16/3/07

இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா...?

'இந்திய சாதிய சமூகத்தில், தலித்துகள் அடுக்கப்பட்ட மூட்டையில் கடைசி மூட்டையாக இருக்கிறார்கள்' என்று அம்பேத்கர் சொல்லி ஒரு நூற்றாண்டு காலம் முடிந்துவிட்டது. நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அந்த நிலையிலிருந்து நாடு இன்னும் ஒரு இஞ்ச் கூட முன்னேறவில்லையோ என்று சந்தேகம் வருகிறது. அதுவும் கடைசி மூட்டையான தலித்துகள் மீது மேலும், மேலும் சுமைகள் ஏற்றப்படுகின்றன என்பதுதான் வேதனை.

இடப்பங்கீட்டின் அடிப்படையில் தலித்துகளுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டதாக ஒரு பம்மாத்து நாடகம் இங்கு வெகு காலமாக நடத்தப்படுகிறது. அந்த இடப்பங்கீடு, நடைமுறையில் ஆதிக்கசாதிகளிடம் சிக்கி எவ்வளவு கேவலப்படுத்தப்படுகிறது என்பதை, பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும், நாட்டார்மங்களத்திலும் பார்த்தோம். அங்கு உழைக்கும் தலித் மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்கும் அடிப்படை காரணங்களை கலைவதை விட்டுவிட்டு, அரசும் தன் பங்குக்கு ஒரு நாடகத்தை நடத்தியது. அண்மையில், மேற்கண்ட மூன்று கிராமங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, மூன்று தலித்துகளை பஞ்சாயத்து தலைவர்களாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக தேர்தல் நடக்காத ஊரில் தேர்தல் நடத்தியதே ஒரு குறிப்பிட தகுந்த முன்னேற்றம் என்று எண்ணிவிடக்கூடாது. இம்மாதிரியான மயக்க மருந்து நடவடிக்கைகள் மூலம்தான், அரசு மக்களின் எதிர்ப்புணர்வை முடக்கி வைக்கிறது. அந்த கிராமங்களில் தலித்துகள் ஊராட்சி மன்ற தலைவராகிவிட்டதால், கள்ளர் சாதி வெறியர்களின் ஒருவரது வீட்டிற்குள்ளாவது அந்த தலைவர்கள் சென்றுவிட முடியுமா என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

பிரச்னைக்குரிய இந்த பஞ்சாயத்துகளில்தான் என்றில்லை. தமிழ்நாடு முழுக்க எங்கெல்லாம் தலித்துகள் பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் இந்த பிரச்னை இருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு மொத்தம் 41 பஞ்சாயத்து தலைவர் பதவிகள், இடப்பங்கீட்டின் அடிப்படையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டன. பதவிக்கு வந்து சில மாதங்களில் சங்கரன்கோயில் அருகேயிருக்கும் நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்தில் ஒரு பிரச்னை. இங்கு பஞ்சாயத்து தலைவராக இருந்த ஜக்கன், அருந்ததிய இனத்தைச் சேர்ந்தவர். இப்பகுதியின் ஆதிக்கசாதிகளில் ஒன்றான நாயக்கர் இனத்தைச் சேர்ந்த நபர்தான் இந்த பஞ்சாயத்தின் துணை தலைவர். ஜக்கன் தன் கைப்பாவையாக இருப்பார் என நினைத்து அவருக்கு ஏராளமாக செலவுசெய்து தேர்தலில் போட்டியிட வைத்து, வெற்றிபெற வைத்ததே அந்த ஆதிக்க சாதி நபர்தான். ஆனால் ஜெயித்து வந்த ஜக்கன், அவர் கேட்ட நியாயமற்ற விஷயங்களை செய்துகொடுக்க மறுத்துவிடவே அவர் மீது கோபம் கொண்டார். அந்த கோபம் கொலைவெறியாக உருவெடுத்து நவம்பர் மாத இறுதியில், ஒரு அதிகாலை நேரத்தில் வயல் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த ஜக்கனை பலர் பார்க்க கொலை செய்தார் அந்த ஆதிக்கசாதி துணை தலைவர்.

இந்த கொடூர சாதிவெறி கொலை நடந்து முடிந்த அடுத்த மூன்றாவது மாதத்திற்குள் அதே சங்கரன்கோயில் பகுதியிலிருந்து அடுத்த கொலை நடந்தது. மருதக்கிணறு என்ற பஞ்சாயத்தின் தலைவராக இருந்த சேர்வரான் ஒரு அருந்ததியர். நாயக்கர் சாதியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணை தலைவர் கும்பலால் மர்மமாக சேர்வரான் கொலை செய்யப்பட்டார். இதுபோக, இளையரசனேந்தல் என்ற கிராம பஞ்சாயத்து தலைவராக இருக்கும் சுந்தர்ராஜு, அதே பஞ்சாயத்தின் துணை தலைவராக இருக்கும் ஆதிக்கசாதி(நாயக்கர்-ராஜூ)யைச் சேர்ந்த பெண்மணியால் தன் உயிருக்கு ஆபத்து என்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறார்.

மூன்று மாத காலத்திற்குள் நடந்திருக்கும் இந்த மூன்று சம்பவங்கள், தலித்துகளுக்கு கிடைத்திருக்கும் அதிகாரம் எந்த வகையானது என்பதைக் காட்டிவிடுகிறது.( இந்த மூன்று பஞ்சாயத்துகளிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், ஆதிக்கசாதி நாயக்கர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இதை வைத்துக்கொண்டு, 'நாயக்கர்கள்தான் சாதி வெறியோடு, ஆதிக்கத்தோடு இருக்கின்றனர்' என்று சொல்லிவிட முடியாது. நாயக்கர் அல்லாத தேவர், நாடார் போன்ற மற்ற ஆதிக்கசாதியினர் வசிக்கும் ஊர்களில் தலித்துகளும், தலித் பஞ்சாயத்து தலைவர்களும் இதைவிட மோசமாகத்தான் நடத்தப்படுகின்றனர்).

இந்த பிரச்னையில் சாதியின் நுண் கரங்கள் எங்கெங்கும் படர்ந்திருக்கின்றன. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் பல ஊராட்சிகள் சுழற்சி முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டவுடன், அதை முறியடிக்க அந்தந்த ஊராட்சிகளில் பெரும்பான்மையாக இருக்கும் சாதி இந்துகள் பல வழிகளிலும் முயன்றனர். பெரும்பான்மையான ஊராட்சிகளில் தங்களின் கைப்பாவையாக இருக்கும் தலித் ஒருவரை தேர்தலில் நிறுத்தி, அவருக்கு தேர்தலுக்குண்டான செலவுகள் அனைத்தையும் செய்து, தேர்தலுக்குப் பிறகு நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடும் இயந்திரமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். வருமானத்திற்கு சாதி இந்துக்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழலில் யாராலும், எதுவும் செய்ய முடியவில்லை. அப்படி எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம்தான் நக்கலமுத்தன்பட்டியில் நடந்த ஜக்கனின் மரணம்.

இதில் கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயம் ஒன்று உண்டு. தென் மாவட்ட கலவரத்திற்குப் பிறகு தேவேந்திர குல வேளாளர் இன மக்களிடம், மற்ற உயர் சாதி இனத்தவருக்கு மிகக் குறைந்த அளவுக்கு பயம் வந்திருக்கிறது. இதனால், 'இவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக வந்தால், நம் கைப்பாவையாக இருக்க மாட்டார்கள்' என கருதிய ஆதிக்க சாதியினர் ஒரு திட்டம் போட்டார்கள். அதன்படி, அதே ஊரில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இருக்கும் அருந்ததியரில் ஒருவரை பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்கள். ஊர்க்கூட்டம் போட்டு அவருக்குதான் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுப் போட்டார்கள். நெல்லை மாவட்டத்தில் அருந்ததியர் ஊராட்சி மன்ற தலைவர்களாக இருக்கும் பல பஞ்சாயத்துகளில் இதுதான் நடந்தது. மேலே உதாரணத்தில் சொல்லியிருக்கிற நக்கலமுத்தன்பட்டி, மருதக்கிணறு, இளையரசனேந்தல் ஆகிய மூன்று பஞ்சாயத்துகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். கொஞ்சம் கூட அரசியல் பின்புலமற்ற நிலையில் அருந்ததியர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. இப்படி தலித்துகளை உள்சாதி ரீதியாகக் கூறுபோடும் கொடுமைப்பற்றி தேர்தல் நடந்தபோதே பல்வேறு தலித் அமைப்புகளும் அரசுக்கு சுட்டிக்காட்டின. ஆனால், அரசுதான் கண்டுகொள்ளவில்லை.

தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் துணை தலைவர் பதவிக்கு எந்த சாதியினர் வேண்டுமானாலும் வரலாம் என்றொரு விதி வைத்திருக்கிறார்கள். இதனால், எங்கெல்லாம் தலித்துகள் பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் துணை தலைவராக இருப்பது ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்தான். தமிழ்நாடு முழுக்க இதுதான் நிலைமை. நம் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, பஞ்சாயத்து தொடர்பான எந்த ஒரு முடிவையும், துணை தலைவரின் ஒப்புதலின்றி தலைவர் மட்டும் தன்னிச்சையாக எடுத்துவிட முடியாது. ஒரு செக் பாஸ் பண்ண வேண்டுமென்றால் கூட இருவரின் ஒப்புதல் அவசியம். அப்படியானால் எல்லா விஷயத்திற்கும் அந்த ஆதிக்க சாதி துணை தலைவரின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். எனில் பெயரில் மட்டும்தான் துணை தலைவரே ஒழிய, நடப்பில் சகல அதிகாரங்களும் பெற்ற ஆட்டுவிக்கும் தலைவராகத்தான் இருக்கிறார். இட பங்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் சட்ட வடிவம் இது. தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் ஊராட்சிகளில், துணை தலைவராகவும் ஒரு தலித்துதான் வர வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வந்தாலன்றி இதற்கு தீர்வில்லை.

இப்படி அதிகாரத்தை நடைமுறைப் படுத்துவதில்தான் சிக்கல் என்றில்லை. பல இடங்களில் அடிப்படை மனித உரிமைகளே மறுக்கப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் தலித் பஞ்சாயத்து தலைவரை, அவருக்குரிய நாற்காலியில் கூட அமர விடுவதில்லை. இது வெறும் நாற்காலியோடு மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. நூற்றாண்டுகளாக தன்னிடம் கைகட்டி நிற்கவே பயந்தவன், இன்று தனக்கு முன்னால் அமர்ந்தால், தன் அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடு.

ஒரு சான்றிதழில் பஞ்சாயத்து தலைவரிடம் கையெழுத்து வாங்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள்..? நீங்கள் அவரது அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ போவீர்கள். ஆனால், தலித்துகள் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஊர்களில், 'அந்த குப்புசாமியை கொஞ்சம் வந்துட்டுப் போகச்சொல்லு..' என்று ஆள்விட்டு சொல்லியனுப்புவார்கள். அவர் ரப்பர் ஸ்டாம்பைத் தூக்கிக்கொண்டு உயர் சாதியினரின் வீட்டு வாசல்வரை வந்து கையெழுத்துப் போட்டுக்கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். இதுதான் நடக்கிறது..இதுதான் யதார்த்தம். அப்படியானால் அதிகாரம் யாரிடம் இருக்கிறது..? அரசியலைப்புச் சட்டம் வரையறுக்கும் சமூக நீதி எங்கே..? 'நான் இந்த பஞ்சாயத்தின் தலைவர் என்று சொல்லிக்கொண்டு யாராவது ஒரு பஞ்சாயத்து தலைவரால் உயர் சாதியினரின் வீட்டிற்குள் நுழைந்துவிட முடியுமா..? அந்த கிராமத்தில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளிலிருந்து குறைந்தபட்சம் அவரால் மட்டுமாவது தப்பித்து விட முடியுமா..? 'தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்கத்தொடங்கிவிட்டது' என்று ஒரு சாராரை பேச வைத்ததன்றி, இந்த தேர்தல் சாதித்ததென்ன..?

இது நூற்றாண்டுகளின் பிரச்னைதான். எல்லாம் ஒரே இரவில் தீர்ந்துவிட வேண்டும் என்று நினைக்க முடியாதுதான். ஆனால், தீர்வை நோக்கிய ஒரு திட்டத்தை செயல்படுத்தும் அரசாங்கம், அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டாமா..? அரசின் நோக்கம் தலித்துகளுக்கு சமூக நீதி கிடைப்பதுதான் என்றால், இம்மாதிரியான ஓட்டைகளை அடைத்தாக வேண்டும். இல்லையெனில், காலம் தன் மீது ஏற்றி வைத்திருக்கும் சுமையால் கண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு, தன் மீதிருக்கும் ஆதிக்கசாதி மூட்டைகளை அடித்து நொறுக்கி, தனக்கான விடுதலையை தானே தீர்மானித்துக் கொள்ளும் அவசியத்தை, காலம் கடைசி மூட்டைகளுக்கு ஏற்படுத்தும்.

7 கருத்துகள்:

தமிழ்பித்தன் சொன்னது…

ஜாதியற்ற தமிழ் நல்லுலகம் உருவாக வேண்டும்

ஆழியூரான். சொன்னது…

test

தெக்கத்திப் பையன், சொன்னது…

நல்லா சொன்னீங்க போங்க! அருமையான பதிவுங்கோ!!!

ranjith சொன்னது…

Most of ur articles are good and are thought provoking.

may i mail u to the id given in ur blog. i just want to make sure my mail doesnt fills ur inbox like a fake mail.

- ranjith

ranjith சொன்னது…

good one- if ur interested-http://www.tehelka.com/story_main31.asp?filename=Ne160607Dalits_not.asp

- ranjith

ஆழியூரான். சொன்னது…

ரஞ்சித்...
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. தெஹல்கா இணைப்புக்கு மிக்க நன்றி..!

பெயரில்லா சொன்னது…

இந்த தொகுதியில் இந்த சாதிக்காரன் தான் வரவேண்டும் என்று அரசே சட்டம் போடுவது மிக வேடிக்கையாக உள்ள்து.