17/4/07

'ஊரும் விலகுது...உறவும் விலகுது..தந்தனா..'


'நா
டக நிகழ்வுகளில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இனியேனும் ஆண்கள் அதை தீர்த்து வைப்பீர்கள்தானே..?' என்று கேட்டிருக்கிறார் சினேகிதி. இதோ என் பங்குக்கு என்னால் முடிந்தது.

பிரளயனின் வீதி நாடகக் குழுவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்காமலேயே இருந்தது. மிக சமீபத்தில் அந்த சந்தர்ப்பமும் வாய்த்தது. இந்திய மாணவர் சங்கம் நடத்திய மாணவர் கலாசார கலை இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நெல்லைக்கு வந்திருந்தது பிரளயனின் சென்னை வீதி நாடகக் குழு. பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் விழா. ச.தமிழ்செல்வன், கு.ஞானசம்பந்தன் போன்றோர் பேசி முடித்த பின்பு மேடையேறிய பிரளயன் குழுவினர் முதலில் நடத்திய நாடகம் 'பவுன்குஞ்சு'.

தலைப்பின் எளிமை அல்லது பிரளயன் குழுவைப்பற்றிய அறியாமை ஏதோவொன்றின் காரணமாகவோ ஆரம்பத்தில் பார்வையாளர்களிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. ஒருவகையில் நாடகம் சொல்ல வந்த செய்தி, பார்வையாளர்களின் மனதில் முழுமையாக பதிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

Photo Sharing and Video Hosting at Photobucket

செருப்புக்கு ஏற்ப காலை வெட்டுவது மாதிரி, நடைமுறைக்கு ஒவ்வாத பாடத்திட்டங்களுக்கு கட்டாயமாக பழக்கப்படுத்தப்படுகின்றனர் நம் குழந்தைகள். சுய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத, மனப்பாட திறனை மட்டுமே வளர்க்கும் இந்த கல்வித்திட்டத்தால் மழலையிலேயே நம் மூலைகள் மழுங்குனிகளாக மாற்றப்படுகின்றன. இந்த திணிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பயிற்றுனர்களாக இருக்கும் ஆசிரியர்கள், ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மாறிப்போய்விட்டனர்.

குழந்தை பருவத்தில்தான், மனதெங்கும் மழைக்கால ஈசல்கள் போல புதிது, புதிதாக கேள்விகள் உற்பத்தியாகும். நோக்கமும், விளைவும் அறியாத அந்த பால்மனசின் கேள்விகள் எதையாவது நம் பாடசாலைகள் தீர்த்து வைத்திருக்கின்றனவா..? தீர்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை. குழந்தைகளின் வார்த்தைகளை யாரும் காதுகொடுத்துக் கேட்பதுக்கூட இல்லை. இந்த உணர்வின் உக்கிர தாக்கத்தை, 'ஆயிஷா' என்ற குறுநாவல் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் இரா.நடராஜன். இதைத்தழுவிய நாடக வடிவம்தான் 'பவுன்குஞ்ச'.(அண்மையில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணனின் 'கிறுகிறுவானம்' என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தில், பெரியவர்கள் தன் பேச்சைக் கேட்காததால், மரம், ஆடு, மாடு, அணில், நிழல் என்று யாவற்றுடனும் பேசித்திரியும் சிறுவனின் சித்திரம் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது).

படிப்பின் நிறம், மணம் அறியாத ஒரு கிராமத்து தகப்பன், கூலி வேலை பார்ப்பதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன் மகன் பவுன்குஞ்சை பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கிறார். அவனை ஆசிரியர்கள் படாதபாடு படுத்தி எடுக்கின்றனர். கிராமத்து அப்பாவித்தனத்துடன் எதையாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் பவுன்குஞ்சுவை நோக்கி, 'உன் மனது பரிசுத்தம் அடையுமாக..உன் கலக எண்ணங்கள் கிருமி நீக்கம் செய்யப்படுவதாக.. கேள்வி சாத்தான்கள் உன்னைவிட்டு விலகுவதாக..' என்று மனதெங்கும் கடுப்பு பொங்கி வழிய பரிசுத்த ஆவியின் பெயராலே ஆசிர்வதிக்கிறார் ஆசிரியர்.

அன்று ஆங்கிலப் பாடம். ஒவ்வொரு மாணவராக வரச்சொல்லும் ஆசிரியர், எண்ணெயை பாட்டிலில் நிரப்புவதற்கு பயன்படுத்தும் புனலை மாணவரின் வாயில் வைத்து,'a,b,c,d,e,f...' என்று கடகடவென்று ஒப்பிக்கிறார். அடுத்த நாள் வகுப்பில் ஒவ்வொரு மாணவருக்கும் அருகில் செல்கிறார். மாணவர,் முழு வேகத்தில் அடி வயிற்றிலிருந்து குரலெழிப்பி வாந்தி எடுக்கிறார். வந்து விழும் வாந்தியைப் பார்த்து,'a,b,c,d,e,f.. அருமை..' என்று உச்சி முகர்ந்துப் பாராட்டுகிறார ஆசிரியர்். இப்படியே ஒவ்வொரு மாணவராக வாந்தியெடுக்கின்றனர். கணிதம், அறிவியல்..என்று அனைத்துப் பாடங்களுக்கும் இந்த புனல்,வாந்தி..பயிற்றுமுறை தொடர்கிறது. எல்லா பாடங்களையும் பவுன்குஞ்சால் மட்டும் வாந்தி எடுக்க முடியவில்லை. ஆசிரியர் அவனை திட்டுகிறார். அடிக்கிறார். ஆனால், பவுன்குஞ்சு தன் சுய புத்தியால் கேட்கும் கேள்விகள் ஒன்றுக்குக் கூட ஆசிரியரால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படி மிக எளிமையாகக் காட்சிப்படுத்தப்பட்ட நாடகம், சொல்ல வந்த சேதியை பார்வையாளர்களின் மனதிற்குள் எளிதாகக் கொண்டுசேர்த்தது. 'பாடத்திட்டத்திலும், கற்பிக்கும் முறையிலும்தான் தவறு இருக்கிறதேயன்றி கற்றுக்கொள்ளும் எங்கள் புத்தியில் இல்லை' என்ற இறுதி முடிவோடு சுமார் ஐம்பது நிமிடங்கள் இசையும், பாடலுமாக நடந்து முடிந்தது.

Photo Sharing and Video Hosting at Photobucket
புகைப்படத்தில் கை நீட்டியபடி பிரளயன்.....

அடுத்து இரவு 12.30 மணிக்கு 'பயணம்' என்ற இரண்டாவது நாடகத்தை தரையேற்றியது சென்னை வீதி நாடகக் குழு. அது வீதி நாடகத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிந்ததால், குழுவினர் அனைவரும் மேடைக்குக் கீழே வந்துவிட்டனர். அவர்களை சுற்றி நின்றதுபோக, பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் மேடைக்குச் சென்றுவிட்டனர். ஒலிபெருக்கியின்றி, வெறும் குரலுடனேயே நாடகம் நகர்ந்தது.

வறட்சி, வேலையின்மை என்று காலத்தின் கொடிய கரங்கள் துரத்துவதால் கிராம மக்கள், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கின்றனர். நகர்மயமாதலின் விளைவாக அனைத்துவிதமான வேலை வாய்ப்புகளும் நகரங்களுக்கே செல்கின்றன. இன்னொரு புறம் கிராமத்தின் சாதி கொடூரங்களிலிருந்து ஓரளவிற்கு விடுபட, கல்வி,வேலைவாய்ப்பு பெற்ற தலித்துகளின் இரண்டாம் தலைமுறையினர் நகரங்களுக்கு இடம் பெயர்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது. இப்படி சொந்த நாட்டின் அகதிகளாய், 'பொறக்குறது ஒரு ஊரு..பொழைக்கிறது ஒரு ஊரு' என்று புலம் பெயர்ந்து வருபவர்கள் அனைவருக்கும் நகரம் நேசக்கரம் நீட்டுவதில்லை. அதிலும் பகட்டின்றி, பவுடர் பூச்சின்றி பிழைக்க வரும் எளியவர்களை எல்லா திசைகளிலும் நகரம் துரத்தியடிக்கிறது.

சென்னை வீதிகளை நாளைக்கு நான்கு முறை கடந்து செல்லும் நம்மில் எத்தனை பேர் அந்த பிளாட்பார வாசிகளின் துயரங்களை உணர்கிறோம்..? கடந்த வருடம் அடித்துக்கொட்டிய பேய் மழையில் அவர்கள் எங்கே இருந்திருப்பார்கள்..? கொஞ்சம் நெருங்கிச்சென்று விசாரித்தால், அவர்களுக்கான பூர்வீகம் உங்கள் கிராமத்திற்கு அருகிலோ அல்லது உங்கள் கிராமமாகவோ இருக்கக்கூடும். இப்படி இடம் பெயர்ந்து வரும் சில கிராம வாசிகளை நகரத்தின் மைந்தர்கள் எப்படியெல்லாம் எதிர்கொள்கின்றனர் என்பதுதான் பயணத்தின் கதை. போலீஸ், அரசியல்வாதிகளின் கொடூர அதிகார முகங்கள்..தாதாக்களின் தர்பார்.. என்று சின்னாபின்னாப்படுகிறது் அவர்களின் வாழ்க்கை.

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரு ரவுடி காசு வாங்கிக்கொண்டு ஒரு புறம்போக்கு நிலத்தில் குடிசைப் போட்டுக்கொள்ளச் சொல்கிறான். அவர்களும் நம்பி குடிசை அமைக்கின்றனர். இறுதியில் ஒரு அரசியல்வாதி வந்து எல்லாக் குடிசைகளையும் எரித்துவிடுகிறான். எரியும் குடிசைகளுக்கு பின்னணியில் ஒரு பெண்ணின் குரல் ஒலிக்கிறது..'வேண்டுமம்மா ஒரு குடிசை...வேண்டுமம்மா ஒரு நிழல்..'. மொத்தக் கூட்டத்தையும் அந்தப் பெண்ணின் குரல் கட்டிப்போட்டது.(சென்னையின் பள்ளியொன்றில் இசை ஆசிரியையாக வேலைப் பார்ப்பதாக அறிமுகப்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணின்் பெயர் மறந்துவிட்டது). அந்த பின்னிரவில் ஒலிபெருக்கி் எதுவுமின்றி அவர் பாடிய பாடல்கள் பார்வையாளர்களை அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வு நிலைக்குக் கொண்டுசென்றன. 'ஊரும் விலகுது...உறவும் விலகுது..தந்தனா..' என்று தொடங்கி பெருஞ்சோகத்தை தன் குரலில் படரவிட்டார். நாடகம் முழுக்க இடையிடையே வந்த 'நகரதேவன்' என்ற பாத்திரம் உண்மையிலேயே சிறப்பு. திடீர், திடீரென ஓடிவந்து லாவணிக்கச்சேரிப் பாடல்கள் மாதிரி நகரத்தின் இயல்புகளை பாடல்களால் விளக்கிவிட்டப் போனார். நாடகம் முடிவுற்றபோது நேரம் பின்னிரவு 2.30 மணி. மொத்தக் கூட்டத்தினரும்் கனத்த மனதோடு கலைந்து சென்றனர்.

வீதி நாடகங்களுக்கான சரியான மாற்றை வேறு எதனாலும் தர முடியாது. தன் வீட்டு வாசலில் தன் பிரச்னையை ஒரு கலை பேசும்போது அதன் மீது அவனுக்கு ஈர்ப்பு வருவது இயல்பானது. இந்த வடிவத்தில் பார்வையாளன், பார்வையாளன் மட்டுமல்ல..பங்கேற்பாளனும் கூட. பாத்திரத்துக்கும், பார்வையாளனுக்குமான இடைவெளி என்பது வீதி நாடகங்களில் மிகக்குறைவு. 'என் வாழ்க்கையை, என் அரசியலை, என் மேன்மையை, என் அசிங்கத்தை பேசுவதற்கு யாருமே இல்லையா..?' என்று இங்கு லட்சக்கணக்கான எளியவர்களின் மனதிற்குள் தீராத கேள்வியொன்று வெகு நாட்களாய் கனன்றுகொண்டிருக்கிறது. அதை கேள்வியாக்கி மக்களிடம் எடுத்துச் செல்பவை வீதி நாடகங்களே. குளிரூட்டப்பட்ட அரங்கிற்குள், நான்கு சுவர்களுக்குள் நிகழ்த்தப்படும் கலைகளால் யாருக்கும் பயனில்லை.

தொடர்புடைய இடுகை: http://www.globalvoicesonline.org/2007/04/25/tamil-blogs-agriculture-street-threatre-and-children

குறிப்பு: இந்தக் கட்டுரை பூங்கா(ஏப்ரல் 23/2007) இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.

1/4/07

"இது ஒரு கிறுக்கு பயபுள்ள.."

'புத்திசாலியெல்லாம் தன்னை கிறுக்குன்னு சொல்லி பெருமைப்பட்டுக்குறாக.. உண்மையான கோட்டிக்காரன் இங்கன ஒருத்தன் இருக்கேன்..யாரும் கண்டுக்கிடவே மாட்டங்காங்களே..?' என்று புறக்கணிப்பின் தேதனையோடு புழுங்கித் திரிந்த நேரத்தில், 'வாங்க தம்பி' என வாஞ்சையோடு அழைத்திருக்கிறார் திரு.

'எல்லார்க்குள்ளயும் ஒரு பயந்தபய இருக்காம்ண்ணே.. ஆனால் யாரும் இதை ஒத்துக்கிற மாட்டாக. நான் அதை சினிமாவுல பண்றனா..அதைப் பார்த்து அம்புட்டு பேத்துக்கும் சந்தோஷம். இதுதாம்ணே நான் ஜெயிக்கிறதுக்குக் காரணம்' என்று நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நானும் அப்படிப்பட்ட பயந்தபயதான். வீட்டின் ஒற்றை ஆண்பிள்ளை என்று பெற்றோரின் கண்காணிப்பிலேயே வளர்ந்ததன் விளைவாக இருக்கலாம்('உனக்கு உடம்புல தெம்பில்லை..அதை ஒத்துக்க. அதை விட்டுட்டு உன் அப்பன் ஆத்தாளை ஏன் குத்தம் சொல்லுற..?').

ஆனால், இந்த பயத்தை ஒருபோதும் ஒத்துக்கொண்டதில்லை. 'போட்ருவோம்..பொழந்துருவோம்' என்று பேச்சிலேயே வீச்சரிவாள் வீசுவது பழகிப்போய்விட்டது. ஆனால், இந்த வீர வெங்காயமெல்லாம் நோஞ்சான்களுக்கு மத்தியில்தான். கொஞ்சம் உடம்பு தடித்தவர்களிடம் குரல் தாழ்ந்துவிடும். இதனாலேயே சிறுவயதில், சக நண்பர்களோடு சண்டையிட்டு காயப்பட்ட அனுபவங்கள் எதுவும் எனக்கு வாய்க்காமலேயேப் போய்விட்டது. இந்த மனநிலையின் படிநிலை விளைவு, யாரையும் கடினமான வார்த்தைகளால் திட்டுவதுக் கூட எனக்கு தற்போது இயலாத ஒன்று. ஆனால், 'சிங்கம்ல..' என்று கெத்துக்காட்டும் கிறுக்குத்தனம் மட்டும் அவ்வப்போது தலைகாட்டும்.=>குழந்தைகளை எந்த இடத்தில், எவ்வளவு நெரிசலான இடத்தில் பார்த்தாலும் அவர்களின் தலையைக் கலைப்பதும், கன்னத்தைக் கிள்ளுவதும், என் முகத்தை அஸ்டக்கோணலாக்கி,('உன் மூஞ்சி நார்மலாவே அப்படித்தானே இருக்கும்..?') அவர்களை சிரிக்க வைப்பதும் எப்போது பழகியதென்று தெரியவில்லை.. இப்போதும் தொடர்கிறது. இனியும் விடுவதாக எண்ணமில்லை.

குழந்தைகள் என்றால், அவ்வளவு பிரியம். கடைவாயில் எச்சில் ஒழுக, மெல்லிய இதழ் விரித்து, லேசாக தலை உயர்த்தி சிரிக்கும் ஒரு மழலையின் சிரிப்பில் சுற்றம் யாவும் மறந்து போகிறது. அதன் பஞ்சு விரல்கள் முகத்தில் வருடுவதை கண்மூடி அனுபவித்தால் சொல்லத்தெரியாத சுகம் மனதெங்கும் பரவுகிறது. சுகுணா திவாகரின் கசிவு என்ற கவிதை இந்த அனுபவத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது.

நீங்கள் ஒரு குழந்தையைக்
கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள்.
அதன் பனியொத்த உதடுகளை
நிமிண்டுகிறீர்கள்.
இப்போது
குளித்து முடித்த அதன் தேகத்தை
தழுவுகிறீர்கள்.
கன்னத்தில் அழுந்த
முத்தமிடுகிறீர்கள்.
நல்லது..
இப்போது
நீங்கள் ஒரு கலவியை முடித்துவிட்டீர்கள்


=>பைக் பில்லியனில் உடகார்ந்துக்கொண்டும், பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டும் புத்தகம் படிக்கும் தன் 'தீவிரவாதம்' பற்றி சொல்லியிருந்தார் வரவனையான். நான் இதன் எதிர்துருவம். எந்த இடத்தில் மனதுக்குப் பிடித்த புத்தகம் கிடைத்தாலும், அது பர்ஸுக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் வாங்கிவிடுவேன். ஆனால், படிப்பதில் மகா சோம்பேறி. ஒவ்வொரு புத்தகத்தையும் முதல் ஐம்பது பக்கம் வரைக்கும் படிப்பேன். அதற்குள் அடுத்த புத்தகம் வந்துவிடும். இதைத் தூக்கிப்போட்டுவிட்டு, அதற்கு தாவிவிடுவேன். இப்படியாக ஐம்பது பக்கங்களுக்குள் நுனி மடிக்கப்பட்ட புத்தகங்கள் என் அலமாரியில் ஏராளமாகக் கிடக்கின்றன. கடைசியாக நுனி மடிக்கப்பட்டது ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்கா முதல் கங்கை வரை'.

=>சம்பந்தமில்லாதவர்களிடம் தேவையற்ற விஷயங்களைச் சொல்வது. உதாரணமாக ஒரு ஆட்டோக்காரரிடம், "புது பஸ் ஸ்டேண்ட் பக்கம் சங்கர் நகர் போகணும். அங்க ஒரு ஆபீஸ்ல செக் வாங்க வேண்டியிருக்கு. அதை முடிச்சதும் உடனே வந்திடலாம். எவ்வளவு..?" என்று கேட்பது. 'நீ செக் வாங்கு..மண்ணாப் போ.. அதையெல்லாம் எங்கிட்ட ஏன் சொல்லிகிட்டு திரியுற..?' என்று ஆட்டோக்காரர் நினைக்ககூடும். ஆனாலும் இம்மாதிரி பேசுவதைத் தவிர்க்க முடியவில்லை. எதிராளிக்கும், நமக்குமிடையேயான அந்நியத்தன்மையைக் குறைக்க இந்த 'மேலதிக விவரம் சொல்லல்' பயன்படும் என்ற மனநிலையே இதற்கானக் காரணமாக இருக்கலாம்.('ஆட்டோக்காரன்கிட்ட அந்நியத்தன்மையைக் குறைச்சு என்னப் பண்ணப்போற..?அவன் வீட்டுல பொண்ணு எடுக்கப்போறியா..?').

=>நடப்பது என்பது என் புத்தியில் படிந்துபோய்விட்டது. நடக்கும் தருணங்களில் என் கால்கள் இரண்டும் புத்துணர்ச்சியோடு இயங்குகின்றன. பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் தினமும் 6 கி.மீ. தூரம் நடந்துதான் பள்ளிக்கூடம் போய்வந்தேன். பின்பு பணி புரிவதற்காக, தஞ்சாவூர், திண்டுக்கல், சென்னை என்று பல ஊர்களுக்கும் சென்ற போதும் நடப்பது என்பது பழகிப்போய்விட்டது. குறிப்பாக திண்டுக்கல்லில் வேலைப்பார்த்த நாட்களில் தினமும் ஏதாவது ஒரு கிராமத்தின் வீதியில் நடந்தபடியே இருப்பேன். இந்த நடை வியாதியின் உச்சமாக, ஒரு முறை கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருந்து, கொடைக்கானலுக்கு நடந்து வந்தேன். அடர்ந்த கானகத்தின் செங்குத்தான மலைப்பகுதி.. தூரத்தில் பிளிறும் காட்டெறுமைகள்.. 60 கி.மீ. தூரத்திற்கும் அதிகமான பயணத்தொலைவு. முதல்நாள் காலையில் நடக்கத்தொடங்கி, மஞ்சம்பட்டி என்ற ஆதிவாசிகள் கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்தநாள் மாலையில்தான் கொடைக்கானல் வந்து சேர்ந்தேன். மூச்சுத்திணறி.. நுரைதள்ளி.. மயக்கம் வந்து.. அது ஒரு சாகச பயணம்.

முன்பொருமுறை திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையிலிருந்து பத்து கி.மீ. தூரம் நடந்துசென்று, தென்மலை என்ற பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். என் கையில் கேமரா இருப்பதைப் பார்த்த ஒரு ஆதிவாசி, 'என்னை ஒரு போட்டோ புடிப்பீங்களா..?' என்று ஆசையோடுக் கேட்டார். அவரை உட்கார வைத்து விதவிதமாகப் போட்டோ எடுத்தேன். பின்னொரு நாளில் மறுபடியும் தென்மலைக்கு சென்றபோது புகைப்படங்களை அவரிடம் கொடுத்தேன். புகைப்படங்களையும், என்னையும் பார்த்து அவரின் மொத்த உடம்பும் மகிழ்ச்சியில் குலுங்கியது. என்ன செய்வதென்று புரியாமல், எனக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டுமே என்று நினைத்து, ஓடிச்சென்று ஒரு பாட்டிலில் தேன் கொண்டு வந்துக்கொடுத்தார். "சிறுமலை தேனு..நல்லா இருக்கும்" என்று அவர் நீட்டிய பாட்டில் முழுவதும் ஒரு எளிய மனிதனின் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. ஒரு மலைப்பாதையில் நான் அமர்ந்து, அவரிடம் கேமராவைக் கொடுத்து, என்னைப் புகைப்படம் எடுக்கச் சொன்னேன். ரொம்பத் தயங்கினார். எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து அவர் எடுத்த புகைப்படம் வெகு சிறப்பாக வந்திருந்தது. இன்றும் நான் விரும்பும் என் புகைப்படங்களில் அதுவும் ஒன்று. நீள்சதுர பிரேமிட்டு பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறேன்.

மிகச் சமீபத்தில் திருநெல்வேலி கொக்கரக்குளம் பாலம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். என்னைக் கடந்துசென்ற சைக்கிளிலிருந்து ஒரு டிபன் ஃபாக்ஸ் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அதன் மூடி திறந்துகொண்டது. உள்ளே இரண்டு முழம் மல்லிகைப்பூ வாசத்தோடு எட்டிப்பார்த்தது. எதிரே வரும் பேருந்துக்குள் டிபன் பாக்ஸும், மல்லிகைப்பூவும் அகப்பட்டு விடுமோ என்ற பதற்றத்தில் சைக்கிள்காரர் ஓடி வர, அருகில் சென்றுகொண்டிருந்த நான் இரண்டையும் பத்திரமாக எடுத்து அவரிடம் கொடுத்தேன். டிபன் பாக்ஸ் காப்பாற்றப்பட்டதை விட, மனைவிக்கான மல்லிகைப்பூ சேதமில்லாமல் தன் கைக்கு வந்ததும் அவர் முகத்தில் பெருமகிழ்ச்சி அரும்பியது. ஒருவேளை பேருந்து சக்கரத்திற்குள் அந்த மல்லிகை அகப்பட்டிருந்தால்..? அந்த இரவு அவருக்கு நிம்மதியாக இருந்திருக்காது. நடத்தல் என்பது உடலுக்கு பயிற்சி மட்டுமல்ல..உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் கூட.=>நடைமுறையில் முடியாத விஷயங்களை மனதிற்குள் கற்பனை செய்துகொள்வது. உதாரணமாக நான் ஒரு திரைப்பட இயக்குனராக வேண்டும் என மனதிற்குள் விருப்பமுண்டு. நடப்பில் அதற்கு வாய்ப்பின்றி வேறு வேலை பார்க்க வேண்டிய சூழல்.இதனால், மனதிற்குள் நான் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனராக மாறிவிடுவதாகவும், ஒட்டுமொத்த இந்தியாவும் 'சத்தியஜித்ரேவுக்கு பிறகு நீங்கள்தான்' என்று என்னிடம் சரணாகதி அடைவதாகவும் ஒரு கற்பனை அடிக்கடி மனதிற்குள் ஓடும். அதன் உப கற்பனையாக, பத்திரிக்கைகளுக்கு எப்படி பேட்டிக் கொடுப்பது, சக இயக்குனர்களை எப்படி திட்டுவது ('நடிகைகளை எப்படி கரெக்ட் செய்துவது..?'- அதையும் சொல்ல வேண்டியதுதானே..?'), நிறைய சம்பாதித்தபிற்கு பணத்தைப் பாதுகாத்துக்கொள்ள அரசியல் கட்சி தொடங்க வேண்டிய அவசியம் வரும்போது அதற்கு என்ன பெயர் வைப்பது, பெரிய இயக்குனர் என்ற பந்தா இல்லாமல் எப்படி நடந்துகொள்வது('ஏய்...ஏய்...இதெல்லாம் அநியாயத்துக்கும் டூ மச்..') என்றெல்லாம் எதையாவது யோசித்தபடியே இருப்பேன். இந்த கற்பனை, சினிமாவோடு மட்டும் நிற்பதில்லை.. வார்டு கவுன்சிலர் முதல், பிரதமர் வரைக்கும் எல்லோரையும் விரட்டிவிட்டு, நானே சகல இடங்களையும் ஆக்கிரமிப்பதாக மனசு தறிகெட்டு அலையும். 'கழுத..காசா பணமா..? எல்லாத்தையும் வச்சுக்க..' என்று அதன்போக்குக்கு விட்டுவிடுவேன்.

=>உருப்படியாக ஏதாவது செய்யும்போது உதாசீனப்படுத்துவதும், கேணத்தனமாக ஏதாவது செய்யும்போது ஊரைக்கூட்டி அறிவிப்பதும்(நன்றி: 'உயரங்களின் ரசிகன்') என் குணங்களில் ஒன்று.

=>அடுத்தவர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல நேரங்களில் என் சுய கருத்தை-அவசியமான தருணங்களில் கூட- வலியுறத்த முடியாமல் போய்விடுகிறது.

=>ஆங்கிலம் கற்றுக்கொள்கிறேன் பேர்வழியென்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை காசை கரியாக்குவது. ஆனால் இன்றுவரை I'am suffering from fever.. என்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது.

இந்த கிறுக்குத்தனங்களில் பங்கெடுக்க லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வநாயகி, மாசிலா ஆகியோரை அழைக்கிறேன். (சீரியஸாக எழுதக்கூடாது என்பது மூவருக்குமான விதி..)

(குறிப்பு: இந்தக் கட்டுரை பூங்கா(ஏப்ரல் 9/2007) இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.