூதி இடிக்கப்பட்டது. அந்த நாள் நவீன இந்தியாவின் துக்க தினம். மும்பை, டெல்லி என பற்றிப் படர்ந்த மதக் கலவரத்தில் நாடெங்கும் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 2 ஆயிரம் பேருக்கும் அதிகம். பாலியல் வல்லுறவு, உறுப்புகளை வெட்டியது, சொத்துக்கள் சூறையாடப்பட்டது... இதற்கெல்லாம் கணக்கில்லை. இந்திய முஸ்லிம்களின் தினவாழ்வை பதற்றத்துக்குள் தள்ளி, அவர்களை நடுங்க வைத்தனர் இந்து தீவிரவாதிகள். ஆனால் அவர்களின் திட்டம் நிறைவேறவே செய்தது. பாபர் மசூதிக்கு முன்பு தேசிய அளவில் அவ்வளவு பெரிய செல்வாக்கு இல்லாமல் இருந்த பா.ஜ.க. அதன்பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்தது. இப்போதும் அக்கட்சியின் துருப்புச்சீட்டு அரசியல் ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்’ என்பதுதான்.

உண்மையில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டப்பட்டுவிட்டது என்பதே உண்மை. 92 டிசம்பர் 6&ல் ராமர்கோயில் இடிக்கப்பட்ட சில நாட்களில் இந்துத்துவ அமைப்பின் தொண்டர்கள் அங்கு போயினர். மசூதியின் இடிபாடுகள் ஒரு குன்றுபோல குவிந்துகிடக்க, அதன் மீது ஒரு கூடாரம் அமைத்து ராமர் சிலை ஒன்றை வைத்து வழிபடத் தொடங்கினர். இப்போது வரை அது ஒரு மினி ராமர்கோயிலாகவே தொடர்கிறது. போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆனால் அயோத்தியின் பதற்றப் பகுதியை பாதுகாக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது மத்திய அரசு. ஏனெனில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் எப்போதும் அங்கு பாதுகாப்புக்காக நிற்கின்றனர். டிசம்பர் 6&ம் தேதி இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்.
மசூதி இடிக்கப்படும் முன்பு அயோத்தியில் 60:40 என்ற விகிதத்தில் வாழ்ந்த முஸ்லிம், இந்து மக்களின் விகிதம் இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. குறிப்பாக வியாபாரம் செய்த இஸ்லாம் மக்கள் மெள்ள, மெள்ள அயோத்தியில் இருந்து அகன்றுவிட்டனர். இதன் உப விளைவாக அயோத்தியில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அங்கு ஒரு நல்ல மருத்துவ, பொறியியல் கல்லூரிகளோ, தொழிற்சாலைகளோ கிடையாது. நிறுவனங்களும் அங்கு ஆரம்பிக்க முன் வருவதில்லை. ‘எங்கிருந்தோ வந்து எங்கள் ஊரின் அமைதியையும், வளர்ச்சியையும் கெடுத்துவிட்டார்கள்’ என்பதே அயோத்தி மக்கள் கற்றுகொண்டிருக்கும் உண்மை.

மதவாதத்துக்கும், வாக்குப் பெட்டிக்குமான உறவை இறுக்கமாக்கிய பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்து முடிந்த நான்கே நாட்களில் அதைப்பற்றி விசாரிக்க லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. மூன்றே மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது நிபந்தணை. ஆனால் எடுத்துக்கொண்ட ஆண்டோ 17. அத்வானியின் ரத யாத்திரை, மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றிச் சென்ற வாஜ்பாய், இடிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி பால்தாக்கரே, கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் (‘ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது?’ &ஜெயலலிதா) இத்தனை ஆதாரங்கள் இருந்தும் இவ்வளவு தாமதம். ஆனாலும் கமிஷனின் அறிக்கையால் குற்றவாளிகளுக்கு எந்தப் பாதகமும் வந்துவிடவில்லை.
‘‘காலத்தை கி.மு., கி.பி. என பிரிக்கிறது உலகம். முஸ்லிம் மக்களைப் பொருத்தவரை ‘இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன், பின்’ என பிரிக்கப்பட்டிருக்கிறது’’ என்ற செய்தியை அழுத்திச் சொல்கிறது அன்மையில் திரைக்கு வந்திருக்கும் ‘மை நேம் இஸ் கான்’ திரைப்படம். இது மற்ற நாட்டு முஸ்லிம்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை ‘பாபர் மசூதி இடிப்புக்கு முன், பின்’ என்றே பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்துத்துவ அமைப்புகள் தொடங்கி வைத்த பழிவாங்கும் அரசியலின் பரிசு... இரு தரப்பில் இருந்தும் வெடிக்கும் குண்டுகள்.

2/8/10

வூடு

ஜஸ்டினின் பள்ளிக்கூடம்

ஜஸ்டின், டீச்சரின் முன்பு கை கட்டி நின்றிருந்தான். அவனது நோட்டு டீச்சரிடம்

இருந்தது. 'டி.ஜஸ்டின் பெர்லின் ராஜ், 3-ம் வகுப்பு, பி- செக்ஷன்' என நோட்டின் மீது எழுதப்பட்டு இருந்தது. அதன் மீது ஒட்டப்பட்ட லேபிளில் இருந்த பொம்மைக்கு மீசை, தாடி வரைந்து இருந்ததைக் கவனித்தான். டீச்சரின் கையில் இருந்த குச்சி ஜஸ்டினைப் பயமுறுத்தியது. ஆனால், அவன் பயந்த மாதிரி டீச்சர் கடைசி வரைக்கும் லேபிளைப் பார்க்கவும் இல்லை. அதைப்பற்றிக் கேட்கவும் இல்லை. நோட்டையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். இவனுக்கு உள்ளுக்குள் லேசான பயம்.

இந்த டீச்சருக்கு 'கண்ணுருட்டி' எனப் பெயர் வைத்தவன் ஜஸ்டின்தான். கையில் குச்சியை வைத்துக்கொண்டு புறங்கையைத் திருப்பச் சொல்லி அடிக்கும்போது, கண்கள் இரண்டையும் உருட்டி உருட்டி மிரட்டுவார். உதடுகள் சத்தமே இல்லாமல் எதையோ முணுமுணுக்கும். அடி மட்டும் இடியாக விழும். இப்போது கண்ணுருட்டி டீச்சரின் கண்களைப் பார்த்தான். ஒன்றும் உருட்டிய மாதிரி தெரியவில்லை. ஆனால், ரொம்பவும் யோசனையாக நோட்டைப் பார்த்தாள். மற்ற பையன்கள் 'சிக்கிட்டல்ல' என்பதுபோல் பழிப்புக் காட்டினார்கள். இத்தனைக்கும் இவன் ஸ்கெட்ச் பேனாவால் கலர் அடித்து வரைந்திருந்தான்.

நேற்று, 'எல்லாரும் அவங்கவங்க வீட்டை வரைஞ்சு எடுத்துட்டு வாங்க' என டீச்சர் சொன்னார். ராத்திரி முழுக்க இதே வேலையாக இருந்து வரைந்து எடுத்து வந்தான். ஆனால், ஏனோ டீச்சருக்குப் பிடிக்கவில்லைபோல. இறுதிக்கும் இறுதியாக டீச்சர் நோட்டை ஜஸ்டினிடம் காட்டி, "இது என்ன?" என்றார்.

"எங்க வீடு டீச்சர்."

"எது... இதுவா?"

"ஆமா டீச்சர்."

ஜஸ்டின் திருத்தமாகப் பதில் சொன்னான். குதிகாலை மேலே உயர்த்தி நோட்டில் வரைந்திருக்கும் வீட்டை ஒருமுறை பார்க்க முயற்சித்தான். உயரம் போதவில்லை. அவனுக்குக் குழப்பமாக இருந்தது. வீட்டை வீடெனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதாம்? டீச்சர் மேஜையில் இருந்த வேறு ஒரு பையனின் நோட்டை எடுத்துக்காட்டி "இது என்ன?" என்றார்.

"பிரகாஷோட வீடு டீச்சர்."

"ஆனா, நீ வரைஞ்சிருக்குறது வீடு இல்ல, தெரியுதா?"

ஜஸ்டினின் நோட்டை அவனது முகத்துக்கு நேரே டீச்சர் திருப்பிக் காட்டினார்.

"இது எங்க வீடுதான் டீச்சர். லீவு விட்டதுல இருந்து நானு, எங்க அம்மா, அப்பா எல்லாரும் இந்த வீட்லதான் இருக்கோம்."

ஒரு பெரிய மௌனத்தைத் தொடர்ந்து பெருமூச்சுவிட்ட டீச்சர், "சரி, போயி உக்காரு." என்றார்.

அப்புறம் எங்கே இருந்து பையன்கள் பாடம் படிக்க? அந்த வகுப்பு முடிவதற்காகக் காத்திருந்தவர்கள், டீச்சர் வாசற்படியைத் தாண்டியதும் தாவிப் பறித்தார்கள் ஜஸ்டினின் நோட்டை. 'எங்கள் வீடு' என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு வரையப்பட்டு இருந்தது.படத்தைப் பார்த்ததும் பையன்களுக்கு குஷி. ஆளாளுக்கு ஒரே சிரிப்பு. ஒருத்தன் மூக்கைப் பொத்திக்கொண்டு சிரித்தான்.

"ஜஸ்டினு... ஒனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லடா. காலையில எந்திரிச்சதும் அப்படியே உக்கார்ந்துக்கலாம்."

"இவன் புளுவுறான்டா... இந்த மாதிரி எங்க தெருவுலகூடதான் ஒரு கக்கூஸ் இருக்குது."

வகுப்பின் அந்தப் பக்கமாக அமர்ந்திருந்த ஒரு சிறுமி ஓடி வந்து நோட்டை எட்டிப்பார்த்து சிரிப்போடு திரும்பி ஓடி, மற்றவர்களிடம் கதை சொல்லத் தொடங்கினாள்.

"போடா... கக்கூஸைப் போயி வீடுங்குற?"

பல்முனைத் தாக்குதல் அவனைப் பதற்றப்படுத்தியது.

"எது கக்கூஸு... இது எங்க வீடுறா."

"வீட்டுக்குள்ளதான்டா கக்கூஸ் இருக்கும். கக்கூஸுக்குள்ளயா வீடு இருக்கும்?"

"எல்லாம் இருக்கும். வேணும்னா, எங்க வீட்டை வந்து பாரு."

"நாத்தம் அடிக்காதா?"

"எங்க உக்கார்ந்து சாப்பிடுவ?"

நோட்டைப் பிடுங்கிப் பைக்குள் வைத்துக்கொண்டான். இனிமேல் இவர்களின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லப்போவது இல்லை என்பதுபோல் எல்லோரையும் முறைத்துப் பார்த்தான். கொஞ்சம் விட்டால் ஜஸ்டின் நிச்சயம் அழுதுவிடுவான்.

உண்மையில் அவனுக்கும் குடி வந்த இந்த மூன்று மாதங்களில் அவனது புதிய வீட்டைப் பிடிக்க வில்லை. பக்கத்தில் வேறு எந்த வீடும் இல்லாமல், விளையாட்டுத் துணைக்குக்கூட யாரும் இன்றிப் பெரிய துயரமாக இருந்தது. ஆனால், அம்மாவுக்கும் அப்பாவுக்கும்தான் வீடு ரொம்பப் பிடித்துவிட்டது. அதிலும் அப்பா, வாழ்க்கையில் தான் மிகப் பெரியதாகச் சாதித்துவிட்டதாக நம்பினார். புது வீட்டுக்கு வந்த பிறகு குடித்துவிட்டுக் கண்ட இடத்தில் விழுந்துகிடக்காமல், பொறுக்கிய பேப்பர் மூட்டையோடும் குவார்ட்டர் பாட்டிலோடும் வீட்டுக்கே வந்துவிடுகிறார். இதில் அம்மாவுக்குப் பெரிய மகிழ்ச்சி. இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் அம்மா முகத்தில் மலர்ச்சி தெரிகிறது. அப்பாவோ, கிட்டத்தட்ட தினமும் இந்த வீட்டைக் கண்டுபிடித்த தனது சாமர்த்தியம்பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்.

ஜஸ்டினின் புது வீடு

மஞ்சள் பூக்கள் பூத்து உதிரும் அடையாறு காந்தி நகர் நிழற்சாலை ஒன்றில், இரண்டு எதிர்எதிர் அடுக்ககங்களுக்கு இடையில் இருந்தது ஜஸ்டின் பெர்லின் ராஜின் வீடு. மாநகராட்சியின் நவீன கட்டணக் கழிப்பறை மற்றும் குளியலறை. வாசல் சுவரின் மேலே மஞ்சள் பெயின்ட் அடித்து கறுப்பு மையால் அழுத்தி எழுதி இருந்தார்கள். இரண்டு குளியல் அறைகள். நான்கு கழிப்பறைகள். எல்லா அறைகளிலும் பைப் மட்டும் இருக்கின்றன. இன்னும் திறப்பு விழா நடக்காததால், தண்ணீர் இணைப்பு தரவில்லை. இதன் பொருட்டு அரசாங்கத்தின் மீது தேவசகாயத்துக்கு நிறையக் கடுப்பு இருந்தது.

"என்னாத்த ...... புடுங்குன கெவர்மென்ட் நடத்துறானுவ? கக்கூஸ் கட்டுனவனுவ தண்ணி வுட வேணாம்? வர்றவன் குண்டி கழுவ எங்கன்னுட்டுப் போவான்?"

"சத்தம் போட்டுப் பேசாதங்கறேன்... நாமளே திருட்டுத்தனமா இருக்கோம். இதுல சட்ட நியாயம் வேற."

"என்னாடி திருட்டுத்தனம்? எவன் வீட்டை உடைச்சுத் திருடினேன் இப்போ? கக்கூஸைக் கட்டிவெச்சு அதுக்கு ஒரு கதவும் போடாம, திறப்பு விழாவும் நடத்தாம இருக்குறது என் தப்பா, அவன் தப்பா?"

"திறப்பு விழான்னா என்னாப்பா?"

"அதாடா ஜஸ்டினு... யாராச்சும் மந்திரிமாருங்க வருவாங்க. இந்தச் சுவத்துக்கும் அந்தச் சுவத்துக்கும் நடுவால கலர் பேப்பரைக் கட்டி கத்தரிக்கோலால வெட்டுவாங்க. அப்புறமா மந்திரி மொத கக்கூஸ் போவாரு. அதை போட்டோ எடுத்து பேப்பர்ல போடுவாங்க."

"கக்கூஸ் போறதையா?"

"ஆமாடா மவனே. அப்புறமா நாமளே அந்த பேப்பரைப் பொறுக்கியாறுவோம்."

கடகடவெனச் சிரித்தார் தேவசகாயம். காலையில் இருந்து பொறுக்கிய காகித மூட்டைகளைப் பிரித்துப் போட்டு, தரவாரியாகக் காகிதங்களைப் பிரித்துக்கொண்டு இருந்த மேரியம்மாளும் சிரிப்பில் இணைந்துகொண்டாள். அவளது கைகள் பொறுக்கி வந்த பேப்பரில் இருந்த சாமிப் படங்களை மட்டும் தனியாக எடுத்துவைத்துக்கொண்டு இருந்தன. அது இந்து சாமியோ, எந்த சாமியோ, சாமிப் படங்கள் அனைத்தையும் கிழித்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தப் படங்களைக் கடைசியில் இருக்கும் கழிப்பறைச் சுவரில் பார்க்கலாம். அதுதான் மேரியம்மாளின் சாமி ரூம்.

ஜஸ்டினோ, சினிமா விளம்பரங்களில் இருக்கும் விஜய் படங்களை மட்டும் குறிவைத்துக் கிழித்துக்கொண்டு இருந்தான். மூன்று மாதங்களில் மூன்று பக்கச் சுவர் களை விஜய் படங்களைக்கொண்டு நிரப்பிவிட்ட அவனது இலக்கு நான்காவது திசையில் இருக்கும் சுவரையும் விஜய்யின் ஆக்ரோஷத்தால் நிரப்ப வேண்டும் என்பதுதான்.

"என்னிக்கு கார்ப்பரேஷன்காரன் வந்து வெரட்டப்போறானோ... தெரியலை. அதுக்குள்ள ஒட்டிருடா ஜஸ்டினு"- மகனை நோக்கிச் சிரித்தாள் மேரியம்மாள்.

அவன் அதைக் காதில் வாங்காமல் விஜய்யைக் கத்தரிப்பதில் கருத்தாக இருந்தான். பழைய வீடாக இருந்தால், ரெண்டே நாட்களில் நூற்றுக்கணக்கான விஜய் படங்கள் அவனுக்குக் கிடைத்திருக்கும். அங்கு பக்கத்து வீட்டில் இருந்த வேல்முருகனிடம் அஜீத் படங்களைக் கொடுத்து, அதற்கு ஈடாக விஜய் படங்களைப் பெற்றுக்கொள்ளும் பண்டமாற்று முறையை மேற்கொண்டு இருந் தான்.

ஜஸ்டினின் பழைய வீடு

மூன்று மாதங்களுக்கு முன்பு வரை இதே அடையாறில் மத்திய கைலாஷ் பக்கத்தில் இருக்கும் பிளாட்ஃபார்ம் ஒன்றில்தான் குடியிருந்தது ஜஸ்டினின் குடும்பம். அங்கு இவர்களையும் சேர்த்து மொத்தம் மூன்று குடும்பங்கள். திடீரென பிளாட்ஃபார்மை ஒட்டியிருக்கும் சுவரில் இந்தக் கடைசியில் ஆரம்பித்து, அந்தக் கடைசி வரைக்கும் அழகிய ஓவியங்கள் வரையப்போவதாகச் சொல்லி, கார்ப்பரேஷன்காரர்கள் விரட்டிவிட்டார்கள். மற்ற இரண்டு குடும்பங்களும் திசைக்கு ஒன்றாகச் சென்றுவிட, கார்ப்பரேஷனில் துப்புறவுத் தொழிலாளியான தனது நண்பர் ஒருவரைப் பிடித்தார் தேவசகாயம். அவரது உதவிதான் கட்டி முடித்து திறக்கப்படாமல் இருக்கும் இந்தக் கழிப்பறை.

"திறந்துவெச்சாலும் இந்த ஏரியாவுல ஒருத்தனும் வர மாட்டான். நீ பாட்டுக்கு ஆளுக்கு ஒரு ரூபாக் காசை வாங்கிட்டு, கழுவிவிட்டமா, சம்பாதிச்சமான்னு சத்தம் போடாம இருந்துக்க. ஓடுற வரைக்கும் ஓடட்டும்" என்றார் நண்பர்.

"வர மாட்டாங்களா? ஏம்ப்பா... அந்த ஏரியாவுல யாருக்கும் கக்கூஸே வராதா?"

"அட நீ வேற. அவங்கல்லாம் வீட்டுக்குள்ளேயே நாலஞ்சு கட்டிவெச்சிருப்பாங்க. அது சரிப்பட்டு வரலைன்னு ஹோட்டல்ல ரூம் போட்டு கக்கூஸ் போவாங்க. நீ பாட்டுக்கும் கவலைப்படாம இரு... போ."

குடும்பத்தோடு வந்தார். இத்தனை நாட்கள் தான் பட்ட சிரமத்துக்கு எல்லாம், கல்வாரி மலையில் இருந்து கருணை பொழியும் கர்த்தர் ஒரு நல்வழியைக் காட்டிவிட்டதாக நம்பி மிகுந்த மகிழ்ச்சியோடு வந்தார் தேவசகாயம். இரண்டு கோணிச் சாக்குகளில் சில பாத்திரங்களோடு இந்த வீட்டுக்குள் நுழைந்த நாள் தான் ஜஸ்டினின் குடும்பம் முதன் முதலாக ஒரு சிமென்ட் கூரைக்குக் கீழே வந்த நாள். ஜஸ்டின் பிறந்த சமயத்தில் சைதாப்பேட்டை கூவம் கரையின் குடிசை ஒன்றுதான் வீடு. மழைக் காலத்தில் வீடு சாக்கடைக்குள் மூழ்கிவிடும். எல்லா நாட்களிலும் வீட்டு வாச லில் விதவிதமான கழிவுகளுடன் கறுப்புத் திரவ நதி கடந்துபோகும். அதற்கும் வந்தது ஆபத்து. மேம் பாலம் கட்டப்போவதாகச் சொல்லி, எல்லாக் குடிசைகளும் ஒரே நாளில் தரை மட்டமாக்கப் பட்டன. அதன் பின் குடிசைக்கும் வழியின்றி பிளாட்ஃபாரமே கதியானது. இப்போதுதான் இந்த 'வீடு'!உள்ளே 'சொர்ர்ர்ர்' என்று சத்தம் கேட்டது. தேவசகாயம் எட்டிப்பார்த்தார். கடைசிக் கழிப்பறையில் ஒண்ணுக்கு அடித்துக்கொண்டு இருந்தான் ஜஸ்டின். ஓடிச் சென்று பொடேரென பொடனியிலேயே போட்டார்.

"குடியிருக்குற வீட்டுக்குள்ள ஒண்ணுக்கு அடிக்கிற... ராஸ்கல்.

"யப்பா... இது கக்கூஸுப்பா!" மறுபடியும் பொடனியிலேயே ஒரு போடு.

"இன்னொரு தடவை இதை கக்கூஸுன்னு சொன்னே, தொலைச்சிருவேன். எவன் வேணும்னாலும் கக்கூஸுன்னு சொல்லட்டும். உனக்கு இது வீடு. புரியுதா?"

அதிலிருந்து ஐயம் திரிபற ஜஸ்டினுக்கும் அது வீடானது. மேரியம்மாளோ, "மொதமொதலா இப்படி ஒரு வீட்டுக்கு வந்திருக் கோம். பால் காய்ச்சணும்" என அடம்பிடித்தாள். அவள் பால் வாங்கப் போன இடைவெளியில் தேவசகாயம் தன் தொழில்நுட்ப அறிவைக் காட்ட முற்பட்டார். கட்டணக் கழிப்பறையின் டாய்லெட் பீங்கான் குழிப் பகுதியில் ஒரு கல்லைப் போட்டு மூடி, அதன் மேலே ஒரு தகரத்தைப் போட்டு சமப்படுத்தினார். இப்போது அது பார்க்க அடுப்பு போலவே இருந்தது. போலவே என்ன... அதுதான் இப்போது அடுப்பு.

"கக்கூஸ்லயா பால் காய்ச்சு வாங்க?" கேட்ட மேரியம்மாளை அக்னிக் கண்களுடன் முறைத்துப் பார்த்தார் தேவசகாயம். தன் தொழில்நுட்ப அறிவு கண்டு கொள்ளப்படாத ஆற்றாமை அவரைக் கடுப்பேற்றியது. கணவனின் கோபத்துக்குப் பயந்து மேரியம்மாள் 'அடுப்பை' மூட்டத் தொடங்கினாள். பாத்திரத்தில் பால் காய்ந்தது. அது பொங்கி வரப்போகும் சமயம் டாய்லெட் பீங்கான் பொடேரென வெடித்துச் சிதற, பதறிப்போனாள் மேரியம்மாள். அவளைவிட அதிகமும் பயந்தார் தேவசகாயம். உலக வரலாற்றில் முதன்முதலாக கழிப்பறையில் பால் காய்ச்சிக் குடிபோகும் பெருமையை ஜஸ்டினின் குடும்பம் ஜஸ்ட் மிஸ் பண்ணிவிட்டது. ஆனாலும், முதல் நாள் வீட்டுக்குள் வந்ததை யாராலும் மறக்க முடியவில்லை.

நடுநிசியில் லத்தியால் தட்டி எழுப்பிவிடும் போலீஸ், கண்களைக் கூசச் செய்யும் வாகனங்களின் ஒளிக்கற்றைகள், ஹாரன், இரைச்சல், உடலை உறிஞ்சும் கொசுக்கள், கழிவுகளின் துர்நாற்றம்... எதுவுமற்ற அந்த முதல் நாள் இரவு ஜஸ்டினுக்கு அமைதியான உறக்கத்தைப் பரிசளித்தது. ஆனால், தேவசகாயத்துக்கும் மேரியம்மாளுக்கும் தூக்கம் வந்தபாட்டைக் காணோம். "சொறி புடிச்சவன் கைக்கு சொறிஞ்சாத்தான் சொரணையா இருக்குமாம்"- என்று சிரித்தார். குறைந்த நகைச்சுவையேகொண்ட அந்த வார்த்தைகளுக்குக் கொஞ்சம் மிகையாகவே சிரித்தாள் மேரியம்மாள். இருவரின் சிரிப்பும் எதிர்பார்க்கப்பட்ட தீண்டலில் சந்தித்தன. தேவசகாயமும் மேரியம்மாளும் முதன்முதலாக நான்கு சுவர்களுக்குள் உறவுகொண்டார்கள். உடல் இன்பத்தின் உண்மை ருசி அவர்களை மிதக்கவைத்தது. ஊரும் பொழுதும் அடங்கிய பின்னிரவில் பயமும், அவசரமும், பதற்றமும் நிறைந்திருந்த பழைய நிமிடங்கள் இருவரின் கண் முன்னால் துளித் துளியாக வந்து போயின.ஏதோ ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி வாசலில் கிடைத்தது என்று ஒரே இடத்தில் இருந்து நான்கைந்து மூட்டை பேப்பரை அள்ளி வந்துவிட்டார் தேவ சகாயம். கூடவே, கையில் ஒரு குவார்ட்டரையும் பிடித்து வந்தார். வந்ததில் இருந்து கடும் போதையில் ஒரே பாட்டு. "நாதர் முனி மேலிருக்கும் நல்ல பாம்பே... உனக்கு நல்ல பெயர்வைத்தது யார் சொல்லு பாம்பே..." விஜய் பாடல்களைப் பாடச் சொல்லி ஜஸ்டின் நேயர் விருப்பம் கேட்க, மேரியம்மாள் அவன் தலையில் தட்டினாள். "புள்ளைய ஏன்டி அடிக்கிற... நீ இங்க வா ராசா. எனக்கு இந்த விஜய் பாட்டெல்லாம் தெரியாது மவனே... நீ சொல்லிக் குடு. அப்பா பாடுறேன்" -ஜஸ்டினுக்கு முகம் எல்லாம் சிரிப்பு.

"வாடா மாப்பிளே... வாழைப் பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா?"

"என்னது, மாப்பிள்ளையா... நான் உன் அப்பன்டா!" - தேவசகாயம் பெருஞ்சிரிப்புச் சிரித்தார். பிறகு, ஜஸ்டினின் இரு தோள்களிலும் இரு கைகளை நேராகவைத்துக்கொண்டு, "ஜஸ்டினு, அந்தா மினுக் மினுக்குனு லைட் போட்டுக்கிட்டு குடியிருக்காங்க பாரு மாடிக்காரங்க. அவங்ககூட மாசம் பொறந்தா, கரன்ட்டு பில்லு, தண்ணி பில்லு, டி.வி. பில்லு எல்லாம் கட்டணும். நம்ம வீட்டுக்கு எதுவும் கெடையாது. எல்லாம் ஃப்ரீ. அதான் உன் அப்பனோட பவரு."

ஜஸ்டின் காலையில் வகுப்பறையில் நடந்ததைச் சொன்னான். யாருமே இதை வீடென நம்ப மறுப்பதைச் சொன்னான். உடனே, தேவசகாயத்துக்குக் கோபம் வந்துவிட்டது. "எவன்டா சொன்னான் இதை வீடு இல்லேன்னு. எவன் வீட்டுலயாவது ஆறு ரூமு இருக்குமா? நம்ம வீட்டுல இருக்குல்ல. நல்லா பெருமையாச் சொல்லு." - அந்தப் பெருமைதான் பெரிய துயரத்தைக் கொண்டுவந்து சேர்த்தது

ஜஸ்டினின் நண்பர்கள்

விளையாட ஆள் இல்லாமல் அலுத்துச் சலித்துப்போன ஜஸ்டின், மெதுவாகத் தன் வீட்டின் பின்பக்கம் இருந்த அடுக்ககச் சிறுவர்களின் விளையாட்டுக்குள் நுழைய முயன்றான். எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. ஜஸ்டினைப் பார்த்த உடனேயே 'போய் பந்து பொறுக்கிப் போடு' என்றார்கள். ஆனாலும், அவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்காவது நாளில் அவன் வயது நண்பர்கள் கிடைக்கவே செய்தனர். ஆனால், அவர்கள் பேசிய இங்கிலீஷ்தான் ஜஸ்டினைப் பாடாய்ப்படுத்தியது. அவர்கள் போகோ, ஜெட்டிக்ஸ், டோரா, புஜ்ஜி என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்க, இந்த ரேஸில் தன்னால் பங்கெடுக்க இயலாமல் போய்விடுமோ எனப் பயந்த ஜஸ்டின், "என்கிட்ட 500 விஜய் போஸ்டர் இருக்கே" என்றான் பார்த்தி என்கிற பார்த்தசாரதியிடம்.

ஒரு விஜய்க்கே எகிறிக் குதிக்கும் பார்த்தி, 500 விஜய் என்றால் விடுவானா? "ப்ளீஸ்டா... எனக்குக் காட்டுடா" என்று கெஞ்சினான். பார்த்தி உள்ளிட்ட மூவர் குழுவுடன் ஜஸ்டின் தன் வீடடைந்தபோது அங்கு மேரியம்மாளும் இல்லை, தேவசகாயமும் இல்லை. "இதுதான் வீடு" என ஜஸ்டின் காட்டியதும் வாசலுடனேயே புறமுதுகு காட்டி ஓடிவிட்டார்கள் அத்தனை பேரும்.

ஜஸ்டினின் புதிய/பழைய வீடு

விடிந்தும் விடியாத அதிகாலையில் ஜஸ்டினின் வீட்டு வாசலில் ஏரியா கவுன்சிலர் வந்து நின்றார். அபார்ட்மென்ட் செகரெட்டரி வந்தார். இன்ஸ்பெக்டர் வந்தார். மாநகராட்சி அதிகாரி வந்தார் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்தார்கள். பேச்சு மூச்சு எதுவும் இல்லை. தேவசகாயத்தின் தலையைப் பிடித்து தரதரவென இழுத்து வெளியே போட்டனர். மேரியம்மாளும் ஜஸ்டினும் பின்னாலேயே ஓடி வந்துவிட்டனர்."டெண்டர் விட்டு, ஏலம் எடுத்து, பணத்தைக் கொட்டிக் கட்டடம் கட்டுனா, குந்துனாப்ல வந்து குடும்பம் நடத்துறியா நீ?"என்றைக்கோ ஒருநாள் எதிர்பார்த்ததுதான். அது இன்றைக்காகிவிட்டது. பேப்பர் மூட்டைகளும் சாமான்களும் பிளாட்ஃபாரத்தில் வீசப்பட்டன. கணவனின் 'கனவு வீடு' அவரது கண் முன்னால் பறிபோவதைக் கண்டு மேரியம்மாள் அழுதாள். ஜஸ்டினுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இவனுடன் நேற்று விளையாடிய பார்த்தி அண்ட் கோ தூரத்தில் கேட்டுக்கு அந்தப் பக்கம் நின்று எட்டி எட்டிப் பார்த்தது. அரை மணி நேரத்தில் எல்லாம் காலி. அதே பிளாட்ஃபார்மில் கொஞ்ச தூரம் தள்ளி இருந்த இடம் ஜஸ்டினின் புதிய குடியிருப்பானது.

மூன்றாவது நாளே, அந்த மாநகராட்சிக் கட்டணக் கழிப்பறைக்குத் திறப்பு விழா நடத்தப்பட்டது. முடி அதிகம்கொண்ட தடித்தவன் ஒருவன் வாசலில் மேஜை போட்டு அமர்ந்திருந்தான். யூரின் மட்டும் 2 ரூபாய், டாய்லெட் எனில் 4 ரூபாய் என சில்லறைகளாக வாங்கிக்கொண்டு இருந்தான். தேவசகாயத்துக்கு நாள்தோறும் அந்தக் காட்சியைக் காணச் சகிக்கவில்லை. தன் வீடு தன் கண் முன்னால் சீரழிவதைக் கண்டு அவர் மனம் நடுங்கியது. மேரியம்மாளுக்குக் கணவனின் பதற்றத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது என்றாலும், அவள் எதுவும் செய்வதற்கு இல்லை.

அன்று வழக்கத்துக்கு மாறாக ஒன்றுக்கு இரண்டு குவார்ட்டர்களைப் பிடித்து வந்தார் தேவசகாயம். முடிந்த வரைக்கும் குடித்தார். ஜஸ்டினையும் அழைத்துக்கொண்டு விறுவிறுவென நடந்தார். அவர்களின் பழைய வீடு வந்தது. வாசலில் நிற்பவனிடம் சில்லறைக் காசுகளைக் கொடுத்துவிட்டு உள்ளே போனார். ஜஸ்டின், விழிகள் அதிர்ச்சியுற உள்ளே பார்த்தான். அவன் ஒட்டிய எந்த விஜய் படங்களும் அங்கு இல்லை. அவற்றின் மீது 'மூலம், பௌத்திரம், விரைவீக்கம்' என்ற மஞ்சள் வண்ண போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மேரியம்மாளின் பூஜை அறையில் மனித மலம் மிதந்துகொண்டு இருந்தது. சிகரெட் துண்டுகள் இறைந்துகிடந்தன. தேவசகாயமும் மேரியம்மாளும் புணர்ந்த அறையின் சுவர்கள் எங்கும் கரிக்கட்டைகளால் வரையப்பட்ட பாலுறவுச் சித்திரங்கள். ஏதேதோ ஆண், பெண் பெயர்கள். அலைபேசி எண்கள். அடுப்படியாகப் பயன்படுத்திய அறை முழுவதும் கழிவுகள். பான்பராக் எச்சில்கள். எங்கும் நாற்றம். தேவசகாயம் அடக்கமாட்டாதவராகப் பெருங்குரலில் அழத் தொடங்கினார். அப்பாவின் அழுகை ஜஸ்டினுக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது.

"யப்பா... ஒண்ணுக்கு அடிக்கட்டுமா?"

"அடிறா... ஒண்ணுவிடாம எல்லா ரூம்லயும் அடிச்சுவிடு."

ஆனால், அவர் அடிக்கவில்லை. தேவசகாயம் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளியே வந்தார். அவருக்கு யார் மூஞ்சியிலாவது ஒண்ணுக்கு அடிக்க வேண்டும்போல் இருந்தது!

-பாரதி தம்பி

நன்றி: ஆனந்த விகடன்

19/6/10

போராடினால் என்ன தப்பு?‘நீங்கள் எங்களோடு இல்லை என்றால் எதிரியோடு இருப்பதாக அர்த்தம்’ என்ற புஷ் கோட்பாடுதான் இப்போது மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தின் தத்துவம். எதிர்ப்பியக்கங்கள் மற்றும் போராடும் மக்களுக்கு ஆதரவாகப் பேசும் அறிவுஜீவிகள் இந்த கோட்பாட்டின் பெயரால்தான் மிரட்டப்படுகின்றனர். ஆனால் இது திடீரென்று இப்போது அமுல்படுத்தப்படும் ஒன்றல்ல. மக்கள் பிரச்னைகள் தலைதூக்கும்போது எல்லாம் இந்த அரசு இத்தகைய கோட்பாட்டையே கையில் எடுக்கிறது.

முதலில் இவர்களுக்கு போராட்டம் என்பதே பிடிப்பது இல்லை. ‘போராடுவதே சட்டவிரோதமானது’ என்று நினைக்கின்றனர். போலீஸ், நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் உறுப்புகளாக செயல்படுபவர்களும், அரச மனநிலையை சுவீகரித்துக் கொண்டவர்களாக இருக்கும் மிடிள்கிளாஸ் மக்களும் போராட்டங்களை வெறுக்கின்றனர். போராட்டம் என்பது போக்குவரத்துக்கு இடையூரானதாகவும், போராடுபவர்கள் வேலையற்ற முட்டாள்கள் எனவும் சித்தரிக்கப்படுகிறது. பொதுப்புத்தியும், அரசப் புத்தியும் ‘அமைதியான சூழலை’ வேண்டி நிற்க, போராட்டக்காரர்கள் மட்டுமே இந்த அமைதிப் பூங்காவில் சத்தம் போடுபவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால் போராட்டம் என்பதே எப்படி தவறான ஒன்றாக இருக்க முடியும்?

மறுக்கப்படும் உரிமைகளுக்காக போராடுவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை அம்சம். அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாத சூழலில், மக்கள் தங்களின் எதிர்ப்பை போராட்டங்கள் வழியாகத்தான் காட்ட முடியும். ஆனால் அரசும், அதன் அடியாட்களாக செயல்படும் போலீஸும், ராணுவமும் ‘போராடுவதே தப்பு’ என நினைக்கிறது. போராட்டத்துக்கு எதிராகவும், போராடும் மக்களுக்கு எதிராகவும் போலீஸ் மற்றும் ராணுவத்தின் மனநிலையே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. உடனே, ‘ரயிலை குண்டு வைத்து தகர்ப்பதும் போராட்டம்தானா?’ என்று எவரேனும் கேட்கக் கூடும். எதிர்ப்பியக்கம் ஒன்று எளிய மக்களைப் பாதிக்கும் இத்தகைய வன்முறை வடிவங்களை கைகொள்ளும் என்றால், அரச வன்முறையை எதிர்த்துப் போரிடும் தார்மீக தகுதியை அது இழந்துவிடுகிறது. எனவே மக்களுக்கு எதிரான வன்முறையை எவர் செய்தபோதிலும் மோசமானதே. ஆனால் இந்த அரசு எளிய மக்களின் சாதாரணப் போராட்டங்களை எப்படி எதிர்கொள்கிறது?

வடகிழக்கிலும், காஷ்மீரிலும், தெலுங்கானாவிலும், சட்டீஸ்கரிலும் மட்டுமல்ல... குடிநீர் வேண்டி, சாலைவசதி கேட்டு, பேருந்து வசதிக் கோரி நாள்தோறும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தபடியேதான் இருக்கின்றன. தலித் மக்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டுமானப் பணியாளர்கள், முஸ்லிம் மக்கள் என சமூகத்தின் எல்லா வகையினரும் ஏதோ ஒரு திசையில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இவற்றை இந்த அரசு எப்படி எதிர்கொள்கிறது? குடிதண்ணீர் கேட்டு போராடினால் தண்ணீர் லாரி வருவதற்குப் பதில் போலீஸ் வேன் வருகிறது. சாலைவசதி, ரேசன் அரிசி, தொழிலாளர்களின் கூலி உயர்வு என எந்தப் பிரச்னைக்காகப் போராடினாலும் அரசாங்கம் போலீஸை அனுப்பி வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்காக பள்ளிக் குழந்தைகள் சாலை மறியல் செய்தபோது அதற்கும் போலீஸ் வேன்தான் சென்றது. விவசாயிகள், உதிரித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் போலீஸால் அச்சுறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

போலீஸ் தனது லத்திக்கம்பின் கீழ் சமூகத்தின் அனைத்து வகையினரையும் அடக்கி ஒடுக்க நினைக்கிறது. இதை எதிர்க்க வேண்டிய மக்கள் மனமோ, அடிப்பது போலீஸ் குணம் என்றும் அடிவாங்கி அடங்கிப் போவதுதான் மக்களின் குணம் என்றும் நினைக்கிறது. இதற்கு துலக்கமான உதாரணம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸ் நடத்திய வெறியாட்டம். ‘போலீஸ்னா அடிக்கத்தான் செய்வான்’ என்ற வசனத்தை அப்போது நாம் நிறைய கேட்டோம். ஆனால் ‘போலீஸ் உங்கள் நண்பன்’ என்று எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிம் எழுதி வைத்திருக்கின்றனர். உண்மையில் போலீஸ், மக்களின் நண்பனா? இல்லை, அவர்கள் அதிகார வன்முறையில் ஊறித் திளைத்த இந்த அரசின் அடியாள்படை.

உயர்நீதிமன்ற கலவரத்தில் வக்கீல்களை சமூக விரோதிகளைப்போலவும் பொறுக்கிகள் போலவும் சித்தரித்தது போலீஸ். ஆனால் யோசித்துப் பாருங்கள். எந்த போலீஸாவது பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதுண்டா? தெருவோர தள்ளுவண்டி வியாபாரியிடம் எந்த போலீஸ் காசு கொடுத்து பழம், காய்கறி வாங்குகிறார்? லாக்&அப் கொலைகள், லஞ்சம், ரோந்து என்ற பெயரில் வழிப்பறி, பாலியல் வன்முறை என்று தமிழக போலீஸ் பொறுக்கித்தனத்தின் கூடாரமாக இருக்கிறது. சிவகாசி ஜெயலட்சுமி முதல் திண்டிவனம் ரீட்டாமேரி வரைக்கும் நாடறிந்த உதாரணங்களே ஆயிரம் சொல்ல முடியும். தண்டிக்கப்பட வேண்டிய இந்த கிரிமினல் குற்றவாளிகள்தான் சட்டத்தின் காவலர்களாக இருக்கின்றனர். இவர்களை வைத்துதான் இந்த அரசு மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் அடக்கி ஒடுக்குகிறது.

இந்தியா ஜனநாயக நாடு என்றும், நீதிமன்றம், சட்டமன்றம், நிர்வாகம், பத்திரிகைகள் என்ற தூண்கள் இந்த ஜனநாயகத்தை தாங்கி நிற்பதாகவும், ஒன்றில் தவறு நடந்தால் இன்னொரு இடத்தில் மக்கள் நிவாரணம் பெறலாம் என்பதுதான் குடியாட்சியின் சிறப்பு என்றும் கூறுகிறார்கள். ஆனால் உயர்நீதிமன்ற கலவரத்தில் போலீஸின் தடியாட்சியை சட்டமன்றம், நீதிமன்றம், ஊடகங்கள் அனைத்தும் ஓரணியில் நின்று நியாயப்படுத்தின. சுப்பிரமணியன் சாமியின் முகத்தில் வழிந்த முட்டைக்கறையினால் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக அலறிய யாரும், நூற்றுக்கணக்கான வக்கீல்கள் சிந்திய ரத்தத்தால் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக பேசவில்லை, எழுதவில்லை. வழியும் ரத்தம் யாருடையது என்பதிலிருந்தே அது புனிதமா, அசிங்கமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இதே வகையினர்தான் இப்போது ‘பசுமை வேட்டை நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான ஏற்பாடு’ என்று கண்களை மூடிக்கொண்டு நம்பச் சொல்கின்றனர்.

அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு வரலாற்றில் நீண்ட நெடிய பாத்திரம் உண்டு. இயக்கமாக மட்டும் இல்லை, தனிநபராகவே அநீதிகளை எதிர்த்து நிற்போர் எல்லா காலங்களிலும் இருக்கிறார்கள். உண்மையில் போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஓர் இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. அது அவ்வாறு விரிவடைந்து குடும்ப உறுப்பினர்களுக்குள் சமமின்மை, சாதி பேதம், வர்க்க பேதம் என முரண்பாடுகள் முன்னேற்றமடைந்து மனம் தன்னைத்தானே கேள்வி கேட்கிறது. உச்சத்தில் சொல்லிலும், செயலிலும் அது வெளிப்படுகிறது. சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும்.

உண்மையில் போராட்டம் என்பது மகிழ்ச்சியான அனுபவம். நீங்கள் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யாரோ பத்து பேர் சாலையோரத்தில் நின்று வேலை வெட்டியில்லாமல் கத்திக் கொண்டிருப்பதாக நினைத்து கடந்து செல்லலாம். ஆனால் அவர்கள் அப்படி 'கடந்து செல்பவர்களுக்காகவும்' சேர்த்துதான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தினவாழ்வின் நெருக்கடிகள் அழுத்தும்போது எல்லோராலும் போராட்டங்களில் பங்கெடுக்க வீதிக்கு வர முடியாது என்பது யதார்த்தமான் உண்மைதான். ஆனால் அதையெல்லாம் மீறித்தான் போராட வேண்டியிருக்கிறது. வீட்டில், வீதியில், பேருந்தில், அலுவலகத்தில் என எங்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அல்லது சந்தர்ப்பங்களை வலிந்து உருவாக்கிக்கொண்டேனும் போராட வேண்டும். சொகுசான வாழ்க்கைக்கு சிறு இடையூறும் இல்லாமல் போராட்டம் என்பது சாத்தியம் இல்லை. அதேநேரம் அந்த இடையூறு நமது இருப்பை சிதைத்துவிடாத ஒன்றாக இருக்க வேண்டுமானால் அந்த எல்லை எது என்பதை சொந்த அனுபவத்தில் சுய பரிசோதனையின் மூலம்தான் கண்டறிய முடியும், தர்க்கங்களிலும், பேச்சிலும் அல்ல!

ஒரே ஒரு முறை அப்படியான ஒரு போராட்டத்தில் பங்கெடுக்க வீதியில் இறங்குங்கள். முதல் தடவை தயக்கமாக இருக்கும். ஆனால் அந்த போராட்டம் முடிந்ததும் உங்கள் மனதுக்குள் கம்பீரமும், பெருமித உணர்வும் பொங்கும். அதுதான் மக்கள் போராட்டங்களின் உண்மையான வெற்றி. நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்!

12/6/10

ஊனா கட்டுரைகளும், உழைப்பால் உயர்ந்த உத்தமர்களும்!

வெற்றிகளைத் தேடி ஓடுகிறது உலகம். வெற்றி பெறுவது மட்டுமே இந்தப் பூமியில் உயிர் தரித்திருப்பதற்கான தகுதி என்றாக்கப்பட்டுவிட்டது. வெற்றியாளர்கள் சலிக்கச் சலிக்கக் கொண்டாடப்படுகின்றனர். முன் உதாரணங்கள், முதல் பரிசுகள், கோப்பைகள், பொன் மொழிகள் என ஊடகங்களில் தினம், தினம் வெற்றிச் செய்திகள் ஊற்றைப் போல பெருகி வழிகின்றன. வெற்றிபெற்றவன் மட்டும்தான் வாழத் தகுதியானவனா? தோல்வி வாழ்வின் பகுதி இல்லையா? ‘வலியது வெல்லும்’ என்றால் யார் வலியவர், அவருக்கு அந்த வலிமை எங்கிருந்து வந்தது, மற்றவருக்கு அந்த வலிமை வராமல் போனதன் சமூகக் காரணிகள் என்ன?அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்குமான திறமையின் விகிதம் மாறக்கூடியதே. இதன் அடிப்படையில் வெற்றியின் விகிதமும் மாறக்கூடிய ஒன்றுதான். ஆனால் சமமின்மையுடன் இயங்கும் இச்சமூகத்தில் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதில் இருந்தே இதை நாம் அணுக வேண்டும். வாய்ப்புகள் சமமாக கிடைக்காத போது எப்படி வெற்றிகள் சமமாக இருக்கும்? அதனால் ஒரு நபரின் வெற்றி அல்லது தோல்வியை அந்த தனிநபரின் திறமை/திறமையின்மையுடன் மட்டும் சுருக்கி புரிந்துகொள்ளாமல் அதன் பின்னால் இருக்கும் சமூகக் காரணிகளைப் பார்க்க வேண்டும். ‘ரிலையன்ஸ்’ அம்பானி தொடங்கி, ‘எஸ்.ஆர்.எம்.’ பச்சைமுத்து, ‘காருண்யா’ பால் தினகரன் எல்லோரும் திறமையின் மூலம் மட்டும்தான் மேலே வந்தார்களா?

ஆனால் இத்தகையவர்களை ‘தன்னம்பிக்கை ஐகான்’ ஆக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அம்பானி, அரபு நாடுகளுக்கு வியாபாரம் செய்யச் சென்றபோது அந்நாட்டு நாணயங்களில் வெள்ளி அதிகமாக இருப்பதைக் கண்டார். உடனே நாணயங்களில் இருந்து வெள்ளியைப் பிரித்து எடுத்து விற்று அதிகம் லாபம் பார்த்தார். இதை ‘அந்த நாட்டின் அசட்டுத்தனத்தை அம்பானி சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டதாக’ எழுதினார் என்.சொக்கன். இப்படி, அயோக்கியத்தனத்தை சாமர்த்தியம் என்று முன்னிருத்தும் இவர்கள் இதையேதான் அடுத்தத் தலைமுறைக்கும் போதிக்கின்றனர். இதற்கு ‘தன்னம்பிக்கை’ என்ற பிராண்ட் மிக தோதாக இருக்கிறது.

‘உன்னையே நீ நம்பு’ என்ற டைப்பிலான ‘ஊனா’ கட்டுரைகளுக்கு எப்போதுமே நம் ஊரில் கிராக்கி அதிகம். எல்லா காலகட்டத்திலும் ‘ஓ இளைஞனே’ என அறைகூவி அழைத்து சொம்புடன் தீர்ப்பு சொல்ல நாட்டாமைகள் தயாராக இருக்கின்றனர். தன்னை நம்புவது அப்படி ஒன்றும் குற்றமான காரியம் இல்லைதான். ஆனால் தன்னம்பிக்கையின் அர்த்தம் ‘பிறரை நம்பாதே’ என்பதாக மாற்றப்பட்டிருப்பதுதான் பிரச்னை. ‘உன்னை மட்டும் கவனி. சுற்றத்தைப் பார்க்காதே, வேறு எதையும் கவனிக்காதே’ என்பது இதன் உண்மை அர்த்தம். தன்னம்பிக்கை சாமியார்களும், யோகா, தியான வகையறாக்களும் போதிப்பது இதைத்தான். ‘இந்த உலகமே பிரச்னைமயமாக இருக்கிறது. அதில் இருந்து தப்பித்து நிம்மதியாக இருக்க வேண்டுமானால் உங்கள் கண்களை இறுக்கி மூடிக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் கூட ஒருமுறை கோயம்புத்தூரில் யோகா, தியான வகுப்பில் கலந்துகொண்டு ‘பிரச்னையில் இருந்து விலகி இருக்கும்’ டெக்னிக் பற்றி கற்றுக்கொண்டார். கண்களை மூடிக்கொண்டால் இருட்டு விலகிவிடுமா என்ன?

மக்களை அரசியல் நீக்கம் செய்து வெறும் கறிக்கோழிகளாக மாற்றி தன்னம்பிக்கை தீவனம் இடும் இந்த வேலையை தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாகவே அமுல்படுத்தியவர் எம்.எஸ். உதயமூர்த்தி. உலகமயமாக்கல் இந்தியாவில் அதிவேகமாக பரவத் தொடங்கிய காலத்தில், அரசியல் பேசாத ‘வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறத் தெரிந்த’ ஒரு தலைமுறை தேவைப்பட்டது. அதைக் கச்சிதமாக நிறைவேற்றித் தந்த தன்னம்பிக்கை தளகர்த்தர்களில் உதயமூர்த்தியும் ஒருவர். ‘எல்லாத்தையும் பொத்திக்கோ.. நீ மட்டும் முன்னேறு’ இதுதான் இவர்கள் கற்றுத்தருவதன் கச்சா. ஆனால் அப்படி ‘தனியாக’வெல்லாம் முன்னேற முடியாது என்பதே உண்மை. ஏனெனில் எல்லா மனிதர்களும் இந்த சமூகத்தின் உறுப்புகள். உண்ணவும், உடுக்கவும், சிந்திக்கவும், செயல்படுத்தவும் பலபேரின் கூட்டு நடவடிக்கையே காரணமாக இருக்கிறது. யாருமற்ற தனித்தீவில் இருக்கிறீர்கள் என்றால் கூட அங்கு நீங்கள் உயிர் வாழ இயற்கை வளங்களின் துணை அவசியம்.

ஆனால் இவற்றை மறந்து ஏன் நாம் தனிப்பட்ட வெற்றிகளை மட்டுமே விரும்புகிறோம்? தன்னம்பிக்கை செய்திகள் ஏன் பெரும்பான்மை மக்களை ஈர்க்கின்றன? தமிழகத்தின் ஆதிக்கம் செய்யும், ஆதிக்கத்துக்கு ஆளாகும் அனைத்து சாதியினருமே தாங்கள் ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரையாக இருந்தோம் என வெற்றி பிளாஷ்பேக் சொல்லவே விரும்புவது ஏன்? ‘எங்கள் சாதி உழைக்கும் வர்க்கமாக இருந்தது’ என்ற உண்மையைச் சொல்வதைத் தடுப்பது எது? எளிமையான பதில், நாம் எல்லோரும் தனிச் சொத்துரிமையின் உபரி விளைச்சல்களாக மாறி விட்டிருக்கிறோம். யாரிடம் துட்டு அதிகம் என்பதை வைத்தே சமூக மதிப்பீடுகள் கட்டமைக்கப்படுகின்றன என்பதால் font converter மாதிரி வெற்றி, தோல்வி, தன்னம்பிக்கை, கௌரவம் அனைத்தும் இந்த தனிச்சொத்து உலகிற்கேற்ப convert ஆகின்றன.

அதனால்தான் எவ்வித வசதியும், வாய்ப்பும் அற்ற உள்ளடங்கிய கிராமங்களில் இருந்து முதல் தலைமுறையாய் படித்து முன்னேறி வரும் ஆண்கள் மற்றும் பெண்களில் பல பேர் வெகு எளிதாக இந்த தன்னம்பிக்கை பெட்டிக்குள் சிறைபட்டுப் போகின்றனர். தன்னம்பிக்கை ஒன்றுதான் தன்னை முன்னேற்றியது என்று கண்களை மூடிக்கொண்டு நம்பும் இவர்கள் தன்னை சூழ்ந்திருக்கும் இதர காரணிகளை மறுத்து வெகு எளிதாக மிடிள்கிளாஸ் மனநிலைக்கு மாறிப்போகின்றனர். சிறு வயது வறுமையும், ஒருவேளை உணவுக்கே சிரமப்பட்ட கடந்த காலங்களின் கதைகளும் இதற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. ஆனால் அவர்களை மேல் எழும்ப விடாமல் அழுத்திய சமூகத்தின் அனைத்து வர்க்க, சாதி, பால், ஆதிக்க பேதங்களும் இப்போதும் போஷாக்குடன் உயிர் வாழ்கின்றன என்பதையும், அவை ஆயிரமாயிரம் கிராமத்து பெண்களையும், ஆண்களையும் முன்னேற விடாமல் ஒடுக்குகிறது என்பதையும் மறந்துவிடுகின்றனர். இதை மறுவளமாகப் பார்த்தால் இப்படி சமூகம், சுற்றியுள்ளவன், பக்கத்தில் உள்ளவன் என சுற்றம் பார்க்காமல் தன்னை மட்டுமே நம்பி, தன் நலன் மட்டுமே பேணுவதால்தான் அவர்கள் தொடர்ந்து ‘வெற்றியாளர்களாக’ இருக்கின்றனர். ஆகவே நாம் கட்டுரையை முதலில் இருந்து தொடங்குவோம். வெற்றியாளன் என்பவன் யார், வெற்றி பெறுவதற்கு உரிய வலிமை அவனுக்கு எங்கிருந்து வந்தது?

11/6/10

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

இந்தியாவுக்குள் சத்தமில்லாமல் ஓர் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 644 கிராமங்கள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. சுமார் 70 ஆயிரம் மக்கள் துப்பாக்கி முனையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடி ஆதிவாசிகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டு காடுகளுக்குள் பதுங்கி வாழ்கின்றனர். அவர்களைத் தேடி 2 லட்சத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் அலைந்து திரிகின்றனர். காடுகளை அழித்து விமானத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கேட்டுக் கேள்வியில்லாத கொலைகள், கற்பழிப்புகள், அத்துமீறல்கள், துப்பாக்கிச் சூடுகள்... அனைத்துக்கும் இந்திய அரசு வைத்திருக்கும் பெயர் ‘ஆபரேஷன் பசுமை வேட்டை’. சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மத்திய இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அறிவிக்கப்படாத உள்நாட்டு யுத்தத்தின் கொடூர முகம் இதுதான்.என்னதான் நடக்கிறது மத்திய இந்தியாவில்? ஏன் அப்பகுதி பதற்றமாகவே இருக்கிறது? ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் தண்டகாரன்யா காட்டுப் பகுதிதான் பிரச்னையின் மையம். அடர் காடுகளும், மலைகளும் சூழ்ந்துள்ள இந்தப் பிராந்தியத்தில் பாக்சைட், நிலக்கரி, தங்கம், வைரம், கிரானைட், இரும்புத் தாது என அற்புதமான தாதுப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த தாதுக்களை வெட்டி எடுப்பதற்காக பெரு நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. அந்த நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த மலைப் பகுதியையும் கூறுபோட்டுக் குத்தகைக்கு விட அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. ‘வேதாந்தா’ என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு, 40 கி.மீ. நீளமுள்ள ஒரு மலையை குத்தகைக்கு விட்டிருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய். ஆனால் இதற்காக இந்திய அரசு பெற்றுக் கொள்ளவிருக்கும் ராயல்டி தொகை வெறும் 7 சதவிகிதம்.

உலகச் சந்தையில் 10 ஆயிரம் ரூபாய் விலை போகும் ஒரு டன் இரும்புத் தாதுவை ஜிண்டால், எஸ்ஸார் போன்ற நிறுவனங்களுக்கு வெறும் 27 ரூபாய்க்குத் தருகிறது அரசு. இப்படி தண்டகாரன்யா வனப் பகுதியின் தாது வளங்களை வெட்டி எடுப்பதற்காக சுமார் 200 ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. மிகச்சிறிய மாநிலமான ஜார்கண்ட்டில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இது எதுவுமே அந்த மண்ணின் பூர்வீக குடிகளான பழங்குடி மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது வளங்கள் கொள்ளையிடப் படுகின்றன.இவை அனைத்தையும் எதிர்த்துக் கேட்காமல் ‘சரிங்க எஜமான்’ என அடிபணிந்துப் போயிருந்தால் எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால் அந்த பழங்குடி மக்கள் வீரத்தோடு எதிர்த்துப் போரிடத் தொடங்கவே பிரச்னை பெரிதாகியது. மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகளும் ஆயுதங்களைப் பிரயோகித்தனர். உடனே அரசு பழங்குடியினர், மாவோயிஸ்ட்டுகள் இரு தரப்பையும் ஒரே தராசில் நிறுத்தியது. இருவரையும் ‘உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எதிரான சக்திகள்’ என்று வரையறுத்தது. அதன் பொருட்டே இப்போது தண்டகாரன்யாவின் காடுகளுக்குள் உள்நாட்டு யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

ஆப்கன் போரின்போது கூட 50 ஆயிரம் படையினரைதான் ஆப்கானிஸ்தானில் இறக்கியது அமெரிக்கா. ஆனால் இந்திய அரசு இப்போது மத்திய இந்திய மாநிலங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான ராணுவத்தினரை இறக்கிவிட்டிருக்கிறது. சொந்த மக்களின் மீது நடத்தப்படும் இந்த உள்நாட்டு யுத்தத்துக்கு இந்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை 7,300 கோடி ரூபாய்.

‘உள்நாட்டுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் இந்தப் போர் நடத்தப்பட்டாலும் உண்மையாக இந்த யுத்தம் யாருக்காக நடத்தப்படுகிறது என்பதை சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங், அவரது வாயாலேயே நாடாளுமன்றத்தில் சொன்னார். ‘நாட்டின் கனிம வளம் மிகுந்திருக்கும் பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்குவது என்பது முதலீட்டுச் சூழலை பாதிக்கும்’ என்றார் பிரதமர். ஆக, மக்களின் எதிர்ப்பற்ற ஒரு முதலீட்டுச் சூழலை உருவாக்கித் தருவதறாக ராணுவத்தைக் கொண்டு அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பே பழங்குடி மக்களின் போராட்டங்களை நசுக்க ‘சல்வா ஜூடும்’ என்ற பெயரிலான கூலிப்படையை உருவாக்கியது சட்டீஸ்கர் அரசு. அதிகாரப்பூர்வமற்ற முறையில் அரசிடம் இருந்து சம்பளம் வாங்கும் இவர்களும் பழங்குடி மக்கள்தான். ஆனால் அந்த மக்களுக்குள் இருக்கும் சாதி போன்ற இயல்பான பிரிவினைகளை அதிகப்படுத்தி அவர்களின் ஒரு பகுதியினரைப் பிரித்து 2004-ல் இந்த சல்வா ஜூடும் உருவாக்கப்பட்டது. மலையின் நுணுக்கங்களும், மக்களின் பழக்கங்களும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் இவர்களை வைத்தே பழங்குடி மக்களை காடுகளை விட்டு விரட்டுகிறது ராணுவம். சல்வா ஜூடும் என்ற இந்த அரசக் கூலிப்படை நடத்தியத் தாக்குதலால் கடந்த 4 ஆண்டுகளில் 3 லட்சம் மக்கள் பூர்வீக கிராமங்களில் இருந்து காடுகளுக்குள் துரத்தப்பட்டிருக்கின்றனர்.
வீடுகளும், வயல்களும் எரிக்கப்படுகின்றன. 3 வயது பிஞ்சுக் குழந்தையின் ஐந்து விரல்களையும் வெட்டியுள்ளனர். 70 வயது மூதாட்டி, மார்பகங்கள் அறுக்கப்பட்டு தெருவோரம் பிணமாகக் கிடக்கிறார்.
‘‘நாங்கள் காடுகளுக்குள் மரங்களுடன், விலங்குகளுடன் வாழும் பழங்குடிகள். எங்களுக்கு ஆயுதமும் தெரியாது. அரசாங்கமும் தெரியாது. எங்களுக்குத் தெரிந்த அரசாங்கம் என்பது போலீஸ், ராணுவம், காண்ட்ராக்டர், ரியல் எஸ்டேட், கம்பெனிகள் இவை மட்டும்தான். எந்தவித அரசுத் திட்டங்களும் எங்களை சீண்டியதே இல்லை. ஆனால் இப்போது நாங்கள் தெய்வமாக வழிபடும் மலையை கற்பழித்து முதலாளிகளுக்கு விற்கிறார்கள். அதை எதிர்த்தால் எங்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. நாங்கள் அமைதியின் பிள்ளைகள்தான். ஆனால் உங்கள் குடும்பம், உங்கள் மனைவி, உங்கள் பிள்ளைகள், உங்கள் நிலம், உங்கள் காடு, உங்கள் நீர் அனைத்தும் உங்களிடம் இருந்து வன்முறையாகப் பிடுங்கப்படும்போது என்ன செய்வீர்கள்?’’ கோபமாகக் கேட்கிறார்கள் தண்டகாரன்யா மலைக்குள் பதுங்கி வாழும் பழங்குடி மக்கள்.

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழ் மக்களைப் போல சட்டீஸ்கரில் பழங்குடி மக்கள் பூர்வீக வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு முகாம்களில் குடி வைக்கப்பட்டுள்ளனர். தந்தேவாடா மாவட்டத்தில் மட்டும் மூன்று பெரிய முகாம்கள் இயங்குகின்றன. இவற்றை சல்வா ஜூடும் கண்காணிக்கிறது. சட்டீஸ்கர் மாநில டி.ஜி.பி. விஸ்வரஞ்சன், ‘இலங்கை ராணுவத்தின் இறுதி வெற்றிதான் எங்கள் வழிகாட்டி’ என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். எதிர்ப்பவர்கள் அத்தனை பேரையும் ஆயுதங்களின் முனையில் அடியோடு நசுக்குவது என்ற இலங்கை போர் வெற்றியின் ஃபார்முலாவை இங்கேயும் அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையும், நாட்டின் இயற்கை வளமும் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னைப்பற்றி பிரதான அரசியல் கட்சிகள் எவையும் வாய் திறக்கவில்லை. இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மக்களின் மனங்களில் கடந்த பல ஆண்டுகளாக அச்ச உளவியல் விதைக்கப்பட்டிருகிறது. அங்கு எப்போதும் பதற்றம் குடி கொண்டிருக்கிறது. அவற்றில் இருந்து எந்தவித பாடத்தையும் கற்றுக் கொள்ளாத இந்தியா இப்போது மறுபடியும் மத்திய இந்தியாவை பதற்றப் பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு பிராந்தியத்தில் ஒரு முறை துப்பாக்கி ஏந்திய மனிதர்கள் புகுத்தப்பட்டால் அதை எளிதில் நீக்கிக்கொள்ள முடியாது. நமது முந்தைய வரலாறுகள் இதையே நமக்குக் காட்டுகின்றன. ஆனாலும் அரசு அமைதியான ‘முதலீட்டுச் சூழலை’ உருவாக்கித் தருவதற்காக தம் சொந்த மக்களுக்கு எதிராகவே இந்த யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

‘அரசு, மாவோயிஸ்ட் தாக்கம் உள்ளப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தவே விரும்புகிறது. ஆனால் ஒரு சாலை அமைத்தால் உடனே அவற்றை குண்டு வைத்துத் தகர்த்துவிடுகிறார்கள். இப்படி செய்தால் எப்படி வளர்ச்சித் திட்டங்களை அமுல் படுத்த முடியும்?’ என்று கேகிறார் ப.சிதம்பரம். ஆனால், ‘அந்த சாலை மக்களுக்காக அல்லாமல் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டால் அதை அழிப்பதில் என்ன தவறு?’ என்று திருப்பிக் கேட்கிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.

அதேநேரம் மாவோயிஸ்ட்டுகளின் மனித உரிமை மீறல்களை நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களே கடுமையாக எதிர்க்கிறார்கள். லால்கர் பகுதியில் சுமார் 1000 சதுர கி.மீ. நிலப் பகுதியைக் கைப்பற்றிய மாவோயிஸ்ட்டுகள் அதை ‘விடுவிக்கப்பட்டப் பகுதி’ என்று அறிவித்த பிறகு மக்கள் மீதான ராணுவத்தின் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்தது.

‘‘இது தவறு. அந்த மக்களின் குரலாக மாவோயிஸ்ட்டுகள் இருக்க விரும்பினால் முதலில் அவர்களின் அரசியல் அஜண்டா என்ன என்பதை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும். அப்படி செய்யாமல் மக்களின் பிரதிநிதிகளாக தங்களை அறிவித்துக்கொள்வதால் அரசப் படைகளின் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் சந்திக்கப்போவது சாதாரண மக்கள்தான். மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் வளம் மிக்க கற்பனையான எதிர்காலத்துக்காக சட்டீஸ்கரின் சாதாரண பழங்குடி மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க முடியாது’’ என்று அப்போது கருத்துச் சொன்னார் மறைந்த மனித உரிமைப் போராளி பாலகோபால்.சரி, தவறுகளைத் தாண்டி தங்களுடன் களத்தில் நின்பவர்கள் என்ற அடிப்படையில் மக்களுக்கு மாவோயிஸ்ட்டுகளின் மீதான பிடிப்பு அதிகரித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பசுமை வேட்டை தொடங்கும்போது மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை வெறும் 20 ஆயிரம் பேர்தான். ஆனால் இப்போது காடுகளுக்குள் மறைந்து வாழும் மக்கள் தாங்களாகவே முன்வந்து ‘மக்கள் போர்ப்படை’ என்றும், ‘மாவோயிஸ்ட்டுகள்’ என்றும் தங்களை அறிவித்துக்கொள்வதால் போராளிகளின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

காஷ்மீரிலும், வடகிழக்கிலும் நடப்பவை தனிநாடு கேட்கும் போராட்டங்கள். ஆனால் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் தங்களின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்த்து நிற்கிறார்கள். வெள்ளையர்களை எதிர்த்து நடத்தப்பட்டதற்கு பெயர் சுதந்திரப்போர் என்றால் இந்த கொள்ளையர்களை எதிர்த்து நடைபெறும் போருக்கும் சுதந்திரப் போர் என்றே பெயரிடலாம்.

22/4/10

தீராக் கனவு!

நேற்றைய தூக்கத்தில் பால்ராஜுக்கு நான்கு கனவுகள் வந்தன. திட்டமிட்டே அந்தக் கனவுகளை அசைபோடத் தொடங்கினான். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இந்தப் பின் மதிய நேரம் அதற்கு உகந்ததாக இருந்தது. நிதானமாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, ஜெராக்ஸ் இயந்திரத்தின் மீது கிடந்த தாளை எடுத்து அதற்குரிய இடத்தில் பொருத்தினான். தொலைபேசிகளை ஒழுங்குசெய்துவிட்டு, கால்களில் புண் இருந்த பகுதி நாற்காலியில் படாதவாறு மடக்கி உள்ளே வைத்துக் கொண்டு சாவகாசமாக இரண்டாவது கனவுக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டான்.

நீண்டு விரிந்த நதி. உதிர்ந்த மஞ்சள் இலைகள் ஆற்றில் விழுந்து, நதிப்போக்கில் ஓடின. ஆற்றின் ஒரு முனையில் பால்ராஜ் குதித்திருந்தான். சற்றுத் தள்ளி மிதந்த கரும்பச்சை நிற இலை, அவனை வசீகரித்தது. அதை நோக்கி நீந்த முயன்றபோது பனிக்கட்டிக்குள் சிக்கிக்கொண்டதைப்போல உடம்பு சவட்டியது. மீன்கள் வந்து அவனை முத்தமிட்டன. கரும்பச்சை இலை, இவனை நோக்கி மிதந்து வந்தது. புன்னகைத்தபடி இலையை வருடினான். மீன்கள் அவனைத் தீண்டின.

இந்தக் கனவைப்பற்றி பால்ராஜ் நிறைய முறை யோசித்துப்பார்த்தான். இதே போன்றதொரு கனவு ஏற்கெனவே அவனுக்கு வந்திருக்கிறது. அப்போது அந்தக் கனவைப்பற்றி த்ரிஷாவுடன் நெடுநேரம் பேசினான். அவளும் இவ்விதமான கனவுகள் தனக்கும் வருவதாகவும் ஆனால், அவற்றில் அருவிகளே அதிகம் வருவதாகவும் சொன்னாள். உண்மையில் பால்ராஜின் இந்த 27 வருட வாழ்வு த்ரிஷாவின் வருகைக்கு முன் வேறொன்றானது.

இரண்டு கோடைகளுக்கு முன்பான இதே போன்றதொரு பின் மதிய வெம்மையில்தான் த்ரிஷாவைச் சந்தித்தான்.

“ஏங்க, ஒரு போன் பண்ணிக்கலாமா?"- கரகரத்த குரல் பால்ராஜை அரைத் தூக்கத்தில் இருந்து எழுப்பியது.

“ம்... லோக்கல்னா ஊதா கலர் போனு"- தூக்கம் கலைந்த குரலில் சொல்லியவனின் கண்கள் மூடியே இருந்தன.

“நான்தாங்க த்ரிஷா பேசுறேன்"பால்ராஜ் படாரென்று எழுந்தான். 'த்ரிஷாவா?'

ரோமம் மழிக்கப்பட்ட தடித்த கை ஊதா தொலைபேசியை அழுந்தப் பிடித்திருந்தது. கைகளின் கண்ணாடி வளையல் எழுப்பிய சத்தம் சலனமற்ற மதிய நேரத்தை ஊடுருவியது. உடம்புக்குப் பொருந்தாத ஜாக்கெட்டும், செயற்கையான பாவனைகளுமாக த்ரிஷா பேசிக்கொண்டு இருந்தாள்.

“நான் கரைட்டா வந்துருவேன். ஒண்ணுக்கு ரெண்டு தடவையா சொல்லிருங்கண்ணே... ரெண்டு பேருக்கு மேல வேண்டாம்.”

''................"

''என் செல்போனுல காசு இல்லை. 50 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் பண்ணிவிடுங்க.”

''ஆங்... அதெல்லாம் நேர்ல பார்த்துக்குங்க.”

அவள் சில்லறையைத் தேடிக்கொண்டு இருந்தபோது, நாற்காலிக்குள் அமுங்கிக்கிடந்த உடம்பை நிமிர்த்திவைத்துக்கொண்டு, ''உங்க பேரு த்ரிஷாவா?'' கேட்டான் பால்ராஜ். லேசாகச் சிரித்தாள். அப்போதுதான் அவள் பால்ராஜை நன்றாகக் கவனித்தாள். சூம்பிய கால்களைப் பார்த்ததும் வெளியில் நின்றிருக்கும் வண்டி அவள் நினைவுக்கு வந்தது. மறுபடியும் புன்னகைத்தபடியே பேசிய போனுக்கான காசை எடுத்துக் கொடுத்தாள். காசை வாங்கியவன், “தண்ணி குடிக்கிறியளா?"என்றான். டம்ளரைக் கையில் வாங்கியபடியே, “ஏன், த்ரிஷாவுக்கு மட்டும்தான் தண்ணி குடுப்பியளா?"என்றாள். அவன் ஒரு மாதிரி மையமாகச் சிரித்தான். கொஞ்சம் தயக்கம் இருந்தது.

''இப்பதான் எல்லாரும் செல்போன் வெச்சிருக்குதுவோ. யாரு எஸ்.டீ.டி. பூத்ல வந்து போன் பண்றா?"அவள் பேச விரும்புவதான தொனி தென்பட்டது. கடையின் வாசலை ஒட்டி இருந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஒன்று ஆட்களை இறக்கிவிட்டுக் கிளம்பியது.

''ஆமாங்க.. இப்பல்லாம் யாரு வர்றா? உங்களை மாதிரி எப்பயாச்சுந்தான் ஆளு வருது.”

கர்ச்சீப்பால் தன் முகத்தில் அப்பியிருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டாள். கொஞ்சம் மௌனத்துக்குப் பிறகு அவளாகவே பேசினாள்.

''த்ரிஷான்னு ஆயி, அப்பனா பேரு வெப்பான்? நானே வெச்சுக்கிட்டதுதான். வீட்டுல பாபுன்னு பேருவெச்சு, 'நீ ஆம்பளை'ன்னு சொன்னானுவோ. 'நான் ஆம்பள இல்லடா, பொம்பள'ன்னு சொல்லி த்ரிஷான்னு நானே பேரு வெச்சுக்கிட்டேன். எனக்கு த்ரிஷான்னா புடிக்கும். உனக்கு?"

அவளுக்கு நிச்சயம் அவனைவிட ஒன்றிரண்டு வயது கூடுதலாக இருக்கும் என்றே தோன்றியது. ஒருமைக்கு மாறியிருந்த பேச்சு பால்ராஜுக்குப் பிடித்திருந்தது. 'நீ பொறந்ததுலேர்ந்து இப்படித்தானா?' என்ற கேள்வியை பால்ராஜ் கேட்க யத்தனித்த நேரத்தில் “நீ பொறந்ததுலேர்ந்து இப்படித்தானா?"என்றாள் த்ரிஷா. ஒரே கேள்வி இருவருக்கும் பொருந்துவதும், ஏக நேரத்தில் கேட்க நேர்ந்ததுமான தருணத்தை பால்ராஜ் வியந்தான். சின்ன கழிவிரக்கம் பூனையைப்போல எட்டிப் பார்த்தது. ஃபேன் காற்றுக்கு ஜெராக்ஸ் இயந்திரத்தின் மீது இருந்த காகிதங்கள் படபடத்தன.

''பார்த்தா தெரியலையா? பொறப்பே அப்படித்தான். உடம்பை இழுத்துக்கிட்டுத் திரிய வேண்டியதுதான். வீட்டுல சோறு போடுவொ. இருந்தாலும் இந்த வயசுக்கு மேல உக்காந்து திங்க குறுகுறுங்குது. அதான் கடன் வாங்கி இந்தக் கடையைப் போட்டேன்."

உடம்பு சிறுத்தும், கைகள் குறுகியும், இடுப்புக்குக் கீழே கால்கள் சதைப் பிண்டமாகச் சூம்பியும் பிளாஸ்டிக் நாற்காலிக்குள் அமுங்கி அமர்ந்திருக்கும் பால்ராஜை நெடுநேரம் பார்த்தாள் த்ரிஷா. அவளுக்கு ஏதேதோ நினைவுகள் வந்துபோயின. அநேகமாக, தனக்கான துன்பங்களையும் அவனுக்கான துயரங்களையும் அவள் ஒப்பிட்டுப் பார்த்திருக்கக்கூடும். 'என் பொறப்புக்கு நீயே தேவலை' என்ற வார்த்தையை அவள் சொல்லக்கூடுமாக இருக்கும். ஆனால், சொல்லவில்லை. பால்ராஜின் முகத்தில் மெலிதான சிநேகத்தை உணர்ந்தாள்.

''சரி வுடு... எல்லாம் நல்லா இருக்கவன் என்னாத்தக் கிழிச்சான்? இந்தா இப்ப அரண்மனை லாட்ஜுக்குப் போவணும். ரெண்டு ஆம்பளப் பய காத்திருக்கான், இந்தப் பொட்டைக்கு."

''எதுக்கு?”

''ம்... இதுக்கு. ஆளப் பாரேன்..."அவள் உதட்டோரம் புன்னகையின் சாயலையத்த ஒன்று எட்டிப்பார்த்தது. பால்ராஜ் அவளையே குறுகுறுஎனப் பார்த்திருந்தான். அவளும் அவனையே பார்த்தாள்.

“நீயும் கொஞ்சம் த்ரிஷா மாதிரிதான் இருக்க"-ஒரு சிறிய பொய்யைச் சொல்லும் பாவனையுடன் அதைச் சொன்னான். அவனைத் தோளில் தட்டிச் சிரித்தாள் த்ரிஷா. இருவரும் சிரித்தனர்.

''நான் வேணா விஜய்னு பேரை மாத்திக்கிடவா?"

“ஏன், அஜீத்னு மாத்திக்கயேன். நல்லா செவப்பாயிரலாம்.”

பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையின் இடைப்பட்ட சிறு நகரம் ஒன்றில் வீற்றிருந்த அந்த எஸ்.டீ.டி. பூத்தை வாகனங்கள் கடந்து சென்றுகொண்டே இருந்தன. எதிர்த்த டைலர் கடையில் வேலை பார்க்கும் பக்கத்து வீட்டு அக்கா பால்ராஜுக்கு மதிய உணவைக் கொண்டுவந்து தந்துவிட்டுப் போனாள். அக்கா உதிர்த்துச் சென்ற த்ரிஷாவுக்கான ஒரு துளி உபரிப் பார்வை தரையில் விழுந்துகிடந்தது.

''இன்னமுமா சாப்புடல?”

“அம்மா கயிறு ஃபேக்டரிக்கு வேலைக்குப் போவுது. வந்துதான் உலைவெச்சு, சோறாக்கிக் குடுத்துடும்.”

“பேசாம ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட வேண்டியதுதான?"

பால்ராஜ் மௌனமாக இருந்தான். ஏறத் தொடங்கியிருந்த வெயில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வழியே வெப்பத்தை இறக்கியது.

“ஏன், பொண்ணு கெடைக்காதுன்னு நினைக்கிறியா? என்னையவே ஒருத்தன் கட்டிக்கிறேங்குறான். உனக்கென்ன குறைச்ச... ஆம்பளைதானே நீ?"

'ஆம்பளைதானே நீ?' 'ஆம்பளைதானடா நீ?' 'நீ எல்லாம் ஓர் ஆம்பளையா?' -

மனமும் உடலும் உதறித் துடித்தன. மணி அடித்த தொலைபேசிக்குப் பதில் சொன்னான்.

''என்ன பேசவே மாட்டேங்குற?”

அவன் பேசினான். அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பாதவனாகப் பேசினான். “நீ மட்டும் ஆம்பளை இல்லையா?"

அவள் பால்ராஜிடம் இருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. சுறுசுறுவென முகத்தில் கோபத்தின் நரம்புகள் புடைக்கத் தொடங்கின.

''நான் ஆம்பளைனு சொல்ல நீ யார்றா? பார்க்கப் பாவமா இருக்கானே... பாவம் நொண்டின்னு பேசுனா... மூஞ்சியும் ஆளும்...”

அறையின் வெப்பம் வியர்வைப் பெருக்கெடுக்கவைத்தது. கடந்து சென்ற வாகனங்கள் எதிரொலித்த ஒளிக் கற்றைகள் கடைக்குள் வந்து வந்து போயின. பால்ராஜ் அழுதுகொண்டு இருந்தான். அவளுக்குத் தன்னைப் புரியவைக்கும் முயற்சி ஒன்று எதிர்த் திசையில் பயணித்துத் தோல்வியில் முடிந்துவிட்டதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“ஆம்பளைன்னா, பொம்பளையைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சட்டமா?"அழுகையின் ஈரத்துடனான சொற்கள்.

அவனது கண்களை உற்றுப் பார்த்தாள். த்ரிஷாவுக்கு எல்லாம் புரிந்தது. இப்போது கோபம் தணிந்து லேசான பதற்றம் வந்திருந்தது. என்ன சொல்வதுஎனத் தெரியவில்லை. அவனை அழ வேண்டாம் எனச் சொன்னாலும் மேற்கொண்டும் பேச்சை நீட்டிப்பதற்கான வாய்ப்பு இருக் கிறது. இந்த உரையாடல் எந்த இடத்தைச் சென்று சேரும் என்பதை த்ரிஷாவால் ஓரளவுக்கு அனுமானிக்கவும் முடிந்தது.

“லேட்டாயிருச்சு. நான் கௌம்புறேன். அப்புறமா பாப்போம்."

அவள் போய்விட்டாள். அந்த அறை வெறுமையால் நிரப்பப்பட்டதைப்போன்று இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு முன், தான் எவ்வாறு இருந்தோம். இவள் யார், இவளிடம் தன்னை ஒப்பிக்கும் மன தைரியத்தைத் தந்தது எது? பால்ராஜ் ஆழ் துயருக்குள் அமிழ்ந்தான். 'நொண்டி நாய்க்கு ஆம்பளை கேக்குதா' என்ற வலிமிகு சொற்களை மீளவும் ஒரு முறை கேட்க நேர்ந்துவிடுமோ என்ற பதற்றம் வந்தது. மேசை மீது இருந்த சாப்பாட்டுப் பை ஒரு பூதத்தைப்போல உருமாறிப் பயமுறுத்தியது. தன் பிறப்பின் மீதும், தற்போதைய அவசரத்தின் மீதும் கடுப்பாகவும், வெறுப்பாகவும் வந்தது. தொண்டையை அடைத்த துக்கம் கண்களில் நீராக வெளிப்படத் தயாராக இருக்க, ஆற்றாமையின் நொடிஒன்றில் பால்ராஜ் தன் காலிடுக்கை நோக்கி காறித் துப்பத் தொடங்கினான்.

ஒரே சாவியால் பல கதவுகளைத் திறக்கும் வல்லமை படைத்த நினைவுகளை அவன் வியந்தான். நினைவுகள் ஒன்றை ஒன்று திறந்துகொண்டன. பெண்ணுடல் மீதான வெறுப்பையும் ஆணுடல் மீதான விருப்பையும் உணர்ந்துகொண்ட தினத்தை மட்டும் எந்தச் சாவியும் திறக்கவே இல்லை. தன்னைத்தானே உள்தாழிட்டுக்கொண்டது. தன்னையே கீறிக்கொள்ளும் அந்த நாட்களை பால்ராஜ் மறக்க விரும்பினான். இப்போது அவனது காயமும் மருந்துமாக இருப்பவள் த்ரிஷா மட்டுமே.

இரண்டு, மூன்று, நான்காவது முறை தொலைபேச வரும்போது எல்லாம், ''உடம்பு எப்படி இருக்குப்பா"என்பாள். வார்த்தைகளின் ஆதூரத்தை அவன் உள்மனம் உணர்ந்தது. 'அவளுக்கு என் மீது கோபம் இல்லை' என்பதே அவனுக்கு சகல மனத் தடைகளும் உடைபடப் போதுமானதாக இருந்தது. பாய்ந்து வரும் வெட்டாற்றுத் தண்ணீரென த்ரிஷாவுடன் பேச ஆயிரம் கதைகள் இருந்தன அவனிடம். பேசவும் செய்தான். முழுதாகப் பேச தோதாக வந்தது பங்குனி உத்திரம்.

பால் குடமும், காவடியும், பறையடியுமாக ஊரெங்கும் திருவிழா வண்ணம். ஆணென அழைக்கப்பட்ட யாவரும் போதையிலும், பெண்ணென அழைக்கப்பட்ட அனைவரும் உயர் ஒப்பனையிலும் இருக்க... பருதியப்பர் கோயில் நோக்கி நீண்டு ஊர்ந்தது கூட்டம். பால்ராஜ் அன்றைக்கு இரவு கடை திறந்திருந்தான். மனைவிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணையும், வீட்டுக்குத் தெரியாமல் காதலனையும் சந்திக்க விரும்புபவர்கள் செல்போன்கள் விடுத்து எஸ்.டீ.டி. பூத்தையே அதிகமும் நாடுகின்றனர் என்ற உண்மையை திருவிழா தினத்தன்று மீளவும் ஒருமுறை பால்ராஜ் உறுதி செய்தான். காற்றில் கசிந்து வந்த ஆர்கெஸ்ட்ரா இசையை அவன் ரசித்துக்கொண்டு இருக்க, 11 மணிபோல தஞ்சாவூர் பேருந்தில் இருந்து இறங்கினாள் த்ரிஷா. பால்ராஜின் உதடுகள் புன்னகை தரித்தன.

''போவலையா? ஆர்கெஸ்ட்ரால்லாம் ஆரம்பிச்சிருச்சுபோலஇருக்கு.”

“போவணும்... கொஞ்சம் கதவச் சாத்திக்கட்டுமா?”

அவன் அனுமதிக்குக் காத்திராமல் கதவு சாத்தியவள், ஜெராக்ஸ் மெஷின் திரைக்கு அப்பால் நின்று சரசரவென ஆடை மாற்றினாள். கைப்பையில் இருந்து கண்ணாடி, பவுடரை வெளியில் எடுத்தபடி பால்ராஜுக்கு எதிரில் அமர்ந்தவள், “அப்புறம், இன்னிக்குக் கடை நல்லா ஓடுது போலிருக்கு"என்றாள். கைகள் முகத்தில் பவுடர் பூசின.

''என்னாத்த ஓடுது? பேசாம பூத்தை மூடிட்டு பொட்டிக்கடை போடலாமானு பாக்குறேன். உனக்குத்தான் நல்லா ஓடுது போலயே...''
அவள் சிரித்தாள். ''அப்பறமா வர்றேன். கடை வெச்சிருப்பேல்ல..."

த்ரிஷா பங்குனித் திருவிழா கூட்டத்துக்குள் கரைந்துபோனாள். பால்ராஜ்கூட போகலாம்தான். இந்த வீல்சேரை உருட்டிக்கொண்டு அவ்வளவு தூரம் போவதுகூடப் பிரச்னை இல்லை. ஆனால், அந்தக் கூட்டத்துக்குள் ரெண்டு காலும் நன்றாக இருப்பவனையே சவட்டி எடுப்பார்கள். எதற்கு அதெல்லாம்? கடை போட்டாலாவது நாலு காசு பார்க்கலாம்.

பௌர்ணமி ஒளியில் இரவு ஒண்ணரை மணிக்கு களைத்துத் திரும்பினாள் த்ரிஷா. அதற்குள் பால்ராஜ் கடையை உள்தாழிட்டு உறங்கிப்போனான். அவளது செல்போனில் இருந்து பூத் நம்பருக்கு நான்கைந்து முறை மிஸ்டுகால் கொடுக்க, கடை திறந்தது. கலைந்த தூக்கத்துடன் தரையில் இருந்து உடல் தூக்கி முகம் பார்த்தான். த்ரிஷா தன் கைப்பைக்குள் இருந்து படாரென இரண்டு குவார்ட்டர் பாட்டில்களை எடுத்து நீட்டியதும் அவன் முகமெல்லாம் புன்னகை.

அவித்த கடலையும் ஊறுகாயும் வீற்றிருக்க... பிளாஸ்டிக் டம்ளரின் முதல் ரவுண்ட் திரவத்தைக் குடித்து நிமிர்ந்து, “நான் குடிப்பேன்னு உனக்கு எப்படித் தெரியும்?"என்றான் பால்ராஜ்.

“குடிக்கலேன்னா விட்ரு. ஒண்ணும் பிரச்னை இல்ல."

அடுத்த ரவுண்டை அவசரமாகக் குடித்தான்.

மர்மத்தின் குகைகளைப் போதை திறந்துவைக்க, ரகசியங்கள் ஆடை உரித்தன.

அந்த அறையில் பெருந்துயரத்தின் நதி ஒன்று பாய்ந்துகொண்டு இருந்தது. ஒதுக்கவும் நகைக்கவும் யாருமற்ற அந்த அறையில் பாலியல் விளிம்புகள் இருவர் பால்யத்தின் கதைகளைப் பகிரத் தொடங்கினர். அது அவ்விதம் உடல் மீறலில் முடியலாயிற்று!

த்ரிஷாவுடன் பேசும் நிமிடங்களில் தன் உடல் குறைகள் மாயமாகிவிடுவதை பால்ராஜ் உணர்ந்து இருக்கிறான். நகர்ந்து நகர்ந்து காய்த்துப்போயிருந்த கைகளுக்கும், தரையில் இழுபடும் கால்களுக்கும் த்ரிஷாதான் செருப்பு வாங்கிக் கொடுத்தாள். முதன் முதலாகச் செருப்பு அணிந்து தரையைத் தொட்டபோது பால்ராஜின் தேகம் குலுங்கி அதிர்ந்தது. ஒரு வாரமாக செருப்பு அறுந்துவிட்டது என்ற வுடன் கால்களும் கைகளும் தரையில் தேய்ந்து புண்ணாகிவிட்டன. அதன் மீது மொய்த்த ஈக்களை பால்ராஜ் விரட்ட விரட்ட... மறுபடியும் பறந்து வந்தன. ஈக்களை விரட்டுவது பெரிய துயரமாக இருந்தது. த்ரிஷாவைக் கடைசியாகச் சந்தித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. செல்லுக்குப் போட்டால் மணி அடித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்படி, திடீர் திடீர் எனத் தொடர்ந்தாற்போல் சில நாட்கள் த்ரிஷா வரவே மாட்டாள். கேட்டாள் 'கஸ்டமர்கூட குற்றாலம் போயிருந்தேன்' என்பாள். சொல்லும்போது அவளிடம் மகிழ்ச்சி எதுவும் தென்படுகிறதா என்று பார்த்தால், அப்படி ஒன்றும் சொல்ல முடியாது.

''குற்றாலம் அருவி எப்படி இருக்கும்?'' என்றான் ஒரு முறை. அவனுக்கு அருவியை எப்படிச் சொல்லி விளங்கவைப்பது என த்ரிஷாவுக்குப் புரியவில்லை. கடையின் பின் பக்கச் சுவரில் ஒட்டப்பட்டு இருந்த வால் பேப்பரில் நயாகரா நதி கொட்டிக்கொண்டு இருந்தது. ''இதேபோல சின்ன சைஸ்'' என்றாள்.

அன்றைய ராத்திரி கனவில் பால்ராஜ் குற்றாலம் நதியைக் கண்டான். குறுகி, நீண்ட பாறையில் இருந்து அடித்து ஊற்றிய தண்ணீரின் ஜில்லிப்பு அவன் உடலை தீண்டிக்கொண்டே இருந்தது. கனவில் நதியைக் கண்டதை அடுத்த நாள் த்ரிஷாவிடம் சொல்ல முற்பட்டான். ஆனால், அவள் தனக்கு ஓர் அருவிக் கனவு வந்தது எனச் சொல்லத் தொடங்கினாள்!

நன்றி: ஆனந்த விகடன்

2/3/10

பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும்!அண்மை காலமாக ஒரு வித்தியாசமான காட்சியை நாம் காண்கிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல தரப்பினரால் பரவலாக நடத்தப்படுகின்றன. அறிவுத்தள செயற்பாட்டாளர்கள், தன்னார்வக் குழுக்கள், இயற்கை வேளாண் விசுவாசிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பத்தி எழுத்தாளர்கள், நடிகர்கள் என யூகிக்கவே முடியாத பல தரப்பினரும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

போராட்டம், எதிர்ப்பு என்பதை எல்லாம் வாழ்வில் அறிந்தே இராத உயர் மேல்தட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கூட இதற்காக பேசுகின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் ‘திருந்திட்டாய்ங்களோ’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை விவசாயத்தை வலியுறுத்துபவர்கள் இதற்காகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பா.ஜ.க.வின் இல.கணேசன், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக மாய்ந்து, மாய்ந்து குரல் கொடுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். கூட இதை கண்டிக்கிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றன. குறிப்பாக இந்துத்துவ, பார்ப்பன ஊடகங்கள் என்றுமில்லாதக் கூத்தாக மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பிரசாரமே செய்கின்றன.

பொதுவாக இத்தகைய தனது ஏகாதிபத்திய தரகு வேலைகளுக்கு எதிர்ப்புகள் வரும்போது அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து செல்வது அல்லது போலீஸ் லத்தி மூலம் பதில் சொல்லி அடக்கி ஒடுக்குவது என்பதுதான் ஆளும்வர்க்கத்தின் காலம் காலமான வழிமுறை. ஆனால் அந்த அரசு கூட மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அஞ்சுவது போல நடிக்கிறது. ‘பி.டி. கத்தரிக்காயை சந்தையில் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்’ என பெயரளவுக்கேனும் மத்திய அரசு சொல்ல வேண்டியிருக்கிறது. புறத்தோற்றத்தில் இப்போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதைப் போன்று ஒரு சித்திரத்தை உருவாக்க இவ்வரசு முனைகிறது. உள்ளடக்கத்தில் அது தீவிர முனைப்போடு இருக்கிறது என்பது வேறு விசயம்.

சரி, என்னவாயிற்று இவர்களுக்கு எல்லாம்? பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் திடீரென உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக மாறிவிட்டார்களா? இந்தியாவின் உணவு இறையாண்மையை காலில் போட்டு நசுக்கும் மரபணு மாற்ற விதைகளின் பின்னுள்ள முதலாளித்துவ நச்சு அரசியலை புரிந்துகொண்டுவிட்டார்களா? ‘மாண்சாண்டோவில்தான் கொஞ்சம் கவனப்பிசகாக இருந்துவிட்டோம். இப்போதேனும் விழித்துக்கொள்வோம் அல்லது பி.டி.காட்டன் என்ற கொலைகார விதையின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சாகக் கொடுத்தது போதும். இன்னொரு பி.டி. கத்தரிக்காயைக் கொண்டு வந்து பல ஆயிரம் விவசாயிகளை காவு கொடுக்க வேண்டாம்’ என்பது அவர்களின் எண்ணமா?

ஒரு வெங்காயமும் கிடையாது. மரபணு மாற்ற விதைகளுக்கு கிளர்ந்து வரும் எதிர்ப்பின் பேர்பாதி எங்கிருந்து வருகிறது என்ற திசையைப் பார்த்தால் தெரியும், அவர்கள் அத்தனை பேரும் எப்போதும், எதன் பொருட்டும் மரபுகளை மாற்ற விரும்பாதவர்கள். கோயிலாக இருந்தாலும், கத்தரிக்காயாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மரபு காக்கப்பட வேண்டும். ராமன் என்றொருவன் வரலாற்றில் இருந்தானா, இல்லையா என்பதே தெரியாது. ஆனால் கடலின் மணல் திட்டை ராமர் பாலம் என்பார்கள். கேட்டால் இந்து மரபு என்பார்கள். கருவறைக்குள் என்னைத் தவிர வேறு எவனும் நுழையக்கூடாது என்பது இந்திய மரபு. அதை மாற்றினால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தமிழ் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற தமிழ் மரபின் குணங்களுடன் வாழ வேண்டும். மீறினால் ‘தமிழனுக்கு சொரணையே இல்லைங்க’ என்று தங்கர்பச்சான் ரப்பர் ஸ்டாம்புடன் கிளம்பிவிடுவார் ‘யார் தமிழன்?’ என சீல் குத்த.

ஆண்களின் உடலுக்கு வெளியே இருக்கும் உபரி உறுப்பாகவே பெண்கள் நடத்தப்படுவதும், ஆதிக்கச்சாதிக்காரன் தலித் மக்களை அடிமைச் சேவகம் செய்ய வலியுறுத்துவதும், ஆண்டைகளுக்கு பணிந்து நடக்க ஏழைகள் பணிக்கப்படுவதும், மத, மொழி, இன மற்றும் பாலியல் சிறுபான்மையினரை விளிம்பில் தள்ளி அவர்களின் தினவாழ்வை அச்சத்துக்கு உள்ளாக்குவதும் இந்திய மண்ணின் மரபுகள்தான். அவை மீறப்படும்போதும் பதற்றமான குரல்கள் மேலெழும்பும். தற்போதைய மரபணு மாற்ற விதைகளுக்கு எதிரான குரல்களின் சரிபாதி அத்தகையவே.

“உங்களுக்கு இதே பொழப்புடா. எவனையும் ஒண்ணு சேர விட மாட்டீங்களே. அவன் மத்த விசயத்துல எப்படியாவது இருந்துட்டுப் போறான். பி.டி. கத்தரிக்காயை எதிர்க்கிறது நல்ல விசயம்தானே… அதுக்குள்ளேயும் எதுக்குப் பூணூலை தேடுறீங்க?” என்பது உங்களில் சிலரது உடனடி எண்ணமாகவும், எதிர்வினையாகவும் இருக்கக்கூடும். சரி, ஒரு வாதத்துக்காக பி.டி.கத்தரிக்காயை எதிர்க்கும் எல்லோரும் போராளிகள், சமூக நலனின் அக்கறைக் கொண்டவர்கள் என வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு இந்த நாட்டின் கத்தரிக்காய் வளம் பறிக்கப்படுவது பற்றி மட்டும்தான் கவலையா? அதற்கு முன்னும், பின்னும் இம்மண்ணின் வளங்கள் சூறையாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

இதோ… சமகாலத்தில் சட்டீஸ்கர், ஜார்கண்ட் காடுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிட துடிக்கின்றன. மரபுரிமை அடிப்படையில் தண்டகாரன்யா காட்டின் ஆதிவாசிகளுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் இருந்து அவர்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இதை பன்னாட்டு நிறுவனங்களின் புரோக்கர்களாக இருந்து பிரதமரும், உள்துறை அமைச்சருமேதான் செய்கின்றனர்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் நீர்வளம் முழுவதையும் ரத்தம் உறிஞ்சுவதைப் போல கோக்கோகோலா நிறுவனம் இன்னமும் உறிஞ்சிகொண்டேதான் இருக்கிறது. அருகாமை மாநிலங்கள் சொந்தம் கொண்டாட முடியாத, தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, இங்கேயே கடலில் கலக்கும் ஒரே நதியான தாமிரபரணியின் வளம் மரபு ரீதியாக கோககோலாவுக்கு சொந்தமா, தமிழ் மக்களுக்கு சொந்தமா? தண்டகாரண்யாவிலும், தாமிரபரணியிலும் நமது பூர்வீக மரபுரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக இந்த மரபின் மைந்தர்கள் என்ன செய்து கிழித்தார்கள்? ஒரு கண்டனம், ஒரு அறிக்கை, ஒரு போராட்டம்… எதுவுமில்லை.

1987-ல் அமெரிக்காவில் முதன் முதலில் மரபணு மாற்ற உயிரினம் உருவாக்கப்பட்டது. நாம் கண்ணாடித் தொட்டிகளில் பார்க்கிற வண்ண மீன்கள்தான் இந்த உலகின் முதல் மரபணு மாற்ற உயிரினம். அவை வெறுமனே அழகுக்கானவை என்பதால் உடனடியாக ஆபத்துத் தெரியவில்லை. கொத்த வரும் சர்ப்பம் கூட அழகுதான். இந்த மரபணு மாற்றம் என்ற சர்ப்பம் முதலாளிகளின் கண்களுக்கு மிகப்பெரிய கர்ப்பகத்தருவாக தெரிந்தது. அதன் பிறகு அவர்கள் உருவாக்கியதுதான் பிராய்லர் கோழிகள். கோழியின் சதைப்பகுதி மட்டும் அதிகமாக வரும்படி அதன் மரபணுவை மாற்றியமைத்து பிராய்லர் கோழிகளை உருவாக்கினார்கள். எது விற்பனையாகிறதோ அதன் உற்பத்தியை பெருக்குவது இயல்பான உற்பத்தியாளர் உத்தி. ஒரு வருடம் உளுந்து அதிகம் விலைபோனால் அடுத்த வருடம் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து பயிரிடுவது வழக்கம்தான். ஆனால் ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பையே விற்பனைக்கேற்ப மாற்றுவதன் பின்னால் இருக்கும் லாபவெறியின் கொடூர முகத்தைப் பாருங்கள்.

இன்றைய நுகர்வு கலாசாரத்தில் மனித உடம்புக்கும், பிராய்லர் கோழிக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கிடையாது. பிராய்லர் கோழிக்கு சதை அதிகமாக வரும்படி மரபணு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்றால் கண்டதையும் வாங்கிக்கொண்டே இருக்கும்படி மனிதனின் மூளை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நிறுவனங்கள் தங்களின் பொருட்களுக்கு ஏற்றதுபோல வாழ்வதற்கு மக்களை பழக்கியிருக்கிறார்கள்.

கிராமங்களில் மாடு மேய்ப்பதில் இரண்டு வகை உண்டு. மாட்டை புல் உள்ள இடத்தில் மேயவிட்டு ஓட்டி வருவது ஒரு வகை. வெள்ளாமை வயல்களின் வரப்புகளுக்கு நடுவே பசும்புல்லை மாட்டை கையில் பிடித்தபடி மேயவிடுவது இன்னொரு வகை. ‘பிடி மாடு மேய்ப்பது’ என்றிதைச் சொல்வார்கள். இன்றைய சந்தை உலகில் நிறுவனங்கள் மேய்க்கும் பிடிமாடுகளாகத்தான் இருக்கின்றனர் மனிதர்கள். ஆகவே பிராய்லர் கோழியை தின்பதால் நீங்கள் அதை விட பெரிய ஆள் என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நீங்களும் ஒரு பிராய்லர் கோழியே.

சரி, இப்படி கோழியின் மரபணுவை மாற்றினார்களே… அப்போது இந்த so called எதிர்ப்பாளர்கள் எங்கேப் போனார்கள்? ‘கோழிக்கறியை மாத்தினா எங்களுக்கு என்ன? அதெல்லாம் அவா ஃபுட். கத்தரிக்காய்தான் எங்க ஃபுட்’ என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாமா? உண்மையில் பி.டி. கத்தரிக்காய் என்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை நாம் முழு வீச்சோடு எதிர்க்க வேண்டும். இன்று பரவலாக பி.டி.கத்தரிக்காய் என்ற வார்த்தையே அறியப்படுகிறது.

Bacillus Thuringiensis என்ற பாக்டீரியாவின் சுருக்கம்தான் பி.டி. இந்த வைரஸை கத்தரிக்காயின் மரபணுவில் செலுத்தி அதன் தன்மையை மாற்றுகின்றனர். ஏன்? இந்திய கத்தரிக்காயில் தண்டு துளைப்பான் புழு அதிகமாக இருக்கிறதாம். ’ஆகவே அந்தப் புழுவை எதிர்க்கும் விதமாக கத்தரிக்காயின் மரபணுவை மாற்றி அமைத்திருக்கிறோம்’ என இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறாக இருக்கிறது. இதே போன்றதொரு ’பூச்சி தாக்காது’ காரணத்தை சொல்லிதான் முன்பு பி.டி.பருத்தியை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்த பருத்தி முன்னெப்போதும் இல்லாததைவிட மிகப்பெரிய நஷ்டத்தை பரிசளிக்கவே ஆந்திராவிலும், மஹாராஷ்டிராவிலும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோனார்கள்.

விசயம் என்னவெனில் எந்தவொரு பூச்சியினமும் மருந்தின் தன்மைக்கு மிக விரைவில் பழகிவிடும். பின் அதைவிட வீரியமான மருந்தைதான் தெளிக்க வேண்டும். இவர்கள் மரபணுவை மாற்றி உருவாக்கிய விதைக்கும் இது பொருந்தும் என்பதால் அவ்விதைகள் மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தன. எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின. பி.டி.பருத்திக்கு நேற்று இதுதான் நடந்தது. நாளை பி.டி.கத்தரிக்காய்க்கும் இதுதான் நடக்கும்.

மரபணு மாற்ற விதைகளை ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தன் நிலத்தில் பயிரிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அருகாமை வயல்களில் வேறு எந்த தாவரம் பயிரிட்டிருந்தாலும் அதன் மரபணுவிலும் தானாகவே மாற்றம் நிகழும். தொற்றுநோய் மாதிரி. ஆக, ஒரு ஊரில் ஒரே ஒரு விவசாயி இதைப் பயிரிட்டாலும் மெல்ல, மெல்ல அப்பிராந்தியத்தின் தாவர மரபணு சூழல் மாறுதலுக்குள்ளாகும். வேறு வழியே இல்லாமல் மரபணு மாற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களிடம் போய் நிற்க வேண்டும். அவன் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய விவசாய நிலங்களையும் மோனோபோலியாக ஆட்சி செலுத்துவார்கள். மரபணு மாற்ற தாவரங்களுக்கான விதைகளுக்கும் அந்த நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும்.

விளைந்ததை விதையாகப் பயன்படுத்த முடியாது. ’பயன்படுத்தவும் கூடாது’ என்கிறது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான India-US knowledge initiative on Agriculture என்ற ஒப்பந்தம். 1,2,3 அணு ஒப்பந்தம் சமயத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற அமெரிக்கா தொழில்நுட்ப உதவி செய்யுமாம். இந்தியா இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கித் தருமாம். வருடத்துக்கு 350 கோடி ரூபாய். இந்திய மரபை காப்பாற்ற அமெரிக்காவுக்குக் காசு தரும் இந்த அறிவாளிகளை என்ன செய்வது? இந்த ஒப்பந்தம் இம்மியளவும் மாற்றமில்லாமல் அப்படியேதான் இன்னமும் அமுலில் இருக்கிறது. மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சும்மாவேனும் எதிர்ப்புகளை மட்டுப்படுத்தும் தந்திரமாக ‘தற்காலிகத் தடை’ என்கிறார். மரபா, லாபமா என்றால் அவர்கள் லாபத்தின் பக்கமே சாய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேற்சொன்ன இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான மிக மோசமான அம்சங்களும் அடக்கம். பொதுவில் அனைத்துலக சட்டங்களின்படி தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினத்துக்கும் தனி சொத்துரிமை கோர முடியாது. இவர்கள் மரபணு மாற்றத்தின் மூலம் சிற்சில மாற்றங்களை விதைகளில் ஏற்படுத்தி அவற்றை தங்களின் அறிவுசார் சொத்துரிமையாக மாற்ற முனைகின்றனர். இதன்மூலம் உயிரினங்களுக்கும் காப்புரிமை பெறத் துடிக்கின்றனர்.

ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் லாபத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயலும் இந்த லாபவெறிக்கு எதிராக நாம் அனைவரும் எதிர்குரல் எழுப்ப வேண்டும். நமது எதிர்ப்புகளை உழைக்கும் விவசாயிகளுடன் பொருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, மரபின் மைந்தர்களுடன் அல்ல!


12/1/10

ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !

உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஷூட்டிங் முடிந்து சில தினங்களே ஆன ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையதளங்களில் ரிலீஸ் ஆக, தமிழ் திரைப்பட உலகம் பரபரப்புக்குள் ஆழ்ந்திருக்கிறது. ஓசியில் கிடைத்தாலும் ஜக்குபாயைப் பார்க்க ஆளில்லை என்பது வேறு விசயம். உடனே ‘இது கொலைக்கு சமமான குற்றம்’ என்று தமிழ் திரையுலக நடிகர்கள் பதறி துடித்தார்கள். ‘ஐய்யய்யோ… 15 கோடி’ என அழுதேவிட்டார் ராதிகா. முதல்வர் கருணாநிதியிடம் ஓடிப்போய் மனு கொடுக்க அவர் ஒரு கோயம்புத்தூர் பையனைப் பிடித்து உள்ளேப் போட்டார்.


சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் என்பது மட்டுமல்ல, அவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ‘ராடன் பிலிம்ஸ்’தான் ஜக்குபாயின் தயாரிப்பு நிறுவனம். கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இணைய தளத்தில் ரிலீஸ் செய்துவிட்டனர். ‘நடிகர் சங்கத் தலைவர் படத்துக்கே இந்தக் கதியா?’ என படை திரண்ட கோடம்பாக்க நடிகர்கள் ஆளாளுக்கு கண்டன அறிக்கைகள் விட்டார்கள். உணர்ச்சி இயக்குநர் சேரன், ‘‘இந்த திருட்டு வி.சி.டி. தயாரிக்கும் கும்பலை ஒழித்தால்தான் தமிழ் சினிமா உருப்படும். எங்காவது திருட்டு வி.சி.டி. தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக திரையுலகம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு சம்பளம் தரலாம்’’ என அதிகாரப்பூர்வமாக ஒரு கூலிப்படையை உருவாக்கும் யோசனையை முன் வைத்திருக்கிறார். தனது குருநாதர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ஜக்குபாய்க்கு நேர்ந்திருக்கும் கதி கண்டு உணர்ச்சிவசப்பட்டு சேரன் இவ்வாறு பேசிவிட்டார் என்று இதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் காலம்தோறும் இப்படித்தான் பேசி வருகிறார். இப்படித்தான் பேசுவார். அதில் ஒன்றும் அதிர்ச்சி இல்லை. ஆனால் சினிமாத் தொழில் நசுக்கப்படுகிறது என்றும் அதைக் காப்பாற்ற ஒரு கூலிப்படையை உருவாக்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசும் சேரன், அதே சினிமாத் துறையில் பல விதங்களில் நசுக்கப்படும் உதிரித் தொழிலாளர்கள் குறித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்? லைட்மேன் தொடங்கி, மேக்&அப் மேன் வரை தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி, சுயமரியாதையையும் பறிக்கும் திமிர்த்தனத்தை என்ன விதத்தில் எதிர்த்திருக்கிறார்? தன் உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் கூட தராத எத்தனையோ இயக்குநர்களின் பட்டியலில் சேரனின் பெயரும் இருக்கிறது.

இந்த ஜக்குபாய் பிரச்னைக்காக திரையுலகினர் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள். சென்னை ஃபோர் பிரேம்ஸ் அரங்கத்தில் நடத்தப்பட்டக் கூட்டத்துக்கு, பொதுவில் இம்மாதிரியான எந்த நிகழ்ச்சிகளுக்கும் வந்திடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் வந்திருந்தனர். கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் ‘‘ஜக்குபாய் கதையில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜக்குபாய் என்ற டைட்டிலிலேயே ஏதோ மிஸ்டேக் இருக்கிறது. நானும் கே.எஸ்.ரவிக்குமாரும் பல மாதங்கள் டிஸ்கஸ் பண்ணியும் கதை நகரவே இல்லை. அதன்பிறகுதான் ஜக்குபாய் கதையில் சரத்குமார் நடித்தார். நமக்குதான் செட் ஆகவில்லை, சரத்குமாருக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கும் இப்போது பிரச்னை ஆகிவிட்டது’’ என்று சரத்குமார் தலையில் கூடுதலாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘சூப்பர் ஸ்டாரை அழைத்துப் பேச வைத்தால் விநியோகஸ்தர்களை சமாளித்து படத்தை விற்றுவிடலாம்’ என்று சுப்ரீம் ஸ்டார் கணக்குப் போட்டிருக்க, ரஜினியோ ‘டைட்டிலே வௌங்கலை. எவனோ பில்லி சூனியம் வெச்சுட்டான்’ என்று எக்ஸ்ட்ரா பஞ்சாயத்தை கூட்டினார். அதைத் தொடர்ந்த ரஜினிகாந்த்தின் பேச்சுதான் முக்கியமானது.

அவர் சொல்கிறார், ‘‘ஜக்குபாய்க்காக ‘Wasabi’ என்ற பிரெஞ்சு படத்தின் சி.டி.யை கே.எஸ்.ரவிக்குமார் கொண்டுவந்து கொடுத்தார். படம் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. பத்து அலெக்ஸ் பாண்டியனுக்கு சமமான ஒரு ஓய்வு பெற்ற பெற்ற போலீஸ் அதிகாரியையும், அவருடைய மகளையும் பற்றிய கதை அது. அந்த போலீஸ் அதிகாரியின் மகள் வெளிநாட்டில் கோடீஸ்வரியாக இருக்கிறாள். அவளைப் பார்க்க அப்பா போகிறார். அந்த பெண்ணை சாகடிக்க ஒரு கும்பல் சதி செய்கிறது. அவர்களை அடித்து வீழ்த்தி மகளைஅந்த போலீஸ் அதிகாரி எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இது பிரமாதமான ஸ்க்ரிப்ட். நிச்சயம் வெற்றிபெறும். அதனால் இந்த வி.சி.டி. வெளியானதைப் பற்றி எல்லாம் சரத்குமார் கவலைப்படத் தேவையில்லை’’ என்று ரஜினிகாந்த் உள்ளது உள்ளபடியே போட்டுக்கொடுத்தார். ஒரு பிரெஞ்சு படத்தை அப்படியே திருடி தமிழில் எடுப்பது பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாக ரஜினிகாந்த்தின் பேச்சைக் கருதலாம்.

அதே விழாவில் பேசிய கமல் என்னும் காமன்மேனின் பேச்சு அபாயத்தின் உச்சமாகவும், விஷத் தன்மையுடனும் இருந்தது. ‘‘குறைந்த விலையில் வி.சி.டி.யிலும், டி.வி.டி.யிலும் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமாக நினைக்கிறார்கள். அதை திருத்த முடியாது. ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’’ என்பது காமன்மேன் கமலின் பேச்சு.

மிக அபாயகரமான இந்தப் பேச்சின் பொருள் என்ன? திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். ஏன், திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில் இருந்து கரசேவையும், மாலேகான் குண்டுவெடிப்பும் நடக்காதா? பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? அப்படியே விற்றாலும் அந்த பணம் தேச விரோத செயல்களுக்குதான் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு கமல் எப்படி வருகிறார்? அவை அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. அப்புறம், திருட்டு வி.சி.டி. விற்கும் பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், சினிமாக்காரர்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் நாட்டை வளமாக்கப் பயன்படுகிறதா என்ன?

கும்பகோணம் தீ விபத்தின்போது பந்தாவாக ‘நான் 5 லட்சம் தாறேன், நான் 10 லட்சம் தாறேன்’ என்று அறிக்கைவிட்ட கொழுப்பெடுத்த கோடீஸ்வர நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் இதுவரைக்கும் ஒரு பைசாவும் தரவில்லை. இதைப்பற்றி பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தும் அந்த நேர்மையின்மைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள். இந்த யோக்கியவான்கள்தான் இப்போது திருட்டு வி.சி.டி. பற்றி அலறுகின்றனர். ‘சரத்குமாருக்கே இந்த கதியா, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கே இந்த நிலைமையா?’ என்று இழவு வீடு போல் நடிக்கின்றனர். சில நடிகர்கள் ஒரு படி மேலே போய் ‘தமிழனுக்கு சொரணை இல்லை. திருட்டு வி.சி.டி. பார்த்துக் கெட்டுப்போறான்’ என்று சாபம் விடுகிறார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஏற்படும் பிரச்னைக்கும் தமிழனின் சொரணைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.

ஒரு பொது மேடையில் ‘வாசபி’ என்ற பிரெஞ்சு படத்தை திருடிதான் ஜக்குபாய் எடுக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத நடிகர்கள், வி.சி.டி. திருட்டுப் பற்றி மட்டும் வாய் கிழியப் பேசுகின்றனர். பொதுவாக திருடர்கள், தாங்கள் திருடியப் பொருளை இழந்துவிட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வதற்கு தயங்குவது பொது எதார்த்தம். திருடனுக்குத் தேள் கொட்டியைதைப்போல என நாம் பழமொழியே வைத்திருக்கிறோம். ஆனால் வாசபியைத் திருடி ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு, அதை ஒருத்தன் திருடிவிட்டான் என்றவுடன் எகிறிக் குதிக்கிறார்கள். மோசடியும், ஆபாசமும் நிறைந்த இந்த வர்த்தக விபச்சாரத்தைப்பற்றி எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை. உடலின் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மட்டும்தான் என்றில்லை. ஒரு சில தனிப்பட்ட காழ்ப்புகள் உச்சத்திற்கு வரும் சந்தர்ப்பங்கள் நீங்களாக எப்போதுமே தமிழ் சினிமா வென்றுகள், தங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டதோ, மன்னிப்புக்கேட்டதோ, அதைப்பற்றி விவாதம் செய்ததோ கிடையாது.

அண்மையில் தென்னாப்பிரிக்க படமான Tsotsi யை அப்படியே உருவி ‘யோகி’யாக்கி அமீர் எடுத்தப் படம் பற்றி கோடம்பாக்கத்தின் நேர்மையாளர்கள் என்ன கருத்தை சொன்னார்கள்? ஒரு விபத்து, அதில் சந்திக்கும் மூவரின் கதைகள் தனித்தனி கோணங்களில் விவரிக்கப்படும் அம்ரோஸ் ஃபெரோஸ் என்ற படத்தை சுட்டு மணிரத்னம் ஆயுத எழுத்து எடுத்தார். ‘sliding doors’ -ன் தாக்கத்தில் ஜீவா ‘12பி’ எடுத்தார். shoot em up-ல் ஐந்து விரல்களுக்கு இடையே ஐந்து தோட்டாக்களை வைத்து கையைத் தீயில் காட்ட, துப்பாக்கி இல்லாமலேயே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து எதிரில் நிற்பவனைத் தாக்கும் காட்சியை அச்சு பிசகாமல் அப்படியே சுட்டு நியூட்டனின் மூன்றாம் விதியில் வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. இப்படியான கலைத் திருட்டுக்காக எக்காலத்திலும் குற்றவுணர்வு அடைபவர்கள் இல்லை இவர்கள்.

ஆனால் இவர்களின் நலன்களுக்காகவே இயங்கும் இந்த அரசு சினிமாக் காரர்களின் பிரச்னை என்றால் மட்டும் ஓடோடி வந்து தீர்த்து வைக்கிறது. சினிமா கலைஞர்கள் குடியிருக்க வீடு இல்லாமல் அல்லாடுவதால் மாமல்லபுரம் சாலையில் 95 ஏக்கர் நிலத்தை அவர்களுக்காக ஒதுக்கித் தந்திருக்கிறார் கருணாநிதி. அண்மையில் கூட கமல்ஹாசன் கலந்துகொண்ட சினிமா வர்த்தக கருத்தரங்குக்கு தமிழக அரசு சார்பாக 50 லட்ச ரூபாய் கொடுத்தார். பாவம், சினிமாக்காரர்கள் கஞ்சிக்கு இல்லாமல் பஞ்சத்தில் தவிக்கிறார்கள். இவர் போய் உதவியிருக்கிறார். என்ன அநியாயம் இது? சினிமா என்பது ஒரு தொழில். அதன் முன்னேற்றத்துக்காக கேட்டுக் கேள்வியில்லாமல் மக்கள் பணம் செலவிடப்படுவது எத்தனைப் பெரிய அநியாயம்? இன்று, ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், வழக்கறிஞர்கள் என சமூகத்தின் உழைக்கும் சக்தியாக இருக்கும் எத்தனையோ வகையினர் முதல்வர் கருணாநிதியை சந்திக்க காத்திருக்கின்றனர். அதற்கான நியாயமான காரணங்களும் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் கருணாநிதியோ நடிகை சோனா, குஷ்பு போன்றவர்களை சந்திக்கவே முன்னுரிமை தருகிறார். அந்த அடிப்படையிலேயே ஜக்குபாய் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்த குற்றவாளிகளை மின்னல் வேகத்தில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் கருணாநிதி. இவ்வளவு வேகமான நடவடிக்கை வேறு எந்த மக்கள் பிரச்னைகளுக்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வருமானச் சான்றிதழ் வாங்கவே வாரக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிற நாட்டில் ராதிகாக்களின், சரத்குமார்களின் பிரச்னைகளுக்கு மட்டும் உடனடி தீர்வை அளிப்பதில் இந்த அரசு கூடுதல் கரிசனம் கொண்டிருக்கிறது.