"மண் பூனை எலியைப் பிடிக்காது" -தி.க.சி.



சுடலை மாடன் கோயில் தெரு... திருநெல்வேலி-டவுண் பகுதியில் இருக்கும் இந்த தெரு, எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு பரிட்சயமானதாகவே இருக்கும். குறுகலான தெருவின் கடைசிக்கு முன்பாகவுள்ள, இடது வாசல் வீட்டுக்குள் நுழைந்தால் மெல்லிய தேகத்தோடு வரவேற்பார் தி.க.சிவசங்கரன்.. சுருக்கமாக தி.க.சி. தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முக்கிய பங்காற்றிய இவருக்கு இப்போது 85 வயது. சில மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டபிறகு, புத்தகங்களும் இவரும் மட்டுமே வசிக்கின்றனர் அவ்வீட்டில்.

எப்போது போனாலும் வாசல் வரைக்கும் எழுந்து வந்து உற்சாகமாக வரவேற்கும் பண்புடையவர். நாற்காலியை கொடுத்து அமரச் சொல்லிவிட்டு பல்செட் எடுத்து அணிந்துகொண்டுதான் அடுத்த வார்த்தைப் பேசுவார். அவரைப்பற்றி நாம் சொல்ல எவ்வளவோ இருந்தாலும் அவர் சொல்வதே அதிகமாக இருக்கும். பேசவும், எழுதவும் இப்போதும் அலுக்காத மனிதர்.

எங்கிருந்தோ அஞ்சலில் வரும் சிற்றிதழ்களை முழுமையாகப் படித்துவிட்டு, இரண்டு வரியாகவது தட்டிக்கொடுத்து கடிதம் எழுதிவிடுகிறார். தீவிர இலக்கிய இதழ்கள் முதல், தினமணி வரைக்கும் இவரது விமர்சனங்களைத் தாங்கிய கடிதங்கள் இப்போதும் சென்றுகொண்டிருக்கின்றன. உள்ளூரிலேயே இருக்கும் எனக்கே ஒரு தடவைக் கடிதம் போட்டார். வயது காரணமாக கை நடுக்கம் வந்துவிட்ட போதிலும் நண்பர்களின் உதவியோடு கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

'தி.க.சி.க்கு ரேஷன் கார்டை அனுப்பி வச்சாலும் விமர்சனம் எழுதிடுவாரு..' என்று எதிர்கருத்து சொல்வோரும் உண்டு. "இவ்வளவு சிரமப்பட்டு எழுதத்தான் வேண்டுமா..?" என்று கேட்டால், "ரோட்டுல நடந்துபோறோம். எதிர்ல வர்ற ஒருத்தர் வணக்கம் சொல்றார். மரியாதைக்குத் திருப்பி வணக்கம் சொல்லனுமா.. வேண்டாமா..? அவர் நண்பரா, விரோதியான்னு அப்புறமா பார்த்துக்கலாம்.." என்கிறார் சலனமில்லாமல்.

தொழிற்சங்கவாதி, பத்திரிகையாளர், விமர்சகர் என்று பல முகங்கள் இவருக்குண்டு. 65-90 வரைக்கும் சோவியத் நாடு செய்தித்துறையில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய இவர், ஜீவாவின் மறைவுக்குப் பின்னர் 65-72 வரைக்குமுள்ள எட்டாண்டு காலம் நூறு தாமரை இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். ஆனால் அவருடன் பேசும்போது, இலக்கியத்தை விட சமூகத்தைப்பற்றிய சிந்தனைப்போக்கே அதிகம் வெளிப்படுகிறது.



"1995-க்குப் பிறகு இங்கு சகலமும் சந்தைமயமாகிவிட்டது. எல்லோரையும் தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்க வைக்கிற இயந்திரங்களாக மாற்றி வைத்திருக்கிறோம். சுய முன்னேற்ற நூல்களின் அதிகமான விற்பனை, அந்தக் காலகட்டத்திலிருந்து தொடங்கியதுதான். பிற்பாடு இந்த வேலையை வெகுஜன பத்திரிகைகள் செய்ய ஆரம்பித்துவிட்டன.

தன்னைப்பற்றி சிந்திப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால், சமூகத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, தன் நலன் பற்றி மட்டும் சிந்திப்பதுதான் ஆபத்தானது.'சமூகத்தில் நடப்பதைக் கண்டுகொள்ளாதே.. உன்னைப்பற்றி மட்டுமே சிந்தி..' என்ற அரசியல் இதற்குப் பின்னால் இருக்கிறது. இதுதான் ஏகாதிபத்திய சக்திகளின் தந்திரம். முதலில் மக்களை மனநிலை ரீதியாகக் மழுங்கடித்துவிடும் உத்தி. உண்மையான பூனையாக இருந்தால்தானே எலியைப் பிடிக்கும்..? எல்லோரையும் மண் பூனைகளாக மாற்றிவிட்டால் பிரச்னையில்லைதானே..?

ஆனால், ஒவ்வொரு வருடமும் சென்னைப் புத்தக கண்காட்சியில் சே குவேரா பற்றிய புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இப்போது சேவின் உருவம் பொறித்த சட்டைகளும் விற்கப்படுகின்றன. வெகுஜன பத்திரிகைகளும், சே குவேராவைப்பற்றி எழுதுகின்றன. இதை மேம்போக்காகப் புரிந்துகொண்டு, சே-வை எல்லோரும் ஏற்றுக்கொண்டுவிட்டதாக நினைத்துவிடக்கூடாது. அப்படியிருந்தால் இந்நேரம் புரட்சி நடந்து முடிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் உள்ளுக்குள் இருக்கும் கோப உணர்வை சே என்ற ஒரு icon-ல் நிறுத்தி வைக்கிறார்கள். இது உயர்ந்த லட்சியங்களுக்காகப் போராடியவர்களை கொள்கைகளற்ற icon-களாக மாற்றும் போக்கு. பில்கேட்ஸ் வரலாறு எழுதப்படுவது போல சேவின் வரலாறும் எழுதப்படுகிறது. ஹாரிபாட்டர் போல சே ஒரு மார்க்கெட்டிங் யுத்தி. Che has become a brand name. ஆனாலும் இந்தப்போக்கு இப்படியே நீடிக்காது. ஒரு தேக்கமும், அதன் பின்னான மாற்றமும் தவிர்க்க முடியாதது.." என்கிறார் தி.க.சி.

அவரது விமர்சனங்களில் சில இங்கே..

வல்லிக்கண்ணன் பற்றி: " 'கதை எழுதுகிறவன் எதையும் எப்படியும் எழுதலாம்;ஆனால், சொல்கிற விஷயத்தை சுவையாக சொல்ல கற்றிருக்க வேண்டும். அதுதான் முக்கியம்' என்கிறார் வ.க. இது 'கலை கலைக்காகவே' என்ற செல்லரித்துப்போன கொள்கையின் மறுபதிப்பாகும். 'எதை எப்படி எழுத வேண்டும்' என்பதோடு 'யாருக்காக எழுத வேண்டும்..?' என்ற கேள்வியும் முக்கியமானதாகும்"

இன்றைய ஜெயகாந்தன் பற்றி: "மடமைவாதிகள் மத்தியில் வீழ்ந்துவிட்ட ஒரு நல்ல எழுத்தாளர்.."

மௌனி பற்றி: "மௌனியின் கதைகளில், மனமுறிவும், மரணமும்தான் முக்கிய அம்சங்கள்.வேதனையில் தோய்ந்த எண்ணங்களும்,நினைவுகளும், மன சஞ்சலமும்,ஏக்கமும், அச்சமும், வெறுப்பும் அவர் கதைகளில் நிறைந்திருக்கின்றன. நம்பிக்கை வறட்சியில் முக்குளித்து, சித்த பிரம்மையில் மூழ்கி, ஆறிய மனப்புண்ணை கீறிவிட்டு அழுதுகொண்டு, காதல் முறிவால் ஏற்பட்ட வடுக்களின் வலியை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து சோகப்பெருமூச்சு விட்டுக்கொண்டு.. மௌனியின் காதாப்பாத்திரங்கள் இப்படிப்பட்டவர்களே.மௌனியின் பரம்பரை பாரதிக்கு முந்தைய சித்தர்கள் பரம்பரை. 'மெய்ஞானம்' வேண்டி 'திருமந்திரம்' எழுதிய திருமூலர் பரம்பரை.."

கல்கி பற்றி: "கல்வி ஒரு ரொமாண்டிக் ரைட்டர்தான். மரபுவாதிதான். பொழுதுபோக்கு இலக்கியப்பார்வைக் கொண்டவர்தான். ஆனால், பத்திரிகைத்துறையில் அவர் தொடங்கிவைத்த மரபு மிக உயர்ந்தது. இதைக் கருத்தில் கொண்டு, கல்கி பற்றிய முழுமையான விமர்சனம் இன்னும் வரவில்லை.."

புதுமைப்பித்தன் பற்றி: "புதுமைப்பித்தனுக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஆனால், வீர வணக்கம் செலுத்த விரும்பவில்லை. 'புதுமைப்பித்தன் தமிழ் சிறுகதை எழுத்தாளர்களிலேயே தலைசிறந்தவர் என்று இங்கு சிலர் அவருக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர். புதுமைப்பித்தனைப் புறக்கணிப்பது எவ்வளவு தவறோ, அதே தவறு அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதும். இரண்டும் உண்மையை மறந்த சாமியாட்டம்; வெறியாட்டம். புதுமைப்பித்தன் சாகாவரம் பெற்ற சிறுகதைகளை எழுதியிருக்கிறார் என்றால், ஏனையோரும் அவ்விதம் எழுதியிருக்கிறார்கள்.."



பி.கு: இவர் எழுத்தாளர் வண்ணதாசனின்(கல்யாண்ஜி), தந்தை என்பது தெரியும்தானே..

கருத்துகள்

ஆடுமாடு இவ்வாறு கூறியுள்ளார்…
தி.க.சி என்கிற மாமனிதரை ஒரு சிறுவட்டத்துக்குள் அடக்கி விடமுடியாது. என் முதல் கதை வெளியான போது முகம் தெரியாத( பக்கத்து ஊர்க்காரன் என்பதை தவிர-இதையும் அந்தக் கதையின் மூலமாக அறிந்துகொண்டு) அவர் எழுதிய கடிதம் இன்னும் என் நெஞ்சில் பத்திரமாக இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரை பற்றிய மகிழ்ச்சி எனக்கு. எழுதியதற்காக உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
ஆடுமாடு
http://aadumaadu.blogspot.com
மஞ்சூர் ராசா இவ்வாறு கூறியுள்ளார்…
திகசியைப்பற்றிய இந்த பதிவின் மூலம் அவரை பற்றியும் இந்த வயதிலும் அதே ஆர்வத்தோடு இருக்கும் அவரது சமூக அக்கறையையும் தெரிந்துக்கொள்ளமுடிந்தது.

நல்லதொரு பதிவு. நன்றி.
கையேடு இவ்வாறு கூறியுள்ளார்…
மீண்டுமொரு நல்ல பதிவு திரு அழியூரான்.
ஜீவி இவ்வாறு கூறியுள்ளார்…
"ஆழி" என்கிற பெயரில், அருமையாக
பத்திரிகைகளில் தத்ரூபப் படங்கள்
போடுவாரே, அவர் உங்கள் ஊர்காரரா,
ஆழியூரான்? இதை ஆரம்பத்திலேயே
கேட்க வேண்டுமென எண்ணீயிருந்தேன். ஆனால், நீங்கள் வேறு விஷயங்களைப் பற்றி பதிவுகள்
போட்டதால், கேட்கவில்லை.
இப்பொழுது, நீங்கள், திரு.தி.க.சி-
பற்றி எழுதியதும்,பத்திரிகைகள் தொடர்பான பழைய நினைவுகள்
கிளர்ந்து, 'ஆழி'பற்றி கேட்க சந்தர்பம் வாய்த்தது. பெரியவர்
தி.க.சி.யின் விமர்சனங்கள் பிரசித்திப் பெற்றவை. புதுசாக ஒரு
சிற்றேடு ஆரம்பித்தால், தி.க.சி.க்கும்
ஒரு பிரதி அனுப்புவதை ஒரு கடமையாகக் கருதிய காலம் உண்டு.
அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தால்,
அந்த ஏட்டுக்கு ஒரு ஆசியாக அதை எண்ணியவரும் உண்டு.
சில எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பற்றி தி.க்.சி. அவர்கள் இப்பொழுது
சொல்லியிருக்கும் கருத்துக்களைப்
பார்த்தால், ஒரு விமர்சகர் எழுதியவரின் எழுத்துக்களைப் பற்றி
விமரிசனம் செய்யாமல், தான் கொண்டிருக்கும் பார்வையில் அவற்றை விமர்சனம் செய்வதாகத்
தோன்றுகிறது. அப்படியானால், விமர்சகர்களின் பார்வை மாறின்,
அதற்கேற்ப அந்த எழுத்தாளர்களின்
எழுத்துக்களைப் பற்றிய விமரிசனமும் மாறுமே?..
இது இடதுசாரி விமர்சகர்களின் தவிர்க்க முடியாதக் குறையாகவே
எனக்குத் தெரிகிறது.
மற்றபடி, தி.க.சி. மாதிரி, முழுநேரமும் புத்தக விமர்சனங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள், தமிழகத்தில் வெகு சிலரே.
அந்த வெகுசிலரில், முக்கியமானவர் தி.க.சி. என்பது உண்மை.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
திரு. ஜீவி.,
நீங்கள் சொல்லியிருக்கும் ஆழி என் ஊர்க்காரர் அல்ல. கருத்துக்கு நன்றி..!
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
தி.க.சி யின் எழுத்தாளர்கள் பற்றிய இரத்தினச் சுருக்கமான விமர்சனம் ரசித்தேன்.
நல்ல பதிவு
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
தன்னைப்பற்றி சிந்திப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால், சமூகத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, தன் நலன் பற்றி மட்டும் சிந்திப்பதுதான் ஆபத்தானது// பிரமாதம்

ஆழி, இப்பதிவில் இடம்பெற்ற புகைப்படங்கள் மிக அசத்தல். வாழ்த்துக்கள்
கதிரவன் க. இவ்வாறு கூறியுள்ளார்…
அறிதோறும் அறியாமை கண்டற்றால் என்னும் வரிகள் எத்துணை வீச்சுகொண்டவை. தி.க.சி. பற்றி தெரியும். கல்யாண்ஜி பற்றி தெரியும். கல்யாண்ஜி தி.க.சி.யின் மகன் என்பதோ தி.க.சி. கல்யாண்ஜியின் தந்தை என்பதோ எனக்குத் தெரியாது. அண்மையில் மறைந்த கவிஞர் திருவேந்தி அவர்களுக்கு உயிர்எழுத்து எழுதியிருக்கும் அஞ்சலியில் அறியமுடிந்தது. கவிஞர் திருவேந்தி கல்யாண்ஜியின் மரியாதைக்குரிய அண்ணன்.
ஒரு விமர்சகராய் படைப்பாளராய் வெற்றிபெறும் பலரும் தன் குடும்பத்தில் தோற்றுப்போகின்றனர். தன் வாரிசுகளில் இருவரை தமிழிலக்கியத்திற்கு அழைத்துவந்திருக்கும் தி.க.சியின் ஆளுமை போற்றத்தக்கது.சான்றோனாக்கிய தந்தை.
கதிரவன் க. இவ்வாறு கூறியுள்ளார்…
அறிதோறும் அறியாமை கண்டுற்றேன். அண்மையில் கவிஞர் திருவேந்திக்கு உயிர் எழுத்து வெளியிட்ட அஞ்சலியில் தான் அவர் கல்யாண்ஜியின் மதிப்புக்குரிய அண்ணன் என்பதும் இவர்கள் இருவரும் தி.க.சி.யின் வாரிசுகள் என்பதும் தெரியவந்தது. படைப்பிலக்கியவாதிகள் பலரும் தங்கள் வாரிசுகளின் துவேசத்துக்கு ஆளாக நேர்கையில் தன் வாரிசுகள் இருவரை இலக்கியத்தளத்துக்கு அழைத்துவந்த, சான்றோனாக்கிய தந்தை தி.க.சி. கண்டு ஒரு தந்தையாய்ப் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்