இந்த சுதந்திரம் யாருக்கானது...?


"உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாங்கள் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து உட்காரக்கூடாது. மரப்பலகைகளில் உட்காராமல் தனியாகக் கோணி சாக்குகளை விரித்து அமர வேண்டும். உயர் வகுப்பு மாணவர்கள் எங்களுடன் பேசக்கூடாது. பேசினால் பாவமாம். உயர்சாதி ஆசிரியர்களும் அவ்வாறே நடந்துகொண்டார்கள். எங்கள் புத்தகங்களைக் கூட தொட மாட்டார்கள். தொட்டால் தீட்டு. தண்ணீர் தாகம் எடுத்தால் நாங்களே எடுத்துக் குடித்துவிட முடியாது. உயர்சாதி மாணவர்களிடம் சொல்ல வேண்டும். ஒதுங்கி நின்று அவர்கள் ஊற்றும் நீரை மேலே அண்ணாந்து வாயைத் திறந்து குடிக்க வேண்டும்........
ஒரு முறை எங்கள் தந்தையாரை புகைவண்டி நிலையத்துக்கு வரச்சொல்லிவிட்டு, நானும் என் சகோதரனும் அங்கு சென்றோம். ஆனால், அவருக்கு நாங்கள் வருவது குறித்து அனுப்பிய தகவல் சென்று சேரவில்லை. இதனால் ஒரு மாட்டுவண்டி ஒன்றில் தந்தையாரின் இருப்பிடத்துக்குச் சென்றோம். சென்றுகொண்டிருக்கும்போதே உயர்சாதியைச் சேர்ந்த அந்த வண்டியோட்டி நாங்கள் யார் என்பதை தெரிந்து தன் வண்டியே தீட்டாகிவிட்டதக எண்ணி கீழே குதித்து மாட்டை அவிழ்த்துவிட்டு வண்டியை குடைசாய்த்துவிட்டான். நானும், என் சகோதரனும் சாலையில் தூக்கி எறியப்பட்டோம். ....
மற்றொரு முறை முடி வெட்டுவதற்காக கடைக்குச் சென்றேன். என்னைத் தெரிந்துகொண்ட அவர், 'எருமை மாட்டிற்கு மயிர் வெட்டினாலும் வெட்டுவேனேத் தவிர உன் இனத்துக்கு வெட்ட மாட்டேன். போ வெளியே..' என்று வெளியே தள்ளிவிட்டார். பிறகு என் சகோதரிதான் எனக்கு முடி வெட்டினார்...

லண்டன் மாநகரில் உயர்படிப்பு முடித்து, 'தத்துவ அறிஞர்' என்ற பட்டத்தையும் பெற்று இந்தியா திரும்பினேன். ஆனால், பரோடாவில் எனக்குத் தங்குவதற்கு யாரும் இடம் தர மறுத்துவிட்டனர். வேறு வழியில்லாமல் பெயரை மாற்றிச்சொல்லி பார்சிகளுக்கு சொந்தமான சத்திரம் ஒன்றில் தங்கினேன். ஒருநாள் பார்சிகள் சிவந்த கண்களுடன் தடியுடன் ஓடிவந்து, 'நீ யார்..?' என்றார்கள். 'ஒரு இந்து..' என்றேன். 'நீ தாழ்த்தப்பட்டவன். உடனே இடத்தை காலி செய்' என்று துரத்தி அடித்துவிட்டார்கள்.......

நாங்கள் தண்ணீர் குடித்ததால் மாகாத்து நகராட்சி குளம் தீட்டாகிவிட்டதாக உயர்சாதி இந்துக்கள் அறிவித்தார்கள். இந்துக்கள் தண்ணீர் எடுப்பதை நிறுத்திவிட்டனர். குளத்தை எப்படி புனிதமாக்குவது என்று சாஸ்திர விற்பன்னர்களைக் கொண்டு ஆராய்ந்தார்கள். கடைசியாக 'பஞ்சகாவ்யம்தான் பரிகாரம்' என்ற முடிவுக்கு வந்தார்கள். 108 பானைகளில் பசுமாட்டு மூத்திரம், சாணம், தயிர், பால், வெண்ணெய் ஆகியவைகளைக் கலந்தார்கள். பார்ப்பனர்கள் வேதம் ஓதி 108 பானைகளையும் மாகாத்துக் குளத்தில் ஊற்றிக் கலந்தார்கள். குளம் புனிதமாகிவிட்டதாக பார்ப்பனர்கள் அறிவித்தார்கள். அதன் பின்னரே சாதி இந்துக்கள் அந்த குளத்து நீரை உபயோகித்தார்கள்...

பரோடா மன்னரிடம் நிதித்துறை செயலாளராக பணியாற்றியபோது எனக்குக் கீழ் பணியாற்றிய பணியாளர்கள் என்னை இழிவு படுத்தினார்கள். என் அருகில் வரக்கூடாது என்பதால் கோப்புகள் என் மேசை மீது தூக்கி வீசப்படும். என் பாதம்பட்டால் தீட்டாகிவிடும் என்பதால் தரை விரிப்புகள் சுருட்டி மறைத்து வைக்கப்பட்டன...

சொல்லுங்கள் நண்பர்களே... இந்த சுதந்திரம் யாருக்கானது..? உயர்சாதி இந்துக்களுக்கா, தாழ்த்தப்பட்டவர்களுக்கா..? இழந்த உரிமைகளை கெஞ்சி பெற முடியாது. ஓயாத போராட்டங்கள் மூலமே பெற முடியும். பலி கொடுக்க ஆடுகளைதான் பயன்படுத்துகிறார்கள்.. சிங்கத்தை அல்ல.."

-கோ.சாமிதுரை எழுதிய 'அம்பேத்கர் பேசுகிறார்..' என்ற நூலிலிருந்து..

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சாமிதுரையின் நூலிலிருந்து போடுவதை விட, நேரடியாக அம்பெத்கர் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழ்படுத்தி போட்டிருக்கலாம், ஒரு முக்கியமான வரியைக் காணோம்!!

"I learnt that a person who is an untouchable to a Hindu is also an untouchable to a Parsi"

இன்னும் சில பத்திகளுக்கு பிறகு அம்பேத்கர் சொல்வார்

"I learnt that a person who is an untouchable to a Hindu is also an untouchable to a Muslim"

மதங்களுக்கும் அப்பால் புறையோடிப்போயிருக்கும் சாதி வெறி அப்படி.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//சாமிதுரையின் நூலிலிருந்து போடுவதை விட, நேரடியாக அம்பெத்கர் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழ்படுத்தி போட்டிருக்கலாம், ஒரு முக்கியமான வரியைக் காணோம்!!//

நண்பரே.. நான் இப்போதுதான் அம்பேத்கரை முழுமையாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். தவிரவும், மொழி பெயர்க்கும் அளவுக்கு எனக்கு ஆங்கில மொழியாளுமை இல்லை. கருத்துக்களை பர்ந்தமைக்கு நன்றி..
செல்வநாயகி இவ்வாறு கூறியுள்ளார்…
எடுத்துப்போட்டமைக்கு நன்றி ஆழியூரான். உங்களின் இதற்கு முந்தைய இடுகைக்கும்.

பச்சிளம்குழந்தையைப் பாம்பு கடித்திருக்கிறதென்றாலும் எப்போதும்போல் கிலுகிலுப்பை ஆட்டினால் சரியாகிவிடும் என்னும் மாந்திரீக எழுத்துக்களுக்கு மத்தியில் உங்களைப் போன்றவர்களின் சகபயணத்துணை அடுத்த எட்டையும் சரியாக எடுத்துவைக்க உந்தித்தள்ளும் எனக்கெல்லாம். தொடருங்கள். பெரியாரைப் பேசிய அளவு வலைச்சமூகத்தில் அம்பேத்கார் பேசப்படவில்லை இன்னமும் என்றே கருதுகிறேன். நீங்கள் அவர்குறித்த ஆக்கங்களை மேலும் இடலாமே.
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் இந்தியா வந்திருக்கிறார்.நேர வித்தியாசத்தால் அவ்ருக்குத் தூக்கம் வராமல் நள்ளிரவில் இங்கு உங்கள் தலைவர் யாரையாவது சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.பலரை முயன்றும் அனைவரும் தூங்குகிறார்கள் என்று பதில் வந்திருக்கிறது.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களிடம் குறுகிய நேரமே இந்தியாவில் இருக்கும் இவரைச் சந்திக்க முடியுமா என்று கேட்டதற்கு வாருங்கள் சிறிது நேரம் பேசலாம் என்று சொல்லியிருக்கிறார்.
அங்கே சென்றபின் நன்றாகப் பேசியிருந்து விட்டு வெளி நாட்டுப் பத்திரிக்கையாளர் கேட்டிருக்கிறார்.மற்ற தலைவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்,நீங்கள் மட்டும் இன்னும் விழித்திருக்கிறீர்களே என்று.

அதற்கு அம்பேத்கர் சொன்னாராம்"அந்த மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் ஆகவே தலைவர்கள் தூங்குகிறார்கள்.எனது மக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே நான் விழித்திருக்க வேண்டியிருக்கிறது".
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி செல்வநாயகி..!
'தீண்டத்தகாதவர்களுக்கு காங்கிரஸ் என்ன செய்தது..?' என்ற அம்பேத்கரின் நூல் ஒன்று வாசித்துக்கொண்டிருக்கிறேன். காந்தியின் துரோகங்களாக அவர் வர்ணிக்கும் விஷயங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. அது ஐநூறு பக்கங்களைத் தாண்டிய புத்தகமாக இருக்கிறது. முழுமையாகப் படித்து முடித்ததும் எழுதுகிறேன், அதைப்பற்றியும்.

புதிய தகவலொன்றை தந்திருக்கிறீர்கள் தமிழன். பகிர்ந்தமைக்கு நன்றி.
கையேடு இவ்வாறு கூறியுள்ளார்…
when a false nationalism is wide spread and taking over- ungal posting nithaaniththi yosikka vaikkirathu.

In the practise of untouchability the stands taken by the minority releigious groups should also be critisized severly.

I dont feel proud about being an indian for whatever reasons, as long as the practise of untouchability exists and my fellow being is not treated humanly in my society.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Dear Anony,

what u want to say?
மஞ்சூர் ராசா இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பா, நல்லதொரு கட்டுரையை எடுத்து இட்டிருக்கிறாய்.

அம்பேத்கார் பற்றியும் அவரது படைப்புகள், மற்றும் வரலாறு இன்னும் விரிவாக மக்களுக்கு தெரியவேண்டும்.
அசுரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//"I learnt that a person who is an untouchable to a Hindu is also an untouchable to a Parsi"

இன்னும் சில பத்திகளுக்கு பிறகு அம்பேத்கர் சொல்வார்

"I learnt that a person who is an untouchable to a Hindu is also an untouchable to a Muslim"

மதங்களுக்கும் அப்பால் புறையோடிப்போயிருக்கும் சாதி வெறி அப்படி. //

That is why we say the Brahamism(Hindhuism) is not a religion.

It is opressive social Setup and the philosophy that justifies this social setup.

So, it is no wonder other religion too uses this social setup.

Asuran.
ஜமாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பருக்கு.. எனது வருகை மிகச் சமீபத்தியதுதான். நானும் தஞ்சை மாவட்டம்தான்.. இதில் ஒன்றும் முக்கியமில்லை. ஆணால் தாங்கள் அம்பேத்கரை படிக்கத் துவங்கியிருப்பதுதான் வரவேற்கத்தக்கது. இந்தியாவில் வாசிக்க வேண்டிய மிகமுக்கிய 3 சிந்தனையாளர்கள் அம்பேத்கர், பெரியார் மற்றம் காந்தி. காந்தியை மற்றிய மறுவாசிப்பு அவசியம். உங்கள் பதிவுகளை வாசிக்கத் துவங்கியுள்ளேன். இது மிகவும் ஆர்வமூட்டும் பயணம்தான். அம்பேத்கர் கருத்துக்களை தொடர்ந்து எனது கருத்துக்களை நானும் பதிவில் இடத்துவங்கி உள்ளேன். உங்களை சக பயணியாகக் கண்டதில் மகிழ்ச்சி.. பேசலாம் நிறைய...
உக்கிரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு நண்பரே.

நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் நன்றி.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
சில ஆண்டுகள்வரை, அம்பெத்கரை வெறுமெனே சற்று பெயரளவில்தான் எனக்கு தெரியும். இள வயதில் இந்தியாவை விட்டு கிளம்பியதால் இப்படியாக இருக்கலாம். மேலும் சின்ன வயதிலேயே பள்ளிக்கு போவதை நிறுத்தினேன்.

கடவுள் மறுப்பு சிந்தனை, இயக்கம், போராட்டங்கள் மூலம் ஈர்க்கப்பட்டிருந்த நான், பெரியாரை மட்டுமே சாதிமத எதிர்ப்பு தலைவர் எளியவர்களின் பாதுகாவலர் என்கிற மனநிலையிலும், காமராசரை சமத்துவ தலைவராகவும் ஏற்றிருந்தேன்.

இணையம் மூலம்தான் அம்பெத்கர் அவரின் வாழ்க்கை, போராட்டங்கள் பற்றிய குறிப்புகள், செய்திகள் நிறைய அறிந்துகொண்டு வருகிறேன்.

அந்த வகையில் உங்களது இந்த பதிவிலும் மனதை பிழியும் நிகழ்ச்சிகளை அறிந்துகொண்டேன். இந்த அளவு கொடுமைகள் இலண்டனுக்கு போய் படித்தவருக்கே நேர்ந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது, நெஞ்சம் பதறத்தான் செய்கிறது. இன்றைய காலங்கள்வரை அதே வகை அநியாய அட்டூழியங்கள் தொடந்து நடந்துகொண்டும் வருவதை பார்க்கும்போது, இப்பதிவின் தலைப்பு "கேள்வி" மிகச்சரியெனெவே படுகிறது.

//இழந்த உரிமைகளை கெஞ்சி பெற முடியாது. ஓயாத போராட்டங்கள் மூலமே பெற முடியும்.//

//"அந்த மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் ஆகவே தலைவர்கள் தூங்குகிறார்கள்.எனது மக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே நான் விழித்திருக்க வேண்டியிருக்கிறது"//

மனதில் பதிந்த வரிகள்.


பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆழியூரான். பின்னூட்டங்கள் மூலம் மேலும் சிலர் பல அரிய செய்திகளை அறியக்கொடுத்தமைக்கு நன்றி.

தொடர்ந்து எழுதிவாருங்கள்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
ரஞ்சித்.. உங்கள் தொடர்ச்சியான வாசிப்பும், வருகையும் மகிழ்ச்சியளிக்கிறது.

மஞ்சூர் ராசா, அசுரன், உக்கிரன்.. நன்றிகள் உங்களுக்கும்.

மொழியும், நிலமும்.. உங்கள் பிளாக் பார்த்தேன். கருத்துலகில் நான் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்களை விட்டு வைத்திருக்கிறீர்கள். ஒவ்வொன்றாய் படிக்கிறேன்.

மாசிலா.. 'வைசியர் இனத்தில் பிறந்த காந்தி ஆடை அணிய மறுத்தது பெரிய விஷயம் இல்லை.. மஹர் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து, ஆடை அணியவே வசதியில்லாத பின்புலத்தோடு படித்து முன்னேறி கோட் சூட் அணிந்த அம்பேத்கர் செய்ததுதான் புரட்சி..' என்று பொருள்பட முன்பு எங்கேயோ(அசுரனின் பதிவொன்றில் என்று நினைவு..) படித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்கள் எனக்கு அதை ஞாபகமூட்டுகின்றன. நன்றி..!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்