தெய்வங்களைக் காப்பாற்றுவோம்

ம் சமூக மரபில் அனைத்து இனக்குழுவுக்கும் தனித்த அடையாளங்கள் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஒழித்து யாவருக்கும் ஒரே கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நிறுவ முயல்கிறது உலகமயமாக்கமும், அதன் மூல பிரதியான பார்ப்பனமயமாக்கமும்.

நம் குடும்பங்கள் அனைத்திற்கும் குலசாமிகள் உண்டு. அவை இப்போது தோட்டத்து மரங்களிடையே பராமரிப்பில்லாத விளக்கு மாடமாகவோ, யாருமற்ற வனாந்திரத்தில் சிதிலமடைந்து கிடக்கும் சிலையாகவோ மாறிப்போயிருக்கின்றன அல்லது முனீஸ்வரன்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இது யதேச்சையானது அல்ல. நூற்றாண்டுகளின் நுணுக்க அரசியல் இதற்கு பின்னால் மறைந்திருக்கிறது.

'உங்களை ஒவ்வொருவராக என் கலாச்சாரத்திற்கு மாற்றுவதைக் காட்டிலும் உன் சாமியையே என் கலாச்சாரத்திற்கு மாற்றிவிட்டால் அப்புறம் நீங்களென்ன பெரிய கொம்பா..? வேறு வழியின்றி இங்கு வந்துதானே ஆக வேண்டும்..?' என்ற பார்ப்பனவாத பாசிசக்குர இதற்குப்பின்னால் ஒழிந்திருக்கிறது. ஒரு சில குலசாமிகளின் கோயில்களில் சிவன், பிள்ளையார், விஷ்ணு போன்ற ஆதிக்க அடையாள தெய்வங்கள் வீற்றிருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இறை நம்பிக்கையுள்ள தமிழ் குடும்பங்கள் பலபேர் வீடுகளில் திருப்பதி வெங்கடாஜலபதி முதல், சந்துபிள்ளையார் சிலை வரைக்கும் சகல தெய்வங்களின் படங்களும் மாட்டப்பட்டிருக்கின்றன. 'அனைத்து சாமிகளும் ஒன்றுதான்..நம்பு..' என்று போதிக்கப்பட்டதன் விளைவு இது.. 'அப்படியானால் அனைத்து தெய்வங்களும் ஒன்றில்லையா..?' என்று யாரேனும் கேட்கலாம். நிச்சயமாக அனைத்தும் ஒன்றில்லை. உங்கள் தெய்வம் ஆதிக்கத்தின் அடையாளம். எங்கள் தெய்வம் அன்பின் அடையாளம். அன்பும், ஆதிக்கமும் எக்காலத்திலும் ஒன்றாக முடியாது.

இந்த வரலாற்று செய்திகளை ஆதாரத்தோடு தெளிவாக விளக்குகிறது பேரா.ஆ.சிவசுப்ரமணியன் எழுதிய 'நாட்டார் வழக்காற்றியல் அரசியல்' புத்தகம். கங்கு வரிசை நூல்களில் ஐந்தாவது நூலாக வெளிவந்த இந்தப்புத்தகம் விவரிக்கும் விஷயங்கள் ஆழமானவை.

''நாட்டுப்புறவியல் என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல்லாகவே நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல் பயன்படுட்தப்படுகிறது..'' என்று தொடங்கும் நூல், அரசியலில் நாட்டார் வழக்காறுகளின் பங்கு, நாட்டார் வழக்காறுகள் மீதான அரசியல் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. அதில் ஒன்று மட்டும் உதாரணத்திற்கு.

''இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952-ம் ஆண்டு, வேட்பாளர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளுக்குரிய சின்னத்தைத் தாங்கிய வாக்குப்பெட்டிகள்தான் நடைமுறையிலிருந்தன. வாக்களர்கள் தாம் விரும்பும் வாக்களரின் சின்னம் தாங்கிய பெட்டியில் வாக்குச்சீட்டைப் போடுவர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமாக இரட்டைக் காளை இருந்தது. தேர்தல் நாளன்று உப்புமாவும், காப்பியும் வழங்கி வாக்குச் சேகரிக்கும் நடைமுறையைச் சில வேட்பாளர்கள் மேற்கொண்டிருந்தார்கள். இப்பின்புலத்தில் கவிஞர் வெ.நா. திருமூர்த்தி என்பவர் ஒரு பாடலை இயற்றினார்.

''ஒத்த ரூபாய்த் தாரேன்
உப்புமா காப்பித் தாரேன்
ஓட்டுப் போடுற பெண்ணே
மாட்டைப் பார்த்துப் போடு

உன் ஒத்த ரூபாயும் வேணாம்
உப்புமா காப்பியும் வேணாம்
நீங்க தீய வச்ச கூட்டம்- ஒங்களத்
தீர்த்துக் கட்டப் போறேன்.''

இப்படி நாட்டார் வழக்காறுகளின் உள்ளூர் வரலாறு தொடங்கி உலக வரலாறு வரைக்கும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர். நூலின் இரண்டாம் பகுதிதான் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.

''நாட்டார் பாடல்களுக்கென்று தனித்துவமான இசையமைப்பு உள்ளது. இது சாஸ்திரிய சங்கீதம் அல்லது கர்நாடக சங்கீதம் போன்ற இறுக்கமான தன்மை உடையது அல்ல ; நெகிழ்ச்சியானது. எழுதப் படிக்க தெரியாதவரும் சில இசை வாய்பாடுகளுக்கு ஏற்ப பாடல்களை, துரிதகதி, மத்தியகதி, மந்தகதி என்று பாடுவர். ஆனால் இவற்றை மதிக்காத ஆதிக்க வகுப்பினர், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு அமைந்துள்ளது என்றும், முகாரி ராகத்தில் ஒப்பாரிப் பாடல்கள் அமைந்துள்ளது என்றும் அரசியல் செய்கின்றனர். அரசும் இந்த வேற்றுமையைக் கடைபிடிக்கின்றது. அகில இந்திய வானொலி நிலையம் சாஸ்திரி சங்கீதம் இசைக்குழுவினரை நிகழ்ச்சிக்கு அழைத்தால், அக்குழுவின் தலைமைப் பாடகருக்கு தனியாகவும், இசைக்கருவிகள் வாசிப்பவர்களுக்கு தனியாகவும் மதிப்பூதியம் வழங்குகிறது. அதே நேரம் வில்லிசைப் பாடகர் குழு ஒன்று நிகழ்ச்சி நடத்த அழைக்கப்பட்டால், மொத்தமாக மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.'' என நடைமுறையின் ஆதிக்கத்தை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார்.

அப்படியே நாட்டார் தெய்வங்கள் விசயத்திற்கு வரும் அவர், ''தமிழ் காப்பியங்களில் இடம்பெறும் வீரர்கள் மன்னர், வணிகர், தெய்வ அவதாரம் என்று மூன்று பிரிவுகளிலேயே அடங்குகின்றனர். ஆனால் இதற்கு நேர் மாறாக நாட்டார் கதைப்பாடல்களில் இடம்பெறும் வீரர்கள், உழைக்கும் மக்கள் பிரிவைச் சார்ந்தவர்களாகவே காட்சியளிக்கின்றனர். இவ்வீரர்களைதான் அடித்தள மக்கள், தம் வீரர்களாகவும், தியாகிகளாகவும் போற்றி தெய்வமாக்கி வணங்குகின்றனர். பெரும்பாலான தமிழக நாட்டார் தெய்வங்கள் கொலையுண்ட பின்னர், தெய்வமாக்கப் பட்டவர்கள்தான். ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியான இவ்வீரர்களுக்கு சிலை எடுத்தோ, பீடம் கட்டியோ வழிபடுவதென்பது ஒரு வகையான எதிர்க்குரல்தான். இந்த வகையில் மதுரை வீரன், காத்தவராயன் , ஒண்டிவீரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

ஆனால் நிலவுடைமை சமூகத்தில் ஆதிக்கச் சாதியினர், இத்தகைய தெய்வங்களின் தோற்றம் குறித்த கதைகளில் மாறுதல்களை நிகழ்த்தி, அவர்களுக்கு முற்பிறப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். சான்றாக மதுரை வீரன், காத்தவராயன் என்ற வீரர்களின் பிறப்பில் ஏற்படுத்திய மாற்றங்களைக் குறிப்பிடலாம். அருந்ததியர் சாதியில் பிறந்த வீரப்பன் என்ற இளைஞன் கொலையுண்டு இறந்துபோனான். பின்னர் அவனை அருந்ததியர் இன மக்கள் மதுரை வீரன் என்ற பெயரில் தெய்வமாக வழிபட தொடங்கினர். இதைப் பொறுத்துக்கொள்ளாத, மேட்டிமையோர் மதுரை வீரன் வரலாற்றில் சில மாறுதல்களை செய்தனர்.

=> காசியை ஆண்ட மன்னனுக்குப் பிறந்த குழந்தையை சோதிடரின் அறிவுரைப்படி காட்டில் கொண்டுவிட, அக்குழந்தையை அருந்ததி சாதிப் பெண்ணொருத்தி எடுத்து வளர்க்கிறாள். அக்குழந்தையே பிற்காலத்தில் மதுரை வீரன் என வழங்கப்படுகிறது.

=> சிவனின் வியர்வையில் தோன்றிய வீரபத்திரரே மதுரை வீரனாகப் பிறந்தார்.

=> முருகனின் தளபதியான வீரபாகுத் தேவர் பார்வதியின் சாபத்தால் மதுரை வீரனாகப் பிறந்தார்

இப்படி பலவகையான கட்டுக்கதைகள் மதுரை வீரன் பிறப்பைச் சுற்றிப்பின்னப்பட்டன. மதுரை வீரனை அவனது சாதியிலிருந்து துண்டித்து புராணப் பாத்திரமாக மாற்றுவிடுவதுதான் அவர்களின் நோக்கம்.

பறையர் சாதியில் பிறந்த காத்தவராயன் தன் சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமனம் செய்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் ஆற்றில் குளிக்கும்போது அவன் அழகில் மயங்கிய ஒரு பிராமணப் பெண் அவனையே திருமனம் செய்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளை அவன் இரண்டாம் திருமனம் செய்துகொண்டான். இது தெரிந்த பிராமணர்கள் மன்னரிடம் முறையிட மன்னரின் உத்தரவுப்படி அவன் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டான். பின் அவன் தெய்வமானான். பறைசாதி மனைவி ஒரு புறமும், பிராமணச் சாதி மனைவி மற்றொரு புறமுமாக அமைந்த காத்தவராயன் சிலை, பிராமணிய மேலாண்மைக்கு அறைகூவல் விட்டது. எனவே இதற்கும் ஒரு முற்பிறவியை உருவாக்கினார்கள்.

அதன்படி, 'மான் வயிற்றில் பிறந்த காத்தவராயன் தேவலோகத்தில் நந்தவனம் காக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்தான். அங்கு நீராட வந்த ஏழு தேவ கன்னியரின் சாபத்திற்கு ஆளாகிப் பறையனாகப் பிறந்தான். நந்தவனத்திற்கு நீராடவந்த ஏழு தேவ கன்னியரில் ஒருத்தியே ஆரியமாலாவாகப் பிறந்தாள். கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட பின்னர் காத்தவராயன் மீண்டும் தேவலோகத்திற்கு வந்து சேர்வான் என்று சாப விமோசனத்தையும் சிவ பெருமான் வழங்கியிருந்தார்.' என திரிபு கதைகள் உருவாக்கப்பட்டன.

அடித்தள மக்களிடையே உருவான வீரர்களை தம் பண்பாட்டு அடையாளமாக அம்மக்கள் உரிமைக் கொண்டாடி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில்தான் மதுரை வீரனுக்கும், காத்தவராயனுக்கும் முற்பிறவி வழங்கப்பட்டுள்ளது.'' என வெகு அழகாக ஆதிக்கத்தின் சூழ்ச்சியை விவரிக்கிறார் பேராசிரியர்.

நாம் இழந்த தெய்வங்களை மீட்கவும், இருக்கும் தெய்வங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் (ஆம்...எங்கள் தெய்வங்கள் யாரும் அவதாரங்களில்லை. அவர்கள் எங்கள் முன்னோர்கள். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையதுதான்) ஆயுதங்களைக் கூர் தீட்டிக்கொள்ள இம்மாதிரியான புத்தகங்கள் உதவும்.

நூலின் பெயர்: நாட்டார் வழக்காற்றியல் அரசியல்
நூல் ஆசிரியர்: பேரா.ஆ. சிவசுப்ரமணியன்
பதிப்பகம்: கங்கு
விலை: ரூ. 25
கிடைக்குமிடம்:
பரிசல்,
எண் 1, இந்தியன் வங்கி காலனி,
வள்ளலார் தெரு,
பத்மநாபா நகர்,
சூளைமேடு,
சென்னை- 94
செல்: 9382853646

கருத்துகள்

அசுரன் இவ்வாறு கூறியுள்ளார்…
Good One..... I will come do Pinnuutta Kavalithanam....
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//Good One..... I will come do Pinnuutta Kavalithanam.... //

வாங்க அசுரன்...ஒரு வரியில பின்னூட்டுறது உங்க ஸ்டைல் இல்லையே..விரிவா எதிர்பார்த்தேன்...
thiru இவ்வாறு கூறியுள்ளார்…
//'உங்களை ஒவ்வொருவராக என் கலாச்சாரத்திற்கு மாற்றுவதைக் காட்டிலும் உன் சாமியையே என் கலாச்சாரத்திற்கு மாற்றிவிட்டால் அப்புறம் நீங்களென்ன பெரிய கொம்பா..? வேறு வழியின்றி இங்கு வந்துதானே ஆக வேண்டும்..?' என்ற பார்ப்பனவாத பாசிசக்குர இதற்குப்பின்னால் ஒழிந்திருக்கிறது. ஒரு சில குலசாமிகளின் கோயில்களில் சிவன், பிள்ளையார், விஷ்ணு போன்ற ஆதிக்க அடையாள தெய்வங்கள் வீற்றிருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும்.//

பார்ப்பனீய பண்பாட்டு படையெடுப்பில் எதிர்கொள்ளும் இன்றைய சவால் இது தான். பலியாகப்போகிறோம் என தெரியாமலே பலிக்களத்திற்கு செல்லும் மந்தைகளாக இல்லாமல் மக்கள் விழிப்பாக இருந்து தங்கள் தெய்வங்களை காப்பற்றுவது விடுதலையின் முதல் படி. "நம் மக்களுக்கு தெய்வங்கள் தான் உண்டு. கடவுள்கள் இல்லை" என நாட்டார் வழ்க்கியல் ஆய்வு செய்யும் பேராசிரியர் ஒருவர் தனது உரையில் குறிப்பிடுகிறார்.

//உங்கள் தெய்வம் ஆதிக்கத்தின் அடையாளம். எங்கள் தெய்வம் அன்பின் அடையாளம். அன்பும், ஆதிக்கமும் எக்காலத்திலும் ஒன்றாக முடியாது.//

இந்த உண்மையை உணராத வரையில் விடிவு இல்லை.

நல்ல பதிவும் தந்து நல்ல ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரானுக்கு என் முதற்கண் நன்றிகள்.

நேரமின்மையால், பிறகு வந்து விளக்கமான பின்னூட்டம் இடுவேன்.
வணக்கம்!
Thangamani இவ்வாறு கூறியுள்ளார்…
புத்தக விமர்சனத்துக்கு நன்றி!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பாப்புகளுக்கு மீண்டும் ஆப்பா?!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இது அவர் எழுதின நூல். உங்க கருத்து சொல்லுங்க!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சாமியே கும்பிடாதே..அது வேஸ்ட் அப்படி என்று ஒரு கும்பல் சொல்கிறதே?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சிறு தெய்வ வழிபாட்டினால் சாதிய பாகுபாடும், பிரச்சனைகளும் அதிகம் இருப்பதாக சொல்லுறாங்களே!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பின்னூட்டமிட்ட திரு, மாசிலா, தங்கமணி, கருத்து கணபாடிகள், அனானி ஆகிய அனைவருக்கும் நன்றிகள்.

பின்னூட்டத்தில் சொல்வதற்கு இன்னும் சில செய்திகள் இருக்கின்றன. சற்று இடைவெளியில் மீண்டும் வருகிறேன்.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
நூல் ஆசிரியர்: பேரா.ஆ. சிவசுப்ரமணியன் கூற்றை வேறொரு கோணத்தில் கூற வேண்டும் என்றால் பார்ப்பனர்கள் நாட்டார்களின் தெய்வங்களையே திருடிவிட்டனர் என சொல்லலாமா? மண்ணை திருடி, உழைப்பை திருடி, அவர்களின் சமூக அடையாளங்களையே திருடி அம்மணமாக ஆக்கி உரு குலைத்து நாசப் படுத்தியிருக்கின்றனர்.

மனித குலத்தின் அதி-நூதனமான திருட்டுதான் இந்த தெய்வத்திருட்டு.

//நாம் இழந்த தெய்வங்களை மீட்கவும், இருக்கும் தெய்வங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் (ஆம்...எங்கள் தெய்வங்கள் யாரும் அவதாரங்களில்லை. அவர்கள் எங்கள் முன்னோர்கள். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையதுதான்) ஆயுதங்களைக் கூர் தீட்டிக்கொள்ள இம்மாதிரியான புத்தகங்கள் உதவும்.// இது நம் ஒவ்வொருவரின் கடமை. இழந்த அடையாளங்களை மீட்டெடுத்து முன்னோர்களின் மானத்தை காப்பாற்ற வேண்டும்.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
கருத்துகணபாடிகள் //சாமியே கும்பிடாதே..அது வேஸ்ட் அப்படி என்று ஒரு கும்பல் சொல்கிறதே?//
அவங்க சொல்வது கற்பனையில் படைக்கப்பட்ட சாமிகளை. இங்கு பேசப்படுவது தெய்வங்களை பற்றியது. இது தெய்வ வழிபாடு. குல தெய்வ வழிபாடு. இதன் பேர் கும்பிடுவது இல்லை. வணங்குவது.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
கருத்து கணபாடிகள் //சிறு தெய்வ வழிபாட்டினால் சாதிய பாகுபாடும், பிரச்சனைகளும் அதிகம் இருப்பதாக சொல்லுறாங்களே!//
முதலில் சாதியை அறிமுகப் படுத்தியது யார்? தானாக முளைத்ததா சாதி? மக்கள் குலம் குலமாக தத்தமது பழக்க வழக்கத்திற்கு இணங்க வாழ்ந்து வந்தார்கள். பாசிச வெறி கொண்ட ஆதிக்க வெறியர்கள் இவர்களின் வாழ்க்கை முறையை சகித்துக் கொள்ள தெரியாமல் இவர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற வெறியுடன், இரும்புக்கரம் கொண்டு நிர்வகித்து இவர்களின் இரத்தத்தை கடைசி சொட்டுவரை உறிந்து அவர்கள் முதுகில் ஓசியில் ஏறி சவாரி செய்ய உருவாக்கப் பட்டதே இந்த சாதிகள்.
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி,
விமர்சனம் படிச்சு முடிச்ச சூட்டோட புத்தகம் வாங்கிப் படிச்சிட்டேன்.. நல்ல பதிவு, நல்ல புத்தகம் :)

பின்னூட்டத்துல நிறைய சொல்றேன்னீங்களே.. வருவீங்கன்னு நானும் பார்த்துகிட்டிருக்கேன்.. எப்போ?
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//தம்பி,
விமர்சனம் படிச்சு முடிச்ச சூட்டோட புத்தகம் வாங்கிப் படிச்சிட்டேன்.. நல்ல பதிவு, நல்ல புத்தகம் :)//

அட..நான் எழுதுனதையும் படிச்சுட்டு புத்தகம் வாங்க ஒரு சீவன் இருக்கா..? நன்றி..

//பின்னூட்டத்துல நிறைய சொல்றேன்னீங்களே.. வருவீங்கன்னு நானும் பார்த்துகிட்டிருக்கேன்.. எப்போ?//

இப்படித்தான் எதையாவது சொல்லி சொ.செ.சூ. ஆகிவிடுகிறது. உங்களை மாதிரி வல்லாரை பார்ட்டிகள் பிடித்துவிடுகிறீர்கள்.

தமிழனின் குலசாமிகளான முனியப்பன், வீரனார், ஐயனார், கருப்பசாமி, பேச்சியம்மன், வீரகாளி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் சமதளத்திலேயே இருக்கும். அதாவது தமது முன்னோர்களையே தெய்வங்களாக்கியதால், இருவரும் ஒன்றே என்ற கருத்தின் வெளிப்பாடு அது. கர்ப்ப கிரகம் என்று கருமம் எதுவும் தனியாகக் கிடையாது.
யார் வேண்டுமானாலும் சாமியைத் தொட்டு வழிபடலாம். சாமிக்கும், வழிபடுபவனுக்குமான இடைவெளி என்பது கிட்டத்தட்ட இல்லை.

ஆனால், பார்ப்பனர்களின் தெய்வங்கள் இதற்கு முற்றிலும் எதிரான போக்கு கொண்டவை. தூங்குமூஞ்சி பெருமாள் முதல், சங்கு சக்கரம் விஷ்ணு வரை அனைத்து தெய்வங்களும் உயர்ந்த இடத்தில் குறைந்த பட்சம் ஒரு பீடத்திலாவது வைக்கப்பட்டிருக்கும். அதேபோல தெய்வத்திற்கும், வழிபடும் நபருக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட அளவு இடைவெளி கட்டாயம் இருக்கும். 'தெய்வங்கள் அனைவரும் அவதாரங்கள். அவர்களை மனிதனுக்கு சமமாகக் கருதக்கூடாது. அவர்கள் மனிதர்களை விட மேலானவர்கள்' என்ற கருத்தாக்கத்தின் வெளிப்பாடு அது. மனிதனை விட உயர்ந்ததாக தெய்வம் படைக்கப்பட்ட பின்னர், சாதாரண மனிதன் நேரடியாக தெய்வத்தை வழிபட முடியாதில்லையா..? அப்போதுதான் புரோக்கர்கள் வருகின்றனர்.

முந்தைய வழிபாட்டு முறை என்பது இயல்பாக உருவானது. பிந்தையது திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பொன்ஸுக்கு...

தமிழனின் குலசாமி கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும், அமாவாசையிலேயே வரும். பார்ப்பன தெய்வங்களின் திருவிழாக்கள் பெரும்பாலும் பவுர்ணமி வெளிச்சத்திலேயே நடக்கும். இதற்கான, தத்துவ, அரசியல் காரணங்கள் எதுவும் என்னிடம் இல்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்