27/11/07

நினைவின் நிழல்..!
மீனாட்சி மெஸ்ஸுக்கு எப்போது போனாலும் வலது கை தூக்கி சல்யூட் அடிக்கும், ஒல்லியான தேகம் கொண்ட அவரை இரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் சிவப்புகலர் வலை பனியந்தான் அணிவார். பனியனின் மேல்புறம் இரண்டு ஓட்டைகள் நிரந்தரமாக இருக்கும். ''இது ஒரு பனியன்தான் இருக்கா..?'' என்று ஒருமுறை கேட்டதற்கு கை விரல்களை மடக்கிக்காட்டி 'நான்கு' என்றார். நான்கிலுமே ஓட்டை இருப்பது ஆச்சர்யமானதுதான். ஒருவேளை பனியன் வாங்கிய உடனேயே இவரே ஓட்டை போட்டுவிடுவாரோ என்று கூட தோன்றும்.

சாப்பிட்ட இலைகளை ஒரு டிரேயில் எடுப்பதும், மேசையை துடைப்பதும் அவர் வேலை. வாழை இலையின் அடியில் இருக்கும் நார்போன்ற தண்டுப்பகுதியை கைக்கு அடக்கமாக நான்கைந்து வெட்டி வைத்திருப்பார். மேசையில் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து தண்டுப்பகுதியைக்கொண்டு நேர்த்தியாக துடைப்பார். அவர் கவனம் முழுவதும் அமர்ந்திருப்பவர்களின் உடலில் ஒரு துளி கூட சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருக்கும். இடையிடையே சாப்பிட அமர்ந்திருக்கும் நம்மிடம், ''சிவசக்தி தியேட்டர்ல.. மாயாக்கா.. " என்று சொல்லிவிட்டு, 'சூப்பர்' என்பதாக சைகை காட்டுவார். அவரது முக தசைகளில் குதூகலம் பொங்கிவழியும். அவர் கேட்கவில்லை என்றாலும் சாப்பிட வரும் யாரோ ஒருவர் சிவசக்தி தியேட்டரை இழுத்துவிடுவார்கள்.

பத்து நாளைக்கு ஒரு முறை, சாப்பிட்டு முடித்து கை கழுவ குழாய்க்குச் செல்லும்போது கல்லாவில் இருக்கும் ஓனர் பார்த்துவிடாதவாறு நின்றுகொண்டு, ''ஒரு ரூபாய்.." என்று விரலைக் காட்டுவார். ஒரு நாள் கூட ஒரு ரூபாயைத் தாண்டியதில்லை. நாமாக கூடுதலாகக் கொடுத்தால் வாயெல்லாம் சிரிப்பாக பெற்றுக்கொள்வார். அடுத்த நாள் விறைப்பாக சல்யூட் வைப்பார்.

இத்தனை நுணுக்கமாக நினைவு கூற முடிகிற அவரை மெஸ் அல்லாத வேறொரு இடத்தில் நேற்று பார்த்தபோது சட்டென்று நினைவுக்கு வரவில்லை. எத்தனையோ மெனக்கெட்டும் 'எங்கேயோ அடிக்கடி பார்க்கிற முகமாயிற்றே..' என்பதோடு நினைவுகள் தேங்கி நின்றுவிட்டன. ஒருவேளை அவர் என்னை கவனித்து ஒரு சல்யூட் வைத்திருந்தால் நினைவுக்கு வந்திருக்குமோ என்னவோ.. அவரும் கவனிக்கவில்லை. பின் நேற்று இரவு மெஸ்ஸில் பார்த்தபோதுதான் காலையில் பார்த்தது இவரைத்தான் என்று புரிந்தது.

இதுபோல் இவருக்கு மட்டுமில்லை.. இரவு தினமும் நான் போய் நின்றவுடனேயே வாழைப்பழமம் எடுத்துத்தரும் அருணகிரி லாட்ஜ் பெட்டிக்கடைக்காரர், சந்திப்பு பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலையில் இரவு நேர இட்லிகடையில் நான்கு வகை சட்னியுடன் பூப்போன்ற இட்லி விற்கும் பெரியம்மா, எப்போதும் சட்டை காலரின் பின்னால் கர்ச்சிப் மடித்து சொருகியிருக்கும் உக்கிரன்கோட்டை பேருந்து ஓட்டுனர்... என்று பலரை, அவர்களின் பணியிடச் சூழல் தவிர்த்த வேறு சூழ்நிலையில்; வேறு இடங்களில் பார்க்கும்போது சட்டென நினைவுக்கு வருவதில்லை.

சட்னி வாசனையோடும், காலர் கர்ச்சிப்புடனும்தான் அவர்களை மூளை தனக்குள் பதிந்து வைத்திருக்கிறது போலும். இதேபோல மற்றவர்களின் நினைவடுக்குகளில் நான் எவ்வாறான பின்னிணைப்புகளோடு பதிந்திருப்பேன் என்று யோசித்தால் எதுவும் பிடிபடவில்லை.

26/11/07

சாதி சூழ் உலகு- Part II

ந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா... இதெல்லாம் நாடுகள் என்று தெரியும். கப்பலூர், உஞ்சனை, கோனூர்.. போன்ற பெயர்களிலும் 'நாடுகள்' இருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கக்கூடும். ஆனால் உண்மை. தமிழகத்தின் பல பகுதிகள் நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. இது நண்பர்கள் பலருக்குப் பழைய செய்தியாகக்கூட இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும், ஒரு ஆவணப்படுத்தும் முயற்சியாகவுமே இந்தக் கட்டுரை.

ஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், வடுவூர் பகுதியில் அமைந்திருக்கிற கிராமங்கள் அனைத்தும் 'நாடு' என்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்கி வருகின்றன. பதினெட்டு அல்லது அதை ஒட்டிய எண்ணிக்கையில் அமைந்த கிராமங்கள், ஒரு நாடாக கருதப்படுகிறது. உதாரணமாக காசவளநாடு என்ற நாட்டிற்குள், பஞ்சநதிகோட்டை, தெக்கூர், புதூர், கோவிலூர், நெல்லுபட்டு, ஆழிவாய்க்கால், காட்டுக்குறிச்சி, கொல்லாங்கரை, வேங்குராயன்குடிகாடு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, நடுவூர், விளார், கண்டிதம்பட்டு, சாமிப்பட்டி... இப்படி நிறைய கிராமங்கள் உண்டு. இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இன்ன நாட்டுக்கு உட்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தும்விதமாக தங்கள் ஊருக்கு முன்பு, தங்கள் நாட்டுப் பெயரில் முதல் எழுத்தைப் போட்டுக்கொள்வார்கள்(உ-ம்: கா.புதூர்).

இதே போல கீழ்வேங்கை நாடு, சுந்தரவளநாடு, கோனூர் நாடு.. ஏராளமான நாடுகள் உண்டு. இந்த நாடுகளுக்கு, அதற்குள் அமைந்த ஏதாவது ஒரு கிராமம் தலைமை கிராமமாக இருக்கும். அந்த ஊரில் அந்த நாட்டுக்கென்று ஒரு கோயில் இருக்கும். இந்த நாட்டுக்கோயில்களுக்கு வருடம் ஒருமுறை ஏதாவது ஒரு விழா நாளில் திருவிழா நடக்கும். அந்த நாட்டுக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து காவடி, பால்குடம் எடுத்து, பல கிலோமீட்டர் தூரம் தூக்கிவருவார்கள். பக்கத்து ஊர்க்காரனை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்று எல்லா வருடமும், எல்லா ஊர்க்காரர்களும் போட்டி போடுவார்கள். நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மக்களெல்லாம் திருவிழா பார்க்க வருவார்கள். ஒரு வெட்டுக்குத்தாவது இல்லாமல் எந்த திருவிழாவும் முடியாது. இப்போதும் எல்லாம் நடக்கத்தான் செய்கிறது. மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை குறைந்து கார், டூ வீலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.. அவ்வளவே.

'ஒவ்வொரு நாட்டுக்கென்றும் ஒரு நாட்டாமை இருப்பார், ஒரு கிராமத்துப் பிரச்னை அவர்களுக்குள் தீர்க்க முடியாமல் கைமீறி போனதென்றால், அந்த நாட்டாமை தலையிட்டு தீர்த்து வைப்பார், அவரது சொல்தான் இறுதி தீர்ப்பு' என்று ஒரு தலைமுறைக்கு முன்பிருந்த நடைமுறையை, இப்போதும் பெருசுகள் பேசிக்கொள்வார்கள். இம்மாதிரியான நாட்டாமை நடைமுறைகள் இப்போதில்லை எனினும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுடன் திருமண உறவுகள் வைத்துக்கொள்வதில்லை என்பதுபோன்ற விதிகள், 90 % ஏற்பாட்டுத் திருமணங்களில் கடைபிடிக்கத்தான்படுகின்றன.

இந்த நாடு என்ற அமைப்பு, கிராமங்களை ஒன்றிணைக்கும் நிர்வாக அமைப்பாக இருந்தாவெனத் தெரியவில்லை.. ஆனால், சாதியைக் கட்டிக்காக்கும் சாதனமாக இருந்திருக்கிறது/ இருக்கிறது என்பது மட்டும் உண்மை. நாட்டுக்கோயில்களுக்கு திருவிழா சமயத்தில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்துச் செல்வார்கள் என்று பார்த்தோம் இல்லையா..? அதற்காக ஊரெங்கும் ஒரு வீடுவிடாமல் வரி வாங்குவார்கள். குறிப்பிட்ட ரூபாய் அல்லது அதற்கு இணையான அளவில் நெல் என்ற அந்த வரி, எந்த கிராமத்திலும், தலித்துகளிடம் வாங்கப்படுவதில்லை. ஒரு கிராமம் முழுக்க தலித்துகள் வசிக்கிறார்கள் என்றால், அந்த நாட்டுக்கு உட்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையில் அந்த தலித் கிராமங்களை சேர்க்கவே மாட்டார்கள். உதாரணமாக தெற்கு நத்தம், நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் முழுக்கவே வசிப்பது தலித்துகள்தான். 'காசவளநாட்டு' கணக்கில் அவற்றை காண முடியாது.

நாடு என்னும் கட்டுமானம் அமைந்திருக்கும் கிராமங்களில் பெரும்பான்மையாக இருப்பது கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்கள், தங்கள் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எல்லா காலங்களிலும் இந்த அமைப்பை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பழைய சட்டத்திட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டாலும் தலித்துகளுக்கு எதிரான சமயங்களில் மட்டும் எல்லோருக்கும் சட்டென 'நாட்டு'ப்பற்று வந்துவிடுகிறது.

ஏதாவது ஒரு கிராமத்தில் தலித்துகளுக்கும், கள்ளர் சாதியினருக்கும் பிரச்னை என்று வந்துவிட்டால் முதலில் அவர்கள் செய்வது, 'இனிமேல் தலித்துகளுக்கு உள்ளூரில் வேலை கிடையாது' என்று தடை விதிப்பதுதான். வேறு வழியின்றி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குப்போனால் அங்கும்போய், 'ஒரு நாட்டுக்காரன்.. நீங்களே இப்படி செய்யலாமா..?' என்று 'நியாயம்' கேட்டு, அந்த நாட்டுக்குட்பட்ட எந்த கிராமங்களிலும் அவர்களுக்கு வேலை கிடைக்காதபடி செய்தால்தான் அவர்களுக்கு நிம்மதி. பொருளாதார ரீதியாக கள்ளர்களின் வயல்களில் விவசாயக்கூலிகளாக இருக்கும் தலித்துகளால் வேறெதுவும் செய்ய இயலாது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றியிருக்கும் பகுதியில் இந்த நாட்டமைப்பு இப்போதும் முழு அளவில் உயிரோடு இருக்கிறது. உஞ்சனை நாடு, கப்பலூர் நாடு, அஞ்சுக்கோட்டை நாடு, செம்பொன்மாற்றி நாடு, இரவுச்சேரி நாடு.. என்று இந்தப்பகுதி முழுக்கவே நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. தஞ்சையைப் போலல்லாமல் இங்கு, பதினேழரை கிராமங்கள், இருபத்தி இரண்டரை கிராமங்கள் என்று விநோதமான நில அமைப்பில் நாடுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்கான தலைவரையும் 'நாட்டு அம்பலம்' என்றழைக்கிறார்கள். திருவாடனை தொகுதியின் நடப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராமசாமிதான் இப்போதைய கப்பலூர் நாட்டுக்கான நாட்டம்பலம் (இதற்கு முன்பு இவரது அப்பா நாட்டம்பலமாக இருந்தார்). அந்த நாட்டுக்குட்பட்ட கிராமங்களின் பிரச்னைகளுக்கு நாட்டம்பலம் சொல்வதே இறுதி தீர்ப்பு. அதை மீறினால் ஊரைவிட்டுத் தள்ளி வைப்பது மாதிரியான நடைமுறைகள் இப்போதும் உயிருடன் இருக்கின்றன.

கண்டதேவி தேரோட்டத்தின்போது தலித்துகளை வடம் பிடிக்கக்கூடாது என்று ஏழரை பண்ணும் கண்டதேவி கிராமம் அமைந்திருப்பது உஞ்சனை நாட்டுக்குள். அந்த சமயத்திலெல்லாம் உஞ்சனை நாட்டு சார்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது இந்த நாட்டம்பலம்தான். பெரும்பான்மை கள்ளர்களும், தலித்துகளும், உடையார்களும் வசிக்கும் இந்த தேவக்கோட்டை வட்டார நாட்டு அமைப்புகளின் நாட்டம்பலமாக கள்ளர் சாதியினர் மட்டுமே வர இயலும்.

இந்த நாட்டமைப்பு செய்த சாதி காக்கும் பணியை தென்பகுதியில் பழைய காலத்தில் செய்தவர்கள் பாளையக்காரர்களும், ஜமீன்களும். இவை இரண்டும் வரி வசூலுக்காக ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றாலும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதி காக்கும் பணியையும் செய்து வந்திருக்கின்றன. கடம்பூர் ஜமீன், நெற்கட்டும்செவல் ஜமீன், சுரண்டை ஜமீன், வீரகேரளம் புதூர் ஜமீன், ஊத்துமலை ஜமீன் (இவை அனைத்திலும் அதிகாரம் செலுத்தியவர்கள் தேவர்கள்..) என்பதாக தெற்கே இருக்கும் இவற்றிற்கு, நாட்டமைப்பு அளவுக்கு நடைமுறையில் இப்போது உயிரில்லை. பெயருக்கு மட்டும் ஜமீன் குடும்பங்கள் இருக்கின்றன. தேனி மாவட்டத்தின் கண்டமனூர் ஜமீனும், பழநிக்கு அருகேயிருக்கும் நெய்காரப்பட்டி ஜமீனும் கிட்டத்தட்ட இல்லாதொழிந்துவிட்டன.

13/11/07

சாதி சூழ் உலகு..!

திருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் சிவந்திபட்டி என்னும் கிராமம் உண்டு. மொத்தம் ஆறு பேருந்துகள், ஒரு நாளைக்கு 25 தடவை திருநெல்வேலியிலிருந்து சிவந்திபட்டிக்கு வந்துபோயின. அந்த அளவுக்கு ஆள் நடமாட்டம் உள்ள கிராமம். அப்படிப்பட்ட ஊருக்குள் கடந்த பத்து வருடங்களாக எந்த பேருந்தும் செல்லவில்லை. அரசு உத்தரவின் பேரில் அனைத்துப் பேருந்துகளும் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டன. பத்து வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில மாதங்களாய் மறுபடியும் பேருந்துகள் ஊருக்குள் போய்வரத் தொடங்கியுள்ளன.

ஏன்..?

சிவந்திபட்டிக்குள் நுழைந்தால் முதலில் வருவது தேவர்கள் வசிக்கும் பகுதி. இதற்கு அடுத்து வருவது தலித்துகள் வசிக்கும் பகுதி. பேருந்துகள் அனைத்தும் தலித்துகள் தெருவரை சென்று திரும்பும். இதனால், அங்கு ஏறுபவர்களுக்கு அமர்வதற்கான வசதி சுலபத்தில் கிடைக்கும். அதற்கு அடுத்து வரும் தேவர் தெருவில் ஆட்கள் ஏறும்போது, சீட் கிடைக்கவில்லை என்றால் நின்றுகொண்டுதான் வர வேண்டும். 'ஒரு பள்ளப்பய உட்கார்ந்து வருவான். அவனுக்கு முன்னாடி நான் நின்னுகிட்டு வரணுமா..?' என்று தேவர்களுக்குக் கடுப்பு. இதனால், பேருந்து ஊருக்குள் நுழையும்போதே ஜன்னல் வழியாக தேங்காய்ப்பூ துண்டைத் தூக்கிப்போட்டு விடுவார்கள். அந்தத் துண்டைப் பார்த்ததும், 'யாரோ ஒரு பாண்டியன் (தேவர்) இடம் பிடித்து வைத்திருக்கிறார்' என்று புரிந்துகொண்டு அதில் தலித்துகள் உட்காரக்கூடாது.

இந்த நெடுநாளைய பிரச்னை உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருந்தது. தென் மாவட்டங்களில் சாதிப் பிரச்னை பற்றியெரிந்த சமயத்தில் சிவந்திபட்டியும் பற்றிக்கொண்டது. 'பேருந்தில் எங்க பொண்ணுங்களை கிண்டல் செய்கிறார்கள்' என்று தேவர்கள் தரப்பில் கிளப்பப்பட்ட பிரச்னை, மெல்ல மெல்ல பெரிதானது. தலித்துகள் தரப்பில் மூவரும், தேவர்கள் தரப்பில் ஒருவருமாக மொத்தம் நான்கு உயிர்கள் அரிவாளுக்கு பலியாயின. அதைத் தொடர்ந்துதான் பேருந்தை ஊருக்கு வெளியிலேயே நிறுத்த உத்தரவிட்டது அரசு. பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போது சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டு, 'பேருந்துகள் முன்புபோலவே தலித்துகள் தெரு வரைக்கும் சென்று திரும்பும். யாரும் துண்டுபோட்டு இடம் பிடிக்கக்கூடாது' என்ற நிபந்தணையுடன் மறுபடியும் இயக்கப்படுகின்றன.

வாசிக்கும் நீங்கள் நகர எல்லைக்குள் பிறந்து வளர்ந்தவர் எனில், சாதியின் இத்தகைய வீச்சு, உங்களுக்கு வியப்பூட்டலாம். 'பஸ்ஸுல உட்கார்றதுலக் கூடவா சாதி பார்ப்பாங்க..?' என்று உங்கள் மூளை கேள்வி எழுப்பலாம். எல்லா சாதிய உணர்வுகளும் நிரம்பிய ஒரு தஞ்சைப்பகுதி கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கே நெல்லை மண்ணில் நிரம்பி வழியும் சாதி, ஆரம்பத்தில் திகைப்பூட்டுவதாக இருந்தது.

ங்கு கிட்டத்தட்ட யாவரிடத்திலும் சாதி நீக்கமற நிறைந்திருக்கிறது. தன் சொந்த சாதியினர் நடத்தும் கடையில் பொருள் வாங்குவது, தன் சாதியைச் சேர்ந்த வக்கீலிடம் வழக்கு நடத்துவது என்று சாத்தியப்படும் இடங்கள் அனைத்திலும் சாதியை முன்னிலைப்படுத்துகின்றனர். திருமணம் போன்ற விழாக்களுக்கு ஒட்டப்படும் வாழ்த்துப் போஸ்டர்களிலும் சாதியே துருத்திக்கொண்டு நிற்கும். 'தேவர் வீட்டுக் கல்யாணம்', 'நாடார் கோட்டையில் கொடைவிழா' என்றுதான் அந்த போஸ்டரின் வாசகங்கள் சொல்லும். அத்தகையை போஸ்டர்களில் தவறாமல் ஏதாவது ஒரு நடிகரின் புகைப்படம் இடம் பிடித்திருக்கும். விக்ரம், பிரசாந்த், கார்த்திக் போன்றவர்களின் புகைப்படங்களை இம்மாதிரியான போஸ்டர்களில் பார்த்தபோது முதலில் ஒன்றும் தோன்றவில்லை. பின்னொரு நாளில் சந்தேகம் வந்து விசாரித்தபோதுதான், ஒவ்வொருவரும் தங்கள் சாதியைச் சேர்ந்த நடிகரின் புகைப்படத்தைப் போட்டுக்கொள்ளும் விஷயமே தெரிந்தது.

முதலில் போஸ்டரில் தங்கள் சாதி நடிகரின் புகைப்படம் போடும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் தேவர்கள். முத்துராமன், கார்த்திக் ஆகியவர்களின் புகைப்படங்களோடு தொடங்கிய இது, பிற்பாடு பிரபு, அருண்பாண்டியன் என்று வளர்ந்து, இப்போது எஸ்.ஜே.சூர்யாவின் புகைப்படம் கூட சில இடங்களில் எட்டிப்பார்க்கின்றன. தேவர் மகன், விருமாண்டி ஆகிய படங்களில் நடித்ததால் கமல்ஹாசனையும் கூட சில நேரங்களில் தேவராக்கிவிடுகின்றனர். இதன்பிறகு நாடார்கள் தங்களின் போஸ்டர்களில் சரத்குமாரை கொண்டுவந்தார்கள்.

தென் மாவட்ட கலவரத்திற்குப் பிறகு தலித்துகளின் போஸ்டர்களில் பிரசாந்த் சிரிக்கத் தொடங்கினார். பிற்பாடு அதில் விக்ரமும் இணைந்துகொண்டார். இதேபோல ரெட்டியார்கள் நெப்போலியனையும், பிள்ளைமார்கள் இயக்குனர் விக்ரமனையும், விஸ்வகர்மா இனத்தவர்கள் தியாகராஜ பாகவதர், பார்த்திபன் மற்றும் கவிஞர் பழனிபாரதியையும், நாயக்கர்கள் விஜயகாந்த்தையும் தங்களின் போஸ்டர்களில் கொண்டு வந்தார்கள். இதில் பெரிய காமெடி ஒன்றும் நடந்தது. முன்னால் அ.தி.மு.க. அமைச்சரும், இப்போது தி.மு.க.வில் இருப்பவருமான மு.கண்ணப்பன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 'நடிகை சுகன்யாவுக்கும், கண்ணப்பனுக்கும் தொடர்பு' என்று பத்திரிகைகள் அனைத்தும் கிசுகிசு எழுதின. உடனே தென் மாவட்ட யாதவர்கள், தங்களின் விழாவுக்கான போஸ்டர்களில் சுகன்யாவின் படத்தை அச்சிட்டு மகிழ்ந்தார்கள். (உண்மையில் சுகன்யா என்ன சாதி..?)

ங்கு அனைத்து சாதியினரும் தங்களுக்கான இருப்பை உறுதிசெய்துகொண்டே இருக்கின்றனர். அது பெரும்பான்மையோ, சிறுபான்மையோ.. தான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவும், மற்றவனை விட நான் ஒன்றும் சளைத்தவனில்லை என்று காட்டவும் எல்லோரும் பிரயத்தனப்படுகின்றனர். 'பார்த்துக்கடே.. எங்களுக்கும் ஆள் இருக்கு..' என்று சுற்றத்துக்கு உணர்த்தும் பொருட்டே நடிகர்களை போஸ்டர்களில் சிரிக்க விடுகின்றனர்.

இது போஸ்டர்களோடு நிற்பதில்லை॥ சினிமா தியேட்டர்களின் கழிப்பறை சுவர்களில் 'நாடார் குல சிங்கம்' என்று கரிக்கட்டையால் கிறுக்கி வைக்கும் அளவுக்கு முத்திப்போகிறது। நெல்லைக்கு வந்துபோகும் ரயில்களின் கழிப்பறைகளிலும் இந்த வீர வசனம் காணக்கிடைக்கிறது. பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் படிந்திருக்கும் தூசி படலத்தில் எழுதி வைக்கிறார்கள் 'வீர மறவன்' என்று. தென்பகுதி கிராமங்கள் பலவற்றில் உள்ளே நுழைந்தாலே, 'தேவர் கோட்டை உங்களை வரவேற்கிறது' என்றோ, 'தேவேந்திரன் கோட்டை உங்களை வரவேற்கிறது' என்றோதான் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஆசிரியரை மாணவனே கொன்றுவிட்டான் என்றொரு செய்திக்காக ஏழாயிரம்பண்ணை என்ற ஊருக்குப் போயிருந்தேன். அந்த மாணவனுடன் படிக்கும் இன்னொருவனை விசாரித்தபோது கொஞ்சமும் தயக்கமின்றி அந்த பதிமூன்று வயது சிறுவன் சொல்கிறான்.. ''வாத்தியாரும் நாடாக்கமாரு.. இவனும் நாடாக்கமாரு.. அப்படி இருந்தும் குத்திபுட்டான்ணே..". மிக இயல்பாக அந்த சிறுவன் சொன்ன கணத்தில், எந்த அளவுக்கு சாதியின் தாக்கம் நிறைந்திருக்கிறது என்பது புரிந்தது. மெத்தப்படித்த பொறியியல் நண்பன் ஒருவன், தான் ஏன் விஜய் ரசிகராக இல்லை.. ஏன் அஜித் ரசிகராக இருக்கிறேன்..? என்பதற்கு சொன்ன காரணம், 'விஜய் ஒரு தலித்'.

சாதி என்பது நெல்லைக்கு மட்டுமான பிரச்னை இல்லைதான். ஆனால், இங்குதான் அது இவ்வளவு வெளிப்படையாக எல்லா செய்கைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எனது ஒரு வருட நெல்லை அனுபவத்தில் நானறிந்த வகையில் சொல்ல வேண்டுமானால், இங்கு அனைத்து விதமான பற்றுகளும் அதிகமாக இருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. போன்று சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் இங்குதான் அதிகம். புதுமைபித்தன், வல்லிக்கண்ணன், தி.க.சி, வண்ணதாசன், கி.ரா., கலாப்ரியா என்று இலக்கியவாதிகளின் எண்ணிக்கையும் நீண்டுகிடக்கிறது.

'பக்கத்தில் இருக்கும் வரை நாம் எதையும் மதிப்பதில்லை' என்ற பொது நியதிக்கு எதிராக, தன் மண் மீதும், தாமிரபரணி நதி மீதும் இந்த மக்கள் வைத்திருக்கும் நேசம் ஆச்சர்யம் தரக்கூடியது. குடும்ப உறவுகளை நேசிப்பதும், குடும்பத்தோடு நெருக்கமாக இருப்பதும் ஒப்பீட்டளவில் இங்கு அதிகம். வார்த்தைகளாலும், சூழ்நிலைகளாலும் ஏற்படும் கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாக வாழாமல் சட்டென்று உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுகின்றனர். தென் மாவட்ட அடிதடிகளுக்குப் பின்னுள்ளது இந்த வகை உணர்ச்சிகள்தான் என்று நினைக்கிறேன். இதே அடிப்படையில்தான், தன் சொந்த சாதி மீதான பற்றையும் மிக அதிகமாக வெளிப்படுத்துகின்றனர்.

'நீ ஒரு சாதிய சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்' என்பதை எல்லா கணத்திலும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது இந்த ஊர்.