31/1/08

எரியும் பனிக்காடு ( Red Tea )தெருவுக்கு பத்து டீக்கடை, அவற்றில் எப்போதும் அலைமோதும் கூட்டம்.. இதுதான் தமிழ்நாட்டு நகரங்களின் இலக்கணம். கிராமங்களிலும் தேநீர் கடைகள்தான் உழைக்கும் மக்களின் காலைப்பொழுதுகளை தொடங்கி வைக்கின்றன. துளித்துளியாய் ரசித்துக் குடிக்கையில் சுவைதான். ஆனால், அந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை..?

கண்ணுக்குக் குளிர்ச்சியாய், பசுமையாய் தெரியும் தேயிலைத் தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை ரணம் மிகுந்தது. வளைந்து நெளிந்து செல்லும் அந்த பசுமை மலைச்சரிவுகளுக்கும் கீழ் ஏராளமான மனித உடல்கள் புதையுண்டிருக்கின்றன. வனத்தை அழித்து, ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களை உயிர் பலியிட்டு உருவாக்கப்பட்டவைதான் இப்போது நாம் காணும் தேயிலை தோட்டங்கள். நாம் உறிஞ்சும் ஒவ்வொரு துளி தேநீரிலும் ஒரு சொட்டு ரத்தமும் கலந்திருக்கிறது. வலி மிகுந்த அந்த வரலாற்றை ஒரு கதை வடிவில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது 'எரியும் பனிக்காடு' புத்தகம். பி.ஹெச்.டேனியலால் ஆங்கிலத்தில் Red Tea என்ற பெயரில் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நூல் இது. இரா. முருகவேளால் மொழிபெயர்க்கப்பட்டு கோவை விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் இருக்கும் ஆனைமலைதான் கதைக்களம்। 1940-களில் அந்த மலை ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்தது। காடுகளை அழித்து புதிய தேயிலைத் தோட்டங்களை உருவாக்கவும், உருவாக்கப்பட்ட தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கவும் அவர்களுக்கு ஆயிரக்கணக்காவர்கள் தேவை. அருகாமை மாவட்ட மக்கள், உள்ளூரிலேயே வேலை கிடைத்ததால் மலையேறி வந்து வேலை செய்ய தயாரில்லை. தோதான வேறு இடங்களை தேடியபோது அகப்பட்டதுதான், அந்நாட்களில் வறட்சியின் கொடூர பிடியில் சிக்கியிருந்த தென் மாவட்டங்கள்.மலைக்குப் போனால் மலையளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதாக ஏதேதோ கதைகள் சொல்லி கொத்து கொத்தாக மக்களை திருநெல்வேலியிலிருந்து வால்பாறைக்கு புலம் பெயர்த்து அழைத்து வந்தனர். தென்காசி, ராதாபுரம், கழுகுமலை, கோவில்பட்டி, ராஜபாளையம், நாங்குனேரி என்று நெல்லை மாவட்டத்தில் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் ஏராளமானோர் தேயிலைத் தோட்டங்களில் அகதிகளாகப் புகுந்தனர். அவர்களில் தலித்துகள் அதிகம்.

சம்பளம் என்று எதுவுமில்லை. ஊரிலிருந்து கிளம்பும்போது ஆட்களை ஏற்பாடு செய்கிற 'மேஸ்திரி' இருபது ரூபாய், முப்பது ரூபாய் (அந்த காலகட்டத்தோடு பொருத்திப்பார்த்துப் புரிந்துகொள்ளவும்) என்று முன்பனம் கொடுப்பார். அதை வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான். அதன்பிறகு தோட்டங்களுக்கு வந்து சேர்ந்தால், மேஸ்திரி சொன்னதற்கு எதிர் மாறாகத்தான் எல்லாம் நடக்கும்.

  • தேயிலைத் தோட்டத்து வேலை அவர்கள் நினைத்து வந்ததுபோல அத்தனை சுலபமானதாக இல்லை. காலையின் கடுங்குளிரில் கொழுந்து பறிக்க வேண்டும், மாலை வரை அந்த கணம் நிறைந்த சாக்கை முதுகில் மாட்டிக்கொண்டு திரிய வேண்டும்
  • செடிகளுக்கிடையே நெளியும் அட்டைகள் எந்த வலியும் தெரியாமல் கையைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும்,
  • பொழுது விடியும்/சாயும் வேலைகளில் காட்டு யானைகள் கூடிவந்து பலரை துவம்சம் செய்யும்,
  • வருடம் ஒரு முறை எப்படியும் மலேரியா வரும், கொத்து கொத்தாக சாவார்கள், இன்னொரு பாட்டம் விஷ காய்ச்சல் வரும், குடும்பம் குடும்பமாக மடிவார்கள்,
  • தோட்டத்தில் வேலைபார்க்கும் பெண்களை வெள்ளைக்காரத் துரைகள் பாலியல் சில்மிஷங்கள் செய்வார்கள்-பொருத்துக்கொள்ள வேண்டும், எதிர்த்து பேசினால்் தேயிலைத் தோட்டத்துக்கு உரமாவார்கள்,
  • கடுங்குளிர் காலங்களில் குழந்தைகள் தப்பிப்பிழைத்தால் பெரிய விசயம்,
  • பறிக்கும் தேயிலையை குறைத்து கணக்கு எழுதி படிக்காத கூலிகளை ஏமாற்றுவார்கள், வருடம் முழுவதும் உழைத்தாலும் ஊருக்குச் செல்வதற்குக் கூட காசு மிஞ்சாது,
  • ஒரு முறை உள்ளே வந்துவிட்டால் குறைந்தது மூண்று வருடங்கள் உழைத்தால்தான் ஊருக்குச் செல்லும் அளவுக்காவது சம்பாதிக்க முடியும்,
  • கொடுமைத் தாங்காமல் இடையில் ஓட நினைத்தால் அந்த கடும் மலைப்பாதையில் கீழே இறங்கும் முன்னர் காட்டு விலங்கு ஏதோ ஒன்றிடம் மாட்டி உயிர் போகும் அல்லது குளிரால் விறைத்து செத்துப்போக வேண்டும் அல்லது எஸ்டேட் ஆட்கள் பிடித்துவந்து அடித்துப் புதைத்துவிடுவார்கள்,
  • எஸ்டேட்டின் அதிகாரத்தில் பல நிலைகளில் இருக்கும் வெள்ளைக்கார துரைகளை எப்போதுப் பார்த்தாலும் 'சலாம் துரைகளே' என்று விறைப்பாக நின்று சல்யூட் அடிக்க வேண்டும், துரைகளுக்கு முன்னால் செருப்புப் போட்டுக்கொண்டு நிற்கக்கூடாது, மழை அடித்து ஊற்றினாலும் துரைக்கு முன்னால் குடை பிடிக்கக்கூடாது...

இதெல்லாம் அந்த எஸ்டேட்டுகளின் கட்டுப்பாடுகள்.

வாசித்து முடிக்கையில் பசுமைக்காடுகளாக இருக்கும் தேயிலைத் தோட்டங்கள் பயமுறுத்தும் பிசாசுகளாகத் தெரிகின்றன. எந்தெந்த நாய்களோ சம்பாதிக்கவும், அனுபவிக்கவும் தங்களின் உயிரை இழந்த ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் உயிர் ஓலங்கள் மலை முகடுகளில் எதிரொலிப்பது கேட்கிறது அந்த அளவுக்கு அந்த மக்கள் பட்ட வேதனையை அழுத்தமாக தந்திதிருக்கிறார் நூலாசிரியல் டேனியல்.(அந்நாட்களில் தேயிலைத் தோட்டங்களில் இருந்த மருத்துவமனைக்கு வேலைபார்க்க வந்த மருத்துவர்தான் டேனியல். அங்கு நிலவிய சகிக்கவே முடியாத மனிதத்தன்மையற்ற செயல் கண்டு கொதித்த அவர், தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தென்னிந்திய தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கத்தை அமைத்தார். அதன்பிறகுதான் ஓரளவுக்கான உரிமைகள் கிடைக்கத் தொடங்கின. அந்த மக்களின் சோக வாழ்வை வெளியில் கொண்டு வரும்விதமாக டேனியலால் எழுதப்பட்ட நூல்தான் இது). அதை மொழிபெயர்ப்புக்குரிய வறட்டுத்தன்மை எதுவுயின்றி, அசல் திருநெல்வேலி நடையில் சிறப்பாக மொழி பெயர்திருக்கிறார் இரா.முருகவேல்.

ந்த புத்தகத்தை வாசிப்பதற்கு முந்தைய வாரம் எதேச்சையாக, வேறு வேலையாக வால்பாறை போக வேண்டியிருந்தது। படித்த பக்கங்கள் எல்லாம் அப்படியே காட்சிகளாக கண்முன்னே விரிந்தன.வாசித்து முடித்த அடுத்த வாரம் தேனி மாவட்டத்தில் இருக்கும் இன்னொரு தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைப்பகுதியான மேகமலைக்குப் போனேன். அங்கும் இதேபோன்ற கொடுமைகள்தான் நடந்திருக்கின்றன.ப்போதும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வின் எவ்வித மலர்ச்சியும் வந்துவிடவில்லை. கொழுந்து பறிக்கச் செல்லும் பெண்கள் காலையில் எட்டு மணிக்கு வேலைக்குப் போனால், மாலை ஐந்து மணிக்குத்தான் திரும்ப முடியும். ஒரு நாள் கூலி என்பது வெறும் 80 ரூபாய்தான். இது அரசு நடத்தும் எஸ்டேட்டில் வேலைப் பார்ப்பவர்களுக்கான கூலி. இதுவே தனியார் எஸ்டேட்டுகள் எனில் ஒரு நாளைக்கு 77.65 பைசாதான் கூலி. மழை பெய்தாலும் வேலை செய்தே ஆக வேண்டும். மாதம் முழுவதும் உழைத்தாலும் 2,500 ரூபாயைக் கூட தாண்டாது.

இதே உழைப்பை திருப்பூர் சாயப்பட்டரைகளிலோ, சொந்த ஊர்களின் வயல்களிலோ கொடுத்தால், இதைவிட அதிகமாக சம்பாதிக்க முடியும். இருந்தாலும், அவர்கள் அனைவரும் இந்த தொழிலுக்குள் வந்து முடங்கிவிட்டனர். செய்வதற்கு வேறு வேலை தெரியாது என்ற நிலையில் புதிய வேலைக்கு மாற அனைவருக்குமே பயம். 1940-களில் ஐந்து ரூபாய் கூலி என்பது அடிமைத்தனம் என்றால், இப்போது 80 ரூபாய் கூலி என்பதும் கொத்தடிமைத்தனமே.! எத்தனையோ வகையான போராட்டங்களை செய்து பார்த்துவிட்டார்கள்.. அப்போதெல்லாம் தொழிற்சாலைகளை மூடி, தொழிலாளர்களை பட்டினிபோட்டு பனிய வைக்கும் தந்திரத்தைதான் எஸ்டேட்டுகள் செய்து வருகின்றன. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி, தாங்கள் கஸ்டப்பட்டாலும், தங்களின் அடுத்தத் தலைமுறையை இதிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்பதுதான். பெரும்பாலானோர் அதைத்தான் இப்போது செய்து வருகிறார்கள்.

29/1/08

நள்ளிரவின் நாட்குறிப்பிலிருந்து..ிராகரிக்கப்படும் அன்பின் வலி கொடியது। எவற்றினும் கொடியது.எவ்வித கைமாறும் பாராது, மலர்களின் நறுமனமென நுரைக்கிறது என் அன்பு. அது, நுகர்வின் ருசியை ஒருபோதும் உணர்ந்ததில்லை.

தர்க்கத்தின் பிரகாரம் தவறு எனதாகவும்/எனதாகவே இருக்கலாம். ஆனால், இறுக மூடிய கரங்களுக்குள் நாய்க்குட்டியின் அடிமடி வெப்பமென பகிர்வதற்கான நேசங்களே வாழ்கின்றன என்பதை தயவோடு புரிந்துகொள்ளுங்கள். அன்பை பகிரும் கலை அறியும் ஆயத்தங்கள் அனைத்திலும் எனக்குப் பின்னடைவே. என் கரங்கள் நீள்வதற்குள்ளாக உங்கள் வார்த்தைகள் முடிந்திருக்கின்றன அல்லது உங்கள் கவனம் சிதறும் கணம் ஒன்றில் காற்றிடம் கரம் நீட்டி ஏமாறுகிறேன். இரண்டுமல்லாது என் கரம் நீட்டலுக்கான காரணம், அதன் எதிர்தன்மையிலும் உணரப்படுகின்றன சமயங்களில்.

உணர்ச்சிக்கேற்ற பாவனைகளை வெளிப்படுத்தத் தெரியாத முட்டாளாக இருக்கிறேன். உங்கள் கண்ணீரின் உப்பைப் பகிர நீளும் என் கரங்களில் கொடுவாள் இருப்பதாக உணர்வது உங்கள் தவறு மட்டுமல்ல.. அவ்வாறாக உணர வைக்கும் பாவனைகளையும், சொற்களையும் கொண்டிருக்கும் என்பால், தவறின் விழுக்காடு அதிகமிருக்கிறது.

கூட்ட‌த்தில் ஒருவ‌னாக‌ இருக்க‌வே பிரிய‌ம். த‌னிய‌னாக‌த் திரிய‌வே விதிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஒருவேளை என்னை நீங்க‌ள் உண‌ர்ந்திருப்ப‌த‌ற்கும், இந்த‌ எழுத்துக்க‌ளுக்கும் முர‌ண் இருப்ப‌தாக‌ நினைக்கலாம். தின‌ வாழ்வின் சௌக‌ர்ய‌ங்க‌ளுக்காக‌ என் புல‌ன்க‌ளும் அனிச்சையாய் ந‌டிக்க‌ப் ப‌ழ‌கியிருக்க‌க்கூடும். நான் சொல்வ‌தும்/எதிர்பார்ப்ப‌தும் அதைய‌ல்ல‌. இந்த‌ ந‌டிப்பு க‌ட‌ந்து அக‌ உல‌கின் நேச‌ங்க‌ளைப் ப‌கிர‌ விரும்புகிறேன்.

சுவிங்கம் போல‌ வார்த்தைக‌ளை நான் மென்று கொண்டே இருப்ப‌தாக‌ குற்ற‌ப்ப‌டுத்துகிறீர்க‌ள். துப்பினால் எழும் மனம் உங்க‌ளுக்கு உவப்பளிக்காமல் போகலாம் என்ற தயக்கமே அதன் காரணமாக இருக்க‌க்கூடும். ஆனால், நிச்ச‌ய‌மாக‌ ந‌ம்புங்க‌ள்.. என் மௌன‌ங்க‌ளுக்குப் பின்னால் எந்த‌ கூர் தீட்டும் ப‌ட்ட‌ரைக‌ளும் இய‌ங்க‌வில்லை. வெளிப்ப‌டுத‌லின் த‌ய‌க்க‌த்தோடு ம‌ட்டுமே வார்த்தைக‌ள் விக்கி நிற்கின்ற‌ன.

ஏன் த‌ய‌க்க‌ம்..? நான் அறியேன். என்பால் நான் கொண்ட‌ தாழ்வின் மிச்ச‌ம் என்ப‌து என் அனுமான‌ம். பொய்யாக‌வும் இருக்க‌க்கூடும்.

அறிவிற்கு அப்பாற்ப‌ட்ட‌ உண‌ர்வின் உன்ன‌த‌ங்க‌ளை எவ்வித‌ம் வெளிப்ப‌டுத்துவது॥ நாம் இயல்பென‌் வ‌ரைய‌றுக்கும் உண‌ர்வுகள் அனைத்தும் எவ்வித‌ முன் தீர்மான‌ங்களும் இன்றிதான் வெளிப்படுகிறதா॥ அவ‌ற்றை அனிச்சையென‌ வ‌ரைய‌றுக்க‌ இய‌லுமா॥?

யோசித்துப் பார்த்தால் உங்க‌ளை உங்க‌ள் இய‌ல்போடு ஏற்றுக் கொள்ளாத‌ என‌க்கும், என்னை என் இய‌ல்போடு ஏற்க‌த் த‌ய‌ங்கும் உங்க‌ளுக்கும் வேறுபாடு எதுவுமில்லை. ஏற்ப‌டுத்திக்கொண்ட‌ ச‌ட்ட‌க‌ங்க‌ளே, ந‌ம் புற‌/அக‌ எல்லைக‌ளைத் தீர்மானிக்கின்ற‌ன‌ போலும்.

25/1/08

நான் வித்யா..

"அரசு, சமூகம், குடும்பம் உள்ளிட்ட அனைத்து வகை அதிகாரங்களும் தங்களின் கூர்முனை காட்டி அச்சுறுத்தி, பயத்தின் விளிம்பிலேயே நம்மை வைத்திருக்க விளைகின்றன. கொண்டாட்டங்கள் ஒன்றே அதற்கான எதிர் அரசியலாக இருக்க முடியும். வாழ்வை கொண்டாடு நண்பா.." போதை இரவொன்றில் தோழன் ஒருவன் சொன்னான். அந்த இரவும் விடிந்தது என்பதன்றி, உரையாடிய வார்த்தைகளால் வேறெதுவும் நிகழ்ந்துவிடவில்லை.

அதிகாரங்களுக்கான எதிர் அரசியல் கொண்டாட்டம்தானா..? வாழ்வை கொண்டாடி எவ்விதம் வலிகளைப் போக்க முடியும்..? மறக்கலாம்.. தவிர்க்கலாம்.. தீர்க்க..? திருநங்கைகளின் வாழ்வெங்கும் இரைந்துகிடக்கும் வலிகளை எந்தக் கொண்டாட்டம் கொண்டு கடப்பது..?

அது என் பால்ய வயது. உப்புக்குளத்து கரையில் தனித்திருந்த அந்த கூரை வீட்டில் டீ கடை ஒன்று இருந்தது. அந்த வீட்டின் ஒரே ஆண்பிள்ளைக்கு உமாசங்கரென்று பெயர் வைத்திருந்தார்கள். அவனது பதின்ம வயதில் 'நீ உமா சங்கர் அல்ல.. வெறும் உமாதான்' என்ற வார்த்தைகள், நக்கல் தொணியில் அவன் நோக்கி வீசப்பட்டன. ஈரமற்ற சொற்களால் மெல்ல மெல்ல அவனும், அவனது குடும்பமும் நகரம் நோக்கி புலம் பெயர்ந்தது. இடிந்து நிற்கும் குட்டிச்சுவர்களை கூடுதல் சாட்சியாக வைத்துக்கொண்டு யாவற்றையும் இப்போதும் பார்த்தபடியேதான் இருக்கிறது உப்புக்குளம். உமாசங்கர்தான் நான் சந்தித்த முதல் திருநங்கை. அந்நாட்களில் 'அலி' என்பதாக மட்டுமே அறிந்திருந்தேன்.

நகர நெரிசலில் அவ்வப்போது தென்படும் திருநங்கைகள் இப்போதும் கூட நமக்கு வேடிக்கைப் பொருள்தான். திருநங்கைகளுக்கென்று எல்லோரிடமும் ஒரு துளி உபரி பார்வை மிச்சமிருக்கிறது. அதைக் கூட, 'தன்னைப்போலில்லை' என்ற சுய ஒப்பீட்டின் வெளிப்பாடு என்பதாகக் கொள்ளலாம். அந்த பார்வையில் தெரிக்கும் பதட்டம், எள்ளல், பச்சாதாபம்.. இவைதான் கவனிக்கப்பட வேண்டிய நுணுக்கமான உணர்வுகள்.

ஒரு உடல் ஊனமுற்றவராகப் பிறந்தால் கூட குடும்பத்தோட வாழ முடிகிறது. குடும்பம் அந்த நபரை பராமரிக்கிறது. வேலை கிடைக்கிறது. ஆனால், திருநங்கைகளுக்கு..? எல்லா திசைகளிலும் எஞ்சுவது புறக்கணிப்பு மட்டுமே.! வசிப்பது முதல் தெருவில் நடப்பது வரை, உணவகங்களில் உணவருந்துவது முதல், உயிரோடு வாழ்வது வரை யாவும் எளிதில்லை. என்/ உங்கள் கற்பனை எல்லைகளுக்கு அப்பால் நீண்டிருக்கிறது திருநங்கைகளின் நிஜ உலகம். அந்த வலியை தன் சொந்த வாழ்வையே சாட்சியாக்கி புத்தகமாக பதிவு செய்திருக்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. இணையத்தில் தமிழில் வலைப்பூ எழுதுபவர்களில் அறியப்பட்டவரான இவரது வாழ்க்கை வரலாறு, கிழக்கு பதிப்பகத்திலிருந்து, 'நான்.. வித்யா..' என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. ஒரே சமயத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த புத்தகம், நடந்து முடிந்த‌ புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்று.

26 வயதென்பது வாழ்வை தொடங்க வேண்டிய வயது. சுய சரிதை எழுத வேண்டிய வயதல்ல. ஆனால், இதற்குள் லிவிங் ஸ்மைல் கடந்து வந்திருக்கும் வலி மிகுந்த பாதை, ரணங்களை மட்டுமே அவருக்கு வழங்கியிருக்கிறது.

'நான் விரும்பாத இந்த அடையாளத்தை எதைக்கொன்டு அழிப்பேன்..? பாம்பு தன் சட்டையை உரித்தெறிவதுபோல இந்த என் உடலைக் கழட்டி எறிய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்..? என் சுயம், என் அடையாளம், என் உணர்வுகள், என் கனவுகள், உன் உயிர். எப்படி மீட்கப் போகிறேன்..? ஆயிரம் அவமானங்கள், கோடி ரணங்கள், கிண்டல்களில் எத்தனை முறை செத்து மீண்டிருக்கிறேன்..! அனைத்தையும் மீறி நீண்ட என் பயணத்துக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். எனக்குப் பொருத்தமான உடலை நான் கண்டெடுத்துவிட்டேன்..!' என்பதாக பின் அட்டையில் சொல்லி, நிர்வாணம் செய்வது பற்றிய விவரிப்புடன் தொடங்குகிறது நூல்.

திருச்சியில் ஒரு துப்புரவு தொழிலாளியின் மகனாகப் பிறந்து, இளம் வயதிலேயே அம்மாவை இழந்து, கண்டிப்பான அப்பாவின் பயந்தாங்கொள்ளி மகனாய் வளர்ந்து, அக்காக்களின் அனுசரனையான அன்பில் நனைந்து.. இத்தனைக்கும் நடுவில் தனக்குள் விழித்துக்கொண்ட பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட நாட்களும், அதை சுற்றத்தின் கேலி கிண்டல்களுக்கிடையே எவ்விதம் காப்பாற்றி வந்தேன் என்பது பற்றிய விவரணைகளும் தமிழ் வாசிப்பாளனுக்குப் புதிது. இதுகாறும், ஒரு சராசரி மனிதனின் வாழ்விலிருந்தே திருநங்கைகளின் வாழ்க்கை அணுகப்பட்டது. அப்பார்வை, அனுதாப எல்லையின் முன்பின்னாக ஊசலாடியதேயன்றி நெருங்கிச் செல்லவில்லை. இப்புத்தகம் அதைக்கலைந்து, தன் காயம் பிளந்து உள்ளே பிசிறி நிற்கும் ரத்தம் காட்டுகிறது. திருநங்கைகளின் உணர்வு வழியே குடும்பமும், சமூகமும் அணுகப்படும் இந்தப் பார்வை இங்கு புதிது.!

கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களுமே திருநங்கைகளை குடும்பத்தின் அசிங்கமாக/பாவமாகவே பார்க்கின்றன. அடி, உதை எல்லாம் உண்டு. உள்ளத்தால் பெண்ணாக, உடலால் ஆணாக வாழும் இரட்டை வாழ்க்கை மட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் லிவிங் ஸ்மைலின் அப்பா, வழக்கமாக முதல் மதிப்பெண் எடுத்துவிட்டு, ஒரே ஒரு முறை இரண்டாம் மதிப்பெண் எடுத்த 'குற்றத்துக்காக' தலைக்கு மேல் தூக்கி கீழேபோட்டு அடித்து உதைக்கும் முரடர். எனில் தன் ஆசை மகன், 'மகனே அல்ல..' என்ற உண்மையை எப்படி அவரால் ஜீரணிக்க முடியும்..? அதன் ரௌத்திரத்தால் அவரது தினசரி அடி உதைகளின் எண்ணிக்கை இன்னும் கொஞ்சம் கூடியிருக்கிறது. ஆனாலும் அத்தனைக்கும் நடுவே தன் சகோதரிகளின் உடை(மை)களினால் தன் பெண்மையை காப்பாற்றி வந்திருக்கிறார் லிவிங் ஸ்மைல்.

'கண்ணாடி எல்லோருக்கும் அவரவர் ஸ்தூல உருவத்தை மட்டுமே பிரதிபலிக்க, திருநங்கைகளுக்கு மட்டும் அவர்களின் மனத்தை, உள்ளே கொந்தளிக்கும் உணர்வுகளை, உள்ளார்ந்த அவர்களுடைய பெண்மையை ஒரு சித்திரமாக மாற்றி கண்ணெதிரே காட்டும். இதை மற்றவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. உங்களுக்கு முகத்தையும், எனக்கு முகத்துக்குப் பின்னால் உள்ள மனதையும் காட்டும் கருவி அது. எனக்கு என்றால் எங்களுக்கு.. எங்கள் எல்லாருக்கும்.!' என்பதாக நீளும் வார்த்தைகள் திருநங்கைகளின் மன உலகின் நெருக்கமான விசாரணை.

இத்தனைக்கும் நடுவே முதுகலை தமிழ் மொழியியல் படிப்பை முடித்து, இலக்கியம் மற்றும் நாடகத்துறையில் தனது ஈடுபாட்டையும், நட்புகளையும் வளர்ந்துகொண்டிருக்கிறார். ஆனாலும் என்ன..?

'நான் என்னவாக ஆக வேண்டும்..? இந்தக் கேள்வி பெரியது. ஒன்று நாடக கலைஞர் ஆகலாம். அது என் ஆர்வம். என் தந்தையின் விருப்பப்படி ஒரு உத்தியோகத்தைத் தேடிக்கொள்வது இன்னொன்று. அது நன்றிக்கடன். இதையெல்லாம் தாண்டி பிறந்ததிலிருந்து போட்டு வரும் இந்த ஑ஆண்ஒ வேடத்தை கலைத்துவிட்டு இயல்பான பெண்ணுருவத்துக்கு மாறுவது மூன்றாவது. என் தேர்வு எது..? எதுவாக நான் ஆகப்போகிறேன்...?'
-வித்யா தேர்ந்தெடுத்தது 'ஆண் வேடம்' கலைவதை.

அது அவ்வளவு சுலபமானது இல்லை. இந்தியாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை அங்கீகரிக்கப்படவில்லை. வட மாநிலங்களின் ஒரு சில இடங்களில் கசாப்புக் கடைகள் போன்ற இடங்களில் இத்தகைய 'ஆபரேசன்கள்' நடக்கின்றன. அதற்குத் துணிந்து ஊர், உறவு, சுற்றம் அனைத்தையும் உதறி, தன் அடையாளத்தைக் கண்டெடுக்க புறப்படும் வித்யாவின் பயணமும், சக திருநங்கைகளின் அரவணைப்பும், அவர்களின் மூலமாக புனே சென்றதும்... அவருக்கான தனிப்பட்ட வாழ்க்கை பதிவுகள் மட்டுமல்ல.. அதிகபட்ச திருநங்கைகளின் வாழ்வுக்கான ஒரு சோறு பதம்.!

பிச்சை..? கேவலமானது. வாழ்வில் யாருக்கும், எப்போதும் வரக்கூடாத நிலை. அதை விரும்பி செய்ய வேண்டிய கட்டாயம் வந்தால்..? ஒரு நோக்கத்துக்காக பிச்சை எடுக்க வேண்டி வந்தால்..? வித்யா செய்திருக்கிறார். எம்.ஏ. மொழியியல் படித்தவர், பல்கலைக் கழக கோல்டு மெடல் வாங்கியவர். புனே கடைகளில், ரயில்களில் 'கடை கேட்டு' அலைந்திருக்கிறார்.

....?

நிர்வாணம் செய்ய..!
-தன் உடலில் தனக்குப் பொருந்தாமல் வாய்த்துவிட்ட, இன்னும் உருவத்தால் தன்னை முழுமையான பெண்ணாக உணரவிடாமல் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிற உறுப்பை அறுத்து எரிய. அதற்குப் பணம் வேண்டும். வேலை பார்க்கத் தயார்தான். யார் கொடுப்பார்கள் திருநங்கைகளுக்கு வேலை. வேறு வழி..? பிச்சை. வேறு யாராலும் விவரிக்க முடியாத, ஒரு திருநங்கையால் மட்டுமே சொல்ல முடிகிற பிச்சை எடுத்த நாட்கள் பற்றிய அனுபவம் நம் கற்பனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.
சமீப நாட்கள் வரையிலான நினைவுகளுடன் முடியும் புத்தகத்தை முழுமையாக வாசித்து முடிக்கும்போது, கனத்த குற்றவுணர்வு மனமெங்கும் வியாப்பிக்கிறது. வாழ்வில் கடந்துபோன திருநங்கைகள் நினைவில் வந்து செல்கின்றனர். ஆனால், தான்/தாங்கள் எப்படிப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதிலும் தெளிவான முன்முடிவுகள் அவரிடம் உள்ளன.

'நான் திருநங்கையாக இருப்பது மிகவும் இயற்கையானது. ஒரு ஆண் எப்படி ஆணாக இருக்கிறானோ, ஒரு பெண் எப்படி பெண்ணாக இருக்கிறாளோ, ஒரு நாய் எப்படி நாயாகவும், பூனை எப்படி பூனையாகவும் இருக்கிறதோ அந்தமாதிரி. இதைப் புரிந்துகொள்ளாதபோதுதான் பிரச்னைகள் வருகின்றன.
.................
திருநங்கைகளில் பலர் விநோதமாக நடந்துகொள்வதும், உரக்கப் பேசி நடுவீதியில் தர்ம சங்கடம் உண்டாக்குவதும், பாலியல் தொழிலுக்கு வலிய அழைப்பதும், ஆபாசமாக பேசி அருவருப்பூட்டுவதும், முற்றிலும் அவர்களின் தற்காப்புக்காக மட்டுமே என்று நான் சொன்னால், தயவு செய்து நம்புங்கள். அதுதான் உண்மை. பாதுகாப்பற்ற சமூகத்தில், எங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை நாங்கள் இவ்வாறெல்லாம் செய்துதான் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உடல் வலிமை மிக்க முரட்டு ஆண்கள் வம்புக்கு வந்தால், எங்களால் எதிர்த்து நிற்க முடியாது. பணிந்துபோகவும் விருப்பமில்லாவிட்டால், அருவருப்புணர்வை உருவாக்கி அவர்களை விலகிச் செல்ல வைப்பதே எங்களுக்குத் தெரிந்த வழி..' .... திருநங்கைகள் பற்றிய பொதுபுத்திக்கான நுண்ணிய பதிலாக வித்யாவிடமிருந்து வருகின்றன வார்த்தைகள்.

வாசிக்கும்போது, ஒருவனை நடு சாலையில் நிற்க வைத்து எல்லோரும் காறி உமிழ்கையில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவோ, உமிழும் கூட்டத்தின் அங்கத்தினராகவோ மனம் தன்னை அடையாளப்படுத்தி வெட்கப்படுகிறது. வாசகனின் சுயமெனும் பாம்பு, தனக்குத்தானே சட்டை உரித்துக் கொள்கிறது. ஆனால், திருநங்கைகளுக்கான தேவை இந்த குற்றவுணர்ச்சியும், கழிவிரக்கமும் அல்ல.! அவர்கள் எதிர்பார்ப்பது உங்களையும், என்னையும் போல சராசரி வாழ்வை. அதை நோக்கியே தன் பயணம் நீளும் என்கிறார் லிவிங் ஸ்மைல். 'என் பிரச்னை தீர்ந்தால் போதும் என்பதில்லை. என்னை உதாரணமாக்கி, என் சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுவேன்' என்பதே அவரது குரல்..!

ந்திய மொழிகளில் ஒரு திருநங்கை தன் சொந்த அனுபவங்களை முன்வைத்து, தான் சார்ந்த சமூகத்தின் பிரச்னைகளை இத்தனை அழுத்தமாக பேசுவது இதுவே முதல்முறை। அதை பதிவு செய்திருக்கும் கிழக்குப் பதிப்பகத்தை அழுந்த கை கொடுத்துப் பாராட்டலாம்। ஆனால், அதை முழுமையாக உணரவிடாமல் செய்கிறது, ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் 'கிழக்கின்' மொழி. தனது தனித்துவமான/ ரௌத்திரமான மொழியாளுமையால் இணையத்தில் எழுதுபவர்களை ஈர்த்திருப்பவர் லிவிங் ஸ்மைல் வித்யா.

'எதை இழக்கிறோம் என்ற மயக்கத்தில்,
அனஸ்தீஸியா இல்லாமலேயே
அறுத்துக் கதறும் நொடியிலும்,
செருப்புக்கடியில் தன்மானத்தை
மலமென்றே மிதித்தபடி,
கை நீட்டி கேவலப்பட்டு நிற்கும் நாட்களிலும்,
வன்மத்துடன் நுழையும் குறியால் மூச்சுமுட்ட
நுரையீரல் திணறி நிற்கும் நிலையிலும்,
எதற்கென்றே தெரியாமல் எங்களை நோக்கி
துப்பப்படும் வீச்சமடிக்கும் எச்சில்களைக் கேட்கிறேன்..
மரணம் மட்டுமா மரணம்..???'

-என்று கவிதையிலும்,

'குடும்பம், சமூகம், அங்கீகாரம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு என அனைத்து கதவுகளும் சாத்தப்பட்டு, புறக்கணிப்பின் எல்லையில் நின்று வாழ்க்கையை ஓட்டும் திருநங்கைகளின் நிர்வாணத்தின் மீது தங்களின் ஆதிக்க/ நாகரீக மதிப்பீட்டின் மலஜலத்தை மறைமுகமாக கழித்துவிட்டு, அவர்களின் அம்மணத்தின் மீதேறி ஆனந்த நர்த்தனமாடி, கலையை வளர்க்கிறார்கள் கலையுலக சேவகர்கள். அன்றைய 'கோடானுகோடி கோழி கூவுற வேலை' முதல், இன்றைய 'தலைப்புச்செய்தி வாசிப்பது கிரிஜாக்க, கோமளா வரை' திருநங்கைகளின் மீதான திரை கற்பழிப்புகளுக்கு முன்வைக்கப்படும் ஒரே சப்பைக்கட்டு இந்த 'யதார்த்தவாதம்தான்..' என்று கட்டுரையிலும் சீறும் அவரது மொழிநடை, வலைப்பூ வாசகர்கள் அறிந்ததுதான். அதனை முழு புத்தகத்திலும் காண முடிந்திருந்தால், திருநங்கைகளின் வலி மிகு வாழ்க்கை இன்னும் வீச்சோடு வாசக மனதுக்குக் கடத்தப்பட்டிருக்கும்.

லிவிங் ஸ்மைல் எழுதியதே அப்படித்தானா.. கிழக்கின் 'எடிட்டிங்'கில் சிதையுண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை இரண்டாவதுதான் மொழிநடைக்கான காரணம் எனில், திருத்துவதற்கு அல்ல.. கற்றுக்கொள்வதற்கான வார்த்தைகளும், வாழ்க்கையுமே அவரிடம் உள்ளன என்பது மட்டும் உண்மை.!