29/1/07

ஷில்பா ஷெட்டி--தேசத்தின் அவமானம்.


"வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம்தான்.சந்தேகமிருந்தால் தோற்றவனைக் கேட்டுப்பாருங்கள்.." என்றார் வில்சன் பிரபு.

ஜேட் கூடியின் முகவரி தெரிந்தால் ஷில்பா ஷெட்டியின் அதிர்ஷ்டம்பற்றி கேட்டுவிடலாம்.கேட்டால் அந்த அம்மணி என்ன சொல்லும்..? ''அவ என்னைவிட பெரிய நாடகக்காரி.." என்றா..? சொன்னால் தப்பில்லை.அதுதானே உண்மை.

என்னவோ இந்த நாட்டின் ஒட்டுமொத்த மானம் மரியாதையும் ஷில்பா ஷெட்டியின் உள்ளாடைக்குள்தான் இத்தனை நாட்களாய் ஒழித்து வைக்கப்பட்டிருதது மாதிரி மீடியாக்கள் இந்த செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் எரிச்சலாய் இருக்கிறது. 'ஷில்பா அபார வெற்றி...இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார்..' என்று தலைப்பு வெளியிடுகிறது ஒரு பத்திரிகை.இன்னொன்று, 'வென்றார் ஷில்பா..தோற்றது இனவெறி..' என்று ஷில்பாவை கொண்டாடுகிறது.அவர் இந்தியாவுக்கு வந்து சேரும்போது, 'நிறவெறியை வென்றெடுத்த நாயகியே...வருக..வருக..' என்று கட் அவுட் வைத்தாலும் வியப்பு தேவையில்லை.

ஷில்பாவை அப்படியே நிறுத்திவிட்டு இதைக் கொஞ்சம் பாருங்கள்.விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே இருக்கிறது விஜய கரிசல்குளம்.இந்த ஊரைச் சேர்ந்த பொறியாளர் கணேசன் ராணுவத்தில் வேலைப் பார்க்கிறார்.அஸ்ஸாமில் பணியிலிருந்த இவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.இதுவரைக்கும் எந்த விதமான தகவலும் இல்லாமல் பரிதவித்துக் கிடக்கிறது அந்த குடும்பம்.கணேசனின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் தந்தையை உயிருடன் பார்க்க முடியுமா..? என்று பரிதவித்துக் கிடக்கின்றன.ஆனால் இதுவரைக்கும் அரசுத்தரப்பில் கணேசனை மீட்பதற்கு எந்த விதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை.இதற்காக மத்திய அமைச்சர்களோ,அரசியல் கட்சி தலைவர்களோ குரல் கொடுக்கவில்லை.

இந்த தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கணேசன்,தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார்.ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது இந்த தேசத்திற்கு அவமானமில்லையா...?இதைப்பற்றி ஏன் யாரும் வாய்திறக்கவில்லை..?

ண்ணை பிசைந்து கல்லாக்கி,அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் ஏழ்மைத் தகப்பனின் மகள், புதுக்கோட்டை சாந்தி ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றபோது, 'அவர் பெண்ணே இல்லை..' என்று அவமானப்படுத்தப்பட்டார்.தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் எல்லாம் மிகுந்த உற்சாகத்துடன், 'சாந்தி பெண்ணா...?ஆணா..?' என்று கவர்ஸ்டோரி வெளியிட்டு, போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டி மகிழ்ந்தன.அப்படி சாந்தியை அவமானப்படுத்திய அதே பத்திரிக்கைகள், இன்று ஷில்பாவின் மூலமாக தேசத்தின் மானம் காப்பாற்றப்பட்டிருப்பதாக கொண்டாடுகின்றன.(நல்லவேளை ஷில்பா ஜெயித்தார்.இல்லையென்றால் மானமில்லாத தேசத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கும்..).சாந்திக்கு எழுந்த ஆதரவு குரல்களை விட இப்போது ஷில்பாவுக்கு எழும் ஆதரவு பன்மடங்காக இருக்கிறது.இதன் அரசியல் என்ன..?

ஒரு நடிகையை மற்றொரு நடிகை, 'கறுப்புத்தோலுக்காரி' என்று திட்டியதற்காக, மானம் மரியாதையெல்லாம் போய்விட்டதாகவும், 'கறுப்புத்தோலுக்காரி' வெற்றிபெற்றவுடன் இப்போது இழந்த மானமும்,மரியாதையும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் சொல்பவர்களே..ஷில்பாவுக்கு ஏற்பட்ட நிறவெறி அவமானம் கண்டு பொங்குபவர்களே....உள்ளூரில் நடக்கும் ஜாதிவெறி அக்கிரமம் குறித்து இதுவரைக்கும் நீங்கள் வாய் திறந்ததுண்டா..?சாதியென்னும் பெயரால் செயலாலும்,வார்த்தையாலும் தினந்தோறும் பலரை அவமானப்படுத்துகிறீர்களே...அதற்காக வருந்தியதுண்டா...?குறைந்தப்பட்சம் அவற்றைப்பற்றி யோசிக்கவாவது செய்திருக்கிறீர்களா..?உங்கள் கால்களுக்கும் கீழ் லட்சக்கணக்கானவர்களை தினமும் அவமானப்படுத்தி, இந்த தேசத்தின் மானத்தை தினந்தோறும் கேவலப்படுத்தும் உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?

உண்மையை உணரவிடாமல்,அதன் அருகிலேயே நெருங்க விடாமல் நம்மை தூரத்திலேயே வைத்திருக்கும் வேலையை மீடியா வெகுநாட்களாக சிறப்பாக செய்து வருகிறது.அந்த மயக்கத்திலிருந்து மீளாதவரை, ஷில்பா ஷெட்டி தேசத்தின் அவமானம் என்பதை நாம் உணரப்போவதில்லை.

தொடர்புடைய இடுகை: tamilnadutalk

12/1/07

நாடார்..வெள்ளாளர்..கிறிஸ்டின்..-பேரா.ஆ.சிவசுப்ரமணியனுடன் ஒரு சந்திப்பு..

'எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட,எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறுதான் அளவுகோல்.கடந்த காலத்தைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பாத எந்த சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்..'

-ஆனந்த விகடனில் வெளிவந்த 'தமிழ்மண்ணே வணக்கம்..' தொடரில் பேராசிரியர்.ஆ.சிவசுப்ரமணியன் சொன்ன வார்த்தைகள் இவை.

கே.ஆர்.விஜயாவையும்,டி.வி.சுந்தரம் அய்யங்காரையும் இன்ஷியலோடு தெரிந்து வைத்திருக்கும் நமக்கு நம் சொந்த தாத்தாவின் தந்தையார்/தாயார் பெயர் தெரிவதில்லை.இரண்டு தலைமுறைக்கு முன்பு, நகரங்களுக்கு குடிபெயர்ந்த குடும்பங்களின் இளைஞர்/யுவதிகளிடம், 'உங்களின் பூர்வீக ஊர் என்ன..?' என்று கேட்டால், 'தஞ்சாவூர் பக்கத்துல ஒரு கிராமம்..' என்பதுதான் பதிலாக இருக்கும்.பூர்வீக கிராமத்தில் சொத்துகள் இருந்தால் மட்டும்,கிராமத்தைப்பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள்.இது யார் தவறு..?தன் சந்ததிக்கு குடும்ப வரலாற்றை உணர்த்தாத பெற்றோரின் தவறா..?அல்லது தன் பெற்றோரின் குடும்ப வழி வரலாற்றை தெரிந்து கொள்ளாதது பிள்ளைகளின் தவறா..?தன் முன்னோர்களின் வரலாறுபற்றி அக்கரை இல்லாத ஒருவர் தன் சந்ததியை சரியாக வழிநடத்துவார் என்று நம்புவதற்கில்லை.அதனால் அதிகபட்ச தவறு பெற்றோரையே சாரும்.

இப்படி நம் குடும்ப வரலாறு தொடங்கி நாம் வாழும் இந்த சமூகத்தின் வரலாறு வரைக்கும் அறிவதும்,உணர்வதும் அவசியமானது.தூத்துக்குடி வ.வு.சி. கல்லூரியின் தமிழ் துறையில் பணியாற்றி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற பேரா.ஆ.சிவசுப்ரமணியன் நம் மண்ணின் மரபார்ந்த வரலாறுகள் அழிந்துபோகாமல் தொடர்ந்து போராடும் ஒரு களப்பணியாளர்.அதேநேரம் அழிக்கப்பட்ட வரலாறுகளின் மீட்பராகவும் இருக்கிறார். ஒரு முன்னிரவு நேரத்தில் அவரது தூத்துக்குடி இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் வாய்த்தது.அவரது பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தின் அடையாளங்களாக அறையெங்கும் இரைந்துகிடக்கின்றன புத்தகங்கள்.பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, 'இவருடன் உரையாடுவதற்கான தகுதி நமக்கில்லை..' என்பது புரிந்துவிடுகிறது.வார்த்தைக்கு இரண்டு வரலாறு சொல்கிறார்.

''தூத்துக்குடி,நாகர்கோயில்,திருநெல்வேலி மாவட்டங்களில் பைபிளில் வரும் வார்த்தைகளே,நிறைய ஊர்களுக்கு பெயராக இருக்கும்.நாசரேத்,பெத்லேகம்,ஜெருசேலம்,சமாரியா,சுவிசேஷபுரம்,டோனாவூர்....என்று இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.தமிழகத்தின் தென்கோடி மாவட்ட கிராமங்களுக்கு பைபிள் வார்த்தைகள் பெயராக இருப்பதற்குப் பின்னால் ஒரு நெடிய வரலாறே இருக்கிறது.

தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த சமயத்தில்,அதிகமான கிறிஸ்தவ மதமாற்றங்கள் நிகழ்ந்தது தென்பகுதியில்தான்.இதற்கான காரணங்களாக சாதியக் கொடுமைகள் பொருளாதார நசுக்கல்கள் என்று பலவற்றை சொல்லலாம்.கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொத்து,கொத்தாக மதம் மாறினார்கள்.அப்படி மதம் மாறியவர்களை மதம் மாறாத மற்றவர்கள் இகழ்ச்சியுடன் நடத்த ஆரம்பித்தார்கள்.மதம் மாறியவர்கள்,அவர்கள் நாடாராக இருந்தாலுமே,தாழ்த்தப்பட்டவர்களுக்கு இணையாகவே மதிக்கப்பட்டனர்.பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது,உயர் சாதியினரின் வீடுகளுக்குள் நுழையக்கூடாது,உயர் சாதியினரைத் தொட்டுப் பேசக்கூடாது...என்று தாழ்த்தப்பட்டவர்களிடம் காட்டப்பட்ட எல்லா அநீதிகளும்/பாரபட்சங்களும் மதம் மாறியவர்களுக்கும் நடந்தது-அவர்கள் உயர்சாதியினராகவே இருந்தாலும் கூட.கூடுதலாக, 'மதம் மாறியவர்களிடம் யாராவது கடன் வாங்கியிருந்தால் அதை திருப்பிக்கொடுக்க வேண்டியதில்லை.அவர்களும் திரும்பக் கேட்கக்கூடாது..' என்ற அளவுக்கு மோசமாக நடத்தப்பட்டனர்.

இந்த விஷயம் இவர்களை மதம் மாற்றிய கிறிஸ்தவ மத தலைவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.'நம்மால்தான் இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.நாம்தான் இதற்கு தீர்வு கண்டாக வேண்டும்..' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.அப்போதுதான்,நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மொத்தமாக வாங்கி புதிது,புதிதான குடியிருப்புகளை ஏற்படுத்தத் தொடங்கினார்கள்.அப்படி உருவான புதியக் குடியிருப்புகளுக்கு பைபிளில் உள்ள வார்த்தைகளையே பெயராக வைத்தார்கள்.அப்படி உருவானவைதான் நான் மேற்சொன்ன ஊர்கள்..." - என்று பேராசிரியர் சொன்ன தகவல்கள் ஆச்சர்யமூட்டுபவையாக இருந்தன.

அவரே மேலும், '' 'விருதுபட்டி' என்பதுதான் தற்போதைய விருதுநகரின் ஆதிகால பெயர்.அது சிறிய ஊராக இருந்த சமயத்தில், 'பட்டி' என்பது அசிங்கமாக இருக்கிறது என்று 'நகர்' என்று மாற்றிவிட்டார்கள்.விருதுநகர் நோக்கி செல்லும் சாலையொன்றில் இப்போதும் 'விருதுபட்டி 8 KM ' என்ற மைல்கல் இருக்கிறது.நானே ஒருமுறை ஆய்வுக்காக அந்த மைல்கல்லை புகைப்படம் எடுத்திருக்கிறேன்.இப்போது அந்த மைல்கல்லுக்கு மாலைபோட்டு,அருகில் சூலாயுதம் நட்டு, 'மைல்கல் முனுசாமி' என்று கடவுளாக்கி விட்டார்கள். 'விருதுபட்டி' என்ற பெயர் மட்டும் அப்படியே இருக்கிறது.." என்ற அந்த கந்தக பூமியின் பெயர் வரலாறு சொன்னார்.

இவரைப்பற்றி நண்பர்கள் சொல்லும்போது, 'தினசரி ஏதாவது ஒரு கிராமத்துக்கு ஆய்வுக்கு கிளம்பிடுவார்.திடீர்னு பார்த்தோம்னா எங்கயாவது ஒரு கிராமத்துல டீ கடையில நின்னுகிட்டிருப்பார்..' என்றார்கள்.அவரது பேச்சில் அந்த களப்பணியின் சாறு தெரிக்கிறது.

''பணகுடி பக்கத்தில் வடக்கன்குளம் என்று ஒரு ஊர் இருக்கிறது.அங்கு வெள்ளாளர் கிறிஸ்தவர்கள்,நாடார் கிறிஸ்தவர்கள் இந்த இரண்டு பிரிவினரும் அதிகமாக வசிக்கின்றனர்.நூறு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் ஒரு பிரச்னை வந்தது.நாடார்களுடன் இணைந்து ஒரே சர்ச்சில் வழிபடுவதில் வெள்ளாளர்களுக்கு உடன்பாடு இல்லை.இதனால் சர்ச்சுக்குள் ஒரு சுவர் எழுப்பி,இரண்டாக பிரித்து ஆளுக்கொரு பக்கமாக வழிபட்டனர்.இதிலும் காலப்போக்கில் பிரச்னை வந்து பின்பு நீதிமன்றம் தலையிட்டுதான் அந்த சுவரை உடைக்கவேண்டி வந்தது.."என்று போன பேச்சு,தென்மாவட்ட கலவரம்பற்றி திரும்பியது.

"ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தேவர் இனத்தவர்கள் நிறையபேர் வசிக்கின்றனர்.மற்ற பகுதி தேவர்களைப் போலல்லாமல்,இவர்களில் அதிகபட்சம் பேர், வாழை விவசாயம் செய்து வந்தனர்.கலவரத்தில் இறங்கினால் எதிர் தரப்பில் ஒரு சிறுவன் கூட ஒரே இரவில் ஒரு வாழைத்தோப்பை வெட்டி சாய்த்துவிட முடியும்.லட்சங்களில் இழப்பு வரும்.இதனால்,தென் மாவட்ட கலவரம் நடந்தபோது,மற்ற பகுதியில் உள்ள தேவர் இனத்தவர்கள் பிரச்னைகளில் ஈடுபட்டாலும் ஸ்ரீவைகுண்டம் தேவர்கள் மட்டும் ஒதுங்கியே இருந்தனர்.." என்று தெரியாத பின்னணி ஒன்றையும் சொன்னார்.அரை மணி நேர சந்திப்பில் பேராசிரியர் சொன்ன வரலாறுகள் பிரமிப்புக்குள் தள்ளியது.

விடைபெற்று பேருந்துக்காக திரும்பியபோது, ஒன்றுமட்டும் விளங்கியது.நமது பள்ளிக்கூட பாடபுத்தக வரலாற்றை மட்டும் படித்தால்,ஒரு போதும் உண்மை வரலாறை தெரிந்துகொள்ள முடியாது.அதை எழுதியவர்களின் வரலாறை கிளற வேண்டும்.அப்போதுதான் நாம் எழுத வேண்டிய வரலாற்றை முடிவு செய்ய முடியும்.