27/11/07

நினைவின் நிழல்..!
மீனாட்சி மெஸ்ஸுக்கு எப்போது போனாலும் வலது கை தூக்கி சல்யூட் அடிக்கும், ஒல்லியான தேகம் கொண்ட அவரை இரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் சிவப்புகலர் வலை பனியந்தான் அணிவார். பனியனின் மேல்புறம் இரண்டு ஓட்டைகள் நிரந்தரமாக இருக்கும். ''இது ஒரு பனியன்தான் இருக்கா..?'' என்று ஒருமுறை கேட்டதற்கு கை விரல்களை மடக்கிக்காட்டி 'நான்கு' என்றார். நான்கிலுமே ஓட்டை இருப்பது ஆச்சர்யமானதுதான். ஒருவேளை பனியன் வாங்கிய உடனேயே இவரே ஓட்டை போட்டுவிடுவாரோ என்று கூட தோன்றும்.

சாப்பிட்ட இலைகளை ஒரு டிரேயில் எடுப்பதும், மேசையை துடைப்பதும் அவர் வேலை. வாழை இலையின் அடியில் இருக்கும் நார்போன்ற தண்டுப்பகுதியை கைக்கு அடக்கமாக நான்கைந்து வெட்டி வைத்திருப்பார். மேசையில் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து தண்டுப்பகுதியைக்கொண்டு நேர்த்தியாக துடைப்பார். அவர் கவனம் முழுவதும் அமர்ந்திருப்பவர்களின் உடலில் ஒரு துளி கூட சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருக்கும். இடையிடையே சாப்பிட அமர்ந்திருக்கும் நம்மிடம், ''சிவசக்தி தியேட்டர்ல.. மாயாக்கா.. " என்று சொல்லிவிட்டு, 'சூப்பர்' என்பதாக சைகை காட்டுவார். அவரது முக தசைகளில் குதூகலம் பொங்கிவழியும். அவர் கேட்கவில்லை என்றாலும் சாப்பிட வரும் யாரோ ஒருவர் சிவசக்தி தியேட்டரை இழுத்துவிடுவார்கள்.

பத்து நாளைக்கு ஒரு முறை, சாப்பிட்டு முடித்து கை கழுவ குழாய்க்குச் செல்லும்போது கல்லாவில் இருக்கும் ஓனர் பார்த்துவிடாதவாறு நின்றுகொண்டு, ''ஒரு ரூபாய்.." என்று விரலைக் காட்டுவார். ஒரு நாள் கூட ஒரு ரூபாயைத் தாண்டியதில்லை. நாமாக கூடுதலாகக் கொடுத்தால் வாயெல்லாம் சிரிப்பாக பெற்றுக்கொள்வார். அடுத்த நாள் விறைப்பாக சல்யூட் வைப்பார்.

இத்தனை நுணுக்கமாக நினைவு கூற முடிகிற அவரை மெஸ் அல்லாத வேறொரு இடத்தில் நேற்று பார்த்தபோது சட்டென்று நினைவுக்கு வரவில்லை. எத்தனையோ மெனக்கெட்டும் 'எங்கேயோ அடிக்கடி பார்க்கிற முகமாயிற்றே..' என்பதோடு நினைவுகள் தேங்கி நின்றுவிட்டன. ஒருவேளை அவர் என்னை கவனித்து ஒரு சல்யூட் வைத்திருந்தால் நினைவுக்கு வந்திருக்குமோ என்னவோ.. அவரும் கவனிக்கவில்லை. பின் நேற்று இரவு மெஸ்ஸில் பார்த்தபோதுதான் காலையில் பார்த்தது இவரைத்தான் என்று புரிந்தது.

இதுபோல் இவருக்கு மட்டுமில்லை.. இரவு தினமும் நான் போய் நின்றவுடனேயே வாழைப்பழமம் எடுத்துத்தரும் அருணகிரி லாட்ஜ் பெட்டிக்கடைக்காரர், சந்திப்பு பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலையில் இரவு நேர இட்லிகடையில் நான்கு வகை சட்னியுடன் பூப்போன்ற இட்லி விற்கும் பெரியம்மா, எப்போதும் சட்டை காலரின் பின்னால் கர்ச்சிப் மடித்து சொருகியிருக்கும் உக்கிரன்கோட்டை பேருந்து ஓட்டுனர்... என்று பலரை, அவர்களின் பணியிடச் சூழல் தவிர்த்த வேறு சூழ்நிலையில்; வேறு இடங்களில் பார்க்கும்போது சட்டென நினைவுக்கு வருவதில்லை.

சட்னி வாசனையோடும், காலர் கர்ச்சிப்புடனும்தான் அவர்களை மூளை தனக்குள் பதிந்து வைத்திருக்கிறது போலும். இதேபோல மற்றவர்களின் நினைவடுக்குகளில் நான் எவ்வாறான பின்னிணைப்புகளோடு பதிந்திருப்பேன் என்று யோசித்தால் எதுவும் பிடிபடவில்லை.

26/11/07

சாதி சூழ் உலகு- Part II

ந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா... இதெல்லாம் நாடுகள் என்று தெரியும். கப்பலூர், உஞ்சனை, கோனூர்.. போன்ற பெயர்களிலும் 'நாடுகள்' இருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கக்கூடும். ஆனால் உண்மை. தமிழகத்தின் பல பகுதிகள் நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. இது நண்பர்கள் பலருக்குப் பழைய செய்தியாகக்கூட இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும், ஒரு ஆவணப்படுத்தும் முயற்சியாகவுமே இந்தக் கட்டுரை.

ஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், வடுவூர் பகுதியில் அமைந்திருக்கிற கிராமங்கள் அனைத்தும் 'நாடு' என்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்கி வருகின்றன. பதினெட்டு அல்லது அதை ஒட்டிய எண்ணிக்கையில் அமைந்த கிராமங்கள், ஒரு நாடாக கருதப்படுகிறது. உதாரணமாக காசவளநாடு என்ற நாட்டிற்குள், பஞ்சநதிகோட்டை, தெக்கூர், புதூர், கோவிலூர், நெல்லுபட்டு, ஆழிவாய்க்கால், காட்டுக்குறிச்சி, கொல்லாங்கரை, வேங்குராயன்குடிகாடு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, நடுவூர், விளார், கண்டிதம்பட்டு, சாமிப்பட்டி... இப்படி நிறைய கிராமங்கள் உண்டு. இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இன்ன நாட்டுக்கு உட்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தும்விதமாக தங்கள் ஊருக்கு முன்பு, தங்கள் நாட்டுப் பெயரில் முதல் எழுத்தைப் போட்டுக்கொள்வார்கள்(உ-ம்: கா.புதூர்).

இதே போல கீழ்வேங்கை நாடு, சுந்தரவளநாடு, கோனூர் நாடு.. ஏராளமான நாடுகள் உண்டு. இந்த நாடுகளுக்கு, அதற்குள் அமைந்த ஏதாவது ஒரு கிராமம் தலைமை கிராமமாக இருக்கும். அந்த ஊரில் அந்த நாட்டுக்கென்று ஒரு கோயில் இருக்கும். இந்த நாட்டுக்கோயில்களுக்கு வருடம் ஒருமுறை ஏதாவது ஒரு விழா நாளில் திருவிழா நடக்கும். அந்த நாட்டுக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து காவடி, பால்குடம் எடுத்து, பல கிலோமீட்டர் தூரம் தூக்கிவருவார்கள். பக்கத்து ஊர்க்காரனை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்று எல்லா வருடமும், எல்லா ஊர்க்காரர்களும் போட்டி போடுவார்கள். நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மக்களெல்லாம் திருவிழா பார்க்க வருவார்கள். ஒரு வெட்டுக்குத்தாவது இல்லாமல் எந்த திருவிழாவும் முடியாது. இப்போதும் எல்லாம் நடக்கத்தான் செய்கிறது. மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை குறைந்து கார், டூ வீலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.. அவ்வளவே.

'ஒவ்வொரு நாட்டுக்கென்றும் ஒரு நாட்டாமை இருப்பார், ஒரு கிராமத்துப் பிரச்னை அவர்களுக்குள் தீர்க்க முடியாமல் கைமீறி போனதென்றால், அந்த நாட்டாமை தலையிட்டு தீர்த்து வைப்பார், அவரது சொல்தான் இறுதி தீர்ப்பு' என்று ஒரு தலைமுறைக்கு முன்பிருந்த நடைமுறையை, இப்போதும் பெருசுகள் பேசிக்கொள்வார்கள். இம்மாதிரியான நாட்டாமை நடைமுறைகள் இப்போதில்லை எனினும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுடன் திருமண உறவுகள் வைத்துக்கொள்வதில்லை என்பதுபோன்ற விதிகள், 90 % ஏற்பாட்டுத் திருமணங்களில் கடைபிடிக்கத்தான்படுகின்றன.

இந்த நாடு என்ற அமைப்பு, கிராமங்களை ஒன்றிணைக்கும் நிர்வாக அமைப்பாக இருந்தாவெனத் தெரியவில்லை.. ஆனால், சாதியைக் கட்டிக்காக்கும் சாதனமாக இருந்திருக்கிறது/ இருக்கிறது என்பது மட்டும் உண்மை. நாட்டுக்கோயில்களுக்கு திருவிழா சமயத்தில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்துச் செல்வார்கள் என்று பார்த்தோம் இல்லையா..? அதற்காக ஊரெங்கும் ஒரு வீடுவிடாமல் வரி வாங்குவார்கள். குறிப்பிட்ட ரூபாய் அல்லது அதற்கு இணையான அளவில் நெல் என்ற அந்த வரி, எந்த கிராமத்திலும், தலித்துகளிடம் வாங்கப்படுவதில்லை. ஒரு கிராமம் முழுக்க தலித்துகள் வசிக்கிறார்கள் என்றால், அந்த நாட்டுக்கு உட்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையில் அந்த தலித் கிராமங்களை சேர்க்கவே மாட்டார்கள். உதாரணமாக தெற்கு நத்தம், நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் முழுக்கவே வசிப்பது தலித்துகள்தான். 'காசவளநாட்டு' கணக்கில் அவற்றை காண முடியாது.

நாடு என்னும் கட்டுமானம் அமைந்திருக்கும் கிராமங்களில் பெரும்பான்மையாக இருப்பது கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்கள், தங்கள் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எல்லா காலங்களிலும் இந்த அமைப்பை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பழைய சட்டத்திட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டாலும் தலித்துகளுக்கு எதிரான சமயங்களில் மட்டும் எல்லோருக்கும் சட்டென 'நாட்டு'ப்பற்று வந்துவிடுகிறது.

ஏதாவது ஒரு கிராமத்தில் தலித்துகளுக்கும், கள்ளர் சாதியினருக்கும் பிரச்னை என்று வந்துவிட்டால் முதலில் அவர்கள் செய்வது, 'இனிமேல் தலித்துகளுக்கு உள்ளூரில் வேலை கிடையாது' என்று தடை விதிப்பதுதான். வேறு வழியின்றி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குப்போனால் அங்கும்போய், 'ஒரு நாட்டுக்காரன்.. நீங்களே இப்படி செய்யலாமா..?' என்று 'நியாயம்' கேட்டு, அந்த நாட்டுக்குட்பட்ட எந்த கிராமங்களிலும் அவர்களுக்கு வேலை கிடைக்காதபடி செய்தால்தான் அவர்களுக்கு நிம்மதி. பொருளாதார ரீதியாக கள்ளர்களின் வயல்களில் விவசாயக்கூலிகளாக இருக்கும் தலித்துகளால் வேறெதுவும் செய்ய இயலாது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றியிருக்கும் பகுதியில் இந்த நாட்டமைப்பு இப்போதும் முழு அளவில் உயிரோடு இருக்கிறது. உஞ்சனை நாடு, கப்பலூர் நாடு, அஞ்சுக்கோட்டை நாடு, செம்பொன்மாற்றி நாடு, இரவுச்சேரி நாடு.. என்று இந்தப்பகுதி முழுக்கவே நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. தஞ்சையைப் போலல்லாமல் இங்கு, பதினேழரை கிராமங்கள், இருபத்தி இரண்டரை கிராமங்கள் என்று விநோதமான நில அமைப்பில் நாடுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்கான தலைவரையும் 'நாட்டு அம்பலம்' என்றழைக்கிறார்கள். திருவாடனை தொகுதியின் நடப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராமசாமிதான் இப்போதைய கப்பலூர் நாட்டுக்கான நாட்டம்பலம் (இதற்கு முன்பு இவரது அப்பா நாட்டம்பலமாக இருந்தார்). அந்த நாட்டுக்குட்பட்ட கிராமங்களின் பிரச்னைகளுக்கு நாட்டம்பலம் சொல்வதே இறுதி தீர்ப்பு. அதை மீறினால் ஊரைவிட்டுத் தள்ளி வைப்பது மாதிரியான நடைமுறைகள் இப்போதும் உயிருடன் இருக்கின்றன.

கண்டதேவி தேரோட்டத்தின்போது தலித்துகளை வடம் பிடிக்கக்கூடாது என்று ஏழரை பண்ணும் கண்டதேவி கிராமம் அமைந்திருப்பது உஞ்சனை நாட்டுக்குள். அந்த சமயத்திலெல்லாம் உஞ்சனை நாட்டு சார்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது இந்த நாட்டம்பலம்தான். பெரும்பான்மை கள்ளர்களும், தலித்துகளும், உடையார்களும் வசிக்கும் இந்த தேவக்கோட்டை வட்டார நாட்டு அமைப்புகளின் நாட்டம்பலமாக கள்ளர் சாதியினர் மட்டுமே வர இயலும்.

இந்த நாட்டமைப்பு செய்த சாதி காக்கும் பணியை தென்பகுதியில் பழைய காலத்தில் செய்தவர்கள் பாளையக்காரர்களும், ஜமீன்களும். இவை இரண்டும் வரி வசூலுக்காக ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றாலும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதி காக்கும் பணியையும் செய்து வந்திருக்கின்றன. கடம்பூர் ஜமீன், நெற்கட்டும்செவல் ஜமீன், சுரண்டை ஜமீன், வீரகேரளம் புதூர் ஜமீன், ஊத்துமலை ஜமீன் (இவை அனைத்திலும் அதிகாரம் செலுத்தியவர்கள் தேவர்கள்..) என்பதாக தெற்கே இருக்கும் இவற்றிற்கு, நாட்டமைப்பு அளவுக்கு நடைமுறையில் இப்போது உயிரில்லை. பெயருக்கு மட்டும் ஜமீன் குடும்பங்கள் இருக்கின்றன. தேனி மாவட்டத்தின் கண்டமனூர் ஜமீனும், பழநிக்கு அருகேயிருக்கும் நெய்காரப்பட்டி ஜமீனும் கிட்டத்தட்ட இல்லாதொழிந்துவிட்டன.

13/11/07

சாதி சூழ் உலகு..!

திருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் சிவந்திபட்டி என்னும் கிராமம் உண்டு. மொத்தம் ஆறு பேருந்துகள், ஒரு நாளைக்கு 25 தடவை திருநெல்வேலியிலிருந்து சிவந்திபட்டிக்கு வந்துபோயின. அந்த அளவுக்கு ஆள் நடமாட்டம் உள்ள கிராமம். அப்படிப்பட்ட ஊருக்குள் கடந்த பத்து வருடங்களாக எந்த பேருந்தும் செல்லவில்லை. அரசு உத்தரவின் பேரில் அனைத்துப் பேருந்துகளும் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டன. பத்து வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில மாதங்களாய் மறுபடியும் பேருந்துகள் ஊருக்குள் போய்வரத் தொடங்கியுள்ளன.

ஏன்..?

சிவந்திபட்டிக்குள் நுழைந்தால் முதலில் வருவது தேவர்கள் வசிக்கும் பகுதி. இதற்கு அடுத்து வருவது தலித்துகள் வசிக்கும் பகுதி. பேருந்துகள் அனைத்தும் தலித்துகள் தெருவரை சென்று திரும்பும். இதனால், அங்கு ஏறுபவர்களுக்கு அமர்வதற்கான வசதி சுலபத்தில் கிடைக்கும். அதற்கு அடுத்து வரும் தேவர் தெருவில் ஆட்கள் ஏறும்போது, சீட் கிடைக்கவில்லை என்றால் நின்றுகொண்டுதான் வர வேண்டும். 'ஒரு பள்ளப்பய உட்கார்ந்து வருவான். அவனுக்கு முன்னாடி நான் நின்னுகிட்டு வரணுமா..?' என்று தேவர்களுக்குக் கடுப்பு. இதனால், பேருந்து ஊருக்குள் நுழையும்போதே ஜன்னல் வழியாக தேங்காய்ப்பூ துண்டைத் தூக்கிப்போட்டு விடுவார்கள். அந்தத் துண்டைப் பார்த்ததும், 'யாரோ ஒரு பாண்டியன் (தேவர்) இடம் பிடித்து வைத்திருக்கிறார்' என்று புரிந்துகொண்டு அதில் தலித்துகள் உட்காரக்கூடாது.

இந்த நெடுநாளைய பிரச்னை உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருந்தது. தென் மாவட்டங்களில் சாதிப் பிரச்னை பற்றியெரிந்த சமயத்தில் சிவந்திபட்டியும் பற்றிக்கொண்டது. 'பேருந்தில் எங்க பொண்ணுங்களை கிண்டல் செய்கிறார்கள்' என்று தேவர்கள் தரப்பில் கிளப்பப்பட்ட பிரச்னை, மெல்ல மெல்ல பெரிதானது. தலித்துகள் தரப்பில் மூவரும், தேவர்கள் தரப்பில் ஒருவருமாக மொத்தம் நான்கு உயிர்கள் அரிவாளுக்கு பலியாயின. அதைத் தொடர்ந்துதான் பேருந்தை ஊருக்கு வெளியிலேயே நிறுத்த உத்தரவிட்டது அரசு. பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போது சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டு, 'பேருந்துகள் முன்புபோலவே தலித்துகள் தெரு வரைக்கும் சென்று திரும்பும். யாரும் துண்டுபோட்டு இடம் பிடிக்கக்கூடாது' என்ற நிபந்தணையுடன் மறுபடியும் இயக்கப்படுகின்றன.

வாசிக்கும் நீங்கள் நகர எல்லைக்குள் பிறந்து வளர்ந்தவர் எனில், சாதியின் இத்தகைய வீச்சு, உங்களுக்கு வியப்பூட்டலாம். 'பஸ்ஸுல உட்கார்றதுலக் கூடவா சாதி பார்ப்பாங்க..?' என்று உங்கள் மூளை கேள்வி எழுப்பலாம். எல்லா சாதிய உணர்வுகளும் நிரம்பிய ஒரு தஞ்சைப்பகுதி கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கே நெல்லை மண்ணில் நிரம்பி வழியும் சாதி, ஆரம்பத்தில் திகைப்பூட்டுவதாக இருந்தது.

ங்கு கிட்டத்தட்ட யாவரிடத்திலும் சாதி நீக்கமற நிறைந்திருக்கிறது. தன் சொந்த சாதியினர் நடத்தும் கடையில் பொருள் வாங்குவது, தன் சாதியைச் சேர்ந்த வக்கீலிடம் வழக்கு நடத்துவது என்று சாத்தியப்படும் இடங்கள் அனைத்திலும் சாதியை முன்னிலைப்படுத்துகின்றனர். திருமணம் போன்ற விழாக்களுக்கு ஒட்டப்படும் வாழ்த்துப் போஸ்டர்களிலும் சாதியே துருத்திக்கொண்டு நிற்கும். 'தேவர் வீட்டுக் கல்யாணம்', 'நாடார் கோட்டையில் கொடைவிழா' என்றுதான் அந்த போஸ்டரின் வாசகங்கள் சொல்லும். அத்தகையை போஸ்டர்களில் தவறாமல் ஏதாவது ஒரு நடிகரின் புகைப்படம் இடம் பிடித்திருக்கும். விக்ரம், பிரசாந்த், கார்த்திக் போன்றவர்களின் புகைப்படங்களை இம்மாதிரியான போஸ்டர்களில் பார்த்தபோது முதலில் ஒன்றும் தோன்றவில்லை. பின்னொரு நாளில் சந்தேகம் வந்து விசாரித்தபோதுதான், ஒவ்வொருவரும் தங்கள் சாதியைச் சேர்ந்த நடிகரின் புகைப்படத்தைப் போட்டுக்கொள்ளும் விஷயமே தெரிந்தது.

முதலில் போஸ்டரில் தங்கள் சாதி நடிகரின் புகைப்படம் போடும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் தேவர்கள். முத்துராமன், கார்த்திக் ஆகியவர்களின் புகைப்படங்களோடு தொடங்கிய இது, பிற்பாடு பிரபு, அருண்பாண்டியன் என்று வளர்ந்து, இப்போது எஸ்.ஜே.சூர்யாவின் புகைப்படம் கூட சில இடங்களில் எட்டிப்பார்க்கின்றன. தேவர் மகன், விருமாண்டி ஆகிய படங்களில் நடித்ததால் கமல்ஹாசனையும் கூட சில நேரங்களில் தேவராக்கிவிடுகின்றனர். இதன்பிறகு நாடார்கள் தங்களின் போஸ்டர்களில் சரத்குமாரை கொண்டுவந்தார்கள்.

தென் மாவட்ட கலவரத்திற்குப் பிறகு தலித்துகளின் போஸ்டர்களில் பிரசாந்த் சிரிக்கத் தொடங்கினார். பிற்பாடு அதில் விக்ரமும் இணைந்துகொண்டார். இதேபோல ரெட்டியார்கள் நெப்போலியனையும், பிள்ளைமார்கள் இயக்குனர் விக்ரமனையும், விஸ்வகர்மா இனத்தவர்கள் தியாகராஜ பாகவதர், பார்த்திபன் மற்றும் கவிஞர் பழனிபாரதியையும், நாயக்கர்கள் விஜயகாந்த்தையும் தங்களின் போஸ்டர்களில் கொண்டு வந்தார்கள். இதில் பெரிய காமெடி ஒன்றும் நடந்தது. முன்னால் அ.தி.மு.க. அமைச்சரும், இப்போது தி.மு.க.வில் இருப்பவருமான மு.கண்ணப்பன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 'நடிகை சுகன்யாவுக்கும், கண்ணப்பனுக்கும் தொடர்பு' என்று பத்திரிகைகள் அனைத்தும் கிசுகிசு எழுதின. உடனே தென் மாவட்ட யாதவர்கள், தங்களின் விழாவுக்கான போஸ்டர்களில் சுகன்யாவின் படத்தை அச்சிட்டு மகிழ்ந்தார்கள். (உண்மையில் சுகன்யா என்ன சாதி..?)

ங்கு அனைத்து சாதியினரும் தங்களுக்கான இருப்பை உறுதிசெய்துகொண்டே இருக்கின்றனர். அது பெரும்பான்மையோ, சிறுபான்மையோ.. தான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவும், மற்றவனை விட நான் ஒன்றும் சளைத்தவனில்லை என்று காட்டவும் எல்லோரும் பிரயத்தனப்படுகின்றனர். 'பார்த்துக்கடே.. எங்களுக்கும் ஆள் இருக்கு..' என்று சுற்றத்துக்கு உணர்த்தும் பொருட்டே நடிகர்களை போஸ்டர்களில் சிரிக்க விடுகின்றனர்.

இது போஸ்டர்களோடு நிற்பதில்லை॥ சினிமா தியேட்டர்களின் கழிப்பறை சுவர்களில் 'நாடார் குல சிங்கம்' என்று கரிக்கட்டையால் கிறுக்கி வைக்கும் அளவுக்கு முத்திப்போகிறது। நெல்லைக்கு வந்துபோகும் ரயில்களின் கழிப்பறைகளிலும் இந்த வீர வசனம் காணக்கிடைக்கிறது. பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் படிந்திருக்கும் தூசி படலத்தில் எழுதி வைக்கிறார்கள் 'வீர மறவன்' என்று. தென்பகுதி கிராமங்கள் பலவற்றில் உள்ளே நுழைந்தாலே, 'தேவர் கோட்டை உங்களை வரவேற்கிறது' என்றோ, 'தேவேந்திரன் கோட்டை உங்களை வரவேற்கிறது' என்றோதான் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஆசிரியரை மாணவனே கொன்றுவிட்டான் என்றொரு செய்திக்காக ஏழாயிரம்பண்ணை என்ற ஊருக்குப் போயிருந்தேன். அந்த மாணவனுடன் படிக்கும் இன்னொருவனை விசாரித்தபோது கொஞ்சமும் தயக்கமின்றி அந்த பதிமூன்று வயது சிறுவன் சொல்கிறான்.. ''வாத்தியாரும் நாடாக்கமாரு.. இவனும் நாடாக்கமாரு.. அப்படி இருந்தும் குத்திபுட்டான்ணே..". மிக இயல்பாக அந்த சிறுவன் சொன்ன கணத்தில், எந்த அளவுக்கு சாதியின் தாக்கம் நிறைந்திருக்கிறது என்பது புரிந்தது. மெத்தப்படித்த பொறியியல் நண்பன் ஒருவன், தான் ஏன் விஜய் ரசிகராக இல்லை.. ஏன் அஜித் ரசிகராக இருக்கிறேன்..? என்பதற்கு சொன்ன காரணம், 'விஜய் ஒரு தலித்'.

சாதி என்பது நெல்லைக்கு மட்டுமான பிரச்னை இல்லைதான். ஆனால், இங்குதான் அது இவ்வளவு வெளிப்படையாக எல்லா செய்கைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எனது ஒரு வருட நெல்லை அனுபவத்தில் நானறிந்த வகையில் சொல்ல வேண்டுமானால், இங்கு அனைத்து விதமான பற்றுகளும் அதிகமாக இருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. போன்று சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் இங்குதான் அதிகம். புதுமைபித்தன், வல்லிக்கண்ணன், தி.க.சி, வண்ணதாசன், கி.ரா., கலாப்ரியா என்று இலக்கியவாதிகளின் எண்ணிக்கையும் நீண்டுகிடக்கிறது.

'பக்கத்தில் இருக்கும் வரை நாம் எதையும் மதிப்பதில்லை' என்ற பொது நியதிக்கு எதிராக, தன் மண் மீதும், தாமிரபரணி நதி மீதும் இந்த மக்கள் வைத்திருக்கும் நேசம் ஆச்சர்யம் தரக்கூடியது. குடும்ப உறவுகளை நேசிப்பதும், குடும்பத்தோடு நெருக்கமாக இருப்பதும் ஒப்பீட்டளவில் இங்கு அதிகம். வார்த்தைகளாலும், சூழ்நிலைகளாலும் ஏற்படும் கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாக வாழாமல் சட்டென்று உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுகின்றனர். தென் மாவட்ட அடிதடிகளுக்குப் பின்னுள்ளது இந்த வகை உணர்ச்சிகள்தான் என்று நினைக்கிறேன். இதே அடிப்படையில்தான், தன் சொந்த சாதி மீதான பற்றையும் மிக அதிகமாக வெளிப்படுத்துகின்றனர்.

'நீ ஒரு சாதிய சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்' என்பதை எல்லா கணத்திலும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது இந்த ஊர்.

11/10/07

காதலித்துப்பார்- டவுசர் கிழியும், தாவு தீரும்..!"தோழர்.. காதலிக்கிறதுன்னா என்ன பண்ணனும்..?" - இரண்டாம் ஜாம தூக்கத்திலிருந்தவனை எழுப்பி இப்படி ஒரு கேள்வி கேட்ட கடுப்பை விட அந்தக் கேள்வி அவனிடமிருந்து வந்ததுதான் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 'என்னடா இது.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எலி ஜட்டி போட்டுகிட்டுப் போகுதே..'ன்னு எனக்கு ஆச்சர்யம்.

"ம்... குவாட்டர் அடிச்சுட்டு குப்புறடிச்சு தூங்கனும்.." என்ற என் பதிலை அவன் ரசிக்கவில்லை.

"தோழர்.. உங்களை வெவரமானவர்னு நினைச்சுதானே இதை கேக்கேன். நீங்கபாட்டுக்கும் நக்கல் பண்ணுதியளே.."

"எல.. நான் சொன்னனா நான் வெவரம்னு. நீங்களா நெனச்சுகிட்டா அதுக்கு நான் என்ன செய்ய..?"

"சும்மா சொல்லுங்க தோழர்.. காதலிக்கிறவங்க என்னல்லாம் பண்ணுவாங்க..?"

"இது என்னல கூறுகெட்டத்தனமா இருக்கு.. நான் என்னமோ நெதம் ரெண்டு பிள்ளைவொ கூட சுத்துறமாறி என்கிட்ட கேக்க. கழுத.. நம்மளே சீண்ட ஆளில்லாம நாதியத்துக் கெடக்கோம். இதுல ஊமையன்கிட்ட ஊத்துமலைக்கு வழிகேட்ட மாதிரி நல்லா கேட்டப்போ. அது சரி.. என்ன திடீர்னு காதலைப்பத்தியெல்லாம் கேக்க..?"

காலக்கொடுமை, அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவன் வெட்கப்பட்டான். நாலது தேதிவரை அவன் வெட்கப்பட்டு நான் பார்த்ததில்லை. இதுதான் முதல்முறை. ஸ்டாலினாகிய அவன் ஏதேதோ காரணத்தால் பெற்றோர் இட்டபெயரை காப்பாற்றும் பொருட்டு கம்யூனிஸ்ட் இயக்கம் ஒன்றின்மீது பற்றுகொண்ட வரலாற்று விபத்து நடந்து ஏழெட்டு வருடங்களாகிவிட்டது.

செய்துங்கநல்லூரில் ஸ்டாலின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த வக்கீலொருவன் சாக்கடைத் தண்ணீர் பிரச்னைக்காக முன்னொரு காலத்தில் வக்கீல் நோட்டீஸ் விட்டான். 'பக்கத்துலதானே இருக்க.. கூப்பிட்டு சொன்னா என்ன..? எதுக்கு நோட்டீசெல்லாம் விட்ற..?' என்று ஸ்டாலின் கேட்ட யதார்த்தவாதமான கேள்விக்கு, 'அதெல்லாம் உன்னயமாதிரி சாதாரணமான மனுஷப்பயலுவ செய்யிற வேலை. நான் வக்கீலு. நோட்டீஸ் விட்டாதான் எனக்கு மரியாதை..' என்று மிகை யதார்த்தமாய் அந்த வக்கீல் சொன்ன பதில்தான், ஸ்டாலினை வக்கீலுக்குப் படிக்க வேண்டும் என்று உத்வேகம் கொள்ள செய்தது. இதற்காக கடும் முயற்சி செய்து எப்படியோ சீட்டு வாங்கி வக்கீலுக்குப் படித்துகொண்டிருந்த நான்காவது வருடத்தில்தான் அவன் எனக்கு அறிமுகம் ஆன இரண்டாவது வரலாற்று விபத்து நடந்தது.

கல்லூரிக்கு அருகிலிருந்த பேக்கரியொன்றில் நான் மாஸ்டராய் இருந்தபோது ஒரு நாள், என்னருகில் நான் வாசித்து வைத்திருந்த 'குடும்பம்..அரசு.. தனிச்சொத்து..' கவிழ்ந்து கிடந்தது. ஒரு கையில் பாதி கடித்த எக் பப்ஸை வைத்துக்கொண்டு அதை ஆசையோடு எடுத்துப் பார்த்தான் அவன். இப்படியே முன்னேற்றப் பதிப்பக நூல்களை எப்படியாவது கூட்டு சேர்ந்து படித்தாவது புரிந்துகொண்டு விடுவது என்ற எங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக தோழமை வளர்ந்தது. கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது என்கூடவே வந்து தங்கிவிட்ட ஸ்டாலின், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு வக்கீலிடம் ஜூனியராய் இருக்கிறான்.

வன் வெட்கப்பட்டது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

"பார்றா.. தோழர் வெட்கப்படுறாரு. யாரு ராசா அந்தப்புள்ள..? என்ன வெவரம்..?"

இன்னும் கொஞ்சம் வெட்கம் சிந்தினான்.

"எதை கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே.. வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்..?"

"இது சூப்பரா இருக்கு தோழர்.. இதே மாதிரி ஏதாவது சொல்லுங்க.."

"கருமம்.. அது தபூசங்கர்னு ஒரு ஆளு எழுதுன கவிதை. நீ உன் ஆளு யாருன்னு சொல்லவே இல்லையே..?"

"ரெண்டு மாசத்துக்கு முந்தி ஊருக்குப் போயிருந்தேன்ல தோழர்.. அப்ப என் செல்போனை எடுத்து நம்ம பசங்க யாருக்கோ மெசேஜ் அனுப்பியிருக்கானுங்க. அது எனக்குத் தெரியாது. அடுத்த நாளு அந்த நம்பர்லேர்ந்து ' who is this..?'னு மெசேஜ். 'மொதல்ல நீ யாருன்னு சொல்லு'ன்னு நான் அனுப்புனேன். இப்படியே மாத்தி,மாத்தி ஓடுனுச்சு தோழர். ரெண்டு நாளு கழிச்சு 'நாம ஃபிரண்ட்ஸா இருக்கலாம்'னு ஒரு SMS அனுப்புனா.."

"...ஹூம்..."

"ஒரே வாரத்துல வாடா, போடான்னு பேச ஆரம்பிச்சுட்டா தோழர். எனக்குதான் என்ன பேசனும்னே தெரியலை.."

"ஏன்.. 'அராஜகவாதமும், அராஜகவாத சிண்டிக்கலிசமும்' பத்தி பேசியிருக்கலாமே..?"

"நக்கல் பண்ணாதீங்க தோழர். பொம்பளைப் பிள்ளைகக்கிட்ட அதைப்பத்தியெல்லாம் எப்படிப்பேச..?"

"எல்லாம் தெளிவாத்தாண்டா இருக்கீய. நாந்தான் கேணப்பயலாயிட்டேன். சரி நீ சொல்லு.."

"ஒரு மாசத்துக்கு மேல மாத்தி, மாத்தி மெசேஜ்தான். எனக்குன்னா தலைகாலு புரியலை. எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற கொய்யா மரத்துல ஏறி உட்கார்ந்து நைட் பதினொன்ரை மணிக்கு மெசேஜ் அனுப்பிகிட்டிருந்தப்போ எங்க அய்யா பார்த்துட்டாரு.."

"மாட்டினியா.."

"இல்லை தோழர்.. 'நாளைக்கு திருச்செந்தூர்ல ஆர்ப்பாட்டம் இருக்கு. அதுக்காக எல்லாருக்கும் மெசேஜ் அனுப்பிகிட்டிருக்கேன்'னு சொல்லித் தப்பிச்சுட்டேன்.."

"பொம்பளைப்பிள்ளைக்கு மெசேஜ் அனுப்புறதுன்னாதான் பொய்யெல்லாம் பொத்துகிட்டு வருமே.."

"ஒரு வாரத்துக்கு முன்னாடி திடீர்னு போன்பண்ணி, 'நான் உன்னை லவ் பண்றேன். நீ என்ன சொல்றே..?' திடீர்னு கேக்கா. கருமம் நம்மளையும் ஒரு புள்ள லவ் பண்ணுதன்னு சொல்லுதா.. இதுல யோசிக்க என்ன கெடக்கு. உடனே ஓ.கே. சொல்லிட்டேன். ஆனா தோழர், அதுக்குப் பிறகு அவ பேசும்போதெல்லாம் ஒரு வார்த்தையை சொல்லுதா.. அதுதான் ஒரு மாதிரியா இருக்கு.."

"அப்படி என்னல சொல்லுதா..?"

" 'போடா லூசு'ங்கா தோழர். எப்பமாவது ஒரு தடவை சொன்னா பரவாயில்லை. பேசும்போதெல்லாம் நாலஞ்சு தடவை சொல்லுதா. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. ஆனா கோவம் மட்டும் வரமாட்டேங்கு.."

அவனுக்கு கோபம் வந்ததோ இல்லையோ... எனக்கு கபகபவென சிரிப்பு வந்தது. உள்ளே இழுத்திருந்த சிகரெட் புகை, சிரித்த சிரிப்பில் தொண்டையில் மாட்டிக்கொண்டு இருமலெடுத்தது.

"விட்றா ஸ்டாலினு. இனிமே நீ வெளங்கிடுவ. ஒரு பொம்பளைப்பிள்ளை வாயால 'போடா லூசு'ன்னு சொல்லிக் கேக்குற பாக்கியம் இங்க எத்தனை பேருக்கு கிடைச்சுருக்கு சொல்லு. கழுத.. நானெல்லாம் நாயா, பேயாதான் அலையுதேன். எந்தப்புள்ள நம்மளை பாக்கு..? எவனும் போன்பண்ணி சொல்லுவாய்ங்களோ என்னவோ.. நாம இந்தால நடந்தா, அதுக பத்தடி தூரம் தாண்டி அந்தால போவுதுக. ரெண்டு நிமிஷம் உத்துப்பாத்தா, 'என்னல பாக்க..?'ன்னு கண்ணை உருட்டி, மிரட்டிக் கேக்குதுக. நமக்கு வெடவெடங்கு. அந்த வகையில நீ பாக்கியசாலிதான் போ. 'ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னாலயும் ஒரு வர்க்கத்தோட முத்திரை இருக்கு'ன்னு பேராசான் லெனின் சொல்லியிருக்காரு. அந்தப்புள்ள 'லூசு'ன்னு சொல்றதுலயும் ஒரு முத்திரை இருந்தாலும் இருக்கும். நல்லா யோசிச்சுப்பாரு.."

"நீங்க லந்து பண்ணுறதிலேயே குறியா இருக்கீய.."

"அப்புறம் என்னடா.. என்கிட்டயும்தான் செல்போனு இருக்கு. நானும்தான் ஊருக்குப் போறேன். பயகளும்தான் எடுத்துப் பேசுதானுவ. ஆனா, வெவரமா 'இது இன்னொரு வெளங்காவெட்டி செல். இதுக்குப்பிறகு இந்த நம்பருக்கு மறந்தும் பேசிடாத..'ன்னு ஒரு மெசேஜை தட்டி விட்டுட்டுதான் கெளம்புறானுவ. அதுலயும், sent items, dialled numbers லயெல்லாம் போயி அந்த நம்பரை அடையாளம் தெரியாம அழித்தொழிப்பு செஞ்சுட்டுதான் அடுத்த வேலை பாக்கான். அது கெடக்கட்டும்..அதான் 'நீ லூசு.. நான் மெண்டல்'னு உன் காதல் நல்லாப் போவுது போலருக்கே.. அப்புறம் எதுக்கு நீ ஐடியா கேக்க..?"

"அது வந்து... நான் ஒரே மாதிரியா பேசுறனாமாம். எனக்கு ரொமான்ஸா பேச தெரியலையாம். 'லவ் பண்ற மாதிரியா பேசுத..?'ன்னு அப்பப்போ அவமானப்படுத்துறா. அதுக்கெல்லாம் ஏதாச்சும் ஸ்பெஷல் ஸ்டைல் இருக்கா தோழர்..? முன்னேற்றப் பதிப்பகத்துல எது எதுக்கோ புக் போட்டிருக்காங்க. இந்த காதல் கருமத்துக்கு ஒரு புத்தகம் போடலியே.."

"வெளங்குச்சு. முன்னேற்றப் பதிப்பக புத்தகங்களை நம்புன.. இப்பவே உன் காதல் க்ளோஸ். நீ மணிமேகலை பதிப்பக புத்தகங்களை டிரை பண்ணிப்பாறேன். அங்கதான் இந்த 'எப்படி..?' டைப் புத்தகமெல்லாம் கிடைக்கும். அதுசரி... உங்க கட்சியிலதான் எல்லாத்தையும் சித்தாந்த ரீதியா நியாயப்படுத்தனுமே.. நீ காதலிக்கிறதை எப்படி நியாயப்படுத்துவ..?"

"நீங்க வேற கடுப்புகளை கிளப்பாதீங்க தோழர். மார்க்ஸ் காதலிக்கலியா.. சே குவேரா காதலிக்கலியா. காதலிக்கிறதையெல்லாம் கட்சி தடுக்காது. ஆனா தெரிஞ்சா எதையாச்சும் பேசி கவித்துவிட்டுருவாய்ங்க. சொல்லக்கூடாது.."

-என்றவாறு பேசிக்கொண்டிருந்தவன், திடீரென ஆர்வமாகி, 'அவ என்ன ஹலோ டியூன் வச்சிருக்கா தெரியுமா..?' என்று கேட்டுவிட்டு, 'don't attend this call..' என்று மறக்காமல் மெசேஜ் அனுப்பிவிட்டு அந்த வோடஃபோன் நம்பரை டயல் செய்தான்.

"அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்,
அந்திப்பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்,
என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே,
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே,
வேறென்ன வேண்டும் உலகத்திலே..
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே.."

"இந்தப்பாட்டை எனக்காகவே வச்சிருக்கா தெரியுமா..? காலர் டியூன் செட் பண்ண உடனே எனக்கு போன்பண்ணி, முதன்முதல்ல நாந்தான் இந்தப்பாட்டைக் கேக்கனும்னு போன் பண்ணச்சொன்னா.."

"எனக்கு ரெண்டு நிமிஷமா காது செவுடு. நீ சொல்றது எதுவும் கேக்கலை.."

"விடுங்க தோழர்.. எனக்கொரு முத்தழகுன்னா, உங்களுக்கொரு மாரியம்மாளோ, பேச்சியம்மாளோ கிடைக்காமலயா போயிடுவா..?"

"முத்தழகு.. ஸ்டாலின் முத்தழகு. நல்லாயிருக்கு பேரு. இப்பல்லாம் பின் நவீனத்துவ கவிஞர்கள் கூட, சில்வியா குண்டலகேசி, கேத்தரீன் பழனியம்மாள், ஏஞ்சலின் கோயிந்தசாமி.. மாதிரி வித்தியாசமாதான் பேர் வச்சுக்குறாங்க. அதுபோல இந்த பேரும் வித்தியாசமா இருக்கு.."

விடிய, விடிய பேசியும் என்னால் ஸ்டாலினுக்கு ஒரு யோசனையும் சொல்ல முடியாத கையறு நிலையில் இருந்தேன். நான் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறேன்..? சட்டியில் இருந்தாலல்லவா அகப்பையில் வரும்..? அதற்காக அப்படியே விட்டுவிட முடியாதில்லையா.. காதலில் கரைகண்ட வேறு சில நண்பர்களிடம் ஆலோசனைப்பெற்று ஸ்டாலினிடம் சொல்ல, அவனும் தன் சொந்த முயற்சியில் தன் காதலை பெருக்கிக்கொண்டிருக்க.. காதல் நதியில் ரொம்ப நாள் வரைக்கும் முங்கி, முங்கி எழுந்துகொண்டிருந்தான் ஸ்டாலின்.

மாதங்கள் சில கடந்தபிறகு அவன் விரல்கள், செல்போனை தட்டுவதை நிறுத்தியிருந்தன. முத்தழகு சொன்னாலென இடையில் விட்டிருந்த சிகரெட்டை மறுபடியும் பிடிக்க ஆரம்பித்திருந்தான். அவனது செல்போனின் புதிய காலர் டியூன், 'காதல் என்றால் கவலையா.. கண்ணில் நீரின் திவலையா..' என்று சோகம் சிந்தியது.

"என்னாச்சு ராசா..?"

"இல்ல தோழர்.. அதெல்லாம் சரிப்பட்டுவராது.."

"ஏம்ப்பா.. வீட்டுக்குத் தெரிஞ்சுடுச்சா..?"

"அது என்ன கருமமோ தெரியலை.. திடீர்னு போன் பண்றதை நிறுத்திட்டா. நாம போன் பண்ணாலும் கட் பண்ணுதா. ஒரே ஒரு தடவதான் பார்த்திருக்கேன். இன்னொரு தடவப் பார்க்கலாம்னு சொன்னா, இன்னைக்கு, நாளைக்குங்கா. எனக்கென்னமோ இது சரியா வரும்னு தோணலை.."

"அந்தப்புள்ளைக்கு வீட்டுல எதாச்சும் பிரச்னையோ என்னவோ.."

"அதெல்லாம் இருக்காது தோழர். இப்பல்லாம் அவ என்னை 'லூசு'ன்னு சொல்றதில்லை தெரியுமா..? ஊடால ஊடால 'வாங்க, போங்க'ன்னு வேற பேசுதா.. இதுலேர்ந்தே தெரியலையா...?"

அடப்பாவி தோழா.. காதலில் கவலைப்படத்தான் எத்தனையெத்தனை காரணங்கள்..? நீ லூசு என்பதில் அத்தனை திடகாத்திரமான நம்பிக்கையா உனக்கு..?

"மார்க்ஸ் சொன்னது சரிதான் தோழர்.."

"எது..?"

"எல்லோரையும் சந்தேகி.."

அந்த வாசகத்தின் இறுதியில் மௌனமாய் அவன் உச்சரித்த இன்னொரு வார்த்தை 'முத்தழகாக இருந்தாலும்..'...!

10/10/07

நன்றி நண்பர்களே..!

'அரசமரத்தை சுத்திவந்து அடிவயித்தை தடவிப்பார்த்தாமாதிரி' என்றொரு பழமொழி உண்டு. 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-7.00 மணிக்கு மெரீனா பீச் காந்தி சிலை அருகே சந்திப்பு என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் யாரையும் காணாத நிலையில் அந்த பழமொழிதான் நினைவுக்கு வந்தது. ஆனாலும் பெருவாரியாக கலந்துகொண்டு நண்பர்கள் என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டனர்.

முதல் ஆளாய் வந்தவர் மரக்காணம் பாலா. அதன்பிறகு பைத்தியக்காரன் வர, மெல்லிய தூரலை தன்னுடனேயே அழைத்து வந்தார் லிவிங் ஸ்மைல் வித்யா. ''எப்படியும் இங்கனதான் எங்கயாச்சும் கும்மியடிப்பீங்கன்னு தெரியும். அதான் போன் பண்ணாம நாமளே கண்டுபிடிச்சுடலாம்னு வந்துட்டேன்.." என்று ஹெல்மெட் கலட்டியபடியே வந்தமர்ந்தார் நந்தா. சற்று நேரத்தில் சிவாஜி மொட்டை பாஸ் போல கறுப்பு டி-சர்ட்டில் ஹீரோ கணக்காக வந்த அந்த நபர், வந்தவர்களின் பெயரையெல்லாம் விசாரித்துவிட்டு, தன் பெயர் சொல்ல சின்னதாய் சஸ்பென்ஸ் வைத்து 'நான்தான் இளவஞ்சி' என்றார். புதியவர்களின் திடீர் சந்திப்பின்போது கவிழும் மௌனத்தை தன் நகைச்சுவையால் அவ்வப்போது உடைத்தார்.

அப்புறம் வரிசையாக லக்கிலுக், பாலபாரதி, ஊற்று, எஸ்.பி. சுந்தர், முரளிக்கண்ணன், பூக்குட்டி, தமிழ்குரல், தமிழினியன் எல்லோரும் வர நெய்முறுக்கு சகிதம் வந்தார் சிவஞானம்ஜி. சந்திப்புக்கென ஸ்பெஷல் அஜண்டா எதுவும் இல்லையென்பதால், 'உங்களோட அந்தக் கதையில ஹீரோ டயலாக் சூப்பர்..' என்ற ரேஞ்சிலேயே ஒருவருக்கொருவர் பொய் சொல்லிக்கொள்ள வேண்டியிருந்தது.

லிவிங் ஸ்மைல், தான் தற்போது சென்னையில் வேலைபார்க்கும் 'சுயம்' என்னும் அமைப்புப்பற்றியும் அதில் படிக்கும் ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறன் படைத்தக் குழந்தைகளைப்பற்றியும் அவர்களுக்கான உதவிகள் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் சொன்னார். "எந்த funding agency-யிலும் பணம் வாங்காத அமைப்பு என்பதால், அக்கரையுள்ளவர்களின் உதவி மட்டுமே அந்தக் குழந்தைகளை உயிர் வாழச் செய்கிறது. உதவக்கூடிய பொருளாதாரச்சூழல் உள்ளவர்கள் நேரடியாக தங்களால் இயன்ற அளவுக்கு உதவலாம். அல்லது உதவும் மனம் படைத்தவர்களை சுயம் பக்கம் திருப்பி விடலாம்" என்று சொன்னார். (இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு லிவிங் ஸ்மைல் எழுதிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்).

நான் நெல்லையிலிருந்து சில்வியாவுக்கென வாங்கி வந்திருந்த இருட்டுக்கடை அல்வாவை, பாலபாரதியின் அறையிலேயே மறந்து வைத்துவந்துவிட்டேன். 'அறுபது கிலோ அல்வா' நானே வந்திருந்ததால், அந்த அல்வாவைப்பற்றி நண்பர்கள் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை என்றாலும், இளவஞ்சியும், நந்தாவும், பூக்குட்டியும் அவ்வப்போது 'நான் நிஜமாகவே அல்வா கொடுத்துவிட்டதாக' புலம்பினார்கள். 7.30 மணிக்குக் கிளம்புகிற நேரத்தில் சுகுணா திவாகர் வந்தார். நின்றவாறே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, லைட் ஹவுஸ் தாண்டி சென்று ஒரு தேநீர் அருந்திவிட்டு, எஸ்கேப் ஆனோம். நன்றி நண்பர்களே..!

28/9/07

அனுபவிக்கத் தயாரா...?ந்த வயதில் அனுபவிக்காமல்
வேறு எந்த வயதில் அனுபவிப்பது,
என்று வாதாடும் இளைஞனே..!
எல்லாவற்றையும் அனுபவிக்கத் தயாரா நீ..?

இந்த வயதில்..
கல்லூரிக்குப் போக வழியில்லை
கரும்பு வெட்டி கன்னல் சுனையில்
கைத்தோல் உரியும்.
சோறு உள்ளங்கையில் பட்டு எரியும்.
கட்டுகள் மின்னல் வேகத்தில்
டிராக்டரில் ஏறும்.
கை நரம்பின் சாறனைத்தும்
கரும்புக்கு மாறும்.
உயிரைப் பிழியும் அந்த உழைப்பை
அனுபவிக்கத் தயாரா நீ..?

இந்த வயதில்...
உடம்பில் கிள்ளி எடுக்க சதையில்லை..
ஓட்டை பனியனுக்குள் நுழையும் காற்று,
நெஞ்செலும்பின் வியர்வையில்
உறைந்து ஆவியாகும்.
அய்ந்தாறு சதை கொழுத்த வாழைத்தாரை
பழம் நோகாமல்
முதுகுத் தண்டில் தூக்கிப்போகும்,
கூலிக்கார இளைஞனின் ஒரு பொழுதை
ஜாலியாக நீ அனுபவிக்கத் தயாரா..?

இந்த வயதில்...
வண்டியில் வலம் வந்து,
கடலைப்போட்டு, கலாய்க்காமல்
எழுபது , எண்பது இளநீரை மிதி வண்டியில்
காய்த்ததுபோல் அடுக்கிவைத்து
எதிர்காற்றில் ஏறி மிதிக்கையில்
தென்னை மரத்தின் வேர்கள்
மிதிக்கும் கால்களில் தெரியும்..!
உடல் வழுக்கும் வியர்வை
வெட்கப்பட்டு ஓடி
இளநீரின் கண்களில் ஒளியும்..!
இளநீர் குளிர்ச்சி..-குடிப்பவனுக்கு..!
இளநீர் சூடு..-வெயிலில் திரிந்து
அதை விற்பவனுக்கு..!
இந்த சூடான அனுபவத்தை நீ
சொந்தமாக அனுபவிக்கத் தயாரா..?

அன்றலர்ந்த ரோஜாவின் பவுசு குலையாமல்
கண்ணிறைந்த காதலியின் கையில்
யாருக்கும் தெரியாமல் கொடுக்க
வாய்ப்புத் தேடும் வயசுக்காரனே..!
இந்த வயதில்..
அன்றாடம் யாரோ ஒருத்தரின் மலத்தை
அனைவரும் பார்க்கும்படி கை கூசாமல்
கரண்டியில் வாரும் இளைஞனின்
மலம் சுமக்கும் அனுபவத்தை
நீ அள்ளி அனுபவிக்கத் தயாரா..?

இந்த வயதில்...
இரத்தம் கசியும் வாழ்வுக்கெதிராக
உன்னையொத்தவர்கள் போராடித்
திசைகளைத் திறக்கையில்,
கண்ணை மூடிக்கொண்டு
தான் மட்டும் அனுபவிக்க
ஒதுங்குவதைவிட அருவருப்பானது
வேறு உண்டா..?

இளமையை அழகாக்கும் சமூக உணர்வை
அனுபவிக்க ஆசைப்படு..!
வா..! இணைந்துகொள்..
இந்த வயதில் போராடாமல்
நீ எந்த வயதில் போராடப் போகிறாய்..??!!

-துரை.சண்முகம், புதிய கலாச்சாரம் செப் 2007

புகைப்படம் நன்றி: மரக்காணம் பாலா

19/9/07

கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..!திரண்டு நிற்கிறது பெருங்கூட்டம். 'ர்ர்ரூரூம்.. ர்ர்ரூரூம்..' ஒலிக்கிறது உருமிமேளம். பளபளக்கின்றன ஜிகினா உடைகள். ஆரம்பமாகிறது ஆட்டம். கதவடைத்து, விளக்கணைத்து, நான்கு கண்கள் மட்டுமே விழித்திருந்து நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டிய ஆண் பெண் உடலுறவு, ஆயிரக்கணக்கான கண்களின் முன்னால் அரங்கேறுகிறது. ஒரே ஒரு வித்தியாசம், உறவில் ஈடுபடுபவர்கள் உடையணிந்திருக்கிறார்கள். இதைத்தான் நாம் நாட்டுப்புற கலை என்கிறோம். கரகாட்டம் என்றும், குறவன் குறத்தி ஆட்டம் என்றும் விதவிதமாய் பெயர் வைத்திருக்கிறோம். உண்மையில் இது கலையா..? யார் வீட்டுப் பெண்களையோ மேடையேற்றி ஆபாசமாக ஆடவிட்டு ரசிப்பதுதான் தமிழ் கலாச்சாரமா..?

கிராமத்துக் கொடை விழாக்களின் இரவு நேரங்களை கொண்டாட்டங்களில் பங்கெடுக்கும் இவர்களின் வாழ்க்கை ரணம் மிகுந்தது. சராசரி பெண்கள் பேசத் தயங்கும் - ஒரு அர்த்தம் மட்டுமே கொண்ட - இரட்டை அர்த்த வசனங்களை இவர்கள், மேடைகள் தோறும் ஒலிபெருக்கிகளில் பேச வேண்டும். எல்லோரது கண்களும் தன் உடலின் எந்த பாகத்தை மேய்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஆட வேண்டும். நாவில் நீரொழுக சுற்றி அமர்ந்திருக்கும் அத்தனை ஆம்பளை நாய்களும் மனதளவில் அம்மணமாய் இருக்கின்றன என்பது ஆடுகிற அவர்களுக்குத் தெரியாதா என்ன..? ஆனாலும் வயிற்றுப்பாட்டுக்கு ஆட வேண்டியிருக்கிறது. 'வயித்துப்பாட்டுக்கு இப்படி செய்றதைவிட வேற ஏதாவது தொழில் செஞ்சுட்டுப் போயிடலாமே..?' என அவசரப்பட்டுக் கேட்டுவிட வேண்டாம். அதையும்தான் செய்ய வேண்டியிருக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் இப்படி ஆடை அணிந்து அவமானப்படுவதைவிட, ஒரு அறைக்குள் ஆடையின்றி உழைப்பது மேலானதுதான்.

ரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என்ற இரண்டு பெயர்களில் நடத்தப்படும் இந்த ஆட்டங்களை நடத்த கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மையாக குறவர் (நரிக்குறவர் அல்ல..) என்ற SC பிரிவுக்குள் வரும் இனத்தவர்கள் இந்த தொழிலில் இருக்கின்றனர். தஞ்சாவூரில் சௌராஸ்ட்டிரா( இவர்கள் பட்டுநூல் நெய்யும் வேலையில் பெருமளவு ஈடுபட்டிருப்பதால், வட்டார வழக்கில், 'பட்டுநூல்காரர்கள்' என்றழைக்கப்படுகிறார்கள்) இனத்தைச் சேர்ந்த சிலரும், தேவர் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலரும் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அனைவருக்குமே இந்த தொழிலைப்பற்றிய கசப்புணர்வு மனதளவில் பதிந்துகிடக்கிறது."முன்னாடியெல்லாம் ரொம்ப பக்தியா இருப்பாங்க. நாங்க ஆடுறதுதான் ஆட்டம். ஆனா இப்ப எல்லாம் மாறிப்போச்சு. 'செக்ஸா' ஆடச்சொல்றாங்க. 'முடியாது'ன்னு வீறாப்பா சொல்ல முடியாது. நாங்க முடியாதுன்னு சொன்னா, அடுத்த ஊரு செட்டு அதைவிட செக்ஸா ஆட தயாரா இருக்காங்க. தவிரவும், எங்களுக்கு இதைவிட்டா வேற எதுவும் தொழில் தெரியாது.. ஆனா, ஆடுற எங்களை மட்டும்தான் அசிங்கமா பேசுறாங்க. அப்படி ஆடச்சொல்லிக் கேக்குறவங்களையும், நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டுப் பார்க்குறவங்களையும் யாரும் ஒண்ணும் சொல்றது கிடையாது.

அவங்க அப்படிக் கேக்கலன்னா நாங்க ஏன் ஆடப்போறோம்..? இந்த கலையை முறைப்படி எப்படி ஆடனும்னு எங்களுக்குத் தெரியும். அதுப்படி ஆடிட்டுப் போயிடுவோம். கட்டிப்பிடிச்சு, காலைத்தூக்கி ஆடனும்னு எங்களுக்கு என்ன ஆசையா..? எங்க வீட்டு ஆம்பளை, பொம்பளைக்கெல்லாம் வெட்கம், மானம் இல்லையா..? எங்களுக்கும் அப்படியெல்லாம் ஆட விருப்பம் இல்லைதான். அதனாலதான் இப்பல்லாம் எங்கப் பிள்ளைகளை எப்படியாவது பள்ளிக்கூடம் அளவுக்காவாவது படிக்கவச்சு, மில் வேலைக்கு, ஒர்க் ஷாப்புக்குன்னு அனுப்பிகிட்டிருக்கோம்.." என்கிறார்கள் சில ஆட்டக்கார நண்பர்கள்.

பார்வையாளர்களின் மன வக்கிரங்களை திருப்திபடுத்த மேடைகளில் ஆபாசமாக பேசவும், ஆடவும் வேண்டியிருப்பதால், அது இவர்களின் சொந்த வாழ்வையும் பெருமளவுக்குப் பாதிக்கிறது. உறவுகளுக்குள் உடலுறவு என்பது இங்கே கிட்டத்தட்ட தவறில்லை. சில இடங்களில் ஆட்டத்துக்குப் போகிறவர்கள், பாலியல் தொழில் செய்ய வேண்டியிருப்பதையும் நானறிவேன். வயதும், இளமையும் இருக்கிறவரைக்கும்தான் ஆட்டத்துக்கு அழைப்பார்கள் என்பதால், 45 வயதுக்கு மேல் இங்கு பெண்கள் செல்லாக்காசாகிவிடுகின்றனர். வயசு போனால், பவுசும் போய்விடுகிறது.இரவு பத்து மணிக்கு ஆட்டத்தைத் தொடங்கினால், விடிய, விடிய ஆட வேண்டியிருக்கும். இதற்காக இவர்கள் பெரும் சம்பளம் 2,500 முதல் 3,000 ரூபாய். பெரும்பாலும், 'ரத்னா கரகாட்டக் குழு','ரூபா கரகாட்டக் குழு' என்று பெண்களின் பெயரால் அந்தந்தக் குழுக்கள் அறியப்பட்டாலும், நடப்பில் அந்தக் குழுவின் நிர்வாகியாக இருப்பது ஒரு ஆண்தான். பெண்ணை வைத்தே ஆட்டமும், வருமானமும் இருந்தாலும் அவள் அங்கு பெயரில் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறாள்.

ருடத்தின் ஆறு மாதங்கள் மட்டுமே கோயில் திருவிழாக்கள் நடக்கின்றன. அந்த நாட்களில் மட்டுமே வருமானம். அதைக்கொண்டுதான் மற்ற நாட்களில் சாப்பிட வேண்டும். பெரும்பாலான செட்டுக்காரர்கள் ஏதோவொரு ஏஜண்ட் கையில் சிக்கியிருக்கின்றனர். 'வருடம் இத்தனை ஆயிரம் ரூபாய்' என்று மொத்தமாக அந்த ஏஜண்ட்டிடம் காண்ட்டிராக்ட் பேசி பணம் வாங்கிக்கொண்டு, அவர்கள் எப்போது எங்கு அழைத்தாலும் போய் ஆடிவிட்டு வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு அந்த 2500,3000 ரூபாயும் கிடைக்காது. நிகழ்ச்சிக்குப் போய்வர பஸ்ஸுக்கு மட்டுமே பணம் தரப்படும்.

மேடைதோறும் ஆடி எல்லோரையும் 'சந்தோஷப்படுத்தும்' இவர்கள், வாழ்நாளில் ஒரு பொழுதும் சந்தோஷமாய் இருப்பதில்லை. நகரத்தின் குப்பைக் கூடமாய் இருக்கும் இடமே இவர்களின் வாழ்விடம். எல்லா வகையிலும் இவர்களை விட மேம்பட்ட நிலையில் இருக்கும் நாம், சிந்தனையையும், செயலையும் இவர்களுக்காகவும் கொஞ்சம் செலவிடுவோம் நண்பர்களே..!

16/9/07

பால் பீய்ச்சும் மாட்டை விட்டு, பஞ்சாரத்துக் கோழியை விட்டு...(Disclaimer about title: ஒண்ணுமில்ல..ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியா.. கண்டுக்காதீங்க..).

"வாழ்க்கை என்பது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைப்பட்ட மௌனம்" என்று ஓஷோவை முன்வைத்து நேற்றெனக்கு சொல்லித்தந்த அய்யனார் முதல், "உண்மையில் மனிதன் தன்னைத் தவிர வேறு யாரையும் காதலிப்பதுமில்லை..நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வதே இயல்பானது" என்று உளவியலை முன்வைத்துத் துணுக்குறச் செய்த பைத்தியக்காரன் வரை.. இந்த ஏழு நாட்களில் வலையுலகம் நிறையவே வசீகரப்படுத்திவிட்டது என்னை.

வ்வப்போது வாசிப்பு, எப்போதாவது பதிவு மற்றும் பின்னூட்டங்கள் என்றிருந்த எனக்கு, இப்படி தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்ற நிபந்தணையே கொஞ்சம் அவஸ்தையானதுதான். பிளாக் தொடங்கி ஒண்ணரை வருடங்களாகிவிட்ட நிலையில், இதையும் சேர்த்து நான் இதுவரை எழுதியிருக்கும் பதிவுகளின் மொத்த எண்ணிக்கையே 65 தான். ஆனாலும் அவ்வப்போது நண்பர்கள் ஓடிவந்து தட்டிக்கொடுப்பார்கள். மதி கந்தசாமி, என்னுடைய சில கட்டுரைகளை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் மொழிபெயர்த்து எழுதியிருந்ததைப் படித்தபோது, 'பார்றா.. இந்தப்பயலுக்கு அடிச்ச யோகத்த..' என்று என்னாலேயே நம்பமுடியவில்லை.

ங்கு எழுதவரும் முன்பு, எனக்கென்று தனித்தக் கொள்கைகளோ, உறுதியான அரசியலோ இல்லை. என்னை ஈர்ப்பதை எழுதினேன்.. மனதைப் பாதிப்பதை பதிவு செய்தேன். அது முற்போக்கு எண்ணம் கொண்டவர்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இனிமேல்தான் உண்மையாக, முழுமையாக வாசிக்கத் தொடங்க வேண்டும். இதுவரை பிழைகளோடு என்னை பொறுத்துக்கொண்ட நண்பர்களுக்கு சொல்லவும் நன்றிகள் மிச்சருக்கின்றன.

பெண்ணுரிமைப்பற்றியக் கட்டுரையையும், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களின் சிரமம் பற்றிய கட்டுரையையும் நல்ல விவாதமாக மாற்றிய நண்பர்களின் கருத்துக்கள் எனக்கு பல விஷயங்களைக் கற்றுத்தந்தன. அவர்களுக்கும், என்னை ஒரு வார காலம் நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மணம் குழுவினருக்கும் அன்பான நன்றிகள்..!

"மண் பூனை எலியைப் பிடிக்காது" -தி.க.சி.சுடலை மாடன் கோயில் தெரு... திருநெல்வேலி-டவுண் பகுதியில் இருக்கும் இந்த தெரு, எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு பரிட்சயமானதாகவே இருக்கும். குறுகலான தெருவின் கடைசிக்கு முன்பாகவுள்ள, இடது வாசல் வீட்டுக்குள் நுழைந்தால் மெல்லிய தேகத்தோடு வரவேற்பார் தி.க.சிவசங்கரன்.. சுருக்கமாக தி.க.சி. தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முக்கிய பங்காற்றிய இவருக்கு இப்போது 85 வயது. சில மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டபிறகு, புத்தகங்களும் இவரும் மட்டுமே வசிக்கின்றனர் அவ்வீட்டில்.

எப்போது போனாலும் வாசல் வரைக்கும் எழுந்து வந்து உற்சாகமாக வரவேற்கும் பண்புடையவர். நாற்காலியை கொடுத்து அமரச் சொல்லிவிட்டு பல்செட் எடுத்து அணிந்துகொண்டுதான் அடுத்த வார்த்தைப் பேசுவார். அவரைப்பற்றி நாம் சொல்ல எவ்வளவோ இருந்தாலும் அவர் சொல்வதே அதிகமாக இருக்கும். பேசவும், எழுதவும் இப்போதும் அலுக்காத மனிதர்.

எங்கிருந்தோ அஞ்சலில் வரும் சிற்றிதழ்களை முழுமையாகப் படித்துவிட்டு, இரண்டு வரியாகவது தட்டிக்கொடுத்து கடிதம் எழுதிவிடுகிறார். தீவிர இலக்கிய இதழ்கள் முதல், தினமணி வரைக்கும் இவரது விமர்சனங்களைத் தாங்கிய கடிதங்கள் இப்போதும் சென்றுகொண்டிருக்கின்றன. உள்ளூரிலேயே இருக்கும் எனக்கே ஒரு தடவைக் கடிதம் போட்டார். வயது காரணமாக கை நடுக்கம் வந்துவிட்ட போதிலும் நண்பர்களின் உதவியோடு கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

'தி.க.சி.க்கு ரேஷன் கார்டை அனுப்பி வச்சாலும் விமர்சனம் எழுதிடுவாரு..' என்று எதிர்கருத்து சொல்வோரும் உண்டு. "இவ்வளவு சிரமப்பட்டு எழுதத்தான் வேண்டுமா..?" என்று கேட்டால், "ரோட்டுல நடந்துபோறோம். எதிர்ல வர்ற ஒருத்தர் வணக்கம் சொல்றார். மரியாதைக்குத் திருப்பி வணக்கம் சொல்லனுமா.. வேண்டாமா..? அவர் நண்பரா, விரோதியான்னு அப்புறமா பார்த்துக்கலாம்.." என்கிறார் சலனமில்லாமல்.

தொழிற்சங்கவாதி, பத்திரிகையாளர், விமர்சகர் என்று பல முகங்கள் இவருக்குண்டு. 65-90 வரைக்கும் சோவியத் நாடு செய்தித்துறையில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய இவர், ஜீவாவின் மறைவுக்குப் பின்னர் 65-72 வரைக்குமுள்ள எட்டாண்டு காலம் நூறு தாமரை இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். ஆனால் அவருடன் பேசும்போது, இலக்கியத்தை விட சமூகத்தைப்பற்றிய சிந்தனைப்போக்கே அதிகம் வெளிப்படுகிறது."1995-க்குப் பிறகு இங்கு சகலமும் சந்தைமயமாகிவிட்டது. எல்லோரையும் தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்க வைக்கிற இயந்திரங்களாக மாற்றி வைத்திருக்கிறோம். சுய முன்னேற்ற நூல்களின் அதிகமான விற்பனை, அந்தக் காலகட்டத்திலிருந்து தொடங்கியதுதான். பிற்பாடு இந்த வேலையை வெகுஜன பத்திரிகைகள் செய்ய ஆரம்பித்துவிட்டன.

தன்னைப்பற்றி சிந்திப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால், சமூகத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, தன் நலன் பற்றி மட்டும் சிந்திப்பதுதான் ஆபத்தானது.'சமூகத்தில் நடப்பதைக் கண்டுகொள்ளாதே.. உன்னைப்பற்றி மட்டுமே சிந்தி..' என்ற அரசியல் இதற்குப் பின்னால் இருக்கிறது. இதுதான் ஏகாதிபத்திய சக்திகளின் தந்திரம். முதலில் மக்களை மனநிலை ரீதியாகக் மழுங்கடித்துவிடும் உத்தி. உண்மையான பூனையாக இருந்தால்தானே எலியைப் பிடிக்கும்..? எல்லோரையும் மண் பூனைகளாக மாற்றிவிட்டால் பிரச்னையில்லைதானே..?

ஆனால், ஒவ்வொரு வருடமும் சென்னைப் புத்தக கண்காட்சியில் சே குவேரா பற்றிய புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இப்போது சேவின் உருவம் பொறித்த சட்டைகளும் விற்கப்படுகின்றன. வெகுஜன பத்திரிகைகளும், சே குவேராவைப்பற்றி எழுதுகின்றன. இதை மேம்போக்காகப் புரிந்துகொண்டு, சே-வை எல்லோரும் ஏற்றுக்கொண்டுவிட்டதாக நினைத்துவிடக்கூடாது. அப்படியிருந்தால் இந்நேரம் புரட்சி நடந்து முடிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் உள்ளுக்குள் இருக்கும் கோப உணர்வை சே என்ற ஒரு icon-ல் நிறுத்தி வைக்கிறார்கள். இது உயர்ந்த லட்சியங்களுக்காகப் போராடியவர்களை கொள்கைகளற்ற icon-களாக மாற்றும் போக்கு. பில்கேட்ஸ் வரலாறு எழுதப்படுவது போல சேவின் வரலாறும் எழுதப்படுகிறது. ஹாரிபாட்டர் போல சே ஒரு மார்க்கெட்டிங் யுத்தி. Che has become a brand name. ஆனாலும் இந்தப்போக்கு இப்படியே நீடிக்காது. ஒரு தேக்கமும், அதன் பின்னான மாற்றமும் தவிர்க்க முடியாதது.." என்கிறார் தி.க.சி.

அவரது விமர்சனங்களில் சில இங்கே..

வல்லிக்கண்ணன் பற்றி: " 'கதை எழுதுகிறவன் எதையும் எப்படியும் எழுதலாம்;ஆனால், சொல்கிற விஷயத்தை சுவையாக சொல்ல கற்றிருக்க வேண்டும். அதுதான் முக்கியம்' என்கிறார் வ.க. இது 'கலை கலைக்காகவே' என்ற செல்லரித்துப்போன கொள்கையின் மறுபதிப்பாகும். 'எதை எப்படி எழுத வேண்டும்' என்பதோடு 'யாருக்காக எழுத வேண்டும்..?' என்ற கேள்வியும் முக்கியமானதாகும்"

இன்றைய ஜெயகாந்தன் பற்றி: "மடமைவாதிகள் மத்தியில் வீழ்ந்துவிட்ட ஒரு நல்ல எழுத்தாளர்.."

மௌனி பற்றி: "மௌனியின் கதைகளில், மனமுறிவும், மரணமும்தான் முக்கிய அம்சங்கள்.வேதனையில் தோய்ந்த எண்ணங்களும்,நினைவுகளும், மன சஞ்சலமும்,ஏக்கமும், அச்சமும், வெறுப்பும் அவர் கதைகளில் நிறைந்திருக்கின்றன. நம்பிக்கை வறட்சியில் முக்குளித்து, சித்த பிரம்மையில் மூழ்கி, ஆறிய மனப்புண்ணை கீறிவிட்டு அழுதுகொண்டு, காதல் முறிவால் ஏற்பட்ட வடுக்களின் வலியை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து சோகப்பெருமூச்சு விட்டுக்கொண்டு.. மௌனியின் காதாப்பாத்திரங்கள் இப்படிப்பட்டவர்களே.மௌனியின் பரம்பரை பாரதிக்கு முந்தைய சித்தர்கள் பரம்பரை. 'மெய்ஞானம்' வேண்டி 'திருமந்திரம்' எழுதிய திருமூலர் பரம்பரை.."

கல்கி பற்றி: "கல்வி ஒரு ரொமாண்டிக் ரைட்டர்தான். மரபுவாதிதான். பொழுதுபோக்கு இலக்கியப்பார்வைக் கொண்டவர்தான். ஆனால், பத்திரிகைத்துறையில் அவர் தொடங்கிவைத்த மரபு மிக உயர்ந்தது. இதைக் கருத்தில் கொண்டு, கல்கி பற்றிய முழுமையான விமர்சனம் இன்னும் வரவில்லை.."

புதுமைப்பித்தன் பற்றி: "புதுமைப்பித்தனுக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஆனால், வீர வணக்கம் செலுத்த விரும்பவில்லை. 'புதுமைப்பித்தன் தமிழ் சிறுகதை எழுத்தாளர்களிலேயே தலைசிறந்தவர் என்று இங்கு சிலர் அவருக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர். புதுமைப்பித்தனைப் புறக்கணிப்பது எவ்வளவு தவறோ, அதே தவறு அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதும். இரண்டும் உண்மையை மறந்த சாமியாட்டம்; வெறியாட்டம். புதுமைப்பித்தன் சாகாவரம் பெற்ற சிறுகதைகளை எழுதியிருக்கிறார் என்றால், ஏனையோரும் அவ்விதம் எழுதியிருக்கிறார்கள்.."பி.கு: இவர் எழுத்தாளர் வண்ணதாசனின்(கல்யாண்ஜி), தந்தை என்பது தெரியும்தானே..

15/9/07

குப்பமுத்து குதிரை..!
"என்ன மாமா.. காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிட்டியளா.. நானும் எத்தனை தடவைக் கேக்குறேன். ஒரு நாளாவது என்னையும் சந்தைக்கு அழைச்சுகிட்டுப் போங்கன்னு.."

"வயசான பொம்பளை சனங்களைக் கண்டா என் தங்கராசுக்கு ஆகாதுத்தா. ஒரு வாரம் டயம் தர்றேன். கெடுவுக்குள்ள நீ கொமரிப்புள்ளயா மாறி வா.. காட்டுக்குறிச்சி சந்தையில சீனிச்சேவு வாங்கித்தர்றேன்.."

-வாசல் தெளிப்பதற்காக பசுமாட்டுச் சாணியை குண்டானில் கரைத்துக்கொண்டிருந்த ஓந்தாயிக்கும், காலையிலேயே தன் குதிரை வண்டியில் காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிவிட்ட குப்பமுத்துவுக்கும் நடந்த உரையாடல் இது. "இந்த மாமாவுக்கு வயசு ஏறுனாலும் இன்னும் கொழுப்பு கொறையலை.." சிரிப்போடு சொல்லிவிட்டு சாணியை கரைக்க ஆரம்பித்த ஓந்தாயிக்கு, இப்படிப்பட்ட ஒரு பதில்தான் குப்பமுத்துவிடமிருந்து வருமென நன்றாகத் தெரியும். தெரிந்தேதான் கேட்கிறாள்.

இவள் மட்டுமில்லை. ஊர் பெண்களுக்கெல்லாம் குப்பமுத்து என்றால் ஒரு இதுதான். எதையாவது நோண்டி, நோண்டி கேட்பார்கள். அவரும் வயது, உடம்பு இன்னபிற தகுதிகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் எளந்தாரியாய் வார்த்தைகளை விசிறியடிப்பார். கூடவே அவரது குதிரை தங்கராசு, 'ஙஞீஞீங்ங்ஞேஞே..' என்று ஒரு திணுசாக கணைத்து தன் பங்குக்கு துணைநக்கல் செய்யும். குப்பமுத்துவைக் கூட பொறுத்துக்கொள்ளும் பெண்கள், குதிரையின் கணைப்புக்குதான் கடுப்பாவார்கள்.

'ஏன் மாமா.. நீங்களே யானை கணக்கா இருந்துகிட்டு எதுக்கு இந்த சனியனை வாங்குனீங்க..?' என்று பளாரென்று கேட்டாலும் மனிதர் சளைக்கவே மாட்டார். 'தங்கராசுவை திட்டுனியன்னா, உன் புருஷனுக்கு ராத்திரி 'மூட்டை' வாங்கி ஊத்திவிட்டுறுவேன்..' என்று பீதியைக் கிளப்பிவிடுவார். வீட்டம்மா அம்சு சொல்லியே கேட்காத அவர் ஊர் பெண்கள் சொல்லியாக் கேட்கப்போகிறார்..?

ப்போது இந்த நிமிடம் தங்கராசு காட்டுக்குறிச்சி சந்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். தார் ரோட்டில் லாடம் பட்டு, 'டடக்... டடக்..' என லயத்தோடு எதிரொலித்தது. 'இன்னிக்கு வெள்ளிக்கிழமை.. சந்தைக்குப் போகிறோம்..' என்ற மனுஷப்பய கணக்கெல்லாம் தங்கராசுக்குத் தெரியாது என்றாலும், வாரம் ஒரு நாள் தனக்கு கொள்ளு வாங்கப்போகும் திருநாள் இன்றுதான் என்பதை பழக்க தோஷத்தில் அதன் புலன்கள் கண்டறிந்துவிட்டன. இதனாலேயோ என்னவோ அதன் ஓட்டத்தில் ஒரு உற்சாகம் வெளிப்பட்டது. தங்கராசுவுக்கு உற்சாகம் வந்துவிட்டால் தலையை போட்டு ஆட்டும்.

ஏழு வருஷத்துக்கு முன்பு வெள்ளக்கோயில் சந்தையில் மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிவந்த குதிரை. கீழச்சீமை மண் மாதிரி செக்கச் செவேல் என்றிருந்தது. உடம்பெங்கும் புசுபுசுவென்று முடி. குதிரையின் விலை, சல்லிசானது என்றோ, அதிகம் என்றோ அபிப்ராயம் சொல்ல அங்கு யாருமில்லை. ஏனெனில் தெக்கூர் ஏரியாவுக்கே அதுதான் முதல் குதிரை.

"ஏன்யா.. உனக்கென்ன புத்திக்குள்ள புத்து வச்சிருச்சா..? காசைக் கொட்டி இந்த கருமத்த ஏன் வாங்குன.. தாழடி நடவுக்கு வலப்பக்க மாட்டுக்குப் பதிலா இதைத்தான் பூட்டி ஓட்டப்போறியா..?" என்று குதிரையை வாங்கிவந்து வீட்டில் நிறுத்திய உடனே கேட்டாள் மனைவி அம்சு. அதையெல்லாம் அவர் மதிக்கவேயில்லை.

வாங்கிவந்த அடுத்த ஒரு வாரம் அவருக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை. எங்கெங்கோ ஓடி குச்சி கோல்களை வெட்டி முத்து ஆசாரியிடம் கொடுத்து வண்டி செய்துவிட்டார். மேலே மறைப்பு இல்லாமல், இரண்டு ஆள் உட்காரும் அளவுக்கு இடமிருக்கும் வண்டி. அந்த ஒரு வார முடிவில் குதிரைக்குப் பதிலாக குப்பமுத்துவே கணைக்க ஆரம்பித்துவிட்டார். அதன்பிறகு அவரது வாழ்க்கையில் குதிரையும் ஒரு அங்கமாகிவிட்டது. குப்பமுத்துவையும், தங்கராசுவையும் பிரித்துப் பார்ப்பது அரிதானது.

வீட்டுப் பக்கத்திலேயே வாய்க்கால் ஓடுவது அவருக்கு வசதியாய் போய்விட்டது. தங்கராசுவை பிடித்து வந்து வாய்க்காலில் நிறுத்தி வைத்து, வீட்டில் அம்சம்மா துணி துவைக்க வைத்திருக்கும் சவுக்காரக்கட்டியை எடுத்துவந்து குதிரைக்குப் போட்டு அழுக்குத் தேய்ப்பார். "செத்தப்பொர்றா.. இந்தா முடிஞ்சிடுச்சு.." என்று குதிரையோடு பேசியபடியே, அதன் உடம்பிலிருக்கும் உண்ணிகளை பிடுங்கியெறிவார். யாராவது குதிரையின் மீது கை வைத்துவிட்டால் அவ்வளவுதான். பத்து நாளைக்கு முன்னாடி, நடவு வயலில் நுழைந்து பயிரை துவைத்துவிட்டது என்று குச்சியால் குதிரையை அடித்துவிட்ட முத்துசாமியை கண்டமேனிக்குத் திட்டித்தீர்த்தார் குப்பமுத்து.

ங்கு போவதென்றாலும் குதிரை வண்டியில்தான் பயணம். காலையில் காட்டுக்குறிச்சி சந்தைக்குப் போய் கொள்ளு வாங்கியவர், இப்போது கூட டீ கடையில் வண்டியை நிறுத்திவிட்டு குதிரையை தடவிக்கொடுத்தபடியே கதையளந்துகொண்டிருக்கிறார். ஒரு கையில் டீ கிளாஸை உருட்டியவரின் இன்னொரு கையில் சுருட்டு புகைந்துகொண்டிருந்தது.

"ஏண்டா.. உனக்கு மேலக்கொள்ளையில பத்து மூட்டைதான் கண்டுச்சுன்னு பேசிக்கிட்டானுவொ.. குறுவைக்கு ஆடுதொரைப் போட்டுருக்கக்கூடாதுறா.." என்று அவர் பேசிக்கொண்டே இருக்க, வாயிலிருந்து எச்சில் ஒழுகி, சுருட்டு வழியாக பாய்ந்தோடி, முன்புற நெருப்பை அணைத்தது. மறுபடியும் பற்ற வைத்தார். திரும்பவும் எச்சில் வழிந்து நெருப்பு அணைந்தது. ஒரு சுருட்டுக்கு நாலைந்து தீக்குச்சியைக் காலி செய்துவிட்டார். அந்த நேரம் பார்த்து தங்கராசு கணைக்கவுமே, ''இந்த வந்துட்டண்டா.." என்றபடியே ஒரு உளுந்து வடையை வாங்கி, "எண்ணெய் பலகாரமெல்லாம் அதிகம் திங்கக்கூடாதுடா.." என்று செல்லம் கொஞ்சிவிட்டு குதிரையின் வாயில் திணித்தார்.

"குதிரைக்கு வடை குடுக்குறது இருக்கட்டும். நீ மொதல்ல நல்லத்துணியா எடுத்துப் போட்டியன்னா என்னய்யா..? கருமம்.. உளுந்து சாக்குல டவுசர் தச்சுப்போட்டிருக்க..? அதுவும் மானியத்துல குடுத்த சாக்கு. அதைப்பாரு.. கரெக்ட்டா முன்னாடி பக்கம், 'அரசு மானியம். விற்பனைக்கல்ல..' ன்னு எழுதியிருக்குது. நீ வித்தா மட்டும் எல்லாரும் போட்டிப்போட்டுகிட்டா வாங்கப்போறான்..? கருமம் அதை வாங்கி என்ன செய்யிறது..?" என்று கலியமூர்த்தி நக்கலடித்ததிலும் ஒரு நியாயமிருக்கவே செய்தது.

வேலிக்கணக்கில் நிலமிருந்தும், நல்ல துணி, மணி எடுத்துப்போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை அவர். எப்போதும் மேல்சட்டை அணியமாட்டார். அப்படியேதான் காட்டுக்குறிச்சி வரைக்கும் போய்வருவார். ஆனால், தங்கராசுக்கு மட்டும் எந்தக் குரையும் வைப்பதில்லை.

இந்த தங்கராசு பாசமெல்லாம் இப்ப ஏழெட்டு வருஷமாகத்தான். அதற்கு முன்பு இந்த பாசத்தையெல்லாம் அவர் கொட்டி வைத்தது மகன் துரைராசு மேல். ஒரு பெண், ஒரு ஆண் அவருக்கு. ஒரே ஆம்பிளைப்பிள்ளை என்பதால் எப்பவும் துரைராசுவைக் கூடவேக் கூட்டிக்கொண்டு திரிவார். எதிரே யாராவது உறைமுறை வீட்டுப் பெண்களைப் பார்த்தால், ''ஒரு ஒறமொறையான் வர்றான்னு கொஞ்சமாவது மரியாதை இருக்காப்பாரு.. இப்படியெல்லாம் செஞ்சா அப்புறம் பத்து பவுனைக் கூட்டிக்கேப்பேன் பார்த்துக்க.." என்று எகத்தாளம் செய்வார். துரைராசு கோணி நாணி நெளிவான்.

ஆனால், எளந்தாரியாய் ஆனபிறகு அவரோடு ஒட்டுவதில்லை. ஒதுங்கி, ஒதுங்கிப் போனான். 'சரி கழுத.. பயலுக்கு ஆசை வந்திருச்சுப் போல'ன்னு நினைத்து, அவசர, அவசரமாக முதலில் மகளுக்குப் பெண் பார்த்து மருங்கொளத்தில் 'தள்ளிவிட்ட' பின்னர், மகனுக்குப் பெண் பார்த்தார். சல்லடைப்போட்டுத் தேடி சாமிப்பட்டியில் பெரிய கையாகப் பிடித்துவிட்டார். குப்பமுத்துவிற்கு வேலிக்கணக்கில் நிலம் இருக்கிறதென்றால் துரைராசு மாமனார் வீட்டில் அதைவிட அதிகம். ஐம்பது ஏக்கரில் நெல், இரண்டு போர்வெல், பத்து ஏக்கரில் கொய்யாக்கொள்ளை, மெயின் ரோட்டில் எஸ்.டி.டி. பூத், என்று துட்டுக்கொட்டும் ஆள். அந்த பவுசு, துரைராசுக்குப் பிடித்துவிட்டதுபோல.. கல்யாணம் ஆன ஒண்ணரை வருஷத்துக்குள் சாமிப்பட்டிக்கேப் போய்விட்டான்.

குப்பமுத்துவால் தாங்க முடியவில்லை. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தார். அம்சுதான் ஒரே அழுகை. "எதுக்குடி இப்ப ஒப்பாரி வைக்கிற.. எல்லாம் கசந்தப்பின்னாடி வருவான் விடு.." என்று அவரும் ஒரு மாதிரியாக அம்சம்மாவை சமாதானமெல்லாம் செய்துபார்த்தார். ஆனால், துரைராசு வருவதாகத் தெரியவில்லை. வெள்ளக்கோயிலுக்குக் கிளம்பிப்போய் குதிரை வாங்கி வந்ததெல்லாம் அந்தக் கடுப்பில்தான். துரைராசுக்குப் போட்டியாக தங்கராசு என்று பெயர் வைத்து அட்டகாசம் செய்தார்.

குதிரையை வைத்து ஊருக்குள் ஊர்வலம் வந்த நேரம்போக, அவ்வப்போது சொந்த சோகத்திலும் ஆழ்ந்துவிடுவார். இரண்டு வருஷங்களுக்கு முன்பு, சித்திரா பௌர்ணமி சமயம்..சாமி புறப்பாடு முடிந்து எல்லாரும் வீட்டுக்குத் திரும்பிவிட்ட நேரத்தில் இவர் கோயிலுக்குக் கிளம்பினார். அது அய்யனார் கோயில். வாசலில் முரட்டுக் குதிரையை வீரன் ஒருவன் பிடித்துக்கொண்டு நிற்பதுபோல ஒரு சிலை இருக்கிறது(உபயம்: வேல்பாண்டியன், அரசு ஒப்பந்தக்காரர், ஒரத்தநாடு). அதற்குப் பக்கவாட்டில் தன் குதிரையையும் அதேபோல் நிறுத்தி பிடித்துக்கொண்டு சிலை வீரனைப்போலவே குப்பமுத்துவும் கொஞ்ச நேரம் விரைப்பாக நின்றார். அடித்திருந்த 'மூட்டை' சரக்கு அவரை ஆட்டுவித்தது. நின்ற நிலையிலேயே எதிரேயிருந்த அய்யனார் சிலையைப் பார்த்துப் பேச ஆரம்பித்துவிட்டார்.

"நீதான் பெரியசாமியா.. என்னா பெரிய மசுறு சாமி.. என்ன மாதிரி பேச முடியுமா உன்னால..? உன் குதிரையால வாலைக்கூட தூக்க முடியாது. என் தங்கராசு, நான் கண்ணடிச்சா உன்னையே எட்டி உதைப்பான். ஆனா என்னை உதைக்க மாட்டான்.. அந்த நாய் மாதிரி என்னை நெஞ்சுல உதைக்கமாட்டான். உன்னை மாதிரிதான் அந்த நாயும். நீ காட்டுக்குள்ள இருந்துகிட்டு வரமாட்டேங்குற.. அந்த நாயி மாமியார் வீட்டுல மயிர் புடுங்குது.."

-உளறல் தொடர்ந்துகொண்டே இருந்த நிலையில் அந்தப்பக்கம் வந்த வேறு சிலர்தான் அழைத்துச் சென்றார்கள்.

குப்பமுத்துவுக்கே எழுபது வயது என்றால் அம்சம்மாவுக்கு எப்படியும் அறுபது, அறுபத்தைந்து வயதிருக்காது..? அந்தம்மாவுக்குப் போனவாரம் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. மருங்கொளத்திலிருந்து மகள்காரி வந்துவிட்டாள். மகளின் கவனிப்பில் கொஞ்சம் எழுந்து உட்கார ஆரம்பித்தவள் மறுபடியும் படுத்துவிட்டாள். சுயநினைவின்றிபோனது. 'முந்திக்குவாளோ..' என்று அச்சப்பட்டார் குப்பமுத்து. உறவுக்காரர்களெல்லாம் வந்துப் பார்த்துப்போனார்கள்.

"பெத்த அம்மாக்காரி சாகக்கெடக்குறா.. ஊர் சனமே வந்துப்பாக்குது. இந்த தொர்ராசுப்பயலுக்கு நெஞ்சுல ரவ ஈரம் இல்லப் பார்த்தியா.." என ஊர்சனம் பேச ஆரம்பித்துவிட்டப்பிறகு துரைராசு வந்தான். அம்மாவுக்கு வாயில் தண்ணி ஊத்தினான். அங்கும், இங்கும் அழைந்தான், குப்பமுத்துவிடம் மட்டும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து குதிரைக்கு உண்ணிப் பிடுங்கிக்கொண்டிருந்தார் குப்பமுத்து. ஏழு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மகனைத் திரும்பிப்பார்க்கக்கூடத் தோன்றவில்லை அவருக்கு.

"ஏண்டா தொர்ராசு.. மாமியார் வீட்டுக்குப் போன சரி.. அங்கயேக் கூட இருந்துக்க. அது உன் விருப்பம். ஆனா, இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கக்கூடாதுன்னு என்னா சட்டமா..? எத்தனை வருஷமாச்சு.." என்று பக்கத்தில் அமர்ந்திருந்தவர் கேட்க, "ஆங்.. போதும்.. போதும். இங்க வந்து குதிரையோட சேர்த்து நானும் கொள்ளு திங்கவா..?" என்று எகத்தாளமாக பதில் வந்தது அவனிடமிருந்து.

"இங்க என்ன சோத்துக்கு வழியில்லாமயா இருக்கேன்.. நாங்கல்லாம் கொள்ளையா திங்குறோம்..? அங்க என்னமோ மந்திரம் வச்சிருக்கானுவொ. மயங்கிக் கெடக்குறான்..அதை ஏன் கேட்டுக்கிட்டு விடுங்கையா.." என்று குப்பமுத்து பதில் சொன்ன விநாடியில் துரைராசு கிளம்பிவிட்டான். சடசடவென அவர் மூஞ்சிக்கு நேராகப்போய் நின்றுகொண்டு, சண்டைப்போட ஆரம்பித்துவிட்டான்.

"ஒழுங்கா அம்மாவுக்கு மருந்து மாத்திரை வாங்கிக் குடுத்திருந்தா இப்படி சாகக்கெடக்குமா..? உனக்கு எங்க அதுக்கெல்லாம் நேரம் இருக்கு..? சந்தைப் போறதுக்கும், குதிரைக்குக் கொள்ளு வாங்குறதுக்குமே நேரம் பத்தல உனக்கு.."

"எல நாயி.. நான் மருந்து வாங்கித்தந்தனா, மசுரு வாங்கித்தந்தனான்னு நீதான் பாத்தியா..?"

-இப்படியாக நடந்த சண்டையில் திடீரென, குப்பமுத்துவை நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டான் துரைராசு. அவன் லேசாகத்தான் தள்ளினான் என்றாலும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை. நிறுத்திக்கிடந்த குதிரை வண்டியில் அமர்ந்திருந்ததால், நிலை தடுமாறி பின் பக்கமாக சாய்ந்தார். சலசலப்புடன் கூட்டம் ஓடிவந்தது. பக்கத்தில் நின்றிருந்த தங்கராசு ,'ங்ஞேங்ஙஞீன்ஞே..' என்று கணைத்தது. ஆட்கள் ஆளும்பேருமாக ஓடிவந்து துரைராசுவை பிடித்து ஒதுக்கினார்கள். கீழே விழுந்து எழுந்த குப்பமுத்து சத்தமே இல்லாமல் எழுந்து, அவர் பாட்டுக்கும் வீட்டுக்குள் போனார். கொஞ்ச நேரத்தில் துரைராசு மருங்கொளத்துக்கே கிளம்பிவிட்டான்.

சாயுங்காலமாக தங்கராசுவை வண்டியில் பூட்டி கிளம்பிய குப்பமுத்து, நாலு 'மூட்டை'யை ஒன்றாக வாங்கி, கண்ணை மூடிக்கொண்டு கடகடவென அடித்தார். போதைத்தாங்காமல் அவர் உடம்பு குலுங்கியது. அவரைத் தாங்கிக்கொண்டு தங்கராசு பழக்கப்பட்ட பாதையில் விரைந்தது.

இரவு ஒன்பது மணியிருக்கும்.. அம்சம்மாவின் உயிர் பிரிந்ததுவிட்டது. ஒரே கூப்பாடு. குப்பமுத்துவைத் தேடினால் ஆளைக்காணவில்லை. ஆளாளுக்குத் தேடினாலும் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கடைசியில், ''அய்யன்கோயில் பக்கம் தங்கராசு தனியா நின்னு கத்திக்கிட்டுருந்துச்சு.." என்று பால்சாமி சொன்னதை வைத்து, 'சரி போதை அடித்துவிட்டார் போல..' என்று நினைத்து ஆட்கள் அழைத்து வரப்போனார்கள்.

அய்யன்கோயில் குதிரை சிலைக்கருகே பெருத்த உருவமாகப் படுத்துக்கிடந்தார் குப்பமுத்து. அவரது வாயிலிருந்து நுரை பொங்கி வழிந்தது. ஈக்கள் மொய்த்தன. "ரெட்டைப்பொணம்டா முருகேசா.." என்று பெருங்குரலில் கதறல் சத்தங்கள் கேட்க, அருகில் கிடந்த குதிரை வண்டியில் தூக்கிவைத்து இழுத்துப்போனார்கள். பக்கத்தில் பெரும் கணைப்போடு சுற்றி, சுற்றி ஓடி கொண்டிருந்தது தங்கராசு. நீண்ட நேரமாகியும் கணைப்பு அடங்கவில்லை. மெல்ல,மெல்ல சோர்வாகி அய்யன்குளம் வெளித்திண்ணை அருகே சரிந்து விழுந்தது. மெதுவாய் அடங்கத் தொடங்கிய அதன் கடைசி மூச்சில் வெளிப்பட்ட பால்டாயில் நாற்றம், மெதுவாக காற்றில் பரவத் தொடங்கியது.

14/9/07

மரணத்தின் சுவை என்ன?
‘இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் இறந்து போவார்கள்..’ என்ற பேருண்மை புரிந்த பால்ய வயதில் அப்பிய பயம் அது. இப்போது வரைக்கும் மரணத்தை நினைத்தால் பய கங்குகள் புகையத் தொடங்கிவிடுகின்றன. மரணம் காணும்போதெல்லாம் காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றிலிருந்து கண்ணுக்குத் தெரியாத துளை வழியாக வாழ்நாள் கசிவதாகவே தோன்றுகிறது. தேடித்தேடி பொருள் சேர்த்தாலும், எத்தகைய இயல்புடையவராயிருந்தாலும், ஊர் மெச்சும் சாதனைகள் புரிந்தாலும் ஒரு நாள் இறந்துபோவோம் என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.

‘விட்டுவிடப் போகுது உயிர்- &விட்டதும்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்..’

-என்ற பட்டிணத்தாரின் வார்த்தைகள் எப்போதும் மனதுக்குள் ஒலித்தபடியே இருக்கின்றன. இந்த மரணபயம் பல சமயங்களில் அலட்சியமாக வெளிப்படுகிறது. ‘எல்லாப்பயலும் சாகப்போறான்.. அப்புறமென்ன மயிரு..’ என்று வாழ்வின் அவமானங்களை, தோல்விகளை, வெற்றிகளை புறந்தள்ள இந்த அலட்சியம் உதவுகிறது.

‘சாவது உறுதி’ என்று தெரிந்துவிட்ட பின்பு வாழ்வு மீதான காதல், ஊற்றுபோல் பெருக்கெடுக்கிறது. குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களை, சுற்றத்தை, விலங்குகளை, தாவரங்களை நேசிக்க மரணத்தை விட பெரிய காரணமெதுவும் தேவையாயில்லை. துரோகம், நன்றி, விசுவாசம், பாசம், நட்பு, பகை என அனைத்தையும் தின்று செரிக்கும் மிகப்பெரிய வயிறு சாவுக்குண்டு. பாலைவன மணல் மேட்டிற்கிணையாக, சாவின் வயிற்றில் நிரம்பிக்கிடக்கும் சாம்பல் மேட்டில், என்/உங்கள் தலைமுறைகளும், கல்லூரியில் இறந்துபோன என் தோழியொருத்தியும் இருக்கக்கூடும். ஆனாலும் தன் பசியடங்காமல், தீண்ட வரும் சர்ப்பமென நாவை நீட்டியபடி யாவரையும் தொடர்கிறது சாவு.

ஒரு மரணம் ஏற்படுத்தும் இழப்பின் வீச்சு, அதன் மீதான பயத்தை மேலும் கூட்டுகிறது. இயற்கையோ.. செயற்கையோ.. மரணம் எத்தகையதாக இருப்பினும், குறைந்தபட்சம் பத்து உயிர்களை பாதிக்கிறது. சார்ந்து வாழ்தலின் விழுக்காடும், வாழ்ந்த வாழ்வின் மீதான மதிப்பெண்ணும் மரணத்துக்குப் பிறகுதான் தெரிகிறது. ‘இந்த பூமியில் வாழவந்த அனைவருமே மரண தண்டனை கைதிகள்தான். தண்டனை நாட்களில்தான் வேறுபாடு’ என்ற கன்பூசியஸின் வரிகளும், ‘வாழ்க்கை என்பது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைபட்ட மௌனம்’ என்று இரண்டாவது இசைக்குறிப்பில் மரணத்தை உணரச் செய்கிற ஓஷோவும், ‘மரணமும் ஒரு அனுபவம்தான். யாருடனும் பகிந்துகொள்ள முடியாத அனுபவம்’ என்று எங்கோ யாரோ எழுதிச் சென்ற வரிகளும் மரணக்குறிப்புகளாய் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தையும் பகடி செய்து, ‘வாழ்வதற்கு எந்த நோக்கமும் இல்லாததால் இறந்துபோகிறேன்’ என்று கையசைத்து கம்பீரமாக விடைபெறும் மனத்திண்மை உடையோரும் இதே பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். தன் எல்லா மாயைகளையும், எல்லா வசீகரங்களையும் அடி ஆழத்தில் ஒளித்து வைத்து புன்னகைக்கிறது மரணம்.

மரணபயமற்ற மாவீரர்களைப்பற்றிய பாடப்புத்தக வரலாறுகள் பால்யத்தில் என்னை வியக்க வைத்தன. ‘ஒரு மனிதன் மரணத்தைக் கண்டு எங்ஙனம் அஞ்சாமல் இருக்க இயலும்.?’ என்ற கேள்வி, அதன் ஆரம்ப வியப்பின் அதே விகிதத்துடன் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

ஒவ்வொருமுறை முறை வெட்டுப்படும்போதும், ‘இன்னும் சில நாட்களில் கதை முடிந்துவிடும்’ என்று யூகிக்கப்பட்டு, பின்பு எல்லோரையும் ஆச்சர்யமூட்டி உயிர் மீண்டு வரும் காசியண்ணன், மற்றொரு சண்டைக்கு மல்லுக்கட்ட எந்த தயக்கமுமின்றி கிளம்புவார். ஊருக்குள் வம்பழந்து, இரண்டு பேரை காயப்படுத்தி, தானும் வெட்டுப்படும் ஆர்வம் அவருக்கு ஒரு போதும் குறைந்ததேயில்லை. கண்டிக்காரர் வீட்டு மாமா இறந்தபோதும், அவரது பெரியப்பா இறந்தபோதும்.. ஊருக்குள் இன்னபிற மரணங்களின்போதும் ஆட்டம்போடும் கூட்டத்தின் முதல் நபராய் நிற்பது காசியண்ணன்தான். நானறிந்து எந்த மரணம் கண்டும் அவர் கலங்கியதில்லை. அவரும் ஒரு நாள் இறந்துபோனார். கடைவாயில் ஈ மொய்க்க, பாலிடாயில் நாற்றம் காற்றில் வீச, வயலில் அவர் பிணமாகக் கிடந்தற்கும், அதற்கு முந்தைய வாரம், லட்சுமியக்கா தன் வீட்டு கிணற்றடி புளியமரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதற்கும் உள்ள தொடர்புகளை ஊரெங்கும் பேசிக்கொண்டார்கள்.

அவர்கள் மீதான ஊராரின் பரிதாபம் ஒரு பக்கம் இருந்தாலும், எனக்கு வியப்பு மட்டுமே மிஞ்சியது. காரணம் எதுவாக இருந்தாலும் மரணத்தைத் தேடிச்சென்று கை குலுக்கும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது..? சாவதற்கு பயமாக இருக்காதா..?

அதே கிராமத்தின் அப்பாயிகளும், அம்மாயிகளும் மரணத்தை எதிர்கொள்ளும் முறை ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியது. தஞ்சாவூரில் என் ஆத்தா ஒருவர் இருக்கிறார். உடம்பில் எங்கு சுளுக்கு என்றாலும், விளக்கெண்ணையை தடவிக்கொண்டு சக்கரையாய் பேசியபடியே சடக்கென ஒரே இழுப்பில் உருவி சுளுக்கெடுக்கும் வித்தைக்காரி. வெளிநாட்டுக்கு சம்பாதிக்கப்போன அவரது மகன், அங்கேயே விபத்தொன்றில் இறந்துபோய், ஒரு பெட்டியில் சடலமாக ஊர்வந்து சேர்ந்த பிறகு, அவரது கண்கள் எப்போதும் கண்ணீரூற்றாகிவிட்டன. தன் மகள் வீட்டிலிருக்கும் ஆத்தாவை அண்மையில் பார்க்கப் போயிருந்தேன்.

"என்னத்தா.. எப்படி இருக்கீய..?"

"எனக்கென்ன கொறைச்ச..? அதான் பேரனுவொ இருக்கியள.. நீதான் ஆடிக்கொருதரம், அம்மாசிக்கொருதரம் எட்டிப்பார்க்குற.. ஆனா, எங்கெருந்தாலும் என் சாவுக்கு வந்துடுறா. பேரப்பிள்ளைவொ நெய்ப்பந்தம் புடிச்சாதான் என் கட்டை வேவும்.."

"நெய்பந்தம் புடிக்கவா ஆளில்ல.. அய்யங்கொளம் வரைக்கும் பூ கொட்டி, உருமிசெட்டு வச்சு மொளக்கிடுவோம் விடு. ஆனா, சாவுற மாதிரியிருந்தா சொல்லியனுப்பிட்டு சாவு.. நான் அங்கேயிருந்து வரணும்.."

"இவன் ஒருத்தன்.. நான் செத்தப்பிறகு என் கறி என்ன கதியாவுதோ யார் கண்டா..? ஆனா ஒண்ணுடா.. என் மொவனை குழாய்ல குடுத்து, குடுவையில சாம்பலை வாங்கியாந்த மாதிரி என்னை பண்ணிறாதிய.. என் புருஷன் வெந்த வெள்ளத்தெரி சுடுகாட்டுலதான் என் கட்டை வேவணும்.."

-இப்படியாக நீண்ட அந்த உரையாடலில், சாவுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தபோதும், இயல்பேயென காபியை ஊதி, ஊதி குடித்துக்கொண்டுதான் இருந்தாள். ஆத்தா மட்டுமில்லை.. வாழ்வின் விளிம்போரம் தத்திநடக்கும் பெரியவர்கள் யாவரும் பேச்சின் இயல்புபோக்கிலேயே மரணத்தையும் கடந்து போகின்றனர். புழுக்கம் ஏறிய மதிய நேர வெம்மை பொழுதுகளில், ‘இந்த எமன் ஏடெடுத்துப் பாக்க மாட்டங்குறானே..’ என்ற வார்த்தைகள், சாணம் மெழுகிய வீட்டுத் திண்ணைகளில் பட்டு எதிரொலித்திக்கொண்டே இருக்கின்றன. கண்ணுக்கு தெரியாத பூங்கொத்து ஒன்றை, எமனுக்காக எந்நேரமும் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு அலைகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. வயதானவுடன் இந்த மனநிலை இயல்பாகவே வந்துவிடுகிறதா அல்லது இவ்விதம் பேசி மரணத்துக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்களா.. தெரியவில்லை. உணவருந்தும்போது ஒரு எல்லையில் இது போதுமானது என்று தோன்றுவது போல, வாழ்வின் கடைசியில் வாழ்ந்தது போதும் என்ற எண்ணம் வருமோ என்னவோ.. ஆனாலும், மரணம் நெருங்க, நெருங்க, 'இன்னும் ஒரு நாள், ஒரு நிமிடம் வாழ்ந்துவிட மாட்டோமா..?' என்ற ஏக்கம் எல்லோரின் கண்களிலும் தென்படுகிறது.

வாழ்வின் கடைசி மிடறு, மிகுந்த சுவையுடையது என்பதை மரணத் தருவாயில் இருப்பவர்களின் கண்கள் உணர்த்துகின்றன. ஆனால், மரணத்தின் சுவை என்ன..? சயனைடின் சுவை சொல்வதற்குள், அதை சுவைத்தவரின் உயிர் பிரிந்துவிடும் என்று சொல்லப்படுவது போல, மரணத்தின் சுவை சொன்னவர் எவரேனும் உண்டா..? ‘மரணமும் ஒரு அனுபவம்தான். யாருடனும் பகிந்துகொள்ள முடியாத அனுபவம்’ என்று யாரோ எழுதிச் சென்றது நினைவுக்கு வருகிறது. ஆனாலும், மரணம் குறித்த பேச்சும், பயமும் கிளம்பும் எல்லா சமயங்களிலும், தரையில் கொட்டிய நீர் மெதுவாய் எங்கும் பரவுவது போல, நாவினடியில் மெள்ளக் கசிகிறது கசப்பு.

13/9/07

வாழ்க்கை என்னும் பிசாசு..!டிக்கட்டுக்களை உயர்வின் அடையாளமாக உருவகப்படுத்துகிறோம் நாம். ஆனால் இவர்களுக்கோ படிக்கட்டுகள்தான் பயமுறுத்தும் பிசாசுகள். "இந்த உலகில் எங்கு திரும்பினாலும் படிக்கட்டுகளாக இருக்கின்றன. ஒவ்வொரு படிக்கட்டைப் பார்க்கும்போதும் நடுக்கமாக இருக்கிறது.." வலுவிழந்த குரலில் பேசும் இவர்கள் ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்றவர்கள். சராசரி உடல் ஊனமுற்றவர்களின் வேதனையை விட இவர்களின் தினசரி வாழ்க்கை ரணம் மிகுந்தது.

இந்த பூமிக்கு வாழ வந்த நாள்முதலாய் சிறு, சிறு செய்கைகளுக்கும் இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது இவர்களுக்கு. காலை எழுந்ததும் சிறுநீர் கழிப்பதில் தொடங்கும் சங்கடம் இரவு படுக்கைக்குப் போகும் வரையிலும் விடுவதில்லை. இதற்கெல்லாம் மெல்ல, மெல்ல மனதளவிலும், உடலளவிலும் பழகிவிடுகிறார்கள் என்றாலும், ஒவ்வொருமுறை ஊனத்தின் அசௌகர்யத்தை அனுபவிக்கும்போதும் அடையும் வேதனையை அவர்களால் மட்டுமே முழு வீச்சுடன் உணர முடியும். அப்படியான ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்ற நண்பர்கள், மனம் விட்டு பகிர்ந்துகொண்ட விஷயங்களை இங்கு அப்படியே தருகிறேன்.

1.இறைவன் எங்களை இப்படி படைத்துவிட்டாலும், எங்களுக்கும் தெய்வ பக்தி உண்டு. ஆனால் பெரும்பாலான கோயில்களிலிருக்கும் உயர, உயரமான படிகள் எங்களை மிரட்டுகின்றன. அதையும் தாண்டி உள்ளே சென்றால், கைகளுக்கு செருப்பணிந்து(கையுறை)செல்ல முடியாது. எங்களுக்கோ, கைகளுக்கு செருப்பில்லாமல் நகர முடியாது. இன்னொருபுறம் எங்களிலேயே பலர் கைகளுக்கு அணிய செருப்பு வாங்க வசதியின்றியும், செருப்பணிய முடியாதபடியான கோணலான கை, கால் அமைப்புடன் இருக்கின்றனர். அவர்களுக்கு வெறும், கை காலுடன் நகர்ந்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

2.அரசு, ரயில்களில் உடல் ஊனமுற்றவர்களுக்கென்று சிறப்பு பெட்டிகளை இணைத்திருக்கிறது. அந்த பெட்டிகளில் வெஸ்டன் டாய்லெட் வைத்திருக்கின்றனர். அது சாதாரண உடல் ஊனமுற்றவர்களுக்குப் பயன்படும். எங்களை மாதிரியானவர்களால் வெஸ்டர் டாய்லெட்டை பயன்படுத்தவே முடியாது. எங்களுக்கு சாதாரண பாம்பே டாய்லெட்தான் ஒரே வழி. இதனால் எங்களை மாதிரியான ஊர்ந்து செல்பவர்கள் ரயிலில் செல்வதைத் தவிர்க்கிறோம் அல்லது பயணம் முடியும் வரைக்கும் இயற்கை உபாதையை அடக்கிக்கொள்கிறோம்.

3.இந்த டாய்லெட் பிரச்னை வெவ்வேறு வடிவில் தினசரி எங்களை துரத்துகிறது. பொதுவாக பொது இடங்களில் ஆண்கள், ஓரமான பகுதிகளில் சிறுநீர் கழித்துவிட்டு சென்றுவிடுகின்றனர். நகர்ந்து செல்லும் நாங்கள் அப்படி செய்ய முடியாது. இலவச/கட்டண கழிப்பிடங்கள்தான் எங்களுக்கு ஒரே வழி. ஆனால், அவை மிக மோசமாக இருக்கின்றன. தரைகளில் கை கால் ஊன்றி உடலை இழுத்துக்கொண்டு நகர்ந்தால், மொத்த உடம்புமே நாற்றமடிக்கும் நிலைக்கு வந்துவிடுகிறது. முன்பு சொன்ன, வெஸ்டர்ன் டாய்லெட் பிரச்னை பெரும்பாலான ஹோட்டல்களிலும் தொடர்கிறது. பணம் செலவழித்து வாடகைக்கு அறை பிடித்தாலும் டாய்லெட்டைக் கூட பயன்படுத்த முடியாத சூழ்நிலை.

4. எங்களை மாதிரியானவர்கள் பயன்படுத்தக்கூடிய டூ-வீலர் வாங்குவதுதான் பொதுவாக எங்களின் கனவு. அதுவரைக்கும், வேலைக்குச் சென்றாலும் கையில் செருப்பணிந்து நகர்ந்தபடியே சென்று வருவதுதான் ஒரே வழி. அப்படியான தருணங்களில், எங்களை பொது இடங்களில் பார்ப்பவர்கள், அணிச்சையாக சில்லரைகளை வீசிவிடுகின்றனர். எங்களுக்கு உதவ வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை புரிந்துகொள்கிறோம். ஆனால், அம்மாதிரி செய்வது எங்களை மனதளவில் ரொம்பவே பாதிக்கிறது. அப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும், 'நீ பிச்சை எடுக்கத்தான் லாயக்கு..' என்று யாரோ உரக்கக் கத்துவதுபோல் இருக்கிறது. இத்தனைக்கும், நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரரின் தோற்றத்தில் செல்வதில்லை. நல்ல உடையணிந்துதான் செல்கிறோம். இருந்தும் எங்களின் ஊனமே, அப்படியொரு எண்ணத்தை பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்துகிறது.5. உடல் ஊனமுற்றவர்களுக்கென்று சுயம்வரம் அவ்வப்போது நடக்கும். அதில் எந்த உடல் ஊனமுற்ற பெண்ணும், எங்களை மாதிரியான ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்றவரை தேர்ந்தெடுக்கமாட்டாள். காரணம், ஊனமுற்றவர்களில் நாங்கள் கடைநிலையில் இருக்கிறோம். நாங்களாவது பரவாயில்லை.. ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்ற பெண்களின் நிலைமை இன்னும் மோசம். அவர்கள் சுயம்வரம் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கே வருவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு பெரும்பாலான குடும்பங்களில் கல்விக்கூட மறுக்கப்படுகிறது. வீடும், அந்த தெருவுமே அவளறிந்த அதிகபட்ச உலகம்.

6. தனியார் கல்விக்கூடங்களில், அவர்கள் கேட்கும் பணத்தைக் கட்டி, எங்களை மாதிரியானவர்கள் படிக்க விரும்பினாலும், அவர்கள் சேர்த்துக்கொள்ள விரும்புவதில்லை. சில அரசு பள்ளி/கல்லூரிகளிலும் கூட, இப்படி நடக்கிறது. காரணம், எங்களுக்காக வகுப்பறைகளை கீழ் தளத்துக்கு மாற்றுவது, எங்களுக்கென்று சிறப்பு கவனம் எடுக்க வேண்டியிருப்பது போன்ற விஷயங்கள் அவர்களை அசௌகர்யப்படுத்துகின்றன. இது எல்லாப் பள்ளிகளுக்கும் பொருந்தாது. எங்கள் மீது கரிசனத்தோடு இருக்கும் பள்ளிகளும் நிறைய உண்டு.

7. தமிழக அரசு TNPSC போன்ற தேர்வுகளை நடத்தும்போது, உடல் ஊனமுற்றவர்கள் தேர்வுகட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கிறது. நல்ல விஷயம்தான். ஆனால், மாத வருமானம் 350 ரூபாய்க்குள் இருந்தால்தான் இந்த சலுகையை அனுபவிக்க முடியும். எந்தக்காலத்தில் நிர்ணயித்ததோ, இன்னமும் மாற்றாமல் வைத்திருக்கிறார்கள். இதனால், 350 ரூபாய்தான் மாத வருமானம் என்று பொய்யாக சான்றிதழ் வாங்க வேண்டிய நிலைமை.

8. தமிழக அரசு உடல் ஊனமுற்றவர்களுக்கென்று மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. இதைப்பெற அரசு விதிக்கும் நிபந்தணைகள் விநோதமாக இருக்கின்றன. '45 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஒருவேளை திருமணம் ஆகியிருந்தால், ஆண்குழந்தை இருக்கக்கூடாது..' என்று நிபந்தணை விதிக்கிறார்கள். '45 வயதுவரைக்கும் பெற்றோர் பராமரிப்பார்கள், ஆண்குழந்தை இருந்தால் அவன் பராமரிப்பான்' என்பது இந்த நிபந்தணைகளுக்குப் பின்னுள்ள செய்தி. இது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். யார் இதையெல்லாம் வடிவமைத்தார்கள் என தெரியவில்லை.

9.பொதுவாக எங்களை மாதிரியானவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடப்பிறந்தது. அது சரியானதில்லை என்றாலும் கூட இயல்பானது. அதை மாற்றிக்கொண்டுதான் வாழப்பழகுகிறோம். இதனால், எந்த ஒரு சலுகையையும் உரத்தக் குரலில் கேட்க கூச்சமாகவும், சங்கடமாகவும் இருக்கிறது. சலுகை என்றில்லை.. ஒரு பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் தரையில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். பேருந்தில் தூக்கி வைக்க ஒரு நபரின் உதவி தேவை. பெரும்பாலும் தானாக வந்து யாரோ ஒருவர் உதவிவிடுகிறார். அப்படியல்லாத சந்தர்ப்பங்களில் சுற்றியிருப்பவர்களின் முகத்தை பரிதாபமாக பார்க்கலாம். அதையும் தாண்டி வாய்விட்டுக் கேட்கலாம். அப்படியும் எதுவும் நடக்கவில்லை(இதற்கான சந்தர்ப்பங்கள் குறைவுதான்..) எனில், எங்களின் தாழ்வு மனப்பான்மை விழித்துக்கொள்கிறது. சுற்றியிருப்பவர்களிடம் நீங்கள் ஏன் உதவவில்லை என்று சண்டையிட முடியுமா என்ன..? அவரவர்க்கு ஆயிரம் வேலைகள். எங்களுக்கு உதவுவதெற்கென்று யாரும் பிறப்பெடுக்கவில்லையே..
10. அரசு, உடல் ஊனமுற்றவர்களை பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதோர், கை கால் ஊனமுற்றவர்கள் என்று நான்கு வகைகளாக பிரித்துள்ளது. இதில் மன வளர்ச்சி குன்றியவர்களை தவிர்த்து ஏனையோருக்கு, வேலைவாய்ப்பில் தலா ஒரு சதவிகிதம்(மொத்தம் 3%) இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. காது கேளாதோரையும், கண் பார்வையற்றவரையும் இனம் காணுவதில் பிரச்னையில்லை. அதில் பொய் சொல்ல முடியாது. ஆனால், கை கால் ஊனமுற்றவர்களின் நிலைமை வேறு. 40% ஊனம் இருந்தால்தான் உடல் ஊனமுற்றவர் என்று அங்கீகரிக்கிறது அரசு. இந்த சதவிகித சான்றிதழ் வைத்திருப்பவர்கள்தான் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அரசின் சலுகைகளை அனுபவிக்க இயலும். நடைமுறையில் லேசான உடல் ஊனமுள்ளவர்களும் மருத்துவர்களை சரிகட்டி, 40% க்கும் மேல் ஊனம் இருப்பதாக சான்றிதழ் வாங்கிவிடுகின்றனர். இதனால் கை கால் ஊனமுற்றவர்களுக்கான ஒரு சதவிகிதத்திற்கு போட்டி அதிகமாகிவிட்டது. எங்களை மாதிரியான ஊர்ந்து செல்பவர்களும் இந்த ஒரு சதவிகிதத்திற்குள்தான் வருகிறோம். இந்த நிலைமை மாற வேண்டுமாயின் எங்களுக்கு உள் ஒதுக்கீடு அவசியம். ஆனால் இருக்கும் ஒரு சதவிகிதத்திற்குள் உள் ஒதுக்கீடு செய்ய முடியாது.. அது நியாயமாகவும் இருக்காது. கை கால் ஊனமுற்றவர்கான இட ஒதுக்கீட்டை இரண்டு சதவிகிதமாக உயர்த்தி, அதில் எங்களுக்கு ஒரு சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்வது நியாயமானதாக இருக்கும்.

12/9/07

'ஏழரை' முருகன்..!ப்பவும் எதையாச்சும் ஏழரையை கெளப்புறதே இந்த முருகன்பயலுக்கு வேலையாப் போச்சு. இந்நேரத்துக்கு வீட்டுக்குப் போயிருந்தால் அரசியோ, கோலங்களோ எதையாச்சும் பார்த்துக்கிட்டிருந்திருக்கலாம். முருகன்பயலால் முருகேசன் கடையிலேயே உட்கார வேண்டியதாகிடுச்சு.

"நீங்கதான் மாமா கேட்டுச் சொல்லனும். இந்த நாயி இப்படி பண்றது இது மொத தடவை இல்லை. என்கிட்டதான்னு இல்ல.. எல்லார்கிட்டயும் எகனக்கி, மொகனையா எதையாச்சும் செஞ்சுகிட்டே இருக்கான்.." முனகலான குரலில் சொல்லிவிட்டு அருகிலிருந்த பூவரச மரத்திலிருந்து இலையை இனுக்கி, இனுக்கி பிய்த்துப்போட்டுக்கொண்டிருந்தான் வீரையன். அவன் துன்பம் அவனுக்கு. அவன் நிலையில் இருந்தால் நீங்களும் இப்படித்தான் புலம்பியிருப்பீர்கள்.

முருகன்பயல் லேசுப்பட்ட ஆளில்லை. மூக்குக்குத் தெரியாம மூக்குத்தியை திருடுற வித்தைக்காரன் அவன். அவன்கிட்ட சொந்தமா உழவுமாடும், ஏறும் இருக்கு. ஆனா, அதை அவன் மச்சினன்கிட்ட கொடுத்து மாமியார் ஊர்ல வாடகைக்கு விட்டுட்டான். இங்க எவனாவது ஏர் உழுவக் கூப்பிட்டான்னா, 'என்கிட்ட ஏர் கலப்பை இல்ல.. உழுது தர மட்டும்னா வர்றேன்'னு பட்டுன்னு சொல்லிட மாட்டான். 'பத்து நிமிஷம் பொறு..என்ன சேதின்னு சொல்றேன்'னு சொல்லிட்டு, விழுந்தடிச்சு வடக்கித் தெருவுக்கு ஓடுவான். எவன் வீட்டுல மாடு அன்னிக்கு சும்மாக் கெடக்குதுன்னுப் பார்ப்பான்.

"என்ன தெக்கூராத்தா.. உன் புருஷன் குடிக்க மட்டும் நோட்டு நோட்டா எடுத்து நீட்டுறான். உனக்கு கா கிலோ கறி வாங்கி தரமாட்டானா..? நானும் தெரியாமத்தான் கேக்குறேன். பார்த்து ஒரு மாசம் இருக்குமா..? அதுக்குள்ள இப்படி எளைச்சுப் போயிட்டியே.." இப்படி நாக்குல பாயாசத்தை கொட்டுனா மாதிரி அடிச்சு விட்டான்னா, தெக்கூராத்தா மாட்டை அவிழ்த்து அவன் கையிலயே கயித்தைக் குடுத்து 'போயிட்டு வா ராசா'ன்னு சொல்லும்.

மாட்டை இழுத்து நடந்துகிட்டே, "ஒழுங்கா கஞ்சியை குடித்தா. நாளைபின்ன தெக்கூர்காரன்கிட்ட பொண்ணுகேட்டுப் போனா, 'உங்க ஊருக்கு பொண்ணு கொடுத்தா பட்டினி போட்டு கொண்ணுடுவீங்கடா'ன்னு சொல்லிடுவாய்ங்க மாப்பிள்ளைக.."ன்னு சொன்னதும் அந்த ஆத்தா வெட்கத்துல இன்னும் ஒரு படி எளகிப்போயிடும்.

மாட்டுக்கு ஒரு தெக்கூராத்தான்னா, ஏர்கலப்பைக்கு ஒரு மருங்கொளத்தாத்தாவோ, கோட்டையூர்காரியோ கெடைக்காமலா போயிடுவா. அது எந்த ஊருகாரியா இருந்தாலும் அவ சொந்த ஊரைப்பத்தி நல்லவிதமா நாலு வார்த்தை சொன்னா எல்லாரும் காலிதான். அது கூட பிரச்னை இல்லை. அப்படி நைச்சியமா பேசி மாட்டையும், ஏரையும் வாங்கிட்டுப் போறவன், திரும்ப கொண்டு வந்துவிடும்போது கெளப்புவான் பாருங்க ஏழரை. அதுலதான் இருக்கு வெவரம்.

"ஏன்த்தா.. எங்க பிடிச்சீய இந்த ஓடுகாலி மாடுகளை..? மொத ஓட்டு முடிஞ்சு ரெண்டு விலா ஓட்டுறதுக்கு முன்னயே, ஏதோ மணல் காட்டுல பாரம் இழுக்குற மாதிரில்ல படுத்துக்குது.. செத்த நேரம் நிறுத்தி வச்சுட்டு வெத்தலை போடுவோம்னா, சனியன் அதுபாட்டுக்கும் பக்கத்துல பால்சாமி வயல்ல வாய் வைக்குதுங்குறேன்.. ஏரை அவுத்துவிட்டா ஒரே ஓட்டமா ஓடிவந்து உன் வீட்டுல நிக்கிது. நல்லா மாடு வளர்த்து வச்சிருக்கியலாத்தா.." அப்படின்னு அவன் பேசுறதுல ஒரு சூது இருக்கும். வீட்டுல உள்ள பொம்பளையாளுககிட்ட யாராச்சும் மாடு கேட்டு வந்தா, சும்மா கெடந்தா அவித்துக் குடுத்து விட்றும். புருஷன்காரனுக்கு விவரம் தெரிஞ்சா தெக்கூராத்தா வீட்டுக்காரன் மாதிரி ஆளாயிருந்தா சாமியாடிருவான்.

"ஏண்டி.. அவன் பணத்தேறு ஓட்டி சம்பாதிக்க என் மாடுதான் கெடச்சுச்சா..? இருக்குறதை மச்சினன் கிட்ட கொடுத்துட்டு ஊர்ல இரவல் வாங்கியே ஒவ்வொரு வருஷமும் வெள்ளாமை பார்க்குற நாயி அது. அவன்கிட்ட எதுக்கு என்னைக் கேக்காம மாட்டைக் குடுத்த..? முதல்ல மாட்டுக்குண்டான காசை வாங்கு. சும்மா இல்ல.. நாலு வாரம் சந்தைக்கு அழைஞ்சு, நல்ல சாதி பார்த்து எட்டாயிரத்துக்கு வாங்குன ஜோடி மாடு.."

-ஆனால் முருகன்பயல் அதுக்குப் பிறகு அந்த தெரு பக்கமே தலைவச்சுப் படுக்கமாட்டான்.

போன வருஷம் மேட்டூர்ல நேரத்தோட தண்ணீர் திறந்துவிடலை. (அவய்ங்க எந்த வருஷம்தான் நேரத்தோட விட்டாய்ங்க..) திடீர்னு ஒரு நாள் 'மேட்டூர்ல திறந்தாச்சாம்'னு பேச்சு வந்தப்ப, ஆடி மாசம் கடைசி வந்துடுச்சு. அதனால, இனிமே நாத்து விட்டு அதுக்கு ஒரு மாசம் காத்திருந்து நடறதுக்குள்ள மறுபடியும் தண்ணியை நிறுத்திடுவாய்ங்கன்னு நினைச்சு, போர்வெல் வச்சுருக்குற மோகனோட வயல்ல ஒரு ஓரமா நாத்து மட்டும் விட்டுக்குறேன்னு கேட்டான் முருகன்பய. தண்ணியிருக்குறவன் வயல்ல நாத்து மட்டும் விட்டுக்குறது வழக்கமா நடக்குறதுதான். அதனால மோகனும் விட்டுக்கன்னு சொல்லிட்டான். இந்தப்பயலும் பத்து மரக்கா நெல்லை விரவி நாத்து விட்டான். ஆடுதொறை 18 ரகம். நல்லா புசுபுசுன்னு கலப்பில்லாம வளர்ந்து நின்னுச்சு.

"உன் நாத்து கலப்புல்லாம இருக்கப்பா. மீதியிருந்தா எனக்கு அஞ்சு, பத்து கட்டு நாத்து குடு"ன்னான் மோகன். அதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுனவன் வேறொரு வில்லங்கம் பண்ணிபுட்டான்.

நிலத்தை இரவலா நாத்துவிடக் குடுத்தவனுக்கு, அவனோட நடவுக்கு முன்னாடி பூரா நாத்தையும் அரிச்சு ஓட்டித் தரனுமா வேண்டாமா..? அப்பதானே நிலத்து சொந்தக்காரன் அந்த இடத்துலயும் நடமுடியும்..? அட ஓட்டிக்கூட தர வேண்டாம். நேரத்துக்கு நாத்தை அரிக்கணும்ல..? ஆனா இந்த முருகன்பய மோகன் வயல்லேர்ந்து நாத்தைப் பறிச்சு அவன் வயல்ல நட்ட பிறகு, மீதியிருந்ததைப் பறிச்சு சுத்தம் பண்ணிக் குடுக்காம எனக்கென்னன்னு அப்படியே போட்டுட்டுப் போயிட்டான். கேட்டா, 'மாமா.. நீதானே என் நாத்து வேணும்னு கேட்ட.. மிச்சமிருக்குறதைப் பறிச்சு எடுத்துக்க'ன்னு நல்லவன் மாதிரி சொல்றான்.

"உன் நாத்தைக் கேட்டதெல்லாம் வாஸ்தவம்தான் மாப்ள. ஆனா, அதை நடுறதுக்கு இடம் வேணுமா.. வேண்டாமா..? நாத்து விட்டுக்க உனக்கு இடம் கொடுத்ததுக்கு எனக்குத் தண்டனையாடா இது..? உன் யோக்கியதை தெரிஞ்சும் உனக்கு இடம் கொடுத்தனே.. என்னை செருப்பால அடிக்கனும்.." அப்படின்னு புலம்புற அளவுக்கு போயிட்டான் மோகன்.

கடைசியில் சுத்தியுள்ள எல்லா இடங்களும் நட்டு முடிச்சு, முருகன்பய நாத்துவிட்டிருந்த அந்த சின்ன இடத்திற்கு மட்டும் நடவு ஆள் கிடைக்காம, இருபது நாள் கழிச்சு ஒரு ஆள் வந்து நட்டுக் கொடுத்துச்சு. அதுக்குப் பிறகும் மருந்தடிக்குறது, களையெடுக்குறது, அறுப்புன்னு எல்லாத்துக்கும் அந்த இடத்துக்கு மட்டும் தாமதமாவே எல்லாத்தையும் செய்ய வேண்டியிருந்துச்சு. பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்கியே லோல்பட்டான் மோகன்.

போன வெள்ளாமைக்கு தன்னோட சொந்த அண்ணன் காசிகிட்ட முருகன் பய பண்ணுன வில்லங்கத்தை காசி வீட்டுக்காரி இன்னைக்கும் சொல்லிகிட்டிருக்கா. அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் கோயில் நிலத்துலதான் வெள்ளாமை. அது சகதிவய. என்னதான் மாங்கு, மாங்குன்னு மண்ணை வெட்டிப் போட்டாலும் ரெண்டு சாணுக்கு மேல வரப்பு ஏறாது. காலை வச்சா 'உள்ளவா'ன்னு இழுக்கும். அந்த வரப்புல இந்தப்பய 'துவரை ஊனப்போறேன்'னுட்டு நிக்கிறான்.

"எல.. இருக்குற ரெண்டடி வரப்புல நீ பாட்டுக்கும் துவரையை ஊனிட்டா, அப்புறம் எப்படி அந்தண்ட இந்தண்ட போறது..? பயிரை மிதிச்சுகிட்டா போவமுடியும்..? ரொம்ப பண்ணாதடா.."ன்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தான் காசி. அவன் கேட்டாதானே.. கடைசி வரைக்கும் கசாலித்தனம் பண்ணி துவரையை ஊனிட்டான்.

அதுபாட்டுக்கும் முசுமுசுன்னு மண்டிடுச்சு. கடைசியில வரப்போரம் போக, வர முடியாம அண்ணன், தம்பிக்கு இடையில அடிதடி ஆகிப்போச்சு. அதுலேர்ந்து ஆறுமாசம் வரைக்கும் ரெண்டு பேரும் பேசாம, கொள்ளாம திரிஞ்சாய்ங்க. இந்த வருஷம் ஆத்துல தண்ணி வந்த பிறகுதான் கோபம் குறைஞ்சுப் பேசுக்கிறாய்ங்க. ஆனா, காசி பொண்டாட்டி இன்னமும் பேசறதில்லை.

இன்னிக்கு வில்லங்கத்தைக் கொஞ்சம் கூடுதலா பண்ணிபுட்டான் முருகன்பய. அதனாலதான் சனமெல்லாம் கடுப்பா முருகேசன் கடையில கூடி நிக்கிது. வீரையன் இன்னமும் பூவரசு இலையை பிய்ச்சுப் போடுறதை நிறுத்தலை. எவன் என்ன சொன்னாலும் கவலைப்படாம நம்மாளு பாட்டுக்கும் 'என் சூத்துக்கு சொல்லு'ன்னு நிக்கிறான்.

நேத்து வீரையனுக்கு தாழடி நடவு. முந்தின நாள் வரைக்கும் நாத்தரிக்க ஆள் கிடைக்கலை. வேற வழியில்லாம முருகன்பயலைக் கூப்பிட்டான். "பயிரையெல்லாம் அப்படியே புடுங்கி, புடுங்கி வைக்காம முடிச்சை நல்லா அலசிபோடு"ன்னு சொல்லிட்டு வீரையன் வரப்பு வெட்ட ஆரம்பிச்சான். ஒரு கட்டுக்கு நூறு முடிச்சு. பத்து ரூபா கூலி. இதான் கணக்கு. காலையில அரிக்கப்போயி பதினோரு மணிக்கு கரையேறுன முருகன்பய, மறுபடியும் சாயுங்காலமும் வந்து அரிச்சான். 'மொத்தம் பத்து கட்டு'னு கணக்குச் சொல்லி, சாயுங்காலமா வீரையன் வீட்டுக்குப் போயி அவன் பொண்டாட்டிக்கிட்ட நூறு ரூவா வாங்கிட்டான்.

அடுத்த நாள் நடவு. நாத்து வயல்ல, தான் அரிச்ச பத்து கட்டு நாத்தையும் தனித்தனியா பிரிச்சு வச்சிருந்தான் முருகன்பய. அதை கைக்கு அஞ்சு வீதமா பத்து, பத்து முடிச்சா அள்ளி நடவு வயலுக்குக் கொண்டுபோனான் வீரையன். ஆனா, ரெண்டு கட்டு நாத்தை அள்றதுக்குள்ளயே அவனுக்கு சந்தேகம் வந்துடுச்சு. குறையுற மாதிரியே இருந்துச்சு. சட்டுன்னு நாத்து கட்டுகளை எண்ணிப்பார்த்தா, ஒரு கட்டுக்கு பத்து முடிச்சு குறையுது.

வீரையனுக்குன்னா கோவம் தாங்கலை. முசுமுசுன்னு வந்துச்சு. இப்பவே ஓடிப்போயி அவனை அடிக்கலாம்ங்குற அளவுக்கு கோவம். ஆனால், நடவுவயலை வச்சுகிட்டு எங்கப்போவ..? நடவு முடிஞ்சதும் சாயுங்காலம் மொத வேலையா முருகன்பயலை தேடிப்பிடிச்சுக் கேள்வியே இல்லாம மடமடன்னு அடிச்சுபுட்டான் வீரையன். இப்ப பஞ்சாயத்து வச்சுருக்குறதும் அதுக்குதான்.

"ஒரு கட்டுக்கு பத்து முடிச்சு அரிக்க எவ்வளவு நேரம் ஆயிடப்போவுது..? ரெண்டு பேரும் பங்காளிகதானடா. ஏண்டா இப்படி பண்ற..?"ன்னு பஞ்சாயத்து செய்யுற கீழவீட்டுக்காரர் கேக்குறதுக்கு எந்தபதிலும் சொல்லாம அவன் பாட்டுக்கும் நிக்கிறான் முருகன்பய.

"அவன் கோயில் நிலத்துல நடுறவன் மாமா. அவனுக்கு லாபம் தெரியுதா..? நஷ்டம் தெரியுதா..? சொந்தமா நிலம் வாங்கி நட்டுப்பார்த்தா அப்ப தெரியும் வலி.."ன்னு கோபட்டான் வீரையன். அப்ப ஆரம்பிச்சான் பாருங்க நம்மாளு அடுத்த ஏழரையை..

"நான் கோயில் நிலத்துல நடுறது உண்மைதான். நான் இல்லன்னு சொன்னனா..? ஆனா, வருஷம் பாக்கியில்லாம குத்தகை கட்டுறேன்.. அதை மறந்துடாத. ஆனா நீ என்ன பண்ற..? கெவர்மெண்ட் காசுல எலவசமா கரண்ட்டு இழுத்து போர்வெல் போட்டு, அந்த தண்ணியை மணிக்கு நாப்பது ரூவான்னு காசுக்கு விக்கிற. அது எந்தூரு ஞாயம்..?"ன்னு அவன் கேட்டதும் யாரும் பேசலை. சட்டுன்னு எல்லா சத்தமும் அடங்கிப்போச்சு. எதோ தப்பா கேட்டுட்டமோன்னு முருகன்பய குழம்பிப்போயிட்டான். அவன் கேட்ட கேள்வியால ஊருக்குள்ள மொத தடவையா எல்லாரும் அதிர்ச்சியாகி நின்னாய்ங்க.

11/9/07

வேலை இருக்கு... ஆள் இல்லை..


'நாட்டின் முதுகெலும்பு' என்பார்கள். ஆனால் முதுகெலும்பு ஒடிய உழைக்கும் விவசாயிகளின் பிரச்னைகளை மட்டும் யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதுதான் நம் நாட்டின் நெடுநாளைய நிலைமை. வறட்சியும், வெள்ளமும் விவசாயிகளை குறிவைத்துத் தாக்குவது போதாதென்று கடந்த சில வருடங்களாக டெல்டா பகுதி விவசாயிகளை வேறொரு பிரச்னை சுழற்றியடிக்கிறது.

விவசாயம் செய்ய போதுமான கூலியாட்கள் கிடைக்காமல் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் படாதபாடு படுகிறார்கள். இந்த வருடம் ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கிவிட்ட நிலையில், நடவு வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் பணிகள் தள்ளாட ஆரம்பித்துவிட்டன. இந்த பிரச்னையை சமூகம், பொருளாதாரம் என்ற இரண்டு பின்னணியிலிருந்து ஆராய வேண்டும்.

பொருளாதாரக் காரணம்: விவசாயம் செய்வதற்கான எந்த ஒரு செலவும் குறைந்துவிடவில்லை. மாறாக வருடத்திற்கு, வருடம் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. வீட்டுக்கு வீடு மாடு வளர்த்து, வீட்டுக்குப் பின்னால் எருக்குழி தோண்டி, மாட்டுச்சாணத்தை எருக்குழியில் கொட்டி, அதையே நிலத்திற்கு அடியுரமாய் இட்டு விவசாயம் செய்த நம் பாரம்பரிய விவசாயம் இப்போது இல்லை. பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் விவசாய நிலத்தை ஆக்டோபஸைப் போல ஆக்கிரமித்துவிட்டன. யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் போன்ற ரசாயண உரங்கள், இப்போது விதை நெல்லை விட முக்கியமாகிவிட்டன. இவை இல்லாத வெள்ளாமையை டெல்டாவில் எங்கும் பார்க்க முடியாது.

இந்த மருந்துகளின் விலை ஒவ்வொரு வருடமும் ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த வருட விலைப்படி, ஒரு மூட்டை டி.ஏ.பி. 486 ரூபாய். ஒரு மூட்டை யூரியாவின் விலை 250 ரூபாய். நடவு செய்யும்போது ஏக்கர் ஒன்றுக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி. இட வேண்டும். பத்து நாள் கழித்து ஒரு மூட்டை யூரியாவும், இன்னும் சில நாட்கள் கழித்து யூரியா மற்றும் பொட்டாஷ் கலந்த கலவை ஒரு மூட்டையும் இட வேண்டும். எப்படியும் இரண்டு முறை பூச்சிமருந்து அடிக்க வேண்டிய அவசியம் வரும். இப்படியாக மருந்து செலவு மட்டுமே ஆயிரக்கணக்கில் வருகிறது.

இவற்றைத்தவிர, விதைநெல் செலவு, நிலத்தை உழும் செலவு, நாற்று விட, நாற்று அரிக்க, நடவு வயலை ஓட்டிப்போட, நடவு தினத்தன்று சேறு அடிக்க, வரப்பு வெட்ட, நட்டபிறகு முதல் களை எடுக்க, இரண்டாம் களை எடுக்க, பூச்சி மருந்தடிக்க ஸ்பிரேயர் வாடகை, மருந்தை அடிக்க அடிப்புக்கூலி, அறுப்பு செலவு, நெல்கட்டை வயலிலிருந்து கொண்டு வந்து களத்தில் சேர்க்கவும், நெல் மூட்டைகளை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கவும் டயர் வண்டி வாடகை அல்லது கதிரடிக்கும் மெஷினுக்கு வாடகை... என்று தாவு தீர்ந்துவிடும் அளவுக்கு தினசரி ஒரு செலவு வந்துவிடும். இவை அனைத்தையும் செய்து விளைவிக்கும் நெல்லுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையோ 70 கிலோ முட்டையொன்றுக்கு வெறும் 430 ரூபாய். ஒழுங்காக விளைந்தால் போட்ட காசை எடுத்து, வீட்டுக்கு அந்த வருட சாப்பாட்டுக்கு நெல் வைத்துக்கொள்ளலாம். இல்லையெனில் இருப்பதை சாப்பாட்டுக்கு வைத்துக்கொண்டு அடுத்த வருடம் கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆனால், விளைந்ததையேக் கூட, ஈரப்பதம் அதிகம், கருக்காய் அதிகம் என்று ஆயிரம் நொட்டை சொல்லி விலையைக் குறைத்துவிடுகின்றனர்.

போகட்டும்.. சொல்ல வந்தது என்னவெனில் இவ்வளவு வேலைகளையும் செய்ய எப்போதும் கூலி ஆட்களின் தேவை டெல்டாவில் இருந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கூலி ஆட்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் என்ன...? காலை ஏழு மணிக்கு வயலில் இறங்கி மதியம் மூன்று மணி வரைக்கும் நடவு நட்டால் 50 ரூபாய். காலை முதல் மதிய உணவு நேரம் வரைக்கும் ஏறு ஓட்டினால் 100 ரூபாய். காலை டூ மதியம் களை பறித்தால் 30 ரூபாய். நூறு முடிச்சுகள் அடங்கிய ஒரு கட்டு நாற்றரித்தால் 20 ரூபாய். வரப்பு வெட்ட 80 ரூபாய். நூறு குழி(ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பகுதி..) நிலத்தில் அறுவடை செய்தால், கூலியாக முப்பது மரக்கால்(ஒரு மூட்டையும் ஆறு மரக்காலும்)நெல்... இப்படி சகலவிதமான விவசாய வேலைகளுக்கும் நூறு ரூபாய்க்கும் குறைவான கூலியே தரப்படுகிறது(இந்த வருடம்தான் இவ்வளவு கூலி. இதற்கு முந்தைய வருடங்களில் இதைவிட குறைவு..). இதற்கு மேல் தர முடியாது என்பது அதிர்ச்சியான யதார்த்தம்.

ஏனெனில் நெல் உள்பட எந்த ஒரு விவசாய விளைபொருளுக்கும் நல்ல விலை கிடைப்பதில்லை. விவசாயி விளைவித்தப் பொருளுக்கு அவனால் விலை நிர்ணயிக்க முடியாது. தனியார் வாங்கினாலாலும், அரசு வாங்கினாலும் நெல்லின் விலை மட்டும் ஏறுவதேயில்லை. பெரும்பாலான குறு விவசாயிகள், விவசாயம் செய்யாமல் நிலத்தை சும்மாப்போட்டால் ஊருக்குள் அவமானம் என்று நினைத்துதான் கடன் வாங்கியேனும் வெள்ளாமைப் பார்க்கின்றனர். குறைந்த அளவு நிலம் படைத்த பலபேர் விவசாய கூலிகளாகவும் இருக்கின்றனர் என்பதால், இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரியும். இதற்கு மேல் கூலி தருவதால் உண்டாகும் நஷ்டங்களை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். இப்படி பொருளாதார ரீதியாக ஒரு அடி கூட முன்னேற்றாத இந்த தொழிலிலிருந்து விவசாயக் கூலிகள் வெளியேற நினைப்பது இயல்பானது.

சமூகக் காரணம்: இதுதான் முக்கியமானது. விவசாயக் கூலிகள் கிடைக்காமல் போவதன் அதிகபட்சக் காரணம் இதுதான்.

டெல்டா மாவட்ட விவசாயிகளை சிறு, குறு விவசாயிகள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இவர்களில் ஒன்று அல்லது இரண்டு ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் குறு விவசாயிகளின் எண்ணிக்கைதான் அதிகம். இந்த இரண்டு பிரிவினரின் எண்ணிக்கையை விட, நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்த விவசாய கூலிகளில், 90% விழுக்காட்டினர் தலித் மக்கள்தான். ஆதிக்கசாதியினரின் வயல்களில் நடவு முதல் அறுப்பு வரைக்கும் அனைத்துக் கூலி வேலைகளையும் பார்ப்பது இந்த தலித்துகள்தான்.

காலங்காலமாக கூலி வேலைப் பார்த்தாலும் வயிற்றுப்பாட்டுக்கே காணாது. இன்னொரு புறம் 'பறப்பய..' என்றும், 'பள்ளப்பய..' என்றும், 'வளப்பய..' என்றும் வார்த்தைக்கு வார்த்தை வன்சொற்களைக் கேட்க வேண்டியிருக்கும். வருமானத்துக்கு சாதி இந்துக்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழலில் எதிர்த்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. இப்படி எதிர்க்கும் ஊர்களில் ஆதிக்க சாதியினர் செய்யும் முதல் காரியம், 'தலித்துகளை உள்ளூர் வேலைகளுக்குக் கூப்பிடுவதில்லை' என்று ஊர் கட்டுப்பாடு போடுவதுதான். பட்டிணிபோட்டு பணிய வைக்கும் பண்டய தந்திரம்தான்.. என்ன செய்வது.. பசிக்கும் வயிறு முன்னால் சகலமும் மண்டியிட வேண்டியிருக்கிறதே.. அவர்களால் செய்யக்கூடிய ஒரே விஷயம், எப்பாடுப்பட்டாவது தனது அடுத்தத் தலைமுறையை அந்த ஊரிலிருந்து இடம் பெயர்த்து நகரம் நோக்கிக் கொண்டு சென்றுவிடுவதுதான்.

படித்து வேலை கிடைத்து நகரம் நோக்கி செல்வது ஒரு பக்கமிருக்க, இந்த மிருகங்களின் ஆதிக்க வன்மத்திலிருந்து தப்பிக்க கூலி வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று நகரம் நோக்கி இடம் பெயர்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் 2% விவசாயக் கூலிகள், கட்டடத் தொழிலாளர்களவும், சாயப்பட்டறை தொழிலாளர்களாகவும் டெல்டா மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்கின்றனர் என்கிறது சில வருடங்களுக்கு முந்தைய ஆய்வொன்று.

இப்படியாக விவசாய கூலி ஆட்களின் தட்டுப்பாட்டின் காரணமாக எல்லா விவசாய வேலைகளிலும் தேக்கம் ஏற்படுகிறது. கடந்த வருடம் டெல்டாப் பகுதியில் நடவு நட ஏற்பட்ட ஆள் தட்டுப்பாடு காரணமாக, நிலா வெளிச்சத்தில் இரவு நடவுகள் கூட நடந்தன. இப்போதும், பல கிலோமீட்டர் தூரம் தாண்டிச்சென்று, ஏதோ ஒரு ஊரிலிருந்து ஆட்களை டிராக்டரில் கூட்டி வர வேண்டிய நிலைமை. என்னதான் எல்லாவற்றிற்கும் இயந்திரம் வந்துவிட்டதாக சொன்னாலும் எல்லா வேலைகளுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது.

சாலையிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் போக, வர வழி உள்ள வயல்களுக்கு மட்டுமே இயந்திரங்கள் உதவும். உள்ளடங்கி இருக்கும் வயல்களுக்கு இவை செல்ல இயலாது. அங்கு மனித உழைப்பே பிரதானம். இப்போது ஏறு ஓட்டவும், கதிரடிக்கவும், நாற்று நடவும் இயந்திரம் வந்திருக்கிறது. இதில் நாற்று நடும் இயந்திரம் இன்னும் பரவலாகவில்லை. எக்காலத்திலும் இயந்திரத்தால் செய்ய முடியாத மனித உழைப்பால் மட்டுமே முடியக்கூடிய பணிகள் மட்டுமே விவசாயத்தில் ஏராளமாக உள்ளன.

என்ன செய்யலாம்..?: 1. முதலில் நிலம் அதிகமாக இருக்கிறது என்பதால், 'நான் கூலி ஆட்களை வைத்து மட்டுமே வேலை வாங்குவேன். சேற்றில் கால் வைக்க மாட்டேன்..' என்ற மனநிலையை மாற்றிக்கொண்டு அனைவரும் உழைக்க வேண்டும். ஏனெனில் இப்போது ஐந்து ஏக்கருக்கும் மேல் இருக்கும் விவசாயிகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர், மேம்போக்கான வேலைகளை செய்துகொண்டு, கார்வார் செய்வதோடு சரி.. உழைப்பதில்லை. இப்படியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம், விவசாயக் கூலிகளின் இடப்பெயர்வு மறுபுறம் என்று இரண்டும் எதிர்விகிதத்தில் இருப்பது ஆபத்தானது.

2. விவசாய விளைபொருளுக்கான விலையை நிர்ணயிக்கும் உரிமை, அதனை உற்பத்தி செய்த முதலாளிகளான விவசாயிகளிடமே இருக்க வேண்டும். இதன் பின் விளைவாக விவசாயக் கூலிகளுக்கான சம்பளம் உயரும்.

3. 'யாரும் சாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது. எல்லோரும் சமமாம நடத்தப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் தலித்துகள் இடம் பெயர்வது தடுக்கப்படும்' என்று எழுதும்போதே காமெடியாக இருக்கிறது. 'இந்து சமய அறநிலையத்துறை'க்கு தனி அமைச்சர் வைத்திருக்கும் இந்த அரசாங்கத்திடம் இதை எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் நிரந்தர தீர்வுக்கான வழி இதுதான். அதாவது நிரந்தர தீர்வென்றால், ஆதிக்க சாதியினரின் வயல் வேலைகளுக்கு தலித்துகளை தடையில்லாமல் கிடைக்கச் செய்யும் செயல்திட்டமல்ல. அவர்களின் மண்ணுரிமையையும், வாழும் உரிமையையும் காக்கும் திட்டம்.

நான் பைத்தியம்.. அப்ப நீங்க..?


வியர்வை பிசுபிசுக்கும் பேச்சுலர் அறையின் நெடியிலிருந்து தப்பித்து தனி அறையில் அடைக்கலம் புகலாம் என முடிவு செய்து, மேன்ஷன் அல்லாத புதிய அறையென்றை நான் தேட ஆரம்பித்திருந்த செவ்வாய்கிழமையன்று அவளை சந்தித்தேன்.

அன்றுதான் டாக்டர் ராமதாஸ், 'இந்த அரசுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அதற்காக பா.ம.க. வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்காது..' என்று வெளியிட்ட அறிக்கை தினத்தந்தியின் முதல் பக்கத்தில் வெளிவந்தது. 'டாக்டர் பின்றாரே..' என்று யோசித்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் கையில் லெதர் பேக்குடன் அவள் என்னைக் கடந்து சென்றாள்.

காலையில் தலையில் வைத்த மல்லிகை லேசாக கறுத்துப் போயிருந்தது. அவளை எனக்கு அறிமுகமில்லை. ஒரு தெரு நாய், இன்னொரு தெரு நாயுடன் சினேகம் வைத்துகொள்ள முன் அறிமுகத்தை எதிர்பார்க்காதபோது நான் மட்டும் ஏன் எதிர்பார்க்க வேண்டும்...?

சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐஸ்கிரீமுக்கு நண்பனை துட்டுக் கொடுக்கச் சொல்லிவிட்டு அவளிடம் பேசுவதற்காகப் போனேன். அப்போது அவள் திருவல்லிக்கேணி ரத்னா கபே அருகில் தன் மென் பாதங்களால் நடந்துபோனாள். சாம்பாரின் மணம் காற்றில் பரவிக்கொண்டிருந்தது. தயக்கமேதுமின்றி அவளை 'எஸ்சூஸ்மீ..' என்று அழைத்ததும், 'என்ன வேண்டும்..?' என்பதுபோல் ஒரு லுக் விட்டாள்.

"உங்களை எனக்கு இதுக்கு முன்ன, பின்ன தெரியாது. ஆனா, இப்ப தெரிஞ்சுக்க ப்ரியப்படுறேன்"

"நீங்க ஏன் என்னை தெரிஞ்சுக்கனும்..?"

நாய் உதாரணம் இவளுக்குப் பிடிக்குமோ என்னவோ..?

"இல்லீங்க. நான் இப்போ மேன்ஷன்ல தங்கியிருக்கேன். சீக்கிரமா கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணி, அதுக்கான ஆயத்தமா மேன்ஷனை காலி செஞ்சுட்டு தனியா ரூம் எடுத்து தங்கலாம்னு ரும் பார்த்துகிட்டிருக்கேன்.."

"ஸ்டாப்..ஸ்டாப்.. என்ன வேணும் உங்களுக்கு.."

'ரத்னா கபேயில் ஒரு பிளேட் சாம்பார் இட்லி' என்று சொன்னால் வாங்கிக்கொடுத்துவிடவா போகிறாள்..?

"கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நான் கல்யாணம் பண்ணிக்கப்போறதா சொன்னேன்ல.. அது வந்து லவ் மேரேஜாதான் இருக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, யாருமே என்னை லவ் பண்ண மாட்டேங்குறாங்க. அதாங்க வெட்கத்தை விட்டுட்டு ஒவ்வொரு பொண்ணா கேட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதையும் கூட இன்னிக்குதான் முடிவு செஞ்சேன். முதல் போணி நீங்கதான்.."

'முதல் போணி' என்ற வார்த்தையைக் கேட்டதும், சட்டென முகம் சுளித்தாள். அப்போது அவள் மொபைல், 'ஜூன் போனால் ஜூலைக்காற்று..' என்று அரிய பொது அறிவுத்தகவலொன்றை சொல்லியது. புதிய மோட்டரோலா மொபைல். வாய் பேசுவது மூக்குக்கே கேட்காதவாறு முணுமுணுத்தவள், "ஐ வில் கால் யூ பேக்.." என்றாள்( 'எப்படியும் நீ மிஸ்டு கால்தான் கொடுக்கப்போறே.. அந்தப்பயதான் கூப்பிடப்போறான். பின்ன ஏன் இந்த பில்-டப்..?')

"நானும் கூட மோட்டரோலாதாங்க வச்சிருக்கேன். பட், சோனில சவுண்ட்ஸ் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.." என்று சொல்லியபோது அவள் நின்றுவிட்டாள். அது கோசா ஹாஸ்பிட்டல் பஸ் ஸ்டாப். வரிசையாக பட்டிணப்பாக்கம் பஸ்களாக வந்தது. எதிர்திசையில் வரும் பஸ்களை அவள் புறக்கணித்தாள்.

"நீங்க எதுவுமே சொல்லலியே.."

"நீங்க என்ன மெண்டலா..?"

எவ்வளவு தாமதமாக கேட்கிறாள்..? ரத்னா கபே பக்கத்தில் கேட்டிருக்க வேண்டிய கேள்வியை அரை கிலோ மீட்டர் தள்ளிவந்து கேட்கும் அளவுக்கு அவள் புத்தி ஏன் இவ்வளவு மெதுவாக வேலை செய்கிறது..?

22C வந்ததும் அதில் ஏறினாள். நானும் ஏறலாம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் என்னை தமிழ்மணத்தில் ஸ்டார் ஆக்கிவிட்டதாக தகவல் வந்தது. 'எப்படியும் அங்கு நாலு பிஹர்கள் கிடைக்காமலா போய்விடும்..' என்ற நப்பாசையில் நானும் வந்துவிட்டேன். சொல்லுங்கள் நண்பர்களே.. நான் பைத்தியமா..?

10/9/07

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!பெண்ணுரிமைப்பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது இங்கு. 'ஏன் கடவுள் முதலில் ஆதாமைப் படைத்தார்..? ஏவாளை முதலில் படைத்து, பின் அவளின் விலா எழும்பிலிருந்து ஆதாமை படைத்திருக்கக்கூடாதா..?' என்பதான கருத்துக்கள் கூட புதிதில்லைதான். 'ஆண்தான் முதலில்' என்ற கருத்தாக்கம் மனதெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆண்களால் உருவாக்கப்பட்ட வரலாறுகள் அப்படித்தான் இருக்கும். அதில் வியப்பேதும் இல்லை. அந்த வரலாற்றின் வீதிகளிலிருந்து, நடைமுறை வாழ்வு வரைக்கும் பெண் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தின் தோற்றுவாயாக இருப்பது குடும்பம் என்னும் அமைப்புதான்.

அதிகாலை தூக்கத்தின் சுகம்(?) குறித்து சிலாகிக்கும் கவிதைகள், கதைகள் நிறைய படிக்கிறோம், சொல்லக் கேட்கிறோம். ஆனால், 95 % பெண்கள் அதிகாலை தூக்கம் துறந்து பல தலைமுறைகளாகிவிட்டது. கிராமமென்றால் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து, வீட்டு முற்றம் பெருக்கி, கோலம் போட்டு, பாத்திரம் விளக்கி, மாட்டுக் கொட்டகை கூட்டி, சாணம் அள்ளி எருக்குப்பையில் போட்டு, குடிக்க நல்ல தண்ணீரும், புழங்க உப்புத்தண்ணீரும் எடுத்து வைத்து, பிள்ளை மற்றும் கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து... அவள் நிமிரும்போது காலை சாப்பாட்டு நேரம் வந்து நிற்கும். அப்போதும் குடும்பத்தினரின் பசியாற்றிய பின்னரே தன் வயிற்றைப் பற்றி சிந்திக்கிறாள்.

நகரமென்றால் மேற்சொன்ன வேலைகளில் பெரும்பாலானவையோடு, பிள்ளைகளைப் பள்ளிக்கும், கணவனை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் சேர்ந்துகொள்கிறது. அவர்களுக்குண்டான காலை, மதிய உணவை தயார்செய்துகொடுத்துவிட்டு நிமிரும்போது அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் ஏதோ ஒன்று குடும்பத்தில் காத்திருக்கிறது. தன்னைப்பற்றி சிந்திக்க விடாமல், எப்போதும் குடும்பத்தின் நலன் நோக்கியே சிந்திக்கும் இயந்திரமாக பெண்ணை மாற்றி வைத்திருக்கிறோம்.

வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து உணவு உண்ணுகிறோம். எல்லோருக்கும் பறிமாறிவிட்டு தானும் அமர்ந்து சாப்பிடுகிறாள் அம்மா. சாப்பிட்டபிறகு தகப்பனும், மகனும் சாப்பிட்டத் தட்டை அப்படியே வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அம்மாவும், மகளும் அனைத்து எச்சில் தட்டுகளையும் எடுத்து உள்ளே வைக்கின்றனர்.

நெருங்கிய உறவினர் வீட்டுக்குக் கணவன், மனைவி இருவரும் செல்கின்றனர். சாப்பிட்டு முடித்ததும் கணவன் கை கழுவச் சென்றுவிடுகிறான். மனைவி மட்டும் தான் உண்ட இலையை/தட்டை தானே எடுக்கும்போது, அது விருந்தினர் வீட்டின் பெண்களுக்கும் இயல்பானதாகவே தெரிகிறது. ஏனெனில் அவர்கள் நாளை இன்னொரு உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது இதையேதான் செய்வார்கள்.

கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் ஹோட்டலொன்றில் சாப்பிடுகின்றனர். அது, சாப்பிட்டவர்களே இலையையும் எடுத்துப்போட வேண்டிய வழக்கம் உள்ள ஹோட்டலாயின், மனைவிதான் அனைத்து இலைகளையும் எடுத்துப் போடுகிறாள்.

இவை அனைத்தையும் நாம் இயல்பென ஏற்றுக்கொள்கிறோம். பெண்ணையும் அப்படியே நம்ப வைத்திருக்கிறோம். இயல்பை மீறும் பெண்களை திமிர் பிடித்தவளென்கிறோம். நிலவி வரும் நியதிகளை மீறி ஒரு பெண், இயல்பான தன்னுணர்வோடு ஒரு முடிவை எடுக்கும்போது, அது குறித்து அவளைக் குற்றவுணர்வடையச் செய்யும்விதமாகவே சுற்றத்தின் நடவடிக்கைகள் உள்ளன.

"காலம், காலமாக பெண் சமைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், ஒரு நாள் சமைக்காவிட்டாலும், 'என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இல்லையோ..' என்று குற்றவுணர்வடைகிறேன்.." என்று சமீபத்திய பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் கவிஞர் இளம்பிறை. இது நுணுக்கமானது. 'இன்னென்ன வேலைகள் பெண்ணுக்கானவை. அதை செவ்வனே செய்து முடிக்கவில்லையெனில் நான் குற்றம் செய்தவளாகிறேன்..' என்று பெண்ணையே உணர வைப்பதில்தான் சூது ஒழிந்திருக்கிறது.

இந்த கட்டுப்பாடுகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்றுத்தரவும் பெண்களையே பழக்கி வைத்திருக்கிறோம். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் ஆண் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பெண் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீதி போதனை வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. பத்து, பன்னிரண்டு வயதில் ஆண் பிள்ளைகள் கவலைகளற்று விளையாடும்போது, பெண் பிள்ளைகள், சின்னச்சின்ன வீட்டு வேலைகளுக்குப் பழக்கப்படுகின்றனர். உடையணிவது, உண்ணுவது, எத்தனை இஞ்ச் காலை அகற்றிவைத்து நடப்பது, எப்படி உட்காருவது, என்ன விதமாக அழுவது, எந்த டெஸிபலில் சிரிப்பது... என்று அனைத்துக்கும் பெண்ணுக்கென்று தனியான முன் தீர்மானங்களை வைத்திருக்கிறது குடும்பம். அவள் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்வது என்பதை தீர்மானிப்பதும் குடும்பம்தான். நஞ்சை, புஞ்சை என்பவை எப்படி அசையா சொத்துக்களோ, அதுபோல பெண் என்பவள் குடும்பத்தின் அசையும் சொத்து.. அவ்வளவே. ஆனாலும், அன்பு, பாசம், கருணை, கடமை, பொறுப்பு என்ற சர்க்கரை கயிறுகளால் பெண்ணை, குடும்பத்தோடு பலமாக இறுக்கி வைத்திருக்கிறோம்.

து காதலின் காலமென்று சிலாகிக்கிறோம். இருந்தாலும் இந்திய சமூகத்தில் பெற்றோர் பார்த்து வைக்கும் ஏற்பாட்டு திருமணங்களே இன்றளவும் அதிகம் நடக்கின்றன. அத்தகையை ஏற்பாட்டுத் திருமணங்களில், தனக்கு வரப்போகும் மனைவி எப்படிப்பட்ட புற/அக அழகுள்ளவளாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஆண்தான். இதை, பெண்ணின் தரப்பில் அவளது பெற்றோரே தீர்மானிக்கின்றனர். திருமண விஷயத்தில், ஆணை விட பெண் உயரம் குறைவாக இருக்க வேண்டும் என்பதில் கிட்டத்தட்ட எல்லோருமே உறுதியாக இருக்கின்றனர். மனைவி உயரமாகவும், கணவன் குள்ளமாகவும் உள்ள தம்பதிகளை நான் வெகு அரிதாகவேப் பார்த்திருக்கிறேன். காதலில் கூட இந்த உயரம் ஒரு காரணியாக இருக்கிறது. ஆண், பெண் பேதத்தின் ஆதி சாட்சியாக இதைச் சொல்லலாம்.

இந்த பேதம் உயரத்தோடு மட்டும் நிற்பதில்லை... மணமகனை விட மணமகள் ஒரு படியேனும் குறைவாகப் படித்திருக்க வேண்டும், அவனை விட அவள் நூறு ரூபாயேனும் குறைவான சம்பளம் வாங்க வேண்டும், அவனது வயது அவளது வயதை விட இரண்டு, மூன்று வயதாவது அதிகமாக இருக்க வேண்டும்... என்றெல்லாம் இந்தக் கட்டுப்பாடுகள் நீள்கின்றன. திருமணத்திற்குப் பிறகு எந்த கணவனும் வேலைக்குப் போகாமல் இருப்பதில்லை.

மண வீடுகளில் பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் நிறைய கேள்விகள் எனக்குள் துடிக்கும். அந்தப்பெண் இதுவரை, தான் வளர்ந்த வீட்டை, பழகிய உறவை, சொந்தங்களை, நண்பர்களை, ஓடித்திரிந்த மண்ணை, மாற்றிக்கொள்ள வேண்டும். குல தெய்வத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இனி அவளுக்கான அடையாளம் அவளது பெற்றோர் இல்லை.. கணவன்தான். ஒரு நாள் இடம்மாறி படுத்தால் தூக்கம் வருவதில்லை. எனில் காலமெல்லாம் தன் அனைத்து அடையாளங்களையும் மாற்றிக்கொண்டு வாழப்போகும் அந்தப்பெண்ணின் மனநிலை என்ன...? எங்கேயோ, எப்போதோ 'வீட்டோடு மாப்பிள்ளைகளாகும் ஒரு சிலரை ஏளனப்பார்வை பார்க்கிறோம். வீட்டோடு மாப்பிள்ளையானால் ஏற்படும் சங்கடங்களை 'தலைகீழ் விகித'மாக்குகிறோம். 'சொல்ல மறந்த கதை' என்கிறோம். ஆனால், 'வீட்டோடு மருமகள்'களின் சங்கடங்களை நாம் ஒருபோதும் யோசித்ததில்லை. அந்த வார்த்தை பிரயோகமே நமக்கு புதியதாக இருக்கிறது.ப்போதிருக்கிற நமது குடும்ப அமைப்பு பெண்ணின் சித்ரவதைக்கூடமாக இருக்கிறது. சொல்லாலும், செயலாலும், கருத்தாலும் எல்லா கணப்பொழுதிலும் அவள் மீது வன்கொடுமை ஏவப்படுகிறது. அனைத்து உரிமைகளும் மறுக்கப்படும் குடும்பத்திற்குள்ளிருந்துதான் பெண்ணுரிமை குரல்கள் உரத்து ஒலிக்க வேண்டும். இதன் பொருள் குடும்பம் என்னும் அமைப்பை உடைப்பது அல்ல. அது வலுவான செண்டிமெண்ட் சிமெண்ட் வைத்து கட்டப்பட்டிருக்கும் நிறுவனம். அதை உடைப்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியம் இல்லை. தவிரவும், கூடி வாழ்தலின் மிச்சமாக மனித சமூகத்தில் எஞ்சி நிற்கும் ஒரு சில அடையாளங்களில் குடும்பமும் ஒன்று. அது மறு சீரமைக்கப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சம உரிமையுள்ள குடும்பமே நமக்குத் தேவையானது.

மேற்சொன்னவையெல்லாம் குடும்பத்திற்குள் நடப்பது. சமூக வீதிகளில் மட்டும் பெண்கள் உரிமைகளோடு இருக்கிறார்களா என்ன..? உரிமைகளை விடுங்கள்.. குறைந்தபட்ச சுதந்திரமாவது இருக்கிறதா..? இரவு பத்து மணிக்கு ஒரு பெண் சாலையில் தனித்து நடந்துபோனாள் நல்ல எண்ணத்தோடு பார்ப்பவர்கள் குறைவு. செல்போனில் சத்தமாக சிரித்துப் பேசினாள் சில புதிய பட்டங்கள் அவளைத் தேடிவரும். சாலையில் நடக்கும் ஒவ்வொரு பெண்ணையும் குறைந்தபட்சம் இரண்டு கண்களாவது உற்றுப் பார்க்கின்றன. எந்த ஒரு பொது இடத்திலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரு பெண் காத்திருப்பதன் சங்கடங்களை பெண்கள் நன்றாக அறிவார்கள். ஒரு இளம்பெண், தனியாகவோ, தோழிகளோடோ டீ கடைக்குச் சென்று டீ குடிப்பது இயல்பென ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எல்லா இடங்களிலும் ஆணின் சார்பு பிராணியாகவே பெண்ணை வைத்திருக்கிறோம்.

இன்னமும் பத்திரிகைகளில் ஆண் சமைப்பதென்பது நகைச்சுவையாகவே வருகிறது. எப்போதும் 'அழகி'கள் மட்டுமே பிடிபடுகிறார்கள். 'அழகன்'கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது. விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளாக பெண்ணுரிமை பேசுபவர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். மற்றவர்கள் 'மூளை வீங்கிகள்' என்று ஏளனம் செய்யப்படுகின்றனர். 'ஒரு பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும்..' என்று இப்போதும் சினிமா நாயகர்கள் உபதேசம் செய்கிறார்கள். "பொம்பளை உனக்கே இவ்வளவு இருக்குன்னா.. ஆம்பளை எனக்கு எவ்வளவு இருக்கும்..?" என்ற திமிர் வார்த்தைகளை ஏறத்தாள எல்லாப் பெண்களுமே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் கேட்க நேர்ந்திருக்கும். ஆம்பளை என்பதால் அவனுக்கு உடம்பில் உபரியாக என்ன இருக்கப்போகிறது - சில உறுப்புகளைத் தவிர..? இந்த வார்த்தை சவடால் ஆண்களின் ஜீன்களில் ஊறியிருக்கிறது.

குடும்பம், அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தன் உரிமைகளை உரத்தக் குரலில் கேட்கும் பெண்களை அடக்கிப் போடுவதற்கு ஆண்கள் எடுக்கும் ஆயுதம் ஒழுக்கம். பெண்ணின் ஒழுக்கத்தால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்பதுபோலவும், பெண்ணின் ஒழுக்கம் கெட்டால் சகலமும் கெட்டுவிட்டதாகவும் இவர்கள் அடிக்கும் கொட்டம் மிகுந்த ஆபாசமாக இருக்கிறது. பெண்கள், எத்தனை ஆண்களிடம் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சுற்றமே தீர்மானிக்கிறது. ஒரு ஆண், காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டால், அடுத்தடுத்து காதலிக்கலாம்.. தப்பில்லை.. அது இயல்பானது. அதையே ஒரு பெண் செய்தால், அவளுக்கு பெயர் வேறு. (தான் காதலித்த பெண்களுக்கெல்லாம் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் 'ஆட்டோகிராஃப்' சேரனின் கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை கற்பனை செய்து பார்க்கச்சொல்லி முன்பொருமுறை ஞாநி எழுதியிருந்த கட்டுரை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது).

இந்த சமூகத்தின் சகல ஒழுக்க விதிகளும், பெண்ணின் தொடையிடுக்கில் ஒழித்து வைக்கப்பட்டிருப்பதாக, முன்பொருமுறை பூங்குழலி சொன்னது மிகச்சரியானது. இளம்பிராயத்திலிருந்து அவ்விதமே பெண் பிள்ளைகள் வளர்க்கப்படுகின்றனர். ஒரு பெண், தான் ஒழுக்கமுள்ளவள் என்று சுற்றத்திற்கு பறைசாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். "பொம்பளைப்பிள்ள கண்டமேனிக்கு டிரஸ் பண்ணிட்டுப்போறது.. அப்புறம் 'அவன் கிண்டல் பண்றான், இவன் கையைப் பிடிச்சு இழுக்குறான்'னு சொல்றது.." என்ற பொதுப்புத்தியின் வார்த்தைகள் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை. ஒழுக்கம், பெண்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறதா என்ன..? ஆண்களுக்கு உறுப்புகளே இல்லையா..? சமயத்தில் ஏன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற எரிச்சலான கேள்வியும் வருகிறது. 'சமூகம் என்பது மனித இனத்தின் கூட்டுத் தொகுப்பு. கூட்டு வாழ்க்கைக்கென்று ஒரு வாழ்வியல் நெறி இருக்கிறது..' என்ற பதில் வருமாயின் அந்த நெறி ஆண்களைக் கட்டுப்படுத்தாதா..?

பெண்ணை ஒடுக்குவதில் மதங்களின் பங்கு மகத்தானது. '1,800 ஆண்டுகளுக்கு முன்பே குர்-ஆனில் பெண்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன..' என்று இஸ்லாமிய சகோதரர்கள் பெருமைப்பேச்சு பேசுகின்றனர். ஆனால், உயிரற்ற பிணத்தை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கும் அவர்கள், பெண்ணை அனுமதிப்பதில்லை. வழிபாட்டு உரிமைக்கூட பெண்ணுக்கு மறுக்கப்படுகிறது. அதே குர்-ஆனில்தான் மணப்பெண்ணுக்கு, மணமகன் மஹர்(வரதட்சணை) கொடுத்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன..? பெயருக்கு 1,000 ரூபாய், 2,000 ரூபாய் பெண்ணுக்கு மஹராகக் கொடுத்துவிட்டு, பெண் வீட்டாராரிடமிருந்து அதிக அளவுக்கு வரதட்சனை வாங்குகின்றனர்.

திருமணம் நடந்தபோது உடனிருந்த பெரியவர்களின் முன்னிலையில்,சீரான இடைவெளியில் மூன்று முறை தலாக் சொல்ல வேண்டும். இதைத்தான் முத்தலாக் என்கிறது குர்-ஆன். ஆனால், நடைமுறையில் தொடர்ச்சியாக மூன்று முறை தலாக் சொன்னால் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டதாக அர்த்தம். இப்படித்தான் நடக்கிறது.

இந்து மதம், பெண்ணுரிமை மறுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவரும் ஒழுக்கக்கேடானவர்கள்' என்று கருத்துச் சொல்கிறார் இந்து மத மடாலயமொன்றின் தலைவர் இருள்நீக்கி சுப்ரமணி. எல்லாப் புராணங்களிலும் பெண்கள், ஆண்களின் அடிமைகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இப்போது கூட சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை விடுவது குறித்தான சர்ச்சைகள் கேரளாவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

'கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிச் சுவர் (glass-ceiling ) ஒன்று பெண்ணைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் மேலே செல்லும்போதுதான் அது தலையில் இடிக்கும். அப்போதுதான் சுவர் இருப்பதையும் உணர முடியும்' என்று ஒரு தியரி சொல்வார்கள். ஆனால் நம் ஊரில் பெண்களுக்கு எதிராக கண்ணுக்கு தெரிந்தே கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றை கண்ணாடிச் சுவர் போன்று மென்மையானவையாக பெண்களை உணர வைத்துக்கொண்டிருக்கிறோம்.

குடும்பம், சமூகம், மதம் என்று பெண்ணை அடக்குவதில் மட்டும் எல்லோரும் ஒரே விதமாகத்தான் உள்ளனர். ச. தமிழ்செல்வன் சொல்வதைப்போல, 'குடும்பம் என்னும் பலிபீடத்தில் காலங்காலமாக தன்னை விருப்பத்தோடு பலி கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் பெண்'. இதை மாற்றுவதற்கான குறைந்தபட்ச எண்ணத்தை மனதுக்குள் உருவாக்கி, அதை தனது குடும்பத்திற்குள் மட்டுமாவது செயல்படுத்திப் பார்க்காத வரைக்கும் நாம் அனைவரும் குற்றவாளிகள்தான். தீங்கிழைப்பது மட்டுமல்ல.. அதை வேடிக்கை பார்ப்பதும் குற்றம்தானே..!