18/6/07

கற்றதனால் ஆன பயனென்ன..?"பைசா பிரயோஜனம் இல்ல.. இதை என்ன கருமத்துக்குப் படிக்கணும்..?" என்று இந்த தலைமுறை கல்வியை கரன்ஸியால் அளவிடுகிறது. கல்வி கற்பிப்பதே வணிகமாகிவிட்ட சூழலில் முதல் போட்டவர்கள் அதை வட்டியோடு திருப்பி எடுக்க நினைக்கின்றனர். இந்த சூழலில், தமிழின் சில எழுத்துக்களைப் பார்த்தால் உண்மையிலேயே 'இவற்றால் பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லையே..' என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சின்ன வயதில் வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும், சில நாட்களில் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமுமே என் முன்னால் அமர்ந்திருக்க, நான் 'கா..ஞா..சா..' என்று கால்சட்டையோடு நின்று கத்துவேன். எதிரில் உள்ள மாணவர்கள் உரத்த குரலில் அதை கோரஸாக எதிரொலிப்பார்கள். அப்படிப் படிக்கும்போதுதான் கீழ்கண்ட எழுத்துக்களையும் படித்திருப்பேன் போல.. ஆனால், இப்போது அனைத்துமே 'வெள்ளெழுத்துகளா'கத்தான் தெரிகின்றன.

'ஞ' வரிசையில் ஞீ, ஞு, ஞூ, ஞெ, ஞே, ஞொ, ஞோ, ஞௌ... போன்ற எழுத்துக்களைப் பார்த்தால் இவையெல்லாம் தமிழ் எழுத்துக்கள்தானா என்று சந்தேகமே வருகிறது.

'ட' வரிசையில் 'டௌ' என்ற எழுத்து வருகிறது. சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதும்போது இந்த எழுத்துப் பயன்படலாமேயன்றி, இந்த எழுத்தைப் பயன்படுத்திய நேரடி தமிழ் வார்த்தைகள் எதுவும் நான் இதுவரைக்கும் படித்ததில்லை.

வாய்பாட்டில் மேலிருந்து கீழாக 'கௌ' வரிசையில் பல எழுத்துக்கள் படிக்கவே காமெடியாக இருக்கின்றன. ணௌ, தௌ, நெள, லௌ, வௌ, ழௌ, ளௌ, னௌ போன்றவற்றை தட்டச்சும்போதே புதியதாக தெரிகிறது. 'ழௌ'வும், இதன் நெடிலெழுத்தும் எந்த வார்த்தையிலாவது வருகிறதா..?

'ங' வரிசையில் ங-வையும், ங்-யையும் தவிர்த்த எழுத்துக்களைப் பயன்படுத்தி யாராவது ஒரு தமிழ் வார்த்தை சொல்லுங்களேன் பார்ப்போம். இந்த வரிசையில் இந்த இரண்டு எழுத்துக்களைத் தவிர ஏனைய எழுத்துக்களை தட்டச்சவே எ -கலப்பையில் வசதியில்லை. அந்த மென்பொருளை உருவாக்கியவர்களே, இந்த எழுத்துக்களின் பயன்பாடின்மையை உணர்ந்திருக்கிறார்கள் போல.. 'றவ்' என்ற உச்சரிப்புடன் கூடிய 'கௌ' வரிசை எழுத்தையும் எ-கலப்பையில் தட்டச்ச முடியவில்லை. ஆனால், இவற்றைதான் சின்ன வயதில் மெனக்கெட்டு 'நெட்டுரு' போட்டு படித்திருக்கிறோம்.

இந்த உண்மைகள் அனைத்தையும் பண்டிதர்கள் யாவரும் வாய் மூடி ஏற்றுக்கொண்டபோது; மொழியைக் குறை சொன்னால், திருத்தினால் நம்மை இன துரோகியாக்கிவிடுவார்களோ என்று மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருந்தபோது, தன் பட்டறிவுகொண்டு தமிழை திருத்தி, வளப்படுத்தியவர் தந்தை பெரியார். முழுமையாக இல்லையென்றாலும் பகுதியளவிலாவது அவர் முன்வைத்த எழுத்து சீர்திருத்தம் இப்போது வரைக்கும் முழுமையாக நடைமுறைக்கு வராதது வருத்தமே.

மொழியை முழுதாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை. அதை முழுதாக பயன்படுத்த வேண்டும்/ பயன்படுத்த விரும்புபவர்களுக்குப் பயன்பட வேண்டும் இல்லையா..? இப்படி பயன்படாத எழுத்துக்கள், எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் புதிய நுட்பங்களுக்கு தமிழை பழக்க, நுட்பவியலாளர்கள் எத்தனை சிரமப்பட்டிப்பார்கள்...? இந்த சிரமத்தின் பொருட்டே பல இணைய/ கணிணி நுட்பங்கள் தமிழில் சாத்தியப்படாமல் போயிருக்கலாம் அல்லது தள்ளிப்போயிருக்கலாம்.

ஆனால், அவசியமில்லாமலா அந்த எழுத்துக்களை தோற்றுவித்திருப்பார்கள்..? இருவேறு எழுத்துக்களின் நுணுக்கமான ஒலி வடிவ வேறுபாட்டுக்குள், வெவ்வேறு அர்த்தங்களை ஒழித்து வைத்திருக்கிற தமிழ்மொழிக்குள், இந்த எழுத்துக்களுக்கும் ஏதோ ஒரு தேவை இருந்திருக்க வேண்டும். பயன்பாடில்லாத எழுத்துக்களை தோற்றுவித்திருக்க முடியாது. எனில் இந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியிருந்த இலக்கியங்கள் என்னவாயின..? அந்த எழுத்துக்கள் கொடுத்த வார்த்தைகள், அவை சொன்ன அர்த்தங்கள், சுட்டிய பொருள்கள், செயல்கள் எல்லாம் எங்கே..?

பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்று சொல்கிற அளவுக்கான அறிவு எனக்கில்லை. இதை எழுதிய பிறகு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிற சில எழுத்துக்கள் அடங்கிய வார்த்தைகளையாவது உங்களில் சிலர் அறியத்தருவீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் தட்டச்சுகிறேன். அப்படி
அறிந்தவர்கள் சொன்னால், என்னைப் போல நினைக்கிற மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.