கங்காணி..!




அவனுக்கு சுப்பிரமணின்னு பேரு. ஆனா ஊருமுழுக்க ‘செவத்தான்’னுதான் கூப்பிடுறது. அப்படி ஒண்ணும் அந்தப்பய வெள்ளைக்காரன் கலர் கிடையாது. தார் டின்னுக்கு கால் முளைச்ச மாதிரிதான் இருப்பான். எப்படியோ அப்படி ஒரு பேராகிப்போச்சு. இன்ன வேலைன்னு கிடையாது.. கல்யாண வீட்டுல பந்தல் போடுவான். தென்னமட்டைவொளை வாங்கியாந்து ஊறவச்சு, நறுவுசா கீத்து பின்னுவான். இங்கேருந்து கருக்காக்கோட்டை வரைக்கும் கூரை மேய போவான். மீன்வாங்கப்போனபய, குளத்துல இறங்கி வலை போட்டுகிட்டு நிப்பான். சித்தன்பாடு, சிவன்பாடுதான் அவம் பொழப்பு. ஆனா அவனுக்குன்னு ஒரு காலம் உண்டு. அந்த நேரத்துல அவன்தான் ராசா.

ஆத்துல தண்ணி வந்துட்டா ஊருக்குள்ள பெரிய வாத்தியைவிடவும் அவனுக்குதான் மதிப்பு அதிகம். எந்த விவசாய வேலையா இருந்தாலும் கூலியாளுக்கு அவன்கிட்டதான் வந்தாகனும். சேறடிக்க, வரப்புவெட்ட, நாத்தறிக்க, ஏர் ஓட்ட, பரம்பு செட்டு வைக்க, நடவு நட, களைபறிக்க, அறுப்பு அறுக்கன்னு எல்லாத்துக்கும் அவன்தான் கங்கானி. இன்ன கிழமைக்கு இன்ன வேலைக்கு இத்தனை பேரு வேணும்னு ரெண்டு நாளைக்கு முந்தி சொல்லிட்டாப் போதும்... டான்னு ஆளோட வந்துடுவான். அதுக்கு முன்னாடி கூலியாளுக்கு உண்டான காசையும், கங்காணி காசையும் மொத நாளே வாங்கிடுவான். ஆளுக வேலை முடிஞ்சு கரை ஏறுனுச்சுன்னா, மாத்தி வெச்ச நோட்டை எண்ணிக் குடுக்க ரெடியா நிப்பான். இதனாலதான் கூலியாளுக அத்தனை பேத்துக்கும் அவன் மேல அப்படி ஒரு நம்பிக்கை. அவன்கிட்ட எப்பவும் ஐம்பது, நூறு ஆளுக கைப்பாடா இருக்கும்.

மூணாம் வருஷம் பயங்கர ஆள் தட்டுப்பாடு. வெளியூர் ஆளையெல்லாம் டிரக் வச்சு அழைச்சுட்டு வந்து வேலை நடக்குது. கூலியும் எக்குத்தப்பா ஏறிப்போச்சு. செவத்தான்கிட்ட இருந்த ஆளுகல்லாம் மத்த இடத்தைப்போல கூலியை ஏத்தி வாங்கிக்கொடுக்கச் சொல்லிக் கேக்குது. இவனுக்கு மனசு கேக்கலை. ‘‘வெளையுறதை வித்தா போட்ட காசையே எடுக்க முடியலை. வெளியூர்காரன் அப்படி பண்றான்னு நம்மளும் பண்ணமுடியுமா..? அனுசரிச்சுப் போவியளா..’’ன்னு அதட்டுன அவன், அதோட நிக்கலை. அந்த வருஷம் கிட்டத்தட்ட நூறு ஆளுங்களை வெச்சுகிட்டு, ராத்திரி நடவெல்லாம் நட்டு குடுத்தான். ஆளுக அவனுக்கு மட்டும் கங்காணி காசை கூட்டிக்குடுத்தப்போ, ‘‘வந்துட்டவொ வள்ளலு..’’ன்னு தட்டிவிட்டுட்டுப் போயிட்டான்.

எல்லாம் மிஷினாகிப் பின்னாடி செவத்தானோட கங்காணி பொழப்பும் மண்ணாப்போச்சு. அறுப்பு அறுக்குற மெஷின்கிட்டப்போயி, ‘நாளைக்கு கீழவீட்டுக்காரனுக்கு அறுப்பு. கருக்கல்ல வந்துசேரு..’ன்னு சொன்னா மெஷின் வந்திரவாப் போவுது..? இதைப்பத்தி செவத்தான்கிட்ட கேட்டா இறங்கிப்போன குரல்ல அவன் சொல்றான், ‘‘மிஷினு வரட்டும்ணே... இப்படி மனுஷங்க நாயி மாறி கெடந்து கஷ்டப்படாம மிஷினு அந்த வேலைவொளைப் பார்க்குறது நல்ல விஷயம்தான். ஆனா இத்தனை நாளா இந்த வெள்ளாமை வேலையை நம்பியே பொழச்சுக் கெடந்த ஆளுவொளுக்கு வேற என்னா மாத்து? எனக்காவது ஒண்ணுக்கு நாலா பொழப்பு தெரியும். கூரை மேய்ஞ்சோ, மீன் பிடிச்சோ என் பொழப்பு ஓடிரும். மத்தவன் பாடு என்னத்துக்கு ஆவ..?’’

கருத்துகள்

லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கதை.

ஆனால் நீங்களும் பின்நவீனத்துவ அறிவுஜீவி ஆகிவிட்டீர்களோ என்று ஐயம் வருகிறது. ஏனென்றால் பத்தியே பிரிக்காமல் ஒரே பத்தியாக டெர்ரராக எழுதி தாவூ தீரவைக்கிறீர்களே? :-)
நாடோடி இலக்கியன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை நண்பா..!

மெஷின் வந்த பிறகு திருப்பூர், கேரளான்னு நிறைய பேரு போயிட்டாங்க,பொங்க,தீவிளிக்குதான் ஊரு பக்க வாரதுன்னு ஆயிபோச்சு...
தஞ்சை வட்டார வழக்கு(ஒரத்தநாடு) எத்தனை பேருக்கு புரியும்னு தெரியலியே..!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
லக்கி... எது ஒண்ணும் புரியலன்னாலும் அது பீனா நானாதானா..? :)
உண்மையில் இப்படிப்பட்ட சிறிய கதைகள் நான் எழுதியதே இல்லை. ஒரு வருடத்துக்கு முன்பு ஒரு பத்திரிகையில் அவசரமாக ஏதாவது விவசாயம் தொடர்பாக ஒரு பக்க அளவுக்கு கதை வேண்டுமெனக் கேட்டபோது எழுதியது. சும்மாக் கெடக்கிறதே என இப்போது எடுத்து பிளாக்கில் போட்டேன்.

நாடோடி இலக்கியன்... விவசாயம் பற்றி எழுதுவதற்கு ஏராளம் இருக்கிறது. முழுமையான ஒரத்தநாடு வட்டார வழக்கில் நீண்ட கதைகள் எழுத வேண்டும் என ஆசை. எனக்கே பல வார்த்தைகள் மறந்துபோய்விட்டன. அம்மாவும், அக்காவும் பேசும்போதுதான் ஞாபகத்துக்கு வருகின்றன. எப்படியும் எழுத வேண்டும்.
ஆடுமாடு இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லாருக்குஜி. இது ஒரத்தநாடு வழக்கா? நெல்லை வழக்கு மாதிரிலா இருக்கு.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் ஆடுமாடு... ஒரத்தநாடு வட்டார வழக்கின் சில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறேன்.
’வந்துட்டாவ’ என்பது நெல்லை வழக்கு. ‘வந்துட்டவொ’ என்பது ஒரத்தநாடு வழக்கு. ‘எப்பம் வந்தீய.’ என்பது நெல்லையின் ஒரு பகுதி வழக்கு. ‘எப்ப வந்தீய’ என்பது தஞ்சையின் ஒரு பகுதி வழக்கு.
நேசமித்ரன் இவ்வாறு கூறியுள்ளார்…
'வந்துட்டுட்டாவ வள்ளல் ' அழகான சொல்லாடல் .எவ்வளவு பெரிய விசயத்தை எவ்வளவு எளிதாக சொல்லி போகிறார்கள் அம்மனிதர்கள் . நல்ல கதை
Grannytherapy இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கதை.பாட்டி வைத்தியம் என்ற இணையதளம் சேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயத்திரவாழ்க்கை நோக்கி செல்கிறான்.ஆதலால் பாட்டிவைத்திய முறைகளை மறந்துவிட்டான்.
எங்களின் இணையதளம்
http://www.grannytherapy.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்