கம்பன் கிரிக்கெட் க்ளப்(OR) ஆழிவாய்க்கால்-28




மொட்ட வெயிலு அடிச்சு ஊத்துது. காலுக்கும் கீழ கங்கைக் காய்ச்சி ஊத்துனமாறி இருக்கு. ''அரிசி வாங்கப் போவனும். கூப்பன்காரன் மூடிபுட்டுப் போயிடுவான். வாடா சீக்கிரம்.."னு மேலண்ட பக்கம் ஒதியமர நிழல்ல ஒதுங்கி நின்னு எங்க அம்மா கூப்பிடுது. காதுல வாங்கனுமே...ம் ஹூம். நாலஞ்சு தடவைக் கூப்பிட்ட பிறகு, ''பொறும்மா.. இந்த ஓவர் முடியட்டும்"ங்குறேன். எங்க அம்மாவுக்கா எரிச்சலுன்னா எரிச்சல். வந்து முதுகுலயே படார், படார்னு அடிச்சு, ''ஓவராவுது...கீவராவுது. இங்க என்ன வேப்பமர நெழலா விரிஞ்சுக் கெடக்கு..?" என்று திட்டியபடியே இழுத்துப் போனாள்.

அது ஒரு அழகிய வெயில் காலம். வெயில், மழை ஒரு மண்ணும் தெரியாது. எப்போதும், பேட்டும் பந்துமாகத்தான் திரிவோம். எவனாவது ரெண்டு பேர் சந்தித்தால், 'கிரவுண்ட்ல யார் இருக்கா..?' என்பதுதான் கேள்வியாக இருக்கும். ஊர் உலகம் போலவே என் பால்யமும் கிரிக்கெட்டால் சூழப்பட்டிருந்தது.

ஒரத்தநாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலான கிராமங்களில் 'த்ரிரோசஸ் கிரிக்கெட் க்ளப், வின்ஸ்டார் கிரிக்கெட் க்ளப், ப்ளாக் ஸ்டார் கிரிக்கெட் க்ளப்' என்றெல்லாம் ஏதாவது ஒரு பெயரில் கிரிக்கெட் க்ளப் வைத்திருப்பார்கள். க்ளப் என்றால், பெரிதாக ஒரு கண்றாவி, காடாத்தும் இருக்காது. ஒரு டீம் ஃபார்ம் பண்ணும் அளவுக்கு கிரிக்கெட் விளையாடுபவர்களின் எண்ணிக்கை இருந்தால் போதும்.. ஒரு கிரிக்கெட் க்ளப் தயாராகிவிடும். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு கிராமத்தில் கிரிக்கெட் டோர்ணமெண்ட் நடத்துவார்கள். அந்த நேரத்தில் சுற்றியிருக்கும் கிராமங்களின் அத்தனை கிரிக்கெட் க்ளப்களும் திரண்டு வந்து வெயிட் காட்டும். அப்படி மற்றவர்கள் அட்டகாசம் பண்ணிய நேரத்தில் நாங்கள் கபடியை விட்டுத் தாண்டியிருக்கவில்லை.

'இப்படியே இருந்தா நம்ம ஊரு ரொம்ப பின் தங்கிப்போயிடும்' என்ற தீர்க்க தரிசன யோசனையில், என் சோட்டு சேக்காளிகள் ஒன்று சேர்ந்து மணியார் கொள்ளையில் கிரிக்கெட்டைத் தொடங்கினோம். மூன்று கொட்டக் குச்சிகளை ஒடித்து, மணலை குமித்து நட்டு வைத்து, தென்னை மட்டையின் அகலமாக இருக்கும் அடிபாகத்தை அரிவாள் கொண்டு ஒரு சைஸாக வெட்டி(பேட்டாம்...!), ஆளுக்கு எட்டணா காசுபோட்டு வேம்பு கடையில் ஐந்து ரூபாய்க்கு பந்து வாங்கி நாங்கள் விளையாட தொடங்கியபோது, அது ஒரு பெரிய சரித்திரத்திற்கான காள்கோள் விழா என்பது எங்களுக்கே தெரிந்திருக்கவில்லை.

முதன்முதலில் விளையாட ஆரம்பித்தபோது பேட்டிங் கூட எங்களுக்குப் பிரச்னையாக இல்லை. கண்ணை மூடிக்கொண்டுச் சுற்றினால், எக்குத்தப்பாக சிக்கிவிடும். ஆனால், இந்த பௌலிங் என்ற எழவை கற்றுக்கொள்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. இதற்காகவே டவுணில் இருந்து அவ்வப்போது விருந்தாளி வரும் பையன்களை காக்காப் பிடித்து பௌலிங் போட பயிற்சி எடுத்துக்கொண்டோம். மெல்ல, மெல்ல எங்களை கிரிக்கெட் சுவீகரித்துவிட்டது. தரிசு நிலம் கிரவுண்டாய் அவதாரமெடுத்தது. நான்கைந்து மாதங்கள் விளையாண்ட பிறகு பக்கத்தூர் ஹைஸ்பீடு கிரிக்கெட் க்ளப் பையன்கள் எங்களை பெட் மேட்ச்சுக்கு விளையாடக் கூப்பிட்டபோது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

'பார்றா...நம்மளையும் மதிச்சுக் கூப்பிடுறாய்ங்க..' என வியந்து அனைவரும் மாய்ந்து, மாய்ந்து பயிற்சி மேற்கொண்டோம். அடுத்த வாரம் மேட்ச் என்று நாள் குறிக்கப்பட்ட நிலையில், 'அவனுங்க பேட் வச்சிருக்கானுக. நாம தென்னை மட்டையில விளையாண்டா நல்லாவா இருக்கும்..?' என்று ஒருவன் வார்த்தையை விட, அது முக்கியமான மானப் பிரச்னையாக தெரிந்தது. உடனடியாக ஊரின் பெரிய மனிதர்களை சந்தித்து மானப் பிரச்னைப்பற்றி சொன்னபோது ஒருத்தர் கூட அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவர்கள்தான் ஊர்மானம் பற்றி அக்கரைகொள்ளவில்லை என்றால், நாங்களும் அப்படியே விட்டுவிட முடியுமா..? அவனவன் வீட்டிலிருந்து ஆளுக்கு சில மரக்காய்கள் நெல் திருடிக்கொண்டு வந்து விற்று, 250 ரூபாய் செலவில் வாங்கினோம் முதல் பேட். வெளிறிய மஞ்சள் நிறத்திலான அந்த பேட்டில், 'CS' என எழுதப்பட்டிருக்கும். அதை யார் பாதுகாப்பது என தினசரி பெரிய போட்டியே நடக்கும். எங்கள் அனைவருக்கும் அது ஒரு இனிய நண்பனாகிப்போனது.

மேட்ச் நாள் வந்தது. பேட் வாங்க பணம் தர முடியாது என்று சொன்ன பெரிய மனிதர்கள் கூட், 'நம்ம ஊர் பசங்க பக்கத்து ஊர் பசங்களோட விளையாடுறாங்களாம்..' என்று வேடிக்கைப் பார்க்க மட்டும் வந்தார்கள். அந்த ஹை ஸ்பீடு அணி அத்தனை லோ ஸ்பீடாக இருக்கும் என்பது அன்றுதான் எங்களுக்குத் தெரிந்தது. இருபது ஓவர் ஆட்டத்தில் முதலில் பேட் பிடித்த நாங்கள் எடுத்தது வெறும் எழுபது ரன்தான். ஆனால் என்ன கொடுமை..அவர்களால் அதைக் கூட எடுக்க முடியாததால், நாங்கள் முதல் போட்டியிலேயே வெற்றியை ருசித்தோம். அந்த மேட்சில் ஜெயித்த பத்து ரூபாயைக் கொண்டு இரண்டு பந்துகள் வாங்கி ஸ்டாக் வைத்துக்கொண்டோம்.




ஒரு பெட் மேட்ச்சில் ஜெயித்தப் பிறகும் அணிக்குப் பெயர் வைக்காமல் இருப்பது எங்களுக்கு பெருத்த அவமானமாக இருந்தது. ஆளாளுக்கு, சேலஞ்சர், டேஞ்சரர்,கில்லர் என்று டெர்ரராக பெயர் சொல்லிக்கொண்டிருக்க நான் சொன்னேன் பாருங்கள் ஒரு பெயர், 'கம்பன் கிரிக்கெட் க்ளப்'. அந்தப் பெயரைக் கேட்டதும் எல்லாப் பயலும் கிர்ரடித்துப் போனான். இறுதியில் நான் சொன்ன பெயரே முடிவானது கம்பனுக்கும், கிரிக்கெட்டிற்கும் முடிச்சுப் போட்டு என் தமிழுணர்வு பொங்கி வழிய, க்ளப் என்ற அடுத்த வார்த்தையில் பொங்கி வந்த தமிழுணர்வுக்கு பொங்கல் வைக்கப்படுவதை அப்போது அறிந்திருக்கவில்லை.

இப்படியாக எங்கள் கிரிக்கெட்டாயனம் நடந்துகொண்டிருக்க, கம்பன் கிரிக்கெட் க்ளப் சார்பாக டோர்ணமெண்ட் நடத்த திட்டமிட்டோம். முதல், இரண்டாவது, மூன்றாவது, ஆறுதல் பரிசுகள் முறையே 1000, 900, 800, 500 என முடிவானது. ஊரின் பெரிய மனிதர்களைப் பிடித்து பரிசுகளை ஒத்துக்கொள்ள வைத்தோம். இரண்டு கிரிக்கெட் பேட்டுகள், இருபது டென்னிஸ் பந்துகள், இரண்டு செட் ஸ்டெம்ப்புகள், (இதில் பெரிய கொடுமை என்னவென்றால், டென்னிஸ் பந்தில் விளையாட பேடு கூட வாங்கினோம்), கீப்பர் க்ளவுஸ், ஸ்கோர் புக் என விளையாட்டுப் பொருட்களை வாங்க ஒரு ஸ்பான்ஸர் பிடித்தோம். ஊர் முழுக்க ரேடியோ கட்ட உள்ளூர் மைக் செட்காரரை குறைந்த ரேட்டிற்கு ஒப்பந்தம் செய்தோம். நோட்டீஸ் அடிக்க ஒருவரை ஸ்பான்ஸர் பிடித்தோம். 'ஆழிவாய்க்கால் கம்பன் கிரிக்கெட் க்ளப் நடத்தும் முதலாமாண்டு மாபெரும் கிரிக்கெட் திருவிழா' என்று கெத்தாக தயாரானது நோட்டீஸ். பத்து வாடகை சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சுற்றியிருக்கும் சுமார் முப்பது கிராமங்களுக்கும், தஞ்சாவூர், ஒரத்தநாடு, வல்லம் வரைக்கும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.

இப்படியான டோர்ணமெண்ட்டுகளில் பொதுவாக போட்டியின் விதிகள் நோட்டீசிலேயே அச்சடிக்கப்படும். அதன்படி, முக்கியமான நிபந்தணை, கைலி அணிந்து விளையாடக் கூடாது.(இல்லையெனில், அடிக்கப்பட்ட பந்தை கைலியை விரித்துப் பிடித்துவிட்டு, கையால்தான் பிடித்தேன் என்று அழிச்சாட்டியம் செய்வார்கள்), நுழைவு கட்டணம் நூறு ரூபாய் செலுத்த வேண்டும், இந்த ஊர் அணியைதான் எங்களுக்குப் போட வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது, LBW ஆவுட் கிடையாது(ஏனென்றால் LBW எப்படி கொடுக்க வேண்டும் என எங்களுக்குத் தெரியாது), ஆட்டம் கவர் பந்தில்தான் நடைபெறும், எத்தனை ஓவர்கள் என்பது அப்போதைய சூழலைப் பொறுத்து தீர்மாணிக்கப்படும் என்றெல்லாம் அந்த நிபந்தணைகள் நீண்டன.

போட்டி நாள் வந்தது. மொத்தம் இருபத்தி இரண்டு அணிகள் வந்தன. கிரவுண்ட்டின் பின்பக்கமாக ஒரு கிணறு இருந்ததால், அதில் விழுந்தால் மட்டும் இரண்டு ரன்கள் என்று முடிவு செய்யப்பட்டது. எந்த இரண்டு ஊரைச் சேர்ந்த அணிகள் விளையாடுகிறார்களோ, அவர்களைத் தவிர்த்த வேறு ஊர் அணியைச் சேர்ந்த விவரமான இரண்டு வீரர்களே அம்பயர்களாக நியமிக்கப்பட்டனர். இப்படியாக இருபத்தி இரண்டு அணிகளையும் வைத்து எல்லாப் போட்டிகளையும் நடத்தி முடிக்க மூன்று நாட்களாயின. போட்டியை நடத்துபவர்கள் நேரடியாக இரண்டாவது ரவுண்ட்டில் இறங்கிக்கொள்வது எங்கள் பகுதியின் அறிவிக்கப்படாத விதிகளுள் ஒன்று. அப்படி எங்கள் கம்பன் கிரிக்கெட் க்ளப் இரண்டாவது ரவுண்ட்டிற்குள் இறங்கினாலும் அடுத்த ரவுண்ட்டிலேயே காலி பண்ணிவிட்டார்கள்.(மூன்று சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்தால், அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் ஐநூறு ரூபாய் பரிசு தருவதாக வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியிருந்த மைனர் ஒருவர் அறிவித்தார். ஆனால், யாருமே அடிக்கவில்லை.)



இப்படியாக மொத்தம் மூன்று வருடங்கள் கிரிக்கெட் போட்டிகளை நான் முன்னின்று ஏற்பாடு செய்து நடத்தினேன். மூன்றாவது வருடம் நாங்கள் ஃபைனல் வரைக்கும் வந்துவிட்டோம். தஞ்சாவூரைச் சேர்ந்த அட்வஞ்சர் என்ற அணி எங்களோடு மோதியது. இருபத்தி ஐந்து ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து அவர்கள் அடித்த 132 என்ற இலக்கை வெல்ல நாங்கள் போராடிக்கொண்டிருக்க, எங்கள் கிராமமே திரண்டு வந்து வேடிக்கைப் பார்த்தது. பயங்கர டென்ஷன். எங்கள் மாக்கான்கள் புகுந்து விலாசியதில் நாங்களும் முன்னேறிக்கொண்டிருந்தோம்.

அதே இருபத்தி ஐந்து ஓவர் முடிவுற்ற நிலையில் நாங்கள் எடுத்திருந்த ரன்கள், அதே 132. ஆனால், இரண்டு விக்கெட்டுகள் மீதியிருந்தன. பொதுவாக இப்படி டிராவில் முடிவடைந்தால், விக்கெட் கணக்கின்படிதான் வெற்றி நிர்ணயிக்கப்படும். அதனால், வெற்றிபெற்றது நாங்கள்தான் என முடிவாகி, நாங்கள் கிரவுண்டை சுற்றி ஓடி வந்தோம். தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு அட்வஞ்சர் அணியினரும் வெளியேறிக்கொண்டிருக்க, பரிசு கொடுப்பதற்காக காத்திருந்த எங்கள் ஊர் பெரிய மனிதர்கள் வந்து பஞ்சாயத்தை ஆரம்பித்தார்கள்.

"ஏம்ப்பா...நாமளே போட்டி நடத்தி, நாமளே பரிசை எடுத்துகிட்டா நல்லாவா இருக்கும்..? அதுக்காகத்தான் போட்டி நடத்துறதா..? சுத்துபட்டு ஊர்க்காரனெல்லாம் தப்பா பேசமாட்டான்..? அந்த தஞ்சாவூர் பிள்ளைகளை ஜெயிச்சதா சொல்லுங்க. வேணும்னா நீங்க ரெண்டாவது பரிசை எடுத்துக்குங்க.." என்று அதிரடி பஞ்சாயத்துப் பேசினார்கள். 'வந்துட்டாய்ங்கடா வெள்ளைத் துண்டுக்காரய்ங்க..' என கடுப்பில் 'ஆங்..ஊங்' என்று முரண்டு பிடித்தாலும், இறுதியில் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டோம். விதிகளின்படி தோல்வியடைந்துவிட்டதால் முதல் பரிசை வாங்க அட்வஞ்சர் அணியினரும் தயங்கி நிற்க, "வாங்கிக்குங்க தம்பி.. அடுத்த வருஷமும் தவறாம வாங்க.." என்று அவர்களின் கைகளில் பரிசுப்பணத்தைத் திணித்தார்கள். அப்போது எரிச்சலாக இருந்தாலும், இப்போது பெருமையாகவே மனதில் தங்கி நிற்கிறது அந்த நிகழ்வு.
பத்து வருடங்கள் கழித்து இப்பொழுது...
ஊரிலிருந்து ஒரு போன்கால்.."அண்ணன்...நல்லாயிருக்கீங்களா. இத்தனை வருஷம் கழிச்சு மறுபடியும் இந்த வருஷம் ஊர்ல கிரிக்கெட் போட்டி நடத்துறோம். முதல் பரிசு 5000 ரூபாய். நீங்க ஏதாவது ஒரு பரிசை ஒத்துக்கங்க.." என்றது அந்தப் பையனின் குரல்.
"பணம் தர்றது இருக்கட்டும். டீமுக்கு என்ன பேரு..?"
"கம்பன் கிரிக்கெட் கழகம்"
(குத்திக்காட்றாய்ங்களோ....!)

கருத்துகள்

கதிர் இவ்வாறு கூறியுள்ளார்…
super thala

//'மூன்று சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்தால், அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் ஐநூறு ரூபாய் பரிசு தருவதாக வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியிருந்த மைனர் ஒருவர் அறிவித்தார்.//

rompa vivaramaana aaluyya antha mainar!
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
இப்ப கிரிக்கெட் மேல பெருசா ஒண்ணும் ஆர்வமில்லன்னாலும் படிக்க ரொம்ப சொகமாக இருந்தது ஆழியூரான். நடுநடுவே போட்டிருந்த படங்கள் அருமை!

-மதி
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி...மைனர்கள் எப்போதும் பார்ப்பதற்குதான் காமெடியன்கள். உள்ளுக்குள் விவரமானவர்களே..

மதி...எனக்கும் இப்ப கிரிக்கெட் மேல ஆர்வம் இல்லை. கிரிக்கெட் பார்ப்பதுக் கூட கிடையாது. யார், யார் இப்போது இந்திய அணியில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் கூட இல்லாமல் போய்விட்டது. எல்லாமே பசுமை நிறைந்த நினைவுகளாகிவிட்டன.
Ayyanar Viswanath இவ்வாறு கூறியுள்ளார்…
/'கம்பன் கிரிக்கெட் க்ளப்'. அந்தப் பெயரைக் கேட்டதும் எல்லாப் பயலும் கிர்ரடித்துப் போனான்/

ஆஹா நாங்க பரவாயில்ல சச்சின் கிரிக்கெட் க்ளப் :)
மீண்டும் அந்த வெயில்,வேர்வை,உற்சாக கூச்சலுக்கு நடுவில போயிட்டு வந்த அனுபவம் தந்தது உங்கள் எழுத்து..சூப்பருங்கோவ்
களவாணி இவ்வாறு கூறியுள்ளார்…
//(இதில் பெரிய கொடுமை என்னவென்றால், டென்னிஸ் பந்தில் விளையாட பேடு கூட வாங்கினோம்)// :)

//'மூன்று சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்தால், அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் ஐநூறு ரூபாய் பரிசு தருவதாக வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியிருந்த மைனர் ஒருவர் அறிவித்தார்.//

//மைனர்கள் எப்போதும் பார்ப்பதற்குதான் காமெடியன்கள். உள்ளுக்குள் விவரமானவர்களே// சரியாச் சொன்னீய..


//"கம்பன் கிரிக்கெட் கழகம்"//
அடுத்த தடவை உங்களுக்கு ஃபோன் பண்ணின பையனுக்கு, எதிர் காலத்தில் இன்னோர் பையனிடமிருந்து வரப் போகும் பதில்... "கம்பன் மட்டையடிக் கழகம்"

இளைஞர்களால் தமிழ் வளர்க்கப் படுகின்றதேயன்றி இழிக்கப் படுவதில்லைன்னு அந்தப் பையன் உணர்த்தி விட்டான்.
சுந்தரவடிவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
தஞ்சாவூர், வல்லம்னு போஸ்டர் ஒட்டுன ஆளுக கரம்பக்குடி பக்கம் வந்திருந்து ஒட்டியிருந்தா தெரிஞ்சுருக்கும் கம்பனா, கரம்பக்குடியானுகளான்னு :))
- யெஸ்.பாலபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
சென்னை-28ன் அடுத்த பாகம் மாதிரி நல்லா இருந்தது. சூப்பர் க்ளைமேக்ஸ்.. :)))
லக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கு ஒரேயொரு டவுட்டுங்க.. கம்பனுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வேளை ராமன் கூனி முதுகுல ஒரு பந்தாலடிச்சதா சொல்றாங்களே, அதுவேதான் கிரிக்கெட் அப்படின்றதுக்கு எதுனா ஆதாரம் கீதா? ஏங்கேக்கறேன்னா, அப்படியெதுனா லிங்க் கிடைச்சா பொழுது போகாம உக்காந்திருக்கறப்போ இதை வச்சு ஒரு ஆராய்ச்சியோ இல்லை அரசியலோ பண்ணி புழைச்சுக்காலாமேன்னுதான். :-)
லிவிங் ஸ்மைல் இவ்வாறு கூறியுள்ளார்…
Kiricut க்கு spelling கூட தெரியாத எனக்கே படிக்க சுவாரசியமா இருந்துச்சுன்னா பாத்துக்குங்க!!



சூப்பரப்பு!!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யனார்...சச்சின் கிரிக்கெட் க்ளப் சாதாரணம். கம்பனுக்கு கிரிக்கெட் சொல்லிக்கொடுத்தோம் பாருங்கள்...அங்குதான் நிற்கிறது(ஏன்..எழுந்திரிச்சு நிக்க வேண்டியதானே...எவன் தடுத்தான்..?) ஆழிவாய்க்கால்..

செந்தில்... புதிதாக இப்போதுதான் உங்கள் பெயரை என் பக்கத்தில் பார்க்கிறேன். அடிக்கடி வாருங்கள்..

சுந்தரவடிவேல்..நீங்கள் கறம்பக்குடிக்காரரா என்ன..? ஈச்சங்கோட்டை, பின்னையூர், தென்னமநாடு அணிகளெல்லாம் வந்தன. முதன்முதலாக எனக்கு அறிமுகமான ஒரு கிராமத்தின் பெயரை வலை வழியே சொல்லியிருக்கிறீர்கள். நன்றி...

யெஸ்.பாலபாரதி...உண்மையில் ஆழிவாய்க்கால்-614904 என்பதுதான் சரி. அந்த படத்தின் தலைப்பை உல்ட்டா செய்வதற்காக எங்கள் ஊரின் அஞ்சல் குறியீட்டு எண்ணையே மாற்றிவிட்டேன்.

லஷ்மி...//எனக்கு ஒரேயொரு டவுட்டுங்க.. கம்பனுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?//
கேக்குறீகல்ல...கேக்க வச்சோம்ல.. (தெரிஞ்சா சொல்லமாட்டமாக்கும்..?)

லிவிங்மைல்...நீங்க என்ன தலைகால் புரியாம பாராட்டுறதால, நானும் மப்பு தலைக்கேறி ஒரு உண்மையை சொல்றேன். கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செஞ்சதுதான் நானே ஒழிய, எனக்கு அவ்வளவா வெளையாடத் தெரியாது.சும்மா சவுண்ட் விட்டு, சலம்பல் பண்றதுதான் நம்ம வேலை.
நாடோடி இவ்வாறு கூறியுள்ளார்…
kirama purathila nadakkira cricket pottya padu ethaarthama ezhuthi eruntheenga aazhyuraan,ithe anubavam enakkum irukku,naanu unga ooru pakkam thaanga,enga ooru peru mudalipatti(near pinnayur).intha summarla marupadiyum ooril cricket vilayadiya sugathai thanthathu ungal aazhivaaikkal-28,
great effort,i wish all the best for your all future actions.
natpudan,
pari
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
வேப்பமரத்துக் கட்டில் போல படிக்கும்போது அத்தனை சுகம் ஆழியுரான். கிரிக்கெட் தேசியமதமாகிவிட்ட இத்தேசத்தில் அதை விளையாடும், விளையாடிய எவர்க்கும் பால்யத்தின் நிணைவுகளை கிளறிவிடும் பதிவு
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
'அட' போடவைக்கும் அருமையான நினைவுப்பதிவு...

படங்கள் அருமை...குறிப்பாக முதல் படம்...பட்டாசாக இருக்கிறது...

கடைசி பஞ்ச் அருமை...!!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்