தெய்வங்களைக் காப்பாற்றுவோம்
நம் சமூக மரபில் அனைத்து இனக்குழுவுக்கும் தனித்த அடையாளங்கள் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஒழித்து யாவருக்கும் ஒரே கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நிறுவ முயல்கிறது உலகமயமாக்கமும், அதன் மூல பிரதியான பார்ப்பனமயமாக்கமும்.
நம் குடும்பங்கள் அனைத்திற்கும் குலசாமிகள் உண்டு. அவை இப்போது தோட்டத்து மரங்களிடையே பராமரிப்பில்லாத விளக்கு மாடமாகவோ, யாருமற்ற வனாந்திரத்தில் சிதிலமடைந்து கிடக்கும் சிலையாகவோ மாறிப்போயிருக்கின்றன அல்லது முனீஸ்வரன்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இது யதேச்சையானது அல்ல. நூற்றாண்டுகளின் நுணுக்க அரசியல் இதற்கு பின்னால் மறைந்திருக்கிறது.
'உங்களை ஒவ்வொருவராக என் கலாச்சாரத்திற்கு மாற்றுவதைக் காட்டிலும் உன் சாமியையே என் கலாச்சாரத்திற்கு மாற்றிவிட்டால் அப்புறம் நீங்களென்ன பெரிய கொம்பா..? வேறு வழியின்றி இங்கு வந்துதானே ஆக வேண்டும்..?' என்ற பார்ப்பனவாத பாசிசக்குர இதற்குப்பின்னால் ஒழிந்திருக்கிறது. ஒரு சில குலசாமிகளின் கோயில்களில் சிவன், பிள்ளையார், விஷ்ணு போன்ற ஆதிக்க அடையாள தெய்வங்கள் வீற்றிருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
இறை நம்பிக்கையுள்ள தமிழ் குடும்பங்கள் பலபேர் வீடுகளில் திருப்பதி வெங்கடாஜலபதி முதல், சந்துபிள்ளையார் சிலை வரைக்கும் சகல தெய்வங்களின் படங்களும் மாட்டப்பட்டிருக்கின்றன. 'அனைத்து சாமிகளும் ஒன்றுதான்..நம்பு..' என்று போதிக்கப்பட்டதன் விளைவு இது.. 'அப்படியானால் அனைத்து தெய்வங்களும் ஒன்றில்லையா..?' என்று யாரேனும் கேட்கலாம். நிச்சயமாக அனைத்தும் ஒன்றில்லை. உங்கள் தெய்வம் ஆதிக்கத்தின் அடையாளம். எங்கள் தெய்வம் அன்பின் அடையாளம். அன்பும், ஆதிக்கமும் எக்காலத்திலும் ஒன்றாக முடியாது.
இந்த வரலாற்று செய்திகளை ஆதாரத்தோடு தெளிவாக விளக்குகிறது பேரா.ஆ.சிவசுப்ரமணியன் எழுதிய 'நாட்டார் வழக்காற்றியல் அரசியல்' புத்தகம். கங்கு வரிசை நூல்களில் ஐந்தாவது நூலாக வெளிவந்த இந்தப்புத்தகம் விவரிக்கும் விஷயங்கள் ஆழமானவை.
''நாட்டுப்புறவியல் என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல்லாகவே நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல் பயன்படுட்தப்படுகிறது..'' என்று தொடங்கும் நூல், அரசியலில் நாட்டார் வழக்காறுகளின் பங்கு, நாட்டார் வழக்காறுகள் மீதான அரசியல் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. அதில் ஒன்று மட்டும் உதாரணத்திற்கு.
''இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952-ம் ஆண்டு, வேட்பாளர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளுக்குரிய சின்னத்தைத் தாங்கிய வாக்குப்பெட்டிகள்தான் நடைமுறையிலிருந்தன. வாக்களர்கள் தாம் விரும்பும் வாக்களரின் சின்னம் தாங்கிய பெட்டியில் வாக்குச்சீட்டைப் போடுவர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமாக இரட்டைக் காளை இருந்தது. தேர்தல் நாளன்று உப்புமாவும், காப்பியும் வழங்கி வாக்குச் சேகரிக்கும் நடைமுறையைச் சில வேட்பாளர்கள் மேற்கொண்டிருந்தார்கள். இப்பின்புலத்தில் கவிஞர் வெ.நா. திருமூர்த்தி என்பவர் ஒரு பாடலை இயற்றினார்.
''ஒத்த ரூபாய்த் தாரேன்
உப்புமா காப்பித் தாரேன்
ஓட்டுப் போடுற பெண்ணே
மாட்டைப் பார்த்துப் போடு
உன் ஒத்த ரூபாயும் வேணாம்
உப்புமா காப்பியும் வேணாம்
நீங்க தீய வச்ச கூட்டம்- ஒங்களத்
தீர்த்துக் கட்டப் போறேன்.''
இப்படி நாட்டார் வழக்காறுகளின் உள்ளூர் வரலாறு தொடங்கி உலக வரலாறு வரைக்கும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர். நூலின் இரண்டாம் பகுதிதான் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.
''நாட்டார் பாடல்களுக்கென்று தனித்துவமான இசையமைப்பு உள்ளது. இது சாஸ்திரிய சங்கீதம் அல்லது கர்நாடக சங்கீதம் போன்ற இறுக்கமான தன்மை உடையது அல்ல ; நெகிழ்ச்சியானது. எழுதப் படிக்க தெரியாதவரும் சில இசை வாய்பாடுகளுக்கு ஏற்ப பாடல்களை, துரிதகதி, மத்தியகதி, மந்தகதி என்று பாடுவர். ஆனால் இவற்றை மதிக்காத ஆதிக்க வகுப்பினர், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு அமைந்துள்ளது என்றும், முகாரி ராகத்தில் ஒப்பாரிப் பாடல்கள் அமைந்துள்ளது என்றும் அரசியல் செய்கின்றனர். அரசும் இந்த வேற்றுமையைக் கடைபிடிக்கின்றது. அகில இந்திய வானொலி நிலையம் சாஸ்திரி சங்கீதம் இசைக்குழுவினரை நிகழ்ச்சிக்கு அழைத்தால், அக்குழுவின் தலைமைப் பாடகருக்கு தனியாகவும், இசைக்கருவிகள் வாசிப்பவர்களுக்கு தனியாகவும் மதிப்பூதியம் வழங்குகிறது. அதே நேரம் வில்லிசைப் பாடகர் குழு ஒன்று நிகழ்ச்சி நடத்த அழைக்கப்பட்டால், மொத்தமாக மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.'' என நடைமுறையின் ஆதிக்கத்தை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார்.
அப்படியே நாட்டார் தெய்வங்கள் விசயத்திற்கு வரும் அவர், ''தமிழ் காப்பியங்களில் இடம்பெறும் வீரர்கள் மன்னர், வணிகர், தெய்வ அவதாரம் என்று மூன்று பிரிவுகளிலேயே அடங்குகின்றனர். ஆனால் இதற்கு நேர் மாறாக நாட்டார் கதைப்பாடல்களில் இடம்பெறும் வீரர்கள், உழைக்கும் மக்கள் பிரிவைச் சார்ந்தவர்களாகவே காட்சியளிக்கின்றனர். இவ்வீரர்களைதான் அடித்தள மக்கள், தம் வீரர்களாகவும், தியாகிகளாகவும் போற்றி தெய்வமாக்கி வணங்குகின்றனர். பெரும்பாலான தமிழக நாட்டார் தெய்வங்கள் கொலையுண்ட பின்னர், தெய்வமாக்கப் பட்டவர்கள்தான். ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியான இவ்வீரர்களுக்கு சிலை எடுத்தோ, பீடம் கட்டியோ வழிபடுவதென்பது ஒரு வகையான எதிர்க்குரல்தான். இந்த வகையில் மதுரை வீரன், காத்தவராயன் , ஒண்டிவீரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
ஆனால் நிலவுடைமை சமூகத்தில் ஆதிக்கச் சாதியினர், இத்தகைய தெய்வங்களின் தோற்றம் குறித்த கதைகளில் மாறுதல்களை நிகழ்த்தி, அவர்களுக்கு முற்பிறப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். சான்றாக மதுரை வீரன், காத்தவராயன் என்ற வீரர்களின் பிறப்பில் ஏற்படுத்திய மாற்றங்களைக் குறிப்பிடலாம். அருந்ததியர் சாதியில் பிறந்த வீரப்பன் என்ற இளைஞன் கொலையுண்டு இறந்துபோனான். பின்னர் அவனை அருந்ததியர் இன மக்கள் மதுரை வீரன் என்ற பெயரில் தெய்வமாக வழிபட தொடங்கினர். இதைப் பொறுத்துக்கொள்ளாத, மேட்டிமையோர் மதுரை வீரன் வரலாற்றில் சில மாறுதல்களை செய்தனர்.
=> காசியை ஆண்ட மன்னனுக்குப் பிறந்த குழந்தையை சோதிடரின் அறிவுரைப்படி காட்டில் கொண்டுவிட, அக்குழந்தையை அருந்ததி சாதிப் பெண்ணொருத்தி எடுத்து வளர்க்கிறாள். அக்குழந்தையே பிற்காலத்தில் மதுரை வீரன் என வழங்கப்படுகிறது.
=> சிவனின் வியர்வையில் தோன்றிய வீரபத்திரரே மதுரை வீரனாகப் பிறந்தார்.
=> முருகனின் தளபதியான வீரபாகுத் தேவர் பார்வதியின் சாபத்தால் மதுரை வீரனாகப் பிறந்தார்
இப்படி பலவகையான கட்டுக்கதைகள் மதுரை வீரன் பிறப்பைச் சுற்றிப்பின்னப்பட்டன. மதுரை வீரனை அவனது சாதியிலிருந்து துண்டித்து புராணப் பாத்திரமாக மாற்றுவிடுவதுதான் அவர்களின் நோக்கம்.
பறையர் சாதியில் பிறந்த காத்தவராயன் தன் சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமனம் செய்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் ஆற்றில் குளிக்கும்போது அவன் அழகில் மயங்கிய ஒரு பிராமணப் பெண் அவனையே திருமனம் செய்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளை அவன் இரண்டாம் திருமனம் செய்துகொண்டான். இது தெரிந்த பிராமணர்கள் மன்னரிடம் முறையிட மன்னரின் உத்தரவுப்படி அவன் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டான். பின் அவன் தெய்வமானான். பறைசாதி மனைவி ஒரு புறமும், பிராமணச் சாதி மனைவி மற்றொரு புறமுமாக அமைந்த காத்தவராயன் சிலை, பிராமணிய மேலாண்மைக்கு அறைகூவல் விட்டது. எனவே இதற்கும் ஒரு முற்பிறவியை உருவாக்கினார்கள்.
அதன்படி, 'மான் வயிற்றில் பிறந்த காத்தவராயன் தேவலோகத்தில் நந்தவனம் காக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்தான். அங்கு நீராட வந்த ஏழு தேவ கன்னியரின் சாபத்திற்கு ஆளாகிப் பறையனாகப் பிறந்தான். நந்தவனத்திற்கு நீராடவந்த ஏழு தேவ கன்னியரில் ஒருத்தியே ஆரியமாலாவாகப் பிறந்தாள். கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட பின்னர் காத்தவராயன் மீண்டும் தேவலோகத்திற்கு வந்து சேர்வான் என்று சாப விமோசனத்தையும் சிவ பெருமான் வழங்கியிருந்தார்.' என திரிபு கதைகள் உருவாக்கப்பட்டன.
அடித்தள மக்களிடையே உருவான வீரர்களை தம் பண்பாட்டு அடையாளமாக அம்மக்கள் உரிமைக் கொண்டாடி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில்தான் மதுரை வீரனுக்கும், காத்தவராயனுக்கும் முற்பிறவி வழங்கப்பட்டுள்ளது.'' என வெகு அழகாக ஆதிக்கத்தின் சூழ்ச்சியை விவரிக்கிறார் பேராசிரியர்.
நாம் இழந்த தெய்வங்களை மீட்கவும், இருக்கும் தெய்வங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் (ஆம்...எங்கள் தெய்வங்கள் யாரும் அவதாரங்களில்லை. அவர்கள் எங்கள் முன்னோர்கள். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையதுதான்) ஆயுதங்களைக் கூர் தீட்டிக்கொள்ள இம்மாதிரியான புத்தகங்கள் உதவும்.
நூலின் பெயர்: நாட்டார் வழக்காற்றியல் அரசியல்
நூல் ஆசிரியர்: பேரா.ஆ. சிவசுப்ரமணியன்
பதிப்பகம்: கங்கு
விலை: ரூ. 25
கிடைக்குமிடம்:
பரிசல்,
எண் 1, இந்தியன் வங்கி காலனி,
வள்ளலார் தெரு,
பத்மநாபா நகர்,
சூளைமேடு,
சென்னை- 94
செல்: 9382853646




