அடையாள‌ மீட்பின் அர‌சியல்- தொடரும் உரையாடல்.!

'சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!' என்ற முந்தையக் கட்டுரையை முன்வைத்து சில விமர்சனங்களை முன்வைத்தார் தோழியொருவர். அதன்பொருட்டு இத்தலைப்பின் கீழ் இன்னும் கொஞ்சம் உரையாடும் வாய்ப்பு.

முதலாவது இக்கட்டுரைக்குள் பழமைவாத மனமும், அடையாளங்களை காப்பாற்றுவோம் என்ற குரலின் நீட்சியாக சாதி, வர்க்க பேதங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தீவிரமும் தென்படுகிறது. அதாவது இருக்கும் அமைப்பு சீர்குலைந்து விடக்கூடாதே.. என்ற பதட்டம் தொனிக்கிறது என்பது அவர் சொன்னதன் மைய சாராம்சம்.

நிச்சயம் அவ்விதம் இல்லை.

இருக்கும் சமூக அமைப்பு எல்லோருக்கும் ஒரே விதமான/சம அளவு சமூக மதிப்புள்ள‌ பண்பாட்டு, கலாசார அடையாளங்களை வழங்கியிருக்கவில்லை. ஒரு ஆதிக்க சாதிக்காரனுக்கும், ஒரு தலித்துக்கும் இடையே கலையப்பட வேண்டிய பண்பாட்டுப் பாகுபாடுகள் நிறைய இருக்கின்றன. இவற்றை சமன்படுத்த யாவற்றையும் அழித்தொழித்து, எல்லோருக்கும் பொதுவான கலாசார, பண்பாட்டுக் கூறுகளை உருவாக்க வேண்டும் என்ற வாதத்தின் வெளிப்பாடே அவரது கேள்வியாக வெளிப்பட்டிருக்கிறது.

அது சரிதான். இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டியது என்பதில் எவ்வித கருத்துபேதமும் இல்லை. உலகெங்கும் தன் ஒற்றை அடையாளத்தை நிருவிவரும் உலகமயமும் அதைத்தான் செய்கிறது. ஆனால், உலகமயம் ஒரு தலித்தின் பண்பாட்டை அழிப்பதற்கும், ஒரு ஆதிக்க சாதியின் பண்பாட்டை அழிப்பதற்கும் வெவ்வேறு அளவுகோல் வைத்திருப்பதில்லை. அழித்து முடித்து உலகமயம் அணிவிக்கும் புதிய கலாசாரமும், பண்பாடும் தலித், ஆதிக்கசாதி.. இருவருக்குமானதும் அல்ல என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. எல்லாவற்றையும் தின்றுசெரித்து அது நம் மேனியெங்கும் மேற்கத்திய எச்சிலைத் துப்பி வைக்கிறது. இந்நிலையில் இருக்கும் அமைப்பு மாற வேண்டும் என்ற எண்ணத்தினால், வரும் மாற்றம் எத்தன்மையதாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டுவிட முடியுமா..? உலகமயம் அணிவிக்கும் அணிகலன் நமக்கு உகந்ததுதானா..?

அப்பாவின் அம்மாவை 'அப்பாயி' என்றும், அம்மாவின் அம்மாவை 'அம்மாயி' என்றும் அழைத்தது இப்போதில்லை. எல்லோரும் 'பாட்டி'யாகிவிட்டனர். பிள்ளைகளை 'எலேய்..' என்று ஆதி மொழியில் அழைப்பது அருகி, 'தம்பி' என்றும், 'டேய்' என்றும் அழைக்கும் தட்டையான வடிவத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இது நம் வழக்கமல்ல. தன் மண்ணின் வாழ்க்கைமுறையை வட்டார மொழியினால் பிரதிபலிப்பதே நம் பண்பாடு. உலகின் எந்த பாகத்தில் வசித்தாலும், ஒரேவிதமான தயிர்சாச நெடியில் பேசுவது உலகமயத்தின் மூலபிரதியான‌‌ பாப்பானியத்தின் பண்பு. அதை அனுமதிக்க முடியாது.

'நாட்டார் வ‌ழ‌க்காற்றிய‌ல் அர‌சிய‌ல்' என்ற‌ பேராசிரிய‌ர் ஆ.சிவ‌சுப்ர‌ம‌ணிய‌ன் எழுதிய‌ நூலொன்றில், கிராம‌த்து சிறு தெய்வ‌ங்க‌ள் எப்ப‌டி ஆதிக்க‌த்தின் அர‌சிய‌லுக்கு உள்ளாகிற‌து என்ப‌தை கீழ்க‌ண்ட‌வாறு விள‌க்குகிறார்.

"பறையர் சாதியில் பிறந்த காத்தவராயன் தன் சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமனம் செய்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் ஆற்றில் குளிக்கும்போது அவன் அழகில் மயங்கிய ஒரு பிராமணப் பெண் அவனையே திருமனம் செய்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளை அவன் இரண்டாம் திருமனம் செய்துகொண்டான். இது தெரிந்த பிராமணர்கள் மன்னரிடம் முறையிட மன்னரின் உத்தரவுப்படி அவன் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டான். பின் அவன் தெய்வமானான். பறைசாதி மனைவி ஒரு புறமும், பிராமணச் சாதி மனைவி மற்றொரு புறமுமாக அமைந்த காத்தவராயன் சிலை, பிராமணிய மேலாண்மைக்கு அறைகூவல் விட்டது. எனவே இதற்கும் ஒரு முற்பிறவியை உருவாக்கினார்கள்.

அதன்படி, 'மான் வயிற்றில் பிறந்த காத்தவராயன் தேவலோகத்தில் நந்தவனம் காக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்தான். அங்கு நீராட வந்த ஏழு தேவ கன்னியரின் சாபத்திற்கு ஆளாகிப் பறையனாகப் பிறந்தான். நந்தவனத்திற்கு நீராடவந்த ஏழு தேவ கன்னியரில் ஒருத்தியே ஆரியமாலாவாகப் பிறந்தாள். கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட பின்னர் காத்தவராயன் மீண்டும் தேவலோகத்திற்கு வந்து சேர்வான் என்று சாப விமோசனத்தையும் சிவ பெருமான் வழங்கியிருந்தார்.' என திரிபு கதைகள் உருவாக்கப்பட்டன.

அடித்தள மக்களிடையே உருவான வீரர்களை தம் பண்பாட்டு அடையாளமாக அம்மக்கள் உரிமைக் கொண்டாடி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில்தான் காத்தவராயனுக்கு முற்பிறவி வழங்கப்பட்டுள்ளது.'' என்கிறார் பேராசிரிய‌ர். இந்த இடத்தில்தான் நம் சொந்த அடையாளங்களைக் காப்பாற்றவும் கொண்டாடவுமான தேவை ஏற்படுகிறது.

ஷோபா ஷக்தி தன்னுடைய வேலைக்காரிகளின் புத்தகத்தில் இவ்வாறு சொல்கிறார்.

"விடுதலைப் புலிகள் அறிவித்துக்கொண்ட அதிவலதுசாரிகளாகவும், யாழ் சைவ வெள்ளால மரபை கைவிடாத தேர்ந்த சனாதானவாதிகளாகவும் இருக்கின்றனர். தலித்துகள் ஒடுக்கப்படுவது தொடர்பான பிரச்னை வரும்போதெல்லாம், அவற்றை பேசுவதற்குப் பதிலாக அவர்கள் தமிழ்கலாச்சார‌ மீட்புவாதத்தை முன்னெடுக்கின்றனர். பண்டைய தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் என்று பெருமை பேசுகின்றனர். தமிழ் பண்பாடு என்பது ஆதிக்க சாதியின் பண்பாடுதான். தமிழ் வரலாறு என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான‌ வரலாறுதான். தமிழ் கலாச்சாரம் என்பது தலித்துகளூக்கு எதிரான கலாச்சாரம்தான்." (கருத்து இதுதான்.. வார்த்தைகளில் மாற்றம் இருக்கலாம்)

ஷோபா ஷக்தி சொல்வதை தமிழ் சூழலுக்கும் பொருத்த முடியும். ஆனால், நான் கலாச்சார மீட்புவாதம் பேசவில்லை. ஆதிக்கசாதியின் அட்டூழியங்களை, தலித்துகள் மீதான அடக்குமுறைகளை கண்டுகொள்ளாமல் கள்ள மவுனம் சாதிக்கவில்லை. அம்மாதிரியானவற்றை கட்டாயம் அழித்தொழித்தாக‌ வேண்டும். அதற்காக பற்றித் தொடர்வதற்கான நல்ல கூறுகள் எதுவுமே நம் பண்டைய மரபில் இல்லையா..? இதுகாறும் வாழ்ந்து வரும் வாழ்வு, முற்று முழுதாக‌ புறக்கணிக்கத் தக்கதா..?

நம் சடங்கு, சம்பிரதாய, பண்பாட்டு, கலாச்சாரத்தின் ஆகப் பெரும்பான்மையான கூறுகள் சாதி காப்பவையாகவே உள்ளன. அவற்றை கரைசேர்க்க சொல்லவில்லை. மாறாக காக்கப்பட வேண்டிய பகுதிகளை முன்னெடுப்போம் என்பதே என் குரல். இது, கிராமத்தின் வகுப்பு, வர்க்க பேதங்களை பேணி பாதுகாக்கச்சொன்ன‌ காந்தியின் கிராம‌ சுயராஜ்ய கொள்கை அல்ல. 'ஆயிரம் உண்டு இங்கு சாதி. இதில் அந்நியர் புகலென்ன நீதி' என, தன் ஆதிக்கத்தை இன்னொருவன் பறித்துக்கொண்டதன் பதட்டத்துடன் பேசும் பாரதியின் குரலல்ல.'கிராமங்கள் முன்னேற வேண்டுமென்றால், கிராமங்களை அழிக்க வேண்டும்' என சொன்ன பெரியாரைதான் நானும் வழிமொழிகிறேன். ஆனால், பெரியார் சொன்ன அழித்தொழிப்பும், உலகமயம் செய்கிற அழித்தொழிப்பும் ஒன்றல்ல. இரண்டும், கிழக்கும், மேற்குமானது.

ஒரு கிராம‌த்தின் இழ‌ந்த‌ அடையாள‌ங்க‌ள் ப‌ற்றிய‌ நினைவுக‌ள், ஒரு ஆதிக்க‌ சாதிக்கார‌னுக்கும், ஒரு த‌லித்துக்கும் ஒரேவித‌மாக‌ இருப்ப‌தில்லை. நில‌த்துக்கு சொந்த‌க்கார‌ன் ஆதிக்க‌சாதிக்கார‌ன். என‌வே, நில‌த்தையும், அதுசார்ந்த‌ நினைவுக‌ளையும் இழ‌க்கும்போது அத‌ன்பொருட்டு அவ‌ன் வ‌ருத்த‌ம் கொள்கிறான். ஆனால், ஒரு த‌லித்துக்கு அப்ப‌டி அல்ல. அவனுக்கு நில‌ம‌ற்ற‌ கிராம‌த்து வாழ்வின் அவ‌மான‌ங்க‌ள் ம‌ட்டுமே எஞ்சியிருக்கின்ற‌ன‌. அத‌னால்தான் ந‌க‌ர்ம‌ய‌மாத‌லின் அதிக‌ப‌ட்ச‌ இட‌ப்பெய‌ர்வு த‌லித்துக‌ளால் நிக‌ழ்கிற‌து.

அதேசமயம் வாழ்விட‌த்தின் மீதான‌ ப‌ற்று என்ப‌து முழுமையான‌ அறிவுசார் த‌ன்மை உடைய‌த‌ல்ல‌. உண‌ர்வு சார்ந்த‌ கூறுக‌ளும் இதில் அதிக‌ம் தொழிற்ப‌டுகின்ற‌ன‌. ஒரு த‌லித்துக்கும் இவ்வித‌மான‌ உண‌ர்வுநிலை சார்ந்த‌ வாழ்விட‌ப் பெருமைக‌ள் இருக்க‌லாம் (இதை ஒரு த‌லித் ம‌ட்டுமே துல்லியமாக‌ சொல்ல‌ முடியும். இந்த‌ க‌ருத்தே மிக‌ அப‌த்த‌மான‌தாக‌ இருக்க‌லாம்). ஆனால்,த‌லித்கள் மீது நிகழ்த்தப்படும் சிறுமைக‌ள் மிக‌, மிக‌ அதிக‌ம் என்ப‌தால், அதெல்லாம் ஒப்பீட்டளவில் புறக்கணிக்கத்தக்கதாய் இருக்கிறது. உல‌க‌மய‌ எதிர்ப்பு என்ற‌ முன் நிப‌ந்த‌ணையின் கீழ் இவ‌ற்றை க‌லைந்தாக‌ வேண்டுமேயொழிய‌, அடையாள‌ங்க‌ளை விட்டுக்கொடுத்த‌ல்ல‌. அதைக் காப்பாற்ற‌ வேண்டுமென‌ பேசுவ‌து ப‌ழ‌மைவாத‌மும் அல்ல‌.! அந்த‌ அர‌சிய‌லுக்கான‌ அவ‌சிய‌ம் இங்கிருக்கிற‌து.

அந்த‌ தோழி, 'ஏன் ஆண்க‌ளுக்கு ம‌ட்டும் இப்ப‌டி சொந்த‌ ஊர்ப‌ற்றிய‌ பெருமைக‌ளும், இழ‌ப்புப்ப‌ற்றிய‌ வ‌ருத்த‌ங்க‌ளும் வ‌ருகின்ற‌ன‌..? என‌க்கெல்லாம் அப்ப‌டி எதுவும் இல்லை. பெரும்பாலான‌ பெண்க‌ளும் அப்ப‌டி இருப்ப‌தில்லை' என்றார்.

ஏனெனில் இது நில‌வுடைமை அமைப்பிலிருந்து நகர்ந்து வந்திருக்கும் ச‌மூக‌ம். இப்போது முதலாளித்துவத்துக்கும், நிலவுடைமைக்கும் இடையில் ஊசலாடி நிற்கிறது. இதன் இயங்கியல் விதிகள் அனைத்தும் ஆணின் பார்வையிலிருந்து உருவாக்கப்பட்டவையே. நிலத்தைப் பொருத்தவரைக்கும் பெண்களின் பாத்திரம் ஏதிலிகளாக இருந்த நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கிறது. ஆனாலும் குடும்ப‌த்தின் சொத்துப்ப‌ட்டிய‌லில் பெண்ணையும் இணைக்கும் நிலைமை முழுவதுமாக‌‌ மாறிவிட‌வில்லை. நில‌வுடைமை என்னும் விஷ‌ய‌த்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான உரிமை ச‌ம‌மான‌த‌ல்ல‌. நில‌ம், ஒரு ஆணுக்கு க‌ட்ட‌ற்ற‌ சுத‌ந்திரத்தை வழங்குகிறது. பெண்ணுக்கு நிபந்தணைக்கு உட்பட்ட உரிமைகளையே வழங்குகிறது.

கால‌ம் கால‌மாக‌ த‌ன் உழைப்பாலும், போராட்ட‌த்தாலும் இப்போது பெண் வ‌ந்த‌டைந்திருக்கும் சிறிய‌ அள‌விலான‌ புற‌ வாழ்க்கை சுத‌ந்திர‌த்தையும், உல‌க‌ம‌ய‌ம் சுவீக‌ரித்துக்கொண்டிருக்கிற‌து. எப்படி அரசுப் பேருந்துகளை எல்லாம் அரதப்பழசாக ஓடவிட்டு, 'சர்க்கார் பஸ்ஸே வேஸ்ட். இதுக்கு தனியார் பஸ்ஸே பரவாயில்லை' என்று மக்கள் வாயாலேயே சொல்லவைத்து தனியார் போக்குவரத்து ஊக்குவிக்கப்படுகிறதோ அதுபோல, நம் மரபுகளை முற்றாக புறந்தள்ளி தன்னைக் கொண்டாடச்சொல்லி பெண் வாயாலேயே சொல்லவைக்கிறது உலகமயம்.(இது பெண்ணுக்கு மட்டுமல்ல.. ஆணுக்கும் பொருந்தும்).

அக‌வுலகைப் பொருத்தவரை, ஆண் என்னும் அதிகார‌மிருக‌த்தின் ஆளுமையற்ற ஒரு சுதந்திர வெளி பெண்ணுக்கு இன்னும் சாத்தியப்படவே இல்லை. பெண்ணின் அக‌வுண‌ர்வை பூச்சுக‌ள‌ற்று சொல்ல இயலாத நிலையே நிலவுகிறது. இதற்கு துணைபோகிற‌ சமூகம், குடும்பம் இரண்டுமே பெண்ணின் அக/புற வாழ்வின் சித்ரவதைக் கூடமாக இருக்கிறது. ஒரு தலித்துக்கு எப்படி குடும்பமும், வாழும் சூழலும் நல்ல நினைவுகளை தருவதில்லையோ, அதுபோலவேதான் பெண்ணுக்கும். 'ஊருக்கு ஊர் ஒரு சேரி இருப்ப‌துபோல‌ ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சேரி இருக்கிற‌து. அத‌ற்குப் பெய‌ர் 'கிச்ச‌ன்'' என்று ச.தமிழ்செல்வன் சொன்ன‌து இங்கு பொருத்த‌மான‌தாக இருக்கும்.

இப்படி தனக்கு எவ்விதத்திலும் உவப்பான புற/அக வாழ்வை வழங்காத நில‌த்தை இழ‌ந்த‌த‌ற்காக பெண்‌ வ‌ருத்தமடையாதது இயல்பானதே. ஆனால், முன்னரே சொன்னதுபோல இந்த பால்பேதத்தையும் மீறி, உணர்வுநிலையிலான ஊர் நினைவுகள் பெண்ணுக்கும் இருக்கும் என்பது என் எண்ணம். இருந்தாலும், இதையும் ஒரு பெண்ணால்தான் சரியாக சொல்லமுடியுமேயன்றி, ஆணால் இயலாது.

நாம் விரும்பும் சமூக மாற்றம் எதுவாக இருந்தாலும் வாழும் இச்சமூகத்திற்குள்ளிருந்துதான் செய்தாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதனால் சமூகத்தின் இயல்புபோக்கிலிருந்து துண்டித்துக்கொண்டு தனித்து இயங்க இயலாது. வகுப்பு, வர்க்க, பால் பேதங்களை உள்ளடக்கியதாக இருக்கும் நம் கலாசார, பண்பாட்டுக் கூறுகளின் பாகுபாடுகளை களையவும் நாம் இங்கிருந்துதான் இயங்கியாக வேண்டும்.

கருத்துகள்

கையேடு இவ்வாறு கூறியுள்ளார்…
வழக்கம் போல் அருமையான கட்டுரை திரு. ஆழியூரான்.(முந்தைய இடுகைக்கும் சேர்த்து). பல கருத்துக்களை மீண்டும் நிதானமாக வாசித்தால், இன்னும் ஆழமான புரிதலையளிக்கும் என்று நினைக்கிறேன்.

கால மாற்றத்தில் நாட்டர் தெய்வங்களில் பெண் சிலைகளின்/தெய்வங்களின் உடல் கூறு மற்றும் அழகியல் கூட கவனிக்கத்தக்கது. இதனடிப்படையில் கூட சமூகக் கட்டமைப்புகளின் பரிணாமத்தை உணரலாம் என்று கருதுகிறேன்.

மன்னார்குடி-ஒரத்தநாடு-தஞ்சை வழியில் ஒரு அய்யனார் கோயில் உண்டு (பேரையூர்) கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அங்கு பெரும்பாலான நாட்டார் தெய்வங்களின் சிலைகள், வருடாவருடம் இறைச்சியும், கள்ளும் அருந்துகிறார்கள் "தோள்களின் குறுக்கே நூலுடன்".
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் ரஞ்சித். நலமா..? எப்போதும்போல‌ பின்னூட்டத்தின் வழியே பேசுபொருளுக்கான மற்றொரு விஷயத்தை விட்டுச்சென்றிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் கோயில்பற்றி நான் கேள்விபட்டதில்லை. தோளின் குறுக்கே நூலுடன் சாராயம் குடிக்கும் சாமியை அப்பக்கம் செல்ல வாய்ப்பிருந்தால் சந்திக்க வேண்டும்.
seethag இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,
அடையாளம் என்பது பொதுவாக ஆணாதிக்கத்தைச்சார்ந்தது என்பது என் எண்ணம். எனக்கு தமிழ் தாய் மொழியில்லை. ஆனால் நானும் என் உடன்பிறப்பும் தமிழ் பள்ளியில் பயின்றதாலும் நண்பர்களும் தமிழ் பேசுபவர்களாகவே இருன்ததாலும் தமிழே பேச்சு மொழியாகிவிட்டது.எங்களுக்காக என் அம்மாவும் தமிழே பேசப் பழகிவிட்டர். ஆனால் என் தந்தைக்கு இது குறித்து மிகவும் வருத்தம். அவருக்கு நாங்கள் அடையாளத்தைத் தொலைத்ததில் இன்றும் மிகவும் கோபமே.

வெளிநட்டில் உள்ள பெரும்பான்மையான ஆண்கள் இந்தியா திரும்பிப்போக விரும்புவார்கள்.ஆனால் பெண்கள் தயக்கம் காட்டுவார்கள்.இந்தியா போனவுடனே உண்டாகும் பல்வேறு நிர்பந்தன்ங்களே காரணம்.

எந்த வர்க்கத்தைச்சார்ந்த பெண்ணானாலும் , "ஹோம்லியான" என்ற வட்டத்துகுள் இருக்கும் வரை அவளுக்கு எந்த வருத்தமும் வரப்போவதில்லை.இந்த அடையாளம் ,சாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் ஆண்களால் குடும்பப்பெரும்மையை காக்க வைத்துள்ள கட்டுப்பாடுகள்.எனக்கு ஹோம்லியும் வேண்டாம் , ஒரு அடையாளமும் வேண்டாம், நான் உணர்ச்சிகள் உள்ள ஒரு பிறவி என்ஊ தெரிண்து கொண்டால் பெரிய விஷயம்.
ஒரு பெண் என்னிடம் சொன்னார்.."என் அப்பா எங்கள்வீட்டு பெண்களை வைரங்கள் போல பாதுகாக்க வேண்டும் என்பார் " என்று.. நான் சொன்னேன்," நான் ஒரு பொருளில்லையே, உணர்ச்சியும் சதையும் உள்ள பிறவியாயிற்றே" என்று..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் அவர்களுக்கு,

திருமணமாகி ஆணின் வீட்டுக்கு வருகின்ற பெண் தன் பெற்றோரின் நினைவுகளை கடைசிவரை சுமந்து நின்றாலும் தலைமுறைகள் மாறும் போது, தன் பெற்றோரின் வீட்டில் உறவுச்சுவடுகள் துண்டு விடுகின்றன. ஆனால் ஆணின் சுவடுகள் படிந்து விடுகிறது. எந்த‌வொரு பெண்ணுக்குமே தான் இருக்கும் வீடு த‌ன‌த‌ல்ல‌ என்ப‌து நன்கு தெரியும்.எனவே பெண்ணின் இய‌ல்பிலேயே மாற்ற‌ம் ப‌ழ‌கிவிடுகிற‌து. ஆண் அப்ப‌டிய‌ல்ல‌...ஆகையால் வ‌ள‌ர்ச்சி என்ப‌து இருக்கும்போது ஆணி வேர் தேடும் ப‌ட‌ல‌ம் அர‌ங்கேறிவிடுகிற‌து.



ந‌ன்றியுட‌ன்...

கோகுல‌கிருஷ்ணன் க‌ந்த‌சாமி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்