26/3/07

வாத்திமார் வரலாறு....

ள்ளிக்கொடத்துல படிச்சதை நெனச்சுப் பார்க்குறது எல்லாருக்குமே சொகமான வெசயம்தான். அபிஅப்பா அவரு படிச்ச பழைய பள்ளிக்கொட வாத்திமார்களோட பேர்களையெல்லாம் ஞாபகப்படுத்தி ஒரு பதிவு எழுதியிருக்காரு. அதைப்படிச்சதும் அவுத்துவிட்ட மாடு கணக்கா என் புத்தியும் எங்கூருக்கு ஓடிப்போச்சு.

தஞ்சாவூர்லேர்ந்து பட்டுக்கோட்டை போற வழியில மேலஉளூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்குன எறங்கி மேற்கப் பாத்து மூணு கிலோமீட்டர் நடந்தா ஆழிவாய்க்கால்னு ஒரு ஊரு வரும். அதுதான் எங்க ஊரு. ஊருக்குள்ள உப்புக்கொளத்தான் கரையில தெக்குப்பார்த்தாப்ல இருக்குது எங்க பள்ளிக்கொடம். எட்டாங்கிளாஸ் வரைக்கும் இருக்கு. மொத்தம் மூணு கட்டடம். அதுக்குள்ளாறதான் எட்டு கிளாஸ் பிள்ளைகளும் உக்காந்திக்கணும். ஏ,பி,சி,டி..ன்னு செக்ஷன் பிரிக்கிறது, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வாத்தியாரு வர்றது.. இந்த சோலியேக் கெடையாது. ஒரு கிளாஸ்தான்..ஒரே வாத்தியாருதான்.மொதக்கிளாஸ் படிக்கும்போது ஆரம்பத்துல ஒரு ஆம்பளை வாத்தியார்தான் வந்தாரு. அப்புறமா கொஞ்ச நாள் செண்டு, ஜெயசித்ரான்னு ஒரத்தநாட்டுலேர்ந்து ஒரு புது டீச்சர் வந்தாங்க. அவங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். கன்னங்கரேர்னு இருப்பாங்க. ஆனா, சூப்பரா எங்களுக்கு புரியற மாதிரி பாடம் சொல்லித்தருவாங்க. அதையெல்லாம் விட முக்கியமா,மித்த எல்லா வாத்தியாரும் பயலுகளைக் விட்டு கடையில டீ வாங்கியாரச் சொன்னா, பூரா டீயையும் அவய்ங்களே குடிச்சுத் தீர்த்திருவாய்ங்க. 'இவ்வளவு தூரம் போய் வாங்கிட்டு வந்திருக்கானே.. இத்திணிக் குடுப்போம்'னு கிடையாது. ஜெயசித்ரா டீச்சர் மட்டும்தான், வாங்கிட்டு வர்ற பையனுக்கும் டீ கொடுப்பாங்க.

அது மட்டுமில்ல.. மத்த வாத்தியார் டீ வாங்கிட்டு வரச்சொன்னா, நடந்துப்போய்தான் வாங்கியாரனும். ஜெயசித்ரா டீச்சர் மட்டும் அவங்களோட சின்ன சைக்கிளைக் கொடுத்து வாங்கியார சொல்லுவாங்க. அதனால, அவங்க டீ வாங்கியாரச் சொன்னா மட்டும் பசங்கப் போட்டிப் போடுவோம். ஆனா், இந்த டீச்சரையும் பிடிக்காத எவனோ கெரகம் பிடிச்சவன், 'ஜெயசித்ரா டீச்சருக்கும், முணியாண்டி சாருக்கும் லவ்' அப்படின்னு ஒண்ணுக்குப்போற கட்டையில கரிக்கட்டையால எழுதிட்டான். கொஞ்ச நாள் பரபரப்பா விசாரணையெல்லாம் நடந்துச்சு.

வெவரம் என்னன்னா, அந்த மூணாங்கிளாஸ் முணியாண்டி சார், பயங்கரமா அடிப்பார். மொரட்டு மீசையோட அவரைப் பார்க்கவே பயமா இருக்கும். இந்த முணியாண்டி வாத்தியாரு பக்கத்துல காட்டுக்குறிச்சிங்கிற ஊரைச்சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் பிள்ளைகளைக் கண்ணுமண்ணு தெரியாமப் போட்டு அடிக்கிறார்னு சொல்லி, எங்க ஊரு மைனருங்க பஞ்சாயத்துக்குப் போனாய்ங்க. கடைசியில, 'ஒரு ....பய எங்கப் பிள்ளைகளை எப்படி அடிக்கலாம்..?' அப்படின்னு வார்த்தையை ஓவராப்பேசி, அதுலேர்ந்து அவரு எந்தப்பயலையும் கை வைக்கிறதில்லை. அந்த ஜெயசித்ரா டீச்சர் இப்போ வேற ஊர் பள்ளிக்கொடத்துல வேலை பார்க்குறாங்க. முணியாண்டி வாத்தியாரு, உடம்பு சரியில்லாம செத்துப் போயிட்டாரு.

ரெண்டாங்கிளாஸ்லதான்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. நல்லா குண்டா, கண்ணாடிப் போட்டுகிட்டு, வெள்ளைக்காரியாட்டம் வரும். மொறையாப் பார்த்தா, அதோட கலருக்கு அந்த டீச்சருதான் கிராமத்துல மவுசா இருந்திருக்கனும். ஆனா, அது யார்கூடவும் தேவையில்லாம பேசாது. மேம்போக்கா போவும். அதனாலயே அதை யாருக்கும் ஊருக்குள்ளப் பிடிக்கலை.
இப்ப தஞ்சாவூர்ல வேலைப் பார்க்குதுன்னு பசங்க சொல்லிக்கிட்டாய்ங்க.

நாலாங்கிளாஸ் வாத்தியார் ராமையன் சார் ஒரு சோக சித்திரம். இடையில கொஞ்ச நாள் மண்டைக் கோளாறாயிப்போயி லீவுல இருந்தாரு. அப்படியும், எல்லா நேரமும் முழு மனநிலையோட இருப்பார்னு சொல்ல முடியாது. சரக்கு அடிக்காம ஒரு நாளும் பள்ளிக்கொடத்துக்கு வந்ததில்லை. அவர் ஒரு டி.ராஜேந்தர் ரசிகர். கிளாஸ்ரூம்ல, 'சலங்கையிட்டால் ஒரு மாது' அப்படின்னு அவர் பாடுறது இப்பக் கேக்குறது மாதிரி இருக்கு. போதையேறுன குரல்ல வெளிவர்ற வார்த்தைகள், கேக்குறவங்களை சொக்கிப்போக வைக்கும்.

திடீர், திடீர்னு கிறுக்குப் பிடிச்சுக்கும் அவருக்கு. ஒரு நாள், கிளஸ்ல கிடந்த சேர், நாற்காலி எல்லாத்தையும் தூக்கிப்போட்டு உடைக்கிறாரு. எல்லாரும் பயந்துப்போயி வெளிய ஓடியாந்தோம். பத்து நிமிஷம் போல எல்லாத்தையும் உடைச்சுட்டு, ஒரு பையனைக் கூப்பிட்டு, போய் டீ வாங்கிட்டு வரச்சொன்னாரு. அவன் திருப்பிக் கொண்டாந்துக் கொடுத்த பத்து ரூபாயை திருப்பி அவன்கிட்டயேக் கொடுத்து, 'எல்லாரும் மிட்டாய் வாங்கி திண்ணுங்க'னு சொன்னாரு. ஊருக்குள்ள பெரிய மனுஷய்ங்கல்லாம், 'லூசுப்பயலெல்லாம் வாத்தியாரா இருக்கான்'னு பேசி, மேலதிகாரிகளுக்கு இந்தாளை மாத்தனும்னு புகாரெல்லாம் அனுப்புனாய்ங்க. அவய்ங்க கெட்ட நேரம்.. அதிகாரிக வரும்போது அவரு நல்லவிதமா இருப்பாரு.

பருத்தியப்பர் கோயில், பங்குனி உத்தர திருவிழாவுக்குப் போவும்போது, அவர் வீட்டுலதான் எல்லாரும் தண்ணிக் குடிப்போம். அங்கதான் செருப்பை கழட்டிப்போடுவோம். அவரோட வீட்டம்மா அவ்வளவு நல்லாப் பேசுவாங்க. அவரோட பையனும் எங்கக்கூடவேதான் படிச்சான். மூணு வருஷத்துக்கு முன்னாடி ஊருக்குப் போயிருக்கும்போது,'சக்கரவர்த்தி(ராமையன் சாரின் மகன்) செத்துப் போயிட்டான் மாப்ள'ன்னு பசங்க சொன்னாங்க. காதல் தோல்வியாம். மருந்துக் குடிச்சு செத்துப் போயிட்டானாம். ரிட்டையர் ஆகி வீட்டுல இருந்த ராமையன் சார், சில நாட்களுக்கு முன்னாடி தற்கொலை செஞ்சு இறந்துட்டாராம். கேள்விப்பட்டப்போ, மனசுக் கனத்துப்போச்சு.
.
.
.
.
.
.

அஞ்சாங்கிளாஸ் வாத்தியார் வடிவேல் சார் நல்ல மனுஷன். பசங்க யாருக்கும் பரிச்சைக்குக் கட்ட காசு இல்லைன்னா அவரேக் கட்டுவார். ஒரு கட்டுரைப் போட்டுக்காகப் போகும்போது, ஒரத்தநாட்டுல இருக்குற அவரோட வீட்டுக்குப் போனேன். அவரோட வீட்டம்மா, என் தலையெல்லாம் பரட்டையா இருக்குன்னு, தலையிலேர்ந்து கால் வரைக்கும் எண்ணெய் தேய்ச்சு விட்டது இப்பவும் ஞாபகம் இருக்கு. இவர், நான் ப்ளஸ் டூ முடிக்கிறதுக்கு முந்தியே ரிட்டையர் ஆயிட்டார். போன வருஷம் ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிட்டதா நண்பர்கள் சொன்னாங்க.

ஆறாம்கிளாஸ் வாத்தியார் அடைக்கலசாமி ஓமக்குச்சி மாதிரி ஒல்லியா இருப்பார். ஸ்கூல்ல இங்க்லீஸ் தெரிஞ்ச ஒரே வாத்தியார் இவருதான். மத்த வாத்தியாரெல்லாம் இவர்கிட்டதான் இங்கிலீஸ்ல டவுட் கேப்பாங்க. 'எவனும் மொத மார்க் எடுக்க வேண்டாம். எல்லாரும் பாஸ் ஆனா போதும்'அப்படின்னு யதார்த்தத்தைப் பேசுவார். கையை திருப்பச்சொல்லி, விரலோட பின்பக்கத்துல அடிக்கிறது இவரோட ஸ்டைல். இவரும் இப்போது இல்லை.மொத்த பல்லிக்கொடத்துக்கும் ஒரு காமெடியன்னு சொன்னா, அது ஏழாங்கிலாஸ் சார் சண்முகம்தான். இவருதான் துணை தலைமை ஆசிரியர். ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் இவரைக் 'குண்டு சார்'ன்னுதான் கூப்பிடும். பள்ளிக்கொடத்துக்கு வரும்போதே கரெக்டா அஞ்சு வறுகடலைப் பாக்கெட் வாங்கிட்டு வந்துடுவாரு. காலையிலேர்ந்து மத்தியான்ம் சாப்பாட்டு மணியடிக்கிற வரைக்கும் மூணு பீரியடு. மத்தியானம் ரெண்டு பீரியடு. இந்த அஞ்சு பீரியடுக்கும், ஒவ்வொரு கடலைப் பாக்கெட்டா காலி பண்றதுதான் அவர் சோலி.

வந்து உட்கார்ந்த உடனேயே, எவனையாவது(பெரும்பாலும் நான்) எழுப்பிவிட்டு, 'நாலாம் பாடத்துல, பத்தாவது வரியிலேர்ந்து படி' அப்படின்னு குத்துமதிப்பா சொல்லிட்டு கடலையைக் கொறிக்க ஆரம்பிச்சார்ன்னா, கிளாஸ் முடியுற மணி அடிக்கும்போது அவரோட கடலையும் முடிவுக்கு வந்திருக்கும். ஒருமுறை இவரோட பேக்குல இருந்த கடலைப் பாக்கெட்டை எடுத்து சுத்தமா திண்ணுட்டு, தோலை மட்டும் மறுபடியும் பொட்டலம் போட்டு, பையிலயே வச்சுட்டோம். பங்கு கெடைக்காத பயலுக போட்டுக்குடுத்துட்டான். அடி வெளுத்தார் பாருங்க..பிரிச்சு மேய்ஞ்சுட்டாரு. ஓய்வுக்குப் பிறகு வீட்டுல இருந்த இவரும் இப்போது இல்லை.

அடுத்ததா எட்டாம்கிளாஸ் வாத்தியாரு அப்பாக்கண்ணு. இவருதான் ஹெட்மாஸ்டர். ஒரு மண்ணும் பாடம் நடத்த மாட்டார். எப்பயாவது வந்து தமிழ் மட்டும் நடத்திட்டுப் போவார். யாருக்கும் இவரைப் பிடிக்காது. ஓய்வுக்குப் பிறகு இப்ப என்ன பண்றாருன்னு தெரியலை. இம்புட்டுதான் எங்க ஆழிவாய்க்கால் பள்ளிக்கொடத்தோட வாத்திமார் வரலாறு. அதுக்குப் பிறகு பக்கத்துல இருக்குற மேலஉளூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்குப் போயாச்சு. அங்க கொத்து, கொத்தா ஒரு பாடத்துக்கு ஒரு ஆளுன்னு நிறைய பேர் வருவாய்ங்க. ஆனாலும் எங்க ஊரு வாத்தியார் மாதிரி அவங்கல்லாம் மனசை வசீகரிக்கலை.

எங்கப் பள்ளிக்கொடத்துல இன்னொருத்தர் இருந்தாரு. சாமிக்கண்ணுன்னுப் பேசு.ப்யூன். இவரு பசங்களை திட்டும்போது, 'உங்க வீட்டுல கருவாட்டுக் கொழம்பு வைக்க..' அப்படிம்பாரு. இல்லைன்னா, 'உங்க வீட்டுல தங்கம் விளைய'ம்பாரு. வீட்டுல சோடா கம்பெனி வச்சிருந்தாரு. ஒரத்தநாட்டுலேர்ந்து கெளம்பும்போது சைக்கிள் கேரியர்ல, சோடாவை எடுத்துக்குவாரு. ஒரத்தநாட்டுலேர்ந்து பதினஞ்சு கிலோமீட்டர் தூரத்துக்கு, வர்ற வழியில இருக்குற கிராமங்களுக்கு உண்டான நியூஸ் பேப்பர்களையும் வாங்கி, வரும்போதே ஒவ்வொரு கடையிலயாப் பேப்பரையும், சோடாவையும் போட்டுகிட்டே வருவாரு. பள்ளிக்கொடம் விட்டுப்போகும்போது கலெக்ஷன் நடக்கும். அதுபோக, வயக்காட்டுல ஒரு கட்டு புல் அறுத்து கேரியர்ல வச்சுக் கொண்டுட்டுப் போயிடுவரு. இதுக்காகவே வரும்போது கருக்கருவா கொண்டு வந்துடுவாரு. புல்லு அவர் வீட்டுல வளர்க்குற ஆட்டுக்குட்டிக்கு. இப்படி ஒரு நாள்ல இவர் பார்க்குற வேலை ஆச்சரியமா இருக்கும். இப்ப என்ன பண்றாரோ தெரியலை.

இப்ப நான் படிச்ச ஸ்கூல்ல எனக்கு தெரிஞ்ச வாத்தியார்கள் யாரும் இல்லை. ஆனா, சத்துணவுக் கூடத்துல சமையல் வேலை செஞ்ச ரெண்டு ஆயாக்களும், மணியடிக்கிற அந்த தண்டவாள இரும்பு துண்டும், மத்தியானம் சத்துணவுப் போடும்போது சொல்லப்படுற, 'பகுத்துண்டு பள்ளியில் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'ங்குற திருக்குறளும், சோயா மாவோட வாசனைக் கலந்த அந்த சத்துணவு சாம்பாரும் தன் மாறாத குணங்களோட அப்படியே இருக்கு.

இந்த வாத்திமார் வரலாறு என்னோட முடிஞ்சுப் போகக்கூடாது. அதனால, லக்கிலுக்கையும், வரவணையானையும் இந்த ஆட்டைக்கு அழைக்குறேன். வாங்க மக்கா..வாங்க.

16/3/07

இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா...?

'இந்திய சாதிய சமூகத்தில், தலித்துகள் அடுக்கப்பட்ட மூட்டையில் கடைசி மூட்டையாக இருக்கிறார்கள்' என்று அம்பேத்கர் சொல்லி ஒரு நூற்றாண்டு காலம் முடிந்துவிட்டது. நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அந்த நிலையிலிருந்து நாடு இன்னும் ஒரு இஞ்ச் கூட முன்னேறவில்லையோ என்று சந்தேகம் வருகிறது. அதுவும் கடைசி மூட்டையான தலித்துகள் மீது மேலும், மேலும் சுமைகள் ஏற்றப்படுகின்றன என்பதுதான் வேதனை.

இடப்பங்கீட்டின் அடிப்படையில் தலித்துகளுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டதாக ஒரு பம்மாத்து நாடகம் இங்கு வெகு காலமாக நடத்தப்படுகிறது. அந்த இடப்பங்கீடு, நடைமுறையில் ஆதிக்கசாதிகளிடம் சிக்கி எவ்வளவு கேவலப்படுத்தப்படுகிறது என்பதை, பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும், நாட்டார்மங்களத்திலும் பார்த்தோம். அங்கு உழைக்கும் தலித் மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்கும் அடிப்படை காரணங்களை கலைவதை விட்டுவிட்டு, அரசும் தன் பங்குக்கு ஒரு நாடகத்தை நடத்தியது. அண்மையில், மேற்கண்ட மூன்று கிராமங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, மூன்று தலித்துகளை பஞ்சாயத்து தலைவர்களாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக தேர்தல் நடக்காத ஊரில் தேர்தல் நடத்தியதே ஒரு குறிப்பிட தகுந்த முன்னேற்றம் என்று எண்ணிவிடக்கூடாது. இம்மாதிரியான மயக்க மருந்து நடவடிக்கைகள் மூலம்தான், அரசு மக்களின் எதிர்ப்புணர்வை முடக்கி வைக்கிறது. அந்த கிராமங்களில் தலித்துகள் ஊராட்சி மன்ற தலைவராகிவிட்டதால், கள்ளர் சாதி வெறியர்களின் ஒருவரது வீட்டிற்குள்ளாவது அந்த தலைவர்கள் சென்றுவிட முடியுமா என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

பிரச்னைக்குரிய இந்த பஞ்சாயத்துகளில்தான் என்றில்லை. தமிழ்நாடு முழுக்க எங்கெல்லாம் தலித்துகள் பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் இந்த பிரச்னை இருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு மொத்தம் 41 பஞ்சாயத்து தலைவர் பதவிகள், இடப்பங்கீட்டின் அடிப்படையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டன. பதவிக்கு வந்து சில மாதங்களில் சங்கரன்கோயில் அருகேயிருக்கும் நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்தில் ஒரு பிரச்னை. இங்கு பஞ்சாயத்து தலைவராக இருந்த ஜக்கன், அருந்ததிய இனத்தைச் சேர்ந்தவர். இப்பகுதியின் ஆதிக்கசாதிகளில் ஒன்றான நாயக்கர் இனத்தைச் சேர்ந்த நபர்தான் இந்த பஞ்சாயத்தின் துணை தலைவர். ஜக்கன் தன் கைப்பாவையாக இருப்பார் என நினைத்து அவருக்கு ஏராளமாக செலவுசெய்து தேர்தலில் போட்டியிட வைத்து, வெற்றிபெற வைத்ததே அந்த ஆதிக்க சாதி நபர்தான். ஆனால் ஜெயித்து வந்த ஜக்கன், அவர் கேட்ட நியாயமற்ற விஷயங்களை செய்துகொடுக்க மறுத்துவிடவே அவர் மீது கோபம் கொண்டார். அந்த கோபம் கொலைவெறியாக உருவெடுத்து நவம்பர் மாத இறுதியில், ஒரு அதிகாலை நேரத்தில் வயல் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த ஜக்கனை பலர் பார்க்க கொலை செய்தார் அந்த ஆதிக்கசாதி துணை தலைவர்.

இந்த கொடூர சாதிவெறி கொலை நடந்து முடிந்த அடுத்த மூன்றாவது மாதத்திற்குள் அதே சங்கரன்கோயில் பகுதியிலிருந்து அடுத்த கொலை நடந்தது. மருதக்கிணறு என்ற பஞ்சாயத்தின் தலைவராக இருந்த சேர்வரான் ஒரு அருந்ததியர். நாயக்கர் சாதியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணை தலைவர் கும்பலால் மர்மமாக சேர்வரான் கொலை செய்யப்பட்டார். இதுபோக, இளையரசனேந்தல் என்ற கிராம பஞ்சாயத்து தலைவராக இருக்கும் சுந்தர்ராஜு, அதே பஞ்சாயத்தின் துணை தலைவராக இருக்கும் ஆதிக்கசாதி(நாயக்கர்-ராஜூ)யைச் சேர்ந்த பெண்மணியால் தன் உயிருக்கு ஆபத்து என்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறார்.

மூன்று மாத காலத்திற்குள் நடந்திருக்கும் இந்த மூன்று சம்பவங்கள், தலித்துகளுக்கு கிடைத்திருக்கும் அதிகாரம் எந்த வகையானது என்பதைக் காட்டிவிடுகிறது.( இந்த மூன்று பஞ்சாயத்துகளிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், ஆதிக்கசாதி நாயக்கர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இதை வைத்துக்கொண்டு, 'நாயக்கர்கள்தான் சாதி வெறியோடு, ஆதிக்கத்தோடு இருக்கின்றனர்' என்று சொல்லிவிட முடியாது. நாயக்கர் அல்லாத தேவர், நாடார் போன்ற மற்ற ஆதிக்கசாதியினர் வசிக்கும் ஊர்களில் தலித்துகளும், தலித் பஞ்சாயத்து தலைவர்களும் இதைவிட மோசமாகத்தான் நடத்தப்படுகின்றனர்).

இந்த பிரச்னையில் சாதியின் நுண் கரங்கள் எங்கெங்கும் படர்ந்திருக்கின்றன. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் பல ஊராட்சிகள் சுழற்சி முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டவுடன், அதை முறியடிக்க அந்தந்த ஊராட்சிகளில் பெரும்பான்மையாக இருக்கும் சாதி இந்துகள் பல வழிகளிலும் முயன்றனர். பெரும்பான்மையான ஊராட்சிகளில் தங்களின் கைப்பாவையாக இருக்கும் தலித் ஒருவரை தேர்தலில் நிறுத்தி, அவருக்கு தேர்தலுக்குண்டான செலவுகள் அனைத்தையும் செய்து, தேர்தலுக்குப் பிறகு நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடும் இயந்திரமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். வருமானத்திற்கு சாதி இந்துக்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழலில் யாராலும், எதுவும் செய்ய முடியவில்லை. அப்படி எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம்தான் நக்கலமுத்தன்பட்டியில் நடந்த ஜக்கனின் மரணம்.

இதில் கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயம் ஒன்று உண்டு. தென் மாவட்ட கலவரத்திற்குப் பிறகு தேவேந்திர குல வேளாளர் இன மக்களிடம், மற்ற உயர் சாதி இனத்தவருக்கு மிகக் குறைந்த அளவுக்கு பயம் வந்திருக்கிறது. இதனால், 'இவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக வந்தால், நம் கைப்பாவையாக இருக்க மாட்டார்கள்' என கருதிய ஆதிக்க சாதியினர் ஒரு திட்டம் போட்டார்கள். அதன்படி, அதே ஊரில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இருக்கும் அருந்ததியரில் ஒருவரை பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்கள். ஊர்க்கூட்டம் போட்டு அவருக்குதான் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுப் போட்டார்கள். நெல்லை மாவட்டத்தில் அருந்ததியர் ஊராட்சி மன்ற தலைவர்களாக இருக்கும் பல பஞ்சாயத்துகளில் இதுதான் நடந்தது. மேலே உதாரணத்தில் சொல்லியிருக்கிற நக்கலமுத்தன்பட்டி, மருதக்கிணறு, இளையரசனேந்தல் ஆகிய மூன்று பஞ்சாயத்துகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். கொஞ்சம் கூட அரசியல் பின்புலமற்ற நிலையில் அருந்ததியர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. இப்படி தலித்துகளை உள்சாதி ரீதியாகக் கூறுபோடும் கொடுமைப்பற்றி தேர்தல் நடந்தபோதே பல்வேறு தலித் அமைப்புகளும் அரசுக்கு சுட்டிக்காட்டின. ஆனால், அரசுதான் கண்டுகொள்ளவில்லை.

தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் துணை தலைவர் பதவிக்கு எந்த சாதியினர் வேண்டுமானாலும் வரலாம் என்றொரு விதி வைத்திருக்கிறார்கள். இதனால், எங்கெல்லாம் தலித்துகள் பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் துணை தலைவராக இருப்பது ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்தான். தமிழ்நாடு முழுக்க இதுதான் நிலைமை. நம் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, பஞ்சாயத்து தொடர்பான எந்த ஒரு முடிவையும், துணை தலைவரின் ஒப்புதலின்றி தலைவர் மட்டும் தன்னிச்சையாக எடுத்துவிட முடியாது. ஒரு செக் பாஸ் பண்ண வேண்டுமென்றால் கூட இருவரின் ஒப்புதல் அவசியம். அப்படியானால் எல்லா விஷயத்திற்கும் அந்த ஆதிக்க சாதி துணை தலைவரின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். எனில் பெயரில் மட்டும்தான் துணை தலைவரே ஒழிய, நடப்பில் சகல அதிகாரங்களும் பெற்ற ஆட்டுவிக்கும் தலைவராகத்தான் இருக்கிறார். இட பங்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் சட்ட வடிவம் இது. தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் ஊராட்சிகளில், துணை தலைவராகவும் ஒரு தலித்துதான் வர வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வந்தாலன்றி இதற்கு தீர்வில்லை.

இப்படி அதிகாரத்தை நடைமுறைப் படுத்துவதில்தான் சிக்கல் என்றில்லை. பல இடங்களில் அடிப்படை மனித உரிமைகளே மறுக்கப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் தலித் பஞ்சாயத்து தலைவரை, அவருக்குரிய நாற்காலியில் கூட அமர விடுவதில்லை. இது வெறும் நாற்காலியோடு மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. நூற்றாண்டுகளாக தன்னிடம் கைகட்டி நிற்கவே பயந்தவன், இன்று தனக்கு முன்னால் அமர்ந்தால், தன் அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடு.

ஒரு சான்றிதழில் பஞ்சாயத்து தலைவரிடம் கையெழுத்து வாங்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள்..? நீங்கள் அவரது அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ போவீர்கள். ஆனால், தலித்துகள் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஊர்களில், 'அந்த குப்புசாமியை கொஞ்சம் வந்துட்டுப் போகச்சொல்லு..' என்று ஆள்விட்டு சொல்லியனுப்புவார்கள். அவர் ரப்பர் ஸ்டாம்பைத் தூக்கிக்கொண்டு உயர் சாதியினரின் வீட்டு வாசல்வரை வந்து கையெழுத்துப் போட்டுக்கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். இதுதான் நடக்கிறது..இதுதான் யதார்த்தம். அப்படியானால் அதிகாரம் யாரிடம் இருக்கிறது..? அரசியலைப்புச் சட்டம் வரையறுக்கும் சமூக நீதி எங்கே..? 'நான் இந்த பஞ்சாயத்தின் தலைவர் என்று சொல்லிக்கொண்டு யாராவது ஒரு பஞ்சாயத்து தலைவரால் உயர் சாதியினரின் வீட்டிற்குள் நுழைந்துவிட முடியுமா..? அந்த கிராமத்தில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளிலிருந்து குறைந்தபட்சம் அவரால் மட்டுமாவது தப்பித்து விட முடியுமா..? 'தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்கத்தொடங்கிவிட்டது' என்று ஒரு சாராரை பேச வைத்ததன்றி, இந்த தேர்தல் சாதித்ததென்ன..?

இது நூற்றாண்டுகளின் பிரச்னைதான். எல்லாம் ஒரே இரவில் தீர்ந்துவிட வேண்டும் என்று நினைக்க முடியாதுதான். ஆனால், தீர்வை நோக்கிய ஒரு திட்டத்தை செயல்படுத்தும் அரசாங்கம், அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டாமா..? அரசின் நோக்கம் தலித்துகளுக்கு சமூக நீதி கிடைப்பதுதான் என்றால், இம்மாதிரியான ஓட்டைகளை அடைத்தாக வேண்டும். இல்லையெனில், காலம் தன் மீது ஏற்றி வைத்திருக்கும் சுமையால் கண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு, தன் மீதிருக்கும் ஆதிக்கசாதி மூட்டைகளை அடித்து நொறுக்கி, தனக்கான விடுதலையை தானே தீர்மானித்துக் கொள்ளும் அவசியத்தை, காலம் கடைசி மூட்டைகளுக்கு ஏற்படுத்தும்.