21/2/07

தெய்வங்களைக் காப்பாற்றுவோம்

ம் சமூக மரபில் அனைத்து இனக்குழுவுக்கும் தனித்த அடையாளங்கள் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஒழித்து யாவருக்கும் ஒரே கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நிறுவ முயல்கிறது உலகமயமாக்கமும், அதன் மூல பிரதியான பார்ப்பனமயமாக்கமும்.

நம் குடும்பங்கள் அனைத்திற்கும் குலசாமிகள் உண்டு. அவை இப்போது தோட்டத்து மரங்களிடையே பராமரிப்பில்லாத விளக்கு மாடமாகவோ, யாருமற்ற வனாந்திரத்தில் சிதிலமடைந்து கிடக்கும் சிலையாகவோ மாறிப்போயிருக்கின்றன அல்லது முனீஸ்வரன்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இது யதேச்சையானது அல்ல. நூற்றாண்டுகளின் நுணுக்க அரசியல் இதற்கு பின்னால் மறைந்திருக்கிறது.

'உங்களை ஒவ்வொருவராக என் கலாச்சாரத்திற்கு மாற்றுவதைக் காட்டிலும் உன் சாமியையே என் கலாச்சாரத்திற்கு மாற்றிவிட்டால் அப்புறம் நீங்களென்ன பெரிய கொம்பா..? வேறு வழியின்றி இங்கு வந்துதானே ஆக வேண்டும்..?' என்ற பார்ப்பனவாத பாசிசக்குர இதற்குப்பின்னால் ஒழிந்திருக்கிறது. ஒரு சில குலசாமிகளின் கோயில்களில் சிவன், பிள்ளையார், விஷ்ணு போன்ற ஆதிக்க அடையாள தெய்வங்கள் வீற்றிருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இறை நம்பிக்கையுள்ள தமிழ் குடும்பங்கள் பலபேர் வீடுகளில் திருப்பதி வெங்கடாஜலபதி முதல், சந்துபிள்ளையார் சிலை வரைக்கும் சகல தெய்வங்களின் படங்களும் மாட்டப்பட்டிருக்கின்றன. 'அனைத்து சாமிகளும் ஒன்றுதான்..நம்பு..' என்று போதிக்கப்பட்டதன் விளைவு இது.. 'அப்படியானால் அனைத்து தெய்வங்களும் ஒன்றில்லையா..?' என்று யாரேனும் கேட்கலாம். நிச்சயமாக அனைத்தும் ஒன்றில்லை. உங்கள் தெய்வம் ஆதிக்கத்தின் அடையாளம். எங்கள் தெய்வம் அன்பின் அடையாளம். அன்பும், ஆதிக்கமும் எக்காலத்திலும் ஒன்றாக முடியாது.

இந்த வரலாற்று செய்திகளை ஆதாரத்தோடு தெளிவாக விளக்குகிறது பேரா.ஆ.சிவசுப்ரமணியன் எழுதிய 'நாட்டார் வழக்காற்றியல் அரசியல்' புத்தகம். கங்கு வரிசை நூல்களில் ஐந்தாவது நூலாக வெளிவந்த இந்தப்புத்தகம் விவரிக்கும் விஷயங்கள் ஆழமானவை.

''நாட்டுப்புறவியல் என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல்லாகவே நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல் பயன்படுட்தப்படுகிறது..'' என்று தொடங்கும் நூல், அரசியலில் நாட்டார் வழக்காறுகளின் பங்கு, நாட்டார் வழக்காறுகள் மீதான அரசியல் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. அதில் ஒன்று மட்டும் உதாரணத்திற்கு.

''இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952-ம் ஆண்டு, வேட்பாளர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளுக்குரிய சின்னத்தைத் தாங்கிய வாக்குப்பெட்டிகள்தான் நடைமுறையிலிருந்தன. வாக்களர்கள் தாம் விரும்பும் வாக்களரின் சின்னம் தாங்கிய பெட்டியில் வாக்குச்சீட்டைப் போடுவர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமாக இரட்டைக் காளை இருந்தது. தேர்தல் நாளன்று உப்புமாவும், காப்பியும் வழங்கி வாக்குச் சேகரிக்கும் நடைமுறையைச் சில வேட்பாளர்கள் மேற்கொண்டிருந்தார்கள். இப்பின்புலத்தில் கவிஞர் வெ.நா. திருமூர்த்தி என்பவர் ஒரு பாடலை இயற்றினார்.

''ஒத்த ரூபாய்த் தாரேன்
உப்புமா காப்பித் தாரேன்
ஓட்டுப் போடுற பெண்ணே
மாட்டைப் பார்த்துப் போடு

உன் ஒத்த ரூபாயும் வேணாம்
உப்புமா காப்பியும் வேணாம்
நீங்க தீய வச்ச கூட்டம்- ஒங்களத்
தீர்த்துக் கட்டப் போறேன்.''

இப்படி நாட்டார் வழக்காறுகளின் உள்ளூர் வரலாறு தொடங்கி உலக வரலாறு வரைக்கும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர். நூலின் இரண்டாம் பகுதிதான் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.

''நாட்டார் பாடல்களுக்கென்று தனித்துவமான இசையமைப்பு உள்ளது. இது சாஸ்திரிய சங்கீதம் அல்லது கர்நாடக சங்கீதம் போன்ற இறுக்கமான தன்மை உடையது அல்ல ; நெகிழ்ச்சியானது. எழுதப் படிக்க தெரியாதவரும் சில இசை வாய்பாடுகளுக்கு ஏற்ப பாடல்களை, துரிதகதி, மத்தியகதி, மந்தகதி என்று பாடுவர். ஆனால் இவற்றை மதிக்காத ஆதிக்க வகுப்பினர், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு அமைந்துள்ளது என்றும், முகாரி ராகத்தில் ஒப்பாரிப் பாடல்கள் அமைந்துள்ளது என்றும் அரசியல் செய்கின்றனர். அரசும் இந்த வேற்றுமையைக் கடைபிடிக்கின்றது. அகில இந்திய வானொலி நிலையம் சாஸ்திரி சங்கீதம் இசைக்குழுவினரை நிகழ்ச்சிக்கு அழைத்தால், அக்குழுவின் தலைமைப் பாடகருக்கு தனியாகவும், இசைக்கருவிகள் வாசிப்பவர்களுக்கு தனியாகவும் மதிப்பூதியம் வழங்குகிறது. அதே நேரம் வில்லிசைப் பாடகர் குழு ஒன்று நிகழ்ச்சி நடத்த அழைக்கப்பட்டால், மொத்தமாக மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.'' என நடைமுறையின் ஆதிக்கத்தை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார்.

அப்படியே நாட்டார் தெய்வங்கள் விசயத்திற்கு வரும் அவர், ''தமிழ் காப்பியங்களில் இடம்பெறும் வீரர்கள் மன்னர், வணிகர், தெய்வ அவதாரம் என்று மூன்று பிரிவுகளிலேயே அடங்குகின்றனர். ஆனால் இதற்கு நேர் மாறாக நாட்டார் கதைப்பாடல்களில் இடம்பெறும் வீரர்கள், உழைக்கும் மக்கள் பிரிவைச் சார்ந்தவர்களாகவே காட்சியளிக்கின்றனர். இவ்வீரர்களைதான் அடித்தள மக்கள், தம் வீரர்களாகவும், தியாகிகளாகவும் போற்றி தெய்வமாக்கி வணங்குகின்றனர். பெரும்பாலான தமிழக நாட்டார் தெய்வங்கள் கொலையுண்ட பின்னர், தெய்வமாக்கப் பட்டவர்கள்தான். ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியான இவ்வீரர்களுக்கு சிலை எடுத்தோ, பீடம் கட்டியோ வழிபடுவதென்பது ஒரு வகையான எதிர்க்குரல்தான். இந்த வகையில் மதுரை வீரன், காத்தவராயன் , ஒண்டிவீரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

ஆனால் நிலவுடைமை சமூகத்தில் ஆதிக்கச் சாதியினர், இத்தகைய தெய்வங்களின் தோற்றம் குறித்த கதைகளில் மாறுதல்களை நிகழ்த்தி, அவர்களுக்கு முற்பிறப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். சான்றாக மதுரை வீரன், காத்தவராயன் என்ற வீரர்களின் பிறப்பில் ஏற்படுத்திய மாற்றங்களைக் குறிப்பிடலாம். அருந்ததியர் சாதியில் பிறந்த வீரப்பன் என்ற இளைஞன் கொலையுண்டு இறந்துபோனான். பின்னர் அவனை அருந்ததியர் இன மக்கள் மதுரை வீரன் என்ற பெயரில் தெய்வமாக வழிபட தொடங்கினர். இதைப் பொறுத்துக்கொள்ளாத, மேட்டிமையோர் மதுரை வீரன் வரலாற்றில் சில மாறுதல்களை செய்தனர்.

=> காசியை ஆண்ட மன்னனுக்குப் பிறந்த குழந்தையை சோதிடரின் அறிவுரைப்படி காட்டில் கொண்டுவிட, அக்குழந்தையை அருந்ததி சாதிப் பெண்ணொருத்தி எடுத்து வளர்க்கிறாள். அக்குழந்தையே பிற்காலத்தில் மதுரை வீரன் என வழங்கப்படுகிறது.

=> சிவனின் வியர்வையில் தோன்றிய வீரபத்திரரே மதுரை வீரனாகப் பிறந்தார்.

=> முருகனின் தளபதியான வீரபாகுத் தேவர் பார்வதியின் சாபத்தால் மதுரை வீரனாகப் பிறந்தார்

இப்படி பலவகையான கட்டுக்கதைகள் மதுரை வீரன் பிறப்பைச் சுற்றிப்பின்னப்பட்டன. மதுரை வீரனை அவனது சாதியிலிருந்து துண்டித்து புராணப் பாத்திரமாக மாற்றுவிடுவதுதான் அவர்களின் நோக்கம்.

பறையர் சாதியில் பிறந்த காத்தவராயன் தன் சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமனம் செய்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் ஆற்றில் குளிக்கும்போது அவன் அழகில் மயங்கிய ஒரு பிராமணப் பெண் அவனையே திருமனம் செய்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளை அவன் இரண்டாம் திருமனம் செய்துகொண்டான். இது தெரிந்த பிராமணர்கள் மன்னரிடம் முறையிட மன்னரின் உத்தரவுப்படி அவன் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டான். பின் அவன் தெய்வமானான். பறைசாதி மனைவி ஒரு புறமும், பிராமணச் சாதி மனைவி மற்றொரு புறமுமாக அமைந்த காத்தவராயன் சிலை, பிராமணிய மேலாண்மைக்கு அறைகூவல் விட்டது. எனவே இதற்கும் ஒரு முற்பிறவியை உருவாக்கினார்கள்.

அதன்படி, 'மான் வயிற்றில் பிறந்த காத்தவராயன் தேவலோகத்தில் நந்தவனம் காக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்தான். அங்கு நீராட வந்த ஏழு தேவ கன்னியரின் சாபத்திற்கு ஆளாகிப் பறையனாகப் பிறந்தான். நந்தவனத்திற்கு நீராடவந்த ஏழு தேவ கன்னியரில் ஒருத்தியே ஆரியமாலாவாகப் பிறந்தாள். கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட பின்னர் காத்தவராயன் மீண்டும் தேவலோகத்திற்கு வந்து சேர்வான் என்று சாப விமோசனத்தையும் சிவ பெருமான் வழங்கியிருந்தார்.' என திரிபு கதைகள் உருவாக்கப்பட்டன.

அடித்தள மக்களிடையே உருவான வீரர்களை தம் பண்பாட்டு அடையாளமாக அம்மக்கள் உரிமைக் கொண்டாடி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில்தான் மதுரை வீரனுக்கும், காத்தவராயனுக்கும் முற்பிறவி வழங்கப்பட்டுள்ளது.'' என வெகு அழகாக ஆதிக்கத்தின் சூழ்ச்சியை விவரிக்கிறார் பேராசிரியர்.

நாம் இழந்த தெய்வங்களை மீட்கவும், இருக்கும் தெய்வங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் (ஆம்...எங்கள் தெய்வங்கள் யாரும் அவதாரங்களில்லை. அவர்கள் எங்கள் முன்னோர்கள். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையதுதான்) ஆயுதங்களைக் கூர் தீட்டிக்கொள்ள இம்மாதிரியான புத்தகங்கள் உதவும்.

நூலின் பெயர்: நாட்டார் வழக்காற்றியல் அரசியல்
நூல் ஆசிரியர்: பேரா.ஆ. சிவசுப்ரமணியன்
பதிப்பகம்: கங்கு
விலை: ரூ. 25
கிடைக்குமிடம்:
பரிசல்,
எண் 1, இந்தியன் வங்கி காலனி,
வள்ளலார் தெரு,
பத்மநாபா நகர்,
சூளைமேடு,
சென்னை- 94
செல்: 9382853646

12/2/07

காதலிக்க யாருமில்லை..'தேவதைகள் பூமிக்கு வருவதில்லை என்பதெல்லாம் காதலிக்காதவர்கள் சொல்லி வைத்த பொய்கள்..' என்று பனிக்கூழ் வார்த்தைகளில் உரு(க்)குகிறார் பழனிபாரதி. 'பெண் இல்லாத ஊரிலே கொடி பூ பூப்பதில்லை..' என மிகை வார்த்தைகளால் மிரட்டுகிறார் வைரமுத்து.

கேட்கும்போது சுகமாகத்தான் இருக்கிறது.உணரும்போதுதான் வருத்தமும், கழிவிரக்கமும் வந்துவிடுகிறது.நம்புங்கள் நண்பர்களே....காதலை சொந்த அனுபவத்தில் உணராத சபிக்கப்பட்ட இளைஞர்கள் எனைபோல் பெருங்கூட்டம் இங்குண்டு.உடனே, 'நல்லா யோசிச்சுப் பாரு...காதல்ல சிக்காதவன் எவனுமே இருக்க முடியாது.ஒண்ணு நீ காதலிச்சுருக்கனும்.இல்லை...உன்னை யாராவது காதலிச்சுருக்கனும்.ஆனா கட்டாயம் காதல் உன்னைக் கடந்துப் போயிருக்கும்..' என்று அறிவுரை வார்த்தைகளை கை நிறைய அள்ளி வீச தயாராக வேண்டாம்.

இந்த வார்த்தைகளை கேட்கும்போதுதான் ரொம்பவே கலக்கமாக இருக்கிறது. 'டீக்கடை முக்குல நின்னு,நாலு நாளு சிரிச்சு,சிரிச்சுப் பார்த்துச்சே...அந்தப் பிள்ளையா இருக்குமோ...? அந்த ராஜாளியார் வீட்டுபிள்ளை எப்பவும் எகனமொகனயா கிண்டல் பண்ணுமே..அதுவா..? 'உனக்கு வெள்ளை சட்டை நல்லாயிருக்கு..'ன்னு கருத்து சொன்னாளே..அவளா இருப்பாளோ...?' என்று என்னைக் காதலித்திருப்பார்களோ என்று நான் சந்தேகிப்பவர்களின் உத்தேசப் பட்டியல் முன்காலையின் நிழலென நீள்கிறது. ஆனால் யாரையும் நான் காதலிக்கவில்லை என்பதே உண்மை. 'அதுக உன்னைக் காதலிச்சிருந்தா..?' என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை.ஆனால் அப்படி 'ப்பதாக' யாரும் என்னிடம் சொல்லியதில்லை.

கால்கள் தரையில் படாமல்,எனக்கு மட்டும் தலைக்கு மேலே அறிவுக்கொம்புகள் முளைத்திருந்ததாய் நான் நம்பிய காலங்களில் எனைச்சுற்றி நிறைய பெண்கள் இருந்தனர்.அவர்களின் காதலுக்காய் என் அபத்த கவிதைகள் தூதுப்போயின. 'கேவலம்...என் கவிதைகளை நம்பி காதல் செய்யும் இவர்களில் ஒருத்தி என் காதலியாக இருக்க வாய்ப்பே இல்லை..' என்று திமிரோடு திரிந்தால் அப்புறம் எங்கிருந்து காதல் வரும்..?

காதலிக்கிறவர்களை வாழ்வின் யதார்த்தம் உணராத கற்பனைவாதிகளாக, வாழ்க்கையை வீணடிப்பவர்களாக மட்டுமே எண்ணிய என் பெருமூளை, 'உங்களுக்கெல்லாம் இருக்குடி ஆப்பு' என அடிக்கடி சொல்லிக்கொள்ளும்.அது எனக்கு நானே வைத்துக்கொண்ட ஆப்பு என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.இன்னொரு பக்கம், எனைபோன்று Personality இல்லாத ஜந்துகளை பெண்கள் காதலிப்பார்கள் என்ற மூட நம்பிக்கையெல்லாம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை.

கல்லூரி பருவம் முடிவுக்கு வந்த இறுதிக்கும் முந்தைய நாள், ஒரு இறுக்கமும்,துக்கமும்,வெறுமையும் மனதை அடைத்தது.யாவரின் கரங்களிலும் பூக்கள் இருக்க, என் கரங்களில் வெறும் முட்கள் மட்டுமே இருந்தன.என் கரங்களும் பூக்களுக்கு ஏங்கிய தருணத்தில் எந்தச் செடியிலும் பூக்கள் இல்லை...எல்லாம் கொய்யப்பட்டிருந்தன. பெண்கள் சூழ இருந்த பொழுதிலேயே முட்கள் கொய்யாதவன் முட்கள் சூழ்ந்த வெளியுலகில் பூக்களையா கொய்துவிடப் போகிறேன்..? இதுவரை ஒருமுறை கூட எனக்கு உலகம் அர்த்தப்படவில்லை;என் பிம்பம் விழுந்து கண்ணாடி உடையவில்லை.

அரங்குகளில்,வீதிகளில் இளம் வயது இணைகளைப் பார்க்கும்போது இந்த கழிவிரக்கமும்,ஏக்கத்துயரும் மிகுதியாகிறது.இதற்காகவே நான் மெரினா கடற்கரைக்குப் போவதில்லை.அது பேச்சுலர்களை.. குறிப்பாக பேரிளம் வாலிபர்களை உசுப்பேற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் இடம்.மணலுக்கு வாயிருந்தால் கண்ணீருடன் சொல்லும்..தன் மீது டன் கணக்கில் குவிந்துகிடக்கும் பெருமூச்சுகளின் கதைகளை. அதிலும், 'இவனையெல்லாம் எவ காதலிக்கப் போறா.?' என்று நொட்டாங்கையால் ஒதுக்கித்தள்ளப்பட்ட நண்பர்கள், தேவதைகளோடு வீதிகளில் திரிவதைப் பார்த்தால் பெருமூச்சு பொத்துக்கொண்டு வரும்.

பைக்கில் பில்லியன் என்ற வஸ்து பொருத்தப்பட்டிருப்பதன் நோக்கத்தை பெண்கள்தான் நிறைவு செய்கின்றனர்.என்ன செய்ய...? பீர் தொந்தி தடியன்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது என் போன்றவர்களின் பைக் பில்லியன்.இந்த இடத்தில் நண்பர் சுகுணா திவாகரின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.

எத்தனைகாலம் பியர்போத்தல்களோடு பேசிக்கொண்டிருப்பது?

காதலற்றுக் கழிகிறது காலம்..
நண்பகல் வெறுமையைப் போல
மயான வெம்மையைப் போல..
ஒற்றைக் காகத்தின் தனிமையைப் போலவும்.
இந்த காலத்தை என்ன செய்வது?
கொலுசொலி, சிணுங்கல்,
பொய்க்கோபம், வாழ்த்தட்டைகள்,
சின்னச்சின்ன பரிசுகள்
பிரிவின் வாதை,
நெகிழ்வின் கண்ணீர்..
எதைக்கொண்டு நிரப்புவது
இந்த காலத்தை?
பதில்சொல்லுங்களேன் எவளாவது..?


-இந்த சுய புலம்பலின் உச்சத்தில், தன்னைக் கடந்து போன பெண்களில் ஒருத்தியை கற்பனைக் காதலியாக கட்டாயமாக நியமித்துக்கொண்டு நண்பர்களிடம் கதை சொல்ல வேண்டிய மனநோயும் வருகிறது.இல்லையெனில், அம்மண ஊரின் கோவணாண்டியாக மாறிப்போவோம்.ஆனால் எத்தனை காலம்தான் அம்மணமாக இருப்பதாகவே நடிப்பது...எதைக்கொண்டு நிரப்புவது இந்த காலத்தை...? தெரிந்தால் பதில் சொல்லுங்களேன் எவளாவது..?

(குறிப்பு: இந்தக் கட்டுரை பூங்கா(பிப்ரவரி 19/2007) இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.

1/2/07

அகதிகள் முகாம்..பண்பாட்டு மாற்றங்கள்

உயர்ந்து பறக்கிறது விஜயகாந்த் கட்சிக் கொடி. ''ஏ...போட்டோ புடிக்காங்க..” என்று நெல்லைத் தமிழில் வார்த்தைகளை சிதறவிட்டோடுகின்றனர் சிறுவர்கள்.கலாச்சார,பண்பாட்டு மாற்றங்களை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் ஒரு இனத்தின் சாட்சியாக விரிகிறது தாழையூத்து அகதிகள் முகாம்.
திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சங்கர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு பின்புறமாக இருக்கிறது இந்த முகாம்.சிமெண்ட் நுண்துகள்கள் விரவிக்கிடக்கிற முகாமில் யாவரின் முகத்திலும் வறட்சியான சிர்ப்பையே காண முடிகிறது. அண்மையில் அயலகத்திலிருந்து வந்திருந்த திரு, தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த வரவணையானோடு நானும் இணைந்து தாழையூத்து அகதிகள் முகாமிற்குப் போயிருந்தோம்.

கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட முகாம் இது.தன் மண்ணையும்,மக்களையும் ஈழத்தின் ஈர மண்ணை விட்டுவிட்டு, உயிர் பிழைக்க புலம் பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள்.கணவன் இங்கு...மனைவி அங்கு...பிள்ளை இங்கு...தாய் அங்கு..என்று காலம் இவர்களை கூறு போட்டுவிட்டது.கேட்டபொழுதில் கதைப்பதற்கும்,பகிர்வதற்கும் மனதெங்கும் ஆயிரமாயிரம் கதைகளை தேக்கிவைத்திருக்கின்றனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் வசிக்கும் இந்த முகாமிற்கு அரசு அமைத்து தந்திருக்கும் அடிப்படை வசதிகள் எவையும் போதுமானவையாக இல்லை.இந்த குறைகள் பற்றிய விடயங்களை தன் பார்வையில் சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறார் திரு.என் பார்வையில் இந்த 16 ஆண்டுகளில் இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கும் கலாச்சார பண்பாட்டு மாற்றங்களை இங்கு பதிவிட விரும்புகிறேன்.அது அவசியமானது என்றும் கருதுகிறேன்.

மொழி:
முகாமில் வசிக்கும் பெரியவர்களின் மொழியில் கூட குறிப்பிடத்தகுந்த மாற்றம் தெரிகிறது.உரையாடலில் முழுக்கவே ஈழத்தமிழ் வருவதில்லை.பாதிக்குப்பாதி தமிழக தமிழையே கதைக்கின்றனர்.எங்களுடன் உரையாடுவதற்காக மெனக்கெட்டு அவ்வாறு பேசுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.அதைக் கேட்டபோது, தங்களின் பேச்சுமொழியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.சிறுவர்கள், சிறுவயது முதலே இங்குள்ள பள்ளியில்தான் படிக்கின்றனர் என்பதால், நெல்லைத் தமிழை பிரதானமாய் பேசுகின்றனர்.வீட்டிற்கு வரும்போது மட்டும் ஈழத்தமிழ் வார்த்தைகளோடு கலந்த தமிழுக்கு தாவிவிடுகின்றனர்.ஒரே மொழியின் இரட்டைத் தன்மையை ஒரே நேரத்தில் உள் வாங்குவது சிறுவர்களுக்குள் என்ன விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஆய்வுக்குரியது.நாளை தங்களின் சொந்த மண்ணுக்குப் போக வேண்டிய நிலை வந்தால் இந்த சிறுவர்கள், ஈழத்தில் எதிர்கொள்ள வேண்டிய பேச்சுமொழி சிக்கல்கள் கவனிக்க வேண்டியவை.

உணவு:
முகாமில் இருக்கும் பெரும்பான்மையோர் மீனவர்கள்.இலங்கையில் மீன் என்பது இவர்களின் அன்றாட உணவு.அதை கொணர்வதற்கும்,சமைப்பதற்கும்,உண்பதற்குமான எந்த சிரமமும் ஈழத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் இங்கு நிலைமை வேறு.மீன் என்பது சராசரி உணவல்ல.அதிக விலைகொடுத்து, (சராசரியாக ஒரு கிலோ 50 முதல், 100 ரூபாய்) வாங்கி உண்ண வேண்டிய பொருள்.முகாமில் கொடுக்கும் மாதாந்திர உதவி தொகையையும்,கூலி வேலைக்குப் போனால் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் வைத்துக்கொண்டு எப்படி மீன் வாங்குவது..?இதனால் தங்களின் உணவு பழக்கத்தையே மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமை.இங்கு மட்டுமல்ல..அகதிகள் முகாமில் அடைப்பட்டு கிடக்கும் அனைத்து மீனவ அகதிகளின் நிலையும் இதுதான்.அப்படியே ஒரு சிலர் என்றைக்காவது மீன் வாங்கினாலும், தீப்பெட்டிகளை அடுக்கி வைத்ததுபோன்ற முகாமின் நெருக்கடியில் சங்கடமின்றி சாப்பிட முடியாது என்பதே யதார்த்தம்.
திருமணம்:
ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு பெண்களை திருமணம் செய்து கொடுக்கின்றனர்.அப்படி நடக்கும் திருமணங்களுக்கு அழைப்பிதழ் அச்சடிப்பதும், மண்டபத்தில் திருமணத்தை நடத்தி மகிழ்வதும் இவர்களின் பொருளாதார நிலைக்கு சாத்தியமில்லை.இதனால் அவரவர் வீட்டு வாசலில் அல்லது முகாமில் கொஞ்சம் இடமிருக்கும் பகுதியில் திருமணத்தை நடத்தி முடித்து விடுகின்றனர்.திருமணத்திற்குப் பிறகான இவர்களின் வாழ்நிலையும் கொடுமையானதே.இட நெருக்கடியில் புது மண தம்பதிகள் தவிப்பதை நாகரீகம் கருதி பலர் நாசூக்காக சொன்னாலும், அதன் சங்கடம் புரிகிறபோது மனசு வலிக்கிறது.

மரணம் என்கிற நிலை வரும்போதுதான் இவர்கள் மன ரீதியான பாதிப்புக்கும்,சங்கடத்திற்கும் ஆளாகின்றனர்.இங்கு தந்தை இறந்த விடயத்தை ஈழத்தில் இருக்கும் மகனுக்கு ஒரு தகவலாக சொல்வதற்குக் கூட இயலாத சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.உள்ளூர் சுடுகாட்டின் ஒரு ஓரப்பகுதியையே தங்களுக்கானதாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முகாமின் இளைஞர்கள் பலரும், விஜயகாந்த்தின் ரசிகர்களாக இருக்கின்றனர்."எங்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டால் கேப்டனுக்கே வாக்களிப்போம்" என்கிறார்கள்.பிரபாகரன்பற்றி பேச்சு வந்தால் மௌனமே பதிலாக வருகிறது. "இங்கட பிழைக்க வந்திருக்கம்.தேவையில்லாம பேசி சிக்கல்கள் வந்துடக் கூடாதுதானே.." என்கிறார்கள்.

பேசிக்கொண்டே கிளம்பியபோது ஒரு இளைஞர் எங்களுடனேயே வந்தார். "ஈழத்தமிழர்கள் உலகம் முழுக்க இருக்காங்கள்.லண்டன்,ஜெர்மனி,ஆஸ்திரேலியா எண்டு பல நாடுகளில் நல்லா சம்பாதிக்கிறாங்கள்.அகதியா போனாலும் அங்கட போனாதான் நல்ல பொழப்பு பொழைக்க முடியும்.ஆனால் அதுக்கும் கன ரூபாய் வேணும்.எங்களின்றைதான் அது இல்லையே...என்ன செய்ய ஏலும்..?" என்று அந்த இளைஞர் சொன்ன வார்த்தைகள் இன்னும் மனதை பிசைந்துகொண்டேயிருக்கின்றன.

இந்த கட்டுரை பூங்கா (5.2.2007) இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.