18/12/06

கனம் கோர்ட்டார் அவர்களே...இது நியாயமா..?

'கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கல்லூரியைவிட்டே சஸ்பெண்ட் செய்யலாம்..' என்று ஒரு அரைவேக்காட்டு தீர்ப்பை வழங்கியிருக்கிறது கேரள கோர்ட்.மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மயக்கத்தில் இருப்பதே நல்லது என்று அதிகார வர்க்கம் நினைப்பதாலோ என்னவோ இந்த விஷயம் இதுவரை பெரிதுபடுத்தப்படவில்லை.

எர்ணாகுளம் அருகேயுள்ள மாழிங்கரை எஸ்.என்.எம். கல்லூரி சார்பாக,'எங்கள் கல்லூரியில் மாணவர் அமைப்பு என்ற பெயரால் சில மாணவர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுவதால் பிரச்னை ஏற்படுகிறது.அமைதியான முறையில் கல்லூரி நடத்த முடியவில்லை..எனவே மாணவர் அமைப்புகள் அரசியலில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்.." என்று கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பில்தான் இந்த கழிசடை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவனாய் இருக்கும் வயதில்தான் ஒரு மனிதன் தன் வாழ்நாளின் சிந்தனை மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கிறான்.முடிவெடுக்கும் வேகமும்,செயல்படுத்தும் தைரியமும் உள்ள வயதும் அதுதான்.இந்த வயதில் அரசியலை தெரிந்து கொள்ளாமல் வேறு எந்த வயதில் தெரிந்து கொள்வது...?

நீங்கள் விரும்பினாலும் ,விரும்பாவிட்டாலும் உங்களை ஒரு நிழல்போல தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது அரசியல்.அதிலிருந்து நீங்கள் விலக முடியாது.விலக நினைப்பதும் புத்திசாலிதனம் அல்ல.ஆனால் வெகு காலமாக, 'அரசியல் ஒரு சாக்கடை,குப்பைத்தொட்டி..' என்றெல்லாம் சொல்லி,மக்களை பயமுறுத்தி,பூச்சாண்டி காட்டப்படுகிறது.அதன் விளைவாக இன்று மாணவர்களில் அதிகபட்சம் பேர் குறைந்த பட்ச அரசியல் அறிவற்றவர்களாக இருக்கின்றனர்.'முதல் மதிப்பெண்..நல்ல வேலை..கை நிறைய சம்பளம்..' என்று மட்டுமே மாணவர்களின் மண்டைக்குள் ஏற்றப்படுகிறது.இப்படியான குறுகிய வட்டத்திற்குள் வளரும் ஒரு இளைய தலைமுறையினர் out of box சிந்திப்பதேயில்லை.இந்த மந்த புத்தியுடைய மக்களை வார்த்தெடுப்பதும்,பாதுக்காப்பதும்,தொடர்ந்து பராமரிப்பதும்தான் அதிகார வர்க்கத்தின் பணி.அதன் ஒரு பகுதியாகவே தற்போதைய நீதிமன்ற தீர்ப்பையும் கருத வேண்டியுள்ளது.

கல்வி என்பதை வர்த்தக சரக்காக்கி,பணம் படைத்தவனுக்கு வசதிகள் நிறைந்த கல்வியும்,ஏழைக்கு எந்த வசதியுமற்ற நாலாந்தர கல்வியும் வழங்கப்படுகிறது.தங்கள் விளைநிலத்தை விற்று,உழைப்பை மூலதனமாக்கி, பிள்ளைகளை படிக்க வைக்கப் பாடுபடும் எளியவர்களால் அதிகபட்சம் அரசு கலைக்கல்லூரியைக் கூட தாண்ட முடியவில்லை.இது யதேச்சையானது அல்ல.இருக்கும் வர்க்க கட்டமைப்பைப் பாதுகாக்கும் வஞ்சக சூழ்ச்சி இதற்குப் பின்னால் ஒழிந்திருக்கிறது.இதை கேள்வி கேட்கும் மனநிலை வேண்டுமாயின் அரசியல் அறிவு அவசியமாகிறது.

'மாணவர்கள் அரசியல் கட்சிகளின் மூலம் செயல்படக் கூடாது என்றுதானே தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது..?அதைவிடுத்து தனிப்பட்ட முறையில் போராடலாமே..?' என்பது ஒரு சாராரின் எதிர்வாதமாக இருக்கலாம்.ஆனால் நடைமுறையில் கல்வி நிறுவன அதிபர்கள் என்பவர்கள் மிகப்பெரிய பண முதலைகளாகவும்,எல்லாவகையான அடக்குமுறை வழிகளையும் கையால்பவர்களாகவும் இருக்கின்றனர்.அவர்களை எதிர்க்க தனி நபர்களால் இயலாது.இந்த இடத்தில் இயக்கம் அவசியமாகிறது.

மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடிய வரலாறும் இந்தியாவில் உண்டு.அஸ்ஸாமில், 'அஸ்ஸாம் கண பரிஷத்' என்ற மாணவர் இயக்கம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பிரபல்ல குமார் மொஹந்தா ஒரு மாணவர்தான்.தமிழகத்தில் திராவிட கழகத்தின் ஆரம்பக்கட்ட எழுச்சி இளைஞர்களால் நிகழ்ந்ததுதான். (மேற்சொன்ன நபர் மற்றும் இயக்கம் இரண்டுமே கொஞ்சம்,கொஞ்சமாக தங்களின் ஆரம்பக்கட்ட கொள்கையின் திரிபு சக்திகளாக மாறிவிட்டது உப வரலாறு..). அவ்வளவு ஏன்..?ஒரு தோளில் ஸ்டெதஸ்கோப் பையும்,ஒரு தோளில் துப்பாக்கி பையும் ஏந்திய மருத்துவக் கல்லூரி மாணவரான சே குவேராதான் புரட்சியாளர்களின் ஆதர்சமாக உருவெடுத்துள்ளார்.

இப்போது தீர்ப்பு வந்திருக்கும் கேரள அரசியலை நிர்ணயித்ததிலும் இளைஞர்களுக்கு தனி வரலாறு உண்டு.சிலி,வியட்நாம்,க்யூபா என்று உலகில் எங்கெல்லாம் கம்யூனிச ஆட்சி மலர்ந்ததோ,அங்கெல்லாம் ஆயுத புரட்சி மூலமே அது சாத்தியமாயிற்று.உலகிலேயே முதன்முறையாக ஓட்டெடுப்பு மூலம் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததும் கேரளாவில்தான். (இதிலும் விமர்சனங்கள் உண்டு.ஆனால் இந்த பதிவின் நோக்கம் அதுவல்ல...). அதில் இளைஞர்களின் பங்கு அதிகம்.இன்றும் அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் கேரள இளைஞர்களின் போராட்டம் குறிப்பிட்டு சொல்லத்தகுந்தது.அதே கேரளாவில்தான் இப்போது இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தனக்கான அரசியலை முடிவு செய்தாக வேண்டும்.'நான் அரசியல் சார்பற்றவன்.நடுநிலைமையுடையவன்' என்பதெல்லாம் பம்மாத்து.சொல்லப்போனால், நடு நிலைமை என்பதே ஒரு மாயவாதம்.'இந்த பேருந்து மதுரைக்குப் போகுமா..?' என்று கேட்டால்,'போகும்,போகாது' என்ற இரண்டில் ஒன்றுதான் பதிலாக இருக்க முடியும்.அதனால் 'சார்பின்மை' என்பது தப்பித்தலின் மாற்று வார்த்தைதான்.கல்வி கட்டணம் முதல் இட ஒதுக்கீடு வரை நீங்கள் மட்டும் மாணவர்களை வைத்து அரசியல் செய்வீர்கள்.மாணவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் 'சார்பின்றி' இருக்க வேண்டும்.எந்த ஊர் நியாயம் இது..?

அந்த கேரள கல்லூரி மாணவர்கள் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டுக்குச் செல்வார்களா..இல்லையா என்பதெல்லாம் தெரியாத நிலையில், இந்த தீர்ப்பை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு நாட்டின் ஏனைய கல்வி நிறுவன முதலைகளும் நீதிமன்றத்துக்குக் கிளம்பிவிடுவார்களோ என்பது என் உப கவலையாக இருக்கிறது.அதனால்,மாணவர்கள் மட்டுமல்ல....அனைவருமே நமக்கான அரசியலை முடிவு செய்யவேண்டிய தருணமிது.

குறிப்பு: இந்த கட்டுரை பூங்கா இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.

16/12/06

பிணம் திண்ணும் கோக்..


லக மயமாக்கம் என்ற பிணம்திண்ணி,கொஞ்சம் கொஞ்சமாக நம் மண்ணையும்,வளங்களையும் சூறையாடியதுபோக, இப்போது நேரடியாகவே உயிர்குடிக்க ஆரம்பித்துவிட்டது.நெல்லை கங்கைகொண்டானில் அமைந்திருக்கும் கோக் ஆலையின் கழிவு நீரை பருகி ஐநூறுக்கும் அதிகமான ஆடுகள் மடிந்துபோயிருக்கின்றன.வாழ்வின் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரம் நிர்மூலப்படுத்தப்பட்ட கொடுமைபற்றி எந்த அக்கரையுமின்றி, மதுரையில் டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.

கங்கைகொண்டான்- பஞ்சாயத்தில் வரும் ராஜபதிக்குள் நுழைந்தாலே வேலிகளிலும், தெரு முற்றங்களிலும் இறந்துகிடக்கும் ஆடுகள் ரத்தம் கொதிக்க வைக்கின்றன.கோக் தொழிற்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது இந்த ராஜபதி கிராமம்.அமெரிக்க அடிவருடிகளுக்கான 'கழிவு நீரை' தயாரிக்கும் கோக் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறது.இவை அனைத்தும் கோக் ஆலையை ஒட்டி செல்லும் வாய்க்காலில்தான் கலக்கிறது.இத்தனை நாட்களாய் அந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் திறந்துவிடப்பட்ட கழிவுநீர் ராஜபதி கிராமத்தைச் சென்றடையவில்லை.தற்போது பெய்த மழையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கோக்,தனது கழிவு நீரையெல்லாம் அந்த வாய்க்காலில் திறந்துவிட்டுவிட்டது.

வழக்கமாக விவசாயிகள் தங்களின் ஆடுகளை அந்த வாய்க்காலை ஒட்டிய ஏரியாவில்தான் மேய்ப்பார்கள்.அந்த ஆடுகள் வாய்க்கால் தண்ணீரை குடித்துவிட்டன.விளைவு...வரிசையாக ஆடுகள் செத்து மடிந்துவிட்டன.இதுவரைக்கும் செத்திருக்கும் ஆடுகளின் எண்ணிக்கை மட்டும் ஐநூறுக்கும் மேல் இருக்கும்.இந்த எண்ணிக்கை இப்போது இன்னும் அதிகமாகியிருக்கும்.ஒவ்வொரு ஆடும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை போக கூடியது.அதை நம்பிதான் பிள்ளைகளுக்கு திருமனம்,படிப்பு என்று இவர்களின் மொத்த வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது.


செத்துமடிந்த ஆடுகளை ; தங்கள் வாழ்வை இதுவரைக்கும் செழிக்க செய்த ஜீவன்களை அப்படியே வேலியோரங்களில் தூக்கிப்போட்டுவிட்டு நெஞ்சு கணக்க வீடு திரும்பும் அனைத்து விவசாயிகளின் மனதிலும் கங்கு எரிந்துகொண்டிருக்கிறது.''தாயோளி....அந்த கோக்குக்காரன் வந்துதாம்யா எல்லாத்தையும் கொன்னுபுட்டான்..அவன் வந்து இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட ஆகலை..அதுக்குள்ள ஆடுகல்லாம் செத்துப்போச்சு..இன்னும் ரெண்டு வருஷத்துல மனுஷ மக்களையும் சுடுகாட்டுக்கு அனுப்பிட்டுதான் ஓய்வான் போல.." என்று மனம் வெதும்பி புலம்புகின்றனர் அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மைக்குள்ளான எளிய மக்கள்.

எப்போதும் எளியவர்களையும்,கிராமங்களையும் கொஞ்சமும் மதிக்காத அரசு அதிகாரிகள் ஆடுகள் இறந்தவுடன் பதறிக்கொண்டு ராஜபதிக்கு ஓடிவந்தார்கள்.வந்து 'இது நீலநாக்கு நோய்.கோக் கழிவிற்கும் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை..' என்று அவர்கள் சொன்னது யாருடைய தூண்டுதலில் என்பதை கிராம மக்கள் அறிந்தே இருக்கின்றனர்.

''எல்லாம் காசு பொறுக்கி பயலுவொ...எலும்பு துண்டு கிடைக்குமான்னு அலையுதானுவொ..டாக்டர் பயலுவலாவது நீலநாக்கு நோய்ன்னு சொன்னதோட விட்டான்.இந்த போலீஸ்காரப்பயலுவொ இருக்கானுவொ பாருங்க..ரவை பன்னெண்டு மணிக்கு கதவைத் தட்டி, 'ஆடு செத்ததுக்கு பணம் தர்றோம்'னு சொல்லி,வெத்து பேப்பர்ல கையெழுத்துக் கேக்கான்.யாரும் கையெழுத்துப் போட முடியாதுனு சொன்ன பொறவு ஓடி போயிட்டானுவொ.அவனுவொளை கட்டி வச்சு தோலை உரிச்சிருக்கனும்.இவனுவொ மாதிரி ஆளுக குடுக்குற தைரியத்துலதான அந்த வெளிநாட்டுக்காரன் இங்க வந்து இந்த அட்டுழியம் பண்ணுதான்..?" என்று கொதிப்பில் வெளிவரும் வார்த்தைகள் செயல்களாக மாறுவதற்கு அதிக நாள் பிடிக்காது.


எங்கிருந்தோ வந்த இந்த அமெரிக்க நாய்கள், உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சிதைத்த கொடுமைக்கு, இங்கிருக்கும் கூட்டிக்கொடுக்கும் பலபேர் பின் புலமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கோக்கின் கழிவு நீர் அண்டாத தூரப்பகுதிகளில் சொகுசாக வாழ்கின்றனர்.இன்று ஆடுகள் பலி பீடத்தில் ஏற்றப்பட்டது போன்று நாளை கோக்கிற்கு அவசர பலியாடுகள் தேவை என்றால்,இந்த கூட்டிக்கொடுக்கும் காவாளிகளை முதல் ஆளாக பலியாக்க கோக் தயங்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பு: இந்த கட்டுரை பூங்கா இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.

26/11/06

காந்தி எப்போது கம்யூனிஸ்ட் ஆனார்..?

னிப்படலம் போல மனதில் படிந்திருக்கும் மெல்லிய காதல் உணர்வுகளை
அழகாக காட்சிப்படுத்தியிருந்த திரைப்படம் 'இயற்கை' .அதன் இயக்குனர் ஜனநாதன் எடுத்திருக்கும் 'ஈ' படத்தை கடந்தவாரம் பார்த்தேன்.
உயிர் காக்கும் மருந்துகளை வைத்துக்கொண்டு காசு பார்க்கும் இரக்கமற்ற வியாபாரம் பற்றியும்,உலகை ஆட்டிப்படைக்கும் 'பயோவார்' என்ற மறைமுக யுத்தத்தைப் பற்றியும் வெகுஜன ஊடகத்தில் முடிந்த அளவுக்கு சந்தைப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன்.ஆனால் படத்தின் இறுதி காட்சியில்தான் கொஞ்சம் முரண்படுகிறார்.

வினோதமாக அமைக்கப்பட்ட ஒரு டவரின் உயரத்தில் உலக தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டி புரட்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி கம்யூனிசம் பேசும் பசுபதி, அதற்கு முந்தைய அல்லது பிந்தைய காட்சியில் காந்தியின் சத்தியசோதனைப் படிக்கிறார்.சத்தியசோதனை படித்துக்கொண்டே,'துப்பாக்கி முனையிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது' என்று மாவோயிசம் பேசுகிறார்.'நான் உங்களை மாதிரி படிச்சவன் கிடையாது..'என்று சொல்லும் ஹீரோ ஜுவாவிடம் 'மக்கள்கிட்ட போ..மக்களைப் படி..அதைவிட வேற பெரிய பாடம் எதுவும் தேவையில்லை..'என்று சொல்லிவிட்டு, துப்பாக்கி குண்டுகளால் தன் மரணத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்.

என் கேள்வியெல்லாம் காந்தி எப்போது கம்யூனிஸ்டானார்..? என்பதுதான்.தன் வாழ்நாளில் கம்யூனிஸ்டுகளை ஒரு போதும் விரும்பாத, மக்கள் தன்னெழுச்சியாக திரண்டெழுந்து போராடிய பல சமயங்களில் அதை அஹிம்சை என்ற பெயரால் நீர்த்துப்போக செய்த,தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை முறையை அம்பேத்கார் முன்வைத்தபோது அதை,'இந்து மதத்தை பிளவுபடுத்தும் திட்டம்' என்று சொல்லி நிராகரித்த..தன் வாழ்நாள் முழுவதும் முழு இந்து சனாதானியாகவே வாழ்ந்து மறைந்த ஒருவரை எப்படி ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டால் ஆதரிக்க முடியும்..?ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் சத்தியசோதனையும் என்பது தலைகீழ் முரண்பாடாக இல்லையா..?'சரி போகட்டும்.வியாபார சினிமாதானே..' என்று விட்டுவிட முடியவில்லை.இம்மாதிரியான வியாபார சினிமாக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தும் கருத்துக்கள், மக்களின் மனதில் ஒரு மேலெழுந்தவாரியான தாக்கத்தையும்,கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

சினிமா மற்றும் இலக்கிய தளத்தில் சிலர் வெற்றிபெற்ற பின்பு 'இவர் எங்கள் பட்டறையிலிருந்து போனவர்' என்று சொல்லிக்கொள்வதில் நம் கம்யூனிஸ்டுகளுக்கு அலாதி ஆர்வம் உண்டு.இளையராஜா,ஜெயகாந்தன் போன்ற முன் உதாரணங்களும் இதற்கு உண்டு.(மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் உள்ள இருவருமே தாங்கள் ஒரு கம்யூனிஸ்டாக இருந்ததாக வெளியில் சொல்லிக்கொள்ளவே தயங்கினாலும், அதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் 'என்ன இருந்தாலும் இந்த சிவப்பு சித்தாந்தம்தானே உங்களை புடம் போட்டுச்சு..' என்று பெருமை பேசுவார்கள் நம் தோழர்கள்).அதைப்போலவே இப்போது 'ஜனநாதனும் எங்களிடமிருந்து சென்றவர்தான்..' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆக 'புரட்சிபேசும் ஒரு கேரக்டரின் கையில் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கட்டும்' என்று சத்தியசோதனையை பசுபதியின் கையில் இயக்குனர் கொடுத்ததாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.எனில் அதற்கான காரணமும் விளங்கவில்லை.'அவர் எங்கள் ஆள்' என்று இப்போது சொல்லும் கம்யூனிஸ்ட்டு தோழர்களாவது ஜனநாதனிடம் கேட்டுச் சொல்வார்களா..காந்தி எப்போது கம்யூனிஸ்ட் ஆனார் என்று..?

25/10/06

நீயே பீ அள்ளு..

தீட்டென்பவனை
நாப்கின் கழற்றி
அவன் வாயில் அடி..
நினைவுக்கு வரட்டும்
அவன் பிறப்பு..


-பொளேரென்று செவியில் அடித்தாற்போல பாய்கின்றன வார்த்தைகள்.நெருப்பு பறக்கிறது.வாசிக்க ஆரம்பித்த கணத்திலேயே நம்மை ஆட்கொள்கிறது.அது 'கொஞ்சூண்டு..' என்ற தலைப்பிலான கவிதை தொகுதி.திண்டுக்கல் தமிழ்பித்தன்,தயா கவிசிற்பி என்னும் இருவர் சேர்ந்தது உருவாக்கியிருக்கும் புத்தகம்.(தலைப்பில் 'கொஞ்சூண்டு' என்ற வார்த்தைக்கும் மேலே சின்னதாக 2 என்று எழுதியிருப்பது நல்ல ரசணை).சிறிய கையடக்க நூல்.ஹைக்கூ வடிவத்தில் பெரும்பாலும் நிலா,வானம்,காதலி,நாய்குட்டி என்று்தான் எழுதப்பார்த்திருக்கிறோம்.இது முற்றிலும் வேறு தளம்.புத்தகமெங்கும் ரணம் பொங்கும் தலித்துகளின் வாழ்க்கை விரவிக்கிடக்கிறது.

செண்ட் பூசிய பணக்கார பிணம்..
துர்நாற்றமடிக்கிறது
எரிக்கையில்..


உறக்கம் பிடிக்கவில்லை..
கனவிலும்
பீ துடைப்பம்..


நாத்தம் குடல புரட்டுது..
சகிச்சுகிட்டு சுத்தப்படுத்தினோம்..
மறுபடியும் அவிய்ங்க பேல.


கருவறை நுழைய அனுமதியில்லை..
கையில ஆயுதமிருந்தும்,
நிராயுதபாணியாய் எங்கள் குலசாமிகள்..


-என்று ஏராளமான கொதிப்போடு சொல்லும் அவர், உச்சகட்டமாக சொல்கிறார் இப்படி.

இட ஒதுக்கீடு வேண்டாம்.
வா...வந்து
நீயே பீ அள்ளு..


-அதிர்ந்து நிமிர்கையில் இடஒதுக்கீடுபற்றி மேலும் அறைகிறார் இப்படி.

வேகாததை
புரட்டிபோடு..
வெந்தது மேலே வரட்டும்..


-இட ஒதுக்கீட்டின் நியாயங்களை இதைவிட எளிமையாக யாரும் சொல்லிவிட முடியாது.இப்படி அவரின் எல்லா கவிதைகளுமே நாட்டின் நடைமுறைக்குத் தேவையான அரசியலை முன்வைக்கின்றன.அழகியல் மட்டுமே கவிதைக்கான பாடுபொருள் இல்லை..நாட்டின் தேவை அதுவல்ல..இதை ஒவ்வொரு கவிதையிலும் உணர்த்துகிறார் தமிழ்பித்தன்.

ஒருமுறை பிய்ந்தது ஹை-ஹீல்ஸ்..
பின்னால் முட்டவில்லை,
ஆண்குறி..

நிலவல்ல, மலரல்ல,
நான் பெண்..
த்தூ...நீதான் ஆண்.

புலியை முரத்தால் அடித்தாள்..
சாதனையல்ல-அது
பெண் இயல்பு..

கள்ளிப்பாள் குடித்தும்
சிரித்தது குழந்தை..
அழுதாள் தாய்..

நீ இந்து.
நானுமா இந்து..?
வா கும்பிடுவோம் முனியப்பனை..

வாழ்கிறபோது நரகம்
செத்தபின் சொர்கம்
செருப்பால் அடி கற்பிக்கிறவனை..

பிறப்பு ஒரு முறைதான்
ஏன் சுமந்தாய் சிலுவையை
கழற்றி அடிக்காமல்..

சூழ்ச்சி சண்டை
பாபருக்கும்-ராமருக்கும்
எங்கள் மண்ணை பிடிக்க..

மரத்தினால்
நிழல்,மழை,கூடு-ஒரு
கோடறி..

நாயை விடு..
பூனையிடம் கற்றுக்கொள்..
தேவை விசுவாசமல்ல;எதிர்ப்பு

நிழல் மறு
வெயில் காண்பி
வியர்வையை அறிமுகம் செய்..

மொத பார்வ..
பயங்காட்டுது
கடல்..

தெரியாமல் மிதித்தேன்
மிதித்ததும் கடித்தது
எறும்பு

கொஞ்சூண்டு மழை
துளிர்த்துகிடுச்சு
முள்ளுசெடி..

பன்றி பீ திண்ணும்.
முடிவுக்கு வராதே..
காய்கறி கொடுத்துப் பார்.

சுமைக்குள் உடல்
உயரத்தில் ஏறுகிறது
நத்தை..

பசியால் செத்த பிணம்
கல்லறை மீது
படையல்..

-மேலுள்ளவை எல்லாம் தமிழ்பித்தனின் கவிதைகள்.அவரோடு இணைந்து எழுதியிருக்கும் தயா கவிசிற்பியும் ஒன்றும் சளைத்தவரில்லை.அவரது கவிதைகளில் சில...

புனிதநூல்.
பக்கங்கள் புரட்டுகின்றன
எச்சில் விரல்கள்.

நாத்து நடாத
கதிர் அறுக்காத சாமிக்குப் பேரு
அன்னலட்சுமி..

பீ கூடையில்
சோத்துசட்டி..
விஞ்ஞானம் வளர்கிறதாம்..த்தூ...மசுரு..


-இந்த புத்தகத்தை படித்து பல நண்பர்களிடம் சொல்லி கொண்டிருந்த வேளையில் சமீபத்தில ஒருநாள் திண்டுக்கல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.தமிழ்பித்தனைப் பார்க்கப்போனேன்.'அவர்லேடி' பள்ளிகூடம் அருகில் தூரிகா என்ற பெயரில் ஓலைகுடிசையில் ஓவியம் வரைந்துகொண்டிருக்கிறார்.கருப்பு நிறமும்,வெள்ளந்திப் பேச்சுமாக தமிழனுக்குரிய அடையாளங்கள் அனைத்தோடும் இருந்தார்.ஒரு டீயை குடித்துக்கொண்டே பேசினால், அவருக்குள் இருக்கும் ஆதங்கங்கள் அனைத்தும் வார்த்தைகளில் வெளிப்படுகின்றன.

"நெறைய மாறனும் தோழர்..இந்த புத்தகத்தை வெளியிடும்போது ஏகப்பட்ட பிரச்னைகள் வந்துச்சு.இருந்தாலும் சமாளிச்சு வெளியிட்டோம்.."என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே,"அது என்ன திண்டுக்கல் தமிழ்பித்தன்..?" என கேட்டேன்.அதற்காகவே காத்திருந்ததுபோல,"அது கொஞ்சம் அவசரப்பட்டு வச்சுகிட்ட பேர் தோழர்..அந்த பேருனால பலபேரு என் கவிதையை படிக்காமலேயே போயிடுறாங்க..ஒரு மாதிரியான மனத்தடை ஏற்பட்டுடுது..இப்ப 'முனி'ன்னு பேரை மாத்திட்டேன்.."என்றார்.புத்தகத்தின் பக்கங்களில் கவிதைக்குப் பொருத்தமாக வரையப்பட்டிருக்கும் ஓவியங்களும் இவர் வரைந்ததுதான்..சமூகத்தின் எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை எதிர்பார்த்து அல்லது மாற்றத்தை உண்டாக்கும் நோக்கோடு எழுதிக்கொண்டிருக்கும் இவரிடம் பேசவும்,புத்தகம் வாங்கவும் 9865994424 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

18/10/06

மணற்கேணி..

தோண்ட தோண்ட சரிந்து கொண்டேயிருந்தது மணல்.புதைமணல்.கால் வைத்தால், பொலபொலவென்று உள்ளே சரிந்து கொட்டியது.முப்பதடி ஆழக்கிணறு,ஒரு நிமிடத்தில் இருபதடியாகக் குறைந்திருந்தது.கிணற்றின் மேற்குக் கரையிலிருந்து உள்ளுக்குள் சரிவாக இறங்கிக் கிடந்தது மணல்.கிணற்றைச் சுற்றி ஒரேக் கூட்டம்.நசநசவெனச் சத்தம்.

"உசுரு இருக்குடா வேம்பையா...எப்படியாச்சும் காவந்து பண்ணிடனும்டா..கோயிந்தன் கையை ஆட்டுறான் பாரு.சடுதியா ஏதாவது பண்ணனும்மப்பா.."-பதற்றம் தெறிக்கச் சொல்லிக் கொண்டிருந்தான் காளி.

"காலை வச்சாலே பொத மணலு உள்ள இழுக்குது மாமா..ஊத்துத்தண்ணி வேற நிக்க மாட்டேங்குது.." சொல்லிக்கொண்டே கோயிந்தனை நெருங்க ஏதாவது தோது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் முருகேசன்.

விடிகாலையில் நீராகரத்தைக் குடித்துவிட்டு, வீட்டுக்காரி பெருமாயியை காலைக்கஞ்சி கொண்டுவரச் சொல்லிவிட்டு, வாத்தியார் வீட்டுக் கொள்ளையில் கிணறு தூர் வாரக் கிளம்பியக் கோயிந்தன்,இப்படி மண் சரிந்து சிக்கிக்கொண்டது யாரும் எதிர்பாராதது.

ஆளாளுக்கு ஒரு திசையில் ஓடிக்கொண்டிருதார்கள்.ஏதேதோ யோசனைகள்.கிணற்றுக் கரையில் ஓங்குதாங்காய் வளர்ந்து நின்ற தென்னைமரத்தில் வரி கயிற்றைக்கட்டி கிணற்றுக்குள் இறங்கினால் சுலபமாய் கோயிந்தனை நெருங்கிவிடலாம்.ஆனால் கிணற்றின் ஓரப்பகுதியில்தான் இறங்கமுடியும்.கோயிந்தன்,சரிந்த மணலில் கிணற்றின் நடுப்பகுதில் சேற்றுக்குள் அகப்பட்டுக் கிடந்தான்.

"நாலஞ்சு பலகையப் பரப்பிப் போட்டா நாலு எட்டுல போயிடலாம்.."

-யாரோ யோசனை சொல்ல, பரபரவென்று ஊருக்குள் ஓடினார்கள் இளைஞர்கள்.குடியானவர் தெரு தாண்டி, சுடுகாட்டுப் பக்கமாய் இருந்த தொகுப்பு வீடுகள் நிறைந்த தங்கள் தெருவுக்குள் நுழைந்துவிட்டனர்.ம்..ஹூம்.தேடித்தேடிப் பார்த்தும் ஒற்றைப் பலகையைக் கூடக் காணவில்லை.விறகுக் கட்டைகள் அடுக்கி வைத்திருந்த பரண், புண்ணியமூர்த்தியின் மாட்டுவண்டி..என்று எதிலிருந்தாவது எதையாவது எடுத்து விடலாமா என்று பார்த்தார்கள்.ஒன்றும் தேறவில்லை.

சட்டென உடம்பைப் பதறிக்கொண்டு,"ஓடியாங்கடா.."என்று சத்தமிட்டுக்கொண்டு தெற்குத்தெரு நோக்கி ஓடினான் முருகேசன்.அது முழுக்க முழுக்க உயர்சாதிக்காரர்காள் வசிக்கும் தெரு.பெருந்தனக்காரர்கள் அதிகமுள்ள பகுதி.போனவாரம்தான் மச்சு வீட்டுக்கு வேலை நடந்த காசிநாதத் தேவர் வீட்டில் போய் நின்றார்கள்.ஓட்டுவேலை முடிந்து,சாரம் பிரிக்கப்பட்டு வீட்டின் ஓரமாக அடுக்கிவைக்கப் பட்டிருந்தன பலகைகள்.

வெற்றிலையை குதப்பியபடி டிராக்டரில் படிந்திருந்த சேறைக் கழுவிக் கொண்டிந்தார் காசிநாதத் தேவர்.மூச்சிரைக்க ஓடிவந்து நின்றவர்களைப் பார்த்து, "என்னடா..இங்க ஓடி வர்றீங்க..?அங்க ஏதோ வாத்தியார் வீட்டுக் கெணத்துல,தூர் வாறப்போன இடத்துல மண்ணு சரிஞ்சு கோயிந்தன் உள்ள விழுந்துட்டான்னு பேசிக் கிட்டானுவொ..நீங்க இங்குன ஓடிப்புடிச்சு விளையாடிக்கிட்டு இருக்கீங்க..?"என்றார்.

"அதில்லீங்கய்யா..கிணத்துல இறங்க முடியலை.ஒரே சகதியா இருக்கு.நாலஞ்சுப் பலகைக் கெசடச்சா மேலாலப்போட்டு எறங்கிப் போயிடலாம்.எங்கத் தெருப்பக்கம் தேடிப்பாத்துட்டோம்.ஒண்ணும் ஆப்புடலை.அதான்..இந்த சாரப்பலகையில நாலஞ்ச கொடுத்தீங்கன்னா..கோயிந்தனை கரையேத்திபுடலாம்.."

"எலேய்..வெவரங்கெட்டத்தனம்மா பேசுறியள..இதெல்லாம் என் வீட்டுதா..?எல்லாம் டவுனுக்கார காண்ட்ராக்ட் பயலுது.நேத்தே வந்து எடுத்துட்டுப் போறேன்னான்.இன்னும் செத்த நேரத்துல வந்துடுவான்.அவனுக்கு நான் என்னத்த சொல்றது..?அதுவுமில்லாம நீங்க பாட்டுக்கும் பலகையை எடுத்துட்டுபோயி,ஆளும் பேருமா சேர்ந்து எறங்கி உடைச்சு வச்சுட்டியள்னா என்குடி தெண்டம் அழுவனுமா..?"

"கொஞ்சம் மனசு வைங்கய்யா..பலகைக்கு எந்த சேதாரமும் இல்லாம மத்தியானத்துக்குள்ள கொண்டு வந்துடுறோம்.."

"சும்மா பேசிக்கிட்டு நிக்காம போயி ஆக வேண்டியதை பாருங்கடா.."

-வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு அவர் உள்ளேப் போய்விட்டார்.

ஆத்திரம் பொங்கிவழிய என்ன செய்வதென்று புரியாமல் தவித்து நின்றார்கள்.காலை வெயில் சுள்ளென்று அடித்தது.வியர்வை வழிந்து பிசுபிசுத்தது.விரல்கள் நடுங்கத் தொடங்கின.ஏதோ ஞாபகம் வந்தவனைப்போல"வேம்பையா..சீக்கிரம் வாடா.." என்று சொன்ன முருகேசன்,மறுபடியும் தங்கள் தெருவை நோக்கி ஓட ஆரம்பித்தான்.மற்றவர்களும் பின் ஓடினார்கள்.டீக்கடையில் பேப்பர் பார்த்தபடி நின்றவர்கள்,தலையை லேசாய் தூக்கிப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தனர்.

விறுவிறுவென்று ஓடிய முருகேசன்,நேராய் தன் வீட்டின் கதவை நாதாங்கியோடு நெம்பி இழுத்தான்.'கிரீச்..கிரீச்..'என்ற சத்தத்தில் உலுத்துப்போன மரத்தூள் கொட்டியது.நாலு நெம்பில் கையோடு வந்துவிட்டது கதவு.மற்றவர்களும் கதவிருந்த வீடுகளாய் பார்த்து பெயர்த்தெடுத்தார்கள்.அரசாங்கம் கட்டிக்கொடுத்த வீட்டின் தகரக்கதவு எதற்கும் ஆகவில்லை.தேடித் தேடிப் பிடிங்கியதில் எட்டுக் கதவுகள் கிடைத்தன.தலைக்கு ரெண்டாய் சுமந்துகொண்டு மறுபடியும் ஓட்டம்.

அவிழ்ந்த கைலியை அப்படியே ரோட்டோரமாய் கழற்றி வீசிவிட்டு,கால் சட்டையோடு முருகேசன் ஓட,இரண்டு நாய்கள் அவனைப் பார்த்துக் குரைத்தன.கிணற்றடியை அவர்கள் நெருங்கும்போது பெண்களின் அழுகுரல் சத்தம் அலறலாய் கேட்டது.மார்பிலடித்துக் கொண்டு கிணற்றை நோக்கி ஓடினாள் பெருமாயி."கொலை உசுரா கெடக்குறியே ராசா..ஏ கண்ணவிஞ்ச சாமியளா..எங்க போயிட்டீங்க..?" தலைவிரி கோலமாய் அவள் கதற,காரனம் எதுவும் புரியாமல் அவளது சேலை முந்தானையை இழுத்துக்கொண்டே குழந்தைகளும் அழுதன.'வீச்..வீச்..'சென்று கதறிய பெருமாயியை கூட இருந்த பெண்கள் இழுத்துப் பிடித்தனர்.

தவுகள் வந்ததும், சடசடவென்று வேலைகள் நடந்தன.சேரித் தெரு ஆட்கள் நிறைய பேர் காலையிலேயே சுற்றியுள்ள ஊர்களுக்கு வயல் வேலைகளுக்குப் போய்விட்டதால்,ஆட்களும் அதிகமில்லை.இருந்த கொஞ்சம் பேர் ஆளூம் பேருமாய் வேலையைப் பார்த்தார்கள்.அம்பாரம்,அம்பாரமாய் வேப்பந்தலைகளையும்,பூவரசு இலைகளையும்,முள் பத்தைகளையும் வெட்டிவந்து கிணற்றுக்குள் போட்டனர்.ஊத்துத் தண்ணீரோடு மண் கலந்துகிடந்த சகதி,அந்த இலை தலைகளால் லேசாக இறுகியது.அதற்கு மேல் பலகையைப் போட்டால் எளிதாக கோயிந்தனை நெருங்கிவிடலாம்.

வேலைகள் நடந்துகொண்டேயிருக்க, குடியானவர்கள் தெருவைச் சேர்ந்த பஞ்சாயத்துக்காரர்கள் கொஞ்சம் பேர் சுற்றி நின்றிருந்தனர்."சட்டு புட்டுன்னு இறங்குடா உள்ள..கை அசையுறதும் குறைஞ்சுகிட்டே வருது.."சொன்னபடியே தென்னை மர நிழலில் தோதாய் நின்று கொண்டார்கள்.

"ஐயா..ஏதாவது பண்ணுங்கய்யா..குஞ்சும் குழுப்பானுமா ரெண்டு சின்னப் பிள்ளைவொளை வச்சுருக்கேன்.அவரு இல்லாம இந்த கூறுகெட்ட சிறுக்கியாள கஞ்சி ஊத்தி கரசேர்க்க முடியாது.."-பெருமாயி பஞ்சாயத்துக் காரர்களின் காலில் விழ "பொறுத்தா..இந்தாப் பலகைப் போட்டுட்டானுவொ..கயித்தைக்கட்டி உள்ள இறங்கியாச்சுன்னா என்னன்னு பாத்துப்புடலாம்.நானும் எங்க ஆளுகளைவிட்டு தீயணைப்புப் போலீஸுக்கு சொல்லச் சொல்றேன்..டேய் சீக்கிரம் இறங்குங்கடா.." சொல்லிக்கோண்டே வேட்டியின் நுனியில் படிந்திருந்த சேற்றைத் தட்டிவிட்டார் பழனிச்சாமித் தேவர்.பெருமாயியைத் தூக்கி ஓரமாக உட்கார வைத்துவிட்டு,அவருக்கு நடந்ததை விளக்கினார் கோயிந்தனின் சித்தப்பா சின்னகருப்பன்.

"நேத்துதான் திடீர்னு வாத்தியாரயா கூப்புட்டு,'தூரு அள்ளனும் வாடா'ன்னுருக்காரு.இவன்,கட்டாரி,ராசுப்பய,முத்தன் நாலுபேரும் கருக்கல்லயே வந்துட்டானுவொ..இவனும் கட்டாரியும் கீழ நின்னு தூர் அள்ளிக் குடுக்க,குடுக்க, மித்த ரெண்டு பேரும் மேல நின்னு இழுத்துக் கொட்டியிருக்கானுவொ..'பாதிக் கெணத்துக்கு மணலா இருக்கே'ன்னு யோசிச்சாலும்,'சுத்தியும்தான் மரம் இருக்குதே..சல்லிவேரு இழுத்துப் பிடிச்சுக்கும்'னு நினைச்சு வேலை பாத்துருக்கானுவொ.ஆனா மண்ணுபாதி,மணலு பாதின்னு அது வேலையைக் காட்டிடுச்சு.கட்டாரிக்கு முரட்டு உடம்பு.எப்படியோ தப்பிச்சுட்டான்.இவனால முடியலை.."

கோயிந்தனின் தலைவரைக்கும் மண்ணுக்குள் புதைந்து கிடக்க, முடியும் கையும் மட்டுமே வெளியேத் தெரிந்தது.முன்பு லேசாய் கையை ஆட்டியதும் இப்போது இல்லை.

இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு,கையில் கதவை இடுப்போடு சேர்த்துப் பிடித்தபடி,முருகேசன் உள்ளே இறங்கினான்.கதவு,கிணற்றின் கரையில் இடித்து மண் உள்ளேக் கொட்டியது.மெதுவாய் உள்ளே இறங்கி தரைக்குப் பக்கத்தில் வந்தவுடன் கதவைப் படுக்கை வசத்தில் கிணற்றுக்குள்,சேற்றுக்குள் போட்டான்.சொத்தென்று விழுந்தது.சகதி தெறித்தது.கதவின் மேல் காலை வைத்து நின்றுப் பார்த்தான்.கொஞ்சமாக் நழுவி இழுத்ததேத் தவிர ஒன்றும் உள்ளே போய்விடவில்லை.

"பாத்துடா.."மேலிருந்து சத்தம்.

தென்னை மரத்தில் இன்னொரு கயிற்றைக் கட்டி ஒவ்வொருக் கதவாய் உள்ளே இறக்கினார்கள்.ஒவ்வொன்றாய் அடுக்கி கடைசியில் காளியும் இறங்கினான்.மெதுவாய் கோயிந்தனை நெருங்க..நெருங்க..இருவருக்கும் உடம்பு நடுங்கியது.துவண்டு கிடந்த கோயிந்தனின் கைகளை ஆளுக்கொன்றாய் பிடித்து மெதுவாய் மேலே இழுக்க..மண்ணுக்குள் ரெண்டுபேர் நின்றுகொண்டு உள்ளே இழுப்பது மாதிரி சகதி இறுக்கியது.

ஏதேதோக் கூச்சல்கள்.பெருமாயியை கிணற்றுப் பக்கம் எட்டுப் பார்க்க விடாமல் வெளியே இழுத்துப் போட்டார்கள்.முருகேசனும்,காளியும் 'என்ன ஆனாலும் பரவாயில்லை..'என்பதுபோல நேருக்கு நேராய்பார்த்துக் கொண்டார்கள்.கோயிந்தனின் இரண்டு கைகளையும் ஆளுக்கொன்றாய் பிடித்துக்கொண்டு,மெதுவாய் சேற்றுக்குள்-கம்புக் கூட்டுக்குள் கைவிட்டு முழு விசையோடு ஒரே இழுப்பாய் இழுத்தனர்.இருவரும் கதவின் மீது மல்லாந்து விழ...அவர்களின் மீது குப்புற விழுந்தான் கோயிந்தன்.மூன்று பேரின் கணம் தாங்காமல் சகதியில் ஏறி இறங்கியது கதவு.

சேற்றைத் துடைத்துக்கொண்டு எழுந்த காளி,கோயிந்தனின் மூக்கில் கை வைத்துப் பார்த்தான்.மூச்சு வருவதற்கான அறிகுறியேத் தெரியவில்லை.மல்லாக்கத் திருப்பிப் போட்டு படபடவென்று நெஞ்சசில் குத்தினான்.ஒன்றும் நடக்கவில்லை.ஒரு கதவில் படுக்க வைத்து இரண்டு புறமும் கயிற்றால் கட்டி பத்திரமாக மேலேத் தூக்கினார்கள்.

ஒன்றுக்கு ஐந்து தடவையாய் உறுதி செய்தாலும் உயிர் இருந்தால்தானே மூச்சு வரும்..? பந்தல்போட்டு,பாடைகட்டி,தப்படித்து,கோயிந்தனின் ஐந்து வயது மகனுக்கு மொட்டையடித்து,கொள்ளிபோட வைத்து...எல்லாம் சாயுங்காலத்திற்குள் முடிந்துவிட்டது.

பொழுது இருட்டும் நேரத்தில் முருகேசன்,காளி,வேம்பையன் என்று பத்து பதினைந்து ஆட்கள் குடியானவர் தெருவிற்குள் நுழைந்து வாத்தியார் வீட்டுக்குப் போனார்கள்."ஐயா..நம்ம கோயிந்தனைக் கொண்ணுப் போட்டுடுச்சு அந்த கெணறு.'உசுரு கேக்குற கெணத்துல பொழங்கக் கூடாது.மூடிடனும்'ங்குறது நம்ம ஊர் வழக்கம்.அதையும் எங்க கையாலயே செஞ்சுடுறோம்.."என்று கேட்க,"செய்ங்கடா..பாத்து செய்ங்க.."என்றார் வாத்தியார்.

அதே வேகத்தில் கிணறு இருந்த கொள்ளைக்குக் கிளம்பினார்கள்.அந்தி சூரியன் சிவப்பாய் தகித்தது.அந்தக் கிணற்றைச் சுற்றிலும் கோயிந்தனின் குரல் ஒலிப்பது போலிருந்தது.எல்லோரும் வெறிகொண்டு மண்ணை கிணற்றுக்குள் தள்ளினார்கள்.பொழுது பொலபொலவென விடியும்போது,கிணறு இருந்த இடமேத் தெரியாமல் தரைமட்டமாய் இருந்தது.இரண்டு நாட்கள் கழித்து ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்..."நம்ம காசிநாதத் தேவரை எங்கப்பா ஆளையே காணோம்..?ரெண்டு நாளா வீட்டுக்கும் போகலையாம்ல.."

20/8/06

இந்து கடவுளுக்கு மட்டு்ம் சலுகை ஏன்..?

இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்று பீற்றிக் கொள்கிறோம்.ஆனால் சில எதிர்பாராத தருணங்களில்தான் பல விஷயங்கள் கண்ணுக்குத் தென்படுகின்றன.

சமீபத்தில் வேலை நிமிர்த்தமாய் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் சுற்றிவர வேண்டிய அவசியம ஏற்பட்டது.சில போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் போனேன்.(சத்தியமா வேலை விஷயமாதாங்க..)அப்போது நான் கவனித்த ஒரு விஷயம் என் கண்ணை உறுத்தியது. பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களின் முகப்பில் ஒரு இந்து கோயில் இருக்கிறது.ஒரு காவல் நிலையத்தில் பல மதங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்க்கலாம்.(பார்க்கிறார்கள்).அப்படியிருக்கும்போது ஒரு தனிப்பட்ட மதத்துக்கு மட்டும் வழிபாட்டுத் தளம் அமைத்திருப்பது ஏன்..?இறைபக்தி என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே..பிள்ளையாரை வழிபடும் நீங்கள் கோயில் கட்டிக்கொண்டால் கர்த்தரை வழிபடுவோரும்,அல்லாவை தொழுவோரும் எங்கே போவார்கள்..?

எந்த அரசு அலுவலகத்திலும் எந்த விதமான மத அடையாளமும் இருக்கக்கூடாது என்பது அரசு விதி.அதை மீறி இப்படியெல்லாம் செய்யும்போது அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்..?
அதற்குப்பிறகு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடுப் பார்த்தால்தான் போலீஸ் ஸ்டேஷன்கள் என்ன..பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இப்படி ஏதோவொரு இந்து கோயில் இருப்பது தெரிகிறது.இதையெல்லாம் அரசாங்கம் கட்டிக்கொடுப்பதில்லை.அதிக பக்திகொண்ட பணியாளர்கள் யாராவது தங்கள் சொந்த செலவில் கட்டிக்கொள்கிறார்கள்.இதேபோல வசதிபடைத்த மற்ற சமயங்களை சேர்ந்தவர்களும் தங்களது செலவில் தத்தமது வழிபாட்டுத் தளங்களைக் கட்டிக்கொள்ள முயன்றால் நிலைமை என்னவாகும்..?

அரசு அலுவலகங்கள் மட்டுமல்ல...பல அடு்க்குமாடி குடியிருப்புகளிலும் இதே நிலைமைதான்.இதைப்பற்றி நண்பரொருனிரிடம் பேசிக்கொண்டிருந்த போது,'இது முன்னாடியே யோசிச்ச பிரச்னைதான்..சொன்னா நம்மளை இந்து மத விரோதின்னுவான். இல்லேன்னா அல் குவைதா ஆளுன்னுவான்(ஆத்தாடி..).விடுடா பங்காளி'என்றான்.

எனக்கென்னமோ அத்தனை இலகுவாக இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ள மனமில்லை.மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு வாழ்வதுதான் உண்மையான வாழ்வென்று நம்புகிறேன்.உங்கள் கருத்தென்ன நண்பர்களே......

17/8/06

லிவிங் ஸ்மைல் சொன்னதில் என்ன தப்பு..?

வலைப்பூக்களில் அண்மை நாட்களாகவே லிவிங்ஸ்மைல் வித்யாவை குறிவைத்து மறைமுகமான தாக்குதல்கள் நடைபெற்றுவந்தன.அது இப்போது வெளிப்படையாக வெடித்திருக்கிறது.`லிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம்` என்ற தலைப்பில்,செந்தழல் ரவி வெளியிட்டிருக்கும் பதிவில் அவரது முகம் மட்டுமே தென்படவில்லை.அவரை ஒத்த பலரின் `நாட்டுப்பற்று` முகமும் அதில் தெரிகிறது.

"இந்த நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லையென்றால் அதற்கு நான் காரணமல்ல.நான் வாழ்வதற்குரிய குறைந்த பட்ச உரிமைகளைக்கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்.." என்றார் அம்பேத்கர்.சக மனிதனை மனிதன் என்று கூட ஒத்துக்கொள்ளாத சாதி சகதியைப் பற்றி அம்பேத்கர் சொன்ன வார்த்தைகள் திருநங்கைகளுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும்.ஒடுக்கப்பட்ட தளத்தில், தலித்துகள் வாழ்வியல் காரணங்களுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது,அதனோடு சேர்த்து தங்களின் பாலியல் அடையாளத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் திருநங்கைகள்.

பேருந்தில் ஏறினால் நிலைகுத்திய பார்வையோடு உற்றுபார்ப்பது முதல், சாலையில் செல்லும்போது வெறித்து வெறித்துப் பார்த்து சங்கடப்படுத்துவது வரை திணசரி வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம்.மிகவும் பாதுகாப்பாகவே வளர்ந்து விட்ட நீங்களும்,நானும் அவர்களின் துயரங்களை முழு வீச்சில் உணர முடியாது.'தலை வலியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்'என்பார்கள்.நம் வீட்டிலும் இப்படியொரு திருநங்கை உருவாக வாய்ப்புண்டு என்பதையும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

எல்லா வகையிலும் ஒடுக்கப்படும் திருநங்கைகளுக்கு நாட்டின் மற்ற குடிமகன்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் கிடைப்பதில்லை.ஒரு நாடு தனது குடிமகன்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை மறுப்பதும்,இந்த சமூகம் அவர்களை மனிதர்களாகவே மதிக்காததும் எந்த வகையான பற்று..?ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது பௌதீக விதி.நிராகரிப்பு என்னும் வினைக்கு எதிர்வினையும் நிராகரிப்பாகத்தானே இருக்க முடியும்-சங்கராச்சாரியார் கைதுக்கு முன்பு மக்களை மடம் நிராகரித்ததும்,கைதுக்கு பிறகு மடத்தை மக்கள் நிராகரித்ததையும் போல.

உலகில் ஒடுக்கப்பட்ட சக்திகள் மீட்சிக்கு முயலும்போதெல்லாம், இதுபோன்று ஆரம்பகட்ட முட்டுக்கட்டைகள் போட ஏராளமானோர் இருந்தார்கள் என்பதுதான் வரலாறு.தலித்துகள் கோயிலுக்கு நுழைய முற்பட்டபோது,'நீ கோயிலுக்கு நுழைந்தால் கடவுளுக்குத் தீட்டு' என்று கடவுள் பெயராலேயே தடைபோட்டார்கள்.திருநங்கையொருவர் நாட்டின் யதார்த்த நிலைமையை விளக்கும் விதமாக,`நாட்டுப்பற்று இல்லை` என்று சொன்னால், அவர்களை இந்த நாட்டுக்கே விரோதிகளாக சித்தரிக்கிறார்கள்.இரண்டும் வேறு வேறானது அல்ல.

நாட்டின் சகல வளங்களையும் கூறு கட்டி விற்கிறது அரசு.பன்னாட்டு கம்பெனிகள் நம் நாட்டின் தண்ணீரையே உறிஞ்சி நமக்கே விற்கின்றன.கிடைக்கும் அனைத்தையும் அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் மொத்தமாகவும்,சில்லைரையாகவும் பங்கிட்டுக் கொள்கின்றனர்.ஆகப்பெரும்பான்மை ஏழை மக்களின் நலன் மறந்து, பத்து சதவிகித மேட்டுகுடி மக்களின் மென்பொருள் சாதனைகளை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது மீடியாவும்,அரசாங்கமும்.உங்களின் நாட்டுப்பற்று கூட இந்த அனைவராலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான்.

லிவிங் ஸ்மைலின் வார்த்தைகளை, அதன் உண்மையான அர்த்த வடிவில் புரிந்து கொள்ளாததுபோல பாவனை காட்டும் எல்லோருமே, அடக்குமுறை அதிகார வர்க்கத்தின் பிம்பங்களேயன்றி வேறில்லை.

5/5/06

வணக்கம்


`நடை வண்டி` என்ற தலைப்பைப் பார்த்திருப்பீர்கள்.அதன் கீழேயே`மரபு உடைக்க பழகு` என்ற எழுத்துகளும் இருக்கும்.இரண்டையும் பார்த்து விட்டு,`வந்துட்டாய்ங்கய்யா கோடரி தூக்கிக் கிட்டு.. மரபு உடைக்க`என்றோ,`மரபு உடைக்க பழகச் சொல்லிவிட்டு தமிழ் மரபின் அடையாளமான நடை வண்டியைத் தலைப்பாக்கியிருப்பது ஏன்..?`என்றோ நினைக்கலாம்.
நிற்க.வெயில் காலத்தில்`எவ்வளவு மழையா இருந்தாலும் சமாளிச்சுடலாம்..வெயில்தான் பெரியக் கொடுமை..`என்றும்,அடைமழை நேரத்தில் இதற்கு எதிர்மாறாகவும் பேசும்,முரண் சிந்தனை நமது சமூகத்தின் அடிநாதமானது.அதில் நானும் ஒருவன்.அப்படியான முரண் சிந்தனைகளை கூடி விவாதிக்கவும்,புதிய தளத்தில் நடந்து பழகவும்தான் இந்த நடைவண்டி.
வண்டியோட்டியான நான்,தஞ்சாவூர்காரன்.வண்டல் மண்ணின் வாசனையோடு பெருநகரத்தில் வாழ்பவன் அல்லது பிழைப்பவன்.அப்புறமென்ன..? முடிந்தவரை அடிக்கடி பதிவு போட முயற்சிக்கிறேன்.