சாதி சூழ் உலகு..!

திருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் சிவந்திபட்டி என்னும் கிராமம் உண்டு. மொத்தம் ஆறு பேருந்துகள், ஒரு நாளைக்கு 25 தடவை திருநெல்வேலியிலிருந்து சிவந்திபட்டிக்கு வந்துபோயின. அந்த அளவுக்கு ஆள் நடமாட்டம் உள்ள கிராமம். அப்படிப்பட்ட ஊருக்குள் கடந்த பத்து வருடங்களாக எந்த பேருந்தும் செல்லவில்லை. அரசு உத்தரவின் பேரில் அனைத்துப் பேருந்துகளும் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டன. பத்து வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில மாதங்களாய் மறுபடியும் பேருந்துகள் ஊருக்குள் போய்வரத் தொடங்கியுள்ளன.

ஏன்..?

சிவந்திபட்டிக்குள் நுழைந்தால் முதலில் வருவது தேவர்கள் வசிக்கும் பகுதி. இதற்கு அடுத்து வருவது தலித்துகள் வசிக்கும் பகுதி. பேருந்துகள் அனைத்தும் தலித்துகள் தெருவரை சென்று திரும்பும். இதனால், அங்கு ஏறுபவர்களுக்கு அமர்வதற்கான வசதி சுலபத்தில் கிடைக்கும். அதற்கு அடுத்து வரும் தேவர் தெருவில் ஆட்கள் ஏறும்போது, சீட் கிடைக்கவில்லை என்றால் நின்றுகொண்டுதான் வர வேண்டும். 'ஒரு பள்ளப்பய உட்கார்ந்து வருவான். அவனுக்கு முன்னாடி நான் நின்னுகிட்டு வரணுமா..?' என்று தேவர்களுக்குக் கடுப்பு. இதனால், பேருந்து ஊருக்குள் நுழையும்போதே ஜன்னல் வழியாக தேங்காய்ப்பூ துண்டைத் தூக்கிப்போட்டு விடுவார்கள். அந்தத் துண்டைப் பார்த்ததும், 'யாரோ ஒரு பாண்டியன் (தேவர்) இடம் பிடித்து வைத்திருக்கிறார்' என்று புரிந்துகொண்டு அதில் தலித்துகள் உட்காரக்கூடாது.

இந்த நெடுநாளைய பிரச்னை உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருந்தது. தென் மாவட்டங்களில் சாதிப் பிரச்னை பற்றியெரிந்த சமயத்தில் சிவந்திபட்டியும் பற்றிக்கொண்டது. 'பேருந்தில் எங்க பொண்ணுங்களை கிண்டல் செய்கிறார்கள்' என்று தேவர்கள் தரப்பில் கிளப்பப்பட்ட பிரச்னை, மெல்ல மெல்ல பெரிதானது. தலித்துகள் தரப்பில் மூவரும், தேவர்கள் தரப்பில் ஒருவருமாக மொத்தம் நான்கு உயிர்கள் அரிவாளுக்கு பலியாயின. அதைத் தொடர்ந்துதான் பேருந்தை ஊருக்கு வெளியிலேயே நிறுத்த உத்தரவிட்டது அரசு. பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போது சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டு, 'பேருந்துகள் முன்புபோலவே தலித்துகள் தெரு வரைக்கும் சென்று திரும்பும். யாரும் துண்டுபோட்டு இடம் பிடிக்கக்கூடாது' என்ற நிபந்தணையுடன் மறுபடியும் இயக்கப்படுகின்றன.

வாசிக்கும் நீங்கள் நகர எல்லைக்குள் பிறந்து வளர்ந்தவர் எனில், சாதியின் இத்தகைய வீச்சு, உங்களுக்கு வியப்பூட்டலாம். 'பஸ்ஸுல உட்கார்றதுலக் கூடவா சாதி பார்ப்பாங்க..?' என்று உங்கள் மூளை கேள்வி எழுப்பலாம். எல்லா சாதிய உணர்வுகளும் நிரம்பிய ஒரு தஞ்சைப்பகுதி கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கே நெல்லை மண்ணில் நிரம்பி வழியும் சாதி, ஆரம்பத்தில் திகைப்பூட்டுவதாக இருந்தது.

ங்கு கிட்டத்தட்ட யாவரிடத்திலும் சாதி நீக்கமற நிறைந்திருக்கிறது. தன் சொந்த சாதியினர் நடத்தும் கடையில் பொருள் வாங்குவது, தன் சாதியைச் சேர்ந்த வக்கீலிடம் வழக்கு நடத்துவது என்று சாத்தியப்படும் இடங்கள் அனைத்திலும் சாதியை முன்னிலைப்படுத்துகின்றனர். திருமணம் போன்ற விழாக்களுக்கு ஒட்டப்படும் வாழ்த்துப் போஸ்டர்களிலும் சாதியே துருத்திக்கொண்டு நிற்கும். 'தேவர் வீட்டுக் கல்யாணம்', 'நாடார் கோட்டையில் கொடைவிழா' என்றுதான் அந்த போஸ்டரின் வாசகங்கள் சொல்லும். அத்தகையை போஸ்டர்களில் தவறாமல் ஏதாவது ஒரு நடிகரின் புகைப்படம் இடம் பிடித்திருக்கும். விக்ரம், பிரசாந்த், கார்த்திக் போன்றவர்களின் புகைப்படங்களை இம்மாதிரியான போஸ்டர்களில் பார்த்தபோது முதலில் ஒன்றும் தோன்றவில்லை. பின்னொரு நாளில் சந்தேகம் வந்து விசாரித்தபோதுதான், ஒவ்வொருவரும் தங்கள் சாதியைச் சேர்ந்த நடிகரின் புகைப்படத்தைப் போட்டுக்கொள்ளும் விஷயமே தெரிந்தது.

முதலில் போஸ்டரில் தங்கள் சாதி நடிகரின் புகைப்படம் போடும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் தேவர்கள். முத்துராமன், கார்த்திக் ஆகியவர்களின் புகைப்படங்களோடு தொடங்கிய இது, பிற்பாடு பிரபு, அருண்பாண்டியன் என்று வளர்ந்து, இப்போது எஸ்.ஜே.சூர்யாவின் புகைப்படம் கூட சில இடங்களில் எட்டிப்பார்க்கின்றன. தேவர் மகன், விருமாண்டி ஆகிய படங்களில் நடித்ததால் கமல்ஹாசனையும் கூட சில நேரங்களில் தேவராக்கிவிடுகின்றனர். இதன்பிறகு நாடார்கள் தங்களின் போஸ்டர்களில் சரத்குமாரை கொண்டுவந்தார்கள்.

தென் மாவட்ட கலவரத்திற்குப் பிறகு தலித்துகளின் போஸ்டர்களில் பிரசாந்த் சிரிக்கத் தொடங்கினார். பிற்பாடு அதில் விக்ரமும் இணைந்துகொண்டார். இதேபோல ரெட்டியார்கள் நெப்போலியனையும், பிள்ளைமார்கள் இயக்குனர் விக்ரமனையும், விஸ்வகர்மா இனத்தவர்கள் தியாகராஜ பாகவதர், பார்த்திபன் மற்றும் கவிஞர் பழனிபாரதியையும், நாயக்கர்கள் விஜயகாந்த்தையும் தங்களின் போஸ்டர்களில் கொண்டு வந்தார்கள். இதில் பெரிய காமெடி ஒன்றும் நடந்தது. முன்னால் அ.தி.மு.க. அமைச்சரும், இப்போது தி.மு.க.வில் இருப்பவருமான மு.கண்ணப்பன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 'நடிகை சுகன்யாவுக்கும், கண்ணப்பனுக்கும் தொடர்பு' என்று பத்திரிகைகள் அனைத்தும் கிசுகிசு எழுதின. உடனே தென் மாவட்ட யாதவர்கள், தங்களின் விழாவுக்கான போஸ்டர்களில் சுகன்யாவின் படத்தை அச்சிட்டு மகிழ்ந்தார்கள். (உண்மையில் சுகன்யா என்ன சாதி..?)

ங்கு அனைத்து சாதியினரும் தங்களுக்கான இருப்பை உறுதிசெய்துகொண்டே இருக்கின்றனர். அது பெரும்பான்மையோ, சிறுபான்மையோ.. தான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவும், மற்றவனை விட நான் ஒன்றும் சளைத்தவனில்லை என்று காட்டவும் எல்லோரும் பிரயத்தனப்படுகின்றனர். 'பார்த்துக்கடே.. எங்களுக்கும் ஆள் இருக்கு..' என்று சுற்றத்துக்கு உணர்த்தும் பொருட்டே நடிகர்களை போஸ்டர்களில் சிரிக்க விடுகின்றனர்.

இது போஸ்டர்களோடு நிற்பதில்லை॥ சினிமா தியேட்டர்களின் கழிப்பறை சுவர்களில் 'நாடார் குல சிங்கம்' என்று கரிக்கட்டையால் கிறுக்கி வைக்கும் அளவுக்கு முத்திப்போகிறது। நெல்லைக்கு வந்துபோகும் ரயில்களின் கழிப்பறைகளிலும் இந்த வீர வசனம் காணக்கிடைக்கிறது. பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் படிந்திருக்கும் தூசி படலத்தில் எழுதி வைக்கிறார்கள் 'வீர மறவன்' என்று. தென்பகுதி கிராமங்கள் பலவற்றில் உள்ளே நுழைந்தாலே, 'தேவர் கோட்டை உங்களை வரவேற்கிறது' என்றோ, 'தேவேந்திரன் கோட்டை உங்களை வரவேற்கிறது' என்றோதான் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஆசிரியரை மாணவனே கொன்றுவிட்டான் என்றொரு செய்திக்காக ஏழாயிரம்பண்ணை என்ற ஊருக்குப் போயிருந்தேன். அந்த மாணவனுடன் படிக்கும் இன்னொருவனை விசாரித்தபோது கொஞ்சமும் தயக்கமின்றி அந்த பதிமூன்று வயது சிறுவன் சொல்கிறான்.. ''வாத்தியாரும் நாடாக்கமாரு.. இவனும் நாடாக்கமாரு.. அப்படி இருந்தும் குத்திபுட்டான்ணே..". மிக இயல்பாக அந்த சிறுவன் சொன்ன கணத்தில், எந்த அளவுக்கு சாதியின் தாக்கம் நிறைந்திருக்கிறது என்பது புரிந்தது. மெத்தப்படித்த பொறியியல் நண்பன் ஒருவன், தான் ஏன் விஜய் ரசிகராக இல்லை.. ஏன் அஜித் ரசிகராக இருக்கிறேன்..? என்பதற்கு சொன்ன காரணம், 'விஜய் ஒரு தலித்'.

சாதி என்பது நெல்லைக்கு மட்டுமான பிரச்னை இல்லைதான். ஆனால், இங்குதான் அது இவ்வளவு வெளிப்படையாக எல்லா செய்கைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எனது ஒரு வருட நெல்லை அனுபவத்தில் நானறிந்த வகையில் சொல்ல வேண்டுமானால், இங்கு அனைத்து விதமான பற்றுகளும் அதிகமாக இருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. போன்று சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் இங்குதான் அதிகம். புதுமைபித்தன், வல்லிக்கண்ணன், தி.க.சி, வண்ணதாசன், கி.ரா., கலாப்ரியா என்று இலக்கியவாதிகளின் எண்ணிக்கையும் நீண்டுகிடக்கிறது.

'பக்கத்தில் இருக்கும் வரை நாம் எதையும் மதிப்பதில்லை' என்ற பொது நியதிக்கு எதிராக, தன் மண் மீதும், தாமிரபரணி நதி மீதும் இந்த மக்கள் வைத்திருக்கும் நேசம் ஆச்சர்யம் தரக்கூடியது. குடும்ப உறவுகளை நேசிப்பதும், குடும்பத்தோடு நெருக்கமாக இருப்பதும் ஒப்பீட்டளவில் இங்கு அதிகம். வார்த்தைகளாலும், சூழ்நிலைகளாலும் ஏற்படும் கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாக வாழாமல் சட்டென்று உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுகின்றனர். தென் மாவட்ட அடிதடிகளுக்குப் பின்னுள்ளது இந்த வகை உணர்ச்சிகள்தான் என்று நினைக்கிறேன். இதே அடிப்படையில்தான், தன் சொந்த சாதி மீதான பற்றையும் மிக அதிகமாக வெளிப்படுத்துகின்றனர்.

'நீ ஒரு சாதிய சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்' என்பதை எல்லா கணத்திலும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது இந்த ஊர்.

கருத்துகள்

கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
பேருந்தின் இருக்கைகளை நீக்கிவிட்டு பேருந்தை இயக்கி இருக்கலாம். எல்லா சாதிவெறி நாய்களும் நின்றுகொண்டே பயணம் செய்திருக்கும்.
:)

உயர் சாதியிலும் வெறும்பயல்களுக்கு பெருமை வேண்டுமென்றால் சாதியைத் தானே கொண்டுவருவார்கள்.

சுகன்யா காமடி நிஜமாகவே ரசித்தேன்.

சுகன்யா பாவம், ஒரு முறை சிங்கை நிகழ்ச்சிக்கு வந்த போது அந்த அம்மா மேடைக்கு வந்த போது கண்ணப்பன் கண்ணப்பன் என்று சத்தமிட்டு முகம் சுறுங்க வைத்துவிட்டார்கள், நம்ம ஊர் ரசிகர்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பஸ் இருக்கை சாதிவெறி எங்கள் ஊரிலும் உண்டு ,(விழுப்புரம் மாவட்டம்).

சேரிக்கு சென்று வரும் ஒரு டவுன் பஸ்ஸுக்குள் ஊர்காரர்கள் (பெரும்பாலும் வன்னியர்கள்) எவரும் ஏறமாட்டார்கள்.

சேரிக்கு செல்லாமல் ப்ரதான சாலையிலேயே செல்லும் வண்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இப்படி அப்பட்டமான செய்திகளை எந்த ஒரு பத்திரிக்கையும், செய்தித் தாள்களும் வெளியிட்டதில்லை. அதற்கான தைரியமும் இல்லை.

இது தான் வலைப்பூக்களின் பலம்!

சமூக விழிப்புணர்வூட்டும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து எழுதுங்கள் ஆழியூரான்!
TBCD இவ்வாறு கூறியுள்ளார்…
நான் முன்னர், படித்தவர்கள் சாதி பாக்க மாட்டார்கள் என்று எண்ணியிருந்தேன்..

பின்னர் தான் தெரிந்தது...சாதி பாக்கும் விசயம் எல்லா மட்டத்திலேயும் இருக்கிறது என்று..

அதிலேயும்..நீ எந்த சாதி என்று கேட்பது..கூச்சமில்லாமல், தென் மாவட்டங்களிலே பேச்சின் ஊடே கேட்கப்படுகின்ற விசயமாக இருக்கிறது..

நான் பார்த்தவரை...உயர் சாதி என்று கருத்தப்படும் வகுப்பினர் தான், மற்றவர்கள் என்ன சாதி என்று தெரிந்துக் கொள்ளும் ஆவலிலே இருக்கிறார்கள்..அதாவது..பழக இவன் தகுதியானவனா என்று பார்க்க..

நகரத்திலே இப்படி கொடுமைகள் நிகழும் போது...கிராமங்கள் ஆச்சர்யப்படுத்துவதில்லை...
thiru இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி,

நல்ல கவனிப்பும், நல்ல பதிவும். எதிலும் அதிகமான பற்று கொண்டவர்கள் நெல்லை மாவட்டத்து மக்கள். சாதி விசயத்தில் திரைப்படங்கள் திரையிடப்படுவதில் கூட சாதி இருப்பதை நண்பன் ஒருவன் சொன்ன போது நம்பவில்லை. பின்னர் அதை நேரடியாக உணர முடிந்தது. கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான அணி உண்டு. கிராமங்களுக்குள்ளே தனது சாதியை சார்ந்த கொலைகாரனை கூட மிகப்பெரிய இடத்தில் வைத்து பேசுவதை கணலாம்.

பேருந்தில் இடம் பிடிக்கும் செவ்வந்திப்பட்டி போன்ற பிரச்சனையை தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஒரு கிராமத்தில் நடந்து வந்தது.

தலித் மக்களுக்கு அரசு பேருந்துகளில் அமர கூட சாதிக்கொடுமை எவ்வளவு தடை என்பதை கன்னத்தில் அறையும் பதிவிற்கு நன்றி! வளமான மொழிநடையில் எழுதப்பட்ட பதிவு.
thiru இவ்வாறு கூறியுள்ளார்…
//கோவி.கண்ணன் said...
பேருந்தின் இருக்கைகளை நீக்கிவிட்டு பேருந்தை இயக்கி இருக்கலாம். எல்லா சாதிவெறி நாய்களும் நின்றுகொண்டே பயணம் செய்திருக்கும்.
:)//

கோவி,

நல்ல யோசனை :)))
சீனி.செயபால் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பிற்கினியவன்......
நெல்லை மாவட்டத்துக்காரர்கள் சாதிப்பற்றில் மிகுந்த பற்றுள்ளர்கள்தான்.இவர்கள் தாழ்தப்பட்ட சமூகதில்கூட ஒருபிரிவைவிட(PR) இன்னொருபிரிவினர்(PL) உயர்ந்தவர்கள்என்று சொல்வார்கள்.அரசு நிறுவனங்களில் செயல்பட்டுவரும் சாதிசங்கமானSC/ST பிரிவில்கூட சேராமல் இவர்கள் தனித்தனியாகா செயல்பட்டு வருபவர்கள்.எனவே மற்றசாதியினர் இவகளய் எப்படி மதிப்பார்கள்?
சீனி.செயபால் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பிற்கினியவன்......
நெல்லை மாவட்டத்துக்காரர்கள் சாதிப்பற்றில் மிகுந்த பற்றுள்ளர்கள்தான்.இவர்கள் தாழ்தப்பட்ட சமூகதில்கூட ஒருபிரிவைவிட(PR) இன்னொருபிரிவினர்(PL) உயர்ந்தவர்கள்என்று சொல்வார்கள்.அரசு நிறுவனங்களில் செயல்பட்டுவரும் சாதிசங்கமானSC/ST பிரிவில்கூட சேராமல் இவர்கள் தனித்தனியாகா செயல்பட்டு வருபவர்கள்.எனவே மற்றசாதியினர் இவகளய் எப்படி மதிப்பார்கள்?
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
கோவி., திரு சொன்னதுபோல உங்கள் யோசனை நன்றாகத்தானிருக்கிறது. அப்போதும் கூட வேறு ஏதாவது ரூபத்தில் பிரச்னைகள் வரக்கூடும்.

வெயிலான், டி.பி.சி.டி., சீனி ஜெயபால்.. கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி..!
பட்டுக்கோட்டை பாரி.அரசு இவ்வாறு கூறியுள்ளார்…
தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக ஓரத்தநாடு வட்டத்தில் இன்னும் பலகிராமங்களில் இந்த பிரச்சினை இருக்கிறது. எப்படியென்றால் ஆதிக்க சாதியினர் அமர்ந்திருந்தால் அந்த ஊரை சேர்ந்த சேரி மக்கள் உட்காரக்கூடாது.(குறிப்பாக பெண்கள்), அவர்கள் வரும்போது அமர்ந்திருந்தால் கூட எழுந்து நிற்க வேண்டும். இப்படி நிறைய சிக்கல்கள். தற்பொழுது கொஞ்சம் பரவாயில்லை என்கிறார்கள் நண்பர்கள்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பாரி.அரசு.. நானும் ஒரத்தநாடு வட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவந்தான். என் கிராமத்திலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் நீங்கள் சொல்வது மாதிரியான சாதிப் பிரச்னைகள் இல்லை. அதற்காக பிரச்னையே இல்லை என்று அர்த்தமில்லை. நெல்லைப் பகுதியில் வெளிப்படையாக தெரிவதை விட, தஞ்சைப் பகுதியில் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் சாதிய அடக்குமுறைகள் ஏராளம் இருக்கிறது.
பட்டுக்கோட்டை பாரி.அரசு இவ்வாறு கூறியுள்ளார்…
மன்னிக்க வேண்டும் ஆழியூரான் நான் உங்கள் பகுதியை குறைச்சொல்ல வேண்டும் என்கிற நோக்கில் சொல்லவில்லை...

நான் பட்டுக்கோட்டையை சேர்ந்தவன், சில சந்தர்ப்பங்களில் ஓரத்தநாடு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வரவேண்டிய சூழல் ஏற்ப்பட்டது, அப்போது நான் கண்டதையே சொன்னேன்.

இரண்டு நிகழ்வுகள் ஓன்று ஓக்கநாடு மேலையூரிலும், மற்றொன்று ஆம்லாபட்டிலும் நடந்தது.

எனக்கு மிகுந்த வருத்தம் ஏனென்றால் அதிகமான திராவிட சிந்தனையும், மார்கசிய சிந்தனையும் பாய்ந்த பகுதி ஓரத்தநாடு வட்டம் அங்கேயே இப்படியிருக்கிறதே என்று அப்போது ஆதங்கப்பட்டேன்.

அதையே இங்கும் பதிவு செய்திருக்கிறேன். நிகழ்வுகள் நடந்த காலக்கட்டம் 2000 ம் ஆண்டு.

நன்றி!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக கவனித்து எழுதப்பட்ட பதிவு...

சுகன்யா மேட்டர் சூப்பர்...

பல புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது...

எப்போது ஒழியுமோ இந்த சாதிப்பிரச்சினை தமிழ்நாட்டில் ?
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பாரி.அரசு.. இதில் மன்னிப்புக் கேட்க என்ன இருக்கிறது..? ஒரத்தநாடு வட்டத்தில் ஏராளமான கிராமங்கள் உண்டு. அதில் நீங்கள் முன்பு குறிப்பிட்ட மாதிரியான கிராமங்களும் இருக்கக்கூடும்/இருக்கும். அதிலும் நீங்கள் சொல்லியிருக்கும் ஆம்பலாபட்டு கிராமமெல்லாம் சாதி சகதி ஊறிக்கிடக்கும் ஊர். நான் சொல்லவந்தது, 'நானறிந்த கிராமங்களில் நீங்கள் சொல்லியவிதமான பிரச்னைகள் இல்லை' என்பதைதான். அதேநேரம் அங்கு வேறு வடிவங்களில் சாதி தன் கோரமுகத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
ரவி.. இது தீர்கிற பிரச்னையாக தெரியவில்லை. அவரவர் வாழ்வில் சாதியை தவிர்ப்பது அனைவருக்குமே சாத்தியம். குறைந்தபட்சம் அதையாவது செய்யலாம்.
குறிச்சி டைம்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்றைய சினிமா உலகில் பெரியாரியம் பேசிய என்.எஸ்.கிருஷ்ணன்,எம்.ஆர்.ராதா
வாழ்விலும் அதை கடைப்பிடித்தனர்.

இன்றைய சினிமாவில் பெரியாரியம் பேசும் விவேக் தேவர்,அருண்பாண்டி தேவர்,தங்கர்பச்சான் வன்னியர் ஆகியோர்களை திராவிடர் கழகத்தினர் கொண்டாடினால் சாதி வெறி எப்படி போகும்.

திராவிடம் பேசும் தலைவர்களுக்கும் சாதி வெறி இருக்கு. நேரில் உணர்ந்தவன் நான். சாதி ஒழிய சாதிவெறியர்களுக்கு முன் திராவிட தலைவர்கள் (சாதிவெறி உள்ள) ஒழிய வேண்டும்.
ஜமாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
செறிவான மொழிநடையில் சொல்லப்பட்ட அருமையான பதிவு. சாதி என்பது ஒரு உடலுறுப்புபோல ஆகிவிட்டது. அது பல கோணங்களில் வெளிப்பபடுவதை அருமையாக சுட்டியுள்ளீர்கள்.

சுகன்யா காமெடி அருமை.

திருநெல்வேலி என்றாலே நினைவிற்கு வருவது அதன் இலக்கிய வளம் நிறைந்த எழுத்தாளர்கள்தான். அங்கு இத்தனை கொடுமையான சாதிய உணர்வு இருப்பதை வெளிப்படுத்தி அவ்வூர்பற்றிய பார்வையையே மாற்றிவிட்டீர்கள். அல்வா மற்றம் அருவா என்று.

தஞ்சையிலும் சாதி உணர்வு உண்டு என்றாலும் அங்கு கொஞ்சம் அதிகம்தான்.

பரி.அரசு குறிப்பிட்ட ஒரத்தநாடு பகுதிகளில் 85-ல் எனது மாணவப் பருவதத்தில் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் எங்களது மாணவர் சங்கம் சார்பாக 10 முதல் 15 நாட்களுக்கு village campaign என்கிற கிராம பிரச்சாரத்திற்கு போவோம். அந்த வருடம் ஒரத்தநாட்டு தோழர்களின் ஏற்பாடால்.. நாங்கள் பாப்பாநாடு, கண்ணந்தங்குடி துவங்கி மேலையூர் கீழையூர் ஆம்லாப்பட்டு (எனது நினைவு சரியாக இருந்தால்.. களப்பால் குப்புவின் சமாதி உள்ள அக்கிராமத்தில் அவரது சமாதி முன்பு வீரவணக்கப் பாடல்கள் பாடியுள்ளோம்.) என சுற்றி பிரச்சாரம் செய்திருக்கிறோம். பெரும்பாலும் தங்குவது தலித் தோழர்கள் வீட்டில் அல்லது பொது இடமான கோவில் சமூகக் கூடங்களில். சாப்பாடு கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒவ்வொரு நபராக அழைத்துச் சென்ற உங்கள் வீட்டில் உள்ளதை சாப்பிடத் தாருங்கள் என பார்க்க வந்தவர்களிடம் அறிவித்து விடுவோம். அவர்களும் நாங்கள் 10 முதல் 15 பேர்கள் என்பதால் ஒவ்வொருவராக அழைத்துச் சென்று விடுவார்கள். இரவு விளக்கு கமபங்களில் அல்லது அரிக்கேன் விளக்கின் ஒளியில் அரசியல் வகுப்புகள், பட்டி மன்றம் நடத்துவோம்.

ஒருமுறை ஒரு கிராமத்திற்கு பிரச்சாரம் செய்யப்போகும்போது (எங்கள் தோழர்களில் பெரும்பாலும் தலித்துகள் என்றாலும் தலித்தல்லாதோரும் இருந்தனார்.)அங்கிருந்த இடைநிலைச்சாதியனர் ஊருக்குள் எங்களை விடாமல் வாயிலிலேயே வலிமறித்தவிட்டனர். எங்களை அழைத்த தோழர் அவர் அந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அனுமதிக்கவில்லை. காரணம் தலித்தகளிடம் தங்கி அவர்களுக்கு ஆதரவாக கூலிப்பிரச்சனையில் நாங்கள் பிரச்சாரம் செய்ததே.

பாரி அரசு கூறுவதுபோல் // அதிகமான திராவிட சிந்தனையும், மார்கசிய சிந்தனையும் பாய்ந்த பகுதி ஓரத்தநாடு வட்டம் அங்கேயே இப்படியிருக்கிறதே என்று அப்போது ஆதங்கப்பட்டேன்//

அன்று அங்கு பல பகுதிகளில் இரட்டைக் குவளைமுறை இருந்ததை தோழர்கள் அழைத்துப் போய் காட்டியுள்ளார்கள். ஒவ்வொருநாள் மாலையிலும் ஒர கிராமம் விட்டு மற்றறொரு கிராமத்திற்கு பயணம். நடந்துதான். பாப்பாநாட்டிலிருந்து கண்ணந்தங்குடிக்கும். கண்ணந்தங்கடியிலிருந்து மேலையூர் இப்படி. பல கிராம பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால், சாதியம் என்பது கீழைத் தஞ்சை பகுதியில் அதிலும் கள்ளர்கள் மற்றம் தலித் முரண்கள் நிறைந்தே காணப்படுவதை அனுபபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதில் கறிப்பாக எங்களை சாப்பிட அழைத்தச் செல்பவர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான். சாதி தெரியாத எங்களை அழைத்தச் செல்ல அந்த இடைநிலை சாதியினருக்கு மனம் ஒப்பவில்லை போலும்.

தஞ்சையைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் இப்படி நடையாக நடந்திருக்கிறோம் அன்று. மலரும் அந்த பழைய நினைவுகளக்கு உங்கள் கட்டுரையும் பின்னோட்டங்களும் இழுத்துச் சென்று விட்டது. அதிகமாக தொடர்பற்ற முறையில் இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி. பாராட்டுக்கள்.
வெ. ஜெயகணபதி இவ்வாறு கூறியுள்ளார்…
இப்படிப்பட்ட சமூக சீர்கேடுகளை நினைத்து வருந்துகிறேன். எனக்கு தெரிந்து படித்தவர்கள் ஜாதி பார்ப்பதில்லை என்பதெல்லாம் பொய். திருநெல்வேலி சீமையில் மட்டும் இல்லை, தமிழ்நாட்டில் பல இடங்களில் இது நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதை மாற்ற என்ன செய்வது?

எனது உறுதிமொழி, பிறப்பால் நான் ஒரு ஜாதியை சேர்ந்தவன் என்று பிறரால் அடையாளம் காணப்பட்டாலும் எனது சந்ததிக்கு அத்தகைய சூழ்நிலை வராது. அத்தகைய மனநிலையில் அத்தகைய எண்ணத்துடன் எனது சந்ததி வளராது.

நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
தமிழ்நதி இவ்வாறு கூறியுள்ளார்…
எப்போதும் உங்கள் எழுத்தில் ஏதாவதொரு செய்தி இருக்கும். சாதி குறித்து நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது. உள்ளுரில் சாதி. வெளிநாட்டில் நிறவெறி... வீட்டில் பாரபட்சம். சமத்துவமான சமுதாயம் என்பது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்குமா என்பது ஐயந்தான். இதற்குள், எந்த நடிகர் என்ன சாதி என்பதை இதை வாசிப்பவர்கள் உள்ளுக்குள் குறித்துக்கொண்டிருப்பார்கள்:)
கையேடு இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் எழுத்து நடை வழக்கம்போல் நன்று. கருப்பொருளுக்கு என்னத்த சொல்றது, ஒரு வகையான விரக்திதான் மிஞ்சுது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
குறிச்சி ஜெகா... நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கையில், 'சினிமாவில் கடவுள் வேடம் ஏற்று நடிக்க மாட்டேன்' என்ற உறுதியோடு இருப்பதால் 'லட்சிய நடிகர்' என்று சொல்லப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஒவ்வொரு வருட தேவர் ஜெயந்தியிலும் முதல் ஆளாய் அஞ்சலி செலுத்த ஆஜராகும் 'உயர்ந்த லட்சியத்தை' சுட்டிக்காட்டி அண்மையில் சுகுணா திவாகர் எழுதியிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதான் ஜமாலன்.. சாதி, உடலின் உபரி உறுப்பாக ஒட்டிக்கொண்டுவிட்டது.

உங்கள் மாணவ பருவத்து கிராம அனுபவங்கள் எனக்கும் உண்டு. சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவொளி இயக்கத்தின் தன்னார்வத் தொண்டராக கிராமங்கள் தோறும் நாடகங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தச் செல்வோம். அப்போது எனக்கு பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும். ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போதும், அந்த ஊரைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர் ஒருவரின் வீட்டில் இரவு உணவு நடக்கும். அவ்வாறு எங்கள் ஊருக்கு த.தொண்டர்கள் வந்தபோது, எங்கள் வீட்டில் இரவு உணவு நடந்தது. உணவருந்தியதில் சில தலித் நண்பர்களும் இருந்தனர். நான் அழைத்து வந்தவர்கள் என்பதாலும், விருந்தாளிகள் என்பதாலும் எந்த கேள்வியுமின்றி அனைவருக்கும் எங்கள் வீட்டினர் உணவு பரிமாறினர். ஒருவேளை அதில் தலித் நண்பர்களும் இருந்தது தெரிந்திருந்தால் எங்கள் வீட்டாரின் மனநிலையும், நடத்தையும் வேறாக இருந்திருக்கலாம். அடுத்த சில நாட்களில் இந்த விஷயம் வெளியில் தெரிந்தபிறகு வீட்டில் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஊர்க்காரர்களின் பலவகையான நக்கல் பேச்சுகள் சில மாதங்களுக்குத் தொடர்ந்தன..!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
ஜெய.கணபதி, கையேடு.. பேசாப்பொருளை அல்ல.. பேசிய பொருளையேதான் பேசியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் பேசுவதில் சலிப்போ, ஒதுங்கியிருப்பது நல்லது என்ற நினைப்போ வந்துவிடுமோவென்று அச்சமாக இருக்கிறது.

தமிழ்நதி.. 'மழைக்கு பயந்து என்னதான் குடை பிடித்துச் சென்றாலும் உடம்பின் எங்கேனும் ஒரு ஓரத்தில் எட்டிப்பார்த்துவிடுகிற ஈரம்போல'(நன்றி: வைரமுத்து), செய்கிற தொழிலின் சாரல் இங்கும் அடித்துவிடுகிறதுபோல.
கிருத்திகா ஸ்ரீதர் இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் பதிவின் விவரங்கள் கொஞ்சம் அதிர்ச்சியானவை தான். நானும் திருநெல்வேலி பகுதியை சார்ந்தவர் தான், கிட்டத்தட்ட 23 வருடங்கள் தாமிரபரணியோடும் வாழைகளோடும் வாழ்ந்தவர் தான், ஆனால் ஊரை விட்டு விலகிய இந்த பதின் சொச்ச வருடங்களில் இத்தனை பின்னோக்கிய மாற்றங்களா?....

நடிகர்கள், சாதிகள், மிக உண்மையான ஆய்வுதான்.. ஆனாலும், இதற்கெல்லாம் காரணம், சாதிக்கொரு சங்கம் வைத்து தன்னை முன்னுறுத்திக் கொள்ளும் தனி மனித முயற்சியும், அதை தன் அரசியல் ஆதாயங்களுக்காக பயன் படுத்தி ஆதரவு தரும் இந்த அரசியல் வாதிகளும் தான் என்பது என் கருத்து.

அரசியல் குறிக்கீடுகள் இல்லாத நடைமுறை வாழ்க்கைக்கும், தனிமனித துதி தேடாத தலைமைக்கும் என்று நாம் தலைப்படுகிறோமோ அன்று தான் இந்த துயரங்களில் இருந்து நம் மக்கள் விடுதலை பெற முடியும்…

அதற்கு நம் பங்களிப்பு என்ன??
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
கிருத்திகா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நீங்கள் ஊரைவிட்டு விலகிய பிறகு ஏற்பட்ட மாற்றங்களாக அதாவது அண்மைய வருடத்து மாற்றங்களாக இவை தெரியவில்லை. நீண்டகாலமாகவே இருந்து வரும் பிரச்னையாகத்தான் இது இருக்க முடியும். அருகிலிருந்து பார்த்தபோது உங்களுக்கு அது ஒரு விஷயமாக தெரியாமல் இருந்திருக்கலாம்.

மற்றபடி நாம் என்ன செய்ய இயலும்- இப்படி எழுதி நம் அழுக்கை ஒத்துக்கொள்வதையும், குறைந்தபட்சம் நம் முதுகை சுத்தமாக வைத்துக்கொள்வதையும் தவிர.
கிருத்திகா ஸ்ரீதர் இவ்வாறு கூறியுள்ளார்…
அருகிருந்து பாரித்தாலும் தூரத்தில் இருந்து பார்த்தாலும், அவலம் ஒன்றுதான், நான் இங்கு குறிப்பிட முயற்சித்தது, ஒரு தனி மனித அகங்காரத்தின் வடிகாலே, இந்த "சாதி சூழ் உலகின்" அடிப்படை என்பதைத்தான். உற்று நோக்கின் ஒரு உண்மை புரியலாம், ஒரு தலைவனின் தலமைக்கு சோறிட கூடி நிற்கும் வெறுங்கூட்டம் பட்டினி கிடக்கும், இது தான் இன்றைய அவலம், அது சரி நீங்கள் சொல்வது போல் நாம் வேறென்ன செய்யமுடியும்????? இதற்கு தான் நாம் என்றால் இந்த பதிவு என்ன பொழுது போக்கிற்கா??? ஏதாவது விடை இருக்கும் தேடலாம்....
கிருத்திகா ஸ்ரீதர் இவ்வாறு கூறியுள்ளார்…
அருகிருந்து பாரித்தாலும் தூரத்தில் இருந்து பார்த்தாலும், அவலம் ஒன்றுதான், நான் இங்கு குறிப்பிட முயற்சித்தது, ஒரு தனி மனித அகங்காரத்தின் வடிகாலே, இந்த "சாதி சூழ் உலகின்" அடிப்படை என்பதைத்தான். உற்று நோக்கின் ஒரு உண்மை புரியலாம், ஒரு தலைவனின் தலமைக்கு சோறிட கூடி நிற்கும் வெறுங்கூட்டம் பட்டினி கிடக்கும், இது தான் இன்றைய அவலம், அது சரி நீங்கள் சொல்வது போல் நாம் வேறென்ன செய்யமுடியும்????? இதற்கு தான் நாம் என்றால் இந்த பதிவு என்ன பொழுது போக்கிற்கா??? ஏதாவது விடை இருக்கும் தேடலாம்....
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
கிருத்திகா..என்னால் விரிவாக பதில் சொல்ல முடியாத இடத்தில் சிக்கியிருக்கிறேன். இன்று இரவு பதில் எழுதுவேன்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
கிருத்திகா.. தங்களுக்கான என் பதில் நான் சொல்ல வந்ததை சரியாக பிரதிபலிக்காமல் போனதற்கு வருந்துகிறேன். 'நீங்கள் ஊரைவிட்டு விலகிப்போய்விட்டதால் பிரச்னை தெரியாமல் பேசுகிறீர்கள்' என்ற தொணியில் எழுதவில்லை அவ்வார்த்தைகளை.

//ஆனால் ஊரை விட்டு விலகிய இந்த பதின் சொச்ச வருடங்களில் இத்தனை பின்னோக்கிய மாற்றங்களா?//

என்ற உங்கள் வார்த்தைகளில் தென்பட்டதாக நான் கருதிய விசயத்திற்கான விளக்கமே அது.

நீங்கள் சொல்லியிருக்கும் சாதி சங்கத்தை கட்டிக்காக்கும் தலைவர்கள், தனி மனித துதிபாடல், இது எல்லாமே இருக்கும் சாதிய அமைப்பை பாதுகாத்துப் பயன்படுத்திக்கொள்ளும் சக்திகள். அதேநேரம் இத்தகையை சாதிக்கட்சிகள் தோன்றும் முன்பு சாதிப்பிரச்னைகள் இன்னும் வலுவாக இருந்தன என்பதையும் நாம் புறக்கணிக்க முடியாது.

பின்னூட்டத்தின் தடித்த(bold) எழுத்துகளில் நீங்கள் சுட்டியிருக்கும் வார்த்தைகள் தனிப்பட்ட எனக்கானவை என்றால், பொழுதுபோக்கிற்காக எழுதுவது மட்டுமில்லாது, கட்டுரையின் பேசுபொருளுக்கான நடைமுறை தீர்வுகளில் என்னால் இயன்றவரை பங்கெடுத்திருக்கும்/பங்கெடுத்துக்கொண்டிருக்கும் உதாரணங்களை சொல்ல முடியும். ஆனால், இக்கட்டுரை தனிப்பட்ட என்னைப்பற்றிய குறிப்புகள் அல்ல.

பிரச்னையின் வேரும், நுனியும் தெரிந்தாலும் அனைவராலும் களத்தில் இறங்கிவிட முடிவதில்லை. பிழைத்தலுக்கான காரணிகள் தடுக்கின்றன. இந்நிலையில் சாதிச்சகதியை விட்டொழிப்பதற்கான; யாவராலும் இயலுகிற தீர்வாக நான் சொல்வது, தன்னை சுத்தீகரித்துக்கொள்வது. அதற்கு முதலில் தன் மீது படிந்திருக்கும் அழுக்கை ஒத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் 'சாதியா.. உவ்வே..' என்று வாந்தியெடுப்பதான பாவனையை முன்வாசலில் உதிர்த்துவிட்டு, புழக்கடையில் சுயசாதி சங்கத்து கூட்டம் நடத்தும் நற்பழக்கம் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதைத்தான் //மற்றபடி நாம் என்ன செய்ய இயலும்- இப்படி எழுதி நம் அழுக்கை ஒத்துக்கொள்வதையும், குறைந்தபட்சம் நம் முதுகை சுத்தமாக வைத்துக்கொள்வதையும் தவிர.// என்ற வார்த்தைகளில் சொல்லியிருந்தேன். இதே கருத்தை அழுக்கு, முதுகு உவமைகளில்லாமல், இதே கட்டுரையின் முந்தைய பின்னூட்டம் ஒன்றிலும் சொல்லியிருந்தேன்.

இதன் பொருள், 'யாரும் ஒன்று திரண்டு சாதிக்கெதிராகப் போராட வேண்டாம். அவரவர் சொந்த வாழ்வில் சாதியை விட்டொழிந்தால் போதும்' என்பதல்ல. போராட்டத்தின் விளைவுகளை தாங்கும் சக்தி படைத்தவர்கள் வீதிக்கு வரட்டும். இயலாத மற்ற அனைவரும் தன்னளவிலான மாற்றத்தை செயல்படுத்தட்டும்.

இம்மாதிரியான விவாதங்களின்போது வலை நண்பர்கள் வழக்கமாக சொல்வதையே இரவல் வாங்கி இங்கு சொல்கிறேன். "நாம் இங்கு சண்டையிட்டுக் கொள்ளவில்லைதானே..?"
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர் முரளிக்கண்ணன் இட்டிருக்கும் பின்னூட்டம் இது.

>>மாணவர்கள் தங்கள் ஜாதி அடையாளம் காட்ட கையில் (மஞ்சள் மற்றும் பச்சை) கயிறுகள் கட்டுவதும், க்ரிகெட்,கபடி டீம் கூட அந்த வகையில் அமைவதும் இப்பகுதியின் துயரம். இதனால் அடுத்த தலைமுறையும் இந்த சுழலுக்குள் விழுகிறது. முற்காலத்தில் திருமனத்துக்கு மட்டும் பார்க்கப்பட்டது இப்பொழுது பிறப்பு முதல் இறப்பு வரைக்கும்.<<
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
//வார்த்தைகளாலும், சூழ்நிலைகளாலும் ஏற்படும் கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாக வாழாமல் சட்டென்று உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுகின்றனர்//

இதேபோல், மற்றவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை ஏற்று மதித்தால் சரி!

அருமையான பதிவு. நடிகர்கள் பற்றிய பல புதிய வடிவிலான செய்திகளை அறிந்தேன்.

கடைசியில் இந்த பாகுபாட்டையெல்லாம் உருவாக்கி விட்டவன் எங்கோயோ எழவோ என கிடக்கிறான். உள்ளே வீணாக ஒருவரை அடித்துக்கொண்டு கிடப்பது சாதாரண மக்களே!
கிருத்திகா ஸ்ரீதர் இவ்வாறு கூறியுள்ளார்…
ஐயோ, தோழனே... இந்த பின்னூட்டங்கள் எந்த எதிர்ப்பு மன நிலையிலும் எழுதப்பட்டதில்லை..தங்கள் பதிவின் களமும், அந்த செய்தியின் தாக்கம் மிக அருகாமையில் இருந்ததால் வந்த வரிகள் தான்... இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்கிற பரிதவிப்புத்தான்.. "பின்னூட்டத்தின் தடித்த(bold) எழுத்துகளில் நீங்கள் சுட்டியிருக்கும் வார்த்தைகள் தனிப்பட்ட எனக்கானவை என்றால், பொழுதுபோக்கிற்காக எழுதுவது மட்டுமில்லாது, கட்டுரையின் " இல்லை நன்பனே இது தங்களுக்கான் தனிப்பட்ட சுட்டுதல் இல்லை.. காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.. இது என் சுயத்துக்கானதும், எல்லோருக்கானதுமான கேள்வி மட்டுமே.. எனெனில் கேள்விகளுக்கான் பதிலின் தேடல்கள் மட்டுமே நமக்கான நடைவண்டி என்பது என் எண்ணம்..வாழ்த்துக்களுடன்..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//கேள்விகளுக்கான் பதிலின் தேடல்கள் மட்டுமே நமக்கான நடைவண்டி என்பது என் எண்ணம்..//

புரிதலுக்கு நன்றி கிருத்திகா..
ஆடுமாடு இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் நல்ல பதிவு. திருநெல்வேலிக்கும் சாதி சண்டைக்குமான பிரச்னை இன்று வந்ததல்ல. இதில் நாற்பதாண்டு வரலாறு இருக்கிறது. கிராமங்களில் தேவர்களிடம் வேலை பார்த்த் நாடார்கள்/தலித்துகள் பொருளாதார ரீதியாக தலை தூக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை சாதிமோதலுக்கான முதல் காரணம்.

அதையும் தாண்டி, ஏதோ காரணத்துக்காக நடந்துவிடுகிற ஒரு கொலை சாதி சாயம் பூசப்பட்டு விடுகிறது. அங்கொரு தலை என்றால் இங்கொரு தலை என்கிற ரீதியில் இந்தப் பிரச்னை சென்று கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய இருக்கிறது. விலாவாரியாக நானே ஒரு பதிவு போடுகிறேன்.
dragon இவ்வாறு கூறியுள்ளார்…
anubavam ok. but sathiyam enbathu indhia chuzhalil adippadai kotpadaga oori poyirikkirathu. athanudaiya velippattin alavu mavattathirku mattumalla theruvirku theru marupadum enbathai puriya vaithirupathai parattalam. arivo(zhi)li iakathil velai parthathalo ennavo thannai thanae sarippaduthi kolvathai oru theervahavum suyathirupthi aerpaduthi kollavum kooriyikkireerkal. irukkum idathilirunthu thuvangalam but athai mattum than seivaen ellam mara vendum endru adam pidippathu sariyalla. because athu yatharthathirku ethiranathu. anyway title 'Junior vikadan', matter 'anantha vikadan'
-dragon
அசுரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//வாசிக்கும் நீங்கள் நகர எல்லைக்குள் பிறந்து வளர்ந்தவர் எனில், சாதியின் இத்தகைய வீச்சு, உங்களுக்கு வியப்பூட்டலாம். 'பஸ்ஸுல உட்கார்றதுலக் கூடவா சாதி பார்ப்பாங்க..?' என்று உங்கள் மூளை கேள்வி எழுப்பலாம். எல்லா சாதிய உணர்வுகளும் நிரம்பிய ஒரு தஞ்சைப்பகுதி கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கே நெல்லை மண்ணில் நிரம்பி வழியும் சாதி, ஆரம்பத்தில் திகைப்பூட்டுவதாக இருந்தது.
///

சாதி இல்லை இல்லை என்று போலியாக சொல்லிக் கொண்டு சாதி குறித்து பேசுபவர்களிடம் குதர்க்கம் பேசும் நடுத்தர வர்க்க கும்பல்கள் இந்த கட்டுரையை கட்டாயம் படிக்க வேண்டும்.

நிற்க,

மேலேயுள்ள உங்களது வரிகள் ஏதோ மாநகரங்களிலும், நகரங்களிலும் சாதி வெறி இல்லாதது போலவும் அதனால்தான் அந்த பகுதிகளைச் சேர்ந்த நடுத்தர வர்கக்த்தினர் சாதி பாசம், வெறி குறித்து அறீமுகம் இல்லாமல் இருப்பது போலவும் எழுதப்பட்டுள்ளது.

அது உண்மையில்லை. சாதி நகரங்களில் வேறு பரிணாம வளர்ச்சி அடைந்த வடிவில் நிலவுகீறது. ஒரு சின்ன கேள்வி கேட்டால் நகரத்திலுள்ள நடுத்தர வர்க்க அல்பைகள் சாதியில்லை என்று சொல்வதில் உள்ள பொய்யை, போலித் தனத்தை புரிந்து கொள்ள முடியும்.

எத்தனை பேர் சாதி பார்க்காமல் திருமணம் செய்கிறான்? நகரமோ கிராமமோ உறவுகளை தீர்மானிப்பது சாதிதான். சாதியில்லை என்று சொல்லும் அல்பைகள் தங்களை சுற்றியுள்ளவர்களில், தாங்களே கூட சாதி பார்க்காமல் திருமணம் செய்தது குறித்து நேர்மையானதொரு பதிலை சொல்லட்டும்..

அசுரன்
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
அசுரன்... கருத்துக்கு நன்றி. கிராமங்களில் வெளிப்படையாக தன்னை வெளிப்படுத்துக்கொள்ளும் சாதி வெறியர்கள், நகரங்களில் கொஞ்சம் பவுடர் பூச்சோடு வேறு வடிவத்தில் இருக்கின்றனர். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது..?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
neenga sollurathu sari than.aana ippo ellam makkal rempa maaritanga..saathiya vachu onnum panna mudiyathunu...athe sivanthi patti ku munnala irukra idam peru "thyagaraja Nagar". inkae ella saathi vayasu paasangalum entha saathi verupadum illama nanbarkala irukaanga... i m not trying to support us...we are changing ourselves..vaithu pilapukaka ellam veru idankaluku(tirupur,chennai) ku kudi peyarnthu kondu irukirarkal.

Ivlo thooram saathi pattru ulla enga oorla, oru "villu paathu" group irunthanga(ippo irukangalunu theryala).antha group la anchu peru.anchy perumae vera vera saathi(thevar,pillai,konar,nadar,Thalith)intha group pathi oru aavana padam(documentary film) vanthuruku....antha pdathini peyar "Villu"... intha padam vantha neram then maavata saathi kalavara samayangalil...
பத்மா அர்விந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக எழுதி இருக்கிறீர்கள். கடந்த சில நாளாய் நான் இதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். காரணம், 9 மாத கர்ப்பிணியான தன் மகளை கடப்பாரைய்யால் தந்தை அடித்து கொன்றிருக்கிறார் தன் மகன் உதவியுடன். காரணம், அவள் திருமணம் செய்து கொண்டது வேறோரு சாதியில் பிறந்தவரை. பிரசவத்திற்காக என்று ஆசையாக (நாடகமாடி)அழைத்துவிட்டு கொன்றிருக்கிறார்கள் அதுவும் அடித்து துன்புறுத்தி. தந்தையின் வாக்குமூலம்: குலப்பெருமை காக்க தன் மகளையே கொன்றவன் என்று வரலாறு பேசும் மகிழ்வு ஒன்றே போதும்". சாதி கொடுமையா எங்கே இருக்கிறது என்பவர்கள் கண்ணில் இது போல செய்திகள் படுவதே இல்லை.
seethag இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் அழகான நடை ஆழியூரான். திருனெல்வெலி போகும்ப்போது இட்லி சாப்பிடவேண்டும் .உங்களிடம் முகவரி வாங்கவேண்டும்.

சரி சாதியைய்ப்பற்றி...என்னைபொறுத்தவரயில் எனக்குள்ளே உள்ள அழுக்கயையும் அடையாளத்தயும் அழிக்கவே எனக்கு ஒரு பிறவி போதாது என்று தோன்றுகிறது சிலனேரங்களில். சிறீயவதில் இருந்த ideology எல்லாம் ஓடிவிட்டதோ என்றூ தோன்றுகிறது....

விடுதலைப்போராட்டம் சாதி இல்லை என்றொரு தோற்றத்தை கொடுத்தது போலவும் . நாமெல்லாம் பண்டிஅகி நாட்கள் முடிண்தவுடன் நம்முடய் பழய பழக்கஙளுக்கு திரும்புவது இல்லயா?அதுபோல்தான் இதுவும்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
@ பத்மா அர்விந்த்.. நீங்கள் சொல்லும் அந்த கொடூரம் நடந்தது சேலம் மாவட்டத்தில். கவுண்டர் இன வெறியரான அப்பாவும், மகனும் சேர்ந்து நடத்திய அந்த வெறித்தாண்டவம், வாசிக்கும்போதே நடுங்க வைத்தது. பல நேரங்களில் எவ்வகையான கோபமாக இருந்தாலும் கோபத்திற்கான வடிகாலாய் ஏதாவது செய்துவிட்டு,பின்பு 'ஏன் நாம் அப்படி கோபப்பட்டோம்..ஏன் அப்படி நடந்துகொண்டோம்..?' என்று தோன்றும். இது இயல்பு. ஆனால், இந்த சேலம் கொலையில் கொஞ்சமும் கருணையின்றி, பெற்ற பிள்ளையை கொன்றபிறகும், சாதிப்பெருமையை நிலைநாட்டிவிட்டதாய் ஸ்டேட்மெண்ட் விடும் அந்த வெறிதான் பயமுறுத்துகிறது.

@ சீதா... பண்டிகை நேர கொண்டாட்டம் போல மேடைகளிலும், எழுத்துக்களிலும் சாதிக்கு எதிரான மனநிலைக்கு வடிகாலாக சில கருத்துக்களை சொல்லிவிட்டு, பின்பு வழமையான உலக வழக்கத்திற்கு திரும்பிவிடும் பொது மனநிலையை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அது சரியானதுதான். அப்படியல்லாமல் முதலில் தன் வீட்டுக்குள்ளிருந்து சாதிய உணர்வுகளை வெளியேற்றுவது ஓரளவுக்கு இதற்கு மாற்றுத்தீர்வாக அமையலாம்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

மிகச்செறிவாக பதிவு.
நான் கண்ட வரையில் எல்லாப் பகுதி கிராமங்களிலும் இப்படிப்பட்ட சாதிய நோக்கு பள்ளிக் குழந்தைகளிடமே கூட இருக்கிறது. போன தலைமுறையில் கிராமத்தைவிட்டு வெளியே வந்து தலைமையாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தாழ்த்தப்பட்ட சாதியல்லாத ஒருவரால், தன் கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் ஊராட்சித் தலைவராக வந்ததை ஏற்ற்க் கொள்ள முடியாமல் பொருமுவதைப் பார்த்திருக்கிறேன்.

திருநெல்வேலிப் பகுதி மக்களுக்கு இந்த அதீத சாதிப் பற்று / சாதி வெறி இருப்பதை கல்லூரியில் படிக்க வந்த சில திருநெல்வேலிப் பகுதி மாணவர்கள் மட்டும் சாதிரீதியில் இணைந்து சுற்றியதைக் கண்டபோது புரிந்து கொள்ள முடிந்தது.

IT துறையில் பணியாற்றும் சில நண்பர்களின் வாகனங்களின் பின்னே அவர்கள் பெயர் சாதிப் பெயரோடு மின்னும்போது, பெயருக்குப் பின்னே சாதிப் பெயரைப் போட்டுக்கொள்ளும் பழக்கமும் போன தலைமுறையோடு ஒழிந்தது என்ற எண்ணமும் காணாமல் போகிறது.
முபாரக் இவ்வாறு கூறியுள்ளார்…
நம் சமூகத்தின் சாதிக்கண்ணிகளைக் காட்டும் அற்புதமான பதிவு ஆழியூரான்!

உங்கள் சிரத்தையான ஆய்வுபூர்வமான எழுத்துக்கு hats off!!

//'நீ ஒரு சாதிய சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்' என்பதை எல்லா கணத்திலும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது இந்த ஊர்.//

பெரும்பாலான ஊர்கள் அப்படித்தான் இருக்கின்றன.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நான் சாதியை எதிர்ப்பவன்.
ஆனால் ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டது போல் நெல்லை சீமையில் எல்லா ப்ற்றுகளும் அதிகம்.
அது தன் அன்று நெல்லை சீமையில் சுதந்திரத்திற்கு போரடியது.
இந்தியன் என்று சோல்வது கூட ஒரு சாதி வெறி போன்று ஒரு வெறியே.


யாதவ திருவிழாக்களில் க்ண்ணன் ம்ற்றும் வீரன் அழகு முத்துக்கோன் மட்டுமே முன்னிலைப்படுத்துவார்கள்

க்ண்ணப்பன் முன்னிலைப்படுத்துவதுக்கூட மிக அரிது.
சுகன்யா படம் என்பது உங்கள் க்ற்பனையே.

ம்ற்ற சாதியினரை போன்று யாதவ மக்கள் கூத்தாடிகளையும் கொலைகாரர்களையும் முன்னிலைபடுத்துவதிலை.....
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
யாதவ திருவிழாக்களில் க்ண்ணன் ம்ற்றும் வீரன் அழகு முத்துக்கோன் மட்டுமே முன்னிலைப்படுத்துவார்கள்

க்ண்ணப்பன் முன்னிலைப்படுத்துவதுக்கூட மிக அரிது.
சுகன்யா படம் என்பது உங்கள் க்ற்பனையே.

ம்ற்ற சாதியினரை போன்று யாதவ மக்கள் கூத்தாடிகளையும் கொலைகாரர்களையும் முன்னிலைபடுத்துவதிலை.....
Devi Priya இவ்வாறு கூறியுள்ளார்…
இவர் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை.வேறு ஜாதி ஆண்மகனை காதலித்ததற்காக அவனை தான் மணப்பேன் என்று சொன்னதர்காக வாழ்க்கை ழுவதும் கன்னியாக வாழ்ந்துவிடு என்று கனவுகள் தகர்க்கப்பட்டு வாழும் சிறு கூட்டு கிளியான நானே சிறந்த எடுத்துக்காட்டு.
Arulappa இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவு அருமை...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்