"இது ஒரு கிறுக்கு பயபுள்ள.."

'புத்திசாலியெல்லாம் தன்னை கிறுக்குன்னு சொல்லி பெருமைப்பட்டுக்குறாக.. உண்மையான கோட்டிக்காரன் இங்கன ஒருத்தன் இருக்கேன்..யாரும் கண்டுக்கிடவே மாட்டங்காங்களே..?' என்று புறக்கணிப்பின் தேதனையோடு புழுங்கித் திரிந்த நேரத்தில், 'வாங்க தம்பி' என வாஞ்சையோடு அழைத்திருக்கிறார் திரு.

'எல்லார்க்குள்ளயும் ஒரு பயந்தபய இருக்காம்ண்ணே.. ஆனால் யாரும் இதை ஒத்துக்கிற மாட்டாக. நான் அதை சினிமாவுல பண்றனா..அதைப் பார்த்து அம்புட்டு பேத்துக்கும் சந்தோஷம். இதுதாம்ணே நான் ஜெயிக்கிறதுக்குக் காரணம்' என்று நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நானும் அப்படிப்பட்ட பயந்தபயதான். வீட்டின் ஒற்றை ஆண்பிள்ளை என்று பெற்றோரின் கண்காணிப்பிலேயே வளர்ந்ததன் விளைவாக இருக்கலாம்('உனக்கு உடம்புல தெம்பில்லை..அதை ஒத்துக்க. அதை விட்டுட்டு உன் அப்பன் ஆத்தாளை ஏன் குத்தம் சொல்லுற..?').

ஆனால், இந்த பயத்தை ஒருபோதும் ஒத்துக்கொண்டதில்லை. 'போட்ருவோம்..பொழந்துருவோம்' என்று பேச்சிலேயே வீச்சரிவாள் வீசுவது பழகிப்போய்விட்டது. ஆனால், இந்த வீர வெங்காயமெல்லாம் நோஞ்சான்களுக்கு மத்தியில்தான். கொஞ்சம் உடம்பு தடித்தவர்களிடம் குரல் தாழ்ந்துவிடும். இதனாலேயே சிறுவயதில், சக நண்பர்களோடு சண்டையிட்டு காயப்பட்ட அனுபவங்கள் எதுவும் எனக்கு வாய்க்காமலேயேப் போய்விட்டது. இந்த மனநிலையின் படிநிலை விளைவு, யாரையும் கடினமான வார்த்தைகளால் திட்டுவதுக் கூட எனக்கு தற்போது இயலாத ஒன்று. ஆனால், 'சிங்கம்ல..' என்று கெத்துக்காட்டும் கிறுக்குத்தனம் மட்டும் அவ்வப்போது தலைகாட்டும்.



=>குழந்தைகளை எந்த இடத்தில், எவ்வளவு நெரிசலான இடத்தில் பார்த்தாலும் அவர்களின் தலையைக் கலைப்பதும், கன்னத்தைக் கிள்ளுவதும், என் முகத்தை அஸ்டக்கோணலாக்கி,('உன் மூஞ்சி நார்மலாவே அப்படித்தானே இருக்கும்..?') அவர்களை சிரிக்க வைப்பதும் எப்போது பழகியதென்று தெரியவில்லை.. இப்போதும் தொடர்கிறது. இனியும் விடுவதாக எண்ணமில்லை.

குழந்தைகள் என்றால், அவ்வளவு பிரியம். கடைவாயில் எச்சில் ஒழுக, மெல்லிய இதழ் விரித்து, லேசாக தலை உயர்த்தி சிரிக்கும் ஒரு மழலையின் சிரிப்பில் சுற்றம் யாவும் மறந்து போகிறது. அதன் பஞ்சு விரல்கள் முகத்தில் வருடுவதை கண்மூடி அனுபவித்தால் சொல்லத்தெரியாத சுகம் மனதெங்கும் பரவுகிறது. சுகுணா திவாகரின் கசிவு என்ற கவிதை இந்த அனுபவத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது.

நீங்கள் ஒரு குழந்தையைக்
கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள்.
அதன் பனியொத்த உதடுகளை
நிமிண்டுகிறீர்கள்.
இப்போது
குளித்து முடித்த அதன் தேகத்தை
தழுவுகிறீர்கள்.
கன்னத்தில் அழுந்த
முத்தமிடுகிறீர்கள்.
நல்லது..
இப்போது
நீங்கள் ஒரு கலவியை முடித்துவிட்டீர்கள்


=>பைக் பில்லியனில் உடகார்ந்துக்கொண்டும், பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டும் புத்தகம் படிக்கும் தன் 'தீவிரவாதம்' பற்றி சொல்லியிருந்தார் வரவனையான். நான் இதன் எதிர்துருவம். எந்த இடத்தில் மனதுக்குப் பிடித்த புத்தகம் கிடைத்தாலும், அது பர்ஸுக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் வாங்கிவிடுவேன். ஆனால், படிப்பதில் மகா சோம்பேறி. ஒவ்வொரு புத்தகத்தையும் முதல் ஐம்பது பக்கம் வரைக்கும் படிப்பேன். அதற்குள் அடுத்த புத்தகம் வந்துவிடும். இதைத் தூக்கிப்போட்டுவிட்டு, அதற்கு தாவிவிடுவேன். இப்படியாக ஐம்பது பக்கங்களுக்குள் நுனி மடிக்கப்பட்ட புத்தகங்கள் என் அலமாரியில் ஏராளமாகக் கிடக்கின்றன. கடைசியாக நுனி மடிக்கப்பட்டது ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்கா முதல் கங்கை வரை'.

=>சம்பந்தமில்லாதவர்களிடம் தேவையற்ற விஷயங்களைச் சொல்வது. உதாரணமாக ஒரு ஆட்டோக்காரரிடம், "புது பஸ் ஸ்டேண்ட் பக்கம் சங்கர் நகர் போகணும். அங்க ஒரு ஆபீஸ்ல செக் வாங்க வேண்டியிருக்கு. அதை முடிச்சதும் உடனே வந்திடலாம். எவ்வளவு..?" என்று கேட்பது. 'நீ செக் வாங்கு..மண்ணாப் போ.. அதையெல்லாம் எங்கிட்ட ஏன் சொல்லிகிட்டு திரியுற..?' என்று ஆட்டோக்காரர் நினைக்ககூடும். ஆனாலும் இம்மாதிரி பேசுவதைத் தவிர்க்க முடியவில்லை. எதிராளிக்கும், நமக்குமிடையேயான அந்நியத்தன்மையைக் குறைக்க இந்த 'மேலதிக விவரம் சொல்லல்' பயன்படும் என்ற மனநிலையே இதற்கானக் காரணமாக இருக்கலாம்.('ஆட்டோக்காரன்கிட்ட அந்நியத்தன்மையைக் குறைச்சு என்னப் பண்ணப்போற..?அவன் வீட்டுல பொண்ணு எடுக்கப்போறியா..?').

=>நடப்பது என்பது என் புத்தியில் படிந்துபோய்விட்டது. நடக்கும் தருணங்களில் என் கால்கள் இரண்டும் புத்துணர்ச்சியோடு இயங்குகின்றன. பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் தினமும் 6 கி.மீ. தூரம் நடந்துதான் பள்ளிக்கூடம் போய்வந்தேன். பின்பு பணி புரிவதற்காக, தஞ்சாவூர், திண்டுக்கல், சென்னை என்று பல ஊர்களுக்கும் சென்ற போதும் நடப்பது என்பது பழகிப்போய்விட்டது. குறிப்பாக திண்டுக்கல்லில் வேலைப்பார்த்த நாட்களில் தினமும் ஏதாவது ஒரு கிராமத்தின் வீதியில் நடந்தபடியே இருப்பேன். இந்த நடை வியாதியின் உச்சமாக, ஒரு முறை கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருந்து, கொடைக்கானலுக்கு நடந்து வந்தேன். அடர்ந்த கானகத்தின் செங்குத்தான மலைப்பகுதி.. தூரத்தில் பிளிறும் காட்டெறுமைகள்.. 60 கி.மீ. தூரத்திற்கும் அதிகமான பயணத்தொலைவு. முதல்நாள் காலையில் நடக்கத்தொடங்கி, மஞ்சம்பட்டி என்ற ஆதிவாசிகள் கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்தநாள் மாலையில்தான் கொடைக்கானல் வந்து சேர்ந்தேன். மூச்சுத்திணறி.. நுரைதள்ளி.. மயக்கம் வந்து.. அது ஒரு சாகச பயணம்.

முன்பொருமுறை திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையிலிருந்து பத்து கி.மீ. தூரம் நடந்துசென்று, தென்மலை என்ற பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். என் கையில் கேமரா இருப்பதைப் பார்த்த ஒரு ஆதிவாசி, 'என்னை ஒரு போட்டோ புடிப்பீங்களா..?' என்று ஆசையோடுக் கேட்டார். அவரை உட்கார வைத்து விதவிதமாகப் போட்டோ எடுத்தேன். பின்னொரு நாளில் மறுபடியும் தென்மலைக்கு சென்றபோது புகைப்படங்களை அவரிடம் கொடுத்தேன். புகைப்படங்களையும், என்னையும் பார்த்து அவரின் மொத்த உடம்பும் மகிழ்ச்சியில் குலுங்கியது. என்ன செய்வதென்று புரியாமல், எனக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டுமே என்று நினைத்து, ஓடிச்சென்று ஒரு பாட்டிலில் தேன் கொண்டு வந்துக்கொடுத்தார். "சிறுமலை தேனு..நல்லா இருக்கும்" என்று அவர் நீட்டிய பாட்டில் முழுவதும் ஒரு எளிய மனிதனின் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. ஒரு மலைப்பாதையில் நான் அமர்ந்து, அவரிடம் கேமராவைக் கொடுத்து, என்னைப் புகைப்படம் எடுக்கச் சொன்னேன். ரொம்பத் தயங்கினார். எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து அவர் எடுத்த புகைப்படம் வெகு சிறப்பாக வந்திருந்தது. இன்றும் நான் விரும்பும் என் புகைப்படங்களில் அதுவும் ஒன்று. நீள்சதுர பிரேமிட்டு பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறேன்.

மிகச் சமீபத்தில் திருநெல்வேலி கொக்கரக்குளம் பாலம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். என்னைக் கடந்துசென்ற சைக்கிளிலிருந்து ஒரு டிபன் ஃபாக்ஸ் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அதன் மூடி திறந்துகொண்டது. உள்ளே இரண்டு முழம் மல்லிகைப்பூ வாசத்தோடு எட்டிப்பார்த்தது. எதிரே வரும் பேருந்துக்குள் டிபன் பாக்ஸும், மல்லிகைப்பூவும் அகப்பட்டு விடுமோ என்ற பதற்றத்தில் சைக்கிள்காரர் ஓடி வர, அருகில் சென்றுகொண்டிருந்த நான் இரண்டையும் பத்திரமாக எடுத்து அவரிடம் கொடுத்தேன். டிபன் பாக்ஸ் காப்பாற்றப்பட்டதை விட, மனைவிக்கான மல்லிகைப்பூ சேதமில்லாமல் தன் கைக்கு வந்ததும் அவர் முகத்தில் பெருமகிழ்ச்சி அரும்பியது. ஒருவேளை பேருந்து சக்கரத்திற்குள் அந்த மல்லிகை அகப்பட்டிருந்தால்..? அந்த இரவு அவருக்கு நிம்மதியாக இருந்திருக்காது. நடத்தல் என்பது உடலுக்கு பயிற்சி மட்டுமல்ல..உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் கூட.



=>நடைமுறையில் முடியாத விஷயங்களை மனதிற்குள் கற்பனை செய்துகொள்வது. உதாரணமாக நான் ஒரு திரைப்பட இயக்குனராக வேண்டும் என மனதிற்குள் விருப்பமுண்டு. நடப்பில் அதற்கு வாய்ப்பின்றி வேறு வேலை பார்க்க வேண்டிய சூழல்.இதனால், மனதிற்குள் நான் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனராக மாறிவிடுவதாகவும், ஒட்டுமொத்த இந்தியாவும் 'சத்தியஜித்ரேவுக்கு பிறகு நீங்கள்தான்' என்று என்னிடம் சரணாகதி அடைவதாகவும் ஒரு கற்பனை அடிக்கடி மனதிற்குள் ஓடும். அதன் உப கற்பனையாக, பத்திரிக்கைகளுக்கு எப்படி பேட்டிக் கொடுப்பது, சக இயக்குனர்களை எப்படி திட்டுவது ('நடிகைகளை எப்படி கரெக்ட் செய்துவது..?'- அதையும் சொல்ல வேண்டியதுதானே..?'), நிறைய சம்பாதித்தபிற்கு பணத்தைப் பாதுகாத்துக்கொள்ள அரசியல் கட்சி தொடங்க வேண்டிய அவசியம் வரும்போது அதற்கு என்ன பெயர் வைப்பது, பெரிய இயக்குனர் என்ற பந்தா இல்லாமல் எப்படி நடந்துகொள்வது('ஏய்...ஏய்...இதெல்லாம் அநியாயத்துக்கும் டூ மச்..') என்றெல்லாம் எதையாவது யோசித்தபடியே இருப்பேன். இந்த கற்பனை, சினிமாவோடு மட்டும் நிற்பதில்லை.. வார்டு கவுன்சிலர் முதல், பிரதமர் வரைக்கும் எல்லோரையும் விரட்டிவிட்டு, நானே சகல இடங்களையும் ஆக்கிரமிப்பதாக மனசு தறிகெட்டு அலையும். 'கழுத..காசா பணமா..? எல்லாத்தையும் வச்சுக்க..' என்று அதன்போக்குக்கு விட்டுவிடுவேன்.

=>உருப்படியாக ஏதாவது செய்யும்போது உதாசீனப்படுத்துவதும், கேணத்தனமாக ஏதாவது செய்யும்போது ஊரைக்கூட்டி அறிவிப்பதும்(நன்றி: 'உயரங்களின் ரசிகன்') என் குணங்களில் ஒன்று.

=>அடுத்தவர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல நேரங்களில் என் சுய கருத்தை-அவசியமான தருணங்களில் கூட- வலியுறத்த முடியாமல் போய்விடுகிறது.

=>ஆங்கிலம் கற்றுக்கொள்கிறேன் பேர்வழியென்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை காசை கரியாக்குவது. ஆனால் இன்றுவரை I'am suffering from fever.. என்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது.

இந்த கிறுக்குத்தனங்களில் பங்கெடுக்க லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வநாயகி, மாசிலா ஆகியோரை அழைக்கிறேன். (சீரியஸாக எழுதக்கூடாது என்பது மூவருக்குமான விதி..)

(குறிப்பு: இந்தக் கட்டுரை பூங்கா(ஏப்ரல் 9/2007) இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

-L-L-D-a-s-u இவ்வாறு கூறியுள்ளார்…
சம்த்துப்புள்ளயாய் தானா வண்டியில ஏறிக்கிட்டதற்கு நன்றி..

வாங்க வாங்க வண்டியிலே குந்துங்கோ
செல்வநாயகி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தக் கிறுக்குப் பதிவுகளை(!!!!!) எல்லாருடையதையும் படிக்கலை. அங்கங்க சிலதைப் படிச்சிருக்கேன்.
இப்ப உங்க மடலைப் பாத்ததும்தான் இங்கவந்து பார்த்தேன். நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க:)) ரொம்ப ரசித்தேன். அடுத்தவங்க கிறுக்குத்தனங்களையெல்லாம் படிக்க நல்லா இல்லாமக் கசக்குமா என்ன:))

ஆனாத் திட்டம்போட்டு என்னையும் இழுத்துவிட்டீங்களே:)) அதுல சீரியஸா எழுதக்கூடாதுன்னு நிபந்தனை வேறையா:)) பொதுவாய் இப்படியான விளையாட்டுக்களில் இருந்து ஓடியொளிந்துகொள்ளவே விருப்பம். முன்பொருமுறை தெக்கிக்காட்டானிடம் மாட்டி நிறையநாள் இழுத்தடித்து எழுதிமுடித்தேன். பிரேமலதாவிடம் மாட்டியதை இன்றுவரை நிறைவேற்றவேயில்லை. சுடர் வந்தபோது அது கல்யாணின் நினைவொளி என்பதால் செய்து முடித்துவிட்டேன். இப்போது உங்களிடம் மாட்டியிருக்கிறேன். அழைப்புக்கு நன்றி. ஆர்வம் வரும் ஒருபொழுதில் எழுத முயற்சிப்பேன்.
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்க இன்னும் எழுதவில்லைன்னு நினைவில்லை.. நானும் கூப்பிட்டிருப்பேன்... ;)

//சம்பந்தமில்லாதவர்களிடம் தேவையற்ற விஷயங்களைச் சொல்வது.//
இத கிறுக்குத்தனம்னு தெரியாமயே செய்திட்டிருக்கிறவங்க இருக்காங்க.. நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்க ;)

//நடப்பது என்பது என் புத்தியில் படிந்துபோய்விட்டது. //
இது நல்ல விசயம் தானே? இதில் என்ன கிறுக்குத்தனம்?

இயக்குனர் கற்பனை சூப்பரா இருந்திச்சு.. அப்படியே கன்டின்யூ பண்ணுங்க.. அப்துல் கலாம் சொன்னதை சரியா செய்யுற ஆள் நீர் ஒருத்தர் தான் போலிருக்கு ;)
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
தாஸ்..உங்கள் பட்டியலில் என்னை சேர்க்காமல் போயிருந்தால் நானொரு கிறுக்கென்பது ஊர்
உலகத்துக்குத் தெரியாமலேயேப் போயிருக்கும். நன்றி...

செல்வநாயகி...நீங்கள் உங்கள் கிறுக்குத்தனங்களைப் பட்டியலிட்டால், நான் அழைத்தனால், உங்கள் வசீகர மொழிநடையில் ஒருமுறை எழுதினீர்கள் என்று நான் மகிழ்வேன்.

பொன்ஸ்...நானெல்லாம் அரைக்கிறுக்கு...உள்ளுக்குள்ளயே ஊறிக்கிடக்கும் பழங்கிறுக்கு. சமயம் வரும்போது எட்டிப்பார்க்கும்..அவ்வளவு சீக்கிரம் உங்களால் கண்டுபிடிக்க முடியாதாக்கும்.. :))
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் ஆழியூரான்.

தமிழ்மணத்திலே நடக்கிற சண்டைகளை பார்த்து மனம் வெறுத்து கொஞ்சம் நாளா ஒரு ஓரம் ஒதுங்கி இருந்த என்னை இப்படி கொக்கி போட்டு உள்ளே இழுத்துட்டீங்களே! :-)

உங்க 'கிறுக்கு பயபுள்ள' பதிவை நல்லா தத்ரூபமா எழுதியிருக்கீங்க.
படித்து முடித்த பிறகு ஒருவித பரிதாபத்துக்குரிய பாசம்மும் மரியாதையும்தான் ஏற்பட்டது. எனக்கு அப்படி எல்லாம் எழுத வராதுங்களே!

இருந்தாலும் முயற்சி செய்தே ஆகவேண்டும். வேறு வழியில்லை.

உங்கள் அழைப்புக்கு மிகவும் நன்றிங்க.

நேரம் எடுத்து எழுதுவேன்.
தமிழ்நதி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த நடை விஷயம் ரொம்ப நல்லா இருக்கு. எனக்கும் நடக்கப் பிடிக்கும். வர்றீங்களா கேரளா வரைக்கும் நடந்துட்டு வரலாம்:-)))
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
hey, just i read your writings - first time - about your brought up by parents - i am also like that - my sister would not allowe me to go out.
i am in trichy but belong to Palayamkottai - will please leave your phone - when i come there i will try to meet you but if you permit. -baskar
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
மாசிலா... தான் கிறுக்கு என உணரும் நிமிடங்களில் ஏதோ கொஞ்சம் போல உண்மை பேசுகிறோம் என நினைக்கிறேன். ஒரு நாள் கிறுக்காகித்தான் பாருங்களேன்..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ்நதி....அந்த கேரள அனுபவம் மறக்க இயலாதது. நீங்கள் விரும்பின் மறுபடியும் போய் வரலாம். ஒரே நிபந்தணை..நடைவண்டியில்தான் போக வேண்டும்..::))
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//hey, just i read your writings - first time - about your brought up by parents - i am also like that - my sister would not allowe me to go out.
i am in trichy but belong to Palayamkottai - will please leave your phone - when i come there i will try to meet you but if you permit. -baskar//

அன்பின் பாஸ்கர். என் சொந்த ஊருக்கு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் சொந்த ஊரிலேயே நானிருருக்கிறேன். nadaivandi@gmail.com என்ற என் முகவரிக்கு மடலிடுங்கள். எண்களை பரிமாறிக்கொள்வோம்.(இந்த மாதிரி ஏதாவது ஒரு பொம்பளைப்புள்ள வரும்னு நானும் பாக்கேன்...ம்..ஒண்ணும் நடக்க மாட்டேங்கே..)
காட்டாறு இவ்வாறு கூறியுள்ளார்…
கனவுகள் கலக்கல்! நனவாக வாழ்த்துக்கள்!
thiru இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி,

//குழந்தைகள் என்றால், அவ்வளவு பிரியம். கடைவாயில் எச்சில் ஒழுக, மெல்லிய இதழ் விரித்து, லேசாக தலை உயர்த்தி சிரிக்கும் ஒரு மழலையின் சிரிப்பில் சுற்றம் யாவும் மறந்து போகிறது. அதன் பஞ்சு விரல்கள் முகத்தில் வருடுவதை கண்மூடி அனுபவித்தால் சொல்லத்தெரியாத சுகம் மனதெங்கும் பரவுகிறது.//

இப்படி இல்லாம இருந்தா தானே கிறுக்குத்தனம்?

//கடைசியாக நுனி மடிக்கப்பட்டது ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்கா முதல் கங்கை வரை'.//

அவசியம் இந்த புத்தகத்தை முழுவதும் படியுங்கள். நல்ல வரலாற்று புதினம். இந்திய சூழலை புரிந்துகொள்ள உதவும் ஒரு நல்ல புதினம்.

//இந்த கற்பனை, சினிமாவோடு மட்டும் நிற்பதில்லை.. வார்டு கவுன்சிலர் முதல், பிரதமர் வரைக்கும் எல்லோரையும் விரட்டிவிட்டு, நானே சகல இடங்களையும் ஆக்கிரமிப்பதாக மனசு தறிகெட்டு அலையும். 'கழுத..காசா பணமா..? எல்லாத்தையும் வச்சுக்க..' என்று அதன்போக்குக்கு விட்டுவிடுவேன்.//

:))

//எதிராளிக்கும், நமக்குமிடையேயான அந்நியத்தன்மையைக் குறைக்க இந்த 'மேலதிக விவரம் சொல்லல்' பயன்படும் என்ற மனநிலையே இதற்கானக் காரணமாக இருக்கலாம்.('ஆட்டோக்காரன்கிட்ட அந்நியத்தன்மையைக் குறைச்சு என்னப் பண்ணப்போற..?அவன் வீட்டுல பொண்ணு எடுக்கப்போறியா..?').//

நான் ஆட்டோக்காரர்ட்ட வண்டி புறப்பட்டதும் அவரோட வாழ்க்கை பத்தி கேக்க ஆரம்பிச்சிடுவேன். :)

//ஒரு முறை கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருந்து, கொடைக்கானலுக்கு நடந்து வந்தேன். அடர்ந்த கானகத்தின் செங்குத்தான மலைப்பகுதி.. தூரத்தில் பிளிறும் காட்டெறுமைகள்.. 60 கி.மீ. தூரத்திற்கும் அதிகமான பயணத்தொலைவு. முதல்நாள் காலையில் நடக்கத்தொடங்கி, மஞ்சம்பட்டி என்ற ஆதிவாசிகள் கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்தநாள் மாலையில்தான் கொடைக்கானல் வந்து சேர்ந்தேன். மூச்சுத்திணறி.. நுரைதள்ளி.. மயக்கம் வந்து.. அது ஒரு சாகச பயணம்.//

இந்த அனுபவத்தை ஒரு தனிப்பதிவாக எழுதலாமே.

// என் கையில் கேமரா இருப்பதைப் பார்த்த ஒரு ஆதிவாசி, 'என்னை ஒரு போட்டோ புடிப்பீங்களா..?' என்று ஆசையோடுக் கேட்டார். அவரை உட்கார வைத்து விதவிதமாகப் போட்டோ எடுத்தேன். பின்னொரு நாளில் மறுபடியும் தென்மலைக்கு சென்றபோது புகைப்படங்களை அவரிடம் கொடுத்தேன். புகைப்படங்களையும், என்னையும் பார்த்து அவரின் மொத்த உடம்பும் மகிழ்ச்சியில் குலுங்கியது. என்ன செய்வதென்று புரியாமல், எனக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டுமே என்று நினைத்து, ஓடிச்சென்று ஒரு பாட்டிலில் தேன் கொண்டு வந்துக்கொடுத்தார். "சிறுமலை தேனு..நல்லா இருக்கும்" என்று அவர் நீட்டிய பாட்டில் முழுவதும் ஒரு எளிய மனிதனின் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. ஒரு மலைப்பாதையில் நான் அமர்ந்து, அவரிடம் கேமராவைக் கொடுத்து, என்னைப் புகைப்படம் எடுக்கச் சொன்னேன். ரொம்பத் தயங்கினார். எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து அவர் எடுத்த புகைப்படம் வெகு சிறப்பாக வந்திருந்தது. இன்றும் நான் விரும்பும் என் புகைப்படங்களில் அதுவும் ஒன்று. நீள்சதுர பிரேமிட்டு பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறேன்.//

மனிதம் நிறைந்த ஒரு தருணம். ஆதிவாசிகளிடம் இருக்கும் அற்புதமான குணங்கள் நிறைந்த உலகம் மலருமா? ம்ம்ம்ம்ம்...
மலைநாடான் இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்த மாதிரி ஏதாவது ஒரு பொம்பளைப்புள்ள வரும்னு நானும் பாக்கேன்...ம்..ஒண்ணும் நடக்க மாட்டேங்கே//

கிழிஞ்சுது போ. இது வேறயா..:)

//இந்த நடை விஷயம் ரொம்ப நல்லா இருக்கு. எனக்கும் நடக்கப் பிடிக்கும். வர்றீங்களா கேரளா வரைக்கும் நடந்துட்டு வரலாம்:-))) //

அப்பிடியே என்னையும் சேத்துங்க மக்கா.

"வால்காவிலிருந்து கங்கைவரை " இப்பதான் படிக்கீகளா.. நம்ம பசலுகளுக்கு ஆனா ஆவன்னா மட்டையே அதுதானுங்க:)
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
காட்டாறு, திரு, மலைநாடான்...அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி..


//இந்த நடை விஷயம் ரொம்ப நல்லா இருக்கு. எனக்கும் நடக்கப் பிடிக்கும். வர்றீங்களா கேரளா வரைக்கும் நடந்துட்டு வரலாம்:-))) //

அப்பிடியே என்னையும் சேத்துங்க மக்கா.//

மக்களே..அப்பறம் வேற யாரெல்லாம் இருக்கீங்க..இப்பமே சொல்லிடுங்க..ஏற்பாடெல்லாம் செய்யனும்.

//"வால்காவிலிருந்து கங்கைவரை " இப்பதான் படிக்கீகளா.. நம்ம பசலுகளுக்கு ஆனா ஆவன்னா மட்டையே அதுதானுங்க:) //

அப்பமே படிச்சிருந்தாதான் கிறுக்கு தெளிஞ்சிருக்குமே..
சரண் இவ்வாறு கூறியுள்ளார்…
மேலதிக விவரம் சொல்லல- எய்யா..இதே கோளாறுதான் இங்ங்்னயும் குமிஞ்சி கிடக்கு. அது பொட்டப் புள்ளைககிட்ட பேச கூச்சப்படுற நம்மளை மாதிரியான ஆளுகளுக்கு கிடைச்ச மாற்று ஊக்க சக்தி தெரியுமா? அது இருக்கிறதால தான் கொஞ்சமாவது தெகிரியமா நடமாட முடியுது.
பாருங்க.. இன்னும் சில வருஷங்கள் கழிச்சுப் பார்த்தா ஆழியூரானகிற ஆளு கண்ணதாசன் ரேஞ்சுக்கு "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. ஒரு கோல மயில் என் துணையிருப்பு"னு போய்க்கே இருப்பாரு..மதுரையில டூரிங் டாக்கீஸ்ல மணல் குமிச்சு ''காதல் பரிசு" படம் பார்த்துப்புட்டு நம்ம வைகைப் புயல் வடிவேலு அம்பிகாவை 'திரைச்சீலை' விலக்கிப் பார்த்து்் ஜொள்ளுவிட்டதும்.. அப்புடியே இன்னிக்கு திரையைக் கட் பண்ணிட்டு வெறும் சீலையை விலக்கிப் பார்த்ததும் வரலாறய்யா. கொஞ்சம் அசிங்கமா பேசிப்புட்டேனோ?
கனவு கண்டுட்டீங்கள்ல இனி அதுவா நடக்கும். அதுவரைக்கும் இந்தக் கிறுக்கத்தனத்தை விடாதீ்ங்க. சத்யஜித் ரே, குரு தத், அகிரா குரோசேவால்லாம் கிறுக்கெடுத்த, தினவெடுத்த சின்னப் பய மக்கதான்!
கதிர் இவ்வாறு கூறியுள்ளார்…
எவ்வளவு ஆச்சரியம் பாருங்க தனியாக சாலையிலோ மலையிலோ எங்காவது ஒரு இடத்திலிருந்து இலக்கு நிர்ணயிக்காமல் நடந்து செல்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

//எதிராளிக்கும், நமக்குமிடையேயான அந்நியத்தன்மையைக் குறைக்க இந்த 'மேலதிக விவரம் சொல்லல்' பயன்படும் என்ற மனநிலையே இதற்கானக் காரணமாக இருக்கலாம்//

சரியான காரணம்தான்.மிகவும் ரசித்தேன் இதை. எங்க ஊர்ல ஒரு வாத்தியார் இருக்கார் பயங்கர கூட்டமா இருக்கும் பஸ்ல, டிக்கெட் எடுக்க வர்ற கண்டக்டரிடம் பொண்ணு வீட்டுக்கு போறேன் வத்தக்கொழம்பு பிடிக்குமேன்னு சம்சாரம் குடுத்து விட்டுச்சி(கஷ்டப்பட்டு தூக்குவாளிய தூக்கி காமிப்பாரு) அப்படியே போஸ்ட் ஆபிஸ்ல ஒரு வேலை ரெண்டு வேலையையும் ஓரேடியா முடிச்சிடலாம் பாருங்க அதான் போயிகிட்டுருக்கேன். (யோவ் எங்க போகணும்னு சொல்லித்தொலய்யா அதவிட்டுட்டு கத சொல்றான்.) கமிட்டிகிட்ட நிறுத்தினிங்கன்னா வசதியா இருக்கும் இறங்க.

ஆரோக்கியமான பதிவு.
திங்கள் சத்யா இவ்வாறு கூறியுள்ளார்…
இப்படியான கற்பனைகள் [இயக்குனர் இமையம்]
எனக்கும் வருவதால் அநேகமாக எல்லோர்க்கும் வந்து கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக கற்பனை, சாவு வீட்டில் மேளக்காரனாக கற்பனை சில சமயம் பச்சைக்கிளியாக, அணிலாக என்று அளவில்லாமல் தான் மனிதர்களுக்கு கற்பனை வருகிறது. யாரும் விதிவிலக்கல்ல.

குழந்தையைப் பற்றிய கவிதை அடல்ட்ஸ் ஒன்லி மாதிரி படுகிறது.

அடுத்தபடியாக இங்கிலிசு கற்றுக் கொள்வது. அனால் உங்களைப் போல் காசைக் கரியாக்கவில்லை என்றாலும் நாய் ஜமுக்காளம் வாங்கின கதையாக [இரவில் குளிரும் போது ''எப்படியாவது நாளைக்கு ஒரு ஜமுக்காளம் வாங்கிடனும்'' என்று நினைக்குமாம். மறுநாள் சூரிய வெயிலில் காய்ந்து கொண்டே ''எம் மவராசன் சூரிய பகவான் இருக்கும் போது அநியாயத்துக்கு ஜமுக்காளம் வாங்கறேன்னுட்டு காசைக் கரியாக்கியிருப்பேனே''என்று கைவிடும் கதை போல்] ஆங்கிலம் கற்கும் முயற்சி தோல்வியுடனே பயனிக்கிறது.
தென்றல் இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் ரசித்தேன், ஆழியூரான்... அய்யோ.. உங்க கிறுக்குதனத்த இல்ல..
அதை நீங்கள் சொன்ன விதம்.. ஒவ்வொருவக்கும்ள்ள ஏதாவது ஒரு 'கிறுக்கு'தனமான குணத்தை அழகாய் சொன்னதற்கு ...

அந்த கவிதை ..... ;(

/இந்த மாதிரி ஏதாவது ஒரு பொம்பளைப்புள்ள வரும்னு நானும் பாக்கேன்...ம்..ஒண்ணும் நடக்க மாட்டேங்கே/
கிடைச்சாங்களா இல்லையா..? ;)
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
///இந்த மாதிரி ஏதாவது ஒரு பொம்பளைப்புள்ள வரும்னு நானும் பாக்கேன்...ம்..ஒண்ணும் நடக்க மாட்டேங்கே/
கிடைச்சாங்களா இல்லையா..? ;)//

எங்க மக்கா....? நம்மளைக் கண்டாலே பொண்ணுகல்லாம், பூச்சாண்டியயைக் கண்டாப்ல, வெரண்டடிச்சு ஓடுதுக.(ஒரு விஷயம் தெரியுமா..? உங்க கமெண்ட் வந்த உடனேயே, 'இந்த விஷயத்தை்க்க்க்க்க்க் குறிப்பா் கேக்காகளே..பொண்ணா இருக்குமோ'ன்னு நினைச்சு, ஓடிப்போயி ப்ரொஃபைலைப் பார்த்தா maleனு போட்டிருந்ததைப் பார்த்து வழக்கம்போல ஏமாந்தேன்.)
தென்றல் இவ்வாறு கூறியுள்ளார்…
/... உங்க கமெண்ட் வந்த உடனேயே, 'இந்த விஷயத்தை்க்க்க்க்க்க் குறிப்பா் கேக்காகளே..பொண்ணா இருக்குமோ'ன்னு நினைச்சு, ஓடிப்போயி ... /

எதிர்பார்த்தேன்... ஆழியூரான்! ;)
நான் 'அவள்' இல்லை !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்