25/10/06

நீயே பீ அள்ளு..

தீட்டென்பவனை
நாப்கின் கழற்றி
அவன் வாயில் அடி..
நினைவுக்கு வரட்டும்
அவன் பிறப்பு..


-பொளேரென்று செவியில் அடித்தாற்போல பாய்கின்றன வார்த்தைகள்.நெருப்பு பறக்கிறது.வாசிக்க ஆரம்பித்த கணத்திலேயே நம்மை ஆட்கொள்கிறது.அது 'கொஞ்சூண்டு..' என்ற தலைப்பிலான கவிதை தொகுதி.திண்டுக்கல் தமிழ்பித்தன்,தயா கவிசிற்பி என்னும் இருவர் சேர்ந்தது உருவாக்கியிருக்கும் புத்தகம்.(தலைப்பில் 'கொஞ்சூண்டு' என்ற வார்த்தைக்கும் மேலே சின்னதாக 2 என்று எழுதியிருப்பது நல்ல ரசணை).சிறிய கையடக்க நூல்.ஹைக்கூ வடிவத்தில் பெரும்பாலும் நிலா,வானம்,காதலி,நாய்குட்டி என்று்தான் எழுதப்பார்த்திருக்கிறோம்.இது முற்றிலும் வேறு தளம்.புத்தகமெங்கும் ரணம் பொங்கும் தலித்துகளின் வாழ்க்கை விரவிக்கிடக்கிறது.

செண்ட் பூசிய பணக்கார பிணம்..
துர்நாற்றமடிக்கிறது
எரிக்கையில்..


உறக்கம் பிடிக்கவில்லை..
கனவிலும்
பீ துடைப்பம்..


நாத்தம் குடல புரட்டுது..
சகிச்சுகிட்டு சுத்தப்படுத்தினோம்..
மறுபடியும் அவிய்ங்க பேல.


கருவறை நுழைய அனுமதியில்லை..
கையில ஆயுதமிருந்தும்,
நிராயுதபாணியாய் எங்கள் குலசாமிகள்..


-என்று ஏராளமான கொதிப்போடு சொல்லும் அவர், உச்சகட்டமாக சொல்கிறார் இப்படி.

இட ஒதுக்கீடு வேண்டாம்.
வா...வந்து
நீயே பீ அள்ளு..


-அதிர்ந்து நிமிர்கையில் இடஒதுக்கீடுபற்றி மேலும் அறைகிறார் இப்படி.

வேகாததை
புரட்டிபோடு..
வெந்தது மேலே வரட்டும்..


-இட ஒதுக்கீட்டின் நியாயங்களை இதைவிட எளிமையாக யாரும் சொல்லிவிட முடியாது.இப்படி அவரின் எல்லா கவிதைகளுமே நாட்டின் நடைமுறைக்குத் தேவையான அரசியலை முன்வைக்கின்றன.அழகியல் மட்டுமே கவிதைக்கான பாடுபொருள் இல்லை..நாட்டின் தேவை அதுவல்ல..இதை ஒவ்வொரு கவிதையிலும் உணர்த்துகிறார் தமிழ்பித்தன்.

ஒருமுறை பிய்ந்தது ஹை-ஹீல்ஸ்..
பின்னால் முட்டவில்லை,
ஆண்குறி..

நிலவல்ல, மலரல்ல,
நான் பெண்..
த்தூ...நீதான் ஆண்.

புலியை முரத்தால் அடித்தாள்..
சாதனையல்ல-அது
பெண் இயல்பு..

கள்ளிப்பாள் குடித்தும்
சிரித்தது குழந்தை..
அழுதாள் தாய்..

நீ இந்து.
நானுமா இந்து..?
வா கும்பிடுவோம் முனியப்பனை..

வாழ்கிறபோது நரகம்
செத்தபின் சொர்கம்
செருப்பால் அடி கற்பிக்கிறவனை..

பிறப்பு ஒரு முறைதான்
ஏன் சுமந்தாய் சிலுவையை
கழற்றி அடிக்காமல்..

சூழ்ச்சி சண்டை
பாபருக்கும்-ராமருக்கும்
எங்கள் மண்ணை பிடிக்க..

மரத்தினால்
நிழல்,மழை,கூடு-ஒரு
கோடறி..

நாயை விடு..
பூனையிடம் கற்றுக்கொள்..
தேவை விசுவாசமல்ல;எதிர்ப்பு

நிழல் மறு
வெயில் காண்பி
வியர்வையை அறிமுகம் செய்..

மொத பார்வ..
பயங்காட்டுது
கடல்..

தெரியாமல் மிதித்தேன்
மிதித்ததும் கடித்தது
எறும்பு

கொஞ்சூண்டு மழை
துளிர்த்துகிடுச்சு
முள்ளுசெடி..

பன்றி பீ திண்ணும்.
முடிவுக்கு வராதே..
காய்கறி கொடுத்துப் பார்.

சுமைக்குள் உடல்
உயரத்தில் ஏறுகிறது
நத்தை..

பசியால் செத்த பிணம்
கல்லறை மீது
படையல்..

-மேலுள்ளவை எல்லாம் தமிழ்பித்தனின் கவிதைகள்.அவரோடு இணைந்து எழுதியிருக்கும் தயா கவிசிற்பியும் ஒன்றும் சளைத்தவரில்லை.அவரது கவிதைகளில் சில...

புனிதநூல்.
பக்கங்கள் புரட்டுகின்றன
எச்சில் விரல்கள்.

நாத்து நடாத
கதிர் அறுக்காத சாமிக்குப் பேரு
அன்னலட்சுமி..

பீ கூடையில்
சோத்துசட்டி..
விஞ்ஞானம் வளர்கிறதாம்..த்தூ...மசுரு..


-இந்த புத்தகத்தை படித்து பல நண்பர்களிடம் சொல்லி கொண்டிருந்த வேளையில் சமீபத்தில ஒருநாள் திண்டுக்கல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.தமிழ்பித்தனைப் பார்க்கப்போனேன்.'அவர்லேடி' பள்ளிகூடம் அருகில் தூரிகா என்ற பெயரில் ஓலைகுடிசையில் ஓவியம் வரைந்துகொண்டிருக்கிறார்.கருப்பு நிறமும்,வெள்ளந்திப் பேச்சுமாக தமிழனுக்குரிய அடையாளங்கள் அனைத்தோடும் இருந்தார்.ஒரு டீயை குடித்துக்கொண்டே பேசினால், அவருக்குள் இருக்கும் ஆதங்கங்கள் அனைத்தும் வார்த்தைகளில் வெளிப்படுகின்றன.

"நெறைய மாறனும் தோழர்..இந்த புத்தகத்தை வெளியிடும்போது ஏகப்பட்ட பிரச்னைகள் வந்துச்சு.இருந்தாலும் சமாளிச்சு வெளியிட்டோம்.."என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே,"அது என்ன திண்டுக்கல் தமிழ்பித்தன்..?" என கேட்டேன்.அதற்காகவே காத்திருந்ததுபோல,"அது கொஞ்சம் அவசரப்பட்டு வச்சுகிட்ட பேர் தோழர்..அந்த பேருனால பலபேரு என் கவிதையை படிக்காமலேயே போயிடுறாங்க..ஒரு மாதிரியான மனத்தடை ஏற்பட்டுடுது..இப்ப 'முனி'ன்னு பேரை மாத்திட்டேன்.."என்றார்.புத்தகத்தின் பக்கங்களில் கவிதைக்குப் பொருத்தமாக வரையப்பட்டிருக்கும் ஓவியங்களும் இவர் வரைந்ததுதான்..சமூகத்தின் எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை எதிர்பார்த்து அல்லது மாற்றத்தை உண்டாக்கும் நோக்கோடு எழுதிக்கொண்டிருக்கும் இவரிடம் பேசவும்,புத்தகம் வாங்கவும் 9865994424 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

18/10/06

மணற்கேணி..

தோண்ட தோண்ட சரிந்து கொண்டேயிருந்தது மணல்.புதைமணல்.கால் வைத்தால், பொலபொலவென்று உள்ளே சரிந்து கொட்டியது.முப்பதடி ஆழக்கிணறு,ஒரு நிமிடத்தில் இருபதடியாகக் குறைந்திருந்தது.கிணற்றின் மேற்குக் கரையிலிருந்து உள்ளுக்குள் சரிவாக இறங்கிக் கிடந்தது மணல்.கிணற்றைச் சுற்றி ஒரேக் கூட்டம்.நசநசவெனச் சத்தம்.

"உசுரு இருக்குடா வேம்பையா...எப்படியாச்சும் காவந்து பண்ணிடனும்டா..கோயிந்தன் கையை ஆட்டுறான் பாரு.சடுதியா ஏதாவது பண்ணனும்மப்பா.."-பதற்றம் தெறிக்கச் சொல்லிக் கொண்டிருந்தான் காளி.

"காலை வச்சாலே பொத மணலு உள்ள இழுக்குது மாமா..ஊத்துத்தண்ணி வேற நிக்க மாட்டேங்குது.." சொல்லிக்கொண்டே கோயிந்தனை நெருங்க ஏதாவது தோது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் முருகேசன்.

விடிகாலையில் நீராகரத்தைக் குடித்துவிட்டு, வீட்டுக்காரி பெருமாயியை காலைக்கஞ்சி கொண்டுவரச் சொல்லிவிட்டு, வாத்தியார் வீட்டுக் கொள்ளையில் கிணறு தூர் வாரக் கிளம்பியக் கோயிந்தன்,இப்படி மண் சரிந்து சிக்கிக்கொண்டது யாரும் எதிர்பாராதது.

ஆளாளுக்கு ஒரு திசையில் ஓடிக்கொண்டிருதார்கள்.ஏதேதோ யோசனைகள்.கிணற்றுக் கரையில் ஓங்குதாங்காய் வளர்ந்து நின்ற தென்னைமரத்தில் வரி கயிற்றைக்கட்டி கிணற்றுக்குள் இறங்கினால் சுலபமாய் கோயிந்தனை நெருங்கிவிடலாம்.ஆனால் கிணற்றின் ஓரப்பகுதியில்தான் இறங்கமுடியும்.கோயிந்தன்,சரிந்த மணலில் கிணற்றின் நடுப்பகுதில் சேற்றுக்குள் அகப்பட்டுக் கிடந்தான்.

"நாலஞ்சு பலகையப் பரப்பிப் போட்டா நாலு எட்டுல போயிடலாம்.."

-யாரோ யோசனை சொல்ல, பரபரவென்று ஊருக்குள் ஓடினார்கள் இளைஞர்கள்.குடியானவர் தெரு தாண்டி, சுடுகாட்டுப் பக்கமாய் இருந்த தொகுப்பு வீடுகள் நிறைந்த தங்கள் தெருவுக்குள் நுழைந்துவிட்டனர்.ம்..ஹூம்.தேடித்தேடிப் பார்த்தும் ஒற்றைப் பலகையைக் கூடக் காணவில்லை.விறகுக் கட்டைகள் அடுக்கி வைத்திருந்த பரண், புண்ணியமூர்த்தியின் மாட்டுவண்டி..என்று எதிலிருந்தாவது எதையாவது எடுத்து விடலாமா என்று பார்த்தார்கள்.ஒன்றும் தேறவில்லை.

சட்டென உடம்பைப் பதறிக்கொண்டு,"ஓடியாங்கடா.."என்று சத்தமிட்டுக்கொண்டு தெற்குத்தெரு நோக்கி ஓடினான் முருகேசன்.அது முழுக்க முழுக்க உயர்சாதிக்காரர்காள் வசிக்கும் தெரு.பெருந்தனக்காரர்கள் அதிகமுள்ள பகுதி.போனவாரம்தான் மச்சு வீட்டுக்கு வேலை நடந்த காசிநாதத் தேவர் வீட்டில் போய் நின்றார்கள்.ஓட்டுவேலை முடிந்து,சாரம் பிரிக்கப்பட்டு வீட்டின் ஓரமாக அடுக்கிவைக்கப் பட்டிருந்தன பலகைகள்.

வெற்றிலையை குதப்பியபடி டிராக்டரில் படிந்திருந்த சேறைக் கழுவிக் கொண்டிந்தார் காசிநாதத் தேவர்.மூச்சிரைக்க ஓடிவந்து நின்றவர்களைப் பார்த்து, "என்னடா..இங்க ஓடி வர்றீங்க..?அங்க ஏதோ வாத்தியார் வீட்டுக் கெணத்துல,தூர் வாறப்போன இடத்துல மண்ணு சரிஞ்சு கோயிந்தன் உள்ள விழுந்துட்டான்னு பேசிக் கிட்டானுவொ..நீங்க இங்குன ஓடிப்புடிச்சு விளையாடிக்கிட்டு இருக்கீங்க..?"என்றார்.

"அதில்லீங்கய்யா..கிணத்துல இறங்க முடியலை.ஒரே சகதியா இருக்கு.நாலஞ்சுப் பலகைக் கெசடச்சா மேலாலப்போட்டு எறங்கிப் போயிடலாம்.எங்கத் தெருப்பக்கம் தேடிப்பாத்துட்டோம்.ஒண்ணும் ஆப்புடலை.அதான்..இந்த சாரப்பலகையில நாலஞ்ச கொடுத்தீங்கன்னா..கோயிந்தனை கரையேத்திபுடலாம்.."

"எலேய்..வெவரங்கெட்டத்தனம்மா பேசுறியள..இதெல்லாம் என் வீட்டுதா..?எல்லாம் டவுனுக்கார காண்ட்ராக்ட் பயலுது.நேத்தே வந்து எடுத்துட்டுப் போறேன்னான்.இன்னும் செத்த நேரத்துல வந்துடுவான்.அவனுக்கு நான் என்னத்த சொல்றது..?அதுவுமில்லாம நீங்க பாட்டுக்கும் பலகையை எடுத்துட்டுபோயி,ஆளும் பேருமா சேர்ந்து எறங்கி உடைச்சு வச்சுட்டியள்னா என்குடி தெண்டம் அழுவனுமா..?"

"கொஞ்சம் மனசு வைங்கய்யா..பலகைக்கு எந்த சேதாரமும் இல்லாம மத்தியானத்துக்குள்ள கொண்டு வந்துடுறோம்.."

"சும்மா பேசிக்கிட்டு நிக்காம போயி ஆக வேண்டியதை பாருங்கடா.."

-வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு அவர் உள்ளேப் போய்விட்டார்.

ஆத்திரம் பொங்கிவழிய என்ன செய்வதென்று புரியாமல் தவித்து நின்றார்கள்.காலை வெயில் சுள்ளென்று அடித்தது.வியர்வை வழிந்து பிசுபிசுத்தது.விரல்கள் நடுங்கத் தொடங்கின.ஏதோ ஞாபகம் வந்தவனைப்போல"வேம்பையா..சீக்கிரம் வாடா.." என்று சொன்ன முருகேசன்,மறுபடியும் தங்கள் தெருவை நோக்கி ஓட ஆரம்பித்தான்.மற்றவர்களும் பின் ஓடினார்கள்.டீக்கடையில் பேப்பர் பார்த்தபடி நின்றவர்கள்,தலையை லேசாய் தூக்கிப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தனர்.

விறுவிறுவென்று ஓடிய முருகேசன்,நேராய் தன் வீட்டின் கதவை நாதாங்கியோடு நெம்பி இழுத்தான்.'கிரீச்..கிரீச்..'என்ற சத்தத்தில் உலுத்துப்போன மரத்தூள் கொட்டியது.நாலு நெம்பில் கையோடு வந்துவிட்டது கதவு.மற்றவர்களும் கதவிருந்த வீடுகளாய் பார்த்து பெயர்த்தெடுத்தார்கள்.அரசாங்கம் கட்டிக்கொடுத்த வீட்டின் தகரக்கதவு எதற்கும் ஆகவில்லை.தேடித் தேடிப் பிடிங்கியதில் எட்டுக் கதவுகள் கிடைத்தன.தலைக்கு ரெண்டாய் சுமந்துகொண்டு மறுபடியும் ஓட்டம்.

அவிழ்ந்த கைலியை அப்படியே ரோட்டோரமாய் கழற்றி வீசிவிட்டு,கால் சட்டையோடு முருகேசன் ஓட,இரண்டு நாய்கள் அவனைப் பார்த்துக் குரைத்தன.கிணற்றடியை அவர்கள் நெருங்கும்போது பெண்களின் அழுகுரல் சத்தம் அலறலாய் கேட்டது.மார்பிலடித்துக் கொண்டு கிணற்றை நோக்கி ஓடினாள் பெருமாயி."கொலை உசுரா கெடக்குறியே ராசா..ஏ கண்ணவிஞ்ச சாமியளா..எங்க போயிட்டீங்க..?" தலைவிரி கோலமாய் அவள் கதற,காரனம் எதுவும் புரியாமல் அவளது சேலை முந்தானையை இழுத்துக்கொண்டே குழந்தைகளும் அழுதன.'வீச்..வீச்..'சென்று கதறிய பெருமாயியை கூட இருந்த பெண்கள் இழுத்துப் பிடித்தனர்.

தவுகள் வந்ததும், சடசடவென்று வேலைகள் நடந்தன.சேரித் தெரு ஆட்கள் நிறைய பேர் காலையிலேயே சுற்றியுள்ள ஊர்களுக்கு வயல் வேலைகளுக்குப் போய்விட்டதால்,ஆட்களும் அதிகமில்லை.இருந்த கொஞ்சம் பேர் ஆளூம் பேருமாய் வேலையைப் பார்த்தார்கள்.அம்பாரம்,அம்பாரமாய் வேப்பந்தலைகளையும்,பூவரசு இலைகளையும்,முள் பத்தைகளையும் வெட்டிவந்து கிணற்றுக்குள் போட்டனர்.ஊத்துத் தண்ணீரோடு மண் கலந்துகிடந்த சகதி,அந்த இலை தலைகளால் லேசாக இறுகியது.அதற்கு மேல் பலகையைப் போட்டால் எளிதாக கோயிந்தனை நெருங்கிவிடலாம்.

வேலைகள் நடந்துகொண்டேயிருக்க, குடியானவர்கள் தெருவைச் சேர்ந்த பஞ்சாயத்துக்காரர்கள் கொஞ்சம் பேர் சுற்றி நின்றிருந்தனர்."சட்டு புட்டுன்னு இறங்குடா உள்ள..கை அசையுறதும் குறைஞ்சுகிட்டே வருது.."சொன்னபடியே தென்னை மர நிழலில் தோதாய் நின்று கொண்டார்கள்.

"ஐயா..ஏதாவது பண்ணுங்கய்யா..குஞ்சும் குழுப்பானுமா ரெண்டு சின்னப் பிள்ளைவொளை வச்சுருக்கேன்.அவரு இல்லாம இந்த கூறுகெட்ட சிறுக்கியாள கஞ்சி ஊத்தி கரசேர்க்க முடியாது.."-பெருமாயி பஞ்சாயத்துக் காரர்களின் காலில் விழ "பொறுத்தா..இந்தாப் பலகைப் போட்டுட்டானுவொ..கயித்தைக்கட்டி உள்ள இறங்கியாச்சுன்னா என்னன்னு பாத்துப்புடலாம்.நானும் எங்க ஆளுகளைவிட்டு தீயணைப்புப் போலீஸுக்கு சொல்லச் சொல்றேன்..டேய் சீக்கிரம் இறங்குங்கடா.." சொல்லிக்கோண்டே வேட்டியின் நுனியில் படிந்திருந்த சேற்றைத் தட்டிவிட்டார் பழனிச்சாமித் தேவர்.பெருமாயியைத் தூக்கி ஓரமாக உட்கார வைத்துவிட்டு,அவருக்கு நடந்ததை விளக்கினார் கோயிந்தனின் சித்தப்பா சின்னகருப்பன்.

"நேத்துதான் திடீர்னு வாத்தியாரயா கூப்புட்டு,'தூரு அள்ளனும் வாடா'ன்னுருக்காரு.இவன்,கட்டாரி,ராசுப்பய,முத்தன் நாலுபேரும் கருக்கல்லயே வந்துட்டானுவொ..இவனும் கட்டாரியும் கீழ நின்னு தூர் அள்ளிக் குடுக்க,குடுக்க, மித்த ரெண்டு பேரும் மேல நின்னு இழுத்துக் கொட்டியிருக்கானுவொ..'பாதிக் கெணத்துக்கு மணலா இருக்கே'ன்னு யோசிச்சாலும்,'சுத்தியும்தான் மரம் இருக்குதே..சல்லிவேரு இழுத்துப் பிடிச்சுக்கும்'னு நினைச்சு வேலை பாத்துருக்கானுவொ.ஆனா மண்ணுபாதி,மணலு பாதின்னு அது வேலையைக் காட்டிடுச்சு.கட்டாரிக்கு முரட்டு உடம்பு.எப்படியோ தப்பிச்சுட்டான்.இவனால முடியலை.."

கோயிந்தனின் தலைவரைக்கும் மண்ணுக்குள் புதைந்து கிடக்க, முடியும் கையும் மட்டுமே வெளியேத் தெரிந்தது.முன்பு லேசாய் கையை ஆட்டியதும் இப்போது இல்லை.

இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு,கையில் கதவை இடுப்போடு சேர்த்துப் பிடித்தபடி,முருகேசன் உள்ளே இறங்கினான்.கதவு,கிணற்றின் கரையில் இடித்து மண் உள்ளேக் கொட்டியது.மெதுவாய் உள்ளே இறங்கி தரைக்குப் பக்கத்தில் வந்தவுடன் கதவைப் படுக்கை வசத்தில் கிணற்றுக்குள்,சேற்றுக்குள் போட்டான்.சொத்தென்று விழுந்தது.சகதி தெறித்தது.கதவின் மேல் காலை வைத்து நின்றுப் பார்த்தான்.கொஞ்சமாக் நழுவி இழுத்ததேத் தவிர ஒன்றும் உள்ளே போய்விடவில்லை.

"பாத்துடா.."மேலிருந்து சத்தம்.

தென்னை மரத்தில் இன்னொரு கயிற்றைக் கட்டி ஒவ்வொருக் கதவாய் உள்ளே இறக்கினார்கள்.ஒவ்வொன்றாய் அடுக்கி கடைசியில் காளியும் இறங்கினான்.மெதுவாய் கோயிந்தனை நெருங்க..நெருங்க..இருவருக்கும் உடம்பு நடுங்கியது.துவண்டு கிடந்த கோயிந்தனின் கைகளை ஆளுக்கொன்றாய் பிடித்து மெதுவாய் மேலே இழுக்க..மண்ணுக்குள் ரெண்டுபேர் நின்றுகொண்டு உள்ளே இழுப்பது மாதிரி சகதி இறுக்கியது.

ஏதேதோக் கூச்சல்கள்.பெருமாயியை கிணற்றுப் பக்கம் எட்டுப் பார்க்க விடாமல் வெளியே இழுத்துப் போட்டார்கள்.முருகேசனும்,காளியும் 'என்ன ஆனாலும் பரவாயில்லை..'என்பதுபோல நேருக்கு நேராய்பார்த்துக் கொண்டார்கள்.கோயிந்தனின் இரண்டு கைகளையும் ஆளுக்கொன்றாய் பிடித்துக்கொண்டு,மெதுவாய் சேற்றுக்குள்-கம்புக் கூட்டுக்குள் கைவிட்டு முழு விசையோடு ஒரே இழுப்பாய் இழுத்தனர்.இருவரும் கதவின் மீது மல்லாந்து விழ...அவர்களின் மீது குப்புற விழுந்தான் கோயிந்தன்.மூன்று பேரின் கணம் தாங்காமல் சகதியில் ஏறி இறங்கியது கதவு.

சேற்றைத் துடைத்துக்கொண்டு எழுந்த காளி,கோயிந்தனின் மூக்கில் கை வைத்துப் பார்த்தான்.மூச்சு வருவதற்கான அறிகுறியேத் தெரியவில்லை.மல்லாக்கத் திருப்பிப் போட்டு படபடவென்று நெஞ்சசில் குத்தினான்.ஒன்றும் நடக்கவில்லை.ஒரு கதவில் படுக்க வைத்து இரண்டு புறமும் கயிற்றால் கட்டி பத்திரமாக மேலேத் தூக்கினார்கள்.

ஒன்றுக்கு ஐந்து தடவையாய் உறுதி செய்தாலும் உயிர் இருந்தால்தானே மூச்சு வரும்..? பந்தல்போட்டு,பாடைகட்டி,தப்படித்து,கோயிந்தனின் ஐந்து வயது மகனுக்கு மொட்டையடித்து,கொள்ளிபோட வைத்து...எல்லாம் சாயுங்காலத்திற்குள் முடிந்துவிட்டது.

பொழுது இருட்டும் நேரத்தில் முருகேசன்,காளி,வேம்பையன் என்று பத்து பதினைந்து ஆட்கள் குடியானவர் தெருவிற்குள் நுழைந்து வாத்தியார் வீட்டுக்குப் போனார்கள்."ஐயா..நம்ம கோயிந்தனைக் கொண்ணுப் போட்டுடுச்சு அந்த கெணறு.'உசுரு கேக்குற கெணத்துல பொழங்கக் கூடாது.மூடிடனும்'ங்குறது நம்ம ஊர் வழக்கம்.அதையும் எங்க கையாலயே செஞ்சுடுறோம்.."என்று கேட்க,"செய்ங்கடா..பாத்து செய்ங்க.."என்றார் வாத்தியார்.

அதே வேகத்தில் கிணறு இருந்த கொள்ளைக்குக் கிளம்பினார்கள்.அந்தி சூரியன் சிவப்பாய் தகித்தது.அந்தக் கிணற்றைச் சுற்றிலும் கோயிந்தனின் குரல் ஒலிப்பது போலிருந்தது.எல்லோரும் வெறிகொண்டு மண்ணை கிணற்றுக்குள் தள்ளினார்கள்.பொழுது பொலபொலவென விடியும்போது,கிணறு இருந்த இடமேத் தெரியாமல் தரைமட்டமாய் இருந்தது.இரண்டு நாட்கள் கழித்து ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்..."நம்ம காசிநாதத் தேவரை எங்கப்பா ஆளையே காணோம்..?ரெண்டு நாளா வீட்டுக்கும் போகலையாம்ல.."