18/12/06

கனம் கோர்ட்டார் அவர்களே...இது நியாயமா..?

'கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கல்லூரியைவிட்டே சஸ்பெண்ட் செய்யலாம்..' என்று ஒரு அரைவேக்காட்டு தீர்ப்பை வழங்கியிருக்கிறது கேரள கோர்ட்.மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மயக்கத்தில் இருப்பதே நல்லது என்று அதிகார வர்க்கம் நினைப்பதாலோ என்னவோ இந்த விஷயம் இதுவரை பெரிதுபடுத்தப்படவில்லை.

எர்ணாகுளம் அருகேயுள்ள மாழிங்கரை எஸ்.என்.எம். கல்லூரி சார்பாக,'எங்கள் கல்லூரியில் மாணவர் அமைப்பு என்ற பெயரால் சில மாணவர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுவதால் பிரச்னை ஏற்படுகிறது.அமைதியான முறையில் கல்லூரி நடத்த முடியவில்லை..எனவே மாணவர் அமைப்புகள் அரசியலில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்.." என்று கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பில்தான் இந்த கழிசடை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவனாய் இருக்கும் வயதில்தான் ஒரு மனிதன் தன் வாழ்நாளின் சிந்தனை மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கிறான்.முடிவெடுக்கும் வேகமும்,செயல்படுத்தும் தைரியமும் உள்ள வயதும் அதுதான்.இந்த வயதில் அரசியலை தெரிந்து கொள்ளாமல் வேறு எந்த வயதில் தெரிந்து கொள்வது...?

நீங்கள் விரும்பினாலும் ,விரும்பாவிட்டாலும் உங்களை ஒரு நிழல்போல தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது அரசியல்.அதிலிருந்து நீங்கள் விலக முடியாது.விலக நினைப்பதும் புத்திசாலிதனம் அல்ல.ஆனால் வெகு காலமாக, 'அரசியல் ஒரு சாக்கடை,குப்பைத்தொட்டி..' என்றெல்லாம் சொல்லி,மக்களை பயமுறுத்தி,பூச்சாண்டி காட்டப்படுகிறது.அதன் விளைவாக இன்று மாணவர்களில் அதிகபட்சம் பேர் குறைந்த பட்ச அரசியல் அறிவற்றவர்களாக இருக்கின்றனர்.'முதல் மதிப்பெண்..நல்ல வேலை..கை நிறைய சம்பளம்..' என்று மட்டுமே மாணவர்களின் மண்டைக்குள் ஏற்றப்படுகிறது.இப்படியான குறுகிய வட்டத்திற்குள் வளரும் ஒரு இளைய தலைமுறையினர் out of box சிந்திப்பதேயில்லை.இந்த மந்த புத்தியுடைய மக்களை வார்த்தெடுப்பதும்,பாதுக்காப்பதும்,தொடர்ந்து பராமரிப்பதும்தான் அதிகார வர்க்கத்தின் பணி.அதன் ஒரு பகுதியாகவே தற்போதைய நீதிமன்ற தீர்ப்பையும் கருத வேண்டியுள்ளது.

கல்வி என்பதை வர்த்தக சரக்காக்கி,பணம் படைத்தவனுக்கு வசதிகள் நிறைந்த கல்வியும்,ஏழைக்கு எந்த வசதியுமற்ற நாலாந்தர கல்வியும் வழங்கப்படுகிறது.தங்கள் விளைநிலத்தை விற்று,உழைப்பை மூலதனமாக்கி, பிள்ளைகளை படிக்க வைக்கப் பாடுபடும் எளியவர்களால் அதிகபட்சம் அரசு கலைக்கல்லூரியைக் கூட தாண்ட முடியவில்லை.இது யதேச்சையானது அல்ல.இருக்கும் வர்க்க கட்டமைப்பைப் பாதுகாக்கும் வஞ்சக சூழ்ச்சி இதற்குப் பின்னால் ஒழிந்திருக்கிறது.இதை கேள்வி கேட்கும் மனநிலை வேண்டுமாயின் அரசியல் அறிவு அவசியமாகிறது.

'மாணவர்கள் அரசியல் கட்சிகளின் மூலம் செயல்படக் கூடாது என்றுதானே தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது..?அதைவிடுத்து தனிப்பட்ட முறையில் போராடலாமே..?' என்பது ஒரு சாராரின் எதிர்வாதமாக இருக்கலாம்.ஆனால் நடைமுறையில் கல்வி நிறுவன அதிபர்கள் என்பவர்கள் மிகப்பெரிய பண முதலைகளாகவும்,எல்லாவகையான அடக்குமுறை வழிகளையும் கையால்பவர்களாகவும் இருக்கின்றனர்.அவர்களை எதிர்க்க தனி நபர்களால் இயலாது.இந்த இடத்தில் இயக்கம் அவசியமாகிறது.

மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடிய வரலாறும் இந்தியாவில் உண்டு.அஸ்ஸாமில், 'அஸ்ஸாம் கண பரிஷத்' என்ற மாணவர் இயக்கம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பிரபல்ல குமார் மொஹந்தா ஒரு மாணவர்தான்.தமிழகத்தில் திராவிட கழகத்தின் ஆரம்பக்கட்ட எழுச்சி இளைஞர்களால் நிகழ்ந்ததுதான். (மேற்சொன்ன நபர் மற்றும் இயக்கம் இரண்டுமே கொஞ்சம்,கொஞ்சமாக தங்களின் ஆரம்பக்கட்ட கொள்கையின் திரிபு சக்திகளாக மாறிவிட்டது உப வரலாறு..). அவ்வளவு ஏன்..?ஒரு தோளில் ஸ்டெதஸ்கோப் பையும்,ஒரு தோளில் துப்பாக்கி பையும் ஏந்திய மருத்துவக் கல்லூரி மாணவரான சே குவேராதான் புரட்சியாளர்களின் ஆதர்சமாக உருவெடுத்துள்ளார்.

இப்போது தீர்ப்பு வந்திருக்கும் கேரள அரசியலை நிர்ணயித்ததிலும் இளைஞர்களுக்கு தனி வரலாறு உண்டு.சிலி,வியட்நாம்,க்யூபா என்று உலகில் எங்கெல்லாம் கம்யூனிச ஆட்சி மலர்ந்ததோ,அங்கெல்லாம் ஆயுத புரட்சி மூலமே அது சாத்தியமாயிற்று.உலகிலேயே முதன்முறையாக ஓட்டெடுப்பு மூலம் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததும் கேரளாவில்தான். (இதிலும் விமர்சனங்கள் உண்டு.ஆனால் இந்த பதிவின் நோக்கம் அதுவல்ல...). அதில் இளைஞர்களின் பங்கு அதிகம்.இன்றும் அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் கேரள இளைஞர்களின் போராட்டம் குறிப்பிட்டு சொல்லத்தகுந்தது.அதே கேரளாவில்தான் இப்போது இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தனக்கான அரசியலை முடிவு செய்தாக வேண்டும்.'நான் அரசியல் சார்பற்றவன்.நடுநிலைமையுடையவன்' என்பதெல்லாம் பம்மாத்து.சொல்லப்போனால், நடு நிலைமை என்பதே ஒரு மாயவாதம்.'இந்த பேருந்து மதுரைக்குப் போகுமா..?' என்று கேட்டால்,'போகும்,போகாது' என்ற இரண்டில் ஒன்றுதான் பதிலாக இருக்க முடியும்.அதனால் 'சார்பின்மை' என்பது தப்பித்தலின் மாற்று வார்த்தைதான்.கல்வி கட்டணம் முதல் இட ஒதுக்கீடு வரை நீங்கள் மட்டும் மாணவர்களை வைத்து அரசியல் செய்வீர்கள்.மாணவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் 'சார்பின்றி' இருக்க வேண்டும்.எந்த ஊர் நியாயம் இது..?

அந்த கேரள கல்லூரி மாணவர்கள் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டுக்குச் செல்வார்களா..இல்லையா என்பதெல்லாம் தெரியாத நிலையில், இந்த தீர்ப்பை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு நாட்டின் ஏனைய கல்வி நிறுவன முதலைகளும் நீதிமன்றத்துக்குக் கிளம்பிவிடுவார்களோ என்பது என் உப கவலையாக இருக்கிறது.அதனால்,மாணவர்கள் மட்டுமல்ல....அனைவருமே நமக்கான அரசியலை முடிவு செய்யவேண்டிய தருணமிது.

குறிப்பு: இந்த கட்டுரை பூங்கா இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.

13 கருத்துகள்:

நிலவோடை சொன்னது…

நாட்டிற்கு தேவையானதும் அவசியமானதுமான பதிவு

நெருப்பு சிவா சொன்னது…

// 'அரசியல் ஒரு சாக்கடை,குப்பைத்தொட்டி..' என்றெல்லாம் சொல்லி,மக்களை பயமுறுத்தி,பூச்சாண்டி காட்டப்படுகிறது //

ஆரோக்கியமான நபர்கள் வருவதை இந்தப் பூச்சாண்டி பயமுறுத்தி, மேன்மேலும் சாக்கடைவாசிகளே அதிகாரத்தை பட்டா போட்டுக் கொள்ள அடித்தளமிடுகிறது.

கேரள மாணவர் அரசியல் குறித்து விமர்சனம் உண்டெங்கிலும், நல்ல நபர்கள் அரசியலுக்கு இளம் பருவத்திலேயே வருவதையொட்டி உங்களின் இந்த பதிவு வரவேற்கத் தக்கது

நெருப்பு

ஆழியூரான் சொன்னது…

//ஆரோக்கியமான நபர்கள் வருவதை இந்தப் பூச்சாண்டி பயமுறுத்தி, மேன்மேலும் சாக்கடைவாசிகளே அதிகாரத்தை பட்டா போட்டுக் கொள்ள அடித்தளமிடுகிறது.

கேரள மாணவர் அரசியல் குறித்து விமர்சனம் உண்டெங்கிலும், நல்ல நபர்கள் அரசியலுக்கு இளம் பருவத்திலேயே வருவதையொட்டி உங்களின் இந்த பதிவு வரவேற்கத் தக்கது//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா...

பிரபு ராஜதுரை சொன்னது…

'கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கல்லூரியைவிட்டே சஸ்பெண்ட் செய்யலாம்'

இப்படித்தான் தீர்ப்பு என்றால், அது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையினை பறிப்பதாகும். நீங்கள் முழு தீர்ப்பினையும் படிக்காமல், பத்திரிக்கை செய்திகளால் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை கல்லூரி வளாகத்திற்குள் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடுவது என்றிருக்கும்...

ஆழியூரான். சொன்னது…

//'கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கல்லூரியைவிட்டே சஸ்பெண்ட் செய்யலாம்'

இப்படித்தான் தீர்ப்பு என்றால், அது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையினை பறிப்பதாகும். நீங்கள் முழு தீர்ப்பினையும் படிக்காமல், பத்திரிக்கை செய்திகளால் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை கல்லூரி வளாகத்திற்குள் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடுவது என்றிருக்கும்...//

ஆம்.நான் பத்திரிக்கை செய்திகளில் படித்ததை வைத்துதான் எழுதினேன்.பத்திரிக்கைகளில் இருந்த, நான் எழுதாமல் விட்ட தீர்ப்பின் மற்ற வரிகளையும் படியுங்கள்.

//''கல்லூரியில் எந்த மாணவர் அமைப்பும் அரசியலில் ஈடுபட உரிமை கிடையாது.அவ்வாறு மாணவர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டால் இதுகுறித்து கல்லுரி நிர்வாகம் போலீஸில் புகார் செய்யலாம்.இந்த புகார் மீது போலீஸார் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த நடவடிக்கைக்கு டி.ஜி.பி.யே பொறுப்பேற்க வேண்டும்.கல்லூரியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை கல்லூரியை விட்டு டிஸ்மிஸ் செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது..//

நான் படித்த பத்திரிக்கைகளில் இருந்த தீர்ப்பின் முழு விவரங்கள் இவை மட்டும்தான்.இதை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் சொல்லும் தொணி தீர்ப்பில் இருப்பதாக தெரியவில்லை.இருப்பினும் இதுபற்றி வேறு யாருக்காவது மேலதிக விவரங்கள் தெரிந்தால் எனக்கும் தெரியபடுத்துங்களேன்.

ஆழியூரான். சொன்னது…

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பிரபு ராஜதுரை...

கரு.மூர்த்தி சொன்னது…

'கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கல்லூரியைவிட்டே சஸ்பெண்ட் செய்யலாம்'

இப்படி சொல்லிவிட்டால் எங்கள் இடதுகள் எப்படி உண்டி குலுக்குவது ? திருவிடங்கள் எப்படி இன்னுமோர் 5000 கோடி சேர்ப்பது , ரெப்ப மோசம் .

கடம்பூர்காரன் சொன்னது…

நாடு இருக்கும் நிலையில் துடிப்பான நேர்மையான,திறமையான இளைஞர்கள் அரசியலுக்கு வந்தாலன்றி,ஒன்றும் சரிவராது.இப்படி ஒரு தீர்ப்பு வந்தது உண்மையென்றால் கண்டிப்பாக கண்டிக்கப்படவேண்டும்.

பெயரில்லா சொன்னது…

padikkira vayasula arasiyal ethukku...?idhai sonna udane thaam,thoomnu kudhippenga..?muthalla unga parvaiyai mathunga...

ஆழியூரான் சொன்னது…

//நாடு இருக்கும் நிலையில் துடிப்பான நேர்மையான,திறமையான இளைஞர்கள் அரசியலுக்கு வந்தாலன்றி,ஒன்றும் சரிவராது.//

இதைத்தான் இந்த பதிவு பேசுகிறது.

//இப்படி ஒரு தீர்ப்பு வந்தது உண்மையென்றால் கண்டிப்பாக கண்டிக்கப்படவேண்டும்//

இது நீதிமன்ற தீர்ப்பு ஓய்..இதுல என்ன, 'உண்மையென்றால்' என்று இழுக்கிறீரு...?

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கடம்பூர்காரன்..

ஆழியூரான் சொன்னது…

//padikkira vayasula arasiyal ethukku...?idhai sonna udane thaam,thoomnu kudhippenga..?muthalla unga parvaiyai mathunga...//

அனானி அவர்களின் சமூகத்திற்கு...படிக்கிற வயசு என்பது அரசியலையும் படிக்கிற வயசுதான்.நம் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வியை கற்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் இந்த சமூகத்தின் விதியை தீர்மானிக்கும் அரசியலுக்குக் கொடுக்க மறுக்கிறீர்கள்...?

தீர்ப்பு சொன்னது…

எனக்கு தெரிந்து கேரள மாணவர்கள் எல்லாவற்றிற்கும் போராடுவார்கள்.இதற்கு மட்டும் இதுவரைக்கும் போராடவில்லை.நீங்க சொல்றமாதிரி த்ர்ப்பு வந்த்சசாஇல்லைஆ..?

ஆழியூரான். சொன்னது…

//எனக்கு தெரிந்து கேரள மாணவர்கள் எல்லாவற்றிற்கும் போராடுவார்கள்.இதற்கு மட்டும் இதுவரைக்கும் போராடவில்லை.நீங்க சொல்றமாதிரி த்ர்ப்பு வந்த்சசாஇல்லைஆ..?//

பேப்பர்ல போட்டாய்ங்கன்னு சொல்லி அதைத்தானே எடுத்துப் போட்டுருக்கேன்.அப்புறம் என்னங்க தீர்ப்பு வந்துச்சா..இல்லையான்னு இவ்வளவு பெரிய சந்தேகம் கேக்கீங்க..?

ஆனா நீங்க சொன்ன மாதிரி கேரள மாணவர்கள் ஏன் இந்த விஷயத்துக்காக இதுவரைக்கும் போராடலைன்னு தெரியலையே..