நினைவின் நிழல்..!




மீனாட்சி மெஸ்ஸுக்கு எப்போது போனாலும் வலது கை தூக்கி சல்யூட் அடிக்கும், ஒல்லியான தேகம் கொண்ட அவரை இரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் சிவப்புகலர் வலை பனியந்தான் அணிவார். பனியனின் மேல்புறம் இரண்டு ஓட்டைகள் நிரந்தரமாக இருக்கும். ''இது ஒரு பனியன்தான் இருக்கா..?'' என்று ஒருமுறை கேட்டதற்கு கை விரல்களை மடக்கிக்காட்டி 'நான்கு' என்றார். நான்கிலுமே ஓட்டை இருப்பது ஆச்சர்யமானதுதான். ஒருவேளை பனியன் வாங்கிய உடனேயே இவரே ஓட்டை போட்டுவிடுவாரோ என்று கூட தோன்றும்.

சாப்பிட்ட இலைகளை ஒரு டிரேயில் எடுப்பதும், மேசையை துடைப்பதும் அவர் வேலை. வாழை இலையின் அடியில் இருக்கும் நார்போன்ற தண்டுப்பகுதியை கைக்கு அடக்கமாக நான்கைந்து வெட்டி வைத்திருப்பார். மேசையில் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து தண்டுப்பகுதியைக்கொண்டு நேர்த்தியாக துடைப்பார். அவர் கவனம் முழுவதும் அமர்ந்திருப்பவர்களின் உடலில் ஒரு துளி கூட சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருக்கும். இடையிடையே சாப்பிட அமர்ந்திருக்கும் நம்மிடம், ''சிவசக்தி தியேட்டர்ல.. மாயாக்கா.. " என்று சொல்லிவிட்டு, 'சூப்பர்' என்பதாக சைகை காட்டுவார். அவரது முக தசைகளில் குதூகலம் பொங்கிவழியும். அவர் கேட்கவில்லை என்றாலும் சாப்பிட வரும் யாரோ ஒருவர் சிவசக்தி தியேட்டரை இழுத்துவிடுவார்கள்.

பத்து நாளைக்கு ஒரு முறை, சாப்பிட்டு முடித்து கை கழுவ குழாய்க்குச் செல்லும்போது கல்லாவில் இருக்கும் ஓனர் பார்த்துவிடாதவாறு நின்றுகொண்டு, ''ஒரு ரூபாய்.." என்று விரலைக் காட்டுவார். ஒரு நாள் கூட ஒரு ரூபாயைத் தாண்டியதில்லை. நாமாக கூடுதலாகக் கொடுத்தால் வாயெல்லாம் சிரிப்பாக பெற்றுக்கொள்வார். அடுத்த நாள் விறைப்பாக சல்யூட் வைப்பார்.

இத்தனை நுணுக்கமாக நினைவு கூற முடிகிற அவரை மெஸ் அல்லாத வேறொரு இடத்தில் நேற்று பார்த்தபோது சட்டென்று நினைவுக்கு வரவில்லை. எத்தனையோ மெனக்கெட்டும் 'எங்கேயோ அடிக்கடி பார்க்கிற முகமாயிற்றே..' என்பதோடு நினைவுகள் தேங்கி நின்றுவிட்டன. ஒருவேளை அவர் என்னை கவனித்து ஒரு சல்யூட் வைத்திருந்தால் நினைவுக்கு வந்திருக்குமோ என்னவோ.. அவரும் கவனிக்கவில்லை. பின் நேற்று இரவு மெஸ்ஸில் பார்த்தபோதுதான் காலையில் பார்த்தது இவரைத்தான் என்று புரிந்தது.

இதுபோல் இவருக்கு மட்டுமில்லை.. இரவு தினமும் நான் போய் நின்றவுடனேயே வாழைப்பழமம் எடுத்துத்தரும் அருணகிரி லாட்ஜ் பெட்டிக்கடைக்காரர், சந்திப்பு பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலையில் இரவு நேர இட்லிகடையில் நான்கு வகை சட்னியுடன் பூப்போன்ற இட்லி விற்கும் பெரியம்மா, எப்போதும் சட்டை காலரின் பின்னால் கர்ச்சிப் மடித்து சொருகியிருக்கும் உக்கிரன்கோட்டை பேருந்து ஓட்டுனர்... என்று பலரை, அவர்களின் பணியிடச் சூழல் தவிர்த்த வேறு சூழ்நிலையில்; வேறு இடங்களில் பார்க்கும்போது சட்டென நினைவுக்கு வருவதில்லை.

சட்னி வாசனையோடும், காலர் கர்ச்சிப்புடனும்தான் அவர்களை மூளை தனக்குள் பதிந்து வைத்திருக்கிறது போலும். இதேபோல மற்றவர்களின் நினைவடுக்குகளில் நான் எவ்வாறான பின்னிணைப்புகளோடு பதிந்திருப்பேன் என்று யோசித்தால் எதுவும் பிடிபடவில்லை.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு!

எனக்கும் சென்ற வாரம் இது போல் நிகழ்ந்தது.

ஒரு திருமணத்தில் ஒருவர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றார். திரும்ப, திரும்ப யோசித்து பார்த்ததில் யாரென்றே பிடிபடவில்லை.

வாரத்தில் இரண்டொரு தடவை சென்று டீ குடிக்கும் கடையின் உரிமையாளர் அவர். அடிக்கடி பார்த்து, பேசியிருக்கிறேன் இருந்தும் வெளியிடத்தில் பார்த்ததில் சட்டென்று அடையாளம் தெரியாமற் போயிற்று.
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
இதேபோல மற்றவர்களின் நினைவடுக்குகளில் நான் எவ்வாறான பின்னிணைப்புகளோடு பதிந்திருப்பேன் என்று யோசித்தால் எதுவும் பிடிபடவில்லை.// அட இதுதாங்க ஆழி டச்...
செல்வநாயகி இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு இடைவெளிக்குப் பிறகு உங்களின் பக்கத்திற்கு வந்தேன். தவறவிட்ட இடுகைகளை இனித்தான் படிக்கவேண்டும். இந்த இடுகை பிடித்தது. இதிலிருந்து இன்னும் சிலவற்றிற்கும் நினைவுகளை விரியவைக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்