ஷில்பா ஷெட்டி--தேசத்தின் அவமானம்.

"வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம்தான்.சந்தேகமிருந்தால் தோற்றவனைக் கேட்டுப்பாருங்கள்.." என்றார் வில்சன் பிரபு.
ஜேட் கூடியின் முகவரி தெரிந்தால் ஷில்பா ஷெட்டியின் அதிர்ஷ்டம்பற்றி கேட்டுவிடலாம்.கேட்டால் அந்த அம்மணி என்ன சொல்லும்..? ''அவ என்னைவிட பெரிய நாடகக்காரி.." என்றா..? சொன்னால் தப்பில்லை.அதுதானே உண்மை.
என்னவோ இந்த நாட்டின் ஒட்டுமொத்த மானம் மரியாதையும் ஷில்பா ஷெட்டியின் உள்ளாடைக்குள்தான் இத்தனை நாட்களாய் ஒழித்து வைக்கப்பட்டிருதது மாதிரி மீடியாக்கள் இந்த செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் எரிச்சலாய் இருக்கிறது. 'ஷில்பா அபார வெற்றி...இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார்..' என்று தலைப்பு வெளியிடுகிறது ஒரு பத்திரிகை.இன்னொன்று, 'வென்றார் ஷில்பா..தோற்றது இனவெறி..' என்று ஷில்பாவை கொண்டாடுகிறது.அவர் இந்தியாவுக்கு வந்து சேரும்போது, 'நிறவெறியை வென்றெடுத்த நாயகியே...வருக..வருக..' என்று கட் அவுட் வைத்தாலும் வியப்பு தேவையில்லை.
ஷில்பாவை அப்படியே நிறுத்திவிட்டு இதைக் கொஞ்சம் பாருங்கள்.விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே இருக்கிறது விஜய கரிசல்குளம்.இந்த ஊரைச் சேர்ந்த பொறியாளர் கணேசன் ராணுவத்தில் வேலைப் பார்க்கிறார்.அஸ்ஸாமில் பணியிலிருந்த இவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.இதுவரைக்கும் எந்த விதமான தகவலும் இல்லாமல் பரிதவித்துக் கிடக்கிறது அந்த குடும்பம்.கணேசனின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் தந்தையை உயிருடன் பார்க்க முடியுமா..? என்று பரிதவித்துக் கிடக்கின்றன.ஆனால் இதுவரைக்கும் அரசுத்தரப்பில் கணேசனை மீட்பதற்கு எந்த விதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை.இதற்காக மத்திய அமைச்சர்களோ,அரசியல் கட்சி தலைவர்களோ குரல் கொடுக்கவில்லை.
இந்த தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கணேசன்,தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார்.ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது இந்த தேசத்திற்கு அவமானமில்லையா...?இதைப்பற்றி ஏன் யாரும் வாய்திறக்கவில்லை..?
மண்ணை பிசைந்து கல்லாக்கி,அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் ஏழ்மைத் தகப்பனின் மகள், புதுக்கோட்டை சாந்தி ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றபோது, 'அவர் பெண்ணே இல்லை..' என்று அவமானப்படுத்தப்பட்டார்.தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் எல்லாம் மிகுந்த உற்சாகத்துடன், 'சாந்தி பெண்ணா...?ஆணா..?' என்று கவர்ஸ்டோரி வெளியிட்டு, போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டி மகிழ்ந்தன.அப்படி சாந்தியை அவமானப்படுத்திய அதே பத்திரிக்கைகள், இன்று ஷில்பாவின் மூலமாக தேசத்தின் மானம் காப்பாற்றப்பட்டிருப்பதாக கொண்டாடுகின்றன.(நல்லவேளை ஷில்பா ஜெயித்தார்.இல்லையென்றால் மானமில்லாத தேசத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கும்..).சாந்திக்கு எழுந்த ஆதரவு குரல்களை விட இப்போது ஷில்பாவுக்கு எழும் ஆதரவு பன்மடங்காக இருக்கிறது.இதன் அரசியல் என்ன..?
ஒரு நடிகையை மற்றொரு நடிகை, 'கறுப்புத்தோலுக்காரி' என்று திட்டியதற்காக, மானம் மரியாதையெல்லாம் போய்விட்டதாகவும், 'கறுப்புத்தோலுக்காரி' வெற்றிபெற்றவுடன் இப்போது இழந்த மானமும்,மரியாதையும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் சொல்பவர்களே..ஷில்பாவுக்கு ஏற்பட்ட நிறவெறி அவமானம் கண்டு பொங்குபவர்களே....உள்ளூரில் நடக்கும் ஜாதிவெறி அக்கிரமம் குறித்து இதுவரைக்கும் நீங்கள் வாய் திறந்ததுண்டா..?சாதியென்னும் பெயரால் செயலாலும்,வார்த்தையாலும் தினந்தோறும் பலரை அவமானப்படுத்துகிறீர்களே...அதற்காக வருந்தியதுண்டா...?குறைந்தப்பட்சம் அவற்றைப்பற்றி யோசிக்கவாவது செய்திருக்கிறீர்களா..?உங்கள் கால்களுக்கும் கீழ் லட்சக்கணக்கானவர்களை தினமும் அவமானப்படுத்தி, இந்த தேசத்தின் மானத்தை தினந்தோறும் கேவலப்படுத்தும் உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?
உண்மையை உணரவிடாமல்,அதன் அருகிலேயே நெருங்க விடாமல் நம்மை தூரத்திலேயே வைத்திருக்கும் வேலையை மீடியா வெகுநாட்களாக சிறப்பாக செய்து வருகிறது.அந்த மயக்கத்திலிருந்து மீளாதவரை, ஷில்பா ஷெட்டி தேசத்தின் அவமானம் என்பதை நாம் உணரப்போவதில்லை.
தொடர்புடைய இடுகை: tamilnadutalk
