10-6-09

உதிரிகள் பேசட்டும், ஊடகப்போர் முடியட்டும்..!



அதிகாரங்கள் உற்பத்தி செய்த சொல்லாடல்கள் காற்றெங்கும் அலைந்து திரிகின்றன. அவற்றை உச்சரிக்கவும், அவற்றால் சிந்திக்கவும் நமது மனங்கள் வலிந்து பழக்கப்படுத்தப்படுகின்றன. தான் விரும்பும் திசைநோக்கி உரையாடலை இட்டுச்செல்லும் தர்க்கங்களை மட்டுமே அதிகாரம் மறுமறுபடியும் உலவவிடுகிறது. இன்றைய நமது பேச்சும் செயலும் கருவிகளாக இருக்க, ஒரு தொலையியக்கி மூலம் அதிகாரம்தான் நம்மை செலுத்திக்கொண்டிருக்கிறது.

( சமூக விழிப்புணர்வு இதழுக்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை கொஞ்சம் நீளமாக இருக்கும் என்ற எச்சரிக்கையை இங்கேயே விடுக்கிறேன்)

ஒரு தேசிய இனத்தின் வீரம் செறிந்த ஆயுதப் போராட்டம் இலங்கைத்தீவில் ஒடுக்கப்பட்டிருக்கிறது. அமைதியின்பால் பெருவிருப்புக் கொண்ட ஓர் இனம், ஆயுதம் தரிக்க வேண்டியதன் பின்னுள்ள நியாயங்களை உலகம் பேசத் தொடங்கும் முன்பே அந்த இனத்தின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிங்களத் தீவின் காற்றில் பிணவாடை வீசிக்கொண்டிருக்க, நாம் துயரத்தின் மொழியுடன் தோல்வியை எழுதிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த கொடுஞ்சமரின் பங்காளிகள் சிங்கள பேரினவாதமும், தெற்காசிய, உலக வல்லாதிக்க தேசங்களும் மட்டும்தானா..? ஒரு பெருந்திரளான மக்கள் கூட்டம் செத்து மடிவதை தன் மௌனத்தால் அங்கீகரித்த ஊடகங்களும் இந்த கொலைகளில் கை நனைத்திருக்கின்றன. வன்னித் தமிழனை பிணமாக்கி புதைத்ததில் ஊடகங்களுக்கும் பங்குண்டு.

மற்ற மொழி ஊடகங்களை விட, ஈழப் போராட்டத்தின் நியாயங்களை உலக்குக்கு உரத்தக் குரலில் எடுத்துச் சொல்ல வேண்டிய பெரிய கடமை தமிழ் ஊடகங்களுக்குதான் இருக்கிறது. ஒரே மொழி பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயங்களை அந்த மொழி ஊடகங்களை விட வேறு யார் அதிகம் அறிந்திருக்க இயலும்? ஆனால் தமிழகத்து ஊடகங்கள் ஈழப் போர் பற்றிய செய்திகளை, ஒடுக்குபவனின் பக்கம் நின்று அவன் குரலில் பேசின/பேசுகின்றன. விடுதலைப் புலிகள் தங்களின் பெரும்பகுதி நிலப்பரப்பை இழந்துவிட்ட நிலையில் மிச்சமிருந்த இரண்டு விமானங்களைக் கொண்டு கொழும்பு அரசாங்க கட்டடத்தின் மீது தற்கொலைத் தாக்குல் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில் சிங்கள வான் படைகள் தமிழர் பகுதிகள் மீது மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொண்டன. உடனே, ‘புலிகளின் விமானத் தாக்குதலுக்கு சிங்கள ராணுவம் பதிலடி’ என்று ஸ்க்ரோலிங் செய்தி வெளியிடுகிறது சன் டி.வி. ‘பதிலடி’ என்ற வார்த்தையை சிங்களனின் பக்கம் நின்றுகொண்டு சன் டி.வி. பேசுகிறது. புலிகளுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதில்லை என்பது உங்கள் கொள்கை முடிவு என்றால் ‘சிங்கள ராணுவம் எதிர் தாக்குதல்’ என்றல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்..?

இலங்கைப்போர் பற்றிய பெரும்பகுதி உண்மைகள் மக்களை சென்றடையவிடாமல் தடுக்கும் பணியை தமிழகக் காட்சி ஊடகங்கள் முன்னின்று செய்தன. அருகாமை தேசத்தில் இவ்வளவு பெரிய யுத்தம் நடக்கிறது, அத்தனை லட்சம் மக்கள் உறுப்பிழந்து, உணர்விழந்து, பசியாலும், பட்டினியாலும் செத்து மடியும்போது அதைப்பற்றி இந்த ஊடகங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. எத்தனையோ காட்சிப் பதிவுகள் வெளிவந்தும் அவற்றில் ஒரு சிறுபகுதியையும் எந்த தொலைகாட்சியும் ஒளிபரப்பவில்லை. எவன் எங்கு செத்தால் நமக்கென்னவென எந்த கவலையும் அற்று தனது வழக்கமான கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மூழ்கியிருந்தன. இலங்கைப் பிரச்னைக்காக தி.மு.க. அரசு ஒரு நாள் பந்த் நடத்தியபோது கலைஞர் டி.வி-யும், சன் டி.வி.யும் ‘விடுமுறை நாள் கொண்டாட்டம்’ என்று சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்பி அதைக் கொண்டாடின. எல்லாவற்றையும் பொழுதுபோக்காக மாற்றிவைத்திருக்கும் இந்த மீடியாக்கள் தமிழர்களின் பிணங்களையும் பொழுதுபோக்காக மாற்றின. ஐ.பி.எல். விளம்பர இடைவேளையிலும், மானாட மயிலாட விளம்பர இடைவேளையிலும் மட்டுமே இலங்கைப் பிரச்னையின் நடப்பு நிலையை அறிந்துகொள்ள பார்வையாளர்களின் மனங்களைத் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள். மக்கள் சாவதன் அரசியல் நியாயங்களைப் பேசுவதற்கு பதிலாக கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதுபோல் எத்தனை பேர் செத்தார்கள் என்று இழவு செய்தி சொல்வதுடன் ஊடகங்கள் ஒதுங்கிக்கொள்கின்றன.

சற்றே காட்சிகளை பின்னோக்கி நகர்த்தி கருணாநிதி கைதின்போது இவர்கள் நடத்திய நாடகங்களை நினைத்துப்பாருங்கள். காலையில் எழுந்து டி.வி-யைத் திறந்ததும் ‘ஐயோ கொல்றாங்களே..’ என்று கருணாநிதி அலறிய காட்சிகள் திரும்ப, திரும்பக் காட்டப்பட்டு தமிழகத்தில் மிகப்பெரிய பதட்டத்தை உருவாக்கினார்கள். அன்றைய நாள் தமிழகத்தின் துக்க தினமானது. வாகனங்கள் ஓடவில்லை, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அந்தக் காட்சிகளைப் பார்த்த தீவிர தி.மு.க. அனுதாபிகள் சிலர் கருணாநிதிக்கு நேர்ந்து நிலைகண்டு மனம் கலங்கி செத்தும் போனார்கள். ‘இது ஒரு சன் டி.வி. தயாரிப்பு’ என்று இறுதியில் போடவில்லை என்பதைத் தவிர அது சகல எடிட்டிங் நுட்பங்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு நாடகம். அந்த நாடகத்தை வைத்தே அவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டதாக சன் நெட்வொர்க் இருக்கிறது. ஆனால் இலங்கையில் இத்தனை ஆயிரம் மக்கள் செத்தபோது என்ன மயிறைப் பிடுங்கியது சன் டி.வி.? போர் உச்சத்தில் இருந்தபோதுதான் இவர்கள் ‘சிரிப்பொலி’ தொடங்கினார்கள். ‘என்னைத் தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாவேன், கட்டுவிரியனாவேன்’ என்று தினமும் தொலைகாட்சியில் வந்து அறுபதுகளின் வசனத்தைப் பேசிக்கொண்டிருக்கும் கருணாநிதி நாளையே இறந்துபோனால் அந்த நாளை இந்த தேசத்தின் துக்க நாளாக மாற்றும் பலம் சன் நெட்வொர்க்குக்கு உண்டு. நிச்சயம் செய்யவும் செய்வார்கள்.

*****************
இன்று தமிழ் மக்களின் சிந்தனைப்போக்கை வடிவமைப்பதில் சன் டி.வி-க்கு மிகப்பெரிய பங்குண்டு. சன் டி.வி. தொடங்கப்பட்ட பிறகான இந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழ் மனங்களில் அது செலுத்திய, செலுத்திக்கொண்டிருக்கும் செல்வாக்கு மிக உச்சமானது. தமிழ் மக்கள் எதைப்பேச வேண்டும், எதை சிந்திக்க வேண்டும் என சன் டி.வி.யே தீர்மானிக்கிறது. அரசியலானாலும், பொழுதுபோக்கானாலும் அது வழங்கும் தேர்வுகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இன்னொருபுறம் இலங்கைத் தீவின் தேசிய இனப் போராட்டத்தை அனைத்து ஆங்கில காட்சி ஊடகங்களும் தொடர்ந்து ஒரு தீவிரவாதத் தாக்குதலாகவே சித்தரிக்கின்றன. ஆங்கில ஊடகங்களுக்கான செய்தியாளர்களாக சென்னையில் இருக்கும் பலபேர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அது ஒரு பிரச்னை இல்லை. ஆனால் இவர்களுக்கு பிராந்திய, புவியியல், வரலாற்று அறிவு என்பது கொஞ்சமும் இல்லை. முத்துக்குமார் மரணத்தின்போது என்னிடம் டைம்ஸ் நவ் பெண் நிருபர் கேட்டார், ‘இவர் எதற்காக செத்துப்போனார்? இங்கு நிறைய சினிமா பர்சனாலிட்டிகள் வந்திருக்கிறார்கள். முத்துக்குமார் என்பவர் இவர்களில் யாருக்கும் ஃபேனா.?’ என்று. கோபப்படாமல் மெதுவாக அந்தப் பெண்ணுக்கு புரிய வைக்க நான் எடுத்த மெனக்கெடல்கள் எதுவும் பலன் தரவில்லை. ஈழத் தமிழர் பிரச்னையைப் பேசினால் அவர் உடனே புலிகளையும், காஷ்மீர் தீவிரவாதத்தையும் போகிறார். இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையே அந்தப் பெண்ணுக்கு புதிதாகவும், பதட்டம் தருவதாகவும் இருக்கிறது. ஊடகத்தில் பணிபுரிவதற்கான அடிப்படையான அறிவுக்கூட இவர்கள்தான் மக்களுக்கு செய்திகளைச் சொல்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் ராஜீவ்காந்தியை கொலை செய்வதற்காகவே புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டது என்று நினைப்பு. புலிகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் அடக்கப்பட்ட விதம், அதற்காக அவர்கள் போராடிய வரலாறுகள் எதையும் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. தமிழர்களுக்கான அரசியல் நியாயங்களைப் பேசாமல் உரிமைகளுக்காகப் பேசும் துப்பாக்கிகளின் தோட்டாக்களை மட்டுமே பார்ப்பது என்ன வகையான ஊடக அறம்? ‘ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது ஏன்?’ என்ற கேள்வியை ஆத்ம சுத்தியுடனும், அரசியல் தர்க்கங்களுடனும் இந்திய ஊடகங்கள் இதுவரைக்கும் அணுகியதே இல்லை. தன் இயக்கத்தின் அடிப்படையைக் கட்டமைத்துக்கொடுத்த இந்திரா காந்தியின் புதல்வனை, தன் தந்தையர் தேசம் என்று நம்பும் ஒரு தேசத்தின் தலைவனை, தன் இன விடுதலைக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டிய தெற்காசியப் வல்லாதிக்கத்தின் பிரதமரை புலிகள் ஏன் கொல்ல வேண்டும்? இந்த கேள்வி இதுவரைக்கும் இந்திய ஊடகங்களால் காத்திரமான குரலில் எழுப்பப்படவில்லை. விவாதங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதிப்படையினர் ஈழத் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய சித்திரவதைகள் பற்றியும் பேசுவதில்லை.

அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் போரில் செத்தபோது அதைப்பற்றி எவ்வித அக்கரையும் அற்று கள்ள மௌனம் சாதித்த இவர்கள்தான் ‘பிரபாகரன் மரணம்’ என இலங்கை ராணுவம் அறிவித்த உடனேயே அதைப்பற்றியே அலறினார்கள். சிறப்பு நிகழ்ச்சிகள் வெளியிட்டார்கள். பிரபாகரனை ராஜீவ்காந்தி கொலையாளி என தொடர்ந்து சித்தரித்தனர். சிங்கள பேரினவாதத்தின் குண்டுகளுக்கு பலியானவர்கள் அனைவருமே புலிகள் என்றார்கள். ஆனால் இதே இந்தியாவுக்குள் நரேந்திர மோடி என்றொரு இந்து பாசிஸ்ட் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மிகப்பெரிய படுகொலைகளை அரங்கேற்றினான். ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் எதற்கு சாகிறோம் என்பதுக்கூட தெரியாமல் சூலாயுதத்தின் வெறிக்கு பலியானார்கள். இந்த கொலைகளை செய்தவர்களின் வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் பெற்று நாடறிய வெளியிட்டது தெஹல்கா இதழ். ஆனால் இதுவரைக்கும் நரேந்திர மோடி என்னும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொலைகாரன் பற்றி இந்திய ஊடகங்கள் எந்த கேள்வியையும் எழுப்பவில்லை. கடந்துபோன தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடிதான். ’ஒரு கொலைகாரன் எப்படி இந்த தேசத்தின் பிரதமராக வர முடியும்?’ என்ற கேள்வியைக் கூட யாரும் எழுப்பத் தயாரில்லை. மோடியை கைது செய்ய வேண்டும், தூக்கில் போட வேண்டும் என்ற விவாதங்களை நடத்தவில்லை. மாறாக ‘விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமா..?’, ‘பிரபாகரன் பிடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமா..?’, ‘இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தனி நாடு வேண்டுமா..?’ என்பதுபோல கேள்விகளை எழுப்பி பார்வையாளர்களை வாக்களிக்கச் சொல்கிறார்கள். இதன்மூலம் தங்களது கருத்தை பொதுக்கருத்தாக்க முனைகிறார்கள்.

***********************************
ஆங்கில ஊடகங்களுக்கு இலங்கைப் பிரச்னைப்பற்றி பேச வேண்டும், கருத்துச் சொல்ல வேண்டும் என்றால் உடனே ‘லங்கா ரத்னா’ புகழ் என்.ராம், மாலன், சுதாங்கன், சோ, சூனா சாமி இவர்கள்தான் கிடைப்பார்கள். ஆறரை கோடி தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாய் மாறி இந்த பார்ப்பனர்கள் முன்வைக்கும் கருத்துக்களையே ஆங்கில ஊடகங்கள் தொடர்ந்து முன்னிருத்தி வருகின்றன. இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் பற்றி பேசவே பேசாமல், ‘பிரேமதாசா கொலை, ராஜீவ்காந்தி கொலை’ என தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் புள்ளியில் இருந்து விவாதத்தைத் தொடங்குகின்றனர். புலிகள் மீது தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் கூட விமர்சனம் இருக்கிறது. ஜனநாயகமற்ற தன்மை, அரசியல் தெளிவின்மை, உயிர்களை மதிக்காமை, கடுமையான கலாசார அடிப்படைவாதம் என புலிகள் மீதான அந்த விமர்சனங்கள் அனைத்துமே, புலிகளின் அடிப்படையான ஆயுதப் போராட்டத்தை நிராகரிப்பதாக இல்லை. ‘தனி நாடு’ என்னும் கோரிக்கையின் நியாயங்களை ஒதுக்குவது இல்லை. ஆனால் மேற்சொன்ன என்.ராம், மாலன், சுதாங்கன் வகையறா ஊடக பாசிஸ்ட்டுகள் தமிழ் மக்களின் நியாயங்களை முற்றாக புறமொதுக்கின்றனர். அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி வாழும் தங்களின் பச்சோந்தித்தனத்தையே பிறரிடமும் எதிர்பார்க்கின்றனர், அதையே பரிந்துரைக்கின்றனர். ‘வைதீகப் பார்ப்பானைவிட சவுண்டிப் பார்ப்பானிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று பெரியார் சொன்னதைப்போல இதில் முற்போக்கு பேசும் ஊடகப் பார்ப்பனர்களிடம் இரண்டு மடங்கு கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் இப்போது கருணாநிதியைத் திட்டுவதில் அத்தனை சந்தோஷம். கருணாநிதியின் துரோகத்தை விமர்சிக்கும் குரல்களுடன் தங்களை வலியவந்து இணைத்துக்கொள்கிறார்கள்.

மனித உரிமைக்கான மாற்றுக்குரலாக தன்னை ஊடகங்களில் தொடர்ந்து முன்னிருத்தி வரும் ஞாநி ஒரு காலத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து திரும்ப வேண்டும் என்று போராடிய குழுக்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஆனால் இன்று இத்தனை லட்சம் மக்கள் செத்து மடியும்போது, அதைப்பற்றி எழுதாமல் சமச்சீர் கல்வி பற்றி எழுதுகிறார். ‘புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும்’ என்று மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் பேசியதற்காக ப.சிதம்பரத்துக்கு பூச்செண்டு கொடுக்கிறார். முற்போக்கு புத்தகங்களுக்கான முகவரியாய் கிழக்குப் பதிப்பகத்தை சொல்லிக்கொள்ளும் பா.ராகவன், குமுதத்தில் ‘வல்வெட்டித்துரை வேலுப்பிள்ளை பிரபாகரன்’ என்ற தலைப்பில் பிரபாகரனைப்பற்றி தொடர் எழுதினார். ஒரு இயக்கத்தின் வரலாற்றை எதிலிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம், ஆனால் பா.ராகவன் சிங்கள ராணுவ அதிகாரி ஒருவர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இருந்து தொடங்கினார். இப்போது ‘பிரபாகரன் மரணம்’ என்ற செய்தியை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பெருவிருப்பத்தோடு பக்கம், பக்கமாய் எழுதி வருகிறார் இதே பாரா. ‘நமது நிருபர்’ என்ற போலிப்பெயரில் ஒழிந்துகொண்டு இன்னும் நாலு பக்கத்துக்கு எழுதுகிறார். பிரபாகரனின் உடல் ஊடகங்களில் காட்டப்படுவதற்கு முன்பே ‘தகர்ந்தது தமிழீழ கனவு: மகனுடன் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபாகரன்’ என்று எழுதினார் இதே பா.ராகவன். அந்தக் கட்டுரையையும் வெற்றிக்களிப்புடன் ராஜபக்‌ஷே சிரிக்கும் புகைப்படத்தையும் அட்டையில் வெளியிட்டு மகிழ்ந்தது குமுதம் ரிப்போர்ட்டர். விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டதில் இந்த பார்ப்பன ஊடகவியலாளர்களும், கன்வர்ட்டட் பார்ப்பனர் கருணாநிதியும் சம அளவுக்கு சந்தோஷம் அடைகிறார்கள்.

இன்னொரு பக்கம் கால் நூற்றாண்டு கால ஈழப் போராட்டத்தைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் மீடியா பாசிஸ்ட் இந்து ராம், இப்போது என்.டி.டி.வி-யுடன் இணைந்து NDTV HINDU என்ற பெயரில் காட்சி வழியாகவும் விஷம் பரப்பிவருகிறார். ராஜபக்ஷேவுக்கான அதிகாரப்பூர்வ இந்திய அச்சு ஊடகமாக ‘இந்து’வும், அதிகாரப்பூர்வ காட்சி ஊடகமாக NDTV HINDU-வும் இருக்கின்றன. போர் நடக்கும் பகுதிக்கு அனைத்துலக ஊடகங்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் போர் முனையில் இருந்து ரிப்போர்ட்டிங் செய்த ஒரே ஆள் தி இந்துவின் முரளிதர ரெட்டிதான். வட இந்திய ஊடகங்கள் ‘தி ஹிண்டு’வின் செய்திகளை அப்படியே பின்பற்றுகின்றன. சி.என்.என்.ஐ.பி.என்., ஆஜ்தக், டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டுடே என அனைத்து சேனல்களும் இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஒரே அணியில் நின்று சிங்களனின் குரலிலேயே பேசத் துணிவதன் பின்னால் ஹிண்டுவின் பலமான லாபி இருக்கிறது. ‘ராஜீவ் கொலையாளி’ என்ற ஒற்றைக் கோணத்தில் பிரபாகரனைப் பார்க்கும் இவர்கள், ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழ் மக்களின் போராட்டங்களை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தவும் செய்கிறார்கள். மறுபடியும் மறுபடியும் ஆங்கில அச்சு, காட்சி ஊடகங்களால் ‘Pro-Tamils’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இருப்பவன் தமிழ் ஆதரவாளனாக இல்லாமல் வேறு எப்படி இருப்பான்? Pro-Tamils-ஆக இல்லை என்றால்தானே தவறு? இப்படி சொல்வதன் மூலம் போராட்டங்களில் பங்கேற்காத மற்றவர்களை ‘Anti-Tamils’ என்று மறைமுகமாக சொல்ல விழைகிறது. தமிழ்நாட்டில் தினம், தினம் இப்படி Pro-Tamils என்ற வார்த்தையை உச்சரிக்கும் இவர்கள் Pro Hindi என்று பீகாரிலோ, Pro Maratti என மும்பையிலோ எழுதிவிட்டு உயிருடன் இருக்க முடியுமா..?



உண்மையில் தமிழகத்தில் தமிழ் இன உணர்வு என்பது கொஞ்சமும் இல்லை. ஆனால் எங்கோ ஒரு மூலையில் உணர்வுள்ள ஐம்பது பேர், நூறு பேர் சேர்ந்து நின்று கோஷம் போடுவதையும், ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் கூட இந்த ஆங்கில ஊடகங்கள் tamil chauvinism என்று வர்ணிக்கின்றன. தமிழ் இனவெறியாக பரப்புரை செய்கின்றன. சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது ‘ஒருவர் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. குற்றம் இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில் தமிழக பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் அவரைக் குற்றவாளிபோலவே சித்தரிக்கின்றன’ என்று ‘கல்கி’யின் ஆசிரியர் சீதாரவி ரொம்பவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார். ஜீவஜோதி வழக்கில் சரவணபவன் அண்ணாச்சி சிக்கியபோது அவரது பூர்வீகம் வரைக்கும் தோண்டி எழுதிய தமிழக புலனாய்வு இதழ்கள் சங்கராச்சாரியார் கைதின்போது மௌனித்துக்கிடந்தன. ‘இருள்நீக்கி சுப்பிரமணி’ என்ற சங்கராச்சாரியின் பெயரைக்கூட எழுதாமல் கடைசிவரை அவனை ஒரு மடாதிபதியாகவே நடத்தின. ‘மடத்தின் பாரம்பரிய பெருமை கெட்டுவிட்டது. அதை மறு சீரமைக்க வேண்டும்’ என இலக்கியப் பத்திரிகை காலச்சுவடு தொடங்கி அரசியல் பத்திரிகைகள் வரைக்கும் எழுதின. ஆனால் இப்போது பிரபாகரன் மரணத்தில் எத்தனையோ மர்மங்கள் கிளப்பப்படுகிறபோதும் அவற்றை ஒரு செய்தியாகக் கூட வெளியிட மனமில்லாமல், ‘கிடைத்தது உடல், தீர்ந்தது சந்தேகம்’ என எழுதுகிறது தினமலர். இந்திய காட்சி, அச்சு ஊடகங்களில் பெரும்பான்மையது சிங்கள தரப்பு வெளியிட்ட காட்சிகளையும், புகைப்படங்களையும் கேள்விகளின்றி வெளியிட்டன. போரை நிகழ்த்தும் ஒரு தரப்பு செய்தியை நடுநிலைபோல வெளியிடும் இவர்கள் புலிகள் தரப்பு வெளியிட்ட காட்சிகளையோ, படங்களையோ அதே முக்கியத்துவத்துடன் வெளியிடவில்லை.

***********************

தமிழகம் அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் ஊடகங்கள் இந்த அளவுக்கு அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. நேரடியாக அரசியல் கட்சிகள் நடத்தும் ஊடகங்களும், அவ்வப்போதைய ஆளும்கட்சியை ஆதரிக்கும் ஊடகங்களுமே இங்கு இருக்கின்றன. மக்கள் நலன் சார்ந்து இயங்கும் சுயேச்சையான ஊடகம் என எதுவும் கிடையாது. இருக்கும் ஓரு சில பத்திரிகைகளும் யாவற்றையும் ஒரே மாதிரி பாவித்து விற்பனைப் பொருளாக்குகின்றன. பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி விமானப்படைக்கு தலைமை ஏற்கிறார், போர்முனையில் நிற்கிறார் என ஒருபோதும் புலிகள் அமைப்பு சொல்லியதில்லை. ஆனால் ‘கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் தி.மு.க.வின் தலைவர்’ என்ற தமிழக மனநிலையோடு ஒரு போராளி இயக்கத்தின் தலைமைக்கும் வாரிசை நியமிக்கிறார்கள் இவர்கள்.

ஊடகங்களுக்கு சுயேச்சையான, சுய சார்புள்ள கொள்கைகள் இருக்க வேண்டும். ஆனால் இந்திய ஊடகங்கள் இலங்கைப் பிரச்னையில் மட்டும் இந்திய அயலுறவுக் கொள்கையையே பின்பற்றுகின்றன. காஷ்மீர் பிரச்னையில் காஷ்மீரிகள் என்ற தேசிய இனத்துக்கான நியாயங்களைப் பேச அருந்ததி ராய், தீஸ்தா செடல்வாட் என எத்தனையோ புத்திஜீவிகள் இருக்கிறார்கள். ஆனால் இலங்கைப் பிரச்னைப்பற்றி அவ்விதம் பேச யாருமில்லை. இருப்பதெல்லாம் என்.ராம், மாலன் வகை கழிசடைகள் மட்டுமே.

இலங்கையில் 1983 ஜூலை இனக் கலவரம் நடந்தபோது இவ்வளவு ஊடகங்கள் கிடையாது. தூர்தர்ஷனைத் தவிர வேறு டி.வி.கள் இல்லை. ஆனாலும் மக்களின் மனங்களில் மிகப்பெரிய தாக்கமும், எழுட்சியும் உருவானது. பெரும் எண்ணிக்கையிலான தொலைகாட்சிகளும், அச்சு ஊடகங்களும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில், இலங்கையில் நடக்கும் போர் சாதாரண பாதிப்பைக் கூட மக்கள் மனங்களில் உண்டாக்கவில்லை. இதன் காரணம் என்ன? இடைப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் உலகமயமாக்களும், நுகர்வு கலாச்சாரமும் மக்களின் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை நாம் கவனமாக கணக்கிட வேண்டும். எல்லாவற்றையும் வெறும் பொழுதுபோக்காகவும், நுகர்வு பண்டமாகவும் மாற்றியிருக்கும் உலகமயம் மக்களை சுயமோகிகளாக்கி வைத்திருக்கிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மழுங்கடிக்கப்பட்ட மனநிலையுடைய மக்கள் தன் சொந்தப் பிரச்னைக்காகக் கூட போராட முன் வருவதில்லை. ஐ.டி. ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது அதை எதிர்த்துக் கேள்விகேட்க திராணியற்றவர்களாகவே இருந்தார்கள். இவற்றை எதிர்த்துப் பேசி சீர்படுத்த வேண்டிய ஊடகங்கள், அதே படுகுழியில் வீழ்ந்துகிடக்கின்றன. எதையும் பணமாக்கும் புத்தியுடனும், எல்லாவற்றையும் பொழுதுபோக்காக மாற்றும் மனநிலையுடனுமே இன்றைய ஊடகம் செயல்படுகிறது. தனது இந்த அரசியலுக்குத் தோதான ஆட்களை முன்னிருத்தி, நியாயத்தின் பக்கம் நின்று பேசுபவர்களின் குரல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஊடகப்போரை அடித்து நொறுக்காமல் நாம் எதையும் சாதிக்க முடியாது. இன்றைய வணிக ஊடகங்களுக்கு எதிரான ஓர் அரசியலை நாம் இடைவிடாமல் முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இருக்கும் ஊடகப்போரை ஊடறுக்கும் அதேநேரம் அதிகாரங்களுக்கு எதிரான மாற்றுக் குரலை உயர்த்திப் பிடிக்கும் மாற்று ஊடகங்களையும் நாம் உருவாக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டு பத்திரிகைகளில் வெளிவரும் ஒன்றிரண்டு கட்டுரைகள், தொலைகாட்சிகளில் வெளியாகும் ஒன்றிரண்டு செய்திகள் இவற்றில் மட்டுமே திருப்தியுற்று ஒதுங்கிவிடக்கூடாது. தங்களுக்கு என தனியான ஊடகங்களை உருவாக்க வேண்டும். உதிரிகள் பேசத் தொடங்கும்போதுதான் உண்மைகள் வெளிவரும்.

16 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

//கருணாநிதி நாளையே இறந்துபோனால்//

இந்த மனநிலையோடு எழுதும் உங்களிடமிருந்து வெறுப்பை தவிர வேறெதையும் எதிர்பார்க்க இயலாது என்பது புரிகிறது.

நன்றி!

லக்கிலுக் சொன்னது…

//குமுதத்தில் ‘வல்வெட்டித்துரை வேலுப்பிள்ளை பிரபாகரன்’ என்ற தலைப்பில் பிரபாகரனைப்பற்றி தொடர் எழுதினார். ஒரு இயக்கத்தின் வரலாற்றை எதிலிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம், ஆனால் பா.ராகவன் சிங்கள ராணுவ அதிகாரி ஒருவர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இருந்து தொடங்கினார்.//

அது யுத்தம் சரணம். குமுதத்தில் வந்த தொடர் ஆல்ஃபிரட் துரையப்பா படுகொலையில் துவங்குகிறது :-)

மற்றபடி முழுக்கட்டுரையையும் இருமுறை படித்தேன். இன்னும் மூன்றுமுறை படிக்க இருக்கிறேன். ஏற்கனவே நான் கணித்த அந்த பத்தாண்டினை, இரண்டு மூன்று ஆண்டுகளாக சுருக்கி மீள்கணிப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறேன் :-))))

ஆழியூரான். சொன்னது…

வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடரையும், யுத்தம் சரணம் தொடரையும் குழப்பிவிட்டேன். உண்மையில் விழிப்புணர்வு கட்டுரையில் ஆல்பிரட் துரையப்பா என்று சரியாகவே எழுதியிருக்கிறேன். அப்படிதான் அச்சாகியிருக்கிறது. ஆனால் அது தவறோ என்ற எண்ணத்தில் இந்த பிளாக் கட்டுரையில்தான் திருத்தி வெளியிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.. :)

லக்கிலுக் சொன்னது…

//. கடந்துபோன தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடிதான்.//

இதுவும் திருத்தப்பட வேண்டியது. பாஜக அத்வானியை தனது பிரதமர் வேட்பாளராக பகிரங்கமாக அறிவித்திருந்தது. மோடியும் தனது குஜராத் பிரச்சாரங்களின் போது அத்வானியையே பிரதமர் வேட்பாளராக குறிப்பிட்டார்.

ஆழியூரான். சொன்னது…

பா.ஜ.க.வின் பிரதம வேட்பாளர்களில் மோடியும் ஒருவராக கருதப்பட்டார். ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற ஒரு வெளிப்படையான கொலைகாரன் பிரதம வேட்பாளர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்ததையும், அதை எதிர்த்து கேள்விகள் எழுப்பாத அரசியலையுமே நான் எழுத விரும்பினேன். அது கன்வே ஆகிறதுதானே..?

லக்கிலுக் சொன்னது…

//அது கன்வே ஆகிறதுதானே..?//

பக்காவாகவே ஆகிறது. மோடி கணக்கு மூவாயிரம்தான். அத்வானி கணக்கு ஆறாயிரத்தை தாண்டிவிட்டது!

பெயரில்லா சொன்னது…

//கலாசார அடிப்படைவாதம் //
அது இன்னாதுங்க?
உங்க பல பதிவுகள்ல பலரும் பின்னூட்டங்களில் விளக்கமளிச்சும், இன்னும் ஜல்லியடிச்சுட்டு தான் இருக்கீங்க.ஹிஹிஹி.. நடத்துங்க நடத்துங்க!

நாடோடி இலக்கியன் சொன்னது…

இன்னொருமுறை வாசித்துவிடுகிறேன்.
ஒரு சில மாற்று கருத்துக்கள் இருப்பினும், நிறைய யோசிக்க வைக்கும் கேள்விகள்.

$anjaiGandh! சொன்னது…

ஈழப் மக்கள் மடியும் வேளையில் சிரிப்பொலி ஆரம்பித்ததும் ஞானி சமச்சீர் கல்வி முறைப் பற்றி எழுதியதும் நினைவுக்கு வரும் ஆழியூரானுக்கு விகடன் தன் வடிவமைப்பை மாற்றியதும் விலையை ஏற்றி கல்லூர்ப் பெண்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அதிக பக்கங்கள் ஒதுக்கி அப்பட்டமான வணிக நோக்கத்துடன் செயல்படுவதும் ஏன் நினைவுக்கு வரவில்லை?. ரிப்போர்ட்டரும் ஹிண்டுவும் தினமலரும் ஆங்கில ஊடகங்களும் மட்டும் தான் ஈழ மக்கள் துயரத்தை மறைந்தார்களா? விகடன் என்ன ஈழ மக்களுக்காகவே செயல்பட்டதா?

இங்கே மற்ற தமிழ் ஊடகாங்களை குறிப்பிட்டு விமர்சித்த நீங்கள் விகடனினைக் குறிப்பிடவே இல்லை. அதனால் தான் இந்த பின்னூட்டம்.

உலகில் நடுநிலை இனம் என்று ஒன்று தோன்றும்வரை ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருபப்தைத் தவிர வேறு வழி இல்லை போலும். :(

$anjaiGandh! சொன்னது…

கடந்த தேர்தலில் அத்வானி தான் பாஜகவின் அதிகாரப்பூர்வ பிரதமர் வேட்பாளர். அந்தக் கட்சியும் கூட்டணியும் அவரைத் தான் பிரதமர் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார்கள். அதவாணிக்குப் பிறகு மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக சிலர் உளறினாலும் அதன் தலைவர் ராஜ்நாத் கூட அதை கடுமையாக எதிர்த்தார். ஒரு பத்திரிக்கையாளர் மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது பற்றி கேட்டதற்காகவே அந்த சந்திப்பில் இருந்து வெளியேறினார்.

சரத்யாதவ், நிதிஷ்குமார் போன்ற கூட்டணித் தலைவர்களும் ஆட்சேபித்தார்கள். மோடி குஜாரத்துக்கு வெளியே ஒரு வார்டு மெம்பராகக் கூட ஜெயிக்க முடியாது. அவர் பிரதமாரவதெல்லாம் கனவிலும் நடக்காது.

ராஜ நடராஜன் சொன்னது…

//இலங்கையில் 1983 ஜூலை இனக் கலவரம் நடந்தபோது இவ்வளவு ஊடகங்கள் கிடையாது. தூர்தர்ஷனைத் தவிர வேறு டி.வி.கள் இல்லை. ஆனாலும் மக்களின் மனங்களில் மிகப்பெரிய தாக்கமும், எழுட்சியும் உருவானது. பெரும் எண்ணிக்கையிலான தொலைகாட்சிகளும், அச்சு ஊடகங்களும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில், இலங்கையில் நடக்கும் போர் சாதாரண பாதிப்பைக் கூட மக்கள் மனங்களில் உண்டாக்கவில்லை. இதன் காரணம் என்ன? இடைப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் உலகமயமாக்களும், நுகர்வு கலாச்சாரமும் மக்களின் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை நாம் கவனமாக கணக்கிட வேண்டும்.//

நல்ல ஆய்வுக் கட்டுரை.பலவற்றையும் யோசித்து எழுத்துக்கு கொண்டு வந்துள்ளீர்கள்.கூடவே பார்ப்பனர் பற்றி நிறைய இடுகைகளில் வருவதைக் காண்கிறேன்.இந்தப் புலம்பல்கள் தமிழர்களிடமிருந்து மட்டும் வருவதேன்?பார்ப்பனர் எனச் சொல்லும் தமிழர்கள் கலாச்சார ரீதியாக தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டாலும் அவர்கள் யாரும் பார்ப்பனர்க்கு எதிரான குறிச்சொல்லை எழுத்தில் கொண்டு வருவதில்லை.ஆனால் கலாச்சார ரீதியாக ஒரு பனியுத்தத்தை அவர்கள் திறம்படவே செய்கிறார்கள்.எனவே பார்ப்பனர் என்று சொல்வதே தாழ்வு மனப்பான்மையின் காரணமா?ஊடகம்,கல்வி,திறமை என்ற கருவிகளால் இவர்கள் தனக்கான கோட்பாடுகளை வகுத்துக் கொண்டு தமிழனை பின் தள்ளி விடுகிறார்கள்.அதே திறமைகள் இருப்பவன் பணம்,புகழ்,பதவி என்றவற்றில் சோரம் போய் விடுகிறான்.தமிழன் உணர்வுக்கும் அப்பால் அவன் ஒரு சிறந்த வியாபாரி.அவ்வளவே.எனவே பார்ப்பனர் என்ற சொல் தமிழனின் இயலாமையின் வெளிப்பாடு என்றே கருதுகிறேன்.

மற்றபடி சுய சிந்தனைகள்,கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் சாரா ஊடகங்கள் வருவது நன்மை பயக்கும்.சமுதாயச் சூழலில் வியாபார நோக்கின்றி செயல்படுவது கடினம் எனினும் அதற்கான கட்டமைப்புக்கள் இருக்கின்றது.புதிய முயற்சிகள் ஏதாவது உருவானால் நல்லது.வளைகுடாப் போரின் கால கட்டத்தில் CNN ன் அமெரிக்க சார்பு கருத்துக்களுக்கு மாற்றாகவோ அல்லது அரபிய நாடுகளின் மனநிலையை படம் பிடிக்கவென்றோ Aljazeera உருவானது.இன்று வரை ஓரளவுக்கு சமநிலை நிகழ்ச்சிகளை கொண்டு வருகிறது.

இடுகைக்கு நன்றி.

லக்ஷ்மி சொன்னது…

தெளிவான அலசல். ஒரு சிறு திருத்தம் - //வைதீகப் பார்ப்பானைவிட சவுண்டிப் பார்ப்பானிடம் கவனமாக இருக்க வேண்டும்// இதை ’வைதீகப் பார்ப்பானை விட லௌகீக பார்ப்பானிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்றே படித்திருக்கிறேன். வைதீகம் என்பது புரோகிதம், ஆன்மீகம் சம்பந்தப் பட்டது எனில் லௌகீகம் என்பது அன்றாட வாழ்வு சார்ந்த யதார்த்தத்தை குறிக்கும் சொல். எனவே ஆன்மீகத்தைப் பற்றி பேசுப்வனை விட நான் யதார்த்தவாதி என்கிற போர்வையில் அரசியல்/பொருளியல் விஷயங்களை கைப்பற்றும் ஆட்களே அபாயகரமானவர்கள் என்பதே இதன் பொருள். மேலும் ஒரு தகவல் - சவுண்டி பார்ப்பான் என்பவர் சாவு காரியங்களில் இறந்தவரின் பிரேதமாக கருதப் பட்டு சடங்குகளில் உபயோகிக்கப் படும் ஒரு பிரிவினர். இவர்களும் மற்ற பார்ப்பனர்கள் இல்லங்களுக்குள் சாவு காரியம் தவிர்த்த விஷயங்களுக்காக நுழைய முடியாது - ஒரு விதத்தில் பாவப்பட்ட கும்பல்தான் அதுவும்.

ஆழியூரான். சொன்னது…

லஷ்மி... விளக்கத்துக்கு நன்றி. திருத்தி விடுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

http://porukki.weblogs.us/2009/06/12/eelam_puli_pulam/

prabhuraj சொன்னது…

Very nice article.
please see this :
http://prabhuraj.com/?p=143

our views are same in this

பதி சொன்னது…

நல்ல அலசல்.....

பின்னூட்டங்கள் தெரிவதில் ஏதோ குறைபாடு உள்ளது. கவனிக்கவும்.