தேசபக்தி... அயோக்கியர்களின் கடைசி முகமூடி

அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடந்த இறுதி லீக் போட்டி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் பரபரப்பாக கவனிக்கப்பட்டது. காரணம், அதில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால்தான் இந்தியாவால் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற முடியும். புள்ளிகள் அடிப்படையில் நடந்த போட்டியின் நிலைமை அவ்வாறு இருந்தது.

அன்றைய தினத்தில் பெரும்பான்மையான இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்காக பாரதமாதாவை நெக்குருகி வேண்டிக் கொண்டிருந்தன. தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ‘எப்படியாவது பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிடாதா?’ என்று ஏங்கித் தவித்தார்கள். சென்னை பண்பலை வானொலிகள் பலவற்றில் அன்று இதைப்பற்றிதான் மூச்சுவிடாமல் பேசினார்கள். ரேடியோ மிர்ச்சியில் அஞ்சனா என்ற ரேடியோ ஜாக்கி இதைப்பற்றி நேயர்களிடம் தொலைபேசி வழியே உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை செய்துகொண்டிருந்தார். அவர், ‘எனக்கு இதை சொல்றதுக்கு நாக்கு கூசுறது. இருந்தாலும் பாகிஸ்தான் ஜெயிக்கனும்னு நாமல்லாம் பிரே பண்ணுவோம். என்னப் பண்றது... நம்ம நிலைமை இப்படில்லாம் சொல்ல வேண்டியிருக்குது’ என தன் மனதை கல்லாக்கிக்கொண்டு பாகிஸ்தானின் வெற்றிக்காக பிரார்த்திதார். அநேகமாக அன்று இரவு அவர் தான் செய்த பாவத்துக்காக அரங்கனின் பாத அடிகளை சேவித்து பாவ மன்னிப்பும் கேட்டிருக்கக்கூடும். ‘பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்’ என கோடிக்கணக்கான ‘இந்திய’ உதடுகள் உச்சரித்த நிகழ்வு அண்மை காலத்தில் இதுவாகத்தான் இருக்கும். (அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோற்று இந்தியாவின் எதிர்பார்ப்பில் ‘கரி’யைப் பூசிவிட்டது என்பது வேறு விஷயம்).

இது ஒன்று. இரண்டாவது, தசரா பண்டிகையை வட மாநிலங்களில் ராம் லீலாவாகக் கொண்டாடுகிறார்கள். ராவணனின் உருவப்படத்தை எரிப்பது அதில் ஒரு பகுதி. அப்படி இந்த வருடம் போபால் நகரில் ராம் லீலா கொண்டாடப்பட்டபோது ராவணனின் உருவப்படத்துக்குப் பதிலாக மும்பைத் தாக்குதலில் கைதாகியிருக்கும் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் உருவ பொம்மையை எரித்தார்கள். இதைப்பற்றி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அகர்வால் என்பவர் சொல்லும்போது, ‘‘தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு அரசாங்கத்தால் இதுவரைத் தண்டனைத் தர முடியவில்லை. கொடும்பாவியை எரித்ததன் மூலம் நாங்கள் தண்டனைக் கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.



இந்த இரண்டும் தேசபக்தி என்பது எத்தகைய பொய்மையானது என்பதையும், அது எதிர்வுகளை கட்டமைப்பதன் மூலம் எப்படித் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது என்பதையும் புரிந்துகொள்வதற்கான அண்மை கால சான்றுகள். தேசபக்திக்கு எப்போதும் எதிரிகள் வேண்டும். உங்கள் இந்திய தேசபக்தியை நிறுவ, நீங்கள் பாகிஸ்தானை எதிரியாக வரித்துக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தோல்வியடைய வேண்டும் என்று நினைப்பதில்தான் இந்திய தேசபக்தியின் அடர்த்தி நிலைநிறுத்தப்படுகிறது. மாறாக பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பதே பதற்றம் தருவதாகவும், பாவம் ஒன்றை செய்வதாகவும் மாறிப்போகிறது. இதை மறுவளமாக பார்த்தால் ‘பாகிஸ்தானின் வெற்றி இந்தியாவுக்கு லாபம் தரும் என்றால் அதை இந்திய மனநிலை ஆதரிக்கும்’ என இதை சாறு எடுத்துப் புரிந்துகொள்ள முடியுமா? இல்லை.

தேசபக்தி என்பது இன்றைக்கு வியாபாரம் செய்வதற்கு தோதான ஒரு பிராண்ட். கோககோலா, பெப்ஸி, ரிலையன்ஸ், இந்துஸ்தான் லீவர், ஹமாம் போல தேசபக்தியும் ஒரு பிராண்ட். இது அனைத்து பெருமுதலாளிகளுக்குமான அமுத சுரபி. பன்னாட்டு நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும் கோடிகளை செலவழித்து நடிகர், நடிகைகளை வைத்து தங்கள் பொருளுக்கு கொடுக்க முடியாத விளம்பரத்தை தேசபக்தியின் பெயரால் மிக எளிதாக செய்கிறார்கள். குறிப்பிட்ட பிராண்ட் துணி அணிந்தால், குறிப்பிட்ட பிரஷ்ஷர் குக்கர் வாங்கினால் நீங்கள் உண்மையான தேசபக்தர். இந்திய சுதந்திரத்தின் 50&ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்களின்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்த கோல்கேட் நிறுவனம் ‘வந்தே மாதரம், ஸ்பான்ஸர்டு பை கோல்கேட்’ என்று சொல்லிக்கொண்டது. பாரதமாதாவுக்கும், வந்தே மாதரத்துக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்ஸர் செய்ய ஆரம்பித்து வெகு காலமாகிறது.

கொஞ்சம் கவனித்தால் நாட்டில் கிரிக்கெட் காலங்களிலும், இன்ன பிற விழா காலங்களிலும் தேசபக்தியின் அடர்த்தி கூடிவிடும். அப்போது மட்டும் தேச பக்தியின் பெயரால் சாமியாடுவார்கள். ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டில் இந்திய தேசியம், தேசபக்தி என்பதெல்லாம் டவுசர் கிழிந்து தொங்குகிறது. இந்த வெறியூட்டப்பட்ட தேசபக்தியின் உச்சகட்ட வடிவம்தான் கிரிக்கெட். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டி என்பது தேசபக்தியை மிக அதிக விலைக்கு விற்கக் கிடைத்திருக்கும் சந்தை. இந்த சந்தையை தங்கு தடையில்லாமல் நிறுவுவதற்காகதான் பாகிஸ்தான் என்னும் தேசத்தையும், அதன் மக்களையும் இந்திய எதிரிகளாக கட்டமைக்கிறார்கள். இதன் இந்தியப் பதிப்பாக முஸ்லீம் விரோதம் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடக்கும்போது ‘என்ன இருந்தாலும் நீ பாகிஸ்தானுத்தான் சப்போர்ட் பண்ணுவே’ என்று கிரிக்கெட் பார்க்கும் இந்திய முஸ்லீம்களை நோக்கி வார்த்தைகள் வீசப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதன் மூலம் முஸ்லீம்களுக்கு தேசபக்தி இருக்காது, இருக்கத் தேவையில்லை என்ற கருத்தை கட்டமைத்து, இந்திய தேசபக்தி தனக்கான எதிர்வுகளை நிறுவுகிறது. ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பழி தீர்க்குமா இந்தியா?’ என்று ஊடகங்கள் தங்கள் பங்குக்கு வெறியூட்டுகின்றன.

அனுதினமும் அதிகாரம் மக்களுக்கு துன்பங்களையே பரிசளித்து வருகிறது. இவற்றை மக்கள் உணரவிடாமல் செய்யவும் தங்களின் பொறுக்கித் திண்ணும் பிழைப்பை மூடி மறைத்துக்கொள்ளவும் அதிகார வர்க்கத்துக்கு தேசபக்தி பயன்படுகிறது. எல்லையோரத்தில் துப்பாக்கிக்களுக்கு இரையாகும் அப்பாவி ராணுவ வீரன் தேசபக்தியாளனாகக் கொண்டாடப்படுகிறான். இதன்மூலம் அவனை கொன்றது அரசதிகாரம்தான் என்ற உண்மை மறைக்கப்பட்டு தேசபக்தியின் பெயரால் ஒரு கொலை, தியாகமாக்கப்படுகிறது.



இப்படி அதிகாரம் தயாரித்து வழங்கும் தேசபக்தியை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நிறுவும் நிறுவனமாக செயல்படுகின்றன இந்திய நீதிமன்றங்கள். ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழர் விடுதலை இயக்கமும் தமிழ்நாடு முழுக்க இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டங்களை நடத்தின. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்கும்போது ‘இவர்கள் இந்திய தேசிய கொடியை அவமதித்திருக்கிறார்கள். அதனால் ஒரு வார காலத்துக்கு தங்கள் வீடுகளின் முன்பு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்’ என்பதை பிணைக்கான நிபந்தணையாக விதித்தது நீதிமன்றம். இதற்கு அவர்கள் மறுத்தபோது நீதிபதிகள் கோபப்பட்டனர். தேசியக் கொடி ஏற்றும் நிபந்தணையை மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தினார்கள். இங்கு தேசபக்தி என்பது கட்டாயமாக்கி ஊட்டப்படுகிறது. இதை, ‘இந்த நாட்டில்தானே வசிக்கிறீர்கள். இந்த நாட்டு அரசாங்கத்தின் சலுகைகளைத்தானே அனுபவிக்கிறீர்கள். பிறகு தேசபக்தி இல்லாமல் இருந்தால் அது குற்றமில்லையா?’ என்ற எளிய தர்க்கத்தின் மூலம் நியாயப்படுத்துகின்றனர். நானும் இந்த நாட்டில்தான் வாழுகிறேன், அம்பானியும் இந்த நாட்டில்தான் வாழுகிறார், அசோக் சிங்காலும், நரேந்திரமோடியும் இந்த நாட்டில்தான் வாழுகின்றனர், வாயில் மலம் திணிக்கப்பட்ட திண்ணியம் முருகேசனும், ராமசாமியும் இந்த நாட்டில்தான் வாழுகின்றனர், எல்லோரும் சமமா? ஒரு அரசு தன் ஆளுகையின் கீழ் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சமமாக நடத்த வேண்டும்? அவ்வாறுதான் நடக்கிறதா?

கீழே உள்ளது கயர்லாஞ்சியில் ஆதிக்க சாதியினர் செய்த சித்தரவதையின் சிறு பகுதி....

“குடிசைக்குள் புகுந்த உயர் ஜாதி இந்துக்கள், (பெண்கள் பலரும் அக்கூட்டத்துடன் வந்தனர்.) அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்திக் கையோடு கொண்டுவந்திருந்த ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டுவந்து போட்மாங்கேவின் மனைவியையும் மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்துநின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த உயர் ஜாதி இந்துப் பெண்கள் யாரும் தம் ஆண்களின் வெறிபிடித்த இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை. பிறகு ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு போட்மாங்கேவின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண் உறுப்புகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு ரத்தம் தெறிக்கும் அவர்களது உடல்களை ஆகாயத்தில் தூக்கி எறிந்து விளையாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை நான் முந்தி நீ முந்தி எனப் பலரும் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர். குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர்.”

இதைப் படிக்கும்போது ஒரு கணம் உடல் அதிரவில்லையா? ஒரு தலித்தாக இருந்துகொண்டு சொந்த நிலம் வைத்திருந்ததையும், தன் பயிர்கள் மீது உயர்சாதியினர் டிராக்டர் ஏற்றி நாசம் செய்தபோது அதற்கு நியாயம் கேட்டதையும் தவிர போட்மாங்கே செய்த தவறு என்ன? இந்த கொடூரங்களை அரங்கேற்றியவர்களும், செத்துப்போனவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். இருவரும் ஒன்றா? ‘இந்த நாட்டின் மீது எனக்கு பற்று இல்லாமல் போனதற்கு நான் காரணம் அல்ல. நான் வாழ்வதற்கு உரிய குறைந்தப்பட்ச உரிமைகளைக் கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அந்த நிலை கொஞ்சமும் குறையாமல் இந்த நாடு என்பது ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சேவை செய்யும் நிறுவனமாக இருக்கும் நிலையில் தேசபக்தி எப்படி வரும்?



இந்திய தேசபக்தி என்பதே இந்து தேசபக்திதான். இதை இந்திய தேசியம் என்ற கற்பிதத்தின் பெயரால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஊட்டியதில் காந்திக்கு பெரும்பங்கு உண்டு. ‘நான் ஒரு சனாதான இந்து’ என்று அறிவித்துக்கொண்ட காந்தி இந்திய தேசியம் என்பது இந்து தேசியம்தான் என்பதை பல சமயங்களில் மிக வெளிப்படையாகவே அறிவித்தவர். தலித்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை வேண்டும் என்ற அம்பேத்கரின் கோரிக்கையை, ‘அப்படி செய்தால் இந்து மதம் பிளவுபட்டு விடும்’ என்று சொல்லி நிராகரித்தவர். பிரிட்டீஷ் அரசு தலித் மக்களுக்கு அந்த உரிமையை வழங்கியபோது அதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த காந்தி எப்படி இந்த நாட்டு தலித் மக்களுக்கு ‘தேசப்பிதா’வாக இருக்க முடியும்? இப்போது இந்துத்துவா அமைப்புகள் பழங்குடி மக்களிடமும் தங்களின் பாசிச கருத்துக்களை விதைக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றன. அவர்களின் பழங்குடி கலாச்சாரத்தை நீக்கம் செய்து ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு இந்துத்துவ வகுப்பு எடுக்கிறது. குஜராத்தில் பழங்குடி மக்களைக் கொண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை மோடி கட்டவிழ்த்து விட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடிப்படையில் தேசியம் என்பதே மற்றமைகளை மறுக்கிற ஒன்றுதான். அது இந்திய தேசியமாக இருந்தாலும், தமிழ் தேசியமாக இருந்தாலும்... தேசியம் என்ற கருதுகோளே நிபந்தணையற்ற ஜனநாயகத்தை மறுப்பதில்தான் தொடங்குகிறது. அதுவே பின்பு அடக்குமுறையாகவும், அதிகாரமாகவும் மாற்றம் கொள்கிறது. இந்தியா என்பது பல்தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பதையும் நாம் இந்த பின்னணியில் இருந்துதான் வாசிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா என்ற நிலப்பரப்புக்கு எவ்வகையிலும் சம்பந்தப்படாத வட கிழக்கு மாநில மக்களை இந்திய தேசிய வரையறைக்குள் எப்படி சேர்க்க முடியும்?

ஏறக்குறைய அனைத்துப் பார்ப்பனர்களுமே இந்திய தேசியத்தை வலியுறுத்துகின்றனர். தமிழ் தேசியம் பேசும் பார்பனர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணம் தாங்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள் இல்லை என்ற உண்மையை அவர்களின் அடிமனம் எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. தங்களுக்கு என்ற சொந்த நாடு இல்லாத அவர்களின் மனநிலையானது அடுத்தவன் ஒரு நாடு அடைவதையும் தடுக்கிறது. அதனால்தான் பெரும்பான்மை பார்ப்பனர்கள் தமிழீழம் என்பதற்கும் எதிராக இருந்தார்கள், இருக்கிறார்கள். இந்த இந்துத்துவவாதிகள்தான் இந்திய தேசியத்தை தேசபக்தியின் பெயரால் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

உண்மையில் மக்களின் மனங்களில் இருந்து தேசியம் துடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசியவெறி இல்லை. தேச எல்லைகள் தேவையாய் இல்லை. இதற்கு உலகமயமாதல் உட்பட பல காரணங்கள். இந்த நிலைக்கு எதிர்மாறாக உலகம் முழுக்க ஆளும் வர்க்கத்தால் தேசியவெறி திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது. காரணம் ஆளும் முதலாளிகளுக்கு தேசிய வெறி என்பது மிகத் தேவையான ஒன்று. அழிவின் விளிம்பில் நிற்கும் முதலாளித்துவமானது, தனது இருப்பை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களிடம் தேசியவெறியை தூண்விடுகிறது. இதை முறியடிக்க வேண்டுமானால் முதலில் நாம் இந்த முதலாளித்துவ தேசியத்தின் துரோகிகளாக மனமாற்றம் கொள்ள வேண்டும். தேசபக்தனில் இருந்து தேசத்துரோகியாக மாறுவது ஒன்றே அறம் சார்ந்த வாழ்வாக இருக்க முடியும்!




கருத்துகள்

பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
யாருமே படிக்கலையா... இல்லை... டவுசர் கழண்டு ஓடிட்டாங்களா?
கையேடு இவ்வாறு கூறியுள்ளார்…
//யாருமே படிக்கலையா... இல்லை... டவுசர் கழண்டு ஓடிட்டாங்களா?//

:))

மக்களை நிபந்தனையின்று ஒன்றுபடுத்த இருத்தலை ஆபத்துக்குள்ளாக்கும் ஒரு எதிர்வுக் கட்டமைப்பு எப்போதும் தேவைப்படுகிறது இல்லையா.

இப்போவெல்லாம் அரசின் ஏதாவது ஒரு செயலை விமர்சித்தாலே தீவிரவாதி இல்ல கைக்கூலின்னு வேற சொல்லிட்றாங்க..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
////தேசபக்தனில் இருந்து தேசத்துரோகியாக மாறுவது ஒன்றே அறம் சார்ந்த வாழ்வாக இருக்க முடியும்.////

தேசத்துரோகி என்கிற பின் நவீன சொல்லாடல்கள் எல்லாம் எதற்கு ஆழியூரான், அதற்கெல்லாம் ஏதேனும் பொருளாவது இருக்கிறதா ? தேசத்துரோகத்திற்கும் தேசப்பற்றுக்கும் சுருக்கமாக ஒரு சிறு குறிப்பு தாருங்களேன்.

மக்களை நேசிப்பது தான் தேசப்பற்று.உங்கள் பார்வையின்படி பகத்சிங் தேசப்பற்றாளனா தேசத்துரோகியா ?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
////தேசபக்தனில் இருந்து தேசத்துரோகியாக மாறுவது ஒன்றே அறம் சார்ந்த வாழ்வாக இருக்க முடியும்.////

தேசத்துரோகி என்கிற பின் நவீன சொல்லாடல்கள் எல்லாம் எதற்கு ஆழியூரான், அதற்கெல்லாம் ஏதேனும் பொருளாவது இருக்கிறதா ? தேசத்துரோகத்திற்கும் தேசப்பற்றுக்கும் சுருக்கமாக ஒரு சிறு குறிப்பு தாருங்களேன்.

மக்களை நேசிப்பது தான் தேசப்பற்று.உங்கள் பார்வையின்படி பகத்சிங் தேசப்பற்றாளனா தேசத்துரோகியா ?
சுகுணாதிவாகர் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு. அமெரிக்காவில் செப்.11 தாக்குதலின்போது பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அமெரிக்க அரசு ரத்தம் வேண்டி அறிவிப்பு வெளியிட்டது. தேவைக்கு அதிகமாக ரத்தம் குவிய, மீதியுள்ள ரத்தத்தைக் கடலில் கொட்டியது. மருத்துவ அறத்தை மீறிய செயல் இது. அதேபோல் போரில் மரணமடைந்த வீரர்களின் உடுப்புகளை மட்டுமே வீட்டிற்கு அனுப்புவது இந்திய ராணுவ மரபு. ஆனால் கார்கில் போரின்போதோ இறந்த வீரர்களின் உடலை வீதி வீதியாக ஊர்வலம் நடத்தியது. இவை இரண்டும் தேசபக்தியின் அயோக்கியத்தனத்திற்கான சாட்சியங்கள்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
@ கையேடு... ஆம். விமர்சனம் என்பதே இப்போது எதிர்ப்பு என்றுதான் புரிந்துகொள்ளப்படுகிறது.

@ ’தேசத்துரோகி’ என்ற சொல் பின்நவீனத்துவ சொல்தான். அதைப் பயன்படுத்துவதினாலேயே பொருள் திரிந்துவிடுவதாக நான் நினைக்கவில்லை. சொல்வதை வீச்சோடு சொல்லவே அவ்வார்த்தையை தேர்ந்தெடுத்தேன். சிறுகுறிப்பு...பகத்சிங்னு நீங்க ஏதோ பத்தாங்கிளாஸ் பரிச்சையில கேக்குற கணக்காவே கேக்குறீங்களே தோழர்?
Barari இவ்வாறு கூறியுள்ளார்…
unmai emdra intha neruppu palarai sudum.vazthukal aziyuraare.
யுவகிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழி!

நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் கயர்லாஞ்சி சித்திரவதை பத்தி கண்ணீரை வரவழைக்கிறது. அது எந்த கட்டுரை/புத்தகம் என்று குறிப்பிட முடியுமா?
Athisha இவ்வாறு கூறியுள்ளார்…
ஜெய் ஹோ!..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
லக்கி.... கீழே உள்ள காலச்சுவடு இணைப்பில் முழு கட்டுரையையும் வாசிக்கலாம்.

http://www.kalachuvadu.com/issue-107/page62.asp
சென்ஷி இவ்வாறு கூறியுள்ளார்…
மற்றுமொரு சிறந்த பதிவு!!
passerby இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழமான சிந்தனை. பாராட்டுக்கள்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
சென்ஷி... நீங்கள் இன்னும் விரிவாக எதுவும் சொல்வீர்கள் என நினைத்தேன். நன்றி.

அதிஷா... யோவ்.. என்னத்த எழுதினாலும் மையமா ரெண்டு மூணு வார்த்தையில கமெண்ட் போடுறீங்களே...

கள்ளபிரான்.. நன்றி.
seethag இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான், தேசியம் என்பது கண்டிப்பாக ஒருசிலரிம் தேவைதான் .அதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. ஆனால் இஸ்லாமியர்களுக்கு வீடு கிடைக்காததர்க்கும் தேசிய உணர்வுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. mass hysteria and mass paranoia are a society's sickness.

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், நாங்கள் திருவண்ணாமலையில் வீடு கட்டும் போது அங்கேயே தங்க ஒரு வீடு தேடினோம்.சுலபமாக கிடக்க்கவில்லை.ஏன் தெரியுமா?நாங்கள் இந்தியர்கள் என்பதே. முடிவில் ஒரு அமநிற்க்கக்ேரிக்க பெண்ன்மணியின் அறிவுறயின் பேரில் நாந்ங்கள் வெளினாட்டில் வாழ்வதைபற்றி சொன்ன பிறகே வீடு கிடைத்தது. இதில் தேசியம் எங்கே வந்த்தது?ECONOMICS takes precedence in anything ,right?மேலும் இந்தமுறை விடுமுறையில் சென்றபோது ஒரு அமேரிக்கர் என்னைஅவருடய இடத்தில் நிற்க்கக்கூடாது என்று கட்டலை இட்டார். இத்தனஐக்கும் அவர் சட்டப்படி இடம் வாங்கமுடியாது.

நாங்கள் சிறுவயதில் ஒரு மாவட்டத்தில் குடியிருந்தோம்.அப்போது, அங்கே ஒரு குறிப்பட் மதத்தினர் பெருவாரியாக இருப்பார்கள். அவர்கள் இந்துக்களுக்க்உ வீடு கொடுக்க மாட்டார்கள். ஏன் தெரியுமா?இந்துக்கள் கோலம் போன்றவை போடுவத்தால் பேய் வரும் என்ற பயமும் அவர்கள் வண்அங்கும் விக்கிரகன்ங்கள் ,பேய்கள் என்ற பயமும் இருந்த்தால்.

every society has its own fear and mass stupidity.

மதம் மட்டுமே மக்களை முதட்டாள் ஆகுகிறடென்றால் வங்காள தேசம் வந்திருக்க முடியாதே?இதே பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் வங்காள பெண்களை கற்பழிக்கும் போது அவர்கள் வஙாளிகளாக தெரிந்தார்களே ஒழிய இஸ்லாமியர் களாக தெரியவில்லஇ.இங்கே அனைவரும் கொண்டாடும் மொழி வேட்ட்க்கை முன்னே நின்றது.இல்லையா?
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள சீதா... இஸ்லாமியர்களுக்கு வீடு கிடைக்காததையும், தேசிய உணர்வையும் சம்பந்தப்படுத்தி நானும் எதுவும் எழுதவில்லையே... நீங்கள் இதற்கு முந்தைய உன்னைப் போல் ஒருவன் பற்றிய கட்டுரையில் எழுதியதை இதனுடன் குழப்பிக்கொண்டு விட்டீர்கள்.

ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் விசயங்களுடன் ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. வீடு வாடகைக்குக் கிடைப்பதை வைத்து மட்டுமே இதை எடையிட முடியாது. இந்து மதத்தின் இஸ்லாமிய விரோத மனப்போக்கினை, 'இஸ்லாமியர்கள் சில ஊர்களில் இந்துக்களுக்கு வீடு கொடுப்பதில்லை" என்ற வாதத்தை வைத்து சமன்படுத்துவது சரியென நினைக்கிறீர்களா? இந்து மதத்தை பற்றிய விமர்சனங்கள் உங்களை பதற்றமடைய செய்ததுபோல் தெரிகிறது. எனக்கு அதிக நேரமில்லை. பிறகொரு சந்தர்ப்பத்தில் இதைப்பற்றி விரிவாகப் பேசுவோம். நன்றி
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
):
தமிழ் அஞ்சல் இவ்வாறு கூறியுள்ளார்…
தேசபக்தியை பலர் வியாபாரமாக்கி விட்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் இந்திய தேச பக்தி இஸ்லாமிய விரோதப்போக்கினை வளர்க்கிறது என்று கூறும் விதமாக நீங்கள் எழுதியிருப்பது சரியல்ல.


மற்றபடி நல்லதொரு அலசல் ! உயர்மட்ட வியாபாரிகளை சாடியுள்ளீர்கள்
seethag இவ்வாறு கூறியுள்ளார்…
இஸ்லாமியர்கள் சில ஊர்களில் இந்துக்களுக்கு வீடு கொடுப்பதில்லை" என்ற வாதத்தை வைத்து சமன்படுத்துவது சரியென நினைக்கிறீர்களா?
???????????????:):):)??????
எதிர்கட்சி..! இவ்வாறு கூறியுள்ளார்…
டவுசர் கழண்டு ஓடிட்டாங்களா " என பீற்றிய நீங்கள்

டவுசர் கழன்டத்தை மறைக்கிரீர்களோ.. பதிலை காணோம் ..

எப்படியோ நன்றாக இருந்தால் சரி ...
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
திரு. எதிர்கட்சி... டவுசர் கழன்டு ஓடிட்டாங்களா.. என்ற கமெண்ட் பிளாக்குகளில் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிவீர்கள்தானே... நான் ஒரு ராவான விசயத்தை எழுதியிருப்பதால் யாரும் நெடுநேரமாக கண்டுகொள்ளவில்லைப்போல என எழுதிய பின்னூட்டம் அது. மற்றபடி 'யாரும் மறுத்துப் பேச முடியாத மகாபுத்திசாலித்தனமான கருத்து ஒன்றை எழுதிவிட்டோம். அதனால் படித்ததும் எல்லோரும் டவுசர் கழன்று ஓடிவிட்டார்கள்' என‌ நினைத்து எழுதப்பட்டதல்ல. அப்படி ஒரு புதிய புண்ணாக்கு கருத்தும் இந்தக் கட்டுரையில் இல்லை. எல்லாமே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வெறு நபர்களால் சொல்லப்பட்ட ஒன்றுதான். இங்கு எழுதப்பட்டிருப்பது என் கருத்து, அவ்வளவே. நிற்க...

உங்கள் நீண்ட பின்னூட்டங்களூக்கு பதில் சொல்லவே விருப்பம். அதற்கு தோதான அளவுக்கு நேரம் இல்லை. அலுவலக மற்றும் நண்பரின் கம்ப்யூட்டர்களையே நம்பியிருக்கிறேன். எனவே பதிவுகள் எழுதவும், பதில் சொல்லவுமான நேரத்தை என் கம்ப்யூட்டர்களே முடிவு செய்கின்றன.
தமிழ் அஞ்சல் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லது! எதிர்நோக்கியிருக்கிறேன் !உங்கள் பதிலை !
தமிழ் அஞ்சல் இவ்வாறு கூறியுள்ளார்…
எதிர்கட்சி ஆளுங்கட்ச்சி ஆனவிதத்தை அம்பலப்படுத்துங்கள்
எதிர்கட்சி..! இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆழியூரான். said...
திரு. எதிர்கட்சி... டவுசர் கழன்டு ஓடிட்டாங்களா.. என்ற கமெண்ட் பிளாக்குகளில் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிவீர்கள்தானே... நான் ஒரு ராவான விசயத்தை எழுதியிருப்பதால் யாரும் நெடுநேரமாக கண்டுகொள்ளவில்லைப்போல என எழுதிய பின்னூட்டம் அது. மற்றபடி 'யாரும் மறுத்துப் பேச முடியாத மகாபுத்திசாலித்தனமான கருத்து ஒன்றை எழுதிவிட்டோம். அதனால் படித்ததும் எல்லோரும் டவுசர் கழன்று ஓடிவிட்டார்கள்' என‌ நினைத்து எழுதப்பட்டதல்ல. அப்படி ஒரு புதிய புண்ணாக்கு கருத்தும் இந்தக் கட்டுரையில் இல்லை. எல்லாமே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வெறு நபர்களால் சொல்லப்பட்ட ஒன்றுதான். இங்கு எழுதப்பட்டிருப்பது என் கருத்து, அவ்வளவே. நிற்க...///

,

உங்கள் சொந்த கருத்தாகத்தாநிருக்கும் என்று எதிர்பார்த்தேன் ,
உறையூர்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
தேசபக்தி என்பது அரசியல் வியாபாரத்தின் ஒரு அதிமுக்கியமான பிராண்டு. அதன் பிராண்டு வால்யூவை வைத்துதான் பல கட்சிகள்/அமைப்புகள் பிழைப்பு நடத்துகின்றன.

இந்து தேசியம் என்பது அதைவிட காமெடி. 80களில் மும்பைத் தமிழர்களை (அதில் பெரும்பாண்மையினர் இந்துக்கள்) லுங்கிவாலாக்கள் என்று விரட்டயடித்த கட்சிகளுக்கெல்லாம் பிராண்டு வால்யூ இந்து தேசியம்தான். இவர்களிடம் போய் அப்புறம் ஏன்டா இந்துக்களை மும்பையை விட்டு விரட்டுகிறீர்கள் என்றால் பதில் வராது. இதில் உட்சகட்ட காமெடி என்னவென்றால் சிவசேனாவிற்கு தமிழகத்தில் கிளைகள் இருப்பது. (தமிழன் ரொம்ப நல்லவன்டா).

கர்நாடகாவில் தேசிய ஒருமைப்பாட்டு எனப்படும் கண்ணுக்கு புலப்படாத வஸ்துவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் காவிரி பிரச்சினையிலும் ஹோகேனக்கல் பிரச்சினையிலும் செயல்படும் தங்களது கட்சியினர் மீது எந்த தேசியகட்சியாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா? இதெல்லாம் தமிழ்நாட்டு தேசியவாதிகளுக்கு உரைக்காது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தேசபக்தர்கள் அயோக்கியர்கள் என்றால் தமிழ் ஈழ தேசபக்தர் பிரபாகரன் மகா யோக்கியனா ?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தனித் தமிழ் நாடு கோரிய தி.க தலைவர்கள் ஈ.வெ.ரா, முதல் கருணாநிதிவரை மொழித் தேசியம் பேசித்தானே வந்தார்கள்.

மொழித்தேசியம் அவர்களுக்கு பதவிக்கு வருவதற்குப் பயன்பட்டது என்று ஓப்பனாக எழுத வக்கில்லாத வெங்காயங்கள் முதலாளித்துவ தேசியம் இந்து தேசியம் பற்றியெல்லாம் ஏன் பேசவேண்டும்?

சீனாவின் ஹான் இனத்தவர்கள் வலுக்கட்டாயமாக திபெத்தில் குடியமர்ந்து செய்வதன் பெயர் என்ன? கம்யூனிஸ தேசியமா ?

நீயும் உன் மூஞ்சி மொகரகட்டையும், உன் கட்டுரையும்...waste of bandwidth on the internet.
பிரதீப் - கற்றது நிதியியல்! இவ்வாறு கூறியுள்ளார்…
//எல்லையோரத்தில் துப்பாக்கிக்களுக்கு இரையாகும் அப்பாவி ராணுவ வீரன் தேசபக்தியாளனாகக் கொண்டாடப்படுகிறான். இதன்மூலம் அவனை கொன்றது அரசதிகாரம்தான் என்ற உண்மை மறைக்கப்பட்டு தேசபக்தியின் பெயரால் ஒரு கொலை, தியாகமாக்கப்படுகிறது.//

ஓவ்வொரு வரியும் வைரம். இப்படி ஒரு கட்டுரை படித்து ரொம்பவே நாளாகி விட்டது.

10/10

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்