10/7/07

பாண தீர்த்தம் அருவியும், கொக்கரை கருவியும்..!

பெய்து பொழிந்தாலும், வீழ்ந்து நிமிர்ந்தாலும், குவிந்து கிடந்தாலும், சீறி வந்தாலும் நீரின் வடிவங்கள் எப்போதும் பிரமிப்பூட்டுபவை. அருவியாக, மழையாக, சாரலாக, ஏரியாக, நதியாக, அணைக்கட்டாக, கடலாக, இலையில் தேங்கி நிற்கும் ஒரு துளியாக, மழையில் நனைந்த பறவை காற்றில் சிலுப்பிவிடும் திவலைகளாக.. தனக்கு சாத்தியமான எல்லா வடிவங்களிலும் வசீகரிக்கிறது நீர். அப்படி திசைகளெங்கும் நீரொழுகும் ஒரு நீர் நாளில் நீர் தரிசனத்துக்குப் போனேன்.

உண்மையாகவே வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் பிறப்பிடம் அமைந்திருக்கும் பொதிகை மலை. திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் வழியாக டூ வீலரில் ஏறும்போதே குற்றாலச்சாரல் முகத்தில் அறைய ஆரம்பிக்கிறது. கூடவே, 'ஒரு girl friend பின்னால் அமர்ந்து வந்தால் எப்படியிருக்கும்..?' என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை (நீதி: சாத்தியமாயின் இணையோடு செல்லுங்கள்). பெரிய மலையேற்றமெல்லாம் இல்லை. மிக லேசான ஏற்றம்தான். இரண்டு, மூன்று வளைவுகள் தாண்டிய உடனேயே தூரத்தில் மலையை பிளந்துக்கொண்டு ஊற்றுகிறது அகத்தியர் அருவி. அருகிலேயே பாபநாசம் நீர் மின்சார திட்டத்திற்கான பிரமாண்ட குழாய்கள், இரும்பு மலைபாம்பென மலைச்சரிவுகளில் சரிந்து இறங்குகின்றன.


அகத்தியர் அருவி..

அங்கிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் அணைக்கட்டு. நுழைவாயிலில் சாலையோரத்தில் டெண்ட் அடித்து மீன் சாப்பாடு விற்கிறார்கள் பெரியம்மாக்கள். அணை மீன்கள் பிடிக்கப்பட்டு, ஆவிபறக்கும் சாப்பாட்டுடன் விற்கப்படுகிறது. வெறும் மீன் சாப்பாடு என்றால் சாதத்துக்கு ஊற்றும் குழம்புடன் ஒரு துண்டு மீன் கொடுக்கிறார்கள். 20 ரூபாய். அதற்கு மேல் வேண்டுமென்றால், பொரித்த மீன் துண்டு 10, 15 ரூபாய்களுக்குக் கிடைக்கிறது. சாரல் வீசிக்கொண்டே இருக்க, மலை முகட்டில் அதாவது பள்ளத்தாக்கின் விளிம்பில் அமர்ந்து சுடச்சுட மீன் சாப்பிடும் அந்த அனுபவம் அலாதியானது. சாரல் இல்லையெனில் அனுபவத்தில் பாதியை இழந்துவிட நேரிடும்.

சாப்பிட்ட காரம் நாக்கில் மிச்சமிருக்க, எழுந்து நிமிர்ந்தால் பாபநாசம் அணைக்கட்டு நீண்டு விரிந்து கிடக்கிறது. பொதிகை மலையில் உருவாகும் நீர் முழுவதும் இந்த அணைக்கட்டில் சேகரமாகித்தான் தாமிரபரணி நதியாக வெளியேறுகிறது. 'இங்கதான் எங்கயோ பாண தீர்த்தம் அருவி இருக்குன்னு சொன்னாய்ங்க.. ஒண்ணுத்தயும் காங்கலை..' என்று விசாரணையைப் போட்டால், எங்கோ தூ...ரத்தில் தெரிந்த ஒரு மலையிடுக்கைக் காட்டி, 'படகுல ஏறி அணையைத் தாண்டி.. அந்தால தெரியுதுல்ல மலை இடுக்கு.. அதுக்குள்ளாரப்போயி இறங்கி, கொஞ்ச தூரம் நடக்கனும். அங்கதான் இருக்கு பாண தீர்த்தம் அருவி..' என்கிறார்கள் ஏதோ ஒரு ரகசியத்தை அவிழ்த்துவிட்ட பெருமிதத்தோடு. 'பாரேன்... இந்த இடுக்குல தண்ணி ஊத்துறதை ஏதோ ஒரு பயபுள்ள கண்டுபிடிச்சிருக்குறதை..' என வியந்தபடியே டிக்கெட் வாங்க நகர்ந்தால் அங்கு பெருங்கூட்டம் முண்டியடித்தது.


பாபநாசம் அணை..

ஒரு நபருக்கு 20 ரூபாய். ஆட்களை நிரப்பிக்கொண்டு வீறிட்டுக் கிளம்புகிறது விசைப்படகு. நீர் நிரம்பிய பெரிய பாத்திரமொன்றில் விழுந்து நீந்தும் எறுப்பைப்போல், நீரின் விஸ்வரூபத்தை விசையால் கடந்துகொண்டிருக்கிறது படகு. கீழே தேங்கி கிடக்கும் தண்ணீர் எத்தனை வருடங்களுக்கு முன்பு பெய்த மழையாக இருக்கும்...? என்ற யோசிக்கும்போதே மறுபடியும் பொழியத் தொடங்குகிறது மழை. கீழும், மேலும், சுற்றிலும் நீர் சூழ, ஒரு நகரும் மரத்தீவாக ஆனது படகு. மழைகண்டு முக்காடு போடும் சிலரையும், சிரிக்கும்/சிலிர்க்கும் சிலரையும், 'உங்களை மாதிரி கொள்ள பேரைப் பார்த்துட்டம்டே..' என்பது மாதிரி புன்னகையற்ற முகத்தோடு சலனமற்றப் பார்த்துக்கொண்டிருக்கிறார் படகோட்டி. திருப்பும் துடுப்பில் அவரது அனுபவம் தெரிந்தது. பத்து நிமிட பயணத்தில் அணைக்கட்டு நீரின் விளிம்புக்கு வருகிறது படகு. அங்கிருந்து பார்த்தால், வானத்திலிருந்து நீர் பத்தாயத்தை கவிழ்த்துவிட்டதைப் போல மிரட்டலாகக் கொட்டுகிறது பாண தீர்த்தம் அருவி.


பாண தீர்த்தம் அருவி..

படகிலிருந்து இறங்கி சில நூறு மீட்டர்கள் நடந்தால் அந்த நீர் பிரமாண்டத்தின் அருகில் செல்ல முடிகிறது. பொதிகை மலையின் பசுமை பரப்பில் சின்னச்சின்ன காட்டு நதிகளாக உற்பத்தியாகி ஓடிவந்து ஒன்று சேர்ந்து கொட்டுவதே இந்த பாண தீர்த்தம். மனிதர்களின் தீட்டு படாத ஸ்படிக துல்லியமும், சுத்தமும் இதன் தனித்துவம். குற்றால அருவிகளைப்போல ஆண்களும், பெண்களும் குளிக்க தனித்தனி தடுப்புகள் இங்கில்லை. ஏனெனில் அருவியின் ஒரு பக்கம் மட்டும்தான் குளிக்க இயலும். மற்றொரு பக்கம் செல்லவே முடியாது. ஆண்கள் பத்து நிமிடம்.. பெண்கள் பத்து நிமிடம். சண்டைக்காரன் உடம்பு பிடித்துவிட்டதைப்போல தடதடவென்று உடம்பில் கொட்டும் அருவி சுகத்திலிருந்து பத்து நிமிடத்தில் யார் வருவார்..? இதற்காகவே கையில் விசிலோடும், கம்போடும் நிற்கிறார் ஒரு போலீஸ்காரர். பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை விசிலடித்து குளிப்பவர்களை வெளியேற்றி, காத்திருப்பவர்களை அனுமதிப்பதுதான் அவர் வேலை. மறுபடியும், மறுபடியும் வரிசையில் நின்று குளித்தாலும் விருப்பத்தோடு தன் நோக்கி இழுக்கிறது அருவி.


பாண தீர்த்தம் அருவி..

நேரம் கடந்து கொண்டிருந்தது..வழிந்தோடும் நீர் திவலைகளோடு எங்களை ஏற்றிக்கொண்டு, கரைநோக்கி நகரத் தொடங்கியது படகு. அப்போதும், தன் நீண்ட வெண்கரங்கள் நீட்டி ப்ரியத்துடன் அழைத்தபடியே இருந்தது பாண தீர்த்தம். ஒரு வேளை திரும்பி சென்றிருந்தால் தன் தீராத தீர்த்த ரகசியத்தை சொல்லியிருக்குமோ..!


கொக்கரை:அகஸ்தியர் அருவிக்கும், பாண தீர்த்தம் அருவிக்கும் இடையே இருக்கிறது அந்த மலை மண்ணின் பூர்வ குடிகளான காணிக்காரர்களின் குடியிருப்பு. 183 குடும்பங்கள் இருக்கின்றன இங்கு. உலக இயல்புகள் அனைத்தும் இங்கு வந்துவிட்டன என்றாலும் இன்னும் சில பிரத்யேக பழக்கங்கள் இவர்களிடையே புழங்குகிறது. கிராமத்தின் மூத்த பெரியவரான ராமன்காணி வெற்றிலை சாறு தெறிக்க அத்தனை ஆர்வமாக பேசுகிறார்.

"பேய் பிடிக்கிறது, காய்ச்சல் அடிக்கிரது மாதிரி சின்னச்சின்ன உடம்பு சரியில்லாம போறதுக்கெல்லாம் நாங்க மருந்து மாத்திரை சாப்பிட மாட்டோம். சாத்துப்பாட்டு பாடியே எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம். சாத்துப்பாட்டுன்னா, எங்க வன தேவதையை வேண்டி நாங்க பாடுற பாட்டு. அப்படி பாட்டுபாடும்போது இந்தா இருக்குப் பாருங்க இதை அடிப்போம். இதுக்கு பேரு கொக்கரை. சாத்து வைக்கிறதுன்னு முடிவானுச்சுன்னா, அன்னைக்கு ராத்திரி யாரும் தூங்க மாட்டோம். பாட்டைப் பாடி, கொக்கரையை அடிச்சு ரா முழுக்க நடத்துனா எந்த பேயும், 'நான் போறேன்'னுட்டு ஓடிடும்..முன்னயெல்லாம் எல்லாத்துக்கும் சாத்து வைப்போம். இப்பவெல்லாம் எப்பயாவதுதான் வைக்கிறோம். மித்தபடி எல்லாம் டவுணு மருந்துக்கு மாறிட்டாக. இந்தா இந்த கொக்கரை கூட துருப்பிடிச்சுக் கிடக்குப் பாருங்க.." என்கிறார் அந்தப் பெரியவர்.இதே மேற்கு தொடர்ச்சி மலையின் வேறு சில பகுதிகளில் காணி இனத்தவர்கள் வசிக்கின்றனர். அவர்களுடன் மட்டுமே இவர்கள் கொள்வினை, கொடுப்பினன வைத்துக் கொள்கிறார்கள். ஊர் கட்டுப்பாடுகளை மீறினால் ஊர் விலக்கு செய்வது போன்ற கட்டுப்பாடுகள் இப்போதும் உண்டு.

குறிப்பு: நான் பாண தீர்த்தம் சென்றபோது கேமராவை உபயோகிக்க முடியாத அளவுக்கு மழை கொட்டியது. இதனால், கேமராவை கரையிலேயே வைத்துவிட்டு படகேற வேண்டியதாகிவிட்டது. இல்லையெனில் அந்த நீர் எழுச்சியின் உண்மையான வடிவத்தை உங்களுக்குக் காட்டியிருக்கலாம். இங்கு இருப்பவையும் பாண தீர்த்தம் அருவியின் புகைப்படங்கள்தான். இவை, சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் மிகக்குறைவாகக் கொட்டிய சமயத்தில் எடுக்கப்பட்டவை.

6/7/07

கலைந்தது கலாம் கனவு..! பிழைத்தது இந்தியா..!க்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நிறைவாழ்வு வாழ்வது போலவும், கனவு காணத்தெரியாமல்தான் சிரமப்படுகிறார்கள் என்பது போலவும் வந்த நாள் முதலாய் ஒட்டுமொத்த நாட்டையும் கனவுக் காணச்சொல்லி சாமியாடிக்கொண்டிருந்தார் அரசவை கோமாளி ( நன்றி: புதிய கலாசாரம்) அப்துல் கலாம்.

கிராமங்களில் பத்து நாள் திருவிழாவின் நாடகங்களில் ஒரே பப்பூன் தினமும் வந்தால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடுமென தினமொரு நபர் பப்பூனாக வருவது போல, ஐந்து வருடங்களுக்கொரு முறை அரசவை கோமாளி மாற்றியமைக்கப்படும் வைபவத்தில் இப்போது அப்துல் கலாமுக்கு 'நன்றி, வணக்கம்' சொல்லிவிட்டனர். அடுத்த கோமாளி தயாராகிக்கொண்டிருக்கிறார்.

எல்லோரையும் கனவு காணச்சொன்ன அப்துல் கலாம், இன்னொரு முறை அதே நாற்காலியை தக்க வைத்துக் கொள்ளலாம் என கனவு கண்டார். ஆனால், முடியவில்லை. வீழ்ந்துபோன அவரது கனவால் நாட்டில் பல பேர் சந்தோஷக் கூத்தாடிக்கொண்டிருப்பதாகக் கேள்வி. கலாம் காலியானதால், யார், யாரெல்லாம் எந்தெந்த வகையில் நிம்மதியாக இருப்பார்கள்..?

1. ஜனாதிபதி மாளிகையின் புகைப்படக்காரர் 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுவார். சாக்பீஸில் தாஜ்மகால் செய்த பத்து வயது சிறுவன் முதல், நாக்கில் அலகு குத்தி லாரியை இழுத்த இளைஞன் வரை, சாதனை என்ற பெயரில் கொத்து, கொத்தாக கிளம்பி வருபவர்களை கலாமுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் கொடுமையிலிருந்து அவர் தப்பித்தார்.

2. 'ஒட்டன்சத்திரம் மூலம் பௌத்திரம் டாக்டர் கே. என். ராய், ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்தார்..' என்பது மாதிரியான கேணத்தனமான பத்திரிகை செய்திகளிலிருந்து மக்களுக்கு விடுதலை

3. பத்து நாளைக்கொரு முறை தேசிய ஜோசியக்காரராக மாறி, ' 2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும்' என்ற வறட்டு ஜம்ப ஸ்டேட்மெண்ட் கொஞ்சமாவது குறையும்.

4. 'ஜனாதிபதிங்குறது எம்மாம்பெரிய வேலை.. அங்கப்போயி வேலையைப் பாருய்யான்னா, சின்னப்புள்ளைகக்கூட வெளாடுறாருப் பாரு..' என்று எங்கள் கிராம பெரியவர் ஒருவர் சொன்னார். குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது தவறில்லை. ஆனால், ஊடக வெளிச்சத்தில் அவர் குழந்தைகளை கொஞ்சுவது மட்டும்தான் நம் கண்ணுக்குத் தெரிகிறது. அதற்குப் பின்னால் அந்தக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் நமக்குத் தெரிவதில்லை.

ஜனாதிபதி வருகிறார் என்றால், அந்த விழாவுக்கு வர வேண்டிய பள்ளிக் குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் வேலை, அதற்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே ஆரம்பித்துவிடுகிறது. அந்தக் குழந்தைகள் யார், அவரது பெற்றோர்கள் யார், விழா நாளன்று எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன பேச வேண்டும் என்றெல்லாம் ஏராளமான முன் தயாரிப்புகள் உண்டு. ஜனாதிபதியிடம் கேட்க விரும்பும் கேள்விகளை முன் கூட்டியே எழுதி வாங்கி விடுகின்றனர். விழா நடக்கிற தினத்தில் ஜனாதிபதி வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே அரங்கத்தில் அல்லது அறைக்குள் அடைக்கப்பட்டு விடுகின்றனர். பல இடங்களில் ஜனாதிபதியை வரவேற்க பள்ளி மாணவிகள் கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் கால் கடுக்கக் காத்துக் கிடக்கின்றனர். இதிலிருந்தெல்லாம் இனி அவர்களுக்கு விடுதலை. ( தன் பதவிக்காலத்தில் ஏராளமான குழந்தைகளை சந்தித்த கலாம், இந்த சீரற்ற கல்விமுறை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உகந்ததுதானா.. குறைந்தபட்சம் தான் விரும்பும் வல்லரசை உருவாக்க இந்த கல்விமுறை போதுமானதா என்று ஒரு முறை கூட கேள்வி எழுப்பியதில்லை..)

5. 'இந்தியாவோட ஜனாதிபதியே ஒரு முஸ்லிம்தான்.. அப்புறமென்ன..?' என்ற காவிகளின் போலி கூக்குரல் ஒழியும். முதலாளியே தொழிற்சங்கம் அமைப்பதுபோல, காவிக்கூட்டத்தால் முன்னிருந்தப்பட்ட 'சிறுபான்மையினரின் பிரதிநிதி'யான அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்ததற்காக சங் பரிவாரங்கள் வேண்டுமானால் பெருமை கொள்ளலாமே ஒழிய, இஸ்லாமியர்கள் பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை.

6. புத்தர் சிரிப்பார்.இனி அப்துல் கலாம் என்ன செய்யலாம்..?

1. 'கனவு காண்பது எப்படி..?' என்றோ, 'கனவுகளும், அதன் பலன்களும்' என்றோ இந்தியாவின் எல்லா மொழிகளிலும் புத்தகம் எழுதலாம். ஒவ்வொரு எலிமண்ட்ரி ஸ்கூலிலும் போய் அதனை விற்பனை செய்யலாம்.

2. ஊர், ஊருக்கு கனவு காண்பது எப்படி என்று பயிற்சி பட்டறை நடத்தலாம். அவரே நேரடியாக கனவு கண்டு செய்முறை பயிற்சி அளிக்கலாம்.

3. காசியிலோ, கங்கையிலோ குடிசை அமைத்து 'வல்லரசு நமக, வல்லரசு நமக' என்று யாகம் செய்யலாம்.

4. தன்னை ஒரு முழுமையான சுயம் சேவக் என அறிவித்துவிட்டு, ராமேஷ்வரம் டூ ராஷ்ட்ரபதி பவன் ரத யாத்திரை போகலாம்.

5. வாஜ்பாயை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்று மூட்டு வலிக்கு மருந்து போடலாம்.

6. ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில், 'அப்துல் கலாம்னா, தொப்பி வச்சுக்கிட்டு தொழுகை பண்ணுவேன்னு நினைச்சியா..? என் பழைய ரெக்கார்ட்ஸையெல்லாம் எடுத்துப் பாரு..' என்று சுஜாதா எழுதும் வசனத்தைப் பேசி ஒரு கெஸ்ட் ரோல் பண்ணலாம். செவ்வாய் கிரகத்தில் குவிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை 2020-க்குள் ஒழிப்பது குறித்து அடுத்த படம் எடுக்க ஷங்கரை வற்புறுத்துவதோடு, அதற்கான விஞ்ஞான பூர்வ திரைக்கதையை சுஜாதாவோடு இணைந்து தயாரித்து அரங்கனின் காலடியில் வைத்து சேவிக்கலாம்.

7. 'குடிமகனாய் இருக்கும் நீங்கள் முதல் குடிமகனாக மாறுவது எப்படி..?' என மணிமேகலை பிரசுரத்தில் புத்தகம் போடலாம்.

8. குமுதத்தில் எப்படியாவது இடம் பிடித்து, 'கண்ணைத் திற.. கனவு வரட்டும்' என ஆன்மிகம் கலந்த அறிவியல் தொடர் எழுதலாம்.

9. 'ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலுக்கும் எனக்கும் பதினாலு தலைமுறை உறவு இருக்கு. அதனால என்னை அங்க அர்ச்சகரா நியமிக்க சிபாரிசு பண்ணனும்' என காஞ்சி 'காம'கோடி சங்கராச்சாரியிடம் அப்ளிகேஷன் கொடுக்கலாம்.

10. மலைச்சாமி தேர்தல் கமிஷனராக இருந்து பதவிக்காலம் முடிந்ததும் அ.தி.மு.க.வில் சேர்ந்து சேவை செய்ததைப் போல அப்துல் கலாமும், அ.தி.மு.க.வில் சேரலாம். கட்டாயம் அம்மா, ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியாவது தருவார்.

11. சாய்பாபா வாயில் லிங்கம் வருவது எப்படி என்று பாபா வாயில் அணுகுண்டு வைத்து வெடித்து ஆராய்ச்சி செய்யலாம். இந்த ஆபரேஷனுக்கு 'பாபா மரித்தார்' என பெயர் வைக்கலாம்.அப்துல் கலாம் ஜனாதிபதியாக இல்லாததால் யார் யாருக்கெல்லாம் நஷ்டம்..?

1. பத்திரிகை கார்ட்டூனிஸ்டுகளுக்கு ஒரு கோமாளி கேரக்டர் போய்விட்டது.

2.சிறந்த முறையில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர், பத்து நிமிடத்தில் நூறு நாடுகளின் தலை நகரங்களை ஒப்புவிக்கும் சிறுமி போன்றவர்களுடன், கூட நின்று புகைப்படம் எடுப்பதற்கு சளைக்காமல் போஸ் கொடுக்கும் ஒரு நபர் இனி கிடைக்க மாட்டார்.

3. ஊத்தவாயன் ஜெயேந்திரனுக்கும், வணங்காமுடி சாய்பாபாவிற்கும் அவர்களின் வி.ஐ.பி. அடிமை பக்தர்களில் ஒருவர் குறைந்துவிடுவார்.