18/11/09

உங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்?

இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால் அதிகாரத்தை நேரடியாக சுவைப்பவர்கள் ஒரு பக்கமும், அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி அதிகாரத்தை சுவைக்கத் துடிப்பவர்கள் ஒரு பக்கமுமான காலத்தில் நாம் வாழ்கிறோம். எழுத்திலும், படைப்பிலும் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தும் அறிவுஜீவிகள் பலபேர் தங்களை அதிகாரங்களுடன் பொருத்திக்கொள்வதில் கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அப்படியான வாய்ப்புகளை அவர்கள் ஒரு போதும் தவறவிடுவதில்லை அல்லது வாய்ப்புகளை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு வரும் எந்த விமர்சங்களையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை அல்லது சந்தர்ப்பவாதமாக பதில் சொல்லி கடந்து போகிறார்கள். இந்த ஒட்டுண்ணி அரசியலின் முற்றிய வடிவம்தான் பாதிரி ஜெகத் கஸ்பர்.

இவர் ஒன்றும் எழுத்தாளரோ, அறிவுஜீவியோ அல்ல. ஆனால் தமிழக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் தொடர்ந்து தன்னை ஒரு லாபி மேக்கராக நிலைநிறுத்த முயல்பவர். அதற்காக ஆளும் சக்திகளுடன் எப்போதும் நல்லுறவைப் பேணுபவர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரழிவான ஈழ யுத்தத்தையும் தன் சுய நலன்களுக்காக மடைமாற்றிவிட்ட இந்த பாதிரியின் டவுசர் இப்போது கிழிந்து தொங்குகிறது. அருகிலேயே அடுத்த கஸ்பரும் கண்ணடித்துக்கொண்டு நிற்கிறார்.

ஆளும் வர்க்க நலன்களுக்காக மக்களின் அரசியலை மழுங்கடிக்கும் தன்னார்வ குழுக்களின் வேலைத் திட்டம்தான் இவர்களின் நிகழ்ச்சி நிரல். அவற்றை இந்தியாவுக்குள் நிறைவேற்றித் தரும் முகவர்கள்தான் இந்த கஸ்பர் வகையறாக்கள். ஈழத்தில் மாபெரும் மனிதப் பேரழிவு நடந்து முடிந்ததும் அதைப்பற்றி மறக்க முடியாத வேதனையில் நக்கீரனில் தொடர் எழுதும் இந்த பாதிரி, கொடூரமான முறையில் போர் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்தார்? மக்கள் மனங்களில் எழுந்திருந்த அரச எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தும் தந்திரங்களைக் கையாண்டார். ‘யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. நாம் பகையுணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் அரை ஆதரவாளனாக இருப்பவனை முழு எதிர்ப்பாளனாக மாற்றிவிடுகிறோம்’ என்று பிரசங்கம் செய்தார். ‘தாழாது, தாழாது... தமிழினம் தாழாது’, ‘தாழ்த்தாது தாழ்த்தாது, தமிழினம் யாரையும் தாழ்த்தாது’ என்று கருணாநிதி தயாரித்துக் கொடுத்த கழிவிரக்க வசனங்களைப்போல ‘யார் மனதும் புண்படாமல் போராடுவது எப்படி?’ என்று வகுப்பு எடுத்தார். அதற்காக இந்த பாதிரி தேர்ந்தெடுத்த போராட்ட வடிவம் ‘மௌன ஊர்வலம்’. ஈழப் போரை நடத்திய இந்தியாவுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்தபோதுதான் கஸ்பர் மௌன ஊர்வலம் நடத்தினார்.ஜனவரி தொடங்கி அடுத்து வந்த மாதங்களில் கருத்துரிமை மீது தமிழ்நாட்டில் மிக மோசமான அடக்குமுறை நிலவியது. ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு காவல்துறையால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஈழம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அரங்குகள் மறுக்கப்பட்டன. அனைவரும் மிரட்டப்பட்டிருந்தனர். துண்டு பிரசுரங்கள் அச்சடித்துத் தரக்கூடாது என்று அச்சகங்களுக்கு வாய்மொழி மிரட்டல் விடப்பட்டிருந்தது. (இந்த காரணத்தினாலேயே திண்டிவனத்துக்குச் சென்று துண்டு பிரசுரம் அச்சிட்டு வந்த தோழர்களை நான் அறிவேன்). ஆனால் ஜெகத் கஸ்பரின் மௌன ஊர்வலத்துக்கு எந்த தடையும், எந்த கட்டுப்பாடும் இல்லை. தீவுத் திடல் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டது. காரணம் மிக எளிதானது. மற்றவர்களின் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை. கஸ்பரின் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை அல்ல. அவர் எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தி அரசின் காலடியில் சமர்ப்பித்தார். இந்த இடத்தில்தான் அரசுக்கு கஸ்பர்கள் தேவைப்படுகின்றனர்.

அந்த மௌன ஊர்வலத்திலும், கஸ்பரின் இன்னபிற கூட்டங்களிலும் அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்களில் அதிகபட்சம் பேர் ஐ.டி. இளைஞர்கள்தான். மாநிலம் முழுவதும் ஒருவித கொந்தளிப்பான சூழல் நிலவிய அக்காலக் கட்டத்தில் ஐ.டி. இளைஞர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். கேட்டுக் கேள்வியில்லாமல் திடீர் திடீரென வேலையை விட்டுத் தூக்கப்படும் தங்களின் சொந்த பிரச்னைக்காகக் கூட போராட வீதிக்கு வராத அவர்கள், ஈழத்தில் நடந்த மக்கள் படுகொலைகளைப் பொறுக்க முடியாமல் முதல் முறையாகப் போராடத் துணிந்தார்கள். ஆனால் அவர்களது அரசியல் குறைபாடு காரணமாக போராட்டத்தின் வடிவங்களும், தன்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதனாலேயே அவர்கள் நடத்திய சில போராட்டங்களில் கஸ்பரை காண முடிந்தது. கஸ்பர் நடத்திய மௌன ஊர்வலத்துக்கு ஐ.டி. இளைஞர்கள் போனார்கள். ‘துப்பாக்கிகளுக்கு இதயமில்லை - உங்களுக்கு’ என்பது மாதிரியான அரசியலற்ற/ மய்யப்படுத்தப்பட்ட மனிதாபிமான வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அணிந்தபடி அந்த மௌன ஊர்வலத்திலும், மற்ற இடங்களிலும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

‘ஈழம்... மௌனத்தின் வலி’ என்ற தலைப்பில் நூறு பேரின் கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் கஸ்பர். அதன் அபத்தங்களையும் அங்கு பேசிய பக்கி வாசுதேவ் போன்ற பன்னாடைகளின் பேச்சு பற்றியும் ஏற்கெனவே தோழர்கள் விரிவாக இணையத்தில் எழுதியிருக்கிறார்கள்.

நூறு கவிதைகள் என்கிறார்கள். ஆனால் அதில் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, ஜக்கி வாசுதேவ் போன்றவர்ளும் உண்டு. இவர்கள் எப்போது கவிஞர்கள் ஆனார்கள் என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் மேடையில் பேசிய பேச்சை எடுத்து வெளியிட்டு அதையும் கவிதை என்கிறார்கள். அருந்ததி ராய் ‘டைம்ஸ் ஆஃப் இன்டியா’வுக்கு எழுதிய கட்டுரையின் சில வரிகளும், பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதிய கட்டுரையின் சில வரிகளும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. அவையும் கவிதைகளாம். பலரும் பல்வேறு இடங்களில் பேசியவற்றை, எழுதியவற்றை துண்டு, துண்டாக எடுத்து வெளியிட்டுக்கொண்டு ஏதோ அவர்கள் எல்லோரும் இவர்களுக்கு ஸ்பெஷலாக எழுதிக் கொடுத்ததைப் போன்று ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். தோழர் துரை.சண்முகத்தின் கவிதை தணிக்கை செய்யப்பட்டது போன்றவை தனி மோசடி.

த.செ.ஞானவேல் என்பருக்குச் சொந்தமான ‘போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு’ம், ஜெகத் கஸ்பருக்கு சொந்தமான ‘நாம்’ அமைப்பும் இணைந்துதான் இந்த புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். கஸ்பரை உரிமையாளராகக் கொண்டு செயல்படும் நல்லேர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. முதலில் எங்கிருக்கிறது இந்த பத்திரிக்கையாளர் அமைப்பு? இதில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் யார், யார்? இலங்கையில் மிக மோசமான இன அழிப்புப் போர் நடந்துகொண்டிருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தனர்? ஒரு உண்ணாவிரதம், ஒரு ஆர்ப்பாட்டம்... எதை நடத்தினீர்கள்? அப்போதிலிருந்து தினசரி இணையங்களில் வெளிவரும் கோரமான புகைப்படங்களை சேகரித்து வைத்துக்கொண்டு இப்போது அவற்றை தொகுத்து கவிதை எழுதி பணம் பார்க்க முயல்கிறீர்கள் என குற்றம் சாட்டினால் அதற்கு உங்கள் மறுப்பு என்ன? ஆனால் அதுதான் உண்மை. ஈழத்தில் மக்கள் படுகொலைகள் நடந்தபோது மௌன ஊர்வலம் நடத்தி இந்திய, தமிழக அரசுகளின் துரோகத்தை மறைக்க முயன்றதன் மூலம் அப்போதைய ஆளும் சக்திகளுக்கு விசுவாச ஊழியம் புரிந்தார் கஸ்பர். இப்போது அவரது ‘நாம்’ அமைப்பும், ஞானவேலின் ‘போருக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றமும்’ தமிழ் மக்களின் பேரழிவையும், தோல்வியையும் அதிகார பீடங்களுடன் நெருங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கின்றனர்.

போருக்குப் பிறகான இலங்கை விவசாயத்தை மேம்படுத்துவது பற்றிய பேச்சுவார்த்தையின்போது ‘ஒவ்வொரு பேரழிவிலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னார் எம்.எஸ்.சுவாமிநாதன். தன்னார்வக் குழுக்கள் எப்போதுமே பேரழிவை வாய்ப்பாகத்தான் பயன்படுத்தும் என்பதை சுனாமி நிதி மோசடிகளில் கண்டோம். அமெரிக்க கிறிஸ்தவ நிறுவனம் சுனாமி நிவாரணத்துக்காக தென்னிந்திய திருச்சபைக்கு வழங்கிய 18 கோடி ரூபாயை அவர்கள் ஆட்டையைப் போட, இப்போது அமெரிக்க நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதைப்போலவேதான் இலங்கையில் நடந்திருக்கும் மனிதப் பேரழிவையும் இவர்கள் வாய்ப்பாக பார்க்கின்றனர். புலம்பெயர் தமிழர்களை வைத்து புராஜக்ட் போட்டுப் பணம் பார்க்கும் நோக்கம் இதற்குப் பின்னால் இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதற்கான எல்லா முகாந்திரங்களும் இருக்கின்றன. ஆம், ஒவ்வொரு பேரழிவிலும் சுவாமிநாதன்களுக்கும், கஸ்பர்களுக்கும், ஞானவேல்களுக்கும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.தமிழ் ஊடகங்களில் இந்த கஸ்பர் எப்படி அறிமுகமானார்? கனிமொழியுடன் இணைந்து ‘கருத்து’ என்ற அமைப்பை ஏற்படுத்தியபோது இவர் மீது ஊடகங்களின் கவனம் பதிந்தது. அடுத்தடுத்த வருடங்களில் உலகளாவிய மேட்டுக்குடி கலாச்சாரமான ‘மாரத்தான்’ என்பதை சென்னைக்கு அறிமுகப்படுத்தினார். பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம் பணம் பெற்று நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டியானது, முழுக்க, முழுக்க முதலாளிகளின் விளம்பர சந்தை. நிறுவனத்தின் விளம்பரத் தட்டிகளைப் பிடித்தபடி அதன் ஊழியர்கள் வரிசையாக வந்துகொண்டிருக்க, இந்த பாதிரி மேடையில் நின்று நிறுவனங்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் ஜெபம் செய்வதுபோல உச்சரிப்பார். இந்த கொழுப்பெடுத்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் கடற்கரை சாலை ஒதுக்கித் தரப்படுகிறது.

கடந்த 2008 ஆகஸ்ட் மாதம் கஸ்பர் நடத்திய மாரத்தான் போட்டியில் வேறொரு கொடுமையும் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓரம்பள்ளி என்ற பின் தங்கிய ஒரு கிராமத்தில் இருந்து படித்து முன்னேறி வந்த சந்தோஷ் என்ற மாணவர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி. படித்து வந்தார். கஸ்பர் கோஷ்டி, ‘மாரத்தானில் வெற்றி பெற்றால் லட்சம், லட்சமாகக் கொட்டும்’ என்று கிளப்பிவிட்ட ஆசையால், தான் வெற்றிபெற்றால் தனது ஏழ்மையான குடும்பத்துக்கு விடிவு கிடைக்குமே என்றெண்ணி மாங்கு, மாங்கென ஓடினார் சந்தோஷ். ஆனால் இறுதியில் அவர் மூச்சிரைத்து செத்துப்போனார்.

அதுபோலவேதான் இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியும். சபாக்களுக்குப் போய் கச்சேரி கேட்பது எப்படி முன்பு பார்ப்பனர்களுக்கு அந்தி நேரத்து நேரப்போக்காக இருந்ததோ, அதுபோல மத்திய வர்க்கத்தின் பொழுதுபோக்கு மனநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதுதான் இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி. மாநிலம் முழுவதும் இருக்கும் நலிவடைந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்களை அழைத்து வந்து சென்னையின் வீதிகளில் நாடகம் போட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்த காசில் பத்தில் ஒரு பங்குக் கூட அதில் கலந்துகொண்டவர்களுக்குத் தரவில்லை. தேர்தல் சமயத்தில் சென்னை சங்கமத்தில் கலந்துகொண்ட நாட்டுப்புற கலைஞர்களை தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார கருவியாகவும் பயன்படுத்திக்கொண்டார்கள். இதற்கெல்லாம் துணை நின்றவர்தான் இந்த கஸ்பர்.

எந்த வகை அரசியல் நிலைபாடும் அற்ற, பாசிச முதலாளித்துவ முகவரான இந்த கஸ்பர் தமிழ் தேசிய சக்திகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்த அடிப்படையிலேயே இவர் நக்கீரனில் இடம் பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த பாதிரிக்கு தமிழ் தேசியத்திலும் தெளிவில்லை, இந்திய தேசியத்திலும் தெளிவில்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் முதலாளித்துவ உளவு அரசியல் மட்டும்தான். இத்தகைய ஒரு நபருக்கு நக்கீரன் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நக்கீரன் கோபாலுக்கு கருணாநிதியைத் திட்டக்கூடாது, கஸ்பருக்கு ஆளும் வர்க்கத்தைப் பகைத்துக்கொள்ளக் கூடாது... இருவரும் சேர்ந்துகொள்ள இதுவே போதுமானது. ஈழம் என்பது இன்று விற்கக்கூடிய பண்டமாகவும், பிரபாகரன் என்பவர் விற்பனைக்கான பிராண்டாகவும் இருப்பதால் நக்கீரன் இத்தகைய அபத்தங்களை தொடர்ந்து வெளியிட்டும், ஆதரித்தும் வருகிறது. எந்தவித போர்ச்சூழலும் இல்லாத தமிழ்நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் மிகவும் பாதுகாப்பாக இருந்துகொண்டு அடுத்தக்கட்ட போர் பற்றி பேசுவதும், அந்த மக்களை போராடச் சொல்வதும் அயோக்கியத்தனமானது. பிரபாகரனின் உடலை ‘மம்மி’யாக்கி, அதை வைத்து பணம் பார்க்கும் இந்த பிழைப்புவாதத்தின் நாற்றம் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இதன்மூலம் அங்கு முகாம்களில் வாழும் மக்களின் வாழ்வு மேலும், மேலும் மோசமாக்கப்படுகிறது.

கஸ்பர் வகையறாக்களின் பட்டியலில் முன் வரிசையில் நிற்பவராகவும், அடுத்த ஜெகத் கஸ்பராவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளவராகவும் ஞானவேலைக் குறிப்பிடலாம். தனது பத்திரிக்கை அனுபவங்களின் மூலமாக நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற அதிகார மட்டங்களோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஞானவேல், ‘வாழை’ என்ற பெயரிலான‌ தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இயங்கியவர், தற்போது அகரம் பவுண்டேஷனுக்காக உழைத்து வருகிறார்.. ஞானவேல் அடுத்த கஸ்பராவதற்கு இவையே போதுமானவை. ஆனால் இந்தக் கட்டுரை உள்பட தற்போதைய விமர்சனங்கள் அனைத்தையும் ஞானவேல் பாராட்டுக் கட்டுரைகளாகவும், பிரபலமாவதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

நாட்டில் பிரபலம் அடைவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. கன்னட பிரசாத்தைக் கூடதான் பலருக்குத் தெரியும். அதற்காக அவரது வழியைப் பின்பற்றிவிட முடியுமா? ஒருவேளை ஞானவேலின் நோக்கம் அடுத்த ஜெகத் கஸ்பராவதுதான் என்றால் அதற்கு எங்காவது நடிகர்களை அழைத்துச் சென்று தையல் மிஷின் வழங்குவது, நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது போன்றவற்றை செய்யலாம். அதை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக குண்டுவீசி கொல்லப்பட்டதையும், வீரம் செறிந்த தமிழ் மக்களின் போர் துயரமான முறையில் முள்ளிவாய்க்காளில் முடிவுக்கு வந்திருப்பதையும், ஒரு இனமே அகதியாகி உலக வீதிகளில் அலைந்து திரிவதையும் சுய நலனுக்குப் பயன்படுத்துவது அசிங்கமும், அயோக்கியத்தனமுமானது!

- ஆழியூரான்

நன்றி: கீற்று

6/10/09

தேசபக்தி... அயோக்கியர்களின் கடைசி முகமூடி

அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடந்த இறுதி லீக் போட்டி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் பரபரப்பாக கவனிக்கப்பட்டது. காரணம், அதில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால்தான் இந்தியாவால் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற முடியும். புள்ளிகள் அடிப்படையில் நடந்த போட்டியின் நிலைமை அவ்வாறு இருந்தது.

அன்றைய தினத்தில் பெரும்பான்மையான இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்காக பாரதமாதாவை நெக்குருகி வேண்டிக் கொண்டிருந்தன. தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ‘எப்படியாவது பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிடாதா?’ என்று ஏங்கித் தவித்தார்கள். சென்னை பண்பலை வானொலிகள் பலவற்றில் அன்று இதைப்பற்றிதான் மூச்சுவிடாமல் பேசினார்கள். ரேடியோ மிர்ச்சியில் அஞ்சனா என்ற ரேடியோ ஜாக்கி இதைப்பற்றி நேயர்களிடம் தொலைபேசி வழியே உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை செய்துகொண்டிருந்தார். அவர், ‘எனக்கு இதை சொல்றதுக்கு நாக்கு கூசுறது. இருந்தாலும் பாகிஸ்தான் ஜெயிக்கனும்னு நாமல்லாம் பிரே பண்ணுவோம். என்னப் பண்றது... நம்ம நிலைமை இப்படில்லாம் சொல்ல வேண்டியிருக்குது’ என தன் மனதை கல்லாக்கிக்கொண்டு பாகிஸ்தானின் வெற்றிக்காக பிரார்த்திதார். அநேகமாக அன்று இரவு அவர் தான் செய்த பாவத்துக்காக அரங்கனின் பாத அடிகளை சேவித்து பாவ மன்னிப்பும் கேட்டிருக்கக்கூடும். ‘பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்’ என கோடிக்கணக்கான ‘இந்திய’ உதடுகள் உச்சரித்த நிகழ்வு அண்மை காலத்தில் இதுவாகத்தான் இருக்கும். (அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோற்று இந்தியாவின் எதிர்பார்ப்பில் ‘கரி’யைப் பூசிவிட்டது என்பது வேறு விஷயம்).

இது ஒன்று. இரண்டாவது, தசரா பண்டிகையை வட மாநிலங்களில் ராம் லீலாவாகக் கொண்டாடுகிறார்கள். ராவணனின் உருவப்படத்தை எரிப்பது அதில் ஒரு பகுதி. அப்படி இந்த வருடம் போபால் நகரில் ராம் லீலா கொண்டாடப்பட்டபோது ராவணனின் உருவப்படத்துக்குப் பதிலாக மும்பைத் தாக்குதலில் கைதாகியிருக்கும் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் உருவ பொம்மையை எரித்தார்கள். இதைப்பற்றி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அகர்வால் என்பவர் சொல்லும்போது, ‘‘தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு அரசாங்கத்தால் இதுவரைத் தண்டனைத் தர முடியவில்லை. கொடும்பாவியை எரித்ததன் மூலம் நாங்கள் தண்டனைக் கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.இந்த இரண்டும் தேசபக்தி என்பது எத்தகைய பொய்மையானது என்பதையும், அது எதிர்வுகளை கட்டமைப்பதன் மூலம் எப்படித் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது என்பதையும் புரிந்துகொள்வதற்கான அண்மை கால சான்றுகள். தேசபக்திக்கு எப்போதும் எதிரிகள் வேண்டும். உங்கள் இந்திய தேசபக்தியை நிறுவ, நீங்கள் பாகிஸ்தானை எதிரியாக வரித்துக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தோல்வியடைய வேண்டும் என்று நினைப்பதில்தான் இந்திய தேசபக்தியின் அடர்த்தி நிலைநிறுத்தப்படுகிறது. மாறாக பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பதே பதற்றம் தருவதாகவும், பாவம் ஒன்றை செய்வதாகவும் மாறிப்போகிறது. இதை மறுவளமாக பார்த்தால் ‘பாகிஸ்தானின் வெற்றி இந்தியாவுக்கு லாபம் தரும் என்றால் அதை இந்திய மனநிலை ஆதரிக்கும்’ என இதை சாறு எடுத்துப் புரிந்துகொள்ள முடியுமா? இல்லை.

தேசபக்தி என்பது இன்றைக்கு வியாபாரம் செய்வதற்கு தோதான ஒரு பிராண்ட். கோககோலா, பெப்ஸி, ரிலையன்ஸ், இந்துஸ்தான் லீவர், ஹமாம் போல தேசபக்தியும் ஒரு பிராண்ட். இது அனைத்து பெருமுதலாளிகளுக்குமான அமுத சுரபி. பன்னாட்டு நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும் கோடிகளை செலவழித்து நடிகர், நடிகைகளை வைத்து தங்கள் பொருளுக்கு கொடுக்க முடியாத விளம்பரத்தை தேசபக்தியின் பெயரால் மிக எளிதாக செய்கிறார்கள். குறிப்பிட்ட பிராண்ட் துணி அணிந்தால், குறிப்பிட்ட பிரஷ்ஷர் குக்கர் வாங்கினால் நீங்கள் உண்மையான தேசபக்தர். இந்திய சுதந்திரத்தின் 50&ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்களின்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்த கோல்கேட் நிறுவனம் ‘வந்தே மாதரம், ஸ்பான்ஸர்டு பை கோல்கேட்’ என்று சொல்லிக்கொண்டது. பாரதமாதாவுக்கும், வந்தே மாதரத்துக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்ஸர் செய்ய ஆரம்பித்து வெகு காலமாகிறது.

கொஞ்சம் கவனித்தால் நாட்டில் கிரிக்கெட் காலங்களிலும், இன்ன பிற விழா காலங்களிலும் தேசபக்தியின் அடர்த்தி கூடிவிடும். அப்போது மட்டும் தேச பக்தியின் பெயரால் சாமியாடுவார்கள். ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டில் இந்திய தேசியம், தேசபக்தி என்பதெல்லாம் டவுசர் கிழிந்து தொங்குகிறது. இந்த வெறியூட்டப்பட்ட தேசபக்தியின் உச்சகட்ட வடிவம்தான் கிரிக்கெட். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டி என்பது தேசபக்தியை மிக அதிக விலைக்கு விற்கக் கிடைத்திருக்கும் சந்தை. இந்த சந்தையை தங்கு தடையில்லாமல் நிறுவுவதற்காகதான் பாகிஸ்தான் என்னும் தேசத்தையும், அதன் மக்களையும் இந்திய எதிரிகளாக கட்டமைக்கிறார்கள். இதன் இந்தியப் பதிப்பாக முஸ்லீம் விரோதம் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடக்கும்போது ‘என்ன இருந்தாலும் நீ பாகிஸ்தானுத்தான் சப்போர்ட் பண்ணுவே’ என்று கிரிக்கெட் பார்க்கும் இந்திய முஸ்லீம்களை நோக்கி வார்த்தைகள் வீசப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதன் மூலம் முஸ்லீம்களுக்கு தேசபக்தி இருக்காது, இருக்கத் தேவையில்லை என்ற கருத்தை கட்டமைத்து, இந்திய தேசபக்தி தனக்கான எதிர்வுகளை நிறுவுகிறது. ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பழி தீர்க்குமா இந்தியா?’ என்று ஊடகங்கள் தங்கள் பங்குக்கு வெறியூட்டுகின்றன.

அனுதினமும் அதிகாரம் மக்களுக்கு துன்பங்களையே பரிசளித்து வருகிறது. இவற்றை மக்கள் உணரவிடாமல் செய்யவும் தங்களின் பொறுக்கித் திண்ணும் பிழைப்பை மூடி மறைத்துக்கொள்ளவும் அதிகார வர்க்கத்துக்கு தேசபக்தி பயன்படுகிறது. எல்லையோரத்தில் துப்பாக்கிக்களுக்கு இரையாகும் அப்பாவி ராணுவ வீரன் தேசபக்தியாளனாகக் கொண்டாடப்படுகிறான். இதன்மூலம் அவனை கொன்றது அரசதிகாரம்தான் என்ற உண்மை மறைக்கப்பட்டு தேசபக்தியின் பெயரால் ஒரு கொலை, தியாகமாக்கப்படுகிறது.இப்படி அதிகாரம் தயாரித்து வழங்கும் தேசபக்தியை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நிறுவும் நிறுவனமாக செயல்படுகின்றன இந்திய நீதிமன்றங்கள். ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழர் விடுதலை இயக்கமும் தமிழ்நாடு முழுக்க இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டங்களை நடத்தின. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்கும்போது ‘இவர்கள் இந்திய தேசிய கொடியை அவமதித்திருக்கிறார்கள். அதனால் ஒரு வார காலத்துக்கு தங்கள் வீடுகளின் முன்பு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்’ என்பதை பிணைக்கான நிபந்தணையாக விதித்தது நீதிமன்றம். இதற்கு அவர்கள் மறுத்தபோது நீதிபதிகள் கோபப்பட்டனர். தேசியக் கொடி ஏற்றும் நிபந்தணையை மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தினார்கள். இங்கு தேசபக்தி என்பது கட்டாயமாக்கி ஊட்டப்படுகிறது. இதை, ‘இந்த நாட்டில்தானே வசிக்கிறீர்கள். இந்த நாட்டு அரசாங்கத்தின் சலுகைகளைத்தானே அனுபவிக்கிறீர்கள். பிறகு தேசபக்தி இல்லாமல் இருந்தால் அது குற்றமில்லையா?’ என்ற எளிய தர்க்கத்தின் மூலம் நியாயப்படுத்துகின்றனர். நானும் இந்த நாட்டில்தான் வாழுகிறேன், அம்பானியும் இந்த நாட்டில்தான் வாழுகிறார், அசோக் சிங்காலும், நரேந்திரமோடியும் இந்த நாட்டில்தான் வாழுகின்றனர், வாயில் மலம் திணிக்கப்பட்ட திண்ணியம் முருகேசனும், ராமசாமியும் இந்த நாட்டில்தான் வாழுகின்றனர், எல்லோரும் சமமா? ஒரு அரசு தன் ஆளுகையின் கீழ் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சமமாக நடத்த வேண்டும்? அவ்வாறுதான் நடக்கிறதா?

கீழே உள்ளது கயர்லாஞ்சியில் ஆதிக்க சாதியினர் செய்த சித்தரவதையின் சிறு பகுதி....

“குடிசைக்குள் புகுந்த உயர் ஜாதி இந்துக்கள், (பெண்கள் பலரும் அக்கூட்டத்துடன் வந்தனர்.) அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்திக் கையோடு கொண்டுவந்திருந்த ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டுவந்து போட்மாங்கேவின் மனைவியையும் மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்துநின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த உயர் ஜாதி இந்துப் பெண்கள் யாரும் தம் ஆண்களின் வெறிபிடித்த இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை. பிறகு ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு போட்மாங்கேவின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண் உறுப்புகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு ரத்தம் தெறிக்கும் அவர்களது உடல்களை ஆகாயத்தில் தூக்கி எறிந்து விளையாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை நான் முந்தி நீ முந்தி எனப் பலரும் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர். குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர்.”

இதைப் படிக்கும்போது ஒரு கணம் உடல் அதிரவில்லையா? ஒரு தலித்தாக இருந்துகொண்டு சொந்த நிலம் வைத்திருந்ததையும், தன் பயிர்கள் மீது உயர்சாதியினர் டிராக்டர் ஏற்றி நாசம் செய்தபோது அதற்கு நியாயம் கேட்டதையும் தவிர போட்மாங்கே செய்த தவறு என்ன? இந்த கொடூரங்களை அரங்கேற்றியவர்களும், செத்துப்போனவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். இருவரும் ஒன்றா? ‘இந்த நாட்டின் மீது எனக்கு பற்று இல்லாமல் போனதற்கு நான் காரணம் அல்ல. நான் வாழ்வதற்கு உரிய குறைந்தப்பட்ச உரிமைகளைக் கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அந்த நிலை கொஞ்சமும் குறையாமல் இந்த நாடு என்பது ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சேவை செய்யும் நிறுவனமாக இருக்கும் நிலையில் தேசபக்தி எப்படி வரும்?இந்திய தேசபக்தி என்பதே இந்து தேசபக்திதான். இதை இந்திய தேசியம் என்ற கற்பிதத்தின் பெயரால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஊட்டியதில் காந்திக்கு பெரும்பங்கு உண்டு. ‘நான் ஒரு சனாதான இந்து’ என்று அறிவித்துக்கொண்ட காந்தி இந்திய தேசியம் என்பது இந்து தேசியம்தான் என்பதை பல சமயங்களில் மிக வெளிப்படையாகவே அறிவித்தவர். தலித்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை வேண்டும் என்ற அம்பேத்கரின் கோரிக்கையை, ‘அப்படி செய்தால் இந்து மதம் பிளவுபட்டு விடும்’ என்று சொல்லி நிராகரித்தவர். பிரிட்டீஷ் அரசு தலித் மக்களுக்கு அந்த உரிமையை வழங்கியபோது அதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த காந்தி எப்படி இந்த நாட்டு தலித் மக்களுக்கு ‘தேசப்பிதா’வாக இருக்க முடியும்? இப்போது இந்துத்துவா அமைப்புகள் பழங்குடி மக்களிடமும் தங்களின் பாசிச கருத்துக்களை விதைக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றன. அவர்களின் பழங்குடி கலாச்சாரத்தை நீக்கம் செய்து ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு இந்துத்துவ வகுப்பு எடுக்கிறது. குஜராத்தில் பழங்குடி மக்களைக் கொண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை மோடி கட்டவிழ்த்து விட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடிப்படையில் தேசியம் என்பதே மற்றமைகளை மறுக்கிற ஒன்றுதான். அது இந்திய தேசியமாக இருந்தாலும், தமிழ் தேசியமாக இருந்தாலும்... தேசியம் என்ற கருதுகோளே நிபந்தணையற்ற ஜனநாயகத்தை மறுப்பதில்தான் தொடங்குகிறது. அதுவே பின்பு அடக்குமுறையாகவும், அதிகாரமாகவும் மாற்றம் கொள்கிறது. இந்தியா என்பது பல்தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பதையும் நாம் இந்த பின்னணியில் இருந்துதான் வாசிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா என்ற நிலப்பரப்புக்கு எவ்வகையிலும் சம்பந்தப்படாத வட கிழக்கு மாநில மக்களை இந்திய தேசிய வரையறைக்குள் எப்படி சேர்க்க முடியும்?

ஏறக்குறைய அனைத்துப் பார்ப்பனர்களுமே இந்திய தேசியத்தை வலியுறுத்துகின்றனர். தமிழ் தேசியம் பேசும் பார்பனர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணம் தாங்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள் இல்லை என்ற உண்மையை அவர்களின் அடிமனம் எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. தங்களுக்கு என்ற சொந்த நாடு இல்லாத அவர்களின் மனநிலையானது அடுத்தவன் ஒரு நாடு அடைவதையும் தடுக்கிறது. அதனால்தான் பெரும்பான்மை பார்ப்பனர்கள் தமிழீழம் என்பதற்கும் எதிராக இருந்தார்கள், இருக்கிறார்கள். இந்த இந்துத்துவவாதிகள்தான் இந்திய தேசியத்தை தேசபக்தியின் பெயரால் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

உண்மையில் மக்களின் மனங்களில் இருந்து தேசியம் துடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசியவெறி இல்லை. தேச எல்லைகள் தேவையாய் இல்லை. இதற்கு உலகமயமாதல் உட்பட பல காரணங்கள். இந்த நிலைக்கு எதிர்மாறாக உலகம் முழுக்க ஆளும் வர்க்கத்தால் தேசியவெறி திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது. காரணம் ஆளும் முதலாளிகளுக்கு தேசிய வெறி என்பது மிகத் தேவையான ஒன்று. அழிவின் விளிம்பில் நிற்கும் முதலாளித்துவமானது, தனது இருப்பை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களிடம் தேசியவெறியை தூண்விடுகிறது. இதை முறியடிக்க வேண்டுமானால் முதலில் நாம் இந்த முதலாளித்துவ தேசியத்தின் துரோகிகளாக மனமாற்றம் கொள்ள வேண்டும். தேசபக்தனில் இருந்து தேசத்துரோகியாக மாறுவது ஒன்றே அறம் சார்ந்த வாழ்வாக இருக்க முடியும்!
22/9/09

உன்னைப்போல் ஒருவன்: இந்து பாசிசத்தின் இன்னொரு முகம்!

தனியார் ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல. இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.

இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன். இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும்சமூக அக்கறைவிஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது... இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லைஎன்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாகதீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும்புனிதப்போர்என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர்தெரியாதத்தனமாகஅந்தசதிவலையில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி. அட ங்கோ... குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே... அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது. தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர்ஆரிஃப்என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள்? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார். தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாகதேவர் மகன்என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்திபோற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் () ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா... ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா... செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா... மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும், இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில்என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாதுஎன்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லைஎன்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றனஎன்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில்எவனோ ஒருவன்என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்தஎவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி. தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும், பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி... ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக கடத்தி கொல்ல வேண்டிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது. ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதிஅதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல...’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமேஎன்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததேஎன்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்என்று அர்த்தமாம். ஒண்ணுக்கேத் தாங்கலை... இதுல யுகங்கள் தோறுமா?

31/7/09

தலித் முரசை ஆதரிப்போம்!

இறுகி கெட்டித்தட்டிப்போய் கிடக்கும் இந்திய, தமிழக சாதி அடுக்குகளை நோக்கி கல் எறிய வேண்டிய தார்மீக கடமையும், பொறுப்பும் சமூகத்தை நேசிக்கிற நம் அனைவருக்குமே இருக்கிறது. பேச்சு, எழுத்து, உடை, உணவு அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியை அதிலிருந்து விலக்கம் செய்து அனைவருக்குமான மானுடத்தை அன்பால் கட்டியமைப்பதுதான் சுதந்திரமான, சுயேச்சையான ஜனநாயகத்துக்கான வழி. இந்தப் பொறுப்பை முன்னின்று செய்ய எல்லோராலும் இயலுவதில்லை. கடந்த 13 ஆண்டு காலமாக தமிழ் சூழலில் தலித் முரசு இதழ் இந்தப் பணியை முன்னின்று செய்து வருகிறது.தமிழ் பண்பாடு என்பதே சாதிப்பண்பாடாகவும், தமிழ் கலாசாரம் என்பதே சாதிக் கலாசாரமாகவும் இருக்கிற சூழலில் விளிம்புகளின் குரலை, வாழ்வை உரத்துப் பேசும் தலித் முரசின் பணி ஒப்பிட இயலாத ஒன்று. ஆனால் முற்போக்கு சக்திகளுக்கு வாய்வழி ஆதரவை மட்டும் வழங்கி, அவர்களின் நாளாந்த வேலைத் திட்டங்களுக்குக் கை கொடுக்காமல் ஒதுங்கி இருக்கும் நமது தொன்றுதொட்டப் பழக்கம் தலித் முரசுவுக்கும் தொடர்கிறது. மிகுந்த பொருளாதார தள்ளாத்துடன் 13 ஆண்டுகளை கடத்தி இருக்கும் தலித் முரசு இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. 10 ஆயிரம் சந்தாதாரர்களுடன் தொடங்கப்பட்ட தலித் முரசுக்கு இப்போது இருப்பது வெறும் 5 ஆயிரத்துக்கும் குறைவான சந்தாதாரர்களே. இந்த எண்ணிக்கையை உயர்த்தாவிட்டால் தொடர்ந்து தலித் முரசு வெளிவருவது தடைபடும் வருத்தமான சூழல் ஒன்றும் வரக்கூடும்.

‘ஒரு பைசா தமிழன்’ தொடங்கிய அயோத்திதாசப் பண்டிதரால் அதைத் தொடர்ந்து 7 ஆண்டுகள் வரைக்குமே நடத்த முடிந்தது. அதன்பிறகு வேறு சிலர் தலித் மக்களின் நலன்களை முன்னிட்டு பத்திரிகைத் தொடங்கினாலும் அவை எல்லாம் குறுகியக் கால எல்லைக்குள்ளாகவே நின்றுபோயின. இச்சூழலில் 13 ஆண்டுகளைக் கடந்து எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், என்.ஜி.ஓ.க்களிடம் தன்னை அடகு வைக்காமல் மிகத் தரமான, நேர்த்தியான வடிவமைப்புடன் வெளியாகிக் கொண்டிருக்கும் தலித் முரசு பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது இச்சமூகத்தின்பால் அக்கரைக் கொண்ட அனைவரது கடமை.

திருச்சிக்கு அருகேயுள்ள திண்ணியம் என்ற கிராமத்தில் ஊரேக் கூடி பஞ்சாயத்து வைத்து ஒரு தலித்தின் வாயில் மனித மலத்தை திணித்தது. நவீன யுகத்தில் நடந்து காட்டுமிராண்டித்தனமான இந்த வன்கொடுமைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா..? ‘அது திட்டமிட்டு நடந்ததாகத் தெரியவில்லை” எனக்கூறி வெறும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஒரு வன்கொடுமை தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அதாவது திண்ணியம் கிராமத்தின் சாதி-இந்துக்கள் ஓரிடத்தில் எதேச்சையாக ஒன்று கூடியபோது, அந்த இடத்துக்கு யதேச்சையாக வந்த தலித் ஒருவர் மீது எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வாய்க்குள் பீயைத் திணித்தார்கள் என்பது நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம். அப்படி என்றால் அந்த கிராமத்தில் எல்லோரும் எப்போதும் பீயுடன் அலைந்து கொண்டிருக்கிறார்களா..? எவ்வளவு கேவலமான தீர்ப்பு இது..? கையில் 2 ஆயிரம் இருந்தால் எவன் வேண்டுமானாலும் யார் வாயில் வேண்டுமானாலும் பீயைத் திணிக்கலாம் என்பதாக இதை புரிந்து கொள்ளலாமா..?

நம்மில் அதிகப்பட்சம் பேருக்கு பீ என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கே நா கூசுகிறது. ஆனால் அதை மனித வாய்க்குள் திணிப்பது எத்தனை மோசமான மனித உரிமைகளுக்கு எதிரான வக்கிரம்..? அதற்கு எதிராகவும், இப்படி ஒரு அநீதியான தீர்ப்புக்கு எதிராகவும் இந்த தமிழ் சமூகம் என்ன எதிர்வினை செய்தது..? ஏன் யாருக்கும் ரத்தம் கொதித்து போராட வரவில்லை. உலகம் முழுக்க பல தேசங்களில் தமிழர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் வீதிக்கு வந்து போராடுகிறவர்கள் திண்ணியம் தீர்ப்புக்கு எதிராக என்ன செய்தார்கள்? யாரும் எதுவும் செய்யவில்லை/ செய்வதில்லை என்பதால்தான் சமூகத்தளத்தில் தலித் முரசுவின் வகி பாத்திரம் முக்கியமான ஒன்றாகிறது. அதை தாங்கிப் பிடிப்பதும் நமது கடமை என்றாகிறது.

‘தலித் முரசு என்பது தலித்துகளுக்கான பத்திரிகை. நாம் ஏன் வாங்க வேண்டும்?” என இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்கள் நினைக்கக்கூடும். அது அப்படியல்ல. முதலில் தலித் என்பது தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. ‘தல்’ என்றால் மராத்தியில் ‘மண்’ என்று அர்த்தம். ‘தலித்’ என்றால் இந்த மண்ணுக்கு சொந்தக்காரன் என்று அர்த்தம். இந்த மண்ணுக்கு சொந்தக்காரனாக இருக்கும் பூர்வ குடிகளை தீண்டத்தகாதவர்களாக மாற்றி வைத்திருப்பதைக் குறிக்கவே அச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே தலித் என்ற சொல் சேரி மக்களை மட்டுமே குறிக்கும் என்றில்லை. அது உலகத்தின் ஒடுக்கப்படும் இனங்கள் அனைத்துக்குமானது.

பாபா சாகேப் அம்பேத்கர் மூங்நாயக் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்த முடியாமல் நிறுத்தினார். அது நடந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் உலகமயமாக்கல் காலாம், தொழில் நுட்ப யுகம் என சொல்லப்படும் தலித்துகளால் ஒரு பத்திரிக்கை நடத்த முடியவில்லை என்பதே யதார்த்தம். உலகம் எவ்வளவு வேகமாக சுற்றினாலும் தலித்துகளைப் பொருத்தவரை காலம் உறைந்துப்போய் கிடக்கிறது. எனவே ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் விரும்பும் அனைவரும் தலித் முரசை ஆதரிக்க முன்வர வேண்டும்.

தலித் முரசு தனி இதழ் ஒன்றின் விலை வெறும் 8 ரூபாய்தான். ஆண்டு சந்தா 100 ரூபாய். ஆயுள் சந்தா 1,000 ரூபாய். இதைவிட குறைந்த விலையில் ஒரு இதழை தந்துவிட முடியாது. சந்தா செலுத்த விரும்புவோர் DALITH MURASU என்ற பெயருக்கு மணி ஆர்டர் எடுத்தோ, டிமாண்ட் டிராப்ட் எடுத்தோ அனுப்பலாம்.

முகவரி:

தலித் முரசு
203, ஜெயம் பிரிவு,
சித்ரா அடுக்ககம்,
9, சூளைமேடு நெடுஞ்சாலை,
சென்னை - 600 094
தொலைபேசி: 044- 23745473
E-mail: ambedkar@md4.vsnl.net.in
www.dalithmurasu.com


ஆண்டுக் கட்டணம் ரூ. 100/-
வாழ்நாள் கட்டணம் ரூ 1,000/-

16/6/09

எங்கள் கிராமத்தில் குளம் இருந்தது..!

வழி தவறிய இரண்டு மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்.
இரண்டிடமும்
கடல் பற்றிய கதைகள் இருந்தன
கடல் இல்லை
-இலக்குவண்

‘கிராமங்களின் இயல்பு தொலைந்துவிட்டது’ என்பது எல்லோரும் பேசி சலித்த வாக்கியமாகிவிட்டது. ஆனாலும் அவற்றை பேசுவதற்கான தேவைகளும், காரணங்களும் மேலும், மேலும் பெருகியபடியே இருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவாக கிராமங்களில் ஏற்பட்டிருக்கும் நுண்ணிய மாற்றங்கள் பற்றிய மாற்றுப்பார்வைகள் அவசியமானவை.

எங்கள் ஊரிலும், தஞ்சாவூரைச் சுற்றிய ஏனைய கிராமங்களிலும் ஆற்றுப்பாசனம்தான் பிரதானம் என்றாலும் குளங்களும் நிறைய உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களும் அன்றாட வாழ்க்கையில் குளத்தை மையப்படுத்திய கலாச்சாரமும் மக்களிடம் இருந்தது. செங்கூரணி குளக்கரையின் மேற்கே ஆண்கள் படித்துறை, கிழக்கே பெண்கள் படித்துறை. அந்த இடத்தில் மட்டும் குளத்து நீர், ஒரு தெரு போல உள்நோக்கி நீண்டு செல்லும். துணி துவைப்பதற்காக போடப்பட்டிருக்கும் சொறி மண்டிய கல்லின் இடுக்குகளில் எப்போதும் சவுக்காரக் கட்டியின் மிச்சங்கள் ஒட்டியிருக்கும்.

சோப்பு டப்பா பவுசு அறியாதவர்கள் சோப்பின் மேலே ஒரு பூவரசு இலை... கீழே ஒரு இலை.. புதர் இடுக்குகளில் ஒளித்து வைத்து அடுத்த நாள் வந்து எடுத்துக்கொள்வார்கள். விடுமுறை நாட்களில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்தி போவதும், முங்கு நீச்சல் அடிப்பதும், நாவல் மரமேறி பழம் தின்று நீரதிர கீழே குதிப்பதுமாக குளம் என்பது சிறுவர்களின் உலகமாக இருந்தது. குளத்துக்குள் கண்டெடுக்கும் காசில் வாங்கும் இலந்தைப்பழ மிட்டாய்க்கு ருசி அதிகம். காசைவிட எப்போதும் ஊக்குகளே அதிகம் கிடைக்கும். வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு, குடத்தை நீருக்குள் கவிழ்த்துப்போட்டு நீச்சல் கற்றுக்கொடுக்கும் காட்சிகள் அரிதானவையும், அழகானவையும். மெல்ல, மெல்ல குளத்தின் நீர்ப்பரப்பு சுருங்கி வெயில் தீயும் கோடையில் குளம், குட்டையாகும். ‘‘இன்னைக்கு செங்கூரணில மீன் புடிக்கிறது..’’ என அதிகாலையில் தண்டோரா சத்தம் கேட்கும் நாட்களில் ஊரெங்கும் மீன் குளம்பு. இப்போதும் செங்கூரணி இருக்கிறது. மீன் பிடியல் நடக்கிறது. ஆனால் அதில் மீன்வாசம் இல்லை. யூரியா வாசம் அடிக்கிறது.

இன்றைய கிராமத்துக் குளங்கள் அனைத்தும் வெறும் பணம் காய்ச்சி மரங்களாகவே நடத்தப்படுகின்றன. ‘உள்நாட்டு மீன் பிடிப்பு’ என்ற பெயரில் அரசாங்கம் கிராமத்து குளங்களில் மீன் வளர்ப்பதை ஊக்குவிக்கிறது, மானியம் கொடுக்கிறது. இதில் அதிகமான லாபம் வருவதை உணர்ந்துகொண்ட உள்ளூர் பணக்காரர்கள் குளத்தை ஏலம் எடுக்க போட்டி போடுகின்றனர். பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன கிராமத்துக் குளங்களின் இன்றைய குத்தகைத் தொகை 50 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அதிக பணத்தை குளத்தில் கொட்டும் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் குளத்துக்குள் கண்ட கருமாந்திரத்தையும் கொட்டுகின்றனர். யூரியா, மாட்டுச்சாணி, பன்றிக் கழிவு... இன்னும் பெயர் தெரியாத வேதிப்பொருட்கள் குளத்துக்குள் கொட்டப்படுகின்றன. இவை தரும் போஷாக்கில் மீன்கள் தளைத்து வளருகின்றன. நாம் ஐந்து நிமிடம் உள்ளே நின்றுவிட்டு ஏறினால் உடம்பெல்லாம் அரிக்கிறது. அதில் குளித்தால் அழுக்குப் போவதற்கு இன்னொருமுறை குளிக்க வேண்டியதிருக்கும். அந்த தண்ணீரை மாடுகளும் குடிப்பதில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக கிராமத்து குளங்களில் குளிப்பதை மக்கள் கைவிட்டுவிட்டார்கள். மனித நடமாட்டம் குறைந்துபோன குளங்களில் ஆண்கள் படித்துறையும் இல்லை, பெண்கள் படித்துறையும் இல்லை. எல்லா திசைகளிலும் கோரை மண்டிப்போய் கிடக்கிறது. மீன் வளர்ப்பின் லாப ருசி பார்த்தவர்கள் இப்போது தங்களின் சொந்த விவசாய நிலங்களையும் குளமாக்கத் தொடங்கியுள்ளனர்.

குளத்தின் மக்கள் பயன்பாட்டை இப்போது பதிலீடு செய்பவை போர்வெல்கள் எனப்படும் ஆழ்துளை கிணறுகள். பெரும்பான்மை மக்கள் குளிப்பதும், துவைப்பதும் இதில்தான். கிராமங்களில் பெரும்பான்மையாக இருக்கும் சிறு விவசாயிகளின் நிலங்கள் எப்போதும்போல ஆற்றுப்பாசனத்தையும், மழையையுமே எதிர்பார்த்திருக்கின்றன. அதேநேரம் பெரும்பகுதி நிலங்களை வசமாக்கி வைத்திருக்கும் போர்வெல் முதலாளிகளின் நிலங்களிலும், அந்த நீரைக் காசுக்குப் பாய்ச்சுவதன் மூலம் அதைச் சுற்றியிருக்கும் நிலங்களிலும் எப்போதும் ஏதோ ஒரு விவசாயம் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் இப்போது குறைந்தது 10&க்கும் மேற்பட்ட போர்வெல்கள் இருக்கின்றன. இந்த போர்வெல்கள், மின்சாரம் இருக்கும் நேரமெல்லாம் நிலத்தடி நிரை உறிஞ்சிக்கொண்டே இருக்கின்றன. 2006&ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் போர்வெல்கள் இருக்கின்றன. இதில் நான்கில் ஒரு பங்கு போர்வெல்கள் டெல்டா மாவட்டங்களில் ஓடுகின்றன. இதுபோக வருடம் ஒன்றுக்கு 40 ஆயிரம் புதிய போர்வெல் இணைப்புகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இந்த போர்வெல்கள் அனைத்தும் நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சுவதன் நிலத்தடி பாதகங்கள் ஒரு பக்கம்... இன்னொரு புறம் இந்த நீரைப் பயன்படுத்தி கிராமத்து விவசாய நிலங்களை ஓய்வு, ஒழிச்சல் இல்லாத அசுரத்தனமான உழைப்புக்கு உட்படுத்துகிறார்கள். குருவை, சம்பா, தாழடி, வைகாசிப்பட்டம், ஆடிப்பட்டம்... ஒரு கருமமும் இப்போது கிடையாது. அறுப்பு முடிவதற்குள் நடவுக்கு தயார். நாற்று நடுவதற்கு நெற்பயிர் சுமார் முப்பது நாள் பயிறாக இருக்க வேண்டும். அதைப் பறித்துதான் நடவு நடுவார்கள். அந்த முப்பது நாளை கூட வீணாக்கக்கூடாது என்பதற்காக வேறொரு வயலில் நாற்றுவிட்டுத் தயாராக வைத்துக்கொள்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து எங்கள் வயலில் நடந்த வழமையான விவசாயம் இப்போது கிடையாது. இருக்கும் முக்கால் ஏக்கர் வயல் நான்காக பிரிக்கப்பட்டிருக்கும். நிலத்தின் வரப்புகளில் துவரை, வெண்டை போன்றவற்றை நட்டு வைப்போம். அறுப்பு வரைக்கும் வெண்டைக்காய் வீட்டுக்கு உதவும். அறுப்பு முடிந்த சில நாட்களில் வயலில் ஈரம் காய்ந்தபின்பு ஒரு ஓட்டு ஓட்டி உளுந்து, எள்ளு இவற்றுடன் கொஞ்சம் தட்டைப்பயிறு, பாசிப்பயிறு இவற்றையும் சேர்த்து விதைப்போம். முன்பே விதைத்த துவரைப்பயிர்கள் வரப்புகளில் கூடாரம்போல் வளர்ந்து நின்று இந்த தானியப்பயிர்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கும். இன்று எதுவுமில்லை. பென்சிலால் வரையப்பட்டதுபோல வரப்புகள் சுருக்கப்பட்டு அந்த இடத்தில் கூட நாலு நெல் விளையவைத்து காசாக்க முனைகிறார்கள்.

ஒரு விவசாயி காசு கொடுத்து அரிசு வாங்குவதை அவமானமாக நினைத்த காலம் ஒன்று இருந்தது. விதைநெல் வாங்கவே காசில்லாத வறிய நிலையில் இருக்கும் சில விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கியாவது வெள்ளாமை செய்வார்கள். ‘வெள்ளாமுடாம தரிசா போட்டிருந்தா அப்புறம் ஊருக்குள்ள காறித் துப்பமாட்டான்..’ என்ற வார்த்தைகளில் விவசாயம் என்பது அவர்களின் உணர்வில் கலந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று அதிகவிலைக்குப் போகும் நெல் ரகத்தை பயிட்டு விற்றுவிட்டு, டவுனில் இருந்து பொன்னி அரிசி கிலோ 35 ரூபாய்க்கு வாங்கிவருகிறார்கள். இப்படி பணம் காய்ச்சி மரமாக நிலத்தை மாற்றினால் பாவம் அந்த நிலம்தான் என்ன செய்யும்?

யுகம், யுகமாக ஆதி கரங்கள் உழைத்த இந்த பூமியை அதிஉயர் உழைப்புக்கு உட்படுத்துவதன் எதிர் விளைவாக, இதுவரைக்கும் நிலம்சார்ந்த வாழ்வின் ஆதாரமாக இருந்த கால்நடைகள் விவசாயிகளின் வீடுகளை விட்டு துரத்தப்பட்டுவிட்டன. கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த மாட்டுக் கொட்டகைகள் 75 விழுக்காடு இப்போது இல்லை. அந்த மாடுகளின் சாணங்களை அள்ளிக்கொட்டிய எருக்குழிகளும், அந்த எருவை அள்ளி வயலில் கொட்டிய பாரம்பரிய விவசாயமும் இல்லை. ‘ஏர் கலப்பை உழவு முடிந்துவிட்டது, இயந்திரங்கள் வந்துவிட்டன’ என்பது உண்மைதான். ஆனால் அது மட்டுமே உண்மையில்லை. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போய்விட்டது முக்கியக் காரணங்களில் ஒன்று. தரிசு நிலம் என பெரும்பாலும் இருப்பதில்லை. போர்வெல் தண்ணீர் பாய்ச்ச முடியாத தூரத்தில் இருக்கும் நிலங்கள் மட்டுமே தரிசு நிலங்கள். ஏனைய வயல்களில் எங்கும், எப்போதும் பசுமையே நிறைந்திருக்கிறது. இது வேறு பலவற்றை விழுங்கி செரித்த ஆபத்தான பசுமை. கொத்த வரும் சர்ப்பத்தின் மினுமினுப்பு போன்றது. ஆகப் பெரும்பான்மையான இடங்களில் எப்போதும் விவசாயம் என்றால் அப்புறம் மாடுகளை எங்கேப்போய் மேய்ப்பது? மாடுகளை விற்றுவிடு... பாக்கெட் பால் வாங்கு... காபி வை... முடிந்தது சோலி.

இதன் ஒரே நல்லவிளைவு, தரிசாகக் கிடக்கும் நிலங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தரிசு நிலங்களின் அளவு படிப்படியாகக் குறைந்துகொண்டே வருவதால் வேறு வழியில்லாமல் இப்போது கிராமங்களில் கழிப்பறைகள் கட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

பழமை, பாரம்பரியம், பண்பாடு என்றெல்லாம் சொல்லி பின்னோக்கி போவதை ஆதரிப்பதில்லை மேற்கண்ட எழுத்தின் அர்த்தம். நவீன வசதிகள் என்னும் முன்னோக்கியப் பாய்ச்சலில் நாம் பெற்றிருக்கும் தீதுகள் அளவுக்கு அதிகமாகப் போய்விட்டன. சாதி காப்பதாக இருக்கும் நம் கிராமத்துப் பண்பாட்டு, பாரம்பரியத்தின் கூறுகள் தொடர்ந்தபடியே இருக்க, பற்றித் தொடர வேண்டிய பலவற்றை உலகமயத்தின் நாவுகள் தின்று செரித்துவிட்டன. இதே கட்டுரையின் தொடக்கத்தில் வரும் குளம் பற்றிய பகுதியில், அந்தக் குளத்தில் குளிக்க முடியாத ஒரு தலித்தின் மனநிலையில் இருந்து இந்த விஷயத்தை பார்ப்பது அவசியமானதும், முக்கியமானதும் ஆகும். குளத்தில் மீன் பிடிக்கும்போது அதை தண்டோரா போட்டு ஊருக்கு அறிவிக்கும் ஒரு தலித்தால், அந்த குளத்தில் கால் நனைக்க முடியாது என்பதே யதார்த்தம். அதேபோலதான் ஒரு நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளியின் மனநிலையில் இருந்தும் இந்த விவசாய நிலைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை அணுக வேண்டும்.

ஆனால் உலகமயத்தின் கரங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் நியாயங்களுடன் இந்த அடையாள அழிப்பை நிகழ்த்தவில்லை. மாறாக பிராந்திய தேவைகளை புறமொதுக்கி, எல்லோரது அடையாளத்தையும் அழித்து தன்னுடைய வண்ணத்தைப் பூசிவிடுகிறது. இன்றைய தமிழக விவசாய கிராமங்களின் மீது உலகமயம் துப்பிய எச்சில் படிந்திருக்கிறது. அதைத் துடைப்பதற்கு நம் கரங்களை ஒன்று சேர்ப்போம். யாவற்றையும் ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமேப் பார்க்கும் உலகமய மாயையிலிருந்து விடுபட்டு நம் வாழ்வாதாரங்களின் தனித்துவங்களை மீட்டெடுப்போம்.

13/6/09

கங்காணி..!
அவனுக்கு சுப்பிரமணின்னு பேரு. ஆனா ஊருமுழுக்க ‘செவத்தான்’னுதான் கூப்பிடுறது. அப்படி ஒண்ணும் அந்தப்பய வெள்ளைக்காரன் கலர் கிடையாது. தார் டின்னுக்கு கால் முளைச்ச மாதிரிதான் இருப்பான். எப்படியோ அப்படி ஒரு பேராகிப்போச்சு. இன்ன வேலைன்னு கிடையாது.. கல்யாண வீட்டுல பந்தல் போடுவான். தென்னமட்டைவொளை வாங்கியாந்து ஊறவச்சு, நறுவுசா கீத்து பின்னுவான். இங்கேருந்து கருக்காக்கோட்டை வரைக்கும் கூரை மேய போவான். மீன்வாங்கப்போனபய, குளத்துல இறங்கி வலை போட்டுகிட்டு நிப்பான். சித்தன்பாடு, சிவன்பாடுதான் அவம் பொழப்பு. ஆனா அவனுக்குன்னு ஒரு காலம் உண்டு. அந்த நேரத்துல அவன்தான் ராசா.

ஆத்துல தண்ணி வந்துட்டா ஊருக்குள்ள பெரிய வாத்தியைவிடவும் அவனுக்குதான் மதிப்பு அதிகம். எந்த விவசாய வேலையா இருந்தாலும் கூலியாளுக்கு அவன்கிட்டதான் வந்தாகனும். சேறடிக்க, வரப்புவெட்ட, நாத்தறிக்க, ஏர் ஓட்ட, பரம்பு செட்டு வைக்க, நடவு நட, களைபறிக்க, அறுப்பு அறுக்கன்னு எல்லாத்துக்கும் அவன்தான் கங்கானி. இன்ன கிழமைக்கு இன்ன வேலைக்கு இத்தனை பேரு வேணும்னு ரெண்டு நாளைக்கு முந்தி சொல்லிட்டாப் போதும்... டான்னு ஆளோட வந்துடுவான். அதுக்கு முன்னாடி கூலியாளுக்கு உண்டான காசையும், கங்காணி காசையும் மொத நாளே வாங்கிடுவான். ஆளுக வேலை முடிஞ்சு கரை ஏறுனுச்சுன்னா, மாத்தி வெச்ச நோட்டை எண்ணிக் குடுக்க ரெடியா நிப்பான். இதனாலதான் கூலியாளுக அத்தனை பேத்துக்கும் அவன் மேல அப்படி ஒரு நம்பிக்கை. அவன்கிட்ட எப்பவும் ஐம்பது, நூறு ஆளுக கைப்பாடா இருக்கும்.

மூணாம் வருஷம் பயங்கர ஆள் தட்டுப்பாடு. வெளியூர் ஆளையெல்லாம் டிரக் வச்சு அழைச்சுட்டு வந்து வேலை நடக்குது. கூலியும் எக்குத்தப்பா ஏறிப்போச்சு. செவத்தான்கிட்ட இருந்த ஆளுகல்லாம் மத்த இடத்தைப்போல கூலியை ஏத்தி வாங்கிக்கொடுக்கச் சொல்லிக் கேக்குது. இவனுக்கு மனசு கேக்கலை. ‘‘வெளையுறதை வித்தா போட்ட காசையே எடுக்க முடியலை. வெளியூர்காரன் அப்படி பண்றான்னு நம்மளும் பண்ணமுடியுமா..? அனுசரிச்சுப் போவியளா..’’ன்னு அதட்டுன அவன், அதோட நிக்கலை. அந்த வருஷம் கிட்டத்தட்ட நூறு ஆளுங்களை வெச்சுகிட்டு, ராத்திரி நடவெல்லாம் நட்டு குடுத்தான். ஆளுக அவனுக்கு மட்டும் கங்காணி காசை கூட்டிக்குடுத்தப்போ, ‘‘வந்துட்டவொ வள்ளலு..’’ன்னு தட்டிவிட்டுட்டுப் போயிட்டான்.

எல்லாம் மிஷினாகிப் பின்னாடி செவத்தானோட கங்காணி பொழப்பும் மண்ணாப்போச்சு. அறுப்பு அறுக்குற மெஷின்கிட்டப்போயி, ‘நாளைக்கு கீழவீட்டுக்காரனுக்கு அறுப்பு. கருக்கல்ல வந்துசேரு..’ன்னு சொன்னா மெஷின் வந்திரவாப் போவுது..? இதைப்பத்தி செவத்தான்கிட்ட கேட்டா இறங்கிப்போன குரல்ல அவன் சொல்றான், ‘‘மிஷினு வரட்டும்ணே... இப்படி மனுஷங்க நாயி மாறி கெடந்து கஷ்டப்படாம மிஷினு அந்த வேலைவொளைப் பார்க்குறது நல்ல விஷயம்தான். ஆனா இத்தனை நாளா இந்த வெள்ளாமை வேலையை நம்பியே பொழச்சுக் கெடந்த ஆளுவொளுக்கு வேற என்னா மாத்து? எனக்காவது ஒண்ணுக்கு நாலா பொழப்பு தெரியும். கூரை மேய்ஞ்சோ, மீன் பிடிச்சோ என் பொழப்பு ஓடிரும். மத்தவன் பாடு என்னத்துக்கு ஆவ..?’’

20/1/09

சாரு, ஆனந்தகண்ணன், குழந்தைப்போராளி, கொரியன் போன்

புத்தகக் கண்காட்சிக்கு முந்தைய வாரம் சென்னையின் எல்லா அரங்கங்களும் புத்தக வெளியீட்டு விழாக்களால் நிறைந்திருந்தன. பிலிம் சேம்பரில் எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழா. காம்பியரிங் செய்ய ஆனந்த கண்ணனும், நிஷாவும் வந்திருந்தனர். அவர்களுக்கு புத்தகத்தின் பெயரும் தெரியவில்லை. ரவி சுப்ரமணியம் என்பது ஒரே பெயர் என்பதும் தெரியவில்லை. எதன்பொருட்டு இந்த காம்பியரிங் கூத்து? ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்குபவர்களோ, உயிர்மை வெளியீட்டு விழாவுக்கு வருபவர்களோ காம்பியரிங் கண்டு மயங்குபவர்கள் இல்லை. அப்படி மயங்குவதற்கு நிஷாவும் பிரமாதமான பிஹர் இல்லை. (அதற்கு தமிழச்சியே தேவலாம்). அந்த பொண்ணுக்குு பல தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கவேத் தெரியவில்லை. அழைப்பிதழில் 'தேணுகா, கும்பகோணம்' என்பது மாதிரிதான் போடுவார்கள். அதைப்படித்துவிட்டு, 'தேணுகா கும்பகோணம் அவர்கள் இப்போது பேசுவார்' என்று கூத்தடித்தார்கள். கடைசியில் 'இந்த புத்தகத்தை இன்னாருக்கு டெடிகேட் செய்கிறேன்' என்று சொல்லாததுதான் பாக்கி என்றால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் ஒருவர்.

------00000----------00000------0000000000000--------

இதற்கு அடுத்து புக் பாய்ண்ட் அரங்கில் சாருவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா. சினிமா கலருக்காகவா என்னவென்று தெரியவில்லை, இயக்குநர் அமீரையும், சசிக்குமாரையும் அழைத்திருந்தார்கள். அவர்கள் இருவரும் மிக நேர்மையாக 'புத்தகத்தை வெளியிட சொன்னாங்க. இதை நான் படிக்கவும் இல்லை. படிச்சாலும் புரியாது. நமக்கும் புத்தகத்துக்கும் ரொம்ப தூரம்' என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்கள். (முன்பொருமுறை தீராநதி பேட்டியில் 'நீங்கள் கிராமத்தின் அடர்த்தியான நுட்ப வாழ்வை, கலாசார எதிர்நிலையை சொல்லியிருந்தவிதம் பற்றி..?' என்ற ரீதியில் அமைந்த கேள்வியொன்றை கடற்கரை கேட்க, 'நீங்க சொல்றது எனக்கு ஒண்ணும் புரியலை. நான் அப்படி நினைச்சு எடுக்கவும் இல்லை. எனக்குத் தெரிஞ்சதை நான் எடுத்தேன் அவ்வளவுதான்.' என்று அமீர் சொல்லியிருந்த பதில் நினைவுக்கு வருகிறது). சில நாட்கள் கழித்து லீனா மணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கும் அமீர் அழைக்கப்பட்டிருந்தார். அங்கும் தெளிவாக 'பருத்திவீரன் பார்த்துட்டு என்னைப் பெரிய படிப்பாளின்னு நினைச்சுட்டாங்க போல.. நமக்கு புத்தகம் படிக்கிற சோலியெல்லாம் ஆகாது' என்று சொல்லிவிட்டார். அவரின் நேர்மையெல்லாம் மெச்சப்பட வேண்டியதுதான். அவரை ஏன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்து அவரையும் சங்கடப்படுத்தி, உங்கள் புத்தகத்தையும் கேவலப்படுத்திக்கொள்கிறீர்கள்.? (லீனா புத்தக வெளியீட்டு விழாவில் தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சு, பிரமாதம்.)
-------000000000---------00000000------00000000=-------

சாரு ஆன்லைன் பக்கம் போனால் தினந்தந்தியின் வரிவிளம்பரம் பார்த்தது போலிருக்கிறது. 'என்னைப்பற்றி லக்கிலுக் சொன்னது', தனக்கு வந்த வாசகர் கடிதம், தான் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுக்கும் போட்டோ, 'தினகரனில் வந்த என் போட்டோ' என்று திருவிதாங்கூர் ராஜ வைத்தியசாலை வைத்தியரின் பத்திரிகை விளம்பரம் போல இருக்கிறது.தன்னைப்பற்றி இன்னார் இப்படி சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி அதைப்பற்றிய உரையாடலை அடுத்த கட்டத்திற்கு தொடங்கி வைப்பதாக இருந்தால் இதெல்லாம் ஓ.கே. அதைவிட்டுவிட்டு, மற்றவர்கள் தன்னைப்பற்றி சொல்லியிருப்பதை தன் வலைப்பக்கத்தில் எடுத்துப்போடுவதெல்லாம் நல்லாவா இருக்கு? ( 'விகடனில் என் 32‍வது சிறுகதை என மெலட்டூர் நடராஜன் எழுதுவது போலிருக்கிறது). சமயத்தில் யாருடனோ சாட் பண்ணியதையெல்லாம் எடுத்துப்போடுகிறார். கண்றாவி!
--------0000000000------------000000000000-----------000000000-----

கடந்த வருடத்தின் மிக முக்கிய மொழி பெயர்ப்பு 'குழந்தை போராளி". பால்யத்தின் வாசம் மாறுவதற்குள் துப்பாக்கி ஏந்த நிர்பந்திக்கப்படும் உலகின் லட்சக்கணக்கான குழந்தை போராளிகளின் பிரதிநிதியாக தன் வாழ்வை திறந்து காட்டியிருக்கிறாள் சைனா கெய்றெற்சி. உகாண்டாவில் ஒபோடே ஆட்சிக்கு எதிராக முசெவெனி உருவாக்கிய என்.ஆர்.ஏ. படையில் தனது 7‍வது வயதில் சேரும் (நினைவிருலிருந்து எழுதுகிறேன். ஒன்றிரண்டு வயது கூடுதல், குறைவாக இருக்கலாம்) சைனாவின் ஆட்டோ பயோகிராஃபி இது. அவர் விவரிக்கும் உகாண்டாவின் கலாசாரம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. தன் அப்பாவைப்பற்றி அவர் சொல்லும் விவரனை நம் மனதுக்குள் அப்பாப் பற்றி வைத்திருக்கும் சட்டகங்களை அடித்து நொறுக்குகிறது. சமயத்தில் 'இதெல்லாம் புனைவுகளா, உண்மையா' என்ற சந்தேகம் வந்தாலும் கூட வார்த்தைகளுக்கு இடையே உணர முடிகிற குருதிவாடை, உண்மையை உணர்த்துகிறது.

பிறகு என்.ஆர்.ஏ.வில் இணைவதும், தன்னைவிட கணமான துப்பாக்கியை சுமந்துகொண்டு பல களங்களில் சமர் புரிந்ததுமாக‌ அவர் விவரிக்கும் வரலாறை குழந்தையின் மனநிலையில் இருந்து உணர்ந்துகொள்ளும்போது ரணம் மிகுந்ததாகிறது. 'நாங்கள் குழந்தைப் போராளிகள். வேறு யாரையும் விட நாங்கள் விசுவாசமானவர்கள். நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். உயிர்பயம் தெரியாது. பொய் அறியமாட்டோம். அதனால் நாங்கள் அவர்களுக்குத் தேவையாய் இருந்தோம். முசேவெனி உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் உகாண்டா குழந்தைப் போராளிகளில் நானும் ஒருத்தி' என்று சொல்லும் சைனா பிற்பாடு அதே முசேவெனியில் அரசிடமிருந்து தப்பியோடி தஞ்சம் பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

இதற்கிடையே தனக்கு வந்துபோகும் காதல்கள், திருமணம், குழந்தை, குடிப்பழக்கம் என யாவற்றையும் மறைக்காமல் சொல்கிறார். தென் ஆப்ரிக்காவில் சிலகாலம் தஞ்சம் புகுந்து கடைசியாக‌ டென்மார்க்கில் அடைக்கலம் அடைந்த‌ சைனா கெய்றெற்சி, இப்பொதும் அங்கேயே வசிக்கிறார். இந்தப் புத்தகத்தை டச்சு மொழியில் இருந்து நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் இலங்கையை எழுத்தாளர் தேவா. விடுதலைப் புலிகளூம், சிங்கள ராணுவமும் குழந்தைப் போராளிகளை தங்கள் படைகளில் வைத்திருப்பதாக பல காலமாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அந்த மண்ணைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்திருப்பது பொருத்தமானது.புத்தகத்தின் பல இடங்களில் காணக்கிடைக்கும் வரிகள், விடுதலைப் புலிகளின் மீதான விமர்சனத்துடன் பொருத்திப் பார்க்க வைக்கின்றன. மொழிபெயர்ப்புக்கே உரிய அந்நியமான மொழியல்லாது, மொழியாக்கமாக ஆக்கப்பட்டிருப்பது சிறப்பு. தமிழின் மிக முக்கியமான பிரதிகளில் ஒன்று. (நல்ல அச்சுக்கட்டுடன் 180 ரூபாய் என்ற குறைந்த விலையில் இந்த புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கும் கறுப்புப் பிரதிகள் நீலகண்டனுக்கு நன்றியும்,வாழ்த்தும்.)
--------0000000000-----------0999999-----------0000000======

கொரியன் மாடல் செல்போன்களை தடை செய்யும் நடவடிக்கைக்கு அவற்றில் ஐ.எம்.இ. நம்பர் இல்லை என்றும், அந்த போன்களை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தினால் கண்டறிய முடியாது என்றும் காரணம் சொல்கிறார்கள். நோக்கியா, மோட்டரோலா, சோனி எரிக்ஸன், சாம்சங் போன்ற மிகப்பெரிய செல்போன் நிறுவனங்களின் அரசியல் எதுவும் இதன் பின்னால் இல்லை என நம்பக்கடவது..!
-------00000000--------00000000-------000000

நான் பிளாக் எழுதி கொள்ளகாலம் ஆகிறது. இப்போது உள்ள பலருக்கு என்னைத் தெரியாது. இன்னமும் எழுதுற பழைய ஆளுங்க, என்னுதையும் படிக்கச் சொல்லி கொஞ்சம் விளம்பரம் பண்ணுங்கப்பா..:)