வாழ்க்கை என்னும் பிசாசு..!



டிக்கட்டுக்களை உயர்வின் அடையாளமாக உருவகப்படுத்துகிறோம் நாம். ஆனால் இவர்களுக்கோ படிக்கட்டுகள்தான் பயமுறுத்தும் பிசாசுகள். "இந்த உலகில் எங்கு திரும்பினாலும் படிக்கட்டுகளாக இருக்கின்றன. ஒவ்வொரு படிக்கட்டைப் பார்க்கும்போதும் நடுக்கமாக இருக்கிறது.." வலுவிழந்த குரலில் பேசும் இவர்கள் ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்றவர்கள். சராசரி உடல் ஊனமுற்றவர்களின் வேதனையை விட இவர்களின் தினசரி வாழ்க்கை ரணம் மிகுந்தது.

இந்த பூமிக்கு வாழ வந்த நாள்முதலாய் சிறு, சிறு செய்கைகளுக்கும் இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது இவர்களுக்கு. காலை எழுந்ததும் சிறுநீர் கழிப்பதில் தொடங்கும் சங்கடம் இரவு படுக்கைக்குப் போகும் வரையிலும் விடுவதில்லை. இதற்கெல்லாம் மெல்ல, மெல்ல மனதளவிலும், உடலளவிலும் பழகிவிடுகிறார்கள் என்றாலும், ஒவ்வொருமுறை ஊனத்தின் அசௌகர்யத்தை அனுபவிக்கும்போதும் அடையும் வேதனையை அவர்களால் மட்டுமே முழு வீச்சுடன் உணர முடியும். அப்படியான ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்ற நண்பர்கள், மனம் விட்டு பகிர்ந்துகொண்ட விஷயங்களை இங்கு அப்படியே தருகிறேன்.

1.இறைவன் எங்களை இப்படி படைத்துவிட்டாலும், எங்களுக்கும் தெய்வ பக்தி உண்டு. ஆனால் பெரும்பாலான கோயில்களிலிருக்கும் உயர, உயரமான படிகள் எங்களை மிரட்டுகின்றன. அதையும் தாண்டி உள்ளே சென்றால், கைகளுக்கு செருப்பணிந்து(கையுறை)செல்ல முடியாது. எங்களுக்கோ, கைகளுக்கு செருப்பில்லாமல் நகர முடியாது. இன்னொருபுறம் எங்களிலேயே பலர் கைகளுக்கு அணிய செருப்பு வாங்க வசதியின்றியும், செருப்பணிய முடியாதபடியான கோணலான கை, கால் அமைப்புடன் இருக்கின்றனர். அவர்களுக்கு வெறும், கை காலுடன் நகர்ந்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

2.அரசு, ரயில்களில் உடல் ஊனமுற்றவர்களுக்கென்று சிறப்பு பெட்டிகளை இணைத்திருக்கிறது. அந்த பெட்டிகளில் வெஸ்டன் டாய்லெட் வைத்திருக்கின்றனர். அது சாதாரண உடல் ஊனமுற்றவர்களுக்குப் பயன்படும். எங்களை மாதிரியானவர்களால் வெஸ்டர் டாய்லெட்டை பயன்படுத்தவே முடியாது. எங்களுக்கு சாதாரண பாம்பே டாய்லெட்தான் ஒரே வழி. இதனால் எங்களை மாதிரியான ஊர்ந்து செல்பவர்கள் ரயிலில் செல்வதைத் தவிர்க்கிறோம் அல்லது பயணம் முடியும் வரைக்கும் இயற்கை உபாதையை அடக்கிக்கொள்கிறோம்.

3.இந்த டாய்லெட் பிரச்னை வெவ்வேறு வடிவில் தினசரி எங்களை துரத்துகிறது. பொதுவாக பொது இடங்களில் ஆண்கள், ஓரமான பகுதிகளில் சிறுநீர் கழித்துவிட்டு சென்றுவிடுகின்றனர். நகர்ந்து செல்லும் நாங்கள் அப்படி செய்ய முடியாது. இலவச/கட்டண கழிப்பிடங்கள்தான் எங்களுக்கு ஒரே வழி. ஆனால், அவை மிக மோசமாக இருக்கின்றன. தரைகளில் கை கால் ஊன்றி உடலை இழுத்துக்கொண்டு நகர்ந்தால், மொத்த உடம்புமே நாற்றமடிக்கும் நிலைக்கு வந்துவிடுகிறது. முன்பு சொன்ன, வெஸ்டர்ன் டாய்லெட் பிரச்னை பெரும்பாலான ஹோட்டல்களிலும் தொடர்கிறது. பணம் செலவழித்து வாடகைக்கு அறை பிடித்தாலும் டாய்லெட்டைக் கூட பயன்படுத்த முடியாத சூழ்நிலை.

4. எங்களை மாதிரியானவர்கள் பயன்படுத்தக்கூடிய டூ-வீலர் வாங்குவதுதான் பொதுவாக எங்களின் கனவு. அதுவரைக்கும், வேலைக்குச் சென்றாலும் கையில் செருப்பணிந்து நகர்ந்தபடியே சென்று வருவதுதான் ஒரே வழி. அப்படியான தருணங்களில், எங்களை பொது இடங்களில் பார்ப்பவர்கள், அணிச்சையாக சில்லரைகளை வீசிவிடுகின்றனர். எங்களுக்கு உதவ வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை புரிந்துகொள்கிறோம். ஆனால், அம்மாதிரி செய்வது எங்களை மனதளவில் ரொம்பவே பாதிக்கிறது. அப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும், 'நீ பிச்சை எடுக்கத்தான் லாயக்கு..' என்று யாரோ உரக்கக் கத்துவதுபோல் இருக்கிறது. இத்தனைக்கும், நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரரின் தோற்றத்தில் செல்வதில்லை. நல்ல உடையணிந்துதான் செல்கிறோம். இருந்தும் எங்களின் ஊனமே, அப்படியொரு எண்ணத்தை பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்துகிறது.



5. உடல் ஊனமுற்றவர்களுக்கென்று சுயம்வரம் அவ்வப்போது நடக்கும். அதில் எந்த உடல் ஊனமுற்ற பெண்ணும், எங்களை மாதிரியான ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்றவரை தேர்ந்தெடுக்கமாட்டாள். காரணம், ஊனமுற்றவர்களில் நாங்கள் கடைநிலையில் இருக்கிறோம். நாங்களாவது பரவாயில்லை.. ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்ற பெண்களின் நிலைமை இன்னும் மோசம். அவர்கள் சுயம்வரம் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கே வருவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு பெரும்பாலான குடும்பங்களில் கல்விக்கூட மறுக்கப்படுகிறது. வீடும், அந்த தெருவுமே அவளறிந்த அதிகபட்ச உலகம்.

6. தனியார் கல்விக்கூடங்களில், அவர்கள் கேட்கும் பணத்தைக் கட்டி, எங்களை மாதிரியானவர்கள் படிக்க விரும்பினாலும், அவர்கள் சேர்த்துக்கொள்ள விரும்புவதில்லை. சில அரசு பள்ளி/கல்லூரிகளிலும் கூட, இப்படி நடக்கிறது. காரணம், எங்களுக்காக வகுப்பறைகளை கீழ் தளத்துக்கு மாற்றுவது, எங்களுக்கென்று சிறப்பு கவனம் எடுக்க வேண்டியிருப்பது போன்ற விஷயங்கள் அவர்களை அசௌகர்யப்படுத்துகின்றன. இது எல்லாப் பள்ளிகளுக்கும் பொருந்தாது. எங்கள் மீது கரிசனத்தோடு இருக்கும் பள்ளிகளும் நிறைய உண்டு.

7. தமிழக அரசு TNPSC போன்ற தேர்வுகளை நடத்தும்போது, உடல் ஊனமுற்றவர்கள் தேர்வுகட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கிறது. நல்ல விஷயம்தான். ஆனால், மாத வருமானம் 350 ரூபாய்க்குள் இருந்தால்தான் இந்த சலுகையை அனுபவிக்க முடியும். எந்தக்காலத்தில் நிர்ணயித்ததோ, இன்னமும் மாற்றாமல் வைத்திருக்கிறார்கள். இதனால், 350 ரூபாய்தான் மாத வருமானம் என்று பொய்யாக சான்றிதழ் வாங்க வேண்டிய நிலைமை.

8. தமிழக அரசு உடல் ஊனமுற்றவர்களுக்கென்று மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. இதைப்பெற அரசு விதிக்கும் நிபந்தணைகள் விநோதமாக இருக்கின்றன. '45 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஒருவேளை திருமணம் ஆகியிருந்தால், ஆண்குழந்தை இருக்கக்கூடாது..' என்று நிபந்தணை விதிக்கிறார்கள். '45 வயதுவரைக்கும் பெற்றோர் பராமரிப்பார்கள், ஆண்குழந்தை இருந்தால் அவன் பராமரிப்பான்' என்பது இந்த நிபந்தணைகளுக்குப் பின்னுள்ள செய்தி. இது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். யார் இதையெல்லாம் வடிவமைத்தார்கள் என தெரியவில்லை.

9.பொதுவாக எங்களை மாதிரியானவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடப்பிறந்தது. அது சரியானதில்லை என்றாலும் கூட இயல்பானது. அதை மாற்றிக்கொண்டுதான் வாழப்பழகுகிறோம். இதனால், எந்த ஒரு சலுகையையும் உரத்தக் குரலில் கேட்க கூச்சமாகவும், சங்கடமாகவும் இருக்கிறது. சலுகை என்றில்லை.. ஒரு பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் தரையில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். பேருந்தில் தூக்கி வைக்க ஒரு நபரின் உதவி தேவை. பெரும்பாலும் தானாக வந்து யாரோ ஒருவர் உதவிவிடுகிறார். அப்படியல்லாத சந்தர்ப்பங்களில் சுற்றியிருப்பவர்களின் முகத்தை பரிதாபமாக பார்க்கலாம். அதையும் தாண்டி வாய்விட்டுக் கேட்கலாம். அப்படியும் எதுவும் நடக்கவில்லை(இதற்கான சந்தர்ப்பங்கள் குறைவுதான்..) எனில், எங்களின் தாழ்வு மனப்பான்மை விழித்துக்கொள்கிறது. சுற்றியிருப்பவர்களிடம் நீங்கள் ஏன் உதவவில்லை என்று சண்டையிட முடியுமா என்ன..? அவரவர்க்கு ஆயிரம் வேலைகள். எங்களுக்கு உதவுவதெற்கென்று யாரும் பிறப்பெடுக்கவில்லையே..




10. அரசு, உடல் ஊனமுற்றவர்களை பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதோர், கை கால் ஊனமுற்றவர்கள் என்று நான்கு வகைகளாக பிரித்துள்ளது. இதில் மன வளர்ச்சி குன்றியவர்களை தவிர்த்து ஏனையோருக்கு, வேலைவாய்ப்பில் தலா ஒரு சதவிகிதம்(மொத்தம் 3%) இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. காது கேளாதோரையும், கண் பார்வையற்றவரையும் இனம் காணுவதில் பிரச்னையில்லை. அதில் பொய் சொல்ல முடியாது. ஆனால், கை கால் ஊனமுற்றவர்களின் நிலைமை வேறு. 40% ஊனம் இருந்தால்தான் உடல் ஊனமுற்றவர் என்று அங்கீகரிக்கிறது அரசு. இந்த சதவிகித சான்றிதழ் வைத்திருப்பவர்கள்தான் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அரசின் சலுகைகளை அனுபவிக்க இயலும். நடைமுறையில் லேசான உடல் ஊனமுள்ளவர்களும் மருத்துவர்களை சரிகட்டி, 40% க்கும் மேல் ஊனம் இருப்பதாக சான்றிதழ் வாங்கிவிடுகின்றனர். இதனால் கை கால் ஊனமுற்றவர்களுக்கான ஒரு சதவிகிதத்திற்கு போட்டி அதிகமாகிவிட்டது. எங்களை மாதிரியான ஊர்ந்து செல்பவர்களும் இந்த ஒரு சதவிகிதத்திற்குள்தான் வருகிறோம். இந்த நிலைமை மாற வேண்டுமாயின் எங்களுக்கு உள் ஒதுக்கீடு அவசியம். ஆனால் இருக்கும் ஒரு சதவிகிதத்திற்குள் உள் ஒதுக்கீடு செய்ய முடியாது.. அது நியாயமாகவும் இருக்காது. கை கால் ஊனமுற்றவர்கான இட ஒதுக்கீட்டை இரண்டு சதவிகிதமாக உயர்த்தி, அதில் எங்களுக்கு ஒரு சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்வது நியாயமானதாக இருக்கும்.

கருத்துகள்

கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நெருடலாகத்தான் இருக்கு.

கைகால் நன்றாக உள்ளவர்களில் சிலர் அருவாளை எடுத்துக் கொண்டு ரவுடியாக அலைகிறார்கள்.
:(
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அவர்களின் பக்கம் நின்று முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்திலிருந்து பார்த்திருக்கிறீர்கள்.

மனதைப் பிசைகிறது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
கோவி, வெயிலான்.. இருவரும் தொடர்ச்சியாக இந்தப்பக்கம் வந்து தட்டிக்கொடுக்கிறீர்கள். முன்னாள் நட்சத்திரங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
1.பரந்து கெடுக உலகியற்றியான் என்று அலறத் தோன்றுகிறது.
2.உதவித் தொகை, தேர்வுக் கட்டணம், உள் ஒதுக்கீடு போன்ற அரசு விதிகள் குறித்த விஷயங்கள் மாற்றத் தக்கவையே. சம்பந்தப் பட்டோர் கவனத்திற்கு பொறுப்புள்ளவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் முக்கியம். தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் பார்வைக்கு இந்த விஷயம் போனால் நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
3. இந்தப் பதிவினை COPY எடுத்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்; தம்மையும் அறியாமல் அவர்களைப் புண்படுத்துவோர் தம்மைத் திருத்திக் கொள்ள உதவும்.

RATHNESH
http://rathnesh.blogspot.com
இராம்/Raam இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

நல்ல பதிவு, நெஞ்சை தொட்டது....


என்னுடன் ஐந்தாம் வகுப்பில் படித்த பொண்ணு ஒருத்தி இதே மாதிரி தான், இந்த பதிவை வாசித்ததும் அவளுடைய நினைவு வந்துவிட்டது, பள்ளியில் நடக்கும் பேச்சு,ஓவியப்போட்டிகளில் அனைத்திலும் அவள்தான் வெற்றி பெறுவாள்.... :)
மலைநாடான் இவ்வாறு கூறியுள்ளார்…
எண்ணுவதற்கும், எழுதுவதற்கும், எடுத்துக்கொள்வதற்கும், இருக்கும் பிரச்சனைகளில் இன்னுமொன்றை எடுத்திருக்கிறீர்கள்.
சிந்திக்க வைக்கும் பதிவு. சிரத்தைக்கு நன்றி.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
nammudia pirappin magimai ippa than theriyuthu..
காட்டாறு இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த மாதிரி அடிப்படைத் தேவைகளை செய்து தர அரசாங்கத்தை மட்டும் நம்பிக் கொண்டு இருக்காமல், தனியாருக்கும் இந்த அவர்னஸ் வந்தா நல்லாயிருக்கும். மனசைத் தொடும் பதிவு!
முத்துலெட்சுமி/muthuletchumi இவ்வாறு கூறியுள்ளார்…
தில்லியில் புதிதாக வந்த பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் இவர்களை கவனத்திற்கு கொண்டு வந்து தரையோடு தரையான படிகளை பேருந்துகளுக்கும் ரயிலில் நேரடியாக சென்றூ விடும் அளவு பிளட்பாரம் சம உயரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த டாய்லெட் விவகாரம் புதியவிசயம் இப்படி யோசித்ததே இல்லை:(
டிஸ்கவரி சேனலில் மெட்ரோ வ்ந்த்தால் எப்படி ஒரு வீல்சேர் பையன் பள்ளி செல்கிறான் என்று ஒரு நாள் காண்பித்தார்கள்.

ரொம்பவும் நல்ல பதிவு நட்சத்திரவாரத்தில் வருவதால் எல்லாரிடமும் கவனம் பெறூம்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
aazhiyuran,
tha sad part is every movie laughs and disalbed people.unless it is really pitiable,stuttering, stammering,any deformity or deviation from normalcy seems a joke for oue movie makers. we are more racist than anyone else..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
// அப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும், 'நீ பிச்சை எடுக்கத்தான் லாயக்கு..' என்று யாரோ உரக்கக் கத்துவதுபோல் இருக்கிறது//

கண்ணீர் கசிகிறது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சமூகம் கவனிக்க தவறிய அல்லது ஆர்வம் காட்டாத விசயத்தை பேசியது பாராட்டுக்குறியது.
திங்கள் சத்யா இவ்வாறு கூறியுள்ளார்…
'45 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஒருவேளை திருமணம் ஆகியிருந்தால், ஆண்குழந்தை இருக்கக்கூடாது..' என்று நிபந்தணை விதிக்கிறார்கள். '45 வயதுவரைக்கும் பெற்றோர் பராமரிப்பார்கள், ஆண்குழந்தை இருந்தால் அவன் பராமரிப்பான்'

இப்படியொரு சட்டம் போட்டவனை தாராளமாய் தேவிடியாப் பையன்'னு சொல்லலாம். அவங்கம்மா பத்தினியா இருந்தாலும் கவலையில்லை.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பாலாண்ணா.. உங்கள் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால்,

//இப்படியொரு சட்டம் போட்டவனை தாராளமாய் தேவிடியாப் பையன்'னு சொல்லலாம். அவங்கம்மா பத்தினியா இருந்தாலும் கவலையில்லை. //

என்ற வார்த்தைகள் தேவையில்லாதவை. திட்டும் வார்த்தைகளில் கூட பெண்களை அவமானப்படுத்தும் நுண் அரசியல் நிறைந்திருக்கும் சூழலில் இம்மாதிரியான வார்த்தைகளை சொந்த வாழ்வின் பயன்படுத்துவதையே தவிர்க்க வேண்டும் எனும்போது பொது வெளியில் இந்த வார்த்தைகள் உங்களிடமிருந்து வெளிப்பட்டிருப்பதை எதிர்பார்க்கவில்லை. திட்ட வேண்டியிருந்தால், யாராக இருந்தாலும் அந்த நபரைத் திட்டுங்கள்.. அவனது தாய் என்ன தப்பு செய்தாள்- அந்த நபரை பெற்றெடுத்ததைத் தவிர..?
வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு ஆழி. மேலைநாடுகளில் வலுவிழந்தவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். அதில் ஒரு சிறு வீதமாவது எமது பகுதிகளில் வாழும் வலுவிழந்த மக்களுக்குச் செய்ய வேண்டும் அதிகாரத்தில் உள்ளவர்கள்.
திங்கள் சத்யா இவ்வாறு கூறியுள்ளார்…
தேவிடியாப் பையா என்ற வார்த்தைக்கு மன்னிக்கவும். வேற அசிங்கமான வார்த்தை எதுவும் கிடைக்கலை. இன்னும் என் கோபம் தீராமல் தான் இருக்கிறது.
தேரியூரான் இவ்வாறு கூறியுள்ளார்…
இது ஒரு உளவியல் பார்வை. பாராட்டுக்கள். இப்படியான மாற்றுக்கருத்துக்கள் சக மனிதர்களை அடுத்த முறை யோசிக்க வைப்பதோடு, வருங்கால திட்டங்களை தொலைநோக்கோடு தொடங்கவும் (எல்லா தரப்பினரையும்) உதவும்.
பத்மா அர்விந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக முக்கிய பிரச்சினை இது. உடல் ஊனமுற்றவர்கள் பற்றிய என் கட்டுரை ஒன்றூ இங்கே:http://reallogic.org/thenthuli/?p=86
Chandravathanaa இவ்வாறு கூறியுள்ளார்…
நெருடலான பதிவு. மனதைத் தொட்டது.
அமிர்தவர்ஷினி அம்மா இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் உறுத்தலான பதிவு

.உதவித் தொகை, தேர்வுக் கட்டணம், உள் ஒதுக்கீடு போன்ற அரசு விதிகள் குறித்த விஷயங்கள் மாற்றத் தக்கவையே. சம்பந்தப் பட்டோர் கவனத்திற்கு பொறுப்புள்ளவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் முக்கியம். //

ஆம் இம்மாதிரியானவர்களுக்கு நாம் உதவி புரிய நினைத்தால் இதனை பிறரின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டாம். ஏதாவது ஒரு பிரபல நாளிதழில் இக்கட்டுரையை பிரசுரித்தால் பலன் கிடைக்கும் என்று தோன்றுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்