28/5/08

சென்னை: மிரள வைக்கும் வீட்டுவாட‌கை


சென்னை என்பது பணக்காரர்களுக்கான நகரமாக மாறி வெகு காலமாகிவிட்டது. அதை நேரடி அனுபவத்தில் உணர்ந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் மிகச் சமீபத்தில் வாய்த்தது. தங்கியிருக்கும் மேன்ஷன் அறையிலிருந்து தப்பித்து மூன்று பேர் சேர்ந்து தனியாக ஒரு வீடு பார்க்கலாம் என முடிவு செய்து வீடு தேடத் தொடங்கினோம். சென்னையின் எழுதப்படாத விதிகளின்படி வாடகையைப்போல பத்து மடங்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் முன்கூட்டியே தெரிந்திருந்தபடியால் அதற்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டுதான் வீடு பார்க்கும் படலமே ஆரம்பமானது.

நாங்கள் இப்போது தங்கியிருக்கும் மேன்ஷன் அறைக்கு ஆளுக்கு 1,000 ரூபாய் வீதம் 3,000 ரூபாய் வாடகைத் தருகிறோம். இதனுடன் மேற்கொண்டும் ஆயிரம் ரூபாய் சேர்த்து 4,000 ரூபாய் வாடகைக்கு வீடு பிடிக்கலாம் என முடிவுக்கு வந்தபோது, 'இவ்வளவு பெரிய தொகையை(?) வாடகையாகக் கொடுக்கப்போகிறோம். அதனால் நமக்கு சௌகர்யமான ஏரியாவில், ஓரளவுக்கு வசதியான வீடாகப் பார்க்கலாம்' என்பது எங்களின் முன்முடிவாக இருந்தது. அது எத்தனை முட்டாள்தனமானது என்பது முதல் வீட்டிலேயே புரிந்துவிட்டது.

சூளைமேட்டின் வளைந்து நெளிந்து செல்லும் சந்துகளில் புரோக்கரால் அழைத்துச்செல்லப்பட்டோ ம். அவர் இன்னும் சிலருக்கு செல்பேசினார். இறுதியில், "இன்னாப்பா நீ.. நாலாயிரத்துக்கு வீடு கேக்குற..? இப்ப எல்லா எடத்துலயும் வாடகையை ஏத்துட்டாங்கப்பா.. ஆறாயிரத்துக்கு இருக்குது ஒரு வீடு. ரெண்டாவது மாடி. டபுள் பெட்ரூம்.. அட்டாச்சுடு டாய்லெட், பாத்ரூம் எல்லாம் இருக்கு. வண்டி நிறுத்திக்கலாம். போறியா..?" என்றார். எங்கிருந்துப் போக..? ஆறாயிரம் தாங்காது. எங்களின் பின்வாங்கல் கண்டு, அந்த புரோக்கர் வடபழனி ராம் தியேட்டர் பக்கமாய் 4,500 ரூபாக்கு ஒரு வீடு இருப்பதாக சொன்னார். 'பரவாயில்லை. 500 ரூபாய் அதிகம் போனால் போகட்டும்' என முடிவெடுத்து ராம் தியேட்டர் வீட்டை பார்க்க அடுத்த நாள் காலையில் போனோம். அழகான தென்னை மரத்துடன் கூடிய வீட்டின் இரண்டாது தளத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும்போதே 'நேத்து சாயுங்காலம்தாம்பா முடிஞ்சுது..' என்று கைவிரித்தார் ஹவுஸ் ஓனர்.

மேன்ஷன் அமைந்திருக்கிற திருவல்லிக்கேணியிலேயே ஒரு வீட்டைப்பார்த்து பிடித்திருப்பதாகச் சொல்லிவிட்டு நாளை காலையில் வந்து அட்வான்ஸ் தருவதாக சொல்லிவந்த நிலையில் அன்று மாலையிலேயே அது முடிந்துவிட்டிருந்தது. "இப்பல்லாம் பசங்க வர்றாங்க.. வீடு பிடிச்சிருக்குதா, ஒருத்தன் அங்கயே நின்னுக்குறான். இன்னொருத்தன் போயி ஏ.டி.எம்‍‍-ல பணத்தை எடுத்துட்டு வந்து கையோட முடிச்சுட்டு போயிடுறாங்க. டோ க்கன் அட்வான்ஸ் கொடுக்குற சோலியே இப்ப கிடையாது" என்றார் புரோக்கர்.

இப்படி மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம், பட்டிணப்பாக்கம், மயிலாப்பூர், சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழனி என்று நாங்கள் வீடு தேடிய அத்தனை ஏரியாவிலும், எதுவுமே அமையவில்லை. இதில் ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு பாத்ரூம் சைஸ் ரூமை, 'வீடு' என்று மனசாட்சியற்று சொல்லி ஒரு ஆசாமி கடுப்பேற்றினான். ஆரம்பிப்பதற்குள் முடிந்துவிட்ட அந்த 'வீட்டு'க்கான வாடகை 3,000 ரூபாய்.

புரோக்கருக்கு ஒரு மாத வாடகையை கமிஷனாகக் கொடுப்பதற்குப் பதிலாக ஃப்ரீ ஆட்ஸ் பத்திரிக்கை வாங்கினால், நேரடியாக வீட்டு உரிமையாளரிடமே பேசி கமிஷன் காசை மிச்சப்படுத்தலாம் என யோசித்து அதையும் முயற்சித்தோம். அதில் பெரும்பாலும் மிக அதிக வாடகையுள்ள வீடுகள்தான் வருகின்றன. இல்லையென்றால் விலைபோகாத வீடுகளாக இருக்கின்றன. தப்பித்தவறி எங்களது பட்ஜெட் எல்லைக்குள் வரும் வீட்டுக்கு காலை எட்டு மணிக்குப் போன் பண்ணினால், 'அது ஆறு மணிக்கே முடிஞ்சுதுங்களே..' என்கிறது தொலைபேசி குரல். 'என்னங்கடா இது அநியாயமா இருக்கு..? நைட் எல்லாம் தூங்கவே மாட்டீங்களாடா..? நாங்க என்ன ஒசியிலயா வீடு கேட்டோம்..?' ஆத்திரம் வந்ததுதான்.. அதனால் என்ன செய்துவிட முடியும்.?

ஒன்று நமது பட்ஜெட்டுக்கு இந்த ஏரியாவில் நாம் எதிர்பார்க்கிற சைஸில் வீடு கிடைக்காது. நாம் எண்ணூர் அல்லது மடிப்பாக்கம் தாண்டி போக வேண்டும். இங்கேயே சுற்றினால் ஒன்றும் தேராது. இல்லையெனில் கிடைக்கும் சின்ன சைஸ் வீட்டில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு இருக்க வேண்டும். இரண்டும் முடியாது என்றால் பேசாமல் பொத்திக்கொண்டு மேன்ஷன் அறையிலேயே வெந்து சாகலாம் என்று மூன்று சாத்தியங்கள் முன்மொழியப்பட்டு, இறுதியில் மூன்றாவதையே தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.

சென்னையில் சராசரியான ஒரு வீட்டில் வசிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 6.000 ரூபாய் வாடகைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இது சிங்கிள் பெட்ரூம் வீட்டுக்கு. இதுவே டபுள்பெட்ரூம் வீடு என்றால் குறைந்தது 8,000 ரூபாய் வருகிறது. 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கெல்லாம் வீடு இருக்கிறது என்று இதற்கு முன்பு யாரும் சொன்னால் நம்பியிருக்கமாட்டேன். ஆனால், நேரில் விசாரித்தப்பின்புதான் 20, 30 ஆயிரம் வாடகை எல்லாம் சாதாரணம் என்பது புரிகிறது. திருவான்மியூர், அடையார் போன்ற பணக்காரர்களின் பகுதிகளில் 50 ஆயிரம், 60 ஆயிரம் வாடகைக்குக் கூட வீடுகள் கிடைக்கின்றன. இவ்வளவுப் பெரிய தொகையை வாடகையாகத் தர வேண்டுமானால் கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பிளாட்ஃபார்ம் ஓரங்களில் வாழ்நாளை கடக்கும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் இதே சென்னையில்தான் வாழ்கின்றன. மாதம் 5,000 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எங்குபோவது..? பத்தாயிரம் சம்பாதிப்பவன் வீடு என்று சொல்லத்தக்க ஒரு இடத்தில் வாழ முடியுமா..? இந்த பெருநகரத்தில் நல்ல வீட்டில் வாழ்வதகு ஒருவன் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும். நுகர்வு கலாசாரம் பெருகிவழிகிற இக்காலத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் நிச்சயம் போதுமானதாக இருக்காது.

பேச்சுலராக இருந்து வீடுபார்க்கும்போது இத்தனை பாடு.. இதில் திருமணம் வேறு ஆகிவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா.. என்பதுதான் நாங்கள் மூவரும் வீடு தேடும்போது மனதில் நிழலாடியக் கேள்வி. முழுக்க, முழுக்க பெரும்பணக்காரர்களுக்கான வசிப்பிடமாக மாறிவிட்ட சென்னையில் இனி வலியவன் பிழைப்பான், எளியவன்..? ஆழிவாய்க்கால் பக்கம் போய்விட வேண்டியதுதான்.. வேறுவழி.?!